Skip to content
Home » தாகூர் #31 – மனிதனின் மதம் – ஆக்ஸ்ஃபோர்ட் உரைத் தொடர்

தாகூர் #31 – மனிதனின் மதம் – ஆக்ஸ்ஃபோர்ட் உரைத் தொடர்

ஆக்ஸ்ஃபோர்ட் உரை

1930 ஜனவரியில் பல்வேறு அழைப்புகளுக்கு இணங்க லக்னோ, கான்பூர், ஆக்ரா நகரங்களுக்குப் பயணித்த ரவீந்திரர் சென்ற இடங்களில் எல்லாம் உரை நிகழ்த்திவிட்டு, அகமதாபாத் வந்தபோது உடல்நலம் குன்றியது. மாத இறுதியில் நடைபெறவிருந்த வங்க சாகித்ய சம்மேளனத்தில் பங்குபெற இயலாது என்பதை உணர்ந்த அவர் தன் உரையை எழுதி அனுப்பினார். அவரது அந்த உரையை சம்மேளனத்திற்கு வந்திருந்த பிரதிநிதிகளிடையே அவரது மூத்த சகோதரியும் வங்காளி இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளருமான சுவர்ணகுமாரி படித்தார்.

ஜனவரி 30 அன்று பரோடாவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் கல்வி-கற்பித்தல் குறித்து சிறப்பானதொரு உரை நிகழ்த்திவிட்டு வங்காளத்திற்குத் திரும்பினார்.

பிப்ரவரி 6 அன்று ஸ்ரீநிகேதனின் ஆண்டுவிழா. இதில் அதன் முதல் இயக்குநரான எல்மிர்ஸ்ட் கலந்து கொண்டார். பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீநிகேதன் கூட்டுறவு சங்க விழாவை அன்றைய வங்காள கவர்னர் ஸ்டேன்லி ஜாக்சன் தொடங்கி வைக்க, எல்மிர்ஸ்ட் தலைமை தாங்கினார். ஸ்ரீநிகேதன் பணிகளை முன்னெடுக்க ஆண்டுதோறும் அரசு ரூ. 1000/- வழங்கும் என்ற கவர்னரின் அறிவிப்பு தேசியவாதிகளின் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் கொண்டு வந்தது.

மார்ச் 2 அன்று தன் ஐரோப்பிய பயணத்தைத் தொடங்கிய ரவீந்திரர் பிரான்சில் இறங்கி சில மாதங்கள் தங்கினார். 1912ஆம் ஆண்டில் எப்படித் தன் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்போடு பாரீஸ் நகரத்தின் வழியாக லண்டன் சென்றாரோ, அதைப் போன்றே இம்முறை ரவீந்திரர் தன் ஓவியங்களை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்த தன்னோடு எடுத்துச் சென்றார்.

ரவீந்திரரின் ரசிகைகளான ஆண்ட்ரி கார்பெலஸ், நோவாலிஸ் பிரபுவின் மனைவின் அன்னா, அப்போது பாரீஸில் இருந்த அர்ஜெண்டினாவின் விக்டோரியா ஒகாம்போ ஆகியோரின் அனைத்து வகையான உதவிகளுடன் கவின்கலைகளின் புகலிடமாக திகழும் பாரீஸ் நகரில் 400 ஓவியங்களோடு ரவீந்திரரின் ஓவியக் கண்காட்சி மே 2 அன்று தொடங்கியது. ஓவிய உலகிற்குப் புத்தொளி பாய்ச்சும் வகையில் ரவீந்திரரின் கைவண்ணம் திகழ்கிறது என ஓவிய விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுகள் வந்து குவிந்தன. இதுவே ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் இத்தகைய ஓவியக் கண்காட்சியை நடத்துவதற்கு ரவீந்திரருக்கு உற்சாகமூட்டியது.

மே 13 அன்று இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ‘நாகரிகமும் முன்னேற்றமும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இத்தருணத்தில் அவரைப் பேட்டி கண்ட மான்செஸ்டர் கார்டியன் இதழ் ‘இந்தியாவின் தூதர் மகாத்மா காந்தி அல்ல; கவிஞரும் சிந்தனையாளருமான தாகூர்தான்!’ என்று பாராட்டியது.

நீண்ட ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, மே 19 அன்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மான்செஸ்டர் கல்லூரியில் ரவீந்திரர் தனது முதல் ஹிப்பர்ட் சொற்பொழிவை தொடங்கினார். அடுத்து மே 21, 26 தேதிகளிலும் இதே வரிசையில் உரை நிகழ்த்தினார். இந்த மூன்று உரைகளும் பின்னர் ‘மனிதனின் மதம்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

‘உள்ளொளியே மனிதனின் விடுதலைக்கு வழி’ என்ற இலக்குடன் செயல்பட்ட ப்ராட்டெஸ்டண்ட் கிறித்துவ மதப்பிரிவின் ஓர் அங்கமாக விளங்கிய குவாக்கர் இயக்கத்தின் ஆண்டு விழாவில் மே 24 அன்று ரவீந்திரர் கலந்து கொண்டார். அதன் 226 ஆண்டுக்கால வரலாற்றில் ‘வெள்ளையரல்லாத’ ஒருவரை ஆண்டுவிழாவில் பேச அழைத்தது இதுவே முதன்முறையாகும்.

இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் அன்றைய நிலை, அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ரவீந்திரர் எடுத்துக் கூறினார். ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார்: ‘இந்தியா விடுதலையை விழைகிறதா? என்று கேட்டீர்கள். மனிதர்களுக்கு முழுமையான விடுதலை என்ற ஒன்று கிடையாது. சுதந்திரம் என்பது மனிதனின் இயற்கையான ஒரு தன்மை மட்டுமல்ல; அதுவே அவனது உயரிய இலக்காகவும் இருக்கிறது. மனித குலத்தின் மிகச்சிறந்த விஷயங்கள் அனைத்துமே ஒருவருக்கொருவர் தொலைதூரத்தில் இருக்கும் மனிதர்களிடையே நிகழும் பரஸ்பர பரிமாற்றங்களால்தான் எட்டப்பட்டுள்ளன. கிழக்கு-மேற்கின் மிகச்சிறந்த இதயங்கள் ஒன்றுசேர்ந்து விடுதலை என்ற உண்மையான மனித உறவை இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நிறுவட்டும்!’

மே 25 அன்று மான்செஸ்டர் கல்லூரியில் ‘இரவும் பகலும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை பற்றி செய்தி வெளியிட்ட மான்செஸ்டர் கார்டியன் இதழ் “அவரது ஆங்கிலம் படிப்பதற்கு மட்டுமல்ல; கேட்பதற்கும் அழகாக இருந்தது. அவரது வார்த்தைகள் என் காதுகளில் இசையென ஒலித்தன’ என்று உரையைக் கேட்டவர்களில் ஒருவர் கூறியதை சுட்டிக் காட்டியிருந்தது.

மே 26 அன்று ஹிப்பர்ட் உரைத்தொடரின் இறுதிப் பகுதியை ரவீந்திரர் வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவித்துப் பேசிய கல்லூரி முதல்வர் சர் மைக்கேல் சாட்லர், ‘நீங்கள் இங்கு உதிர்த்த உயிரோட்டமான ஒவ்வொரு வார்த்தையும் நம்மை ஒன்றிணைத்துள்ளது. நீங்கள் எங்களுக்கு அளித்த பரிசை, எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உத்வேகத்தை ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள எவரும் என்றும் மறக்கவியலாது’ என்று புகழ்ந்துரைத்தார்.

ஜூன் 5 முதல் ரவீந்திரர் டார்டிங்க்டன் ஹாலில் எல்மிர்ஸ்ட் மற்றும் அவரது மனைவியுடன் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தங்கியிருந்தார். எனினும் அங்கிருந்து அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எழுதிய கடிதங்களில் எல்மிர்ஸ்ட்டும் அவரது மனைவி டோரதியும் டார்டிங்க்டனில் நடத்திவந்த கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான அமைப்பின் சிறப்பு குறித்துப் பாராட்டி எதுவும் எழுதவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையில், தாகூரின் சாந்திநிகேதன், ஸ்ரீநிகேதன் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டே, அவற்றால் உந்துதல் பெற்றே, எல்மிர்ஸ்ட்டும் அவரது மனைவியும் இதை உருவாக்கினர் என்பதே உண்மை. இந்நிலையில், இந்தியாவில் தான் முன்னெடுத்த அமைப்புகள் மற்றவர்களின் நிதியுதவிக்காக வாடிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், எல்மிர்ஸ்ட்டின் இந்த முயற்சி, செல்வச் செழிப்போடு முன்னேறிக் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு மனிதனாக அவரிடம் பொறாமையுணர்வு மேலோங்கி இருந்திருக்க வேண்டும் என்பதே உண்மையாக இருக்கும். எனினும் இங்கு தங்கியிருந்த காலத்தில் அவர் தனது ஓவிய முயற்சிகளைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டார்.

