Skip to content
Home » தாகூர் #25 – இழப்புகளும் இந்தியப் பயணங்களும்

தாகூர் #25 – இழப்புகளும் இந்தியப் பயணங்களும்

ரக்த கராபி நாடகம்

கல்கத்தாவில் ராம்மோகன் நூலகத்தில் 1923 ஜனவரி 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எல்மிர்ஸ்ட் கிராமப்புற புத்தாக்கம் குறித்து உரை நிகழ்த்தினார். மலேரியா, குரங்குகள், பரஸ்பர நம்பிக்கையின்மை ஆகியவையே கிராமப்புற இந்தியாவை பெரிதும் பாதித்துவரும் பிரச்சனைகள் என்று அவர் விவரித்தார். இந்தக் கூட்டத்திற்கு ரவீந்திரர் தலைமை வகித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ரவீந்திரரை மிகச் சிறுவயதிலிருந்தே ஊக்குவித்து, வெளியுலகை, மேற்கத்திய நாகரிகத்தை அவருக்கு அறிமுகப்படுத்திய மூத்த சகோதரரும் இந்திய ஆட்சிப்பணி (ஐசிஎஸ்) ஏற்ற முதல் இந்தியருமான சத்யேந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் தனது 81வது வயதில் காலமானார். இவரது குழந்தைகளான சுரேந்திரநாத், இந்திரா தேவி ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே ரவீந்திரரின் மிக நெருங்கிய நண்பர்களாக, கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் தோழர்களாக விளங்கினர் என்ற வகையில் இந்த சகோதரரின் இழப்பு அவரை பெரிதும் வருத்தம் கொள்ளச் செய்தது.

ஜனவரி 13 அன்று சீனாவிலிருந்து வந்திருந்த சில விருந்தினர்கள் ஜொரொசங்கோவில் ரவீந்திரரைச் சந்தித்து, அந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதங்களில் சீனாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். நீண்ட நாட்களாகவே சீனாவிற்குச் செல்ல வேண்டுமென்ற அவரது ஆசை இந்த அழைப்பின் மூலம் மேலும் தீவிரமானது.

அதற்கு அடுத்த நாள் வங்காள கவர்னர் லிட்டன் பிரபு சாந்திநிகேதனுக்கு வருகை தந்தார். காந்தியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த மூத்த ஆசிரியர்கள் பலரும் கவர்னரின் இந்த வருகையை புறக்கணித்தனர். எனினும் சாந்திநிகேதனுக்கு அரசுமுறைப் பயணமாக வந்த மூன்றாவது வங்காள கவர்னரான லிட்டன் பிரபுவை ரவீந்திரர் வரவேற்றார். சுருல் கிராமத்தில் மேற்கொள்ளப்படும் புத்தாக்க முயற்சிகளுக்கு அரசின் உதவியைத் தொடர்ந்து பெற வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

1923 பிப்ரவரியில் சாந்திநிகேதனில் இருந்த மூன்று ஆலமரங்களின் கிளைகளுக்கிடையே, ஜப்பானிய தச்சுக்கலை நிபுணரான காஷிஹாரா உருவாக்கியிருந்த மர வீட்டில் ரவீந்திரர் தங்கி, வசந்தா என்ற இசை நாடகத்தை எழுதினார். பிப்ரவரி 21 அன்று ராம்மோகன் நூலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ரவீந்திரர் இந்த நாடகத்தைப் படித்துக் காட்டினார்.

அந்தச் சமயத்தில் வங்காள இலக்கிய உலகில் ரவீந்திரருக்கு அடுத்து புகழ்பெற்ற கவிஞராகவும், புரட்சிக்கவி என்றும் அறியப்பட்ட காஜி நஸ்ருல் இஸ்லாமிற்கு இந்த இசை நாடகத்தை அர்ப்பணிப்பதாக ரவீந்திரர் அறிவித்தார். அந்த நேரத்தில் நஸ்ருல் இஸ்லாம் விடுதலைப் போராட்ட செயல்பாடுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 25 அன்று கல்கத்தா மதன் தியேட்டரில் இந்த நாடகம் அரங்கேறியது. இதன் இரண்டாவது நிகழ்வு பிப்ரவரி 27 அன்று கல்கத்தா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.

1923 மார்ச் மாதம் முழுவதும் விஸ்வபாரதிக்கான நிதி திரட்ட நாட்டின் மேற்குப் பகுதிக்கு ரவீந்திரர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்னின் தாய்வழித் தாத்தாவும், வடமொழி அறிஞரும், விஸ்வபாரதி பல்கலைக்கழக பேராசிரியருமான கிட்டிமோகன் சென் அவருடன் இணைந்து கொண்டார். முதல் நிகழ்வாக வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் ரவீந்திரர் உரையாற்றினார். அதே நகரில் நடைபெற்ற வங்க சாகித்ய சம்மேளனத்தின் கிழக்குப் பிரிவின் தொடக்க மாநாட்டிற்குத் தலைமை வகித்து உரையாற்றினார்.

பின்னர் லக்னோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திவிட்டு பம்பாய் வழியாக அகமதாபாத் வந்தடைந்தார். அங்கு குஜராத்தி சாகித்ய சபாவின் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். இந்த உரையில்தான் ‘உலகத்திலுள்ள வீடில்லா பயணிகளுக்கென தான் ஒரு விடுதியை கட்டியுள்ளதாகவும், அதன் பெயர் விஸ்வபாரதி’ என்றும் ரவீந்திரர் குறிப்பிட்டார்.

அங்கிருந்து கராச்சி சென்ற அவருக்கு பொதுமக்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த நாள் கராச்சி நகரில் வசித்துவந்த வங்காளிகளின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. மார்ச் 21 அன்று கராச்சி நகராட்சி அவருக்கு பிரம்மாண்டமானதொரு வரவேற்பினை வழங்கியது. அடுத்த நாள் பியர்ல் ஓபரா ஹவுஸில் ‘இந்திய வரலாறு-ஒரு பார்வை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மார்ச் 24 அன்று தியாசாஃபிகல் சொசைட்டி ஹாலில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

பின்பு சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரை வந்தடைந்த ரவீந்திரர் இந்திய நாடோடி மக்களின் மதம் குறித்து உரையாற்றினார். மீண்டும் கராச்சி திரும்பி அங்கிருந்து கப்பல் வழியாக காந்தி பிறந்த ஊரான போர்பந்தர் வந்தடைந்தார். பின்பு பீகார் வழியாக சாந்திநிகேதன் திரும்பினார். ஏப்ரல் மாத இறுதியில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முதல் இதழ் வெளியானது. ரவீந்திரர் இந்தக் காலாண்டு இதழின் ஆசிரியராக இருந்து செயல்பட்டார்.

உக்கிரமான வெயிலைத் தொடர்ந்து ஒரு சில குடும்ப உறுப்பினர்களுடன் அசாம் தலைநகரான ஷில்லாங் சென்று தங்கினார். அங்கு அவரைச் சந்தித்த நண்பர்களோடு நடத்திய கலந்துரையாடலின் மூலம் பெற்ற உற்சாகத்தில், அவரது மிகச்சிறந்த நாடகம் எனக் கருதப்படும் ரக்த கராபி (செவ்வரளி) என்ற நாடகத்தின் முதல் பிரதியை எழுதி முடித்தார். இந்த நாடகம் இறுதி வடிவத்தை அடைவதற்கு முன்பாக, ரவீந்திரர் 11 முறை அதைத் திருத்தி எழுதியிருந்தார். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அவர் மேற்கொண்ட பயணத்தின்போதுதான் இந்த நாடகம் இறுதி வடிவம் பெற்றது. ஸ்ரீநிகேதனின் இயக்குநரான லியனார்ட் எல்மிர்ஸ்டுக்கு இந்த நாடகத்தை ரவீந்திரர் அர்ப்பணித்திருந்தார்.

ரவீந்திரரின் தனித்துவம் மிக்க நாடகங்களில் முக்த தாரா, ரக்த கராபி ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இந்த இரண்டுமே நவீன நாகரிக யுகத்தின் இன்னல்களைச் சுட்டிக் காட்டுவதாக, பேராசை, ஆதிக்க உணர்வு, தன்னலம் ஆகியவற்றின் முடிவிற்கான வழியை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தன. இந்த இரண்டும் இயந்திரத்திற்கும் மனித சுதந்திரத்திற்கும் இடையே தோன்றும் முரண்பாட்டை எடுத்துக் கூறுவதாக, அன்பு, தியாகம் ஆகியவற்றின் அடுத்த பக்கங்களை விவரிப்பதாக அமைந்திருந்தன.

இந்த இரு நாடகங்கள் குறித்தும் எண்ணற்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ரக்த கராபி நாடகத்தின் உள்ளீடான அம்சங்கள், சமீபத்திய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வெளிப்பட்ட மனிதத் தன்மையற்ற போக்கு ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து நந்தன் பட்டாச்சார்யா மேற்கொண்ட ஓர் ஆய்வு 2021இல் வெளிவந்துள்ளது. ஒரு செவ்வியல் இலக்கியம் அல்லது எழுத்து என்பது அது எழுதப்பட்ட காலத்தைக் கடந்து, அதைப் படிக்கும் காலத்தையும் தன்னுள் எடுத்துக் காட்டும் தன்மை கொண்டதாக அமைவதாகும். அவ்வகையில், தற்காலத் தன்மையையும் தன்னகத்தே கொண்ட ஓர் செவ்வியல்தன்மை கொண்ட எழுத்தாக ரவீந்திரரின் முக்த தாராவும் ரக்த கராபியும் அமைகின்றன.

சுயநலத்திற்கும் அடுத்தவருக்கு உதவும் குணத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டை எடுத்துக் கூறும் நோக்கம் கொண்டதாக ரக்த கராபி நாடகம் அமைகிறது. இதன் மூலம் பரோபகார சிந்தனையின் மீதான தன் சார்பை ரவீந்திரர் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். சுயநலம் என்பது ஒரு தீய பழக்கமாக எப்போதும் கருதப்படுவதில்லை. உண்மையில், நல்ல தன்மை கொண்டவை; நடுநிலை தன்மை கொண்டவை; மோசமான தன்மை கொண்டவை என, சுயநலத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அடுத்தவர்களின் இழப்பின் மூலம் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது எனும்போதுதான் பிரச்சனை எழுகிறது. நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அடுத்தவர்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்கும்படியான சுயநலத்தை நாம் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த இரு நாடகங்களும் எடுத்துக் கூறின.

இந்த நாடகத்தின் கதை யக்‌ஷபுரி என்ற நாட்டில் நடைபெறுகிறது. அந்த நாட்டின் அரசன் திரைமறைவில் இருந்தபடியே நாட்டு மக்களை ஆட்டுவிப்பவனாக இருக்கிறான். அவனது விருப்பப்படியே பூமியைத் தோண்டி அதன் அடியாழத்தில் கிடைக்கும் தங்கத்தை வெளிக்கொண்டு வரும் வேலையைச் செய்ய மக்களைக் கசக்கிப் பிழிகிறார்கள் அவனது மேலாளர்கள். வெளிச்சத்தையே காணாத அந்த மக்கள் அரசனுக்காகத் தங்கத்தை தோண்டியெடுப்பதே தங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ற வகையில் எவ்வித மனித உணர்வும் அற்றவர்களாக இருக்கின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு தனிப்பட்ட பெயர்கள் ஏதுமில்லை; மாறாக எண்களைக் கொண்டே அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

பேசவோ, சிந்திக்கவோ, மனிதர்களுக்கேயுரிய அம்சங்கள் என்று சொல்லப்படுகிற உணர்வுகளை முற்றிலும் இழந்தவர்களாக, அத்தகைய இழப்பை எவ்வகையிலும் உணராத வகையில், ஓய்வின்றி, கேளிக்கை ஏதுமின்றி, இயந்திரமயமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களாக அந்நாட்டு மக்கள் உள்ளனர். காற்றும் வெளிச்சமும் இல்லாத ஓர் உலகத்தில் வாழும் இத்தகைய மனிதர்களிடையே நந்தினி என்ற பெண்ணும் அவளது சக தோழனான ரஞ்சனும் இந்த அமைப்பினை உடைத்தெறிய முன்வருகின்றனர். விடுதலைக்கான நம்பிக்கையை கொண்டுவரும் இந்த இருவருக்கும் எதிராக அந்த மக்களிடையேயும் சிலர் உள்ளனர். அதுவும் போக, அரசாட்சியின் அடக்குமுறை கரங்களும் அவர்களை நசுக்கத் தயாராக முன்வருகின்றன. எதிர்ப்பவர்களை கைது செய்வது அல்லது இல்லாமலாக்குவது என்ற முறையில் செயல்படும் காவலதிகாரிகளின் கொடுங்கரங்களுக்கு ரஞ்சன் பலியாகிறான். இந்த அமைப்பினை உடைத்தெறியப் பாடுபடும் நந்தினி தன் போரைத் தொடங்குகிறாள். அவள் உயிர்த்தியாகம் செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதை நாடகம் மறைபொருளாக உணர்த்துகிறது.

தேச விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஹூக்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சிக்கவி காஜி நஸ்ருல் இஸ்லாம், சிறையில் நடைபெற்று வரும் கொடுமைகளைக் கண்டித்து சாகும்வரை 1923 மே மாதம் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அத்தருணத்தில் ‘உங்கள் உயிர் வங்காளி இலக்கியத்திற்கு உரித்தானது; அதைப் போக்கிக் கொள்ளும் உரிமை உங்களுக்கில்லை’ என்று ரவீந்திரர் தந்தி மூலம் விடுத்திருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, நஸ்ருல் இஸ்லாம் தன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

ஆகஸ்ட் மாதத்தில் மிருணாள் காந்தி பாசு என்ற பத்திரிக்கையாளருக்கு ரவீந்திரர் அளித்த பேட்டியில் அப்போது உருவாகியிருந்த சுயராஜ்யக் கட்சி குறித்தும், பொருளாதாரத் திட்டங்களின் மூலமே இந்து-முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்க முடியும் என்ற கருத்தையும் வலியுறுத்தினார். இந்தப் பேட்டி பிஜோலி என்ற வார இதழில் வெளியானபோது வங்காள அரசியல் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் விஸ்வபாரதி காலாண்டிதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ரவீந்திரர் இதே கருத்துகளை வலியுறுத்தியிருந்தார். இம்மாத இறுதியில் விஸ்வபாரதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளின் மூலம் கிராமப்புறங்களில் மலேரியாவை தடுப்பது குறித்து ரவீந்திரர் விரிவாக எடுத்துரைத்தார்.

செப்டெம்பர் 10ஆம் தேதியன்று ரவீந்திரரின் நெருங்கிய நண்பரும் வங்கத்தின் மிகச் சிறந்த கேலிக் கவிஞரும் சிறுவர் எழுத்தாளருமான சுகுமார் ரே (1887-1923) நோய்வாய்ப்பட்டு தனது 36 வயதில் மறைந்தார். இந்தியாவின் பெயரை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த திரைப்பட மேதையான சத்யஜித் ரேயின் தந்தை இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தீனபந்து ஆண்ட்ரூஸ், லியனார்ட் எல்மிர்ஸ்ட் ஆகியோரைப் போலவே, ரவீந்திரரின் சாந்திநிகேதன் முயற்சிகளுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஆங்கிலேயரான வில்லியம் வின்ஸ்டான்லி பியர்சன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்டதாரி. 1907ஆம் ஆண்டில் கல்கத்தாவில் இருந்த லண்டன் மிஷனரி கல்லூரியில் தாவரவியல் ஆசிரியராக பணிபுரியத் தொடங்கினார். ஆண்ட்ரூசைப் போலவே கிறித்துவ போதக செயல்பாடுகளிலிருந்து முழுமையாக விலகி 1911ஆம் ஆண்டில் லண்டனுக்குத் திரும்பினார்.

அங்கு அவரது இல்லத்தில் சுகுமார் ரே ரவீந்திரரைப் பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையை படித்தபோதுதான் அவரை முதன்முதலாகச் சந்தித்தார். பின்னர் சாந்திநிகேதனுக்கு ஆசிரியராக வந்து சேர்ந்து, ரவீந்திரரின் அணுக்கத் தொண்டராக மாறி, சாந்திநிகேதனிலேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவர். ரவீந்திரரின் அமெரிக்க – ஐரோப்பிய பயணம், ஜப்பான் பயணம் ஆகியவற்றில் அவரது செயலாளராக அவருடன் பயணம் செய்தவர். சாந்திநிகேதன் அமைந்திருந்த பிர்பும் மாவட்டத்தில் வசிக்கும் சந்தால் பழங்குடிகளின் மேம்பாட்டிற்குப் பெரிதும் பாடுபட்டு வந்த பியர்சன், அந்தக் குழந்தைகளுக்கென இரவுப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

பியர்சன் இங்கிலாந்து நோக்கிச் செல்லும் வழியில் 1923 செப்டெம்பர் 25 அன்று இத்தாலியில் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வண்டியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார். இந்தச் செய்தி சாந்திநிகேதனையும் ரவீந்திரரையும் பெரிதும் உலுக்கியது. தனியொரு ஆளாக சாந்திநிகேதனில் அவர் உருவாக்கியிருந்த மருத்துவமனைக்கு பியர்சனின் பெயரை சூட்டுவது என முடிவெடுக்கப்பட்டது.

மீண்டும் நவம்பரில் விஸ்வபாரதிக்கு நிதி திரட்ட, இந்தியாவின் மேற்குப் பகுதிக்கு, குறிப்பாக குஜராத் பகுதியில் இருந்த சமஸ்தானங்களுக்கு, ரவீந்திரர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது ரூ. 1,35,000 வசூலானது.

ஆண்டுதோறும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளில் அந்த ஆண்டில் மறைந்த நண்பர்களை நினைவுகூரும் ஒரு கூட்டம் சாந்திநிகேதனில் நடைபெறுவது வழக்கம். 1923ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் நடைபெற்ற கூட்டத்தில் ரவீந்திரர் பியர்சனின் பெருமைகளை முன்னிறுத்தி உரைநிகழ்த்தினார்.

(தொடரும்)

____

படம்: ரக்த கராபி நாடகம் (Chandra Garden)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *