1937ஆம் ஆண்டு தொடக்கத்தில் கல்கத்தா பல்கலைக்கழக நிர்வாகம் தனது நிறுவன தினத்திற்கென தனிப்பாடல் ஒன்றை எழுதித் தருமாறு ரவீந்திரரைக் கேட்டுக் கொண்டது. இதற்கு இணங்க ஜனவரி 24 அன்று அவர் எழுதிய இரண்டு பாடல்களில் ‘சலோ ஜெய்! சலோ ஜெய்!’ (வெற்றியோடு நடைபோடு! வெற்றியோடு நடைபோடு!) என்ற பாடலை பல்கலைக்கழகம் தேர்வு செய்து ஏற்றுக் கொண்டது.
பிப்ரவரியில் இத்தாலியின் பாசிச சர்வாதிகாரியான முசோலினி எத்தியோப்பியாமீது படையெடுத்ததைக் கண்டித்து ‘ஆப்ரிக்கா’ என்ற புகழ்பெற்ற கவிதையை ரவீந்திரர் எழுதினார். பிப்ரவரி 17 அன்று கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா உரை நிகழ்த்த ரவீந்திரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய நவீன கல்வி வரலாற்றிலேயே முதன்முறையாக ரவீந்திரரின் பட்டமளிப்புவிழா சிறப்புரை வங்காளி மொழியில் அமைந்திருந்தது மட்டுமின்றி, அரசுப்பதவி எதையும் வகிக்காத ஒருவர் பட்டமளிப்புவிழா சிறப்புரை நிகழ்த்தியதும் அதுவே முதன்முறை ஆகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரையின் இறுதியில் ரவீந்திரர் கீழ்க்கண்ட பிரார்த்தனை கீதத்தையும் இயற்றிப் பாடினார்:
ஆண்டவரே!
சாத்தியமில்லாதவற்றை, தாங்கவொண்ணாத துயரத்தை
எதிர்கொள்ளும் பெருமிதத்தை எமக்களிப்பீராக!
உணர்ச்சிமிக்க மயக்க நிலையிலிருந்து விடுவிப்பீராக!
சிறுமையெனும் புழுதியில் புரள்வதையே பெருமையென
எண்ணுவதிலிருந்து எங்களை மீட்பீராக!
அடிமைத்தனம் மிக்க மனமெனும் விலங்கிலிருந்து,
விதியெனும் நிரந்தர இயலாமையிலிருந்து அகற்றுவீராக!
தகுதியற்றோரின் காலடியில் மனித கண்ணியத்தைத்
தியாகம் செய்யும் முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பீராக!
காலம் காலமாகக் குவிந்திருக்கும் வெட்கக்கேடான
முட்டாள்தனங்களை இரக்கமேதுமின்றி நசுக்குவீராக!
எல்லையற்ற வானத்தின்கீழ்
அற்புதமான ஒளியின்கீழ்
சுதந்திரமான காற்றின்கீழ்
பயமேதுமின்றி தலைநிமிர்ந்து நிற்போமாக!
பிப்ரவரி 18 அன்று இந்தி இலக்கியத்தை நேசிப்பவர்களான ராம்பகதூர் சொக்கானி, சீத்தாராம் சக்சேரியா, பகீரத் கனோரியா ஆகியோர் ரவீந்திரரைச் சந்தித்து ராஜஸ்தானின் புராதன இலக்கியங்களின் தொகுப்பினை வழங்கினர். மேலும் சாந்திநிகேதனில் இந்தி மொழிக்கென ஒரு பிரிவினை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அதற்கான நிதியைத் திரட்டித் தருவதாகவும் உறுதியளித்தனர்.
பிப்ரவரி இறுதியில் விஸ்வபாரதியின் அறங்காவலராக இருக்க வேண்டுமென்று கோரி ரவீந்திரர் காந்திக்குக் கடிதம் எழுதினார். பதிலளித்த காந்தி, இதற்கென போதுமான நேரத்தை ஒதுக்க முடியாத தன் நிலையை சுட்டிக் காட்டியதோடு, தில்லியில் தனக்குக் கொடுத்த வாக்குறுதியைமீறி (காந்தியின் சொந்த பூமியான) அகமதாபாத் நகருக்கு ‘பிச்சையெடுக்க’ ரவீந்திரர் வரவிருப்பதாகத் தமக்குத் தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
‘பிச்சையெடுப்பது’ என்ற வார்த்தையை இதற்கு முன்பு இந்த இருவருமே கடிதங்களில் பரிமாறிக் கொண்டிருந்தபோதிலும், இந்தத் தருணத்தில் காந்தி இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதைக் கண்டதும் ரவீந்திரர் வெகுண்டெழுந்து காந்திக்குப் பதிலெழுதினார்:
‘கொஞ்சம் வெளிப்படையாகவே கூறிவிடுகிறேன்… என்னுடையதென்று நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளும் இயக்கத்தின் பெருமையைப் புரிந்து கொள்ள உங்களுக்கேயான இயல்பு தடுத்து நிறுத்துகிறது என்றுதான் நான் இங்கு கூற விரும்புகிறேன். எனது இந்த இயக்கமானது இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தோ அல்லது அதன் பிளவுவாதப் போக்கு கொண்ட மதங்களைப் பற்றியதோ அல்ல; மாறாக, மனித மனத்தின் கலாசாரத்தை, அதன் விரிவான பொருளில் மக்களைப் புரிந்து கொள்ளச் செய்வதற்கான ஒரு முயற்சியே ஆகும். அழகின் நிரந்தரத் தன்மையை தனக்குள் பொதிந்து வைத்திருப்பதாக நான் கருதும் என் கவிதைப் படைப்பினை வெளியே அனுப்புவதற்கான உந்துதலை நான் பெறும்போது, பொருளுதவியையோ அல்லது எவரின் தயவையோ நான் எதிர்பார்ப்பதில்லை.
‘மாறாக, அதற்குப் பிரதிபலிப்பு செய்யும் வகையில் மென்மையான மனம் கொண்டோரிடமிருந்து என் கலைக்கான, படைப்பிற்கான நன்றிகலந்த பாராட்டுக்களையே நான் எதிர்பார்க்கிறேன். பார்வையாளர்களிடமிருந்து நுழைவுக் கட்டணம் என்ற வகையில் பங்களிப்பினை நான் பெறுவேனேயானால், அவர்களுக்கு நான் அளிக்கும் இந்த அரிதான வாய்ப்பிற்கு எனக்குக் கிடைக்க வேண்டிய பிரதிபலனை விட குறைவானதாகவே அது இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். எனவே, உங்கள் பேனாவில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ‘பிச்சைக்கான பயணம்’ என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நான் மறுக்கிறேன்.’
கல்வி குறித்த காந்தியின் அணுகுமுறையை எப்படி ரவீந்திரர் ஒருபோதும் பாராட்டவில்லையோ, அதைப் போன்றே காந்தியும் ரவீந்திரரின் கலைநயம் மிக்க படைப்புகளை ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலுமே அவர்கள் மிக ஆழமான வகையில் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவே இருந்தனர். இருந்தபோதிலும், இவ்விரு பெருமகன்களுமே அன்றைய காலத்தின் கடமையான தேசப்பற்று என்பதைவிட அதிகமான அளவில் அனைவருக்குமான மனித நேயத்தைப் போற்றுவது என்ற வகையில் ஒன்றுபட்டவர்களாக இருந்தனர். இதுவே அவர்களின் உள்ளார்ந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து அவர்களைச். செயல்படத் தூண்டியது எனலாம்.
ரவீந்திரரின் இந்தக் கடிதத்தைப் பெற்ற ஒரு சில வாரங்களிலேயே இவர்களின் பிணக்கு தணிந்துவிட்டது. 1937ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விஸ்வபாரதிக்கென மேலும் கூடுதலான நிதியை காந்தி வசூலித்துத் தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 3ஆம் தேதியன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த தின நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கல்கத்தாவின் டவுன்ஹாலில் உலக மதங்களின் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘ஆன்மாவின் மதமும் எல்லையற்ற மதவெறியும்’ என்ற தலைப்பில் ரவீந்திரர் உரை நிகழ்த்தினார்.
அதேநாளில் ஸ்பெயினில் அப்போது நடைபெற்றுவந்த சர்வாதிகாரத்திற்கு எதிரான உள்நாட்டுப் போர் குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையை ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் வெளியிட்டிருந்தது. ‘ஸ்பெயின் நாட்டு மக்கள் கடுமையான சோதனையையும் துயரத்தையும் எதிர்கொண்டுவரும் இத்தருணத்தில் மனித குலத்தின் மனசாட்சிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஸ்பெயின் நாட்டின் மக்கள் முன்னணிக்கு உதவிடுங்கள்! மக்கள் நல அரசுக்கு உதவிடுங்கள்! உரக்கக் குரலெழுப்பி பிற்போக்குத் தனத்தைத் தடுத்து நிறுத்துங்கள்! ஜனநாயகத்தைப் பாதுகாக்க, நாகரீகமும் பண்பாடும் வெற்றிபெற, அலைகடலென அணிதிரண்டு வாரீர்!’ என்று அந்த அறிக்கையில் ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ரவீந்திரரைத் தலைவராகக் கொண்டு பாசிசம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான முன்னணி என்ற ஓர் அமைப்பு ரவீந்திரரின் மூத்த அண்ணன் த்விஜேந்திரநாத் தாகூரின் பேரனும் கம்யூனிஸ்ட் தலைவருமான சௌம்யேந்திரநாத் தாகூரின் முன்முயற்சியில் உருவானது. இந்த அமைப்பில் ஜவாகர்லால் நேரு, ஜெயப்ரகாஷ் நாராயண், எஸ்.ஏ. டாங்கே ஆகியோரும் அங்கம் வகித்துச் செயல்பட்டனர். சர்வாதிகாரத்திற்கு எதிரான இந்த உணர்வை ‘சல்தி சாபி’ என்ற கவிதையின்மூலம் ரவீந்திரர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
மார்ச் 14 அன்று வங்க இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர்களைக் கொண்ட ரவிவாசர் என்ற இலக்கிய அமைப்பின் உறுப்பினர்கள் சாந்திநிகேதனுக்கு வருகை தந்தனர். ரவீந்திரர் அவர்களை வரவேற்று உரையாடினார். (இந்த அமைப்பில் பின்னாளில் ஓர் உறுப்பினராகவும், இறுதியில் அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட, வங்காளி அல்லாத ஒரே எழுத்தாளர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என்று அறியப்படும் சு. கிருஷ்ணமூர்த்தி ஆவார்).
ஏப்ரல் 14 வங்காளி வருடப்பிறப்பன்று சாந்திநிகேதனில் சீன பவனம் தொடங்கப்பட்டது. இத்தருணத்தில் ‘சீனாவும் இந்தியாவும்’ என்ற தலைப்பில் ரவீந்திரர் உரையாற்றினார். இந்த நிகழ்விற்கென ஜவாகர்லால் நேரு எழுதி அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. ‘வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே சீனாவும் இந்தியாவும் சகோதர நாடுகள். அவை தங்களை ஆழமாக ஈடுபடுத்தி வரும் உலக ரீதியான செயல்பாட்டில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்’ என்று நேரு குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்விற்கு காந்திஜியும் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட இந்த சீன பவனம் இன்றும் சீன மொழி – பண்பாடு குறித்த ஆய்வுகளுக்கான மையமாகத் திகழ்கிறது.
கோடை காலத்தைக் கழிப்பதற்காக இமாலய மலைச்சரிவில் அமைந்திருக்கும் அல்மோராவிற்குச் சென்ற ரவீந்திரர் வங்காளி வாசகர்களுக்கு நவீன அறிவியலை அறிமுகப்படுத்தும் வகையில் ‘விஸ்வ பரிச்சய’ (பேரண்டத்தின் அறிமுகம்) என்ற நூலை எழுதத் தொடங்கினார். அறிவியலில் முறையான கல்வியைப் பெறாதிருந்தபோதிலும், தன் தந்தையோடு இதே இமயமலைப் பகுதிக்கு சிறுவயதில் வந்திருந்தபோது அவரிடமிருந்து வானியல் தொடர்பாகப் பெற்ற அறிவை மையமாகக் கொண்டு, பேரண்டத்தின் அதிசயங்கள் குறித்த நூல்களை தொடர்ந்து பயில்வதன் மூலம் அதை விசாலமாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பட்டறிவுடன் அவர் எழுதிய ‘விஸ்வ பரிச்சய’ நூல் இன்றளவும் நவீன அறிவியலுக்கான எளிமையான ஓர் அறிமுகமாகத் திகழ்கிறது. இந்த நூலை அன்றைய மகத்தான அறிவியல் வித்தகர்களில் ஒருவரான பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸ்க்கு அவர் அர்ப்பணித்திருந்தார்.
இந்த நூலிற்கான முன்னுரையில் ‘அறிவியலின் பக்தனாக நான் இல்லாவிட்டாலும், சிறுவயதிலிருந்தே அறிவியல்மீது ஆர்வம் கொண்டவனாகவும், அதிலிருந்து எல்லையற்ற இன்பம் பெறுபவனாகவும் இருந்தேன். ஒரு விஞ்ஞானியாக ஆவதற்கான பயிற்சியைப் பெறும் வாய்ப்புதான் எனக்குக் கிடைக்கவில்லையே தவிர, அதற்கான உத்வேகம் என்னிடம் எப்போதும் உள்ளது என எனது நண்பரும் விஞ்ஞானியுமான ஜகதீஷ் சந்திர போஸ் அடிக்கடி கூறி வந்ததும் என் நினைவிற்கு வருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அல்மோராவிலிருந்து திரும்பி வந்தவுடன், அந்தமானில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மிக மோசமான வகையில் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்து கல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ரவீந்திரர் உரையாற்றினார். 1937 ஆகஸ்டில் மழைப் பருவத்தைக் கொண்டாடும் வகையில் ‘வர்ஷ மங்கள்’ என்ற இசை- நடன நாடகத்தை எழுதி, அதை கல்கத்தாவில் அரங்கேற்றினார். இந்த நிகழ்வின்போது அவர் மேடையின் ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி, நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.
செப்டெம்பர் 10ஆம்தேதியன்று மாலை வழக்கமான வகையில் தன் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்த ரவீந்திரருக்கு திடீரென்று நினைவற்றுப் போனது. அத்தருணத்தில் சாந்திநிகேதனில் தொலைபேசி வசதி ஏதும் கிடையாது. கல்கத்தாவிற்குச் சென்று மருத்துவர்களை அழைத்து வருவதற்கு இடைப்பட்ட 48 மணி நேரத்தில் எந்தவித அவசர மருத்துவ உதவி ஏதுமின்றி ரவீந்திரர் ‘கோமா’ நிலையில் அசைவற்றுக் கிடந்தார். மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே அவர் போராடிக் கொண்டிருந்தார்.
கல்கத்தாவிலிருந்து வந்த மருத்துவர் குழுவின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு நினைவு திரும்பி, படிப்படியாக உடல் நலமும் தேறியது. அவரது நண்பரும் புகழ்பெற்ற மருத்துவருமான நீல் ரத்தன் சர்க்காரும் அவருக்கு உதவியாக வந்த மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்றும் பல நாட்கள் அவரது படுக்கைக்குக் அருகிலேயே காத்திருந்து ரவீந்திரரின் உடல்நிலை தேறுவதற்குப் பெரிதும் உதவினர்.
இவ்வாறு நினைவற்றுக் கிடந்த 48 மணி நேரத்தில் ரவீந்திரரின் ஆழ்மனது துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், வாழ்விற்கும் சாவிற்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் தான் பெற்ற தனித்துவமான அனுபவத்தினை எழுத்தில் வடிக்கும் திறன் பெற்றவராகவும் ரவீந்திரர் இருந்தார். இது குறித்து அவர் எழுதிய 18 கவிதைகளும் அளவில் மிகச் சிறியவை என்றபோதிலும், அவரது கவிதை எனும் சாதனைப் பயணத்தின் சிகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.
இந்த அனுபவம் குறித்த அவரது எழுத்துக்கள் நலிவுற்ற ஒரு மனதைக் குறிப்பதாக இருக்கவில்லை. அதுபோலவே அச்சமோ, வலியோ அல்லது குறையோ அவற்றில் தென்படவில்லை. அபாயகரமான, அதேநேரத்தில் வியப்பூட்டும் வகையிலான, இந்த சாகசப் பயணத்தில் அவரது வழக்கமான உலகம் கண்ணிலிருந்து முற்றிலுமாக மறைந்து போயிருந்தது. வாழ்விற்கு அப்பால் தென்பட்ட ஒரு வெளி – அது ஒரே நேரத்தில் இருட்டாகவும் ஒளிமிக்கதாகவும் இருந்தது; இரவு-பகல் என்ற எந்த வேறுபாடும் உணரப்படவில்லை – தந்த அனுபவத்தை வெளிப்படுத்திய இந்தப் பாடல்கள் தனியொரு தொகுப்பாக 1938ஆம் ஆண்டில் ‘பிராந்திக்’ (எல்லைப்புறம்) என்ற மிகப் பொருத்தமான தலைப்புடன் வெளியானது.
இந்தப் பாடல்களை ரவீந்திரரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். உலக இலக்கியத்தில் மரணம் பற்றியும் இறப்பிற்குப் பிந்தைய நிலைகுறித்துமான ஆழ்நிலை சிந்தனைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பாடல்களின் ஒரு பகுதியாக அவை விளங்குகின்றன. இந்தப் பாடல்களை மையமாகக் கொண்டு, இதுவரை பல மனநல மருத்துவர்களும் ஆய்வு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பர் 15 அன்று அவருக்கு மீண்டும் நினைவு திரும்பியபோது, படுத்திருந்த படுக்கையில் தலையணைகளின்மீது சாய்ந்தபடி, ஓவியம் வரைவதற்கான வண்ணக் குப்பிகளையும் தூரிகையையும் கொண்டுவரும்படிக் கேட்டார். அந்த அறையிலேயே கிடந்த ஒரு ப்ளைவுட் துண்டின் மேல் அவர் வரைந்த சித்திரம், காட்டிற்குள் இருள்கவிந்த ஒரு பின்னணியில் மெல்லியதாக வெளிச்சம் பரவும் காட்சியை விவரிப்பதாக இருந்தது. ‘இந்தச் சித்திரம் தனித்துவமானதாகவும், அதேவேளையில் அவரது நிலையை மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவருவதாகவும் இருந்தது’ என அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இதன் பிறகே, அந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினம் வரை, இந்த அனுபவம் குறித்துப் பல்வேறு தருணங்களில் அவர் எழுதிய கவிதைகள் பதினெட்டும் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது.
அக்டோபர் 12 அன்று மருத்துவ சிகிச்சையை தொடர்வதற்கென ரவீந்திரர் கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அத்தருணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒரு கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களான சுபாஷ் சந்திர போஸ், ஜவாகர்லால் நேரு மற்றும் பல தலைவர்கள் ரவீந்திரரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். அந்த நேரத்தில் காந்திஜி உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால், ரவீந்திரரே நேரடியாகச் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
நடைபெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம், ரவீந்திரர் உடல்நலம் பெற்று மீண்டெழுந்து வந்தது குறித்த தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மேலும் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்பதற்கு காங்கிரஸால் திட்டமிடப்பட்டிருந்த, பங்கிம் சந்திரர் எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து ரவீந்திரர் தெரிவித்த கருத்தை முழுமையாக ஏற்றுக கொள்வதாகவும் தெரிவித்தது. (இந்தப் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே ரவீந்திரர் முன்வைத்த கருத்தாகும்.)
(தொடரும்)