சீன வரலாற்றுத் தரவுகளின்படி கிமு 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பிவைத்த பத்து பேரும் அப்போது சீனப் பெருஞ்சுவரை உருவாக்கிக் கொண்டிருந்த அரசரின் உத்தரவுப்படி கொல்லப்பட்டனர். அதன்பிறகு கிபி 789 வரை 37 இந்திய புத்த மத பிரசாரகர்கள் பல்வேறு காலங்களில் சீனாவைச் சென்றடைந்து புத்த மதத்தை அங்கு பரப்புவதில் செயல்பட்டனர்.
மங்கோலியர்களின் தீவிர கவனத்தைப் பெறுவதற்கு முன்பு, கிபி 1036இல்தான் இந்தியாவைச் சேர்ந்த புத்த மத பிரசாரகர்கள் சீனாவிற்குக் கடைசியாக வந்ததாகத் தெரிகிறது. அதன்பிறகு சுமார் ஒன்பது நூற்றாண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடிப் போக்குவரத்து இருக்கவில்லை. இந்தியாவில் விளைவித்த அபினியை சீனாவின் மீது திணித்த கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மேலாதிக்கப்போக்கு இந்தக் கணக்கில் அடங்காது.
சீனப் பல்கலைக்கழகங்களின் உரையாற்றும் கழகத்தின் தலைவரும் புரட்சிகர சீர்திருத்தவாதியும் அறிஞருமான லியாங் சி சாவோவின் அழைப்பிற்கிணங்க ரவீந்திரர் 1924 ஏப்ரலில் தன் சீனப் பயணத்தைத் தொடங்கினார். இரண்டு வங்காள மொழி அறிஞர்கள், கலாபவனின் பொறுப்பாளரும், தலைசிறந்த ஓவியரும், சீன சிற்ப, ஓவியங்களின் மாணவருமான நந்தலால் போஸ், ஸ்ரீநிகேதனைச் சேர்ந்த ஒரு செவிலியர், டோரதி ஸ்ட்ரெயிட்டின் நண்பரான க்ரெட்சன் க்ரீன் மற்றும் இந்தக் குழுவின் அமைப்பாளராகவும் ரவீந்திரரின் செயலாளராகவும் செயல்பட்ட எல்மிர்ஸ்ட் ஆகியோர் இந்தப் பயணக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
சீனாவின் அரசியல், புராதனச் சின்னங்கள் அல்லது அதன் பழைய வரலாறு குறித்து தனக்கு ஆர்வமில்லை என்று எல்மிர்ஸ்ட்டிடம் குறிப்பிட்ட ரவீந்திரர், ‘மாணவர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், இசை வல்லுநர்கள், நாடக ஆசிரியர்கள் ஆகியோரை சந்திக்கவே நாம் முயற்சி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் புதிய சீனாவை உருவாக்கவிருக்கும் இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ரவீந்திரர் ஹாங்காங் வந்தடைந்தபோது, மகத்தானதொரு மக்கள் புரட்சியின் மூலம், சீன அரச வம்சத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய 1911 புரட்சியின் நாயகரான சன் யாட் சென் தன் தனிச்செயலாளர் மூலம் ரவீந்திரருக்கு ஒரு வரவேற்புக் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
‘ஓர் எழுத்தாளராக மட்டுமல்லாமல், மனித இனத்தின் எதிர்கால நலன், அதன் ஆன்மிக வெற்றிக்கான விதைகளைத் தூவிவரும் ஒரு செயல்பாட்டாளராகவும் திகழும் உங்களை, சீன மக்களின் சார்பாக வரவேற்கிறேன். காண்டனில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா?’ என்று அவர் கேட்டிருந்தார். எனினும் அவரது இந்த அழைப்பை ஏற்று சந்திக்க ரவீந்திரரால் இயலவில்லை.
உலகின் இரண்டு பழமையான கலாசாரங்களைக் கொண்ட நாடுகளின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டு செயல்பட்ட இந்த இருவரும் பல்வேறு காரணங்களால் நேரில் சந்திக்க முடியாமலே போயிற்று.
ஷாங்காயிலும் ஹாங்சோவிலும் உரையாற்றிய பிறகு, நான்ஜிங் சென்ற ரவீந்திரர் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடியிருந்த பெருங்கூட்டத்தில் உரையாற்றினார். எனினும் ஆங்கிலத்தில் பேசியதால், அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் 100 பேருக்கும் குறைவானவர்களுக்கே நான் பேசியது புரிந்திருக்கும் என்று ரவீந்திரர் பின்னர் குறிப்பிட்டார்.
அங்கிருந்து பீகிங் போகும் வழியில் சீனாவின் மிகப்பெரும் தத்துவஞானியான கன்ஃபூசியஸின் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பயணக்குழு ஏப்ரல் 21இல் பீகிங் சென்றடைந்தது. இங்கு நடைபெற்ற உலகின் ஒன்பது முக்கிய மதங்களின் தலைவர்களின் கூட்டத்தில் ரவீந்திரரின் தலைமையிலான குழு இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டது. ரவீந்திரரின் நாடகம் ஒன்று ஆங்கில மொழியில் சீன நடிகர்களால் நடிக்கப்பட்டது. அவருக்கென சீன நாடகம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
மக்கள் புரட்சியின் மூலம் 1911இல் அரியணையிலிருந்து வீழ்த்தப்பட்ட அரசரான பு யு யியை, அவர் வசித்துவந்த தடைசெய்யப்பட்ட நகரம் என்று அழைக்கப்படும் அரண்மனையில், ரவீந்திரர் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ரவீந்திரரும் அவரோடு பயணித்த இரண்டு பெண்மணிகளும் அலங்கரித்த நாற்காலிகளில் தூக்கிவரப்பட்டு, முன்னாள் பேரரசரின் அவைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே அரசரோடு அவரது இரண்டு மனைவியரும் அவையில் வீற்றிருந்தனர். எல்மிர்ஸ்ட் அரசருக்கு ஆங்கில மொழியில் வெளியான ரவீந்திரரின் நூல்களைப் பரிசளித்தார். ரவீந்திரர் அரசரின் மனைவியருக்கு வளத்தின் அறிகுறியாகக் கருதப்படும் சங்கு வளையல்களை வழங்கினார்.
பின்னர் இந்தியாவின் சார்பாக அரசருக்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்ததோடு, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவிய நல்லுறவுகளை நினைவூட்டி, அத்தகைய உறவிற்குப் புத்துயிரூட்ட வேண்டுமென்று தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார். இவர்களது ஆங்கில உரையினை செல்வி லின் என்ற துடிதுடிப்பான இளம்பெண் சீன மொழியில் அரசருக்கு மொழிபெயர்த்துக் கூறினார்.
எனினும் பீகிங் நகரில் ரவீந்திரர் ஆற்றிய சொற்பொழிவுகள் இடையூறுகளுக்கு ஆளாயின. இரண்டாவது உரையை முடித்துவிட்டுக் கிளம்புகையில் சீன மொழியில் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் ரவீந்திரரின் கண்ணில் தென்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை மொழிபெயர்த்துக் கூறுவதற்குத் தயங்கினர்.
பீகிங்கில் அவர் சந்தித்த ஒரு ஜப்பானியரின் உதவியோடு அந்தத் துண்டுப் பிரசுரத்தின் முழு மொழிபெயர்ப்பும் ரவீந்திரருக்குக் கிடைத்தது. இந்தப் பிரசுரத்தின் கடுமையான மொழியைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு சில சொற்பொழிவுகளை ரத்து செய்தார். பின்னர் ரவீந்திரரின் உரைக்கு சீன இளைஞர்கள் தெரிவித்திருந்த கண்டனத்தின் சுருக்கம் கல்கத்தாவில் இருந்து வெளிவரும் பெங்காலி என்ற இதழில் வெளியானது. இந்திய–சீன கலாசாரங்களுக்கு இடையே நிலவும் ஒருமித்த அம்சங்களை ரவீந்திரர் முன்னெடுத்துப் போற்றிய அதேநேரத்தில், இவ்விரு புராதன கலாசாரங்களுக்கு இடையே நிலவிய பெருத்த இடைவெளியைச் சுட்டிக் காட்டுவதாகவே இந்தத் துண்டுப் பிரசுரம் அமைந்திருந்தது.
சீன இளைஞர்களின் கண்டனக்குரலை எதிரொலித்த அந்தப் பிரசுரம் கீழ்கண்டவற்றை முன்வைத்தது:
1. பாலின பாகுபாடு; அரசர்களைத் தெய்வமாகப் போற்றுவது; நிலப்பிரபுத்துவ அமைப்பு; சாதிய வேறுபாடுகள்; சடங்குகளுக்கே முக்கியத்துவம் தருவது உள்ளிட்டு பண்டைய கீழ்திசை நாகரிகங்களால் நாங்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு வந்துள்ளோம். எமது நாகரிகத்தின் உயரற்ற, பயனற்ற அம்சங்களை உயர்த்திப் பிடிக்க முயற்சிக்கும் டாக்டர் தாகூரை எங்களால் எதிர்க்காமல் இருக்க முடியாது.
2. நவீன நாகரிகத்தோடு தொடர்பு கொள்கையில் நாங்கள் மிகுந்த அவமானத்திற்கு ஆளாகிறோம். மனித உழைப்பையே பெரிதும் நம்பியிருக்கும் விவசாயம், கையை மட்டுமே நம்பியிருக்கும் உற்பத்தி முறை, செயல்திறனற்ற வாகனங்கள், கப்பல்கள், மிக மோசமான அச்சுக்கலை, மோசமான சாலைகள், சுற்றுப்புற சுகாதாரமற்ற நிலை ஆகிய இன்றைய நிலைமைகளை நாங்கள் மேம்படுத்தவேண்டியிருக்கிறது. நவீன நாகரிகத்தின் பயன்களை பெற முடியும் என்பதால்தான் நாங்கள் டாக்டர் தாகூரை எதிர்க்க வேண்டியிருக்கிறது.
3. கீழ்த்திசை நாடுகளின் ஆன்மிக வழிப்பட்ட நாகரிகம் என்று கூறப்படுவதெல்லாம் உள்நாட்டுப் போர்கள், சுயநலமிக்க ஆக்கிரமிப்புகள், போலித்தனம், ஏமாற்று, தீமைகள் நிரம்பிய அரசாட்சி, பெற்றோரிடம் காட்டும் போலித்தனமான மரியாதை, வெறுக்கத்தக்க பழக்கமான (பெண்களின்) கால்களைச் சிறியதாக வைத்திருப்பதற்காக அவற்றைக் கட்டிவைப்பது போன்றவற்றைத் தவிர வேறென்னவாக இருக்கிறது? எங்களை அன்றாடம் அழிவுக்கும் அவமானத்திற்கும் ஆளாக்கும் இந்த விஷயங்களை எதிர்க்காமல் எங்களால் எப்படி இருக்க முடியும்?
4. அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புகள், சொந்தநாட்டின் ராணுவ வாதத்தின் ஒடுக்குமுறைகள் ஆகியவை தங்களின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையிலும் சீன மக்கள் அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை. தேசியவாதம், அரசியல் ஆகியவற்றை டாக்டர் தாகூர் ஒழித்துக் கட்டிவிட்டு, அதற்குப் பதிலாக ஒருவரது ஆத்மதிருப்தியை முன்வைக்கக்கூடும். சோம்பித் திரிவோருக்கு வேண்டுமானால் இவையெல்லாம் புகலிடமாகவும் அழகுணர்ச்சிமிக்க மகிழ்ச்சிக்கான ஆதாரமாக இருக்கக்கூடுமே தவிர, எங்களுக்கல்ல. எமது நாட்டின் உயிரோட்டத்தினை வெட்டிக் குறைக்கும்படியான இந்த விஷயங்களை பெரிதுபடப் பேசும் டாக்டர் தாகூரை எங்களால் எதிர்க்காமல் இருக்க முடியாது.
5. சீனாவில் டாவோயிசத்தையும் புத்தமதத்தையும் ஒன்றுகலந்த வகையில் வெறுக்கத்தக்க, விஷமத்தனமான அமைப்பாக விளங்கும் டுங் ஷான் ஆன்மீகக் கழகத்திற்கு டாக்டர் தாகூர் தன் மனமார்ந்த ஆதரவை வழங்கி வருகிறார். டாக்டர் தாகூர் ‘சொர்க்கத்தின் ஆட்சி’, ‘அனைத்துமான இறைவன்’, ‘ஆன்மா’ ஆகியவை பற்றியெல்லாம் பேசி வருகிறார். நாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் துயரங்களில் இருந்து இவையெதுவும் எங்களை மீட்டெடுக்கவில்லை எனில் உலகத்தைத் திருத்தியமைப்பதற்கான மனிதனின் முயற்சியால் பயன் என்ன? தன்னைப் பற்றிய பற்றுறுதி, ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், இனங்களின் போராட்டம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தடைபோட முயலும் டாக்டர் தாகூரை நாங்கள் இப்படியாகத்தான் எதிர்க்கிறோம்.
இந்தத் துண்டுப் பிரசுரத்தில் அடங்கியிருந்தவற்றைப் படித்துவிட்டு, ரவீந்திரர் மிகுந்த கோபத்தோடு சொன்னார்: ‘இவர்கள் என்னை தவறாகப் புரிந்துகொள்வது என்பதில் மிகுந்த உறுதியோடு இருக்கிறார்கள்!’
சீனாவின் இளம்தலைமுறையினரிடையே ஜப்பான் குறித்த அச்சமும், அதன் யுத்தவெறி குறித்த வெறுப்பும் ஆழமாக இருப்பதைக் கண்டு ரவீந்திரர் மிகவும் வருந்தினார். அவர் சந்தித்த சீன அறிஞர்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார்: ‘அவர்களின் கலைஞர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் காணாதவரை, அவர்களது நாடகங்கள், நடனங்களைப் பார்க்காதவரை, அவர்களின் சடங்குகளில் பங்கேற்காதவரை, கோபே நகரத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மீண்டும் இயந்திரங்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்வதற்கு முன்பாக, அந்நகரத்தின் புகழ்பெற்ற பூங்காவிற்குப் போய்வருவதற்கே தங்களின் இரவு உணவு நேரத்தில் மூன்றில் இரண்டு பகுதியை செலவிட்டு, அங்கு இயற்கையின் அழகைப் பருகிவிட்டு வருவதை நேரடியாகப் பார்க்காதவரை உண்மையான ஜப்பானை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்!’
ரவீந்திரரின் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட மூன்று சீன நாட்டு அறிஞர்கள் அவரோடு ஜப்பானுக்கு வந்தனர். அங்கு ஜப்பானிய நண்பர்கள் அவர்களுக்குப் பரிசாக வழங்கியிருந்த ஜப்பானியக் கலை, கைவினை பொருட்களை – இவை புராதனமானவை, நவீனமானவை என கலவையாகவே இருந்தன – கொண்டு பீகிங் நகரில் ஒரு கண்காட்சியையும் நடத்தினர்.
பீகிங்கில் ஆற்றிய உரைக்குச் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு ஜப்பானின் டோக்கியோ நகரில் பேசும்போது ரவீந்திரர் தன் நிலைபாட்டை இவ்வாறு நியாயப்படுத்தினார்:
‘எனது கருத்துகளைக் கேட்டு மக்கள் கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் தேசியவாதத்திற்கு எதிரான எனது முதல் சொற்பொழிவை இந்த நாட்டில்தான் (ஜப்பானில்) எழுதினேன் என்று உங்களை எச்சரிக்கவே நான் வந்திருக்கிறேன். ‘நாடு’, ‘அரசு’ என்ற வார்த்தைகளை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்; அந்த வார்த்தைகளின் பொருள் எனக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனது நம்பிக்கையில் நான் உறுதியோடு இருந்தேன். இப்போது நடந்துமுடிந்த உலகப்போருக்குப் பிறகு, அவர்களின் இதயங்களை ஒட்டுமொத்தமாக கல்லாக்கிக் கொண்டிருக்கும், மக்களின் தன்னகங்காரமாகத் திகழும், தாய்நாடு என்ற உணர்வை மறுதலிக்கும் குரல்கள் எங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளதை நீங்கள் கேட்கவில்லையா?’
ஜப்பானில் ஆறு வாரங்கள் தங்கியிருந்த நேரத்தில்தான் பெரு நாட்டிற்கு வருகை தரும்படி ரவீந்திரருக்கு அதிகாரபூர்வ அழைப்பு வந்தது. ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தைத் தோற்கடித்து நூறாண்டுகள் ஆனதைக் கொண்டாடுவது என பெரு நாடு திட்டமிட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்ட ரவீந்திரர் பின்னர் மெக்சிகோவிற்குச் செல்வதென்றும் திட்டமிட்டார்.
தாகூரின் செயலாளர் என்ற முரையில் லியனார்ட் எல்மிர்ஸ்ட் இதுகுறித்து பெரு, மெக்சிகோ நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் இந்த இரு நாடுகளும் தலா ஒரு லட்சம் டாலர்களுக்குக் குறையாமல் விஸ்வபாரதிக்கு நன்கொடை வழங்குவதாக உறுதியளித்தன.
மூன்றுமாதப் பயணத்திற்குப் பிறகு ரவீந்திரரும் எல்மிர்ஸ்ட்டும் எதிரெதிர் திசைகளை நோக்கிப் பயணப்பட்டனர். ரவீந்திரர் ஷாங்காய் வழியாக இந்தியாவை நோக்கிப் பயணம் செய்தார். எல்மிர்ஸ்ட் முதலில் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கிருந்து இங்கிலாந்து செல்வதென திட்டமிட்டார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக்காலம் ரவீந்திரருக்கு அணுக்கமாக இருந்து, அவரின் உயரிய இலக்கான கிராமப்புற புத்தாக்கத்திற்கான அடிப்படை பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தியிருந்த எல்மிர்ஸ்ட், அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, சாந்திநிகேதனை போன்றே கல்வி, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றை தன் தாய்நாடான இங்கிலாந்தில் உள்ள டார்ட்டிங்டன் என்ற இடத்தில் முன்னெடுப்பது குறித்த சிந்தனையோடு பயணத்தைத் தொடர்ந்தார்.
சீனாவிற்கும் ஜப்பானுக்கும் அவர் மேற்கொண்ட பயணம் ஆசியாவின் ஒற்றுமை என்ற கருத்தாக்கத்திற்கு மேலும் ஊக்கம் தருவதாக அமைந்தது. அதன் விளைவாக, அதே ஆண்டு செப்டெம்பரில் ஷாங்காய் நகரில் ஆசிய கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இருந்து வெளியாகும் கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது:
‘பொதுவான கலாசாரத்தின் மூலம் ஆசிய வகைப்பட்ட ஓர் ஒற்றுமையை உருவாக்குவதற்கான முக்கியமானதொரு இயக்கம் இப்போது ஆசிய நாடுகளில் கால்பதித்துள்ளது…. இந்த முயற்சி ஜப்பானை விலக்கி வைப்பது என்ற அமெரிக்காவின் சமீபத்திய சட்டத்தினால் உந்துதல் பெற்றதோடு, மேற்கத்திய பொருள்முதல்வாதத்திற்கு மாற்றாக, லட்சியவாதம் என்ற கருத்தாக்கத்தை பிரச்சாரம் செய்துவரும் ரவீந்திரநாத் தாகூர் சமீபத்தில் கீழ்திசை நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தினால் மேலும் ஊக்கம் பெற்றது என்றே கூற வேண்டும். ஆசியாவின் முக்கிய நகரங்களில் உருவாகவுள்ள இந்தக் கழகத்தின் முதல் கிளை ஷாங்காயில் இப்போது தொடங்கியுள்ளதன் மூலம் இந்த உணர்வு வெளிப்பட்டது. இதன் தொடக்க விழாவில் ஆசிய பகுதியைச் சேர்ந்த நாடுகள் அனைத்தும் பங்கேற்றன. இதில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் உள்ளார்ந்து இருந்த தாகூரின் கருத்துகள், இந்த இயக்கத்திற்கு தாகூர் எத்தகைய உந்துசக்தியாக உள்ளார் என்பதை அங்கீகரிப்பதாக அமைந்திருந்தன.’
இது நடந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கான மாநாட்டின் முன்னோடியாக இந்த ஷாங்காய் நிகழ்வு இருந்தது என்றே கூற வேண்டும். எனினும் தாகூரின் சொந்த மண்ணிலேயே நடைபெற்ற இந்த மாநாட்டில், ஆசிய நாடுகளின் கூட்டுறவுக்கான தாகூரின் பங்களிப்பு பற்றி யாருமே பேசவில்லை. அவரின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற இந்த மாநாட்டின் மூலம் ‘மறப்பது எளிது!’ என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது.
(தொடரும்)