Skip to content
Home » தாகூர் #40 – தூய நண்பரின் இழப்பும் ஆக்ஸ்ஃபோர்ட் விருதும்

தாகூர் #40 – தூய நண்பரின் இழப்பும் ஆக்ஸ்ஃபோர்ட் விருதும்

தீனபந்து ஆண்ட்ரூஸ்

1940ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று சீன அறிஞரான போதகர் டாய் ஹூசுவை ரவீந்திரர் வரவேற்று உபசரித்தார். பிரம்ம சமாஜத்தின் ஆண்டுவிழா தினத்தன்று (ஜனவரி 25) சாந்திநிகேதனில் நடைபெற்ற கூட்டத்தில் ‘முழுமைக்கான முயற்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். பிப்ரவரி 6 அன்று நடைபெற்ற ஸ்ரீநிகேதன் ஆண்டுவிழாவில் பங்கேற்று கிராமங்களுக்கான சேவை குறித்து உரையாற்றினார்.

பிப்ரவரி 17 அன்று காந்தியும் கஸ்தூர்பாவும் சாந்திநிகேதனுக்கு வருகை தந்தனர். அதற்கு அடுத்த நாள் மாந்தோப்பில் அவர்களை வரவேற்று ஆற்றிய உரையில் ‘மனித குலம் அனைத்திற்கும் சொந்தமான உங்களை எங்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டார். இதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய காந்தி, ‘இதை ஒரு புனிதப் பயணமாகவே மேற்கொண்டு நாங்கள் இங்கே வந்துள்ளோம். இந்த இடத்திற்கு நான் புதியவனல்ல. எனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். குருதேவின் ஆசிகள் எனக்குக் கிடைத்துள்ளது. எனது உள்ளம் மகிழ்ச்சியால் ததும்புகிறது’ என்று குறிப்பிட்டார்.

காந்தி சாந்திநிகேதனிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக பிப்ரவரி 19 அன்று ரவீந்திரர் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அந்தக் கடிதத்தில் ‘இந்த நிறுவனத்தை உங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு, அதை நிலைத்திருக்கச் செய்வதற்கான உறுதியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விஸ்வபாரதி என் வாழ்க்கையில் மிகச் சிறந்த பொக்கிஷங்களை ஏற்றிச் செல்லும் ஒரு வாகனத்தைப் போன்றது’ என்று ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார். இந்த இருபெருமகன்களும் நேரடியாகச் சந்தித்துப் பேசிய கடைசி தருணம் இதுவேயாகும்.

மார்ச் 1-3 தேதிகளில் பங்குரா மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு நடைபெற்ற பங்குரா கண்காட்சியைத் திறந்து வைத்ததோடு, பங்குராவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார். இங்கிலாந்தில் உள்ள எச்.டபிள்யூ. நெவின்சன் எழுதிய கடிதத்தை அடுத்து, மனித உரிமைகளுக்கான தேசிய கவுன்சிலின் உதவித் தலைவர் என்ற பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவித்து மார்ச் 31 அன்று ரவீந்திரர் கடிதம் எழுதினார்.

1940 ஏப்ரல் 5ஆம் தேதியன்று ரவீந்திரர் தன் வாழ்வில் மற்றுமொரு இழப்பை எதிர்கொள்ள நேரிட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது உற்ற நண்பராக அனைத்துத் தருணங்களிலும் செயல்பட்ட தீனபந்து ஆண்ட்ரூஸ் சிறிது காலம் உடல்நலமின்றி இருந்து கல்கத்தாவில் உள்ள ரியோர்டன் மருத்துவமனையில் உயிர்நீத்தார். 20ஆம் நூற்றாண்டின் மகத்தான ஆளுமைகளான ரவீந்திரர்–காந்தி ஆகிய இருவருடனும் உயரிய நட்புறவைப் பேணி, இந்திய மக்களின் மேன்மைக்காகவே பாடுபட்டு வந்த ஓர் ஆங்கிலேயர் என்ற வகையில் தீனபந்துவின் மறைவு இந்த இரு பெருமகன்களுக்குமே பேரிழப்பாக இருந்தது.

அன்று மாலை சாந்திநிகேதனில் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் பேசும்போது, ‘கிறித்துவத்தின் அடிப்படை நெறியான மனிதநேயம் வேறெந்த நபரிடமும் இத்தகைய வெற்றியைப் பெற்றதில்லை. அவரது தியாகம், மனிதநேயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் உணர்வு ஆகிய அனைத்துமே நம் மனங்களில் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை’ என்று ரவீந்திரர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்ல; 1941ஆம் ஆண்டு அவர் எழுதிய இறுதிக் கட்டுரையான ‘நாகரீகத்தின் நெருக்கடி’ ஏகாதிபத்தியச் செருக்குடன் நடக்கும் ஆங்கிலேயர்களைக் கடுமையாகச் சாடுவதற்கு முன்பாக, ஆண்ட்ரூஸை முன்வைத்து ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தது: ‘மிகப்பரந்த மனப்பாங்குடைய ஆங்கிலேயர்களோடு பழகும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இவர்கள் உவமை கூறமுடியாத நற்பண்பினராக இருந்ததால், அவர்களின் காரணமாகவே, அவர்களோடு சேர்ந்த இதர ஆங்கிலேய மக்களிடமும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. உதாரணமாக, உண்மையிலேயே மிகச் சிறந்த கிறித்துவரும் பெருமகனுமாகிய ஆண்ட்ரூஸுடன், அவர் ஓர் ஆங்கிலேயராக இருப்பினும், மிகச் சிறந்த நட்பை நான் பெற்றிருந்தேன். இன்று அவரது மரணத்திற்குப் பிறகு நின்று பார்க்கையில், சற்றும் சுயநலமில்லாத, துணிவோடு கூடிய அவரது பெருமை மேலும் ஒளிவீசுகிறது. அன்பாலும் பக்தியாலும் தூண்டப்பட்டு, ஆண்ட்ரூஸ் செய்த நற்செயல்களுக்கு இந்தியர்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

‘தனிப்பட்ட வகையில் கூறுவதெனில், கீழ்கண்ட காரணத்திற்காக அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். ஆங்கில இலக்கியத்தைப் படித்துவிட்டு, பிரிட்டிஷ் மக்களிடம் இளமைக்காலத்தில் நான் கொண்டிருந்த மதிப்பை, என் முதுமைக்காலத்தில் இழந்துவிட்டேன் என்றாலும், அந்த இழந்த பகுதிகளுள் ஒரு சிலவற்றை மீட்பதற்கு அவர் எனக்கு உதவியுள்ளார். பிரிட்டிஷ் மக்களின் இதயங்களிலுள்ள பெருந்தன்மையை நாம் ஓயாமல் நினைப்பதற்கு ஆண்ட்ரூஸின் நினைவு உதவுகிறது. அவரை ஒத்த மனிதர்களையே மிக நெருங்கிய நண்பர்களாக நான் கொண்டிருந்தேன். மேலும் அவர்கள் மனித சமூகம் முழுவதற்குமே நண்பர்களாக இருந்தனர். அத்தகைய மனிதர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தது என் வாழ்வை வளப்படுத்தப் பெரிதும் உதவியது. பிரிட்டிஷாரின் தற்பெருமை பாறையில் தாக்கி மோதி விடாமல் காப்பவர்கள் ஆண்ட்ரூஸ் போன்றவர்களே! எவ்வாறிருப்பினும், அவரைப் போன்றவர்களை நான் காணாமலும் அறியாமலும் இருந்திருப்பின், மேலை நாகரிகத்தின்மீது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் எவ்வித மாற்றமுமின்றியே தொடர்ந்திருக்கும்.’

தீனபந்துவின் மற்றொரு நெருங்கிய நண்பரான காந்தி தனது இரங்கல் உரையில் இவ்வாறு எழுதியிருந்தார்: ‘ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நடத்திய எண்ணற்ற தவறுகள் மறக்கப்படும் அதேநேரத்தில், தீனபந்துவின் வீரஞ்செறிந்த செயல்கள் ஒவ்வொன்றுமே இங்கிலாந்தும் இந்தியாவும் இருக்கும் வரையில் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வரும். ஆங்கிலேயர்கள்மீது நமக்கு எவ்வித வெறுப்பும் இல்லை; அவர்களில் தீனபந்து மிகச் சிறந்தவரும் புனிதமானவரும் ஆவார். மிகச்சிறந்த ஆங்கிலேயர்களும் மிகச்சிறந்த இந்தியர்களும் ஒன்றுகூடி, இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வழியை நிச்சயமாக உருவாக்க முடியும்வரையில் இந்த இருபிரிவினரும் பிரிந்திருக்க வேண்டியதில்லை. தீனபந்து விட்டுச் சென்றுள்ள பாரம்பரியம் அத்தகைய மிகச்சிறந்ததொரு முயற்சியாகும். தீனபந்துவின் சாந்தமான முகத்தை நினைவுகூரும்போது, உலகிலுள்ள நாடுகள் மத்தியில் இந்தியா தனது சுதந்திரமான இடத்தைப் பெறுவதற்காக அன்போடு அவர் மேற்கொண்ட எண்ணற்ற செயல்கள்தான் என் நினைவில் நிரம்பி நிற்கிறது.’

ஏப்ரல் 17 முதல் 20 வரை கல்கத்தாவில் தங்கியிருந்தபோது அவர் அளித்த பேட்டியொன்றில் அன்றைய அரசியல் நிலைமைகள் குறித்தத் தன் கருத்தை விரிவாக எடுத்துக் கூறியிருந்தார். பின்பு கோடைக்காலத்தைக் கழிக்க முங்போவிற்குச் சென்ற ரவீந்திரர் டாக்டர் சென் தம்பதியினரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். மே 7ஆம் தேதியன்று முங்போவில் ரவீந்திரரின் பிறந்தநாள் மிக எளிமையாகக் கொண்டாடப்பட்டது. பின்பு மே 8ஆம் தேதியன்று அவர் கலிம்பாங் சென்றார். அங்கிருந்த தருணத்தில் ஜூன் 15 அன்று அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் அப்போது நடைபெற்று வந்த உலகப் போரில் ஒரு காலனி நாடு என்ற வகையில் இந்தியாவின் நிலை மிகவும் சிக்கலானதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் 29ஆம் நாள் சாந்திநிகேதனுக்குத் திரும்பிய அவர் இசையைப் பரப்புவதற்கான ‘கீதாலி’ என்ற ஓர் அமைப்பினைத் தொடங்கி வைத்தார். ஜூலை 24 அன்று போல்பூரில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்பகத்தை ரவீந்திரர் தொடங்கி வைத்தார்.

ரவீந்திரரின் பரம ரசிகரான ஏ.எச். ஃபாக்ஸ் ஸ்ட்ராங்வேஸ் (இந்திய இசையில் ஆர்வம் கொண்டவர்; பின்னாளில் ரவீந்திர சங்கீதத்தை உலகின் விரிவான கவனத்திற்குக் கொண்டு சென்றவர்) ஆங்கிலேய இசை விற்பன்னரும், இசை விமர்சகரும், இதழாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 1913ஆம் ஆண்டிலேயே (ரவீந்திரருக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு முன்பாகவே) ஆக்ஸ்ஃபோர்