1934 அக்டோபர் இறுதியில் தென்னிந்தியாவிற்கு தன் இறுதிப் பயணத்தை ரவீந்திரர் மேற்கொண்டார். அவரது ரயில் பயணத்தின்போது அனகபள்ளியில் உள்ள சோதர சமிதி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ரயில் நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அத்தருணத்தில் அவர்களின் வரவேற்புரை அவரது இந்தப் பயணம் தென்னிந்திய மக்களுக்கும் நாட்டின் இதரபகுதி மக்களுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தி, அவர்கள் இணைந்து செயல்படுவதற்கான ஊக்கத்தை அளிக்கட்டும்! இந்த மண்ணிலிருந்து தீண்டாமை என்ற மனிதத்தன்மையற்ற வழக்கத்தை துடைத்தெறியட்டும்! என்று குறிப்பிட்டதோடு, ‘சர்வதேச அமைதியையும் இணக்கத்தையும் நிறுவுவதற்கான அவரது புனிதமான முயற்சிகள் உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவுவதாக!’ என்றும் குறிப்பிட்டது.
அக்டோபர் 21 அன்று காலை கல்கத்தா மெயிலில் சென்னை வந்தடைந்த ரவீந்திரருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தின் அன்றைய பிரதமரான பொப்பிலி அரசர் தலைமையிலான வரவேற்புக் குழுவினரோடு கூடவே அன்றைய சென்னை நகர மாணவர்களும் நடைமேடையில் பெருந்திரளாகக் குழுமியிருந்தனர். வரவேற்புக் குழுவின் சார்பில் பொப்பிலி அரசரும் திருமதி தாதாபாயும் ரவீந்திரர் இருந்த ரயில்பெட்டிக்குச் சென்று அவரை முறைப்படி வரவேற்றனர்.
பெருந்திரளான மக்கள் கூடியிருந்த நிலையில் முறைப்படி வரவேற்புரை நிகழ்த்த இயலாமல் வரவேற்புப் பத்திரத்தை ரவீந்திரரின் கைகளில் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. இந்த வரவேற்புப் பத்திரம் இந்தியாவிற்கு அவர் ஆற்றிவரும் பணிகளைக் குறிப்பிட்டிருந்தது. இதன்பின்னர், ரயில் பெட்டியின் வாயிற்பகுதியில் நின்றபடி அங்கு கூடியிருந்தவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த ரவீந்திரர், சென்னை நகரத்தில் பின்னர் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் அவர்களை மீண்டும் சந்திக்க மிகுந்த ஆவலோடு உள்ளதாகத் தெரிவித்து விடைபெற்றுக் கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் அடையாரில் இருந்த தியாசாஃபிகல் சொசைட்டி வளாகத்தில் ஓர் இல்லத்தில் தங்கியிருந்தார். வழக்கம்போலவே ரவீந்திரரின் இந்தப் பயணமும் விஸ்வபாரதிக்கான நிதி திரட்டுவதற்கான முயற்சியே ஆகும்.
அன்று மாலை ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் ரவீந்திரர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘வாழ்க்கையை வெளிப்படுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வீர-தீரச் செயல்களின் மூலம் வெளிப்படுத்துவது; மற்றொன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது. வாழ்க்கை தரும் மகிழ்ச்சியான தருணங்களை நமது மனம் ஒதுக்கித் தள்ளுமானால் பொதுவாக வாழ்க்கை சோகமயமாகி விடுகிறது. இதன் விளைவாக உண்மையிலேயே அழகியல் மதிப்புடைய அனைத்தையும் தரம் தாழ்ந்தவகையில் பார்க்கும் மோசமான விருப்பம் நமக்குள் புகுந்து விடுகிறது. எனவேதான் பெரும்பாலான மக்கள் வசித்துவரும் கிராமங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் இலக்கோடு எனது மற்றொரு முயற்சியை நான் மேற்கொண்டு வருகிறேன். கிராம மக்களிடையே நிலவும் அவநம்பிக்கையை அகற்றி அவர்கள் மனதில் மகிழ்ச்சிகரமான உணர்வை ஏற்படுத்துவதுதான் கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கமாகும். மற்றவர்கள் எவரும் இதைப் பற்றி நினைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே, இன்னும் சொல்லப்போனால், மகாத்மா காந்தி இத்தகைய முயற்சியை கையிலெடுப்பதற்கு முன்பாகவே, நான் இதை செயல்படுத்தி வருகிறேன்.’
அக்டோபர் 22 அன்று சென்னை நகராட்சியின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மதராஸ் மாகாண பிரதமர் பொப்பிலி அரசர் உள்ளிட்டு நகரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அதற்கு மறுநாள், ராயப்பேட்டை மிட்லண்ட் தியேட்டரில் ‘நானும் வங்காள மறுமலர்ச்சியும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியபோது சென்னை மாணவர்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த உரை கிட்டத்தட்ட அவரது வாழ்க்கைப் பயணத்தை எடுத்துக் கூறுவதாகவே அமைந்திருந்ததால், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. நுழைவுக் கட்டணமாக ரூ. 1/- கொடுத்து பெருந்திரளான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அதே நாளன்று ராணி மேரி கல்லூரி மாணவிகளின் வரவேற்பிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அக்டோபர் 26ஆம் தேதியன்று காங்கிரஸ் இல்லத்தில் ரவீந்திரரின் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி தொடங்கியது. இது அக்டோபர் 31வரை தொடர்ந்து நடைபெற்றது. அக்டோபர் 27 முதல் 31ஆம் தேதி வரை சாந்திநிகேதன் கலைஞர்கள் பங்கேற்ற ‘சாபவிமோசனம்’ நாடகம் தொடர்ந்து தினம்தோறும் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடத்தப்பெற்றது.
அக்டோபர் 30ஆம் தேதியன்று சென்னை ஒய்எம்சிஏவின் நுண்கலைப் பிரிவின் மாணவர்கள் ரவீந்திரரைப் பேட்டி கண்டனர். கலை பயிலும் மாணவர்களிடையே உரையாடுகையில் எத்தகைய பிரிவைச் சேர்ந்த கலையாக இருந்தாலும் ஒருவரது உள்மனதிலிருந்து வெளிப்படுவதே கலையாகும் என்று அவர் குறிப்பிட்டார். தன்னைப் பொறுத்தவரையில் நல்லதொரு கலைவடிவம், மோசமான கலைவடிவம் என்பதைத் தவிர வேறெந்த வகையிலும் கலைவிமர்சகர்களைப் போல தான் கலையைக் காண்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மாணவர்களிடையே எடுத்துக்கூறிய மற்றொரு முக்கியமான விஷயம், தான் பார்த்தவரையில் தென்னிந்தியாவில் தேவைக்கும் அதிகமான அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் போக்கு இருக்கிறது; இது தாய்மொழிக்குத் தீங்கு விளைவிப்பதாகும். வங்காளத்தில் ஆங்கிலேய நாகரீகத்தைப் பின்பற்றுபவர்களும், தங்களின் ஆங்கில அறிவு குறித்துப் பெருமை கொள்பவர்களும் கூட எழுத்தில் மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களுடனான உரையாடலுக்கு வங்காளி மொழியை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். கட்டாயமாக ஆங்கிலத்தில் பேச வேண்டிய தருணத்தில் மட்டுமே அவர்கள் ஆங்கிலத்தில் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டார். ‘உங்களுடன் ஆங்கிலத்தில்தானே பேச வேண்டியிருக்கிறது?’ என்று ஒரு மாணவர் கேட்டபோது, ‘என்னோடு பேசுவது சரி. உங்களுக்குள் பேசும்போது ஏன் உங்கள் மொழியிலேயே பேசக் கூடாது? என்றுதான் நான் கேட்கிறேன்’ என்று ரவீந்திரர் பதிலளித்தார்.
இறுதியாக நாட்டின் விடுதலைக்கான அறைகூவலை ஏற்று இளைஞர்கள் பொதுவாழ்க்கையில் இறங்கலாமா? என்ற கேள்வி எழுப்பியபோது, ‘முதலில் அது நீடித்த உணர்வாக இருக்கிறதா, அல்லது அந்தக் கணத்து உந்துதலா என்பதைப் பிரித்தறிய வேண்டும். அது நீடித்த உணர்வாக இருக்குமானால், அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். என் சொந்த அனுபவத்தில் கல்வியை புறக்கணித்துவிட்டு கிராம மக்களுக்கு உதவி செய்ய இளைஞர்கள் வந்தபோது, கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் பற்றியோ, அந்த மக்களோடு எவ்வாறு உரையாட வேண்டும் என்றோ, தங்கள் செயல்கள் மூலம் அந்த மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி என்றோ தெரியாதவர்களாக அவர்கள் இருந்தனர். இதனால் படிப்பையும் அவர்கள் இழக்க நேர்ந்தது’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டே பொதுவாழ்வில் இறங்கினால்தான் வெற்றி பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் அனைவரும் அவரிடம் கையெழுத்து பெற்றனர். அதில் ஒரு மாணவர் மட்டும் ‘வங்காளியிலும், ஆங்கிலத்திலும் கையெழுத்திட்டுத் தருமாறு’ அவரிடம் கேட்டுக் கொண்டபோது, குறும்புச் சிரிப்புடன் அந்த வேண்டுகோளையும் ரவீந்திரர் நிறைவேற்றினார்.
அக்டோபர் 31 அன்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வித்யோதயா பெண்கள் பள்ளிக்கு ரவீந்திரர் வருகை தந்தார். பள்ளியின் செயலாளர் திருமதி பால் அப்பாசாமி அவரை வரவேற்றார். பள்ளியின் சார்பில் தமிழில் கவிதை வடிவில் அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டது.
வரவேற்புரை ஆற்றிய திருமதி அப்பாசாமி சாந்திநிகேதனின் உயரிய குறிக்கோள்களை இந்தப் பள்ளி தனக்கேயுரிய வகையில் உள்வாங்கிக் கொண்டு செயல்பட முயல்கிறது என்று குறிப்பிட்டார். கல்வி என்பது தகவல்களை குழந்தைகளின் மூளைக்குள் திணிப்பதாக இல்லாமல் அவர்களின் அறிவுரீதியான, உடல்ரீதியான, நெறிமுறைரீதியான, அழகியல்ரீதியான, இறையியல்ரீதியான முழுசக்தியையும் வளர்த்தெடுப்பதாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டி வரும் ஒரு ஞானத்தந்தையாக ரவீந்திரர் விளங்குகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரவீந்திரர் தனது ஏற்புரையில், சென்னையில் தான் தங்கியிருந்த ஒரு சில நாட்களில் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்குழந்தைகளை சந்திக்க நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துவதாகக் குறிப்பிட்டதோடு, பெண்களின் கல்விக்காக இந்தப் பள்ளி எடுத்துவரும் முன்முயற்சி குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். இந்தியப் பெண்களின் அன்பு, சேவை, தியாகம் போன்ற குணங்கள் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதற்குமானதாகவே உள்ளது. நாட்டு சேவை என்பது ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு தலைப்பட்சமாக உள்ளது. இதில் பெண்களும் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.
இயற்கையாகவே பெண்களிடம் பொதிந்துள்ள இனிமையும் பொறுமையும் இதன் மூலம் நாட்டு வாழ்வை மேலும் அழகாக்கும். எவ்வித அநீதியையும் அவர்கள் நீடிக்க அனுமதிக்கலாகாது. பெண்கள் தங்களின் மென்மையான தன்மையை மட்டுமின்றி, தங்களின் ‘சக்தி’யையும் பயன்படுத்தி அனைத்து வகையான தவறுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று மிகுந்த கரவொலிக்கிடையே அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னையில் அவர் தங்கியிருந்த இறுதிநாளன்று கோகலே ஹாலில் அவருக்கு வழியனுப்புவிழா நடைபெற்றது. நகரத்தின் முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சென்னை நகர மக்களின் கனிவான உபசரிப்பிற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட ரவீந்திரர் மேலும் உரையாற்றுகையில் ‘புதியதான எதையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டும் முதியவர்களை விட இளைஞர்களிடம் எனது கருத்துக்களை எடுத்துக் கூறுவது மிகவும் எளிது என்று கருதுகிறேன். எனவேதான் எனது நாட்டின் இளம்தலைமுறையினரிடம் நான் அதிகம் பேச விரும்புகிறேன்.