ஜூலை 10 அன்று ஜெர்மனியின் பெர்லின் நகருக்குப் பயணமான ரவீந்திரர் மறுநாள் ஜெர்மன் நாடாளுமன்ற (ரெய்ஷ்டாக்) உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். அன்று வானொலியிலும் உரைநிகழ்த்தினார். ஜூலை 14 அன்று இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைனைச் சந்தித்துப் பேசினார். ட்ரெஸ்டன் (17-19), மியூனிச் (19-24) ஆகிய ஜெர்மன் நாட்டு நகரங்களுக்கும் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனுக்கும் பயணித்தார். இந்த நகரங்களில் எல்லாம் அவர் உரைநிகழ்த்தும் அரங்குகளிலேயே ரவீந்திரரின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. ஆகஸ்ட் 19 அன்று மீண்டும் பெர்லினில் ஐன்ஸ்டைனைச் சந்தித்து உரையாடிய ரவீந்திரர் பின்பு ஜெனிவா சென்று அங்கு சுமார் ஒரு மாதம் தங்கியிருந்தார்.

இந்தப் பயணத்தின்போது ஜெர்மனியிலும் அமெரிக்காவிலுமாக அவர் நான்கு முறை ஐன்ஸ்டைனைச் சந்தித்து உரையாடினார். இவர்களின் இந்த சந்திப்புகள் குறித்து மேற்கத்திய தத்துவ அறிஞரான சர் ஐசையா பெர்லின் இவ்வாறு எழுதியிருந்தார்: ‘இருவருமே உண்மையானவர்கள்; உயரிய திறன் பெற்றவர்கள்; உயரிய நோக்கங்கொண்ட சிந்தனையாளர்கள் என்ற தனித் தன்மைகளைக் கொண்டிருந்தபோதிலும், அவர்களின் சமூக ரீதியான நோக்கங்கள் ஒரேமாதிரியாக இருந்தபோதிலும், ஒருவருக்கொருவர் மீதான பரஸ்பர நன்மதிப்பைத் தவிர, அவர்களுக்கிடையே பொதுவான விஷயம் என்று எதுவும் இருந்ததாக நான் நம்பவில்லை.’

ஆகஸ்ட் 30 அன்று கிழக்கு வங்காளத்தின் டாக்கா நகரில் மதக்கலவரம் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்று குவிப்பதை பிரிட்டிஷ் காலனியாட்சி மிகுந்த களிப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதனை அறிந்த ரவீந்திரர் ‘ஸ்பெக்டேட்டர்’ என்ற இதழுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ‘கிழக்கு வங்காளத்தின் டாக்கா நகரில் வெடித்தெழுந்த மதக்கலவரத்தில் சொல்லொணாக் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, காலனி ஆட்சியின் காவல்துறை அதை எவ்வித சலனமுமின்றி, அக்கறையின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

செப்டெம்பர் 11 அன்று ரவீந்திரர் சோவியத் யூனியனின் தலைநகரான மாஸ்கோவில் வந்திறங்கியபோது, ஐன்ஸ்டைனின் உதவியாளரும் இயற்பியல் விஞ்ஞானியுமான டிமிட்ரி மரியானாஃப், அவரது மனைவியும் ஐன்ஸ்டைனின் மனைவி எலிசாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளுமான மர்காட் ஐன்ஸ்டைன், ரவீந்திரரின் மூத்த சகோதரர் த்விஜேந்திரநாத்தின் பேரனும் கம்யூனிஸ்டுமான சௌம்யேந்திரநாத் (இவர் இந்தியாவிற்குத் திரும்பி வந்தபிறகு விவசாயிகளை சங்கமாக அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு, பின்னர் புரட்சிகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (RCPI) என்ற அமைப்பினை உருவாக்கி நடத்தினார். கிழக்குப் பாகிஸ்தானில் வங்கதேசத்திற்கான கிளர்ச்சியின்போது இந்தியாவிற்கு வந்த அகதிகளின் நல்வாழ்விற்காகப் பெரிதும் பாடுபட்டவர்) ஆகியோரும் அவருடன் இருந்தனர்.

1926ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவிற்குச் செல்ல வேண்டுமென்று அவர் விரும்பியபோதிலும், இத்தாலியில் முசோலினியால் ஏற்பட்ட ஏமாற்றத்துக்குப் பின்னர், அவரது மேற்கத்திய நண்பர்களின் எச்சரிக்கைக்கு இணங்க அதைத் தவிர்த்திருந்தார். 1928இல் அப்போது மாஸ்கோவில் படித்துக் கொண்டிருந்த சௌம்யேந்திரநாத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தில் தன் உடல்நிலை ஒத்துழைத்தால் ரஷ்யா எவ்வாறு தன் விவசாயிகளுக்கு கல்வியைத் தந்துள்ளது என்பதை நேரடியாகப் புரிந்துகொள்ளவாவது அங்கு வரவேண்டும் என்றும் ‘நமது கிராமங்களைப் பாதுகாக்காவிட்டால், நாம் அனைவருமே இறந்து விடுவோம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். 1930 செப்டெம்பரில் அவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்திலும் இதுவே நோக்கமாக அமைந்திருந்தது.

ஆளும் வர்க்கத்தினருக்கு அரசியல் ரீதியான சாதகம் ஒருபுறத்தில் இருந்தபோதிலும், உண்மையிலேயே அத்தருணத்தில் ரஷ்யா அவரை வரவேற்கப் பெரிதும் காத்திருந்தது என்றே கூறலாம். 1920களின் இறுதியிலேயே ஆங்கிலத்தில் வெளியாகியிருந்த ரவீந்திரரின் எழுத்துக்கள் அனைத்துமே ரஷ்ய மொழிக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தன. 1917ஆம் ஆண்டிற்குள்ளாகவே அவரது கீதாஞ்சலி பல மொழிபெயர்ப்புகளைக் கண்டிருந்தது. அவற்றில் ஒரு பதிப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ரஷ்யரான இவான் புனின் தொகுப்பாசியராக இருந்து வெளியானதாகும். தன்னிகரற்ற ரஷ்யப் படைப்பாளியான லியோ டால்ஸ்டாயின் இரண்டாவது மகன் இல்யா டால்ஸ்டாய்கூட அவரது எழுத்துகளை மொழிபெயர்த்திருந்ததோடு, ‘இன்று உலகில் உயிரோடு வாழும் மகத்தான மனிதர்களில் தாகூரும் ஒருவர்’ என்று 1918லேயே கூறியிருந்தார். உலகின் மிகச்சிறந்த நடிப்பாசிரியர் எனப் புகழ்பெற்ற ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தன்னை மிகவும் கவர்ந்த இருட்டறையின் அரசன் என்ற தாகூரின் நாடகத்தை ருஷ்ய மொழியில் உருவாக்க நாம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்தாலியில் பெற்ற கசப்பான அனுபவத்தை வைத்து ரவீந்திரர் அரசியல் தலைவர்கள் எவரையும் (துணை வெளியுறவு அமைச்சர் ஒருவரை மட்டுமே அவர் சந்தித்தார்) சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, கலை, எழுத்து, கல்வி, திரைப்படம் தொடர்பான நபர்களிடம் மட்டுமே விரிவாக உரையாடினார்.

ரஷ்யாவில் அவருக்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் இருந்தன. பல நிறுவனங்களுக்குச் சென்று வந்ததோடு, பல முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்தார். மாஸ்கோவில் அவரது ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. அவரை பெரிதும் கவர்ந்த நிகழ்வு என்பது ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு நிலையத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த குழந்தைகள் அவரைச் சுற்றிக் கொண்டன. அவரது சுருக்கமற்ற முகத்தை, நரைத்துப் போன தாடியை தொட்டுத் தடவிய குழந்தைகளைப் பார்த்து அவர் சொன்னார்: ‘இது வெறும் முகமூடிதான். என் இதயம் மிகவும் இளமையானது; அன்பானது. அது ஒரு முன்னோடியின் இதயமும் கூட.’ பின்னர் விருந்தினர் பதிவேட்டில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: ‘இந்தக் குழந்தைகளிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவை இந்தியாவிலுள்ள எனது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை உருவாக்கவிருக்கும் இந்த இளம் பிஞ்சுகள் என் இதயத்தில் நீங்காத இடம்பெற்று விட்டனர். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறட்டும்!’

பொதுவிஷயங்கள் பலவற்றிலும் கருத்துவேறுபாடு கொண்டிருந்த போதிலும், காந்தி உள்ளார்ந்த வகையில் ரவீந்திரரை அறிந்திருந்தார். எனவேதான் எந்தவகையினராக இருந்தபோதிலும் அவர்களது முழுமையான ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கான மனிதனின் உரிமைகளுக்கான மகத்தான காவலாளி அவர் என்றும், இந்த மேம்பாட்டிற்குத் தடையாக இருக்கும் எந்தவொரு சமூக, அரசியல் அமைப்பையும், அது எவ்வளவுதான் புனிதமானதாக இருந்தபோதிலும், அதை எதிர்த்துக் குரல்கொடுக்க அவர் தயங்கியதில்லை என்றும் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

இத்தகையதொரு பின்னணியில் அவர் ரஷ்யாவிற்குச் சென்றபோது, சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களை மனிதர்களாக உயர்த்திய அக்டோபர் புரட்சியின் மகத்தான சாதனையை அவர் மனமுவந்து பாராட்டினார். ‘எதற்காகவும் விழையாதே!’ என்ற மகத்தான உபநிடத வார்த்தையின் உண்மையான பொருளை சோவியத் ரஷ்யாவில் தான் உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இதை வைத்துக் கொண்டு சோவியத் யூனியனில் அவர் கண்ட அனைத்தையும் பாராட்டினார் என்று பொருள் கொள்ளலாகாது. தனது கடிதம் ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘தற்போதைய ருஷ்ய ஆட்சியில் தண்டனை தரும் கைத்தடி வேலையற்று இருக்கிறது என்று நான் கூறவில்லை. அதேநேரத்தில், மகத்தான வலிமையோடு கல்வியின் பரப்பு இங்கே விரிவாகிக்கொண்டே செல்கிறது… ஒன்றன்பின் ஒன்றாக இங்கே மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் போல்ஷ்விக் பொருளாதாரம் எத்தகைய வடிவத்தை அடையப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. என்றாலும் ஒரு விஷயம் நிச்சயமானது. ரஷ்ய மக்கள் அபரிமிதமான அளவில் பெற்றுவரும் கல்வி, அவர்களை ஒருவழியாக மிகவும் சுதந்திரமானவர்களாக ஆக்கியுள்ளதோடு, எந்தக் காலத்திலும் இல்லாதவகையில் அவர்களது மனிதத் தன்மைக்குப் பெருமையையும் தேடித் தந்துள்ளது.’

மாஸ்கோவிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இஸ்வெஸ்தியா பத்திரிக்கைக்கு அவர் ஒரு பேட்டியளித்தார். அதில் ‘உண்மையைப் பெற மிகவும் சுதந்திரமானதொரு மனநிலை தேவைப்படுகிறது. அச்சுறுத்தல் அத்தகையதொரு நிலையைக் கொன்றுவிடுகிறது. மனித இனத்தின் நலனை கருதியாவது வன்முறை என்ற விஷமத்தனமான சக்தியைக் கட்டவிழ்த்து விடாதீர்கள். அது தொடர்ச்சியாக வன்முறையையும் கொடூரத் தன்மையையும் உருவாக்கிக் கொண்டேயிருக்கும். முந்தைய (ஜார்) காலத்தில் நிலவிய பல மோசமான தீமைகளை அழித்தொழிக்க நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது ஏன் இதையும் (அச்சுறுத்தல்) முற்றிலுமாக அழிக்க நீங்கள் முயற்சிக்கக் கூடாது?’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு மான்செஸ்டர் கார்டியன் இதழில் வெளியான இந்தப் பேட்டி, ரஷ்யாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகே, 1988ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்தான் இஸ்வெஸ்தியா இதழில் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவிலிருந்து தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்கள் பின்னர் ‘ரஷ்யாவிலிருந்து கடிதங்கள்’ என்ற தலைப்பில் தனிநூலாக வெளியானது.

ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி சென்று, அங்கிருந்து, அதற்கு நேரெதிரான ஓர் உலகமாகத் திகழ்ந்த அமெரிக்காவை நோக்கி அக்டோபரில் அவர் பயணப்படும்போது, மாறுபட்ட ஒரு சமூகத்தின் தேவையை உணர்ந்தவராக, மேற்கத்திய நாகரிகத்தில் புதியதொரு பிரிவு உருவாகியுள்ளதை உணர்ந்தவராக அவர் மாறியிருந்தார். இந்த மாற்றம் அமெரிக்காவில் அவரது பேச்சுக்களில் மிகத்தெளிவாகவே வெளிப்பட்டது.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *