1933 ஜனவரியில் பெர்ஷிய (ஈரான்) மன்னர் ரவீந்திரர் தன் நாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரானின் புகழ்பெற்ற அறிஞரான ஆகா பூரே தாவூத்தை வருகைதரு பேராசிரியராக தனது செலவில் விஸ்வபாரதிக்கு அனுப்பி வைத்தார். அவரை வரவேற்று உரையாற்றிய ரவீந்திரர் ‘நம் இரு நாடுகளின் புராதன உறவு இன்றும் நம் ரத்தத்தில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆசியா விழித்தெழும் இந்த மகத்தான தருணத்தில் நமது உறவுகளை மீண்டும் கண்டறிந்திருக்கிறோம். நமது பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த நினைவுச்சின்னங்கள் கண்ணுக்குத் தென்படாமல் மறைந்து போயிருந்தன. அவற்றை நாம் இடிபாடுகளிலிருந்து மீட்டெடுப்போம்’ என்று குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட அதேநேரத்தில், தன் உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக பம்பாய் துறைமுகத்தில் வந்திறங்கிய, ஆங்கிலத் தத்துவ அறிஞரும் நாடக ஆசிரியருமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ரவீந்திரருக்கு எழுதிய கடிதத்தில் ‘ஒரு சில மணி நேரங்களுக்குக் கரையிறங்கிய நான் பம்பாய் நகர வீதிகளிலும், ஐரோப்பிய தீண்டத்தகாதவர்களையும் நுழைய அனுமதிக்கும் கோயில்களிலும் சுற்றிக் கொண்டிருந்தேன். உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பது மட்டுமே எனது வருத்தம். அதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்தியாவின் தற்போதைய நிலைமையைப் பற்றி நாம் உரையாட முடியவில்லை என்பதுதான். அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தின்படி ஜனவரி 16,18,20 தேதிகளில் ரவீந்திரர் கமலா நினைவுச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இந்த உரைகள் பின்னர் மானுஷேர் தர்மா (மனிதரின் நியதி) என்ற பெயரில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக விஸ்வபாரதியில் உள்ள வித்யா பவனத்தில் மனதின் உண்மை என்ற தலைப்பிலும் அவர் உரையாற்றினார்.
பிப்ரவரி 6 அன்று ஸ்ரீநிகேதனின் ஆண்டு விழாவின்போது மேற்கு வங்க அரசின் சார்பில் பங்கேற்ற சர் விஜய் பிரசாத் சின்ஹா சாந்திநிகேதனில் உருவான முதல் ஆழ்துளைக் கிணற்றின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார்.
அத்தருணத்தில் எரவாடா சிறையிலிருந்தவாறே காந்தி தொடங்கியிருந்த ‘ஹரிஜன்’ வார இதழின் முதல் இதழில் வெளியிடுவதற்கென, ரவீந்திரர் தனது அண்ணன் சத்யேந்திரநாத் தாகூர் எழுதிய ‘துப்புரவாளர்’ என்ற புகழ்பெற்ற கவிதையின் ஆங்கில ஆக்கத்தை அனுப்பி வைத்தார்.
எனது நண்பனே! ஏன் உன்னைத் தொட மறுக்கிறார்கள்?
உன்னை ஏன் அசுத்தமானவன் என்று அழைக்கிறார்கள்?
உனது ஒவ்வொரு நகர்விற்குப் பிறகுதான் அனைத்துமே
சுத்தமாகிறது என்பதை அறியாத அறிவிலிகளா அவர்கள்?
இதேமாதம் இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ராஜா ராம்மோகன் ராயின் நினைவு நூற்றாண்டு கொண்டாட்டம் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் செனட் ஹாலில் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஆங்கிலத்தில் உரையாற்றிய ரவீந்திரர், ‘அவரது காலத்தைச் சேர்ந்தவர்களிலேயே நவீன யுகத்தினை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒரே நபராக ராம் மோகன் திகழ்ந்தார்’ என உறுதிபடக் கூறினார்.
1933 ஏப்ரலில் மேற்கத்திய நாடுகளில் இந்தியாவிற்கு எதிராகப் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீண்டதொரு அறிக்கையை ரவீந்திரர் வெளியிட்டார். இத்தருணத்தில் அவ்வப்போது இந்தியாவை சேர்ந்தவர்கள் தங்கள் ’வார்த்தை ஜாலங்களை’ வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியாவின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் முழுமையான தகவல்களை தன்னகத்தே கொண்ட தகவல் மையங்களை மேற்கத்திய நாடுகளில் நிறுவ வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மே மாதத்தில் தனது ஆன்மிக சுத்திகரிப்பிற்காக மகாத்மா காந்தி எரவாடா சிறையில் 21 நாள் உண்ணாநோன்பை மேற்கொண்டபோது, இதனால் எவ்விதப் பயனும் இல்லை என்றும், உண்ணாநோன்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரி ரவீந்திரர் அவருக்கு தந்தி அனுப்பியபோதிலும் காந்தி அவரது வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை.
இதே நேரத்தில் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நாட்டின் முக்கிய நபர்கள் முன்னெடுத்த கையெழுத்து இயக்கத்தில் முதலாவது கையெழுத்தினை இட்டு ரவீந்திரர் தொடங்கி வைத்தார்.
ஜூன் மாதத்தில் ரவீந்திரரும் இதர 60 முக்கிய நபர்களும் இணைந்து அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வெளியிட்ட அறிக்கையினை லண்டனில் இருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் தான் ஏற்கனவே எழுதிய சிறுகதை ஒன்றினை விரிவுபடுத்தி தாஷேர் தேஷ் என்ற நாடகத்தையும், புத்தர் ஜாதகக் கதைகளில் ஒன்றை அடியொற்றி, ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே கொண்ட சிறியதொரு நாடகமான சண்டாளிகா (தீண்டத்தகாதவள்) என்ற நாடகத்தையும் ரவீந்திரர் எழுதினார். இவ்விரு நாடகங்களும் செப்டெம்பர் 12, 13 மற்றும் 15 தேதிகளில் கல்கத்தாவில் அரங்கேறின. பின்னாளில் இந்த சண்டாளிகா நாடகம் ஒரு நாட்டிய நாடகமாகவும் வடிவம் பெற்றது.
ராஜா ராம்மோகன் ராயின் நினைவு நூற்றாண்டினை ஒட்டி ஃபார்வார்ட் இதழுக்கு ஓர் ஆங்கிலக் கவிதையை (Freedom from fear) அவர் எழுதி அனுப்பினார்.
அச்சத்திலிருந்து விடுதலை என்பதையே
உனக்காக நான் கோருகிறேன் என் இனிய தாய்நாடே!
காலம் காலமான சுமைகளினூடாக,
உன் சிரசை கீழே அழுத்தும், முதுகை வளைக்கும்,
எதிர்காலத்திற்கான அறைகூவலிலிருந்து
உன் கண்களை மறைப்பதிலிருந்து விடுதலை!
காரிருளில் தன்னையே பிணைத்துக் கொண்டு
சோம்பித் திரியும் அடிமைச்சங்கிலிகளுடன்,
சாகசங்கள் நிரம்பிய உண்மைக்கான பாதைகளை காட்டும்
துருவ விண்மீனை நம்பாமல் இருப்பதிலிருந்து விடுதலை!
நிச்சயமற்ற, குருட்டாம்போக்கான காற்றுக்கு
இடமளிக்கும் பாய்மரங்களைப் பிடித்திருக்கும்,
மரணத்தைப் போல் உயிரற்றுக் கிடக்கும்
அராஜகமான விதியின் கரங்களிலிருந்து விடுதலை!
இலக்கற்ற கயிறுகளினூடே அசையும் ஒரு பொம்மையைப் போல,
அறிவற்ற பழக்கங்களைத் திரும்பத் திரும்பச் செய்யும்,
ஆட்டுவிப்போனுக்காக அமைதியோடும் பணிவோடும்
கேலிக்கிடமானதொரு வாழ்க்கையில் நுழையக் காத்திருக்கும்
ஒரு பொம்மலாட்ட உலகிலிருந்து விடுதலை!
இந்தக் கவிதையை, அவரது ‘Where the mind is without fear‘ என்ற கவிதையுடன் இணைத்துப் படிக்கும்போது, இந்தியாவின் அன்றைய நிலை குறித்தும், அதன் எதிர்காலம் குறித்தும், அதிலுள்ள மனிதர்களின் முன்னேற்றம் குறித்தும் எத்தகைய கனவை அவர் கண்டார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
எங்கே மனம் அச்சமற்றதாக, கம்பீரமாக, தலைநிமிர்ந்து இருக்கிறதோ,
எங்கே அறிவு சுதந்திரமானதாக இருக்கிறதோ,
எங்கே உலகம் குறுகிய உள்நாட்டுச் சுவர்கள் என்ற பிளவுகள் அற்றதாக இருக்கிறதோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் அடியாழத்திலிருந்து வெளிப்படுகிறதோ,
எங்கே சலியாத உழைப்பு விழுமிய நிலையை நோக்கி நீள்கிறதோ,
எங்கே பகுத்தறிவு எனும் தெள்ளிய நீரோடை
மூடப்பழக்கமெனும் வறண்ட பாலையில் வழிதவறிப் போகாதிருக்கிறதோ,
எங்கே என்றும் விரிந்து நோக்கும் எண்ணத்திலும் செயலிலும்
மனதை முன்னிறுத்தி நீ அழைத்துச் செல்கின்றனையோ,
அங்கே, அந்த சுதந்திரமான, இனியதோர் உலகத்தில்,
என் தந்தையே, என் நாடு விழித்தெழுவதாக!
1933 நவம்பரில் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் முன்முயற்சியில் பம்பாய் நகரில் தாகூர் வாரம் கொண்டாடப்பட்டது. ரவீந்திரருக்கும் அவரோடு சாந்திநிகேதனிலிருந்து வந்திருந்த 45 கலைஞர்களுக்கும் பம்பாய் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றே ரீகல் தியேட்டரில் தீர்ப்புரைகளின் சவால் என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். இந்த மகத்தான உரை சொல்லும் செய்தியை நாடுமுழுவதிலும் விரிவாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்று சரோஜினி நாயுடு குறிப்பிட்டார். டிசம்பர் முதல் தேதிவரை இந்தக் குழு பல்வேறு நாடகங்களையும் இசை நாடகங்களையும் நடன நிகழ்வுகளையும் பம்பாய் நகரில் அரங்கேற்றியது.
டிசம்பர் 2ஆம் தேதியன்று விடுதலைக்கான விலை என்ற தலைப்பில் ரவீந்திரர் உரையாற்றிய நிகழ்விற்கு சரோஜினி நாயுடு தலைமை வகித்தார்.
இந்த பம்பாய் பயணத்தை முடித்துக் கொண்டு டிசம்பர் 12 அன்று ஹைதராபாத் நிஜாமின் அழைப்பின்பேரில் ரவீந்திரர் ஹைதராபாத் நகருக்கு வந்து சேர்ந்தார். அன்று மாலை உஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ‘இளைஞர்களுக்கான செய்தி’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
பின்பு செகந்திராபாத் பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ‘கீழைத்தேய பல்கலைக்கழகத்தின் நோக்கங்கள்’ என்ற தலைப்பில் ரவீந்திரர் உரையாற்றினார்.
அந்நகரில் இருந்த அறிஞர்கள், கவிஞர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் தருணமாக அமைந்திருந்த இந்தப் பயணத்தின்போதுதான் விஸ்வபாரதியில் ஒரு விடுதியைக் கட்டவும், இஸ்லாமிய தத்துவம், கலை குறித்த பாடங்களை அறிமுகம் செய்யவுமென ஹைதராபாத் நிஜாம் ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.
இத்தருணத்தில் ஹைதராபாத் அரசின் நிதியமைச்சரான அமின் ஜங் அவர்களின் இல்லத்தில் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமின் ஜங், ரவீந்திரர் ஆகிய இருவருமே நீண்ட தாடியை கொண்டவர்களாக இருந்தனர். இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டபோது இருவரின் தாடிகளும் மற்றவரின் தோளின் புரண்டு தொங்கிய காட்சி அனைவரையும் கவர்வதாக இருந்தது. இதைக் கண்ட ஹைதராபாத் முன்னாள் பிரதமரான மகாராஜா கிஷன் பெரிஷாத் இந்த இருவரின் தழுவலை ஒரு கவிதையாகவே பாடினார்:
இரண்டு நீண்ட தாடிக்காரர்கள் இங்கே கூடியிருக்கின்றனர்;
மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கும் இருவருமே (காதலால்)
காயமுற்ற இதயத்தைக் கொண்டவர்கள்.
இந்தத் திடீர்க் கவிதையைக் கேட்ட, அங்கிருந்த மற்றொரு புகழ்பெற்ற கவிஞரான அம்ஜத் ஹைதராபாதி என்பவர், தன் பங்கிற்கு மேலும் இரண்டு வரிகளை சேர்த்து அந்தக் கவிதையை முழுமையாக்கினார்.
அந்த இரண்டு பெருமகன்கள் பற்றிய அறிமுகம் இதுதான்:
ஒருவர் மகான்களின் பக்தர் எனில், மற்றொருவரோ மகானேதான்!
கவிக்குயில் சரோஜினி நாயுடு, ரவீந்திரரிடம் ‘பகதூர் யர் ஜங்கைச் சந்திக்கவில்லை எனில் நீங்கள் ஹைதராபாத்தைப் பார்த்ததாகக் கூறிவிட முடியாது!’ என்று ஏற்கனவே கூறியிருந்தார்: எனவே ரவீந்திரரின் வேண்டுகோளுக்கிணங்க, நிதியமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்கு, மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லீமின் அமைப்பின் தலைவரான நவாப் பகதூர் யர் ஜங் அழைக்கப்பட்டிருந்தார். ரவீந்திரருக்கு முன்பாக சிறியதொரு உரையை (உருது மொழியில்) நிகழ்த்த வேண்டும் என்றும் அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அக்காலத்தில் மிகச்சிறந்த உருது மொழிப் பேச்சாளராக புகழ்பெற்று விளங்கிய பகதூர் யர் ஜங் முன்தயாரிப்பு ஏதுமின்றி சிறப்பாகப் பேசும் திறமை பெற்றவர். எனினும் ரவீந்திரரின் முன் பேசுவதற்கென ஓர் உரையை தயாரித்து, ஒத்திகையும் பார்த்துவிட்டே அவர் உரையாற்றினார். அவரது உரையைக் கேட்ட ரவீந்திரர், ‘இவரது நாவன்மையைக் காணும்போது, ஆங்கிலம் போன்ற மொழி தெரியாவிட்டாலும் கூட, சற்றே ஒத்திகை பார்த்து விட்டு எந்தவொரு மொழியிலும் பேசக் கூடிய திறமை வாய்ந்தவர் இவர்’ என்று பகதூர் யர் ஜங்கைப் பாராட்டினார்.
பின்னாளில் ரவீந்திரருக்கும் புகழ்பெற்ற உருது மொழிக் கவிஞரான முகமது இக்பாலுக்கும் இடையிலான ஒற்றுமை-வேற்றுமைகள் குறித்து விரிவான ஒரு கட்டுரையையும் ரவீந்திரரின் மறைவிற்குப் பிறகு பகதூர் யர் ஜங் எழுதினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயணத்தின்போது பல்வேறு தனிநபர்களும் அமைப்புகளும் ரவீந்திரருக்கு வரவேற்பு அளித்து பல்வேறு கலைவிருந்துகளை வழங்கினர். முஷியாரா எனப்படும் இசைப்பாடல் நிகழ்ச்சிகள் அவருக்குப் பெரிதும் மகிழ்ச்சியை அளித்தன.
கல்கத்தா திரும்பியதும் டிசம்பர் 29 அன்று ராஜா ராம்மோகன் ராயின் நினைவு நூற்றாண்டின் இறுதி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். டிசம்பர் 30 அன்று அகில இந்திய மாதர் மாநாட்டில் உரையாற்றிய ரவீந்திரர், ‘வாழ்க்கைக்கான சுதந்திரத்திற்காக மட்டுமே இன்று பெண்கள் போராடவில்லை. மனித நாகரீகத்தை ஒட்டுமொத்தமாக தன் பிடியில் வைத்திருக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் அவர்கள் போராடுகின்றனர். இன்றைய உலகில் பெண்கள் காயமுற்றவர்களாக, வாயடைக்கப்பட்டவர்களாக உள்ளனர். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் சமமான அளவில் மனித வரலாற்றைக் கட்டமைக்கும் பணியில் மிகச் சிறப்பான ஒத்துழைப்பு என்பதுதான் ஆண்-பெண் சங்கமத்தின் அடையாளமாகத் திகழும்’ என்று குறிப்பிட்டார்.
1934 ஜனவரி 5ஆம் தேதி கவிக்குயில் சரோஜினி நாயுடு சாந்திநிகேதனுக்கு வருகை தந்தார். ரவீந்திரர் அவருக்கு அன்பான வரவேற்பினை வழங்கி அவரது சேவைகளை பாராட்டிப் பேசினார்.
ஜனவரி 15 அன்று பீகார் மாநிலத்தில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் எண்ணற்றோர் உயிரிழந்ததோடு, அளவிடற்கரிய சேதமும் ஏற்பட்டது. இதையறிந்த ரவீந்திரர் அப்போது லண்டனில் இருந்த தீனபந்து ஆண்ட்ரூஸுக்கு அனுப்பிய தந்தியில் பீகார் பூகம்ப நிவாரணத்திற்கு மேற்கு நாடுகளில் இருந்து நிதிதிரட்டி உதவுமாறு கோரியிருந்தார். அதே நேரத்தில் பத்திரிக்கைகளுக்கு அவர் விடுத்த செய்தியில், ‘இந்தப் பேரழிவு பூகோள எல்லைகளைக் கடந்த ஒன்று; அனைத்துலக மக்களின் உதவி தேவைப்படும் நேரம் இது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அம்மாத இறுதியில், பீகாரில் நிகழ்ந்த இந்த இயற்கைப் பேரழிவு குறித்துப் பேசிய மகாத்மா காந்தி, இந்தியாவில் பின்பற்றப்பட்டுவரும் தீண்டாமைக் கொடுமைக்கு இறைவன் கொடுத்த தண்டனை இது என்று குறிப்பிட்டிருந்தார். காந்தியின் இந்தக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்த ரவீந்திரர் தனது கண்டனத்தைத் தெரிவித்து காந்திக்குக் கடிதம் ஒன்றை எழுதியதோடு, அந்தக் கடித நகலை பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைத்தார்.
1934 ஜனவரி மாத இறுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ஜவகர்லால் நேருவும் அவரது மனைவி கமலாவும் சாந்திநிகேதனுக்கு வருகை தந்தனர். நேருவின் பரந்த பார்வை, அறிவார்ந்த நேர்மை, பகுத்தறியும் உணர்வு, சர்வதேசக் கண்ணோட்டம் ஆகியவற்றால் பெரிதும் கவரப்பட்ட ரவீந்திரர், நேரு தம்பதியினருக்கு மனமுவந்த வரவேற்பை நல்கினார். அத்தருணத்தில் நேருவின் மகள் இந்திரா பிரியதர்ஷினி சாந்திநிகேதனில் படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 6 அன்று நடைபெற்ற ஸ்ரீநிகேதன் ஆண்டுவிழாவில் கல்கத்தா நகர மேயர் நளினி ரஞ்சன் சர்க்கார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய ரவீந்திரர், கிராமங்களையும், கிராம மக்களையும் புறக்கணித்துவிட்டு நாட்டின் விடுதலையைப் பற்றியோ, முன்னேற்றத்தைப் பற்றியோ பேசுவதில் எவ்வித பொருளும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார். பிப்ரவரி 8 அன்று கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ‘இலக்கியத்தின் தத்துவம்’ என்ற தலைப்பில் ரவீந்திரர் உரை நிகழ்த்தினார்.
(தொடரும்)
படம்: (இடமிருந்து வலம்) சர் அமின் ஜங், மகாராஜா கிஷன் பெர்ஷாத், கவிகுரு ரவீந்திரநாத் தாகூர்
– ஹைதராபாத் நகரில் 1933 – புகைப்பட உதவி: டாக்டர் டாகி அபேடி
ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சரோஜினி நாயுடு குறித்த விரிவான பதிவு மிக அருமை. நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
எனது நண்பனே! ஏன் உன்னைத் தொட மறுக்கிறார்கள்?
உன்னை ஏன் அசுத்தமானவன் என்று அழைக்கிறார்கள்?
உனது ஒவ்வொரு நகர்விற்குப் பிறகுதான் அனைத்துமே
சுத்தமாகிறது என்பதை அறியாத அறிவிலிகளா அவர்கள்?
மிகவும் அற்புதமான எதார்த்தமான கவிதை வரிகள்.
– இந்நிலை இன்னும் மாறாமல் தானே உள்ளது.