Skip to content
Home » தாகூர் #39 – வருத்தமளித்த உலக நிகழ்வுகள்

தாகூர் #39 – வருத்தமளித்த உலக நிகழ்வுகள்

ஜகதீஷ் சந்திர போஸ்

மருத்துவ சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ரவீந்திரர் நவம்பர் 4ஆம் தேதியன்று சாந்திநிகேதன் திரும்பினார். அங்கிருந்தபோது, நவம்பர் 23ஆம் தேதியன்று ரவீந்திரரின் உற்ற நண்பரும் மிகச்சிறந்த அறிவியல் அறிஞருமான ஜகதீஷ் சந்திர போஸ் (தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை அறிவியல்ரீதியாக நிரூபித்தவர்) அன்றைய பீகாரில் இருந்த கிரித் நகரில் தனது 79வது வயதில் காலமானார் என்ற செய்தி வந்தது.

அவரது ஆய்வுகளின் தொடக்க காலத்திலிருந்தே, போஸ் வெளிநாடுகளில் பயிலவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் தேவையான நிதியுதவிற்கு ஏற்பாடு செய்தவர் ரவீந்திரர். 1901ஆம் ஆண்டிலேயே திரிபுரா மகாராஜா ராதாகிஷோர் மாணிக்யாவிடம் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது ஆய்விற்கென ரூ. 20,000 நன்கொடை பெற்றுத் தந்தார். உற்ற நண்பரின் மறைவு குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் ரவீந்திரர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘பல ஆண்டுகளுக்கு முன்பாக தனது முயற்சிகளுக்கு ஏற்பட்ட தடைகளை எல்லாம் இளமையின் தீவிரத்தோடு புறமொதுக்கிவிட்டு, அவர் முன்னேறத் தலைப்பட்ட தருணத்தில்தான் நான் அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கினேன். அவரது தீவிரமான தன்னம்பிக்கை என்னையும் தொற்றிக் கொண்டது. எனது கற்பனைகளில் இருந்த வெற்றுத் தன்மையை என்னை உணரச் செய்து, என்னை அச்சத்துடன் தள்ளி நிற்கச் செய்வதற்கான வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன என்றாலும், அவரும் என்னைப் போலவே கனவும் காண்பவர்தான் என்பதை உணர்ந்தபோது, எனக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. தனது கற்பனையின் உதவியோடு இயற்கையின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்து, உலகையே அதிர வைத்தவர் அவர். என்னைப் பொறுத்தவரையில் ஒரு விஞ்ஞானி தன் இறுதி வெற்றிக்காகக் காத்திருக்கும் உண்மைகள் நிரம்பிய அந்த அறிவியல் உலகத்தில் ஒரு கவிஞராகவே அவர் எனக்குத் தோன்றினார். என் இளமைக் காலத்தில் இந்த மகத்தான மனிதரின் ஆளுமையால் நான் கவரப்பட்டேன். எனக்கே உரித்தானதென்று நான் கருதிக் கொண்டிருந்த கவிதைச் சூழலை விரும்பிப் பருகும் உணர்வு கொண்டதாக அவரது மனம் இருந்தது.’

டிசம்பர் 22 அன்று சாந்திநிகேதனில் பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்ற ஏழாவது பவுஷ் ஆண்டுவிழாவில் அவர் நிகழ்த்திய உரை ‘குழப்பங்களின் உற்பத்தி’ என்ற தலைப்பில் பின்னர் பிரசுரமாக வெளியானது. இந்த உரையில் சீனாவின் மீது ஜப்பான் மேற்கொண்ட படையெடுப்பு குறித்த தனது மனவருத்தத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

கல்கத்தாவில் புதிய கல்வியுதவிக்கான மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் அடிப்படை தேசியக் கல்வி என்ற காந்திஜி முன்வைத்த திட்டத்தின் குறிப்பிட்ட சில அம்சங்கள் கல்விப்புலத்திற்குப் பொருந்துவனவாக இல்லை என்று தமக்குத் தோன்றுவதாக ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார்.

1938ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய கல்வி உதவிக்கான குழுவின் பிரதிநிதிகளான லோத்தியன் பிரபு, ப்ரபோர்ன் பிரபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடுத்தடுத்து சாந்திநிகேதனுக்கு வருகைதந்து ரவீந்திரருடன் இந்தக் கல்விப்புலம் குறித்து உரையாடினர். ஜனவரி 16 அன்று சாந்திநிகேதனில் உருவாகவிருந்த இந்தி பவனத்திற்கு ஆண்ட்ரூஸ் அடிக்கல் நாட்டினார்.

1937ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்த 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் குறித்து ரவீந்திரர் எழுதிய வெளிப்படையான கடிதத்தை மான்செஸ்டர் கார்டியன் நாளிதழ் பிப்ரவரி 28ஆம் தேதி பதிப்பித்தது. இக்கடிதத்தில் அவர் கூறியதாவது: ‘இந்தச் சட்டம் அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் உருவாக்கப்பட்டது. எவ்வளவு நாட்களுக்கு எங்களை உங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறீர்களோ, அதுவரை எங்கள் நம்பிக்கையையோ அல்லது எங்கள் நட்பையோ உங்களால் பெற முடியாது. ஒரு மனிதனால் மற்றொரு மனிதனும், ஒரு நாட்டால் மற்றொரு நாடும் சுரண்டப்படுவதற்கு முற்றிலுமாக முடிவுகட்ட விரும்பும், உலகெங்கும் உள்ள மனித சக்தியோடு நம்மை இணைத்துக் கொள்வதில்தான் நமது எதிர்காலம் அடங்கியிருக்கிறது.’

மார்ச் 1ஆம் தேதி ஹைதராபாத் நகரிலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் ரவீந்திரருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. எனினும் உடல்நிலை காரணமாக அவர் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் செல்ல இயலவில்லை. மார்ச் 19 அன்று சாந்திநிகேதன் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து புதிதாக உருவாக்கியிருந்த சண்டாளிகா நாட்டிய நாடகம் கல்கத்தாவில் அரங்கேறியது. வழக்கம்போலவே மேடையின் ஒருபகுதியில் அமர்ந்தபடி ரவீந்திரர் இந்த நாடகத்தைக் கண்டு களித்தார். மார்ச் 22ஆம் தேதியன்று வங்காள அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அப்போது கல்கத்தாவில் இருந்த காந்திஜியை அவர் சந்தித்துப் பேசினார்.

ஏப்ரல் 25 அன்று கோடைக்கால ஓய்விற்கென ரவீந்திரர் கலிம்பாங்கிற்குப் புறப்பட்டார். அங்கு மே 7ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அவரது பிறந்தநாளை ஒட்டி ஒலிபரப்புவதற்கென புதியதொரு கவிதை எழுதி வானொலியில் பதிவு செய்தார். மே 21 அன்று அங்கிருந்து அவர் முங்க்போ சென்றார். அங்கு சிங்கோனா திட்ட அதிகாரியான டாக்டர் சென் தம்பதியினரின் விருந்தினராக ஜூன் 9 வரை தங்கியிருந்தார். மீண்டும் கலிம்பாங்கிற்குத் திரும்பினார். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் தங்கியிருந்துவிட்டு ஜூலை 6ஆம் தேதி ரவீந்திரர் சாந்திநிகேதனுக்குத் திரும்பினார்.

சீனாவின் நலன்களைப் புறக்கணித்து, அதை சீரழிக்கும் வகையில் ஜப்பான் மேற்கொண்டுவரும் ஏகாதிபத்திய அத்துமீறல்கள் தன் மனதை மிகுந்த துயரத்திற்கு ஆளாக்குகிறது என தனது நண்பரும் ஜப்பானிய கவிஞருமான யோனே நொகுச்சிக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கடிதங்கள் மூலம் வாக்குவாதம் நடைபெற்றது. நொகுச்சிக்கு எழுதிய கடைசி கடிதத்தை ரவீந்திரர் இவ்வாறு நிறைவு செய்திருந்தார்: ‘நான் பெரிதும் நேசிக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கு வெற்றியல்ல; மனவருத்தமே கிட்டட்டும்!’

செப்டெம்பர் 4 அன்று சாந்திநிகேதனுக்கு வருகைதந்த பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை ரவீந்திரர் வரவேற்றுப் பேசினார். அக்டோபர் 2 அன்று காந்தியின் பிறந்தநாளை ஒட்டி ரவீந்திரர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘ஒரு வறியவரின் உருவில் நம்மிடையே காட்சியளிக்கும் இந்த மகத்தான மனிதருக்கு அவரது பிறந்தநாளில் வாழ்த்து கூறும் வாய்ப்பு கிடைத்துள்ளதே நமக்கெல்லாம் பெருமையானதாகும்.’

அக்டோபர் 16 அன்று ஹிட்லரின் நாஜிப் படைகள் செக்கோஸ்லோவாகியா நாட்டின்மீது படையெடுத்துக் கைப்பற்றியதை அறிந்த ரவீந்திரர் தனது நண்பர் லென்சிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘வெறிபிடித்தவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான வலிமை என் வார்த்தைகளுக்கு இல்லை; அல்லது மனித இனத்தின் பாதுகாவலர்களைப் போல் முன்பு வேடமிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஓடிப்போவதைக் கேள்வி கேட்பதற்கான வலிமையும் அவற்றுக்கில்லை…. மிகுந்த அவமானகரமாக… நாதியற்றவனாக… நான் உணர்கிறேன்.’

நவம்பர் 13 அன்று புகழ்பெற்ற விஞ்ஞானியான மேக்நாத் சாஹா சாந்திநிகேதனில் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் ரவீந்திரரும் கலந்து கொண்டார். நவம்பர் 15ஆம் தேதியன்று பிரம்மசமாஜ சிந்தனையை விரிவாகப் பரப்புவதில் பெரும்பங்கு வகித்தவரான கேசவ் சந்திர சென்னின் பிறந்த நூற்றாண்டை ஒட்டி ரவீந்திரர் அனுப்பிவைத்த செய்தியில் இந்த மகத்தான சீர்திருத்தவாதிக்குத் தான் எந்த அளவிற்குக் கடமைப்பட்டு இருக்கிறேன் என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். துருக்கியில் புதிய பாதையைச் சமைத்த கெமால் அட்டாதுர்க்கைப் பாராட்டும் வகையில் நவம்பர் 18இல் சாந்திநிகேதன் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

டிசம்பர் 9ஆம் தேதி லண்டனில் உள்ள கால்மான் கலைக்கூடத்தில் ரவீந்திரரின் ஓவியக் கண்காட்சியை ஜெட்லாண்ட் பிரபு தொடங்கி வைத்தார். டிசம்பர் 11 அன்று சாந்திநிகேதனில் உள்ள கலா பவனத்தில் ஹாவெல் அரங்கைத் திறந்து வைத்துப் பேசுகையில் இந்தியக் கலையின் மறுமலர்ச்சிக்கு ஹாவெல்லின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். டிசம்பர் 19 அன்று வைஸ்ராய் லின்லித்கோவின் மனைவி, மகள் மற்றும் சீமாட்டி ஆன் ஹோப் ஆகியோர் சாந்திநிகேதனுக்கு வந்து ரவீந்திரரைச் சந்தித்தனர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஸ்ரீநிகேதனின் முதல் இயக்குநரும் சாந்திநிகேதனின் நிதிச் சுமையில் கணிசமான பகுதியை மிக நீண்ட காலமாக ஏற்று தொடர்ந்து நிதியுதவி செய்து வந்தவரும், ரவீந்திரரின் மிக நெருங்கிய நண்பருமான எல்மிர்ஸ்ட் வருகை தந்தது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக சாந்திநிகேதனுக்கு அமைந்தது.

1939 ஜனவரியில் திரிபுரா மகாராஜா வீர்விக்ரம் கிஷோர் மாணிக்யா சாந்திநிகேதனுக்கு வருகை தந்தார். அவரை முறைப்படி வரவேற்ற ரவீந்திரர், திரிபுரா அரச குடும்பத்துடனான தன் நீண்ட கால நட்புறவை, அக்குடும்பத்திடமிருந்து தான் இடையறாது பெற்று வந்த அன்பைச் சுட்டிக் காட்டி உரையாற்றினார். ஜனவரி 21 அன்று காங்கிரஸின் மூத்த தலைவர்களின் உத்தரவையும் விருப்பத்தையும் மீறி இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் சாந்திநிகேதனுக்கு வந்து ரவீந்திரருடன் உரையாடினார். அவருக்கு உரிய வரவேற்பும் அளிக்கப்பட்டது.

ஜனவரி 31 அன்று இந்தி மொழி ஆய்விற்கென சாந்திநிகேதனில் உருவாக்கப்பட்ட இந்தி பவனத்தை ஜவாகர்லால் நேரு முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரவீந்திரர், தீனபந்து ஆண்ட்ரூஸ் ஆகியோரும் பங்கேற்றனர். சாந்திநிகேதனில் நேரு தங்கியிருந்த இந்தத் தருணத்தில் சுபாஷ் சந்திர போஸ் மீண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி அங்கு வருகை தந்தார். ரவீந்திரரின் முன்னிலையில் இந்த இரு காங்கிரஸ் தலைவர்களும் கலந்துரையாடினர். பிப்ரவரி 6 அன்று நடைபெற்ற ஸ்ரீநிகேதனின் ஆண்டுவிழாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். மறுநாள் ரவீந்திரர் கல்கத்தாவிற்குப் புறப்பட்டார். சாந்திநிகேதனில் இலக்கிய-பண்பாட்டு மையமாகச் செயல்பட்டு வந்த விசித்ரா என்ற அமைப்பினைப் போலவே, கல்கத்தாவிலும் செயல்படுவதற்கென விஸ்வபாரதி சம்மிலானி என்ற அமைப்பினை ரவீந்திரர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

கல்கத்தாவில் தங்கியிருந்த இத்தருணத்தில் ஷ்யாமா, சண்டாளிகா, தாசேர் தேஷ் ஆகிய அவரது நாடகங்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. பிப்ரவரி 13 அன்று சாந்திநிகேதனுக்குத் திரும்பிய ரவீந்திரர், விஸ்வபாரதியின் நலம் விரும்பியும் அவகார் ராஜாவும் ஆன சூர்யபால் சிங்கை வரவேற்று உபசரித்தார். மார்ச் 14 அன்று கேரள மாநிலத்தின் முன்னோடிக் கவிஞரும் கேரள கலாமண்டலத்தின் நிறுவனருமான மகாகவி வள்ளத்தோல் தனது கலைஞர்களுடன் சாந்திநிகேதனுக்கு வந்து கதகளி நிகழ்ச்சியை நடத்தி ரவீந்திரரை மகிழ்வித்தார்.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று கனடா நாட்டிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் அறைகூவல் (அவான்) என்ற கவிதையை அவர் எழுதியதோடு, அதனை ஆங்கிலத்திலும் தானே மொழிபெயர்த்து, தன் சொந்தக் குரலில் அதைப் பதிவு செய்தார். இந்த ஒலிப்பதிவை ஒட்டாவா நகர வானொலி நிலையம் மே 29 அன்று ஒலிபரப்பியது. ஏப்ரல் 14 அன்று வங்காளி வருடப் பிறப்போடு கூடவே அவரது பிறந்தநாளும் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. இத்தருணத்தில் ஆசிரியர்களின் தேநீர்க்கழகம் ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார். சாந்திநிகேதனின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவரும், இசைப் பிரிவின் முதல் முதல்வரும், அவரது மூத்த அண்ணன் த்விஜேந்திரநாத் தாகூரின் பேரனுமான தினேந்திரநாத் தாகூரின் நினைவாக இந்தக் கழகத்திற்கு ‘தினந்திகா’ என்று ரவீந்திரர் பெயர் சூட்டினார்.

ஏப்ரல் 19 அன்று அன்றைய ஒரிசா மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசின் அழைப்பினை ஏற்று பூரி நகருக்குச் சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கினார். இத்தருணத்தில் மே 7ஆம் நாளன்று பூரி நகரம் ரவீந்திரரின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இதையொட்டி பூரி அரசர் ரவீந்திரருக்கு ‘பரமகுரு’ என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தார்.

மே 17 முதல் ஜூன் 17 வரையிலான கோடை காலத்தை ரவீந்திரர் முங்போவிலும் கலிம்பாங்கிலும் கழித்துவிட்டு ஜூன் 19 அன்று சாந்திநிகேதனுக்குத் திரும்பினார். ஜூன் 25லிருந்து ஜூலை 17 வரை ஸ்ரீநிகேதனில் அவர் தங்கியிருந்த நேரத்தில் போஸ்ட் ஆபிஸ் என்ற நாடகத்திற்கான ஒத்திகையையும் அவர் மேற்கொண்டார். இந்த நாடகத்தில் தாகுர் தா என்ற பாத்திரத்தை ரவீந்திரர் ஏற்றிருந்தார். எனினும் இறுதியில் இந்த நாடகம் அவர் மறையும்வரை நிகழ்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முயற்சி இவ்வாறு கைவிடப்பட்ட பிறகு, இதற்கென அவர் எழுதியிருந்த சிறப்பான ஒரு கவிதையைத் தன் மறைவிற்குப் பிறகு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிறிதொரு தருணத்தில் அவர் கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி சீன பவனத்தில் நடைபெற்ற மரம்நடுவிழாவில் அவர் பங்கேற்றார். ஆகஸ்ட் 19 அன்று சுபாஷ் சந்திரபோஸின் அழைப்பிற்கு இணங்க கல்கத்தாவில் உருவாகவிருந்த மகாஜதி சதன் என்ற கலையரங்கிற்கு ரவீந்திரர் அடிக்கல் நாட்டினார். மறுநாள் சீனாவிற்குப் போகும் வழியில் ஜவாகர்லால் நேரு ஜொரசங்கோ இல்லத்தில் ரவீந்திரரைச் சந்தித்து உரையாடிச் சென்றார்.

செப்டெம்பர் 12 முதல் நவம்பர் 9 வரையிலான இலையுதிர் காலத்தை ரவீந்திரர் முங்போவில் கழித்தார். ரவீந்திரரின் அனைத்து எழுத்துக்களின் தொகுப்பான ரவீந்திர ரச்சனாவளியின் முதல் தொகுதியை விஸ்வபாரதி செப்டெம்பரில் வெளியிட்டது. நவம்பர் 11 அன்று சாந்திநிகேதனுக்குத் திரும்பிய ரவீந்திரர் டிசம்பர் 16 அன்று மிதுனபூருக்குப் புறப்பட்டார். அங்கு உருவாக்கப்பட்டிருந்த வித்யாசாகர் நினைவரங்கினை அவர் திறந்து வைத்தார். கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கென இயேசுவின் தியாகம் குறித்த ஒரு பாடலை ரவீந்திரர் இயற்றினார். கிறிஸ்துமஸ் தினத்தின் ஆராதனையை ஆண்ட்ரூஸ் நடத்திய பிறகு, இந்தப் பாடல் பிரார்த்தனையின்போது பாடப்பட்டது. சாந்திநிகேதனில் தீனபந்து ஆண்ட்ரூஸ் கலந்து கொண்ட கடைசி கிறிஸ்துமஸ் விழா இதுவேயாகும்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *