அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்கா வந்து சேர்ந்த ரவீந்திரர் அங்கு 67 நாட்கள் தங்கியிருந்தார். இதற்குமுன் அவர் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது, முதல் முறையைத் தவிர மற்ற தருணங்களில் அவருக்குக் கிடைத்த பாராமுகமான வரவேற்பிற்கு முற்றிலும் மாறானதாக இந்தப் பயணம் அமைந்திருந்தது. அவரை வரவேற்க, ஹென்றி மார்கெந்தாவைத் தலைவராகக் கொண்டு தாகூர் வரவேற்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அமெரிக்க நண்பர்கள் சேவைக் கழகம் சாந்திநிகேதன் – ஸ்ரீநிகேதன் ஆகியவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலவிய சுகாதார சேவைகள் குறித்த ஓர் ஆய்வினை மேற்கொள்ள டாக்டர் ஹேரி சி டிம்ப்ரஸ் தலைமையில் ஒரு குழுவினை முன்பு அனுப்பி வைத்திருந்தது. இப்போது, இந்தக் கழகம் ரவீந்திரரின் தங்கும் வசதி, உரைநிகழ்த்தல் ஆகியவற்றுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டது.
1912ஆம் ஆண்டில் லண்டனில் அவர் சந்தித்த புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்டை இப்போது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நியூ ஹேவனில் நடைபெற்ற ரவீந்திரரின் ஓர் உரை நிகழ்விலும் ஃப்ராஸ்ட் கலந்து கொண்டார். இந்தக் காலப்பகுதியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 21 நாட்களுக்கு அவரைப் பற்றிய செய்திகளையும், இரண்டு நேரடி பேட்டிகளையும் வெளியிட்டதோடு, ரவீந்திரரும் ஐன்ஸ்டைனும் அமெரிக்காவில் சந்தித்த நிகழ்வை ‘ஒரு கணிதநிபுணரும் ஒரு ஞானியும் மன்ஹாட்டனில் சந்தித்தபோது’ என்ற தலைப்பில் அழகியதொரு புகைப்படத்தையும் வெளியிட்டது.
இதே காலப்பகுதியில் அமெரிக்க அதிபர் ஹூவர் ரவீந்திரரை அதிகாரபூர்வமாக வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பிரிட்டிஷ் தூதர் அவரை அதிபருக்கு அறிமுகம் செய்துவைத்தார். முந்தைய அமெரிக்க அதிபர் வில்சன் அவரது தந்தி, கடிதங்கள் கிடைத்தன என்பதைக் கூட ஒப்புக்கொள்ள தயாராக இருக்கவில்லை என்பதை நினைவுகூர்கையில், இந்தச் சந்திப்பு முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக இருந்தது என்றே கூற வேண்டும்.
ரவீந்திரரைப் பாராட்டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் இரவு விருந்து நிகழ்ச்சியில் அன்றைய நியூயார்க் கவர்னர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றிருந்த சிங்க்ளர் லூயிஸ் (இந்தப் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்கர்) உள்ளிட்டு 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ரவீந்திரர் ‘இன்றைய காலம் மேற்கு நாடுகளுக்கு உரியது. உங்களின் அறிவியல் பூர்வமான அறிவிற்காக மனித இனம் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. ஆனால் அந்த வலிமையைக் கொண்டு நீங்கள் நிராதரவற்றோரைச் சுரண்டுகிறீர்கள்; இந்த வாய்ப்பு கிடைக்காதோரை எள்ளி நகையாடி அவமதிக்கிறீர்கள். உங்களின் இத்தகைய பண்பாட்டின் விளைவாக உலகத்தின் பெரும்பகுதி துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தியாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு மேற்குலகம் மேற்கொண்ட பயணம் இன்னும் நிறைவுபெறவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பங்கை பெற்றுக்கொள்ள, முறையான உணர்வோடு, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளுங்கள். என்றுமே நிலையான மதிப்புடைய அனைத்தும் மனித குலத்திற்குப் பொதுவானதே ஆகும். எங்களிடம் வாருங்கள். எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களை அங்கீகரியுங்கள். நாம் அனைவருமே உடன்பிறந்தோர் என்பதை உணருங்கள்’ என்று குறிப்பிட்டார்.
நியூயார்க் நகரின் கார்னெகி ஹாலில் ரவீந்திரர் உரையாற்றியபோது அந்த அரங்கில் 4000 பேர் குழுமியிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடமின்றி வெளியேற நேர்ந்தது. ரவீந்திரர் தனது உரையில், ‘எங்களது வேண்டுகோள் உங்கள் காதுகளை எட்டுவதில்லை; வலிமை கொண்டோரின் வேண்டுகோளுக்குத்தான் நீங்கள் செவிசாய்க்கிறீர்கள். ஏனென்றால், உங்களைப் போலவே மிக மோசமாக தன்னாலும் நடந்துகொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளதன் விளைவாகவே ஜப்பான் வேண்டுகோள் விடுக்கும்போது நீங்கள் உடனடியாக அதற்குப் பதிலளிக்கிறீர்கள்’ என்று சுட்டிக் காட்டினார்.
சாந்திநிகேதனுக்கு நிதிதிரட்டும் வகையில் புகழ்பெற்ற பிராட்வே தியேட்டரில் ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது ரவீந்திரரின் அபிமானியும் அமெரிக்கத் தத்துவ அறிஞருமான வில் டூரண்ட் அவரை பிராட்வே மேடையில் அறிமுகம் செய்துவைத்தார். இத்தருணத்தில் வில் டூரண்ட் தான் எழுதிய ‘The Case for India’ என்ற நூலை – இந்த நூலுக்கு வங்காள அரசு தடை விதித்திருந்தது – ரவீந்திரரிடம் வழங்கினார். அப்போது ‘இந்தியா அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கு நீங்களே மிகவும் பொருத்தமான காரணமாக இருக்கிறீர்கள்’ என்று எழுதி கையெழுத்திட்டுத் தந்தார். நியூயார்க், போஸ்டன், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ரவீந்திரரின் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. போஸ்டனில் நடைபெற்ற கண்காட்சிக்கென பிரத்தியேகமாக இலங்கையின் மிகச்சிறந்த கலைவிமர்சகரான ஆனந்த குமாரசாமி கருத்தைக் கவரும் வகையில் ஒரு முன்னுரையை எழுதி வழங்கினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஓவிய கண்காட்சிக்கு ரவீந்திரர் ஓர் அறிமுக உரையை எழுதியிருந்தார்.
இந்த அமெரிக்கப் பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக நியூயார்க்கில் ரிட்ஸ்-கார்ல்ட்டன் ஹோட்டலில் அவர் கலந்து கொண்டது, 1929ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நியூ ஹிஸ்டரி சொசைட்டி என்ற ஒரு மத நல்லிணக்க அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். (பஹாய் பிரிவு என்று அழைக்கப்படும் இந்தப் பிரிவு மனித குல வரலாற்றில் மனிதர்களுக்குத் தேவைப்படும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு ஞானி தோன்றி அவர்களை நல்வழிப்படுத்துகிறார் என்ற கருத்தை முன்வைப்பதாகும். இவ்வகையில் கிருஷ்ணர், மோசஸ், கவுதம புத்தர், இயேசு கிறிஸ்து, முகம்மது நபி போன்றவர்கள் மனித குலத்தை வழிநடத்திச் சென்றவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வரும் ஓர் அமைப்பாகும்.) இந்த நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண்மணியும் உலகிலுள்ள பார்வையற்றோர் அனைவருக்கும் ஆதர்சமாக இன்றுவரை திகழ்பவருமான ஹெலன் கெல்லர் தன் அனுபவத்தை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘ரவீந்திரநாத் தாகூருக்கு அருகில் அமர்ந்து, அவருடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதென்பது புனிதமானதொரு நதியின் கரையில் அமர்ந்தபடி தேனென இனிக்கும் ஞானத்தை அருந்துவதைப் போன்றதாகும்.’ பார்வையற்ற ஹெலன் கெல்லர் ரவீந்திரரைத் தொட்டுப்பார்ப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பல நாளிதழ்களும் அப்போது பிரசுரம் செய்தன.
மேற்கத்திய நாடுகளில் தான் மேற்கொண்ட பயணங்களின் அனுபவங்களை ரவீந்திரர் தனது நினைவலைகளில் மிக விரிவாகத் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார். அவர் 1912 அக்டோபரில் இருந்து 1930 டிசம்பர் வரை அமெரிக்காவிற்கு ஐந்து முறை பயணங்களை மேற்கொண்டிருந்த போதிலும் தன் அமெரிக்கப் பயண அனுபவங்களை மிக மிக அரிதாகவே குறிப்பிட்டு வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து அவர் எழுதிய கடிதங்களில் நிர்மல் குமார் மகலனாபிஸுக்கு எழுதிய கடிதமே கடைசிக் கடிதம் ஆகும். அதில் ‘குறிப்பிடத்தக்க கருத்து எதையும் தான் அமெரிக்காவிலிருந்து சாந்தி நிகேதனுக்குக் கொண்டுவர இயலவில்லை’ என்ற தன் வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேநேரத்தில் அமெரிக்காவில் அவர் சந்தித்துப் பேசிய அறிஞர்களிடம் கூட பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்த வகையில் அமெரிக்கத் தத்துவ அறிஞர் வில் டூரண்ட், ஹெலன் கெல்லர் போன்றோர் மட்டுமே ரவீந்திரரின் கருத்தை முழுமையாக ஒப்புக் கொண்டவர்களாக இருந்தனர் எனலாம்.
ரவீந்திரர் மேற்கொண்ட இந்த அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்க அறிவுலகத்தின் பொதுவான அணுகுமுறை என்பது பெருமளவிற்கு நட்புணர்வுடனும் அன்போடுமே இருந்தது. ஒரு சில விமர்சனங்கள், கூக்குரல்கள் அவ்வப்போது எழுந்தன என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, சோவியத் யூனியன் மேற்கொண்டு வந்த கல்விப் புரட்சியை அவர் அளவின்றிப் பாராட்டியது ‘கடவுளாலேயே கைவிடப்பட்ட’ அந்த பூமியில் எந்தவொரு நல்லதும் நடக்கக்கூடும் என்பதை அதுவரை ஏற்க மறுத்துவந்த விமர்சகர்கள் பலருக்கும் கடுமையான எரிச்சலை உண்டாக்கியது. அவர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்பது மட்டுமின்றி, ரஷ்யாவிற்கான ஒரு பிரசாரகரைப் போல நடந்து கொள்கிறார் என்றும்கூட அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ரவீந்திரர் அவ்வாறு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளவில்லை; தான் தவறு என்று கருதியதை எவ்விதத் தயக்கமுமின்றி அந்த மண்ணிலேயே அவர் தெள்ளத்தெளிவாக விமர்சித்தார் என்பதை ரவீந்திரர் இஸ்வெஸ்தியா இதழுக்கு அளித்த பேட்டி உணர்த்தியிருந்தது. அக்டோபர் 14 தேதிய மான்செஸ்டர் கார்டியன் இதழ் இந்தப் பேட்டியை மறுபிரசுரம் செய்திருந்தது. இது அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கக்கூடும்; அல்லது தெரிந்துகொள்ள அவர்கள் மறுத்திருக்கவும் கூடும் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார்:
‘இங்கே ஒரு சில முரண்பாடுகளை நான் காண்கிறேன். எண்ணப் போக்கு என்றும் சொல்லலாம்…. அதாவது தீவிரமான சமூக மேம்பாட்டிற்கான முயற்சிக்காக நீங்கள் பயிற்சியளிப்போரின் மனங்களில், எதிரி என்று நீங்கள் கருதுவோருக்கு எதிரான கோபத்தை, வர்க்கரீதியான வெறுப்பை, பழிவாங்கும் உணர்வைத் தூண்டிவிடுவதன் மூலம் அவர்களுக்கு நன்மை புரிவதாக நினைக்கிறீர்களா?
‘கருத்து வேறுபாடு என்பது இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் மனித மனங்கள் சுதந்திரமாக இருக்கமுடியும். நமது எண்ணங்கள் அனைத்தையும் கட்டாயமான வகையில் ஒரே மாதிரியானதாகச் செய்வதன் மூலம் உருவாகும் இயந்திரத்தனமான செயல்முறை நிரம்பிய ஓர் உலகம் கவனத்தைக் கவர்வதாக இல்லாமல் உப்புசப்பற்றதாகவே இருக்கும். மனித குலம் அனைத்தையும் ஒன்றாக இணைத்துக் கொள்வது என்பதுதான் உங்கள் இலக்காக இருக்குமானால், அந்த உயிரோட்டமான மனிதத் தன்மையை கருதியாவது, நடத்தையிலும் கருத்தோட்டங்களிலும் வேறுபாடுகள் நிலவவே செய்யும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
‘அறிவுபூர்வமான சக்திகள், நெறிமுறை ரீதியான ஆலோசனைகள் எளிதாகப் பரவுவதன் மூலமே கருத்தோட்டங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன; அவை உருமாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. வன்முறை என்பது வன்முறையையும் குருட்டுத்தனமான அறிவிலித் தனத்தையுமே கொண்டுவரும். வலிமைமிக்கதொரு முரடனால் அதேபோன்ற மற்றொரு முரடனை அடக்கியாள முடியாது. ஒரு மனிதனால்தான் அதைச் செய்ய முடியும். நமது மனிதகுல வரலாற்றில் ஒவ்வொருநாளும் இதை நிரூபித்து வந்துள்ளது.’
அமெரிக்காவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு லண்டன் திரும்பிய ரவீந்திரருக்கு ஸ்பெக்டேட்டர் இதழ் ஹைட்பார்க் ஹோட்டலில் மதிய உணவுக்கான ஒரு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருந்தில் தத்துவஞானியான பெர்னார்ட் ஷா பங்கேற்றார். முன்பு சந்தித்ததை விட இப்போது ரவீந்திரரை நன்கு புரிந்து கொண்டதாக உணர்ந்த ஷா அப்போது குறிப்பிட்டார்: ‘நீங்களும் நானும் கூறுவதை யாரும் கேட்கத் தயாராக இல்லை… அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்க வேண்டாமென நான் எனது நாட்டு மக்களுக்கு கூறிக் கொண்டேதான் இருக்கிறேன். எனது எழுத்துக்களிலும் இதையே தெரிவிக்கிறேன். இருந்தாலும்கூட அவர்களின் விருப்பத்திற்கு மாறான ஒரு விஷயத்தை மக்களை நம்ப வைப்பதென்பது மிகவும் கஷ்டமானதொரு செயல் என்று உங்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.’
ரவீந்திரரின் இந்த நீண்ட பயணம் அயர்ச்சிதருவதாக இருந்தபோதிலும் கிடைத்த அனுபவத்தில் பார்க்கும்போது மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது. தனது தொடர்ச்சியான பயணங்களின்போது மேற்கத்திய உலகம் தனது பல்வேறு கட்டங்களில் பெருமைகளைப் பரப்பிக் கொண்டே வந்திருந்ததை அவர் கண்டிருந்தார். எல்லாப் பெருமைகளுமே ஒரு காலகட்டத்தில் மறைந்துபோவது இயற்கைதான். எனினும் அது எளிதாக மறந்துவிடக் கூடிய பெருமையல்ல என்பதும் உண்மை. இந்த அனுபவத்தை அசைபோட்டவாறு, இதுவே மேற்கத்திய உலகை நோக்கிய தனது கடைசிப் பயணம் என்பதை அறியாதவராக, 1931 ஜனவரியில் ரவீந்திரர் இந்தியா வந்து சேர்ந்தார்.
ரவீந்திரரின் இந்தப் பயணத்தின்மூலம் ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான, நீடித்த தன்மை கொண்ட ஒரு விளைவு என்னவெனில், ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, 1931 மே மாதத்தில் அவரது 70வது பிறந்தநாள் அன்று நியூயார்க் நகரை தலைமையகமாகக் கொண்டு, அமெரிக்க தாகூர் கழகம் ஒன்று அங்கு தொடங்கப்பட்டதாகும். இந்த நிகழ்விற்கு ரவீந்திரர் ஒரு வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியிருந்தார்.
இந்தியாவிற்குத் திரும்பி வந்ததுமே வில் டூரண்ட் எழுதிய நூலுக்கு ஒரு விமர்சனத்தை ரவீந்திரர் எழுதினார். அது கல்கத்தாவின் மாடர்ன் ரிவ்யூ இதழில் வெளியானது. அவரது இந்த விமர்சனம் சமீபத்திய மேற்கத்திய பயண அனுபவங்களைத் தொகுத்துக் கூறியதோடு, இந்தியாவில் நீடித்து வந்த பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான ரவீந்திரரின் உள்ளார்ந்த வெறுப்பை சுருக்கமாகவும் வலுவாகவும் எடுத்துக் கூறுவதாகவும் இருந்தது.
‘பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல்ரீதியாக தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்ற இந்தியாவின் கனவு குறித்து ஒரு சில அமெரிக்கர்கள் எரிச்சலை வெளிப்படுத்தி வந்துள்ளதை நான் பல்வேறு தருணங்களில் கண்ணுற்றிருக்கிறேன். சொந்த சகோதரர்களுக்கு எதிராகப் போராடிய அவர்கள் கோரிய அதே மனித உரிமைகளை இந்தியர்களும் கோருவது கண்டு எரிச்சலடைவது உண்மையில் ஓர் அபத்தமேயாகும்; இந்தியர்கள் உள்ளார்ந்த வகையிலும், என்றும் மாறாத வகையிலும் தங்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. அந்த வகையில் வில் டூரண்ட் முற்றிலும் வித்தியாசமான ஒருவராக இருக்கிறார். தங்களை அருவருக்கத்தக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்கான வலிமையற்றவர்கள் இடையே இத்தகைய நாகரீகம் மிகவும் அரிதாகவே உள்ளது என்ற வகையில் இது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
‘இந்தியாவிற்குச் செய்ய வேண்டிய அதன் கடமைக்கு மிக மோசமான வகையில் துரோகம் செய்யும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொள்கைகளை கண்டிக்க, தன் சொந்த நாட்டவர்களின் வார்த்தைகளையே அவர் பெருமளவிற்குப் பயன்படுத்தியிருப்பதன் மூலம் ஆங்கிலேய நாட்டுக்கு ஆற்றியுள்ள பெரும் சேவைக்கு நான் மிகுந்த நன்றி பாராட்டுகிறேன். எனது சமீபத்திய மேற்கத்திய நாடுகள் பயணத்திற்குப் பிறகு, இந்த மகத்தான மனித இனத்தின் உண்மையான பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோருக்கு மத்தியில், மிக அரிதான இத்தகைய பெருந்தன்மை இன்னமும் நீடித்திருக்கிறது என்பதை நாம் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது’ என அந்த விமர்சனத்தில் ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார்.
(தொடரும்)