Skip to content
Home » தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

தாகூர் - காந்தி

1931ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்காளத்தின் பல பகுதிகளிலும் இந்து-முஸ்லீம் மோதல்களும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் நடந்தேறின. கல்கத்தா பத்திரிக்கைகளின் மூலமாக ரவீந்திரர் வேண்டுகோள் விடுத்தார்: ‘ரத்த விளாருடன் வீழ்ந்துகிடக்கும் மனிதத் தன்மையை பாதுகாக்கவாவது இந்தத் தீயசக்தியை தடுத்துநிறுத்த நாம் கைகோர்க்க வேண்டும். உலகம் முழுவதன் அசூயையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ள இந்தப் பயனற்ற செயலுக்கு நிரந்தரமாக ஒரு முடிவுகட்ட வேண்டும்.’

மே மாதத்தில் ரவீந்திரரின் 70வது பிறந்தநாள் சாந்திநிகேதன் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் இந்நிகழ்வை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவதற்கென கல்கத்தாவின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. இதற்கான வேண்டுகோள் கடிதத்தில் அப்போது கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த சர். சி.வி. ராமனும் கையெழுத்திட்டுள்ளதை அறியமுடிகிறது. புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான ராமானந்த சாட்டர்ஜியைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு ‘தாகூரின் தங்கப் புத்தகம்’ என்ற சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்விற்காகத் திரட்டப்பட்ட நிதியை அப்போது வங்காளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு செலவழிக்குமாறு ரவீந்திரர் கூறிவிட்டார்.

இந்தச் சிறப்பிதழில், ரவீந்திரருடன் பழகிய நண்பர்கள், எழுத்தாளர்கள், தத்துவ அறிஞர்கள் என உலகமெங்கிலும் இருந்து பலரும் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றிருந்தன. கீதாஞ்சலி ஆங்கிலத்தில் வெளியான உடனேயே 1912இல் அதை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவரும், 1947இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கவிஞருமான ஆந்த்ரே கிடே, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ஈட்ஸ், வில் டூரண்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ரொதென்ஸ்டைன், ரொமெய்ன் ரோலண்ட், கிரேக்க கவிஞர் கோஸ்டஸ் பலாமாஸ், விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றவர்களோடு மகாத்மா காந்தியும் இந்த இதழில் தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருந்தார். ‘தனது கவிதைத் திறனாலும் தூய்மையான வாழ்க்கையினாலும் உலகத்தினரிடையே இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் ரவீந்திரர். அவருடனான என் நினைவுகள் மிகவும் புனிதமானவை என்று நான் கருதுவதால், பொதுவெளியில் அவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை’ என்று காந்தி கூறியிருந்தார். காந்தியின் இந்த வாழ்த்துச் செய்திதான் இந்த மலரில் முதலாவதாக வெளியிடப்பட்டிருந்தது.

செப்டெம்பரில் ஹிஜ்லி என்ற இடத்திலிருந்த தடுப்புக்காவல் முகாமில் ஏற்பட்ட கைக்கலப்பில் இரண்டு வங்காளி அரசியல் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமுற்றனர். கைதிகள் காவலர்களைத் தாக்கினர் என்று அரசாங்கம் கூறியதெனில், காவலர்கள்தான் கைதிகளைத் தாக்கினர் என்று தேசியவாதிகள் பதிலளித்தனர். 1905ஆம் ஆண்டு வங்கப்பிரிவினையை எதிர்த்து எழுந்த இயக்கத்திற்குப் பிறகு, முதன்முறையாக, ஹிஜ்லி சம்பவத்திற்கு எதிரான இரண்டு பொதுநிகழ்ச்சிகளில் ரவீந்திரர் பங்கேற்றார். அவற்றில் ஒன்று பிரம்மாண்டமானதொரு பேரணியாகும். இந்தக் கூட்டத்தில் காவலர்களின் கொலைவெறியை ரவீந்திரர் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். மக்களின் இந்த எதிர்ப்புணர்வைக் கண்டு வங்காள அரசாங்கம் ஒரு விசாரணையை மேற்கொண்டபோதும், இறுதியில் அது காவலர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தொடக்கத்தில் இருவார விழாவாக ரவீந்திரரின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக ரவீந்திரரின் ஓவியங்கள் மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டன. எனினும் இந்தக் கொண்டாட்டங்கள் 1932 ஜனவரி 4 அன்று தடைபட்டன. லண்டனில் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவிற்குத் திரும்பியவுடனேயே காந்தி கைது செய்யப்பட்டார். வைஸ்ராயைச் சந்திக்கவேண்டும் என்ற அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

ரவீந்திரர் பெரிதும் மனம் நொந்துபோனார். பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மேக்டொனால்டுக்கு அவர் அனுப்பிய தந்தியில் ‘அரசின் கண்மூடித்தனமான அடக்குமுறை மக்களை மேலும் மேலும் உங்களிடமிருந்து நிரந்தரமாகத் தனிமைப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். காந்தியின் கைது குறித்து ‘கேள்வி’ என்ற தலைப்பில் ஒரு கவிதையையும் அவர் எழுதினார்.

கடவுளே!
இரக்கமற்ற இந்த பூமிக்கு
ஒருவர் பின் ஒருவராக நீங்கள் தூதர்களை அனுப்பி வைத்தீர்கள்.
‘அனைத்துப் பாவங்களையும் மன்னித்துவிடுங்கள்!’ என அவர்கள் சொன்னார்கள்.
‘உள்ளத்தின் அடியாழத்திலிருந்து நேசியுங்கள்;
அனைத்துத் தீய எண்ணங்களும் மறைந்துவிடும்’ என்றும் அவர்கள் சொன்னார்கள்.
அவர்களெல்லாம் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்தான்.
ஆனால் இந்த இருண்ட நாட்களில் சடங்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு
அவர்களை நாங்கள் ஒதுக்கிவைத்துவிட்டோம்.
இருளின் மறைவில் ஆதரவற்றோரை படுகொலை செய்யும் ரகசிய வன்முறை
நிகழ்ந்துவருவதையும் நான் பார்க்கிறேன்.
தனியாக, அமைதியாக அமர்ந்தபடி அழுவதையும் பார்க்கிறேன்.
அவர்களின் ஒரே ஆயுதமான எதிர்க்கும் வலிமையும் இன்றி
இளைஞர்கள் குருட்டுத்தனமாகத் தாக்குவதை,
மனக்குமுறலோடு பாறையில் தங்கள் தலையை மோதிக் கொள்வதை
நான் பார்க்கிறேன்.
என் வாய் திக்குகிறது; எனது குழல் இசையின்றி மவுனிக்கிறது.
ஒளியற்ற ஓர் இரவில் சிறைச்சாலை என் உலகத்தை நிர்மூலமாக்கி
எனக்குக் கொடுங்கனவுகளைத் தந்து சென்றது.
எனவேதான் கண்ணீரோடு கேட்கிறேன்:
‘உன் காற்றுமண்டலத்தை விஷமாக்கிய,
உன் சூரியனை மறைந்து நின்றவர்களை
உண்மையிலேயே நீ மன்னித்துவிட்டாயா?
உண்மையிலேயே நீ அவர்களை நேசிக்கிறாயா?’

மேலே குறிப்பிட்ட ‘கேள்வி’ என்ற கவிதை உள்ளிட்டு அவரது மன உளைச்சல்களை வெளிப்படுத்திய கவிதைகள் அனைத்தும் ‘பரிசேஷ்’ (இறுதி) என்ற தலைப்பில் 1932இல் வெளியானது.

1932 ஏப்ரல் 11 அன்று பெர்ஷிய (ஈரான்) மன்னரின் வேண்டுகோளை ஏற்று ரவீந்திரர் பெர்ஷியாவிற்குப் புறப்பட்டார். அவருடன் மருமகள் பிரதிமா தேவியும் செயலாளர் அமிய சக்ரவர்த்தியும் சென்றனர். இம்முறை, இரண்டாவது முறையாக, ரவீந்திரர் விமானத்தில் பயணம் செய்தார். அவர் முதலில் சென்றடைந்த புஷயர் நகரில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து புகழ்பெற்ற பாரசீக மொழி கவிஞர்களான ஹஃபீஸ், சா’ஹதி ஆகியோரின் சமாதிகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்தருணத்தில், பாரசீக மொழியை நன்கு அறிந்திருந்த தன் தந்தை மகரிஷி, கவிஞர் ஹஃபீஸின் கவிதைகளைச் சிறுவயதில் தனக்குப் பாடிக் காண்பித்ததை ரவீந்திரர் நினைவுகூர்ந்தார்.

ஏப்ரல் 29 அன்று டெஹ்ரான் நகருக்கு வந்து சேர்ந்தபோது அரசுமுறையிலும் மக்கள் சார்பிலும் அவருக்குக் கனிவான வரவேற்பு அளிக்கப்பட்டது. மே 6 அன்று பெருந்திரளான மக்களிடையே ரவீந்திரரின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அரசர் ஷா உள்ளிட்டு பலரும் ‘கிழக்குவானில் உதித்த மகத்தான நட்சத்திரம்’ என அவரைப் புகழ்ந்தனர். ரவீந்திரர் தன் விடைபெறும் உரையில் அனைவருக்கும் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்தியாவிற்குத் திரும்பிவரும் வழியில் ஈராக் நாட்டின் பாக்தாத் நகருக்குச் சென்ற அவரை அந்நாட்டின் அரசர் ஃபைசல் வரவேற்றார். இத்தருணத்தில்தான் அவரது நீண்டநாள் கனவான நாடோடிகளின் முகாமில் ஒருநாள் முழுவதுமாகக் கழிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியது. இந்த அனுபவத்தைத் தன் நாட்குறிப்பில் பதிவு செய்திருந்தார். பின்னர் அது ‘பராஸ்யே’ என்ற தலைப்பில் சிறுபிரசுரமாக வெளியானது.

இந்தியாவிற்குத் திரும்பிவந்த பின்னர் அதிர்ச்சியானதொரு செய்தியை அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஜெர்மனியில் அச்சுத் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெறச் சென்றிருந்த அவரது ஒரே பேரன் (3வது மகள் மீரா தேவியின் ஒரே மகன்) நிதீந்திரநாத் தன் 21வது வயதில் காச நோயால் ஆகஸ்ட் 7 அன்று இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. (1941ஆம் ஆண்டு இதே நாளில்தான் ரவீந்திரரும் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே ஜொரசாங்கோ குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவராக இழந்துகொண்டே வந்த ரவீந்திரர், இந்த இழப்பையும் மிகுந்த மன உறுதியுடன் எதிர்கொண்டார். வைஸ்ராய் இர்வின், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மேக்டொனால்ட் ஆகியோர் ரவீந்திரருக்கு அனுதாபச் செய்தியை அனுப்பியிருந்தனர். எனினும், ஒரு கவிஞராக, தன் மனக்குமுறலை அவர் கவிதையாக வடித்திருந்தார்:

இன்னும் என்ன? இதுதான் நீ செலுத்தும் கடைசி அஸ்திரமா?
அவ்வளவுதானா? நான் கேட்டேன். வேறொன்றும் இல்லையே?
என் அச்சம் என்னிடமிருந்து விலகியது.
உன் அஸ்திரம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தபோது
என்னைவிடப் பெரிதாக நீ தெரிந்தாய்.
என்னைத்தாக்க நீ கீழிறங்கியபோது
என் அளவிற்கு நீ சுருங்கிப் போனாய்.
நானோ, மேலும் சுருங்காமல் இருந்தேன்.
என்னைவிடப் பெரியதொரு உருவமாக நீ இருக்கலாம். ஆனால்
இறப்பைவிடப் பெரியதாக உன் உருவம் இல்லை.
இப்போது இறப்பைவிட நான்தான் பெரியவனாக இருக்கிறேன்.
இதுவே என் இறுதி வார்த்தையாக இருக்கட்டும்!

இந்தக் கவிதை உள்ளிட்டு பின்னர் எழுதிய வசன கவிதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு புனஸ்சா (பின்குறிப்பு) என்ற தலைப்பில் வெளியானது. இந்த நூலை மறைந்த நிதீந்திரநாத்திற்கு அவர் அர்ப்பணம் செய்திருந்தார்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் இந்தியாவிலுள்ள இந்துக்கள், முஸ்லீம்கள் மட்டுமின்றி ஐரோப்பியர்கள், தீண்டத்தகாத பிரிவினர் என வகுப்புவாரியான ஒதுக்கீடு குறித்த அரசமைப்புச்சட்ட சீர்திருத்தம் ஒன்றை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டது. தீண்டத்தகாத பிரிவினரின் தலைவரான பாபா சாஹேப் அம்பேத்கர் இத்தகையதொரு கோரிக்கையை ஏற்கனவே எழுப்பியிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட வகையில்தான் அரசு இந்த அறிவிப்பை செய்திருந்தது.

எனினும் இந்தத் தீண்டத்தகாத பிரிவினரை ‘ஹரிஜன்’ (கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு, அவர்களும் இந்து மதத்தினரே என்பதால் அவர்களுக்கென தனித்தொகுதி ஏற்பாடு கூடாது என்பதே காந்தியின் (ரவீந்திரருக்கும் இந்த விஷயத்தில் காந்தியுடன் கருத்தொற்றுமை இருந்தது) கருத்தாக இருந்தது. ஒரு சில இந்தியர்களின் ஆதரவோடு பிரிட்டிஷ் அரசு நாட்டை பிளவுபடுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே பூனாவில் எரவாடா சிறையிலிருந்த காந்தி செப்டெம்பர் 20 முதல் ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ மேற்கொள்வதாக அறிவித்தார்.

செப்டெம்பர் 19 அன்று சிறையிலிருந்த காந்திக்கு அனுப்பிவைத்த ஒரு தந்தியில் (அப்போது காந்தியின் உண்ணாவிரதம் குறித்த தகவல் வெளியாகவில்லை) ‘இந்தியாவின் ஒற்றுமைக்காகவும் அதன் சமூக நேர்மைக்காகவும் உங்களின் விலைமதிப்பற்ற வாழ்க்கையை தியாகம் செய்வது மதிப்பிற்குரியதே ஆகும்’ என்று ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தந்தி கிடைத்தபோது சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த காந்தி அதற்கு இவ்வாறு பதிலளித்திருந்தார்: ‘இன்று அதிகாலையில் நான் தொடங்கவிருந்த செயலுக்கு உங்கள் அனுமதியையும் வாழ்த்துக்களையும் கோரி ஒரு கடிதத்தை எழுதினேன். என்னவொரு அதிசயம்! உங்கள் ஆதரவும் வாழ்த்தும் அபரிமிதமாகவே இருக்கிறது என்பதை இப்போது என் கைக்கு வந்து சேர்ந்த தந்தியிலிருந்து தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி!’

செப்டெம்பர் 20 அன்று சாந்திநிகேதனில் காந்திக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அத்தருணத்தில் காந்தியின் இந்த உண்ணாநோன்பின் முக்கியத்துவம் குறித்து ரவீந்திரர் உரையாற்றினார்.

செப்டெம்பர் 22 அன்று உலகளாவிய செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் மூலம் ரவீந்திரர் அனுப்பியிருந்த செய்தியில், ‘இந்துக்களிடையே சாதிரீதியாகவும், சமூகரீதியாகவும் நிலவிவரும் அனைத்துவகையான தப்பெண்ணங்கள், புறக்கணிப்புகள் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்’ என்று தன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்தத் தருணத்தில்தான் பேரன் நிதீந்திரநாத் மறைவை ஒட்டி அஞ்சலி செய்தியை அனுப்பியிருந்த பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மேக்டொனால்டுக்கு நன்றி தெரிவித்து செப்டெம்பர் 24 அன்று எழுதிய கடிதத்தில் ரவீந்திரர் கீழ்கண்ட பின்குறிப்பை எழுதியிருந்தார்:

‘அரசியலில் இருந்து நான் விலகியிருந்தபோதிலும், மனிதத்தன்மையின் பேரால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். எங்கள் நாடு உங்களிடமிருந்து அந்நியப்பட்டு விடும்படியான, நமது உறவுகளின் நினைவை முற்றிலும் கசப்பாக்கி விடும்படியான செயல் எதையும் செய்துவிடாதீர்கள்.’

அன்றிரவே ரவீந்திரர் பூனாவிற்குப் புறப்பட்டார். காந்தியை சிறையில் பார்த்தவுடன், ‘நான் மட்டும் அவரை நேரடியாகப் பார்த்திராவிட்டால், மிகமெல்லிய அவரது தேகத்திற்குள் எவ்வளவு வலிமை ஒளிந்திருக்கிறது என்பதை என்னால் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது’ என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே செப்டெம்பர் 24 அன்று காந்தி -அம்பேத்கர் இடையே ஏற்பட்டிருந்த பூனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொகுதிப் பிரிவினைகளில் புதிய ஏற்பாடுகள் அமலுக்கு வரும் என பிரிட்டிஷ் அரசு அறிவிப்பு செய்த தகவல் கிடைத்ததும் காந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.

அதற்கு முன்பாக தனக்கு மிகவும் பிடித்தமான கீதாஞ்சலி பாடல் ஒன்றைப் பாடுமாறு அவர் ரவீந்திரரைக் கேட்டுக் கொண்டார். ‘என் இதயம் கல்லாகித் தீய்ந்துபோயிருக்கும் தருணத்தில் என்மீது கருணைமழை பொழிவீராக!’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ரவீந்திரர் பாடினார். அதைத் தொடர்ந்து காந்திக்கு மிகவும் பிடித்தமான ‘வைஷ்ணவோ ஜனதோ’ பாடலை காந்தியின் வார்தா ஆசிரம உறுப்பினர்கள் சேர்ந்து பாடினர். பின்பு ஆரஞ்சுப்பழ சாற்றை அருந்தி காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது பழத்தைப் பிழிந்து காந்திக்கு ஆரஞ்சுப்பழச் சாற்றினைக் கொடுத்த 15 வயதே ஆன இந்திரா பிரியதர்ஷிணி அத்தருணத்தில் சிறையில் அடைபட்டிருந்த தன் தந்தை நேருவிற்கு எழுதிய கடிதத்தில் ‘நாள் முழுவதும் பதற்றத்திலேயே இருந்த நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்பினோம்’ என்று எழுதியிருந்தார்.

1932 அக்டோபரில் கொச்சி அரசருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் அவரது மாநிலத்தில் நிலவிவரும் தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டுமென்று கோரியிருந்தார். ‘நமது நாட்டின் மதரீதியான பாரம்பரியங்களின் தூய்மையையும் நேர்மையையும் உயர்த்திப் பிடிக்க நாம் தவறினோமெனில், எந்நாளும் நீடித்திருக்கும் வகையிலான அவமானத்தையும் அவப்பெயரையும் நாம் சுமந்து திரிய வேண்டியிருக்கும்’ என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

1932ஆம் ஆண்டு இறுதியில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்று வங்காளி மொழித் துறையின் சிறப்புப் பேராசிரியராக செயல்பட ரவீந்திரர் ஒப்புக்கொண்டார். (இதே கல்கத்தா பல்கலைக்கழகம்தான் பள்ளி இறுதித்தேர்வின்போது வங்காளி மொழிக்கான கேள்வித்தாளில் ரவீந்திரர் எழுதிய ஒரு கவிதையைக் கொடுத்து, ‘அதை தூய்மையான மொழியில் திருத்தி எழுதுக’ என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டது என்பதும் இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது) இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட உடனேயே வங்காளி மொழியில் தொழில்நுட்ப, அறிவியல் கலைச்சொற்களைத் தொகுக்கும் ஒரு திட்டத்தை ரவீந்திரர் தொடங்கினார். உண்மையில் இது அவரது இளம்வயதுக் கனவாக இருந்த ஒன்றாகும். இதற்கான உதவியைத் தங்களால் இயன்ற வகையில் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து எழுதிய அவரது கடிதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியானது.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *