அமெரிக்க நாட்டு கோடீஸ்வரர்களைக் கடுமையாகத் தாக்கி அட்லாண்டிக் மன்த்லி இதழில் ரவீந்திரர் கட்டுரை எழுதிய அதேநேரத்தில் அமெரிக்காவில் வெளியான மதர் இந்தியா பரபரப்பாக விற்பனையான ஒரு நூலாகவும் இந்தியா குறித்து மேற்கு நாட்டவர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூலாகவும் இருந்தது. நேரடியாகக் கண்ட காட்சிகள், அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள், ஆங்கிலேய, இந்திய அறிஞர்களின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்தியாவின் இருண்ட பக்கத்தை வெளிக்கொணர வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாக அந்த நூல் இருந்தது.
‘நாகரீகமாகச் சொல்வதெனில், அது ஒரு அதிர்ச்சியூட்டும் நூல்’ என ஆர்னால்ட் பென்னெட் கூறினார் எனில், ‘அது ஒரு சாக்கடை பரிசோதகரின் அறிக்கை. இதிலிருந்து மேற்கத்திய நாட்டவர்கள் அல்ல; இந்தியர்கள்தான் விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும்’ என்று காந்தி கூறினார். ‘இந்தியாவிலுள்ள சாக்கடைகளை திறந்து பார்த்து சோதிக்கவே இந்தியாவிற்குச் சென்றேன் என்று செல்வி மயோ ஒப்புக் கொண்டிருப்பாரேயானால், அவரது தகவல் தொகுப்பு பற்றிக் குறை கூறுவதற்கு ஒன்றுமிருக்காது. ஆனால் ‘சாக்கடைதான் இந்தியா’ என்று வெற்றிப் பெருமிதத்தோடு அவர் குறிப்பிடுகிறார்’ என்றும் காந்தி மேலும் குறிப்பிட்டார்.
நூலாசிரியர் மயோ குழந்தைத் திருமணம் பற்றிய செய்தியில் தன்னை வேண்டுமென்றே தவறாக மேற்கோள் காட்டியிருக்கிறார் என்று ரவீந்திரர் கோபமுற்றார். நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையின் நூல் விமர்சகர் இந்தத் தவறான மேற்கோளை மிகுந்த உற்சாகத்துடன் எடுத்துக் காட்டியிருந்தார். ஜெர்மனியின் பிரபு வம்சத்தைச் சேர்ந்த ஹெர்மன் கேசர்லிங் உருவாக்கிய திருமணம் குறித்த நூலில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க 1925இல் ரவீந்திரர் இந்தியத் திருமணங்கள் குறித்த ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் இருந்த ‘இந்தியா இவ்வாறு கூறுகிறது’ என்ற வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தாமல், பெண்களின் காம உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில், குழந்தைத் திருமணம் தேவை என்று, ரவீந்திரர் அதை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை, மயோ அந்த நூலில் ஏற்படுத்தியிருந்தார். ‘தன் பெண்மையை உணர்வதற்கு முன்பாகவே ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்துவிட வேண்டும்’ என்று தாகூர் நம்பியதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த விஷயத்தில் நூலாசிரியர் மயோ ‘அனைத்து நியாயங்களையும் மீறிவிட்டதாக’ காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்நூல் குறித்தத் தனது கண்டனத்தை மான்செஸ்டர் கார்டியன் இதழுக்கும் நியூயார்க்கிலிருந்து வெளிவரும் நேஷன் இதழுக்கும் கடித வடிவில் ரவீந்திரர் அனுப்பியிருந்தார். தாகூரின் குடும்பத்தில் பெண்களுக்கு எத்தனை வயதில் திருமணம் நடைபெற்றது என்பதை நூலாசிரியர் மயோ கல்கத்தாவிலிருந்தும் யாரிடமாவது கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இந்திய சமூகத்தில் நிலவும் தீமைகளை கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு விமர்சகர் எழுதிய நூல் விமர்சனத்தை ரவீந்திரர் தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார்.
1928 ஜனவரியில் செக் நாட்டைச் சேர்ந்த வடமொழி அறிஞரான வி. லென்ஸி சாந்திநிகேதனில் வருகைதரு பேராசிரியராக இணைந்தார். இவரே பின்னாளில் ரவீந்திரரின் வாழ்க்கை வரலாற்றை செக் மொழியில் எழுதினார்.
1927ஆம் ஆண்டில் இருந்து வங்காளி இலக்கியத்தில் நவீனத் தன்மையை முன்வைத்தும், யதார்த்த நிலையை எழுத்துக்கள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் எழுத்தாளர்கள் இயக்கமொன்றை நடத்தினர். பல்வேறு இலக்கிய இதழ்கள் இதில் பங்கேற்ற போதிலும், கல்லோல் என்ற இதழ்தான் இதில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. பின்னாட்களில் வங்காளி இலக்கிய வரலாற்றில் கல்லோல் இயக்கம் என்று அறியப்பட்ட இந்த இயக்கம் தாகூரின் எழுத்துகளில் நவீன வாழ்க்கை முறையாகப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் பழமைவாதத்தின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டி வந்தது. இக்குழுவினரின் கருத்துக்களை மறுக்கும் வகையில் சனி வாரேர் சிட்டி (சனிக்கிழமை கடிதம்) என்ற இலக்கிய இதழ் தாகூருக்கு ஆதரவாகக் களமாடியது.
1928 மார்ச் மாதம் இந்த இரு குழுக்களிடையே தொடர்ந்து வந்த பிணக்கைச் சரிசெய்யும் வகையில் ஜொரசங்கோவில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரபல வங்காளி மொழி அறிஞரான சுனிதி குமார் சாட்டர்ஜியும் பங்கேற்றார். ரவீந்திரர் தலைமை வகித்து உரையாற்றினார். கடும் விவாதங்களுக்குப் பிறகும் இரு பிரிவினரிடையே கருத்தொற்றுமையை உருவாக்க முடியாமல் போனது. எனினும் இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ரவீந்திரர் பேசியவை பின்னர் சாகித்ய ரூப், சாகித்ய சமாலோசனா என்ற தலைப்புகளில் நூலாக வெளியாயின. வங்காளி இலக்கிய வரலாற்றில் சமூக நோக்கம் கொண்ட, அரசியல் தொனியோடு கூடிய எழுத்துககளுக்கான ஒரு முன்னறிவிப்பை இந்த இயக்கம் கொண்டு வந்தது என்று கூறினால் மிகையாகாது.
மே 7 அன்று ரவீந்திரரின் பிறந்தநாளையொட்டி, அவரது எடைக்குச் சமமாக அவரது நூல்கள் எடைபோடப்பட்டு, பின்னர் அவை மாநிலத்தின் பல்வேறு பொதுநூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் ஹிப்பெர்ட் உரைத் தொடரை மேற்கொள்ள மே 12 அன்று ரவீந்திரர் இங்கிலாந்தை நோக்கிப் பயணமானார். எனினும் மதராஸ் நெருங்கும்போது அவரது உடல்நலம் சீர்கெட்ட நிலையில், பயணத்தை ரத்து செய்துவிட்டு, அன்னி பெசண்ட் அழைப்பிற்கிணங்க அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில் ஒரு வாரம் ஓய்வெடுத்தார். பின்பு பீதாபுரம் ராஜாவின் விருந்தினராக குன்னூரில் தங்கினார். இங்கு இருந்தபோது மிட்டா என்ற தலைப்பில் அவர் எழுதத் தொடங்கிய நாவல்தான் பின்னர் சேஷேர் கவிதா என்ற பெயரில் வெளியானது.
இலங்கைக்குச் செல்ல மதராஸ் செல்லும் வழியில் பாண்டிச்சேரிக்குச் சென்ற ரவீந்திரர் அங்கு அரவிந்தரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘பல ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் களத்தில் அரவிந்தர் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது (அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு) அவரைக் கண்ட நான் ‘அரவிந்தரே! இந்த ரவீந்திரனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும்!’ என்று கூறினேன். அதேபோன்று, இன்று ஞானமே உருவாக வீற்றிருந்த அரவிந்தரைக் கண்டதும் ‘அரவிந்தரே! இந்த ரவீந்திரனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்வீராக!’ என்று கூறிவிட்டு வந்தேன்.’
இலங்கையில் 10 நாட்களுக்கு மேலாகத் தங்கியபோதும் உடல்நிலையில் முன்னேற்றம் காணாததால், ரவீந்திரர் தன் இங்கிலாந்துப் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார். அப்போது மைசூர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த சர். பிரஜேந்திரநாத் சீல் (இவர்தான் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக உருவெடுத்தபோது அதன் முதல் துணைவேந்தராக இருந்தவர்) அவர்களின் விருந்தினராக அவரது பெங்களூர் இல்லத்தில் ஓய்வெடுத்தார்.
இனிப் பயணம் இல்லை என்றானதும் உடல்நிலை மெதுவாகச் சீரடைந்தது. அங்கு தங்கியிருந்த குறுகிய காலத்திற்குள்ளேயே யோகாயோக் மற்றும் சேஷேர் கவிதா ஆகிய இரு நாவல்களையும் எழுதிமுடித்து இறுதி செய்தார். கவித்துவம் நிரம்பிய வரிகளைக் கொண்ட சேஷேர் கவிதா வங்காளி இலக்கிய வரலாற்றில் தனியிடம் பெற்ற ஒரு நூலாகும்.
பெருமளவிற்கு அவர் உள்நாட்டிலேயே தங்கியிருக்க நேர்ந்த 1928ஆம் ஆண்டில் படைப்பூக்க ரீதியாகப் பல சாதனைகளையும் படைத்தார் எனலாம். இந்த ஆண்டில் எழுத்து மட்டுமின்றி, ஓவியம் வரைவதிலும் அவர் தன் முழுத்திறனையும் செலவிட்டார். இதில் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்னவெனில், ஓவியம் வரையத் தூண்டுதல் ஏற்படும்போது அப்போது கைக்குக் கிடைக்கும் காகிதத்தில், கையில் கிடைத்த வண்ணங்களில் வரைந்து முடிப்பது – ஒரு சில நாட்களில் ஒரே நாளில் 4-5 ஓவியங்களைக் கூட அவர் நிறைவு செய்திருக்கிறார் – என்ற வழக்கத்தின் விளைவாக, அவரது ஓவியங்களின் நிலைத்தன்மை பின்னாட்களில் கேள்விக்குறியாக மாறியது.
ஜூலை தொடக்கத்தில் சாந்திநிகேதன் திரும்பிய ரவீந்திரர் மிட்டா நாவல் பிரபாசி பத்திரிக்கையில் தொடராக வெளிவர ஏற்பாடு செய்கிறார். இதன் ஆசிரியர் ராமானந்த சாட்டர்ஜி அவருக்கு முன்பணமாக ஆயிரம் ரூபாய் வழங்கினார். ஜூலை இறுதியில் சிறுநீரக அடைப்பு நோய்க்கு சிகிச்சை பெற கல்கத்தா வந்து தங்கி, டாக்டர் நீல் ரத்தன் சர்க்காரிடம் சிகிச்சை பெற்றார்.
ஆகஸ்ட் மாதம் பிரம்ம சமாஜத்தின் நூற்றாண்டுவிழா தொடங்கியது. இதையொட்டி, ரவீந்திரர் மூன்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்தக் காலப்பகுதியில் காதல் கவிதைகள், ஓவியம் என படைப்பூக்கம் நிரம்பியவராகவும் அவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசம்பரில் அறிவியல் அறிஞர் ஜகதீஷ் சந்திர போஸின் 70ஆம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி வனவாணி என்ற கவிதைத் தொகுப்பை எழுதி அவருக்கு அர்ப்பணித்தார். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற கருதுகோளை நிலைநிறுத்திய அறிஞரான ஜகதீஷ் சந்திர போஸிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலான இந்தக் கவிதைகள், ஆண்டின் பல்வேறு பருவங்களிலும் தோன்றி மலர்ந்து, காயாகி, கனியாகி மீண்டும் மண்ணோடு சேரும் செடி, கொடி, மர வகைகளின் வாழ்க்கையை கவிதை வடிவில் சித்தரிப்பதாக அமைந்திருந்தன.
டிசம்பர் 17 அன்று சாந்திநிகேதனுக்கு வருகைதந்த முதல் இந்திய வைஸ்ராய் என்ற புகழுடன் இர்வின் பிரபு தன் மனைவியுடன் வருகை தந்தார். வழக்கம்போல பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாமரம் வீசுகிறார் என்ற ஏச்சுக்கு ஆளானபோதிலும், ரவீந்திரரின் கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளுக்கு அரசின் உதவி கிடைக்க வைஸ்ராயின் இந்த வருகை உதவியது.
1929 ஜனவரி 27 அன்று பிரம்ம சமாஜத்தின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தின்போது அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற மதங்களின் சர்வதேச மாநாட்டினை ரவீந்திரர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
பிப்ரவரி 9-10 தேதிகளில் ஸ்ரீநிகேதனில் கூட்டுறவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தலைமைவகித்த சர். டேனியல் ஹாமில்டன் ‘கூட்டுறவு இயக்கம் தோல்வியுற்றால், இந்தியா குறித்த நம்பிக்கையும் தோல்வியுறும்’ என்று குறிப்பிட்டார். இதில் பேசிய ரவீந்திரர் கூட்டுறவு இயக்கம் மற்றும் அதன் குறிக்கோள்களை முன்வைத்து, இவை முறையாகப் பின்பற்றப்பட்டால், இந்தியா சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாற்றம் பெறும் என்று குறிப்பிட்டார்.
மார்ச் 1 அன்று கல்கத்தாவிலிருந்து கிளம்பி கொழும்பு, சிங்கப்பூர், ஜப்பான் வழியாக ஏப்ரல் 5 அன்று கனடா போய் சேர்ந்தார். மறுநாள் கனடாவின் கல்விக்கான தேசியக் குழுவின் மாநாட்டில் ஓய்வின் தத்துவம் குறித்து உரையாற்றினார். ஏப்ரல் 8இல் வான்கூவர் நகரில் இதே தலைப்பில் அவர் உரையாற்றியபோது, அரங்கத்தில் 2000 பேர் குழுமியிருந்தனர் எனில், வெளியே கொட்டித்தீர்க்கும் மழைக்கிடையே 3000 பேர் குழுமியிருந்து அவரது உரையைக் கேட்டனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆசியர்களுக்கு எதிரான உணர்வு மிகவும் பரவலாக நிலவி வந்த பின்னணியில் பார்க்கும்போது கனடா நாட்டு மக்கள் வெளிப்படுத்திய இந்தப் பேராதரவு குறிப்பாக எடுத்துக் கூறத் தக்கதாகும்.
தொடர்ந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்களை ஏற்று அமெரிக்காவிற்குப் புறப்பட்டார். அங்கு அமெரிக்க சுங்க அதிகாரிகள், நோபல் பரிசு பெற்ற கவிஞர் என்பதை அறிந்திருந்தபோதிலும், அவரை மிக மோசமாக நடத்தினர். மிகுந்த மன உளைச்சலுடன் ஏப்ரல் 19 அன்று லாஸ் ஏஞ்சலஸ் வந்து சேர்ந்த அவர். அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றினார். பின்னர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஜப்பான் நோக்கிக் கிளம்பினார். அங்கு பல்வேறு நகரங்களிலும் உரையாற்றியதோடு, ஜப்பானின் முக்கிய எழுத்தாளர்களையும் அறிஞர்களையும் சந்தித்து உரையாடினர். ஜூன் 8 அன்று இந்தியாவை நோக்கிப் பயணத்தைத் தொடங்கி, மதராஸ் வழியாக கல்கத்தா வந்தடைந்தார்.
தியாகி பகத்சிங்கின் உற்ற தோழரும், புரட்சியாளருமான ஜதீன் தாஸ் லாகூர் சிறையில் 67 நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு செப்டெம்பர் 13 அன்று உயிர்நீத்தார். ரவீந்திரர் அப்போது மேற்கொண்டு வந்த தபதி என்ற நாடகத்திற்கான ஒத்திகைகளை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிறுத்தி வைத்தார்.
பின்பு செப்டெம்பர் 26,27,28 மற்றும் அக்டோபர் 1 தேதிகளில் கல்கத்தாவில் தபதி நாடம் அரங்கேறியது. அப்போது 67 வயதான ரவீந்திரர் இந்த நாடகத்தில் விக்ரம் என்ற பாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்தார். இந்த நாடகத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
இதே காலப்பகுதியில் சாந்திநிகேதன் மாணவரான மது பாசு ரவீந்திரரின் ஒரு சிறுகதையை அடித்தளமாகக் கொண்டு கிரிபாலா என்ற (மவுன) திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். இதன் திரைக்கதையை மேம்படுத்துவதில் உதவி செய்த ரவீந்திரர், க்ரவுன் சினிமாவில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டு திரைப்படத்தைப் பார்த்தார்.
இந்த ஆண்டில் அவர் எழுதிய நாவல்களான யோகாயோக், சேஷேர் கவிதா, தபதி (நாடகம்), மஹுவா ஆகியவை நூல்வடிவில் வெளிவந்தன.
(தொடரும்)