‘மேற்கு வானில் இன்று நாம் காணும் ஒளி, சூரியனின் ஒளியோ அல்லது புதியதொரு விண்மீனின் பிறப்பையோ சுட்டுவது அல்ல; அது ஒரு பெருவெடிப்பு. மற்றவர்களை தனது எல்லைகளுக்கு வெளியே நிறுத்திவைத்துவிட்டு இன்று எந்தவொரு நாடும் தன்னந்தனியாக முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுவிட முடியாது. எனவே மேற்கத்திய நாடுகளின் சிறந்த அம்சங்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலானதாக மேற்கத்திய நாடுகளுடனான நம் உறவு அமைய நாம் முயற்சிக்க வேண்டும்.
‘ஐரோப்பாவை வரவேற்கத் தயாராக ஆசியா இருக்கவில்லை; ஏனென்றால் தன்னிடமிருந்த சிறந்தவற்றைக் கொடுப்பதற்காக அது ஆசியாவை நோக்கி வரவில்லை. மாறாக, தனது பொருளாதார லாபத்திற்காக ஆசியாவைச் சுரண்டுவதற்காகவே வந்தது. விடுதலை குறித்த செய்தி, மனித குலத்திற்கு அதன் சேவைகள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைந்ததால் மட்டுமே ஐரோப்பா ஆசியாவை வெற்றி கொள்ளவில்லை. மாறாக, அவமதிக்கத்தக்க அளவுகடந்த பேராசை, இனப்பெருமிதம் ஆகியவற்றின் மூலமே ஐரோப்பா ஆசியாவை வெற்றி கொண்டது. அவ்வகையில் ஆசியாவும் ஐரோப்பாவும் சமமான தகுதியுள்ளவர்களாக சந்திக்கவில்லை. இதன் விளைவு என்னவெனில், மேலதிகாரிக்கும் அவரது கடைநிலை ஊழியருக்கும் இடையேயான உறவைப் போன்ற ஒன்றுதான் உருவானது. அதிலிருந்தே ஆசியா தன்னை நிராதரவான ஒன்றாகவும், தன்னம்பிக்கை அற்றதாகவும் இருந்து வருகிறது.
‘எனவே இந்த வலைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோம். நாம் பிச்சைக்காரர்கள் அல்ல என்பதை நிரூபிப்போம். விலைமதிப்பற்ற நிலையில் நம் வீட்டிற்குள்ளேயே இருப்பதை மீட்டெடுப்போம். அதுவே நம்மைக் காக்கும். அதன் மூலமே நம்மால் மனித இனத்தையும் காக்க முடியும். மேற்கத்திய நாடுகளைப் பார்த்து அவற்றைப் போல நாம் நடந்துகொள்ளக் கூடாது. வாழ்க்கை என்பது எப்போதுமே ஒன்றைப் பார்த்து அதைப் போலச் செய்வதல்ல; மாறாக, வாழ்க்கையானது வெளியிலிருப்பதை தனக்குள் இணைத்துக் கொள்கிறது. ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்: மேற்கத்திய நாடுகள் தங்கள் நாடுகளுக்கு உரியவற்றையே உற்பத்தி செய்கின்றன.
‘எனவே எனதருமை இளவரசர்களே! உங்கள் இதயங்களில் உற்சாகமெனும் தீப்பந்தத்தை ஏந்தியபடி, சங்கிலியான பிணைக்கப்பட்டிருக்கும் இடைவிடாத பேராசை எனும் கொடுங்கோன்மையிலிருந்து மனித மனத்தை விடுவிக்கப் புறப்படுவீர்களாக! உலகத்தை ஒளிமயமாக்கும் மகத்தான தீபத்திருநாளில் ஒன்றிணைக்கும் வகையில் உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் எளிய தீச்சுடரைக் கொண்டுவரட்டும்! எளிமையே அழகாகத் திகழும் மகத்தானதொரு மாற்றத்திற்காக மனித நாகரீகம் காத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் உலகத்திற்கு நமது பங்களிப்பாகும். இந்தப் பூமிப்பந்தில் நிலைத்திருக்க மனித குலம் வேறு எதைத்தான் விலையாக வழங்கமுடியும்?
‘நான் மிகவும் சோர்வுற்றிருக்கிறேன். வயதும் ஆகிவிட்டது. இதுவே உங்களை நான் காணும் கடைசி சந்திப்பாகவும் கூட இருக்கலாம். என்றாலும் என் மனதின் வலு அனைத்தையும் திரட்டிக் கொண்டு நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான்: அறிவியலின் மகத்தான வலிமையோ, எவ்வித பொருளுமற்றுப் பெருகிக் கொண்டே போகும் உணர்வோ உங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள்!
‘பாரம்பரியத்தில் மிகச் சிறந்தவற்றைப் போற்றிப் பாராட்டும் அதே நேரத்தில் உங்கள் செயலுக்கும் இயக்கத்திற்கும் அது பொருந்திப் போகிறதா என்பதையும் பாருங்கள். அப்போது உலகில் சிறந்தவை என்று நீங்கள் விரும்பும் எதுவும் உங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்காது.’
இவ்வாறு தன் உரையை முடித்துக் கொண்ட ரவீந்திரர், பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘கீதாஞ்சலி’, ‘க்ரெசெண்ட் மூன்’ போன்ற கவிதை நூல்களிலிருந்து சில கவிதைகளை ஆங்கிலத்திலும் சில கவிதைகளை வங்காளிமூலம் அதன் ஆங்கில மொழியாக்கம் என்ற வகையில் வாசித்தார்.
தாகூர் வரவேற்புக் குழுவின் சார்பில் நன்றியுரை ஆற்றிய திரு. சஞ்சீவா காமத், சென்னை நகரத்தின் பல்வேறு இடங்களிலும் ரவீந்திரர் ஆற்றிய உரைகள் மக்களுக்கு உத்வேகத்தை ஊட்டின எனில், எழும்பூர் மியூசியம் தியேட்டரில் சாந்திநிகேதன் குழுவினர் அரங்கேற்றிய அவரது நாட்டிய நாடகமானது இந்திய நடனக் கலைக்குப் புத்துயிர் ஊட்டுவதாக இருந்தது என்று குறிப்பிட்டார். விஸ்வபாரதிக்கான நிதியுதவியை அந்த மாத இறுதிவரை செலுத்தலாம் என்றும் இத்தருணத்தில் அவர் அறிவித்தார்.
நவம்பர் 2 அன்று வால்டேர் நகரைச் சென்றடைந்த ரவீந்திரர் அங்கு விஜயநகர அரசியின் விருந்தினராகத் தங்கினார். 5ஆம் தேதியன்று ஆந்திர பல்கலைக்கழக மாணவர்களிடையே அவர் உரையாற்றினார். பின்னர் தென்னிந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று ரவீந்திரர் சாந்திநிகேதன் திரும்பினார்.
‘மாடர்ன் ரிவ்யூ’வில் வெளியான அவரது ரஷ்ய கடிதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டுமா? என்ற விவாதம் நவம்பர் 12 அன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்றது.
நவம்பர் 22 அன்று வெளியான கூட்டு நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை குறித்து தனது கருத்தை வெளியிட்ட ரவீந்திரர், ‘சுயராஜ்யம் என்பதை வாக்குகளாகவோ, தொகுதிகளாகவோ பிரிப்பது என்பதல்ல; மரணித்துப் போயிருக்கும் கிராமங்களுக்குப் புத்துயிர் ஊட்டாத வரையில் சுயராஜ்யம் என்பது பொருளற்றதே. இதனை நம்மால் மட்டுமே செய்ய முடியும்’ என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் 27 அன்று வெளிமாநிலங்களில் வாழும் வங்காளிகளின் இலக்கிய மாநாட்டினை தொடங்கி வைத்து ரவீந்திரர் உரையாற்றினார். அன்று மாலையே கல்கத்தா செனட் ஹாலில் நடைபெற்ற நிகில் பங்க சங்கீத் சம்மேளனத்தை தொடங்கி வைத்தும் அவர் உரையாற்றினார்.
(தொடரும்)