இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி தன்மீது காட்டும் அதீதமான ஆர்வம் குறித்த வியப்பு ஒரு பக்கமும், கவர்ச்சிகரமான அந்த ஆளுமையை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் மறுபக்கமும் உந்தித் தள்ள, இத்தாலியின் அரசுமுறையிலான அழைப்பிற்கிணங்க 1926 மே 15 அன்று நேப்பிள்ஸ் நகரை நோக்கி ரவீந்திரர் தன் பயணத்தைத் தொடங்கினார். அவரோடு மகன் ரதீந்திரநாத், மருமகள் பிரதிமா தேவி ஆகியோரும் பயணித்தனர். ‘மகத்தானதொரு மனிதரையும் அவர் உருவாக்கிய, வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் இயக்கத்தையும் நேரில் காண்பதற்கான வாய்ப்பு இது என்றுதான் நான் கருதுகிறேன்’ என்று இந்தப் பயணம் பற்றி அவர் குறிப்பிட்டார்.
நேப்பிள்ஸ் நகரின் முக்கிய அதிகாரிகள் அவரை வரவேற்றதோடு, முசோலினியும் அவருக்கு வரவேற்புச் செய்தியை அனுப்பியிருந்தார். பின்னர் ரவீந்திரரும் மற்றவர்களும் ஒரு சிறப்பு ரயிலில் ரோம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர் இத்தாலியின் சர்வாதிகாரியும் பாசிஸ இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான முசோலினியைச் சந்தித்துப் பேசினார்.
ஜூன் 7 அன்று ரோம் நகர கவர்னர் அவரை வரவேற்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். அடுத்தநாள் அவரது முதல் சொற்பொழிவு ‘கலை என்பதன் பொருள்’ என்ற தலைப்பில் அமைந்திருந்தது. முசோலினியும் ஒரு பார்வையாளராக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இத்தாலியின் அரசரான மூன்றாம் விக்டர் இம்மானுவேல் அவரை வரவேற்றதோடு, அவர் எழுதிய சித்ரா என்ற நாடகம் இத்தாலிய மொழியில் நிகழ்த்தப்பட்டது. முசோலினியை மீண்டும் சந்தித்து உரையாடிய போதிலும் இத்தாலியின் புகழ்பெற்ற அறிஞரான பெனிடெட்டோ க்ரோசேவை சந்திக்க வேண்டும் என்பதில் ரவீந்திரர் ஆர்வமாக இருந்தார்.
அப்போது அவர் நேப்பிள்ஸ் நகரில் கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் இருந்து வந்தார் என்றே கூறலாம். எனினும் இருவருக்கும் பொதுவான நண்பர்களின் முயற்சியால் அவர் ரகசியமாக ரோம் நகருக்கு அழைத்து வரப்பட்டார். ஜூன் 15 அன்று அதிகாலையில் க்ரோசேயும் ரவீந்திரரும் சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அன்றே ரவீந்திரர் ஃப்ளாரென்சில் லியனார்டோ டா வின்சி கழகம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இத்தாலியில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது அவர் ஆற்றிய உரைகள், அளித்த பேட்டிகள் அனைத்துமே ஃபாசிஸ்ட் ஆட்சியைத் தூக்கிப் பிடிக்கும் வகையில் இத்தாலியப் பத்திரிக்கைகள் திரித்து எழுதியிருந்தன. ரொமெய்ன் ரோலண்ட்டின் தொடர்ச்சியான அழைப்பினையடுத்து சுவிட்சர்லாந்தில் உள்ல வில்லிநூவுவில் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக அவர் வந்தபோதுதான், இத்தாலியில் அவர் கூறிய கருத்துக்கள் பாசிஸ ஆட்சியின் நோக்கத்திற்கு உதவும் வகையில் இத்தாலிய பிரசார சாதனங்களால் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன என்பதை ரொமெய்ன் ரோலண்ட்மூலம் அவர் அறிந்து கொண்டார்.
அங்கு அவர் சந்தித்த ஜார்ஜ் துஹாமல், ஜே.ஜி. ஃப்ரேசர், ஃபோரெல், போவெட் போன்ற பல அறிஞர்களும் ரோலண்ட் கூறியதை உறுதிப்படுத்தினர். இத்தாலியில் தான் நேரில் கண்டதற்கும் இவர்கள் சொல்வதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை உணர்ந்த நிலையில், குழப்பமானதொரு மனநிலையுடன், எல்மிர்ஸ்ட்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
‘(இத்தாலியின் தற்போதைய நிலைமையைப் பற்றிய) எனது கருத்து போதுமானதாக இல்லாத தரவுகளின் அடிப்படையில் அமைந்தது. விஸ்வபாரதிக்காக அவர் செய்த உதவிகளின் காரணமாக முசோலினியின் மீது எனக்குள் உருவான பாரபட்சமான அணுகுமுறையை இன்னமும் என் மனம் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். தவிர்த்திருக்கவேண்டிய பொறுப்புகளில் சிக்கிக் கொண்டேன். இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள ஏன் சம்மதித்தேன் என்று இப்போது வருந்துகிறேன்.’
வில்லிநூவுவில் இருந்து ஜூரிச் சென்ற ரவீந்திரர் அங்கு உரையாற்றியதோடு, தன் கவிதைகளையும் பாடிக் காண்பித்தார். இங்கு அவர் சந்தித்த திருமதி சால்வடோரி இத்தாலியில் தான் நேரடியாகக் கண்ட ஃபாசிஸ்ட் அட்டூழியங்களை விவரித்தார். வியன்னாவில் அவர் சந்தித்த மோடிக்ளியானியும் அதை உறுதிப்படுத்தினார். இத்தாலிய சட்டமன்றத்தில் ஃபாசிஸத்திற்கு எதிரான உறுதியாக நின்ற உறுப்பினரான மாட்டியோட்டி எவ்வாறு கொடூரமான வகையில் கொலை செய்யப்பட்டார் என்பதையும் அவர் விவரித்தார்.
சந்தேகத்திற்கு இடமற்ற இத்தகைய சான்றுகளால் பெரிதும் அதிர்ச்சியுற்ற ரவீந்திரர் தனது இத்தாலிப் பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கியும், வெளிப்படையாக ஃபாசிஸத்தை கண்டனம் செய்தும் மான்செஸ்டர் கார்டியன் இதழுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதற்குப் பதிலடியாக, இத்தாலி நாட்டுப் பத்திரிக்கைகள் அவரை ’நன்றி கெட்டவர்!’ ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர்’ என்பது போன்ற மிக மோசமான வார்த்தைகளில் அவதூறு செய்து தொடர்ந்து எழுதி வந்தன.
இந்த இத்தாலிப் பயணமானது அவரது ஐரோப்பிய நண்பர்கள் பலரையும் அவர்மீது நம்பிக்கையிழக்கச் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். குறிப்பாக, காந்தியையும் ரவீந்திரரையும் குறித்து ஏராளமாக எழுதியிருந்த பிரெஞ்சு அறிஞரான ரொமெய்ன் ரோலண்ட் ‘ஃபாசிஸ்ட் முசோலினிக்கு எதிராக ரவீந்திரர் உரக்கக் குரலெழுப்பத் தவறிவிட்டார்’ என்று குறை கூறியதோடு, தன் நாட்குறிப்பிலும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
‘ஐரோப்பா – இந்தியா ஆகிய பகுதிகளின் சுயேச்சையான உணர்வுகளுக்கு வழிகாட்டி என்ற தன் பொறுப்பை அவர் தட்டிக் கழித்துவிட்டார். இந்தக் கடமையைச் செய்வதற்கான திறமை அவரிடம் இருக்கவில்லை. அவரது திறமை மிகவும் கவித்துவம் வாய்ந்ததாக, தன் இலக்கின்மீது மட்டுமே பெருவிருப்பம் கொண்டதாக இருந்தது.’
ஆனால் ரவீந்திரரைப் பொறுத்தவரையில் இவ்விரு தன்மைகளும்தான் தேசிய வெறிபிடித்த, தொழில்நுட்பத் திறமை கொண்ட ஐரோப்பா இவற்றைக் கைவிட்டுவிட்டு, அளவற்ற படைப்பூக்கமும் மனித நேயமும் கொண்ட வகையில் கிழக்கையும் மேற்கையும் சந்திக்க வைக்க வேண்டும் என்ற தன் இலக்கை எட்டிப் பிடிப்பதற்கான அடித்தளமாக இருந்தன.
இங்கிலாந்தில் டார்டிங்டனில் சாந்திநிகேதன், ஸ்ரீநிகேதன் ஆகியவற்றை அடியொற்றிய வகையில் எல்மிர்ஸ்ட் உருவாக்கி வந்த வளாகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கியிருந்துவிட்டு ரவீந்திரர் நார்வே தலைநகரான ஆஸ்லோ சென்றார். நார்வே அரசர் அவரை வரவேற்றார். அந்த நகரில் உரையாற்றிவிட்டு, நான்சேன், பிஜோர்சன், போஜர் போன்ற முக்கிய எழுத்தாளர்களையும் சந்தித்து உரையாடினார்.
ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் மேற்கொண்ட ரவீந்திரர் அங்கு ஸ்வென் ஹெடின் உள்ளிட்ட பல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசினார். பின்பு டென்மார்க் தலைநகரான கோபென்ஹேகனுக்குச் சென்று ஸ்காண்டிநேவிய கலாசாரத்தை முன்னுயர்த்திய அறிஞரான ஜார்ஜ் ப்ராண்டெஸ், நவீனத் தத்துவவியல், உளவியல் நிபுணரும் தத்துவஞானியுமான ஹரால்ட் ஹோஃப்டிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசி நட்பு பூண்டார்.
மீண்டும் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட ரவீந்திரருக்கு கடந்த காலத்தைப் போலவே அவர் சென்றவிடமெல்லாம் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. இத்தருணத்தில்தான் அவர் இயற்பியல் அறிஞரான ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனை முதல்முறையாகச் சந்தித்து உரையாடி அவருடன் நட்புணர்வை ஏற்படுத்திக் கொண்டார். இந்தப் பயணத்தின்போது ஜெர்மனி அதிபர் ஹிண்டென்பர்க் அவருக்கு விருந்தளித்து உபசரித்தார்.
ப்ரேக் நகரில் ஒரு வாரம் தங்கியிருந்தபோது அவரது போஸ்ட் ஆபீஸ் நாடகம் செக் மொழியில் நிகழ்த்தப்பட்டது. வியன்னா வழியாக புடாபெஸ்ட் நகருக்குச் சென்றபோது, தொடர்ச்சியான பொதுநிகழ்ச்சிகளால் அயர்ச்சியுற்ற அவர் லேக் பாலடனில் இருந்த ஒரு மருத்துவக் காப்பகத்தில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது.
பெல்க்ரேட், சோஃபியா, புகாரெஸ்ட், ஏதென்ஸ் ஆகிய நகரங்களில் வழங்கப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்புகள், உரைநிகழ்த்தல்களுக்குப் பிறகு அவர் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த எகிப்து நாடாளுமன்றம் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தன் நிகழ்வுகளை ஒத்தி வைத்தது. எகிப்து அரசர் ஃபாட் விஸ்வபாரதி பல்கலைகழகத்திற்கென அரேபிய நூல்களை அவருக்குப் பரிசளித்தார்.
இவ்வகையில் சுமார் ஏழுமாத கால பயணத்தை நிறைவு செய்துவிட்டு 1926 டிசம்பரில் ரவீந்திரர் தாய்நாடு திரும்பினார். அந்த நேரத்தில்தான், டிசம்பர் 23 அன்று டெல்லியில் ஓர் இந்து சீர்திருத்தவாதி முஸ்லீம் மதவெறியன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அரசியலும் அரசியல்வாதிகளுமே இதற்குக் காரணம் என்ற கூறப்பட்டபோது, ரவீந்திரர் இதை மறுத்தார். சாந்திநிகேதனில் இதுகுறித்துப் பேசிய அவர் கூறினார்:
‘எனது குடும்ப நிலங்களை மேற்பார்வையிடும் ஒரு ஜமீன்தாராக இருந்தபோது நான் கண்ட பிளவுதான் இது. ஜமீன் மாளிகையில் வரவேற்பறையில் (இந்துக்களுக்கென) தரைவிரிப்பும், (முஸ்லீம்களுக்கு) தரைவிரிப்பில்லாத வெறும் தரையும் என பிளவுபட்டு சமூகத்தின் இரு பிரிவினருக்கிடையே நிலவி வந்த பிளவை வெளிச்சம்போட்டுக் காட்டியது போலவே, சமூகத்தில் நீண்ட நாட்களாக நீடித்துவரும், ஒருவரையொருவர் ஒதுக்கிவைப்பது என்ற வெறுப்புணர்வைத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேநேரத்தில் திடீரென்று ஒருநாள் அவர்களை நாம் (இந்துக்கள்) அழைத்து நமது அரசியல் பிரசாரத்தில் பங்கேற்குமாறு கேட்கிறோம். ‘நீங்களும் எங்கள் சகோதரர்கள்தான். இழப்பின் ஒரு பகுதியை நீங்களும் சுமக்கத்தான் வேண்டும்; அரசின் அடக்குமுறை, சிறைவாசம் ஆகியவற்றையும் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்கிறோம்.
‘அவர்கள் இப்போது சிவப்புத் தொப்பியினை அணிந்தபடி தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம். அரசியலில் நாமிருவரும் தோளோடு தோள் சேர்ந்து போராட என்ன தடை? என்று கேட்கிறோம். காலம் காலமாக இந்த இரு சமூகத்தினரிடையே நீடித்துவரும் இடைவெளியே இங்கே தடையாக நிற்கிறது என்பதுதான் உண்மை. விரிப்புள்ள தரை, விரிப்பில்லாத தரை என்ற இடைவெளி இப்போதும் நீடிக்கிறது. என்றாலும் அது இட்டு நிரப்பவியலாத இடைவெளி அல்ல என்பதை இரு பிரிவினரும் உணரும் வகையில் ஒற்றுமைக்கான குரல் எழுப்ப வேண்டும்.’
இதேநேரத்தில்தான் விஸ்வபாரதியில் வருகைதரு பேராசிரியராக இருந்த இரண்டாவது இத்தாலிய அறிஞரான டுஸி ரவீந்திரர் தாய்நாடு திரும்புவதற்கு முன்பாகவே தன் பணியைத் துறந்துவிட்டுச் சென்றுவிட்டார். டிசம்பர் 29 அன்று அவர் ரவீந்திரருக்கு எழுதிய கடிதத்தில் ‘கிழக்கும் மேற்கும் சந்திக்கின்ற ஓர் இடமாக சாந்திநிகேதன் இருக்க வேண்டும் என்ற உங்கள் மையக் கருத்துக்கு ஏற்புடையதாக இல்லாத ஒரு சூழல் அங்கே நிலவுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதை மறுத்தும், தன் நிலையை விளக்கியும் ரவீந்திரர் பதில் எழுதியபோதிலும், பேராசிரியர் டுஸி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் இந்த இருவருக்கும் இடையிலான கடிதப்போக்குவரத்து நின்றுபோனது. இவ்வாறே ரவீந்திரரை கோபம் கொள்ளச் செய்யும் வகையிலான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன என்றே கூற வேண்டும்.
1927 ஜனவரி மாதம் அவரது நாட்டிய நாடகமான நாதிர் பூஜாவிற்கான ஒத்திகையை முடித்து, மாத இறுதியில் அந்த நாடகம் கல்கத்தாவில் அரங்கேறியது. கதையை முன்வைக்கும் புத்த பிக்குவாக ரவீந்திரர் மேடையில் தோன்றினார். மார்ச் மாதத்தில் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பயணம் மேற்கொண்ட அவர் பரத்பூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற இந்திய இலக்கிய மாநாட்டிற்குத் தலைமையேற்று உரையாற்றினார்.
கோடைக்காலத்தில் ஷில்லாங்கில் தங்கியிருந்தபோது, தீன் புருஸ் (மூன்று தலைமுறைகள்) என்ற தலைப்பில் புகழ்பெற்றதொரு நாவலை எழுதத் தொடங்கினார். எனினும் முதல் பகுதி முடிந்த தருணத்தில் அவருக்குள் இருந்த கவியும் பாடகனும் ஆசிரியரும் தங்களுக்கான பங்கினை கோரத் தொடங்க, இந்தக் கதை ஒரு தலைமுறையோடு முடிவுற்றது. இலக்கிய ரசிகர்களால் அனைத்து வகையிலும் முழுமையானதொரு நாவல் என பாராட்டப்பெற்ற இந்த நாவல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு யோகாயோக் (எதிர்நீச்சல்) என்ற தலைப்பில் வெளியானது.
1927 மார்ச்-ஏப்ரலில் எழுத்துபூர்வமாக ரவீந்திரர் தன் மனக்கசப்பை வெளிப்படுத்தவும் வேண்டியிருந்தது. அட்லாண்டிக் மன்த்லி இதழின் ஆசிரியர் கேட்டுக் கொண்ட அடிப்படையில் அவர் எழுதியிருந்த கட்டுரையில் 1920-21இல் விஸ்வபாரதிக்கு நிதி திரட்ட தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது அந்நாட்டின் கோடீஸ்வரர்களும் அவதூறு புனைவோரும் தனது முயற்சியைச் சீர்குலைத்தனர் என்பதை தான் உணர்ந்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் போலவே எட்வர்ட் தாம்ப்ஸன் ரவீந்திரநாத் தாகூர் – கவிஞரும் நாடக ஆசிரியரும் என்ற தலைப்பில் எழுதியிருந்த வாழ்க்கைவரலாற்று நூல் ஆங்கில ஏகாதிபத்திய தோரணையோடு உள்ளது என்று ரவீந்திரர் குறிப்பிட்டார். இந்த நூலைக் கண்டித்து ரவீந்திரரின் நெருங்கிய நண்பரும் பதிப்பாளருமான ராமானந்த சாட்டர்ஜி ஆங்கிலத்திலும் வங்காளியிலும் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதினார்.
இருதரப்பிலும் வசைகள் தங்குதடையின்றி பரிமாறிக் கொள்ளப்பட்டன. தனிப்பட்ட வகையிலும், அரசியல்ரீதியாகவும், இலக்கிய-பண்பாட்டு வேறுபாடுகளின் காரணமாகவும் இந்த மோதல் நிகழ்ந்தது என்றே கூறலாம். எனினும் இந்த நூல் மற்றும் நூலாசிரியர் குறித்த ரவீந்திரரின் விமர்சனக் கணைகள் மிகவும் கூர்மையானதாக இருந்தன. அவர் புனைபெயரில் வங்காளி மொழியில் எழுதிய விமர்சனம் வெளியானது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஒருபுறம் சாந்திநிகேதன் நிர்வாகச் சிக்கல்கள், மறுபுறம் பொதுவெளியில் அவருக்குக் கோபமூட்டும்படியான நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தோடு 1927 ஜூலை மாத நடுப்பகுதியில் டச்சு நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கிழக்கிந்திய தீவு நாடுகள் என்று அழைக்கப்படும் மலேயா, ஜாவா, பாலி ஆகிய பகுதிகளுக்கு ரவீந்திரர் பயணம் மேற்கொண்டார்.
இந்த நாடுகளில் ஏற்கனவே வேரோடியிருந்த பண்டைய இந்து, பவுத்த கலாசாரங்களை கண்டு களிப்பதில் அவர் பெருமகிழ்ச்சியுற்றார். பாலி தீவில் எண்ணற்ற வடமொழிச் சொற்கள் அன்றாடப் புழக்கத்தில் இருப்பது கண்டு வியந்தார். புத்தர் ஜாதகக் கதைகள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவையும் இப்பகுதி மக்களின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது கண்டும் மகிழ்ந்தார்.
பாலியில் அவர் இருந்தபோதுதான் லண்டனில் இருந்து வெளிவரும் நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையின் மூலம் அமெரிக்க சுற்றுலா எழுத்தாளரான கேத்தரின் மயோ என்பவர் எழுதிய மதர் இந்தியா என்ற நூல் பற்றிய செய்தியை அவர் முதன்முதலாக அறிய நேர்ந்தது. அவரது வாழ்க்கையிலேயே முதன்முறையாக அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு அவரைக் கோபத்தில் கொந்தளிக்கச் செய்த நூலாகவும் அது அமைந்திருந்தது.
(தொடரும்)