1935ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று அப்போது கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதிகளும் அழைப்பாளர்களும் ஒன்றுதிரண்டு சாந்திநிகேதனுக்கு வருகை தந்தனர். ரவீந்திரர் அவர்களை அன்புடன் வரவேற்று உரையாடினார்.
இதே மாதத்தில் கடந்த ஆண்டு இலங்கைப் பயணத்தின்போது தொடங்கி பல்வேறு தருணங்களுக்குப் பிறகு நிறைவு செய்த ‘சார் அத்யாய்’ (நான்கு இயல்கள்) என்ற அவரது இறுதி நாவல் வெளியானது.
ஸ்ரீநிகேதனின் ஆண்டுவிழா நாளான பிப்ரவரி 6 அன்று வங்காளத்தின் அன்றைய கவர்னரான சர் ஜான் ஆண்டர்சன் சாந்திநிகேதனுக்கு வருகை தரவிருந்தபோது பாதுகாப்புக் காரணங்களுக்காக அப்போது சாந்திநிகேதனில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் ஸ்ரீநிகேதனில் தஞ்சம் புக வேண்டியிருந்தது. பிப்ரவரி 8ஆம் தேதியன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உரையை ரவீந்திரர் நிகழ்த்தினார். அத்தருணத்தில் அவருக்கு கவுரவ டி.லிட். பட்டம் அளிக்கப்பட்டது. பிப்ரவரி 12 அன்று அலகாபாத் பல்கலைக்கழகத்தின் செனட் ஹாலில் ரவீந்திரர் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றினார். பிப்ரவரி 15 அன்று லாகூருக்குச் சென்ற அவர் பஞ்சாப் மாணவர்களின் ஆண்டு மாநாட்டில் 15-17 தேதிகளில் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். 17ஆம் தேதியன்று லாகூர் ஒய்.எம்.சி.ஏ. அமைப்பு அவருக்கு வரவேற்பு அளித்தபோது, ரவீந்திரர் தனது கவிதைகளைப் படித்துக் காட்டினார். பின்பு அங்குள்ள குருத்வாராவிற்குச் சென்று சீக்கிய மதத் தலைவர்களை சந்தித்து உரையாடினார். பிப்ரவரி 28 அன்று லக்னோ வந்த ரவீந்திரர் மார்ச் 1-2 தேதிகளில் லக்னோ பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றினார்.
ஏப்ரல் 16 அன்று சாந்திநிகேதனுக்கு அருகாமையில் வசித்து வந்த சந்தால் பழங்குடி மக்களின் பயன்பாட்டிற்கென ஒரு கூட்டுறவு பண்டகசாலையை அவர் தொடங்கி வைத்தார்.
மே 7ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று, சந்தால் பழங்குடிகளால் களிமண்ணால் உருவாக்கப்பட்டு ‘சியாமளி’ என்று அவரால் பெயரிட்டப்பட்ட குடிசையில் ரவீந்திரர் குடியேறினார். இதே நாளில் அவரது கவிதை நூலான ‘சேஷ் சப்தக்’ வெளியானது. மே 12 அன்று கல்கத்தாவில் நடைபெற்ற வங்க சாகித்ய பரிஷத்தின் ஆண்டு மாநாட்டில் ரவீந்திரருக்குப் பாராட்டுரை வழங்கப்பட்டது. 1931ஆம் ஆண்டிலிருந்து நின்று போயிருந்த விஸ்வபாரதி காலாண்டிதழ் இதே மாதத்தில் கிருஷ்ணா கிருபளானியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தொடங்கியது. இதே மாதத்தில் புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கல்கத்தா மகாபோதி கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ரவீந்திரர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஜூன்மாதம் முழுவதும் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்த சந்தர்நாகூரில் அவரது மிகுந்த விருப்பத்திற்குரிய படகுவீடான ‘பத்மா’வில் தங்கியபடி கழித்தார். இத்தருணத்தில் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு பின்னர் ‘பிதிகா’ என்ற நூலாக வெளியானது.
ஜூலை 21ஆம் தேதியன்று ‘ரவீந்திர சங்கீதம்’ என்று அழைக்கப்படும் அவரது இசைப்பாடல்களின் கருவூலம் என்று ரவீந்திரர் உள்ளிட்டு அனைவராலும் போற்றப்பட்டு வந்தவரும் அவரது மூத்த அண்ணனின் பேரனுமான தினேந்திரநாத் தாகூர் உடல்நலக் குறைவால் கல்கத்தாவில் காலமானார்.
விஸ்வபாரதியின் நிதிநிலைமையோ நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே போனது. நாட்டின் மூலை முடுக்கெங்கும் பயணம் செய்து உரை நிகழ்த்தி, கலைநிகழ்ச்சிகளை நடத்தி அவர் நிதிதிரட்டிய போதிலும், அவை அன்றாடச் செலவுகளுக்கே போதுமானதாக இல்லை. இந்த நேரத்தில்தான் தீனபந்து ஆண்ட்ரூஸின் ஆலோசனையின் பேரில், தனது தற்பெருமையை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, ரவீந்திரர் உதவி கோரி காந்திஜிக்குக் கடிதம் எழுதினார்.
1935ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் எழுதிய இக்கடிதத்தில், ‘என்னிடமுள்ள ஏதோவொரு குறையினால் விஸ்வபாரதியின் நிதிக்கான எனது கோரிக்கை மக்களின் மனதைத் தொடுவதாக இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு பிச்சையெடுப்பதற்காக நான் மேற்கொள்ளும் பயணங்களால் பெரிதும் பலன் விளைவதில்லை என்பதோடு, என் உடல்நலமும் இதனால் சீரழிந்து விடுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். ரவீந்திரரின் இக்கடிதம் கண்டு பெரிதும் நெகிழ்ச்சியுற்ற காந்திஜி அவருக்கு அனுப்பிய பதிலில் ‘உங்களின் இந்தச் சீரிய முயற்சிக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்கு என்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்வேன் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களின் இந்த வயதில் நிதிதிரட்டுவதற்கான பயணத்தை இனியும் மேற்கொள்வது பொருத்தமானதல்ல. சாந்திநிகேதனை விட்டு நீங்கள் அகலாதவகையில் தேவையான பணம் உங்களை விரைவில் வந்தடையும். என்றாலும் இதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
1935ஆம் ஆண்டில் ஜவாகர்லால் நேருவிற்கு எழுதிய ஒரு கடிதத்திலும் ரவீந்திரர் தனது நிலை குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘விஸ்வபாரதி எவ்வளவு வசதிக்குறைவுகளுடன் செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு குளிர்காலமும் எனக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தக் காரணம்தான் விஸ்வபாரதிக்கு நிதி திரட்ட என்னைத் தூண்டுகிறது. வெறுக்கத்தக்கதொரு சோதனையாகவே இது எனக்கு அமைகிறது. மக்களுக்கு முன்பாக கலைநிகழ்ச்சிகளை நடத்துவது என்ற பெயரிலோ அல்லது எந்தவகையிலும் இரக்கமென்பதே இல்லாதவர்களிடம் தாராள மனதோடு நிதி தருமாறு கோருவது என்ற இந்தப் பிச்சைக்காரத் தொழிலை நான் மேற்கொள்கிறேன். எவ்வகையிலும் சலித்துக் கொள்ளாமல் இந்த அவமானகரமான முள்கீரிடத்தை சுமப்பதன்மூலம் நான் தியாகம் செய்வதாக எனக்கு நானே சமாதானம் செய்து கொள்கிறேன். சொந்த வாழ்க்கை, தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றைவிட மேலானதொரு லட்சியத்திற்காகவே இதை நான் மேற்கொள்கிறேன் என்பதையும் நான் மனதிலிருத்திக் கொள்ளத்தானே வேண்டும்?’
இத்தகைய நிதிதிரட்டல் குறித்து ரவீந்திரரின் மூத்தமகன் ரதீந்திரநாத் தனது நினைவலைகளில் குறிப்பிட்டுள்ளதும் மனதை உருக்குவதாக உள்ளது: ‘விஸ்வபாரதிக்காக நிதி திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், பணம் படைத்தோரிடமிருந்து நிதியுதவிக்காக இரைஞ்சுவது என்பது, அதிலும் குறிப்பாக சாந்திநிகேதனில் அவர் மேற்கொண்டுவரும் பணிகளைப் பாராட்டத் தயாராக இல்லாதவர்களிடமிருந்து, இத்தகைய உதவியைக் கோரி நிற்பதென்பது என் தந்தைக்கு மிகுந்த துன்பத்தைத் தருவதாய் இருந்தது. இத்தகைய கோரிக்கைகளை எழுப்பும் தருணத்தில் அவர் பெரிதும் நடுக்கமுற்றார்.’
அக்டோபரில் தனது பதிப்பாளரான ராமானந்த சாட்டர்ஜியிடம் ‘மலஞ்சா’, ‘துயி போன்’ ஆகிய இரு நூல்களை சுரேந்திரநாத் தாகூரிடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லி வெளியிடுமாறு ரவீந்திரர் கேட்டுக் கொண்டார். அதேநேரத்தில் கிருஷ்ணா கிருபளானி அவரது ‘சேஷேர் கவிதா’ நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யத் தொடங்கியிருந்தார்.
நவம்பரில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறித்துவ இளம்பெண்களின் கழகத்தின் பிரதிநிதியான செல்வி. ஈத்தல் கட்லர் மற்றும் ஜப்பானிய கவிஞர் யோனே நெகிச்சி ஆகியோர் சாந்திநிகேதனுக்கு வருகை தந்தபோது, அவர்களுக்கு அன்பான வரவேற்பு தரப்பட்டது.
டிசம்பர் 5ஆம் தேதியன்று ரவீந்திரரைப் பேட்டி காண வந்திருந்த ஆய்வாளரான மார்கரெட் சாங்கரிடம் இந்தியாவின் மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்பான பிரச்சனைகளை அவர் அறிவியல்பூர்வமாக விரிவாக விளக்கினார். இதே மாதத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டை முன்னிட்டு ஒரு கவிதையை எழுதிய ரவீந்திரர், அப்போது பொன்விழா காணும் இந்திய தேசிய காங்கிரசை வாழ்த்தி அன்றைய தலைவர் ராஜேந்திர பிரசாத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
1936ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய விவசாய ஆய்வுக் கழகத்தின் தலைமை நிதி ஆலோசகரான டாக்டர் டி.கே. கபூர், ஹாமில்டன் பிரபுவின் மனைவி, பேராசிரியர் ஹோவார்ட் தார்மன், லெஃப்டினெண்ட் கர்னல் எஃப்.பி.ஈட்ஸ் ப்ரவுன் ஆகியோர் சாந்திநிகேதனுக்கு வருகை தந்தனர். பிப்ரவரியில் வங்காள அரசு ஏற்பாடு செய்திருந்த கல்வி வார விழாவில் ‘கல்வியின் இலக்குகள்’, ‘கல்வியில் இசையின் இடம்’, ‘இயல்பானதாக ஆக்கப்பட்ட கல்வி’ ஆகிய தலைப்புகளில் ரவீந்திரர் உரை நிகழ்த்தினார். இதில், இறுதி உரையானது வீட்டிலிருந்தபடியே கல்வியை, குறிப்பாகப் பெண்கள், மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து (அதாவது, இன்றைய தொலைதூரக் கல்வி) விரிவாக அவர் விளக்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இத்தருணத்தில் அவருடைய ‘சித்ராங்கதா’ என்ற நாடகத்தினை ஓர் இசை நாடகமாக மாற்றியமைக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
மார்ச் மாதத்தில் சாந்திநிகேதனில் நடைபெற்ற வசந்தவிழாவில் உரையாற்றுகையில், ‘புதுயுகத்தின் கதாநாயகர் ஜவாகர்லால் நேரு’ என்று பாராட்டிக் கூறினார். மார்ச் 11-12-13 தேதிகளில் சித்ராங்கதா இசைநாடகம் கல்கத்தாவில் அரங்கேற்றப்பட்டு மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றது.
மார்ச் 16ஆம் தேதி ரவீந்திரர் தொடங்கிய வட இந்தியப் பயணத்தின்போது சித்ராங்கதா இசை நாடகம் 16-17 தேதிகளில் பாட்னா நகரிலும், 19இல் அலகாபாத் நகரிலும், 22-23 தேதிகளில் லாகூர் நகரிலும் நிகழ்த்தப்பெற்றது. இதற்கென ரவீந்திரர் லாகூர் நகரை வந்தடைந்தபோது, அங்கே வசித்து வந்த புகழ்பெற்ற உருதுமொழிக் கவிஞரும், தத்துவஞானியும், கல்வியாளரும், அறிஞருமான முகமது இக்பால் ‘ஒரே நகரில் ஒரே நேரத்தில் இரண்டு கவிஞர்கள் தங்கியிருப்பது சரியல்ல’ என்று கூறி மார்ச் 21 முதல் 24 வரை லாகூர் நகரை விட்டு வெளியேறியிருந்தார்.
மார்ச் 25 அன்று தில்லியில் உள்ள மாடல் பள்ளியின் பிரார்த்தனை மண்டபத்திற்கு ரவீந்திரர் அடிக்கல் நாட்டினார். மார்ச் 26-27 தேதிகளில் சித்ராங்கதா இசைநாடகம் தில்லியில் நிகழ்த்தப்பட்டது. இத்தருணத்தில் தில்லியில் இருந்த காந்திஜி, விஸ்வபாரதிக்கு நிதி சேகரிக்க இந்தத் தள்ளாத வயதிலும் ரவீந்திரர் இவ்வாறு பயணம் மேற்கொள்வதைக் கண்டு மனம் பொறுக்காமல் தனது சீடரும் புகழ்பெற்ற செல்வந்தருமான ஜி.டி. பிர்லாவிடம் தீர்க்கமான வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, விஸ்வபாரதிக்கு அதுவரை இருந்த கடன் நிலுவையான ரூ. 60,000/-ஐ செலுத்தும் வகையில் ஒரே காசோலையாக ரவீந்திரரிடம் வழங்கப்பட்டது. இதனோடு காந்திஜி ரவீந்திரருக்கு ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார்:
‘அன்பிற்குரிய குருதேவ்,
எனது எளிய முயற்சிக்கு இறைவன் செவிசாய்த்து விட்டான். உங்களுக்குத் தேவையான பணத்தை அனுப்பியிருக்கிறேன். மீதமுள்ள நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக அறிவித்து, எங்களைப் போன்ற மக்களின் மனதைக் குளிர்விக்க வேண்டுகிறேன். இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவானாக!
அன்புடன்
மோ.க. காந்தி’
ஆனால் இதனோடு விஷயம் முடிந்துவிடவில்லை. விஸ்வபாரதியை தொடர்ந்து நடத்திச் செல்ல பணமும் தொடர்ந்து வேண்டியிருந்தது. இந்த விஷயத்தில் காந்திஜியை நம்பியிருக்க வேண்டியிருந்தது குறித்தும் ரவீந்திரர் பெரிதும் வெட்கமடைந்தார். இதே ரவீந்திரர், 1905 வங்காளப் பிரிவினையின்போது ஒரு தேசபக்தராக ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் ஒன்றில், தேச நிவாரண நிதிக்கு அவர் அறைகூவல் விடுத்தபோது, கிட்டத்தட்ட இதே அளவுத் தொகை அந்த ஒரே கூட்டத்தில் மக்களிடமிருந்து வசூலானது. 1905ஆம் ஆண்டின் ரூ. 60,000 என்பது 1936இல் அதைவிடப் பலமடங்கு மதிப்புடையதாகும். தன்னையும் ஒரு ‘தேசப் பற்றாளனாக’ காட்டிக் கொள்ள ரவீந்திரர் முன்வருவாரானால், அவரால் இதைவிடப் பலமடங்குத் தொகையை திரட்டிவிட முடியும் என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்காலத் தலைமுறையின் கல்வி பற்றியே, கிராம மக்களின் மேம்பாடு பற்றியே சிந்தித்து வந்த அவருக்கு ‘தேசப்பற்று’ என்ற வேடமிட்டு இயங்க ஒருபோதும் மனம் வரவில்லை என்பதே உண்மை. இந்த நிதிதிரட்டல் தொடர்பாக காந்திஜியோடு அவருக்கு மோதலும் ஏற்பட்டது. பிறிதொரு தருணத்தில் அதைக் காணலாம்.
தில்லி நிகழ்விற்குப் பிறகு ராணி பூங்காவில் அவருக்கு பொதுவரவேற்பு அளிக்கப்பட்டது. அருணா ஆசஃப் அலி, தேசபந்து குப்தா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மார்ச் 29 அன்று மீரட் நகரில் சித்ராங்கதா இசைநாடகம் நிகழ்த்தப்பட்டது. இத்தருணத்தில் நகராட்சி மற்றும் மாவட்ட வாரியம் அளித்த வரவேற்பு நிகழ்விலும் அவர் உரையாற்றினார். மார்ச் 30 அன்று தில்லி திரும்பிய அவர் தில்லி வானொலியில் தனது கவிதைகளை வாசித்தார்.
ஏப்ரல் 25 அன்று அவரது ஒரே பேத்தியான நந்திதா (இவர் ரவீந்திரரின் மூத்த மகன் ரதீந்திரநாத் – பிரதிமா தேவி தம்பதியினரின் தத்துப் பெண்) – கிருஷ்ணா கிருபளானி திருமணம் மிக எளிமையாக சாந்திநிகேதனில் நடைபெற்றது. இதையொட்டி ‘பத்ராபுட்’ என்ற தனது கவிதைத் தொகுப்பினை ரவீந்திரர் இந்தப் புதுமணத் தம்பதியினருக்கு அர்ப்பணம் செய்தார்.
ஜூலை 29 அன்று டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ரவீந்திரருக்கு கவுரவ டி.லிட். பட்டம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் கல்விக்கான லோகசிக்ஷா சம்சாத் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு ரவீந்திரரின் மூத்த மகன் ரதீந்திரநாத் செயலாளராகவும், ரவீந்திரரின் தொடக்க கால வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாக வங்காளி மொழியில் மிகச் சிறப்பாக எழுதிய பிரபாத் குமார் முகோபாத்யாய் உதவிச் செயலாளராகவும் செயல்பட்டனர்.
செப்டெம்பரில் பிரஸ்ஸெல்ஸ் நகரில் இருந்து செயல்பட்டு வந்த அமைதிக்கும் சுதந்திரத்திற்குமான சர்வதேச பெண்கள் லீகிற்கு அனுப்பிய செய்தியில் ‘அதற்கான முழு விலையைத் தராத வரையில் நம்மால் அமைதியைப் பெற முடியாது. வலுவானவர்கள் தங்கள் பேராசையை விட்டுவிடுவதும், வலுக்குறைந்தவர்கள் துணிவாக இருக்கக் கற்றுக் கொள்வதுமே அதற்கான விலையாகும்‘ என்று ரவீந்திரர் கூறியிருந்தார்.
அக்டோபர் மாதத்தில் 1899ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதியன்று அவர் எழுதிய பரிஷோத் (பழிவாங்கல்) என்ற கவிதையை மையமாகக் கொண்டு ஒரு நாடகத்தை உருவாக்கி அதற்கு இசையும் அமைத்தார் ரவீந்திரர். அக்டோபர் 10-11 தேதிகளில் கல்கத்தா அசுதோஷ் கல்லூரியில் இந்த நாடகம் அரங்கேற்றமானது. அக்டோபர் 10ஆம் தேதியன்று வங்காளி மொழியின் மிகச் சிறந்த நாவலாசிரியரான சரத் சந்திர சாட்டர்ஜியின் மணிவிழாவிலும் ரவீந்திரர் கலந்து கொண்டார்.
அக்டோபர் 12 அன்று கல்கத்தா ஆல்பர்ட் ஹாலில் நடைபெற்ற வங்காள பெண் தொழிலாளர் மாநாட்டில் ரவீந்திரர் பங்கேற்று உரையாற்றினார். நவம்பரில் ஜவகர்லால் நேரு சாந்திநிகேதனுக்கு வருகை தந்தார்.
(தொடரும்)