Skip to content
Home » தாகூர் #27 – அர்ஜெண்டினா பயணம்

தாகூர் #27 – அர்ஜெண்டினா பயணம்

அர்ஜெண்டினா பயணம்

பெரு நாட்டு அரசின் அழைப்பிற்கிணங்க பயணத்தைத் தொடங்கியபோது (1924 அக்டோபர்) தென் அமெரிக்கத் துணைக்கண்டத்தில் நன்கு அறியப்பட்டதோர் இலக்கிய ஆளுமையாக ரவீந்திரர் திகழ்ந்தார். இந்தப் பகுதி முழுவதும் புழங்கி வந்த அவரது கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் என 22 நூல்கள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக வாசிக்கப்பட்டிருந்தன.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த லத்தீன் அமெரிக்க நாடுகள், முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது, தங்களிடம் இன்னமும் நீடித்து வரும் ஐரோப்பியத் தன்மையைத் தவிர்த்த புதியதொரு கலாசாரத்தின் தேவையை உணரத் தொடங்கியிருந்தன. நெடுங்காலமாகத் தங்களை ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பியக் கலாசாரத்திற்குப் பதிலாக, லத்தீன் அமெரிக்கர்கள் தங்களின் உண்மையான அடையாளத்தை அப்போது தேடி வந்தனர்.

இத்தருணத்தில் வெளிப்பட்ட பல்வேறு இலக்கியப் போக்குகள், கருத்துகளுக்கு இடையேதான் 1913இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றிருந்த ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துக்கள், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளின் வழியாக, லத்தீன் அமெரிக்க நாடுகளின் இளம் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் புதியதொரு வழியைக் காட்டின. மகத்தானதொரு எழுத்தாளராக இருக்க வேண்டுமானால், ஐரோப்பியர்களைப் போல எழுதவேண்டிய தேவையில்லை என்பதை அப்போது அவர் நிரூபித்து இருந்தார். தாகூரின் மறைபொருளான, மனிதநேயமிக்க கவிதை, சொந்த நாட்டைப் பற்றி, சொந்த மக்களைப் பற்றி, தங்களின் சொந்தக் குரலில் சொல்ல வேண்டும் என்ற உந்துதலை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடையே உருவாக்கியிருந்தது.

சிலி நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான கேப்ரியலா மிஸ்ட்ரல், பாப்லோ நெருதா ஆகியோர் இத்தகைய முயற்சிகளின் மூலம் ரவீந்திரரின் எழுத்துக்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக இருந்தனர். 1920களில் மெக்சிகோவில் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களின் செவ்வியல்தன்மை கொண்ட எழுத்துக்கள் தனித்தொகுப்பு நூல்களாக வெளிவந்தன. டால்ஸ்டாய், கெதே, தாகூர் ஆகியோரும் இதில் அடங்குவர். ‘பல்வேறுபட்ட உண்மைகளை, பல்வேறு மொழிகளில் அவை எழுதப்பட்டிருந்தபோதிலும், உலக மக்கள் அனைவருக்குமான மொழியில் பேசிய மகத்தான கவிஞர்களின் எழுத்துக்களை எமது தலைமுறையினரால் கண்டறிய முடிந்தது’ என மெக்சிகோவின் மிகச் சிறந்த கவிஞரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆக்டேவியோ பஸ் 1967இல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதைப் போன்றே 1986இல் நிகராகுவாவிற்குச் சென்றிருந்த சல்மான் ருஷ்டி அந்நாட்டில் தாகூர் பெரிதும் போற்றப்படுவது கண்டு வியப்புற்றார்.

தென் அமெரிக்கத் துணைக்கண்டம் முழுவதும் தாகூரின் எழுத்துகள் செல்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜுவான் ரமோஸ் ஜிமேனஸ் என்ற ஸ்பானிஷ் கவிஞரும் அவரது மனைவியும் ஜெனோபியா காம்ரூபியும்தான். இவர்கள் 1914 தொடங்கி 1922 வரை தாகூரின் எழுத்துகளை ஸ்பானிஷ் மொழியில் கொண்டுவருவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பார்சிலோனாவில் பிறந்த ஜெனோபியா அமெரிக்காவில் வளர்ந்தவர் என்ற வகையில் ஆங்கிலம் நன்கறிந்தவர். ஜுவான் ரமோனுக்கு ஓரளவிற்கே ஆங்கிலம் தெரியும்.

இவ்வகையில் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த தாகூரின் எழுத்துகளை ஜெனோபியா ஸ்பானிய மொழியில் எழுதி முடித்தபிறகு, இருவரும் ஆங்கிலப்பதிப்பை வைத்துக் கொண்டு, அதை மிக நுணுக்கமாக ஒப்பிட்டு திருத்தங்களை மேற்கொண்டனர். இறுதி செய்யப்பட்ட ஸ்பானிஷ் பிரதியை அடித்தளமாகக் கொண்டு ஜுவான் ரமோன் மட்டும் தனியாக ஸ்பானிஷ் கவிதை நடையைப் பின்பற்றி அதை மீண்டும் உருவாக்கினார்.

இந்த வகையில்தான் 1914முதல் 1922 வரை இந்த இருவரும் சேர்ந்து தாகூரின் 22 நூல்களை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்தனர். இவை கவிதை, நாடகம், சிறுகதை ஆகிய வடிவங்களில் அமைந்திருந்தன. எனினும், அவரது கட்டுரைகள், நாவல்கள், கடிதங்கள் அல்லது நினைவலைகள் போன்ற படைப்புகள் அச்சமயத்தில் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

1924 ஜூலையில் கல்கத்தாவிலிருந்து பெரு நாட்டை நோக்கிப் பயணித்த ரவீந்திரருடன் எல்மிர்ஸ்ட் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். (இதுதான் ரவீந்திரருடன் அவர் மேற்கொண்ட கடைசி பயணம்) ரியோடி ஜெனிரோ நகரில் கப்பல் நங்கூரமிட்டிருந்த தருணத்தில் ரவீந்திரருக்கு உடல்நலம் குன்றியது. கப்பலில் இருந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த நிறுத்தமான அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இறங்கி ஒரு ஓட்டலில் தங்கியபடி மருத்துவர்களிடம் சோதனை மேற்கொண்டார். அவரைச் சோதித்த இதயநோய் மருத்துவர் கட்டாயமாக சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின்னரே பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும், தற்போதைக்கு பெரு நாடு நோக்கிய பயணத்திற்கு வாய்ப்பில்லை என்றும் கூறிவிட்டார்.

இதற்கிடையே ரொமெய்ன் ரோலண்ட், ஆண்ட்ரூஸ் ஆகியோரிடமிருந்து வந்த கடிதங்கள் ‘பெரு நாட்டில் அரசியல்ரீதியான சிக்கல்களையும் பல வகையான அபாயங்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என எச்சரித்தன. எனினும் வந்திறங்கிய நகரிலோ அவருக்குத் தெரிந்தவர்கள் எவருமில்லை. இத்தகையதொரு சூழலில்தான் 1914ஆம் ஆண்டிலேயே பிரெஞ்சு மொழியில் வெளியான கீதாஞ்சலியில் தன் மனதைப் பறிகொடுத்து, கண்ணீர் வடித்த விக்டோரியா ஓகாம்போ என்ற ரசிகை அவரது உதவிக்கு வந்தார். இனி வருபவை அவரது வார்த்தைகள்.

‘பெரு நாட்டிற்குப் போகும் வழியில் பியூனஸ் அயர்ஸ் வழியாக ரவீந்திரநாத் தாகூர் பயணம் செய்வார் என்று 1924 செப்டெம்பரில் அறிவிப்பு வெளியானது. கிடெ (பிரெஞ்சு) மூலமும், ஈட்ஸ் (ஆங்கிலம்) மூலமும், ஜெனோபியா (ஸ்பானிஷ்) மூலமும் அவரது எழுத்துகளை அறிந்திருந்த எங்களுக்கு அந்த மகத்தான கவியின் வருகை அந்த ஆண்டின் மிகச் சிறப்பான நிகழ்வாகத் தோன்றியது. என்னைப் பொறுத்தவரையில், என் வாழ்வின் மகோன்னதமான நிகழ்வுகளில் ஒன்றாகத் தோன்றியது.

‘இத்தகையதொரு எதிர்பார்ப்பு உணர்விற்கிடையே, ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு, சுற்றிலும் அபரிமிதமாகப் பூத்துக் குலுங்கிய ரோஜாப் பூக்களின் நறுமணத்தை முகர்ந்தபடி, நான் தாகூரை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். அவரது எழுத்துகளையே நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த நினைவுகளையும் தருணங்களையும் பற்றி நான் எழுதியவை பின்னர் ‘லா நேஷன்’ இதழில் வெளியாயின. இத்தருணத்தில் கவிஞர் எனது விருந்தினராக சான் இசித்ரோ பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கக்கூடும் என்ற எண்ணம் எதுவும் எனக்கில்லை. பியூனஸ் அயர்ஸில் அவர் தங்கிச் செல்லும் குறுகிய காலத்தில், நான் உள்ளிட்டு, அவரது எழுத்துக்களின் அத்தியந்த ரசிகர்களை சந்திக்க அவருக்கு நேரம் இருக்குமா? என்று கூட யோசிக்கத் தோன்றவில்லை.’

விக்டோரியா ஓகாம்போவின் வேண்டுகோளுக்கு இணங்க தலைநகருக்கு வெளியே இருந்த சான் இசித்ரோவில் இருந்த அவரது வில்லாவில் ரவீந்திரரும் எல்மிர்ஸ்ட்டும் முதல் மாடியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கினர். அறையின் ஜன்னல்களைத் திறந்தால் ப்ளேட் என்ற பெயரில் ஓடும் ஆற்றினை கண்குளிரக் காண முடிந்தது. ஒரு வாரம் தங்கிச் செல்வது என்ற அவர்களின் திட்டம், பின்னர் மருத்துவர்களின் கண்டிப்பான உத்தரவால் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்தது.

இடையே ஒரு முறை 100 மைல் தூரத்திலிருந்த பம்பாஸ் என்ற பகுதிக்குச் சுற்றுலா சென்று வந்ததைத் தவிர, மற்ற நேரங்களில் ரவீந்திரர் நன்கு ஓய்வெடுக்கவும், தன்னைச் சந்திக்க வருவோருடன் வீட்டின் முன்புள்ள மரநிழலில் அமர்ந்தபடி உரையாடவும், விரும்பும் நேரங்களில் அமர்ந்து கவிதைகள் எழுதவும் முடிந்தது. இந்த நேரத்தில்தான் டூடில் என்று அழைக்கப்படும் வார்த்தைகளுக்கு இடையிலான கிறுக்கல் ஓவியங்களை அவர் வரையத் தொடங்கியிருந்தார். இதுவே பின்னர் முழு அளவில் ஓவியங்களைத் தீட்டும் பழக்கமாக அவரிடம் உருவெடுத்தது.

இவர்களுக்கு உதவி செய்ய தன் ஊழியர்களைக் கொடுத்தது மட்டுமின்றி, விக்டோரியா ஒகாம்போ வந்த விருந்தினர்களுக்கு உதவியாக காலை முதல் இரவு வரையிலும் அந்த வீட்டிலேயே இருந்தார். விக்டோரியா என்ற அவரது பெயரை ரவீந்திரர் விஜயா என்று மாற்றி அழைத்தார்.

அர்ஜெண்டினாவின் ஆளும் குழுவிற்கு மிக நெருக்கமானவரும், பொதுப்பணித் துறை ஒப்பந்தக்காரரும் பெரும் செல்வந்தருமான தந்தையின் ஏழு பெண்குழந்தைகளில் மூத்தவரான ஒகாம்போ முறையான பள்ளிப் படிப்பை முடிக்காவிட்டாலும், பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் திறமைமிக்கவராக இருந்தவர். பின்னாளில் சூர் (தெற்கு) என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழையும், பதிப்பகத்தையும் நிறுவி, லத்தீன் அமெரிக்காவில் பிரெஞ்சு, ஆங்கில நவீன இலக்கியங்களை பெருமளவிற்கு அறிமுகம் செய்து புகழ்பெற்றவர். அப்பகுதியின் தலைசிறந்த எழுத்தாளர்களின் நம்பிக்கையை, ஆதரவைப் பெற்றவராக இருந்தவர்.

அவரது தாராளவாத கருத்துகளுக்காக, 1953ஆம் ஆண்டில் அன்றைய அர்ஜெண்டினாவின் சர்வாதிகாரியான பெரோன், தன் ஆட்சிக்கு எதிரான கலகக்காரர்களின் ஆதரவாளர் எனக் குற்றம் சாட்டி அவரை 26 நாட்கள் சிறையில் அடைத்தபோது இந்தியப் பிரதமர் நேரு உள்ளிட்டு, உலகின் மிகப்பெரும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அதை எதிர்த்துக் குரலெழுப்பி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியின்றி, கணவரைவிட்டு சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ்ந்தவர். இந்தப் பிரிவுக் காலத்தில் (1914) அவருக்கு அறிமுகமான கீதாஞ்சலி, தன் வெறுமை உணர்வைப் போக்கி தன்னூக்கம் தந்தது என்றும் அவர் ஒரு முறை குறிப்பிட்டார். 1924இல் காந்தியை அறிமுகம் செய்து பிரெஞ்சு அறிஞர் ரொமெய்ன் ரோலண்ட் எழுதிய நூல் அவரை காந்தியை மிகவும் நேசிக்கச் செய்தது. தன் வாழ்நாளின் இறுதிவரை காந்தியின் அகிம்சை முறையை லத்தீன் அமெரிக்காவில் தீவிரமாக முன்னெடுத்தார். இதன்வழி இந்தியாவில் ஜவாகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். (விஸ்வபாரதியில் படித்தவரும், ரவீந்திரர் மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டவருமான இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் என்ற வகையில் அர்ஜெண்டினாவிற்கு பயணம் மேற்கொண்டபோது, அங்கு அரசுமுறை நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்கு முன்பாக, அவர் முதலில் சென்று ஒகாம்போவை சந்தித்தார்.)

எனினும் 1924இல் ரவீந்திரரை விருந்தாளியாக ஏற்று உபசரிக்கும் பொறுப்பை ஏற்ற காலத்தில், அவர்மீது ஈர்ப்பு கொண்ட, அவரது கவிதைகளின் மீது ஆழ்ந்த நேசம் கொண்ட, தனித்து வாழும் ஒரு பெண்ணாக மட்டுமே ஒகாம்போ இருந்தார். ரவீந்திரரின் தொடர்பும், அவரது சிந்தனைகளுமே அவருக்குப் புதிய பாதையை காட்டின என்று கூறுவதிலும் தவறில்லை.

தனது வைரம் பதித்த (டியாரா எனப்படும்) தலையில் அணியும் சிறு கீரிடம் போன்ற நகையை விற்றுத்தான் சான் இசித்ரோவில் ரவீந்திரர் இரண்டு மாத காலம் தங்கியிருந்த செலவை ஒகாம்போ சமாளித்தார். மேலும் இத்தாலிக்கு அவர்கள் இருவரும் பயணம் செய்வதற்கான கப்பல் டிக்கெட்டையும் அவர் இலவசமாகப் பெற்றுத் தந்தார்.

1925 ஜனவரி 4 அன்று ரவீந்திரரும் எல்மிர்ஸ்ட்டும் ஒகாம்போவிடம் விடைபெற்றுக் கொண்டு இத்தாலியை நோக்கிக் கிளம்பினர். அவர் தங்கியிருந்த வில்லாவில் கடந்த இரண்டு மாதங்களாக அமர்ந்து ஓய்வெடுத்துவந்த சாய்வு நாற்காலியையும் அவருக்கே வழங்கி, அதைக் கப்பலில் ஏற்றவும் உரிய ஏற்பாடுகளை ஒகாம்போ செய்தார்.

பயணத்தின் இரண்டாம் நாளில் ரவீந்திரர் ஒகாம்போவின் உணர்வுகளைத் தணிக்கும் வகையில் எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறியிருந்தார்:

‘ஆகாயத்தின் குரல் சுதந்திரமாக வந்திறங்கும் வகையிலான ஒரு கூடாகத்தான் என் மனம் இருக்க வேண்டும். எப்போதெல்லாம் அந்தக் கூடு ஆகாயத்தைத் தனக்குப் போட்டியாகக் கருதுவதாகத் தோன்றுகிறதோ, அப்போது நாடு விட்டு நாடு பறக்கும் ஒரு தேசாந்திரிப் பறவையைப் போல எனது மனமும் தொலைதூரக் கரைக்குச் செல்லப் பறந்துவிடும். நீ என்னை நேசிக்கிறாய் என்பதை அறிந்ததால்தான் இவற்றையெல்லாம் உனக்குச் சொல்கிறேன். உனது அன்பு ஏதாவதொரு வகையில் எனக்கு முழுநிறைவைத் தர உதவக்கூடும். இந்த வார்த்தைகள் தன்னகங்காரம் மிக்க ஒன்றாகக் கூட உனக்குத் தோன்றலாம். ஏனெனில் நம் ஆழ்மனதின் குரலில் ஒரே மாதிரியான கூக்குரல்…

‘முடிவேயின்றி மனதைக் கடந்து செல்லும் குரல்தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. என் மூலமாக வரும் எந்தவொரு கோரிக்கையும் என்னுடையதல்ல. தாயிடம் ஒரு குழந்தை வைக்கும் கோரிக்கை என்பது மிக உயர்ந்த தன்மை கொண்டது. அது தனிப்பட்ட ஒரு நபரின் கோரிக்கை அல்ல; மனித இனத்தின் கோரிக்கை… உன்னுடைய நட்பு எனக்கு எதிர்பாராத வகையில் கிடைத்தது. என்னுடைய உண்மையான தன்மையை அறிந்து கொண்டு, என் வாழ்க்கையின் ஆழமான பொருளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதை ஏற்றுக் கொண்டால்தான் இந்த நட்பு மேலும் வளரும்…

‘தங்களுக்கு மட்டுமே வேண்டும் என்று கேட்டதனால் எனது நண்பர்களில் பெரும்பாலோரை நான் இழந்திருக்கிறேன். என்னை அப்படியே எவருக்கும் தந்துவிட முடியாது என்று கூறியபோது, நான் மிகுந்த இறுமாப்பு பிடித்தவன் என்று அவர்கள் நினைத்தனர். இதுபோன்றவற்றால் நான் மீண்டும் மீண்டும் ஆழமாகப் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறேன். எனவேதான் புதியதொரு பரிசாக ஒரு நட்பு என் வழியில் வரும்போதெல்லாம் நான் மிகுந்த பதற்றத்திற்கு ஆளாகிறேன். எனினும் எனக்கான விதியை நான் எப்போதும் ஏற்றுக் கொள்கிறேன். இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் துணிவு உனக்கு இருக்குமானால் நாம் எப்போதும் நண்பர்களாக இருக்க முடியும்…’

அதன்பிறகு அவர்களிடையில் சில ஆண்டுகளுக்கு சந்திப்போ, கடிதத் தொடர்போ இல்லாமல் இருந்தது. 1930ஆம் ஆண்டில் ரவீந்திரர் தன் ஓவியங்களைக் கொண்டு ஒரு கண்காட்சியை பாரீஸ் நகரில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்போது அங்கிருந்த ஒகாம்போவிடம் கேட்டுக் கொண்டபோது, அவர் பாரீஸ் நகரில் இருந்த தன் நண்பர்களின் மூலம், மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே சிறப்பானதொரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கண்காட்சி பெற்ற வெற்றியின் விளைவாகவே, கலைநிகழ்வுகளுக்குப் பெயர்பெற்ற ஐரோப்பாவின் மற்ற நகரங்களிலும் ரவீந்திரரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, உலகளவிலான ஓவிய உலகில் அவர் தனியிடம் பெறுவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கித் தந்தது.

ரவீந்திரரின் மறைவிற்குப் பிறகு தான் நடத்தி வந்த ஓர் இதழில் ஒகாம்போ ஓர் அஞ்சலிக் குறிப்பினை எழுதினார். 1961ஆம் ஆண்டில் ரவீந்திரரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சாகித்ய அகாதெமி கொண்டுவந்த சிறப்பு மலரிலும் அவர் இவ்வாறு எழுதியிருந்தார்:

‘அவரது இருப்பின் ஒரு சிறு கணத்தைக் கூட தவறவிட்டுவிடக் கூடாது என்பதாகவே எனது நடவடிக்கைகள் இருந்தன. தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த என் மனதை அவர் சிறிதுசிறிதாக அமைதிப்படுத்தினார்.’

எல்மிர்ஸ்ட் உடனும் நல்ல உறவினைப் பேணிவந்த ஒகாம்போ அவர் இங்கிலாந்தில் நடத்திவந்த டார்டிங்டன் பண்ணையிலும் சிலநாட்கள் தங்கியிருந்து ரவீந்திரரின் நினைவுகளை அவரோடு பகிர்ந்து கொண்டார்.

இறுதியில் சாந்திநிகேதனை வந்தடைந்த அந்த நாற்காலியை ரவீந்திரர் தொடர்ந்து பயன்படுத்தியது மட்டுமின்றி, அதைப் பற்றிய பல கவிதைகளையும் தன் இறுதிக் காலம் வரை இயற்றி வந்தார். அந்த நாற்காலி அவருக்கு ஒகாம்போவை நினைவூட்டிக் கொண்டே இருந்தது என்றும் கூறலாம். இக்காலப்பகுதியில் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புரபி என்ற தலைப்பில் வெளியானபோது, அந்நூலை விக்டோரியா ஒகாம்போவிற்கு அவர் சூட்டியிருந்த விஜயா என்ற பெயரிலேயே அர்ப்பணம் செய்திருந்தார்.

இத்தாலியில் அப்போது ஆட்சிபுரிந்துவந்த சர்வாதிகாரியான முசோலினி எப்படியாவது ரவீந்திரரை ரோம் நகருக்கு அழைத்து வந்து தன்னை ஒரு ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சித்து வந்தார். எனினும் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த ரவீந்திரர் அதைத் தவிர்த்துவிட்டு, மிலான் நகரில் இருந்த கலாராடி ஸ்காட்டி பிரபு, அவரது மனைவி ஆகியோரின் உதவியுடன் வெனிஸ் நகரில் இருந்து இந்தியா செல்லும் கப்பலில் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

உலகின் இருவேறு கரைகளில் இருந்த ஒருவரையொருவர் ஆகர்ஷித்த இந்தத் தனித்திறன் மிக்கவர்களின் சந்திப்பை அடிப்படையாகக்கொண்டு அர்ஜெண்டினா – இந்திய கூட்டுத் தயாரிப்பாக ‘திங்கிங் ஆஃப் ஹிம்’ என்ற பெயரில் ஓர் ஆங்கிலத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் விக்டர் பேனர்ஜி இத்திரைப்படத்தில் ரவீந்திரராக நடித்துள்ளார். அர்ஜெண்டினாவில் அவர் தங்கியிருந்த பகுதிகள், சாந்திநிகேதன் ஆகியவற்றை இத்திரைப்படத்தில் கண்டு மகிழலாம்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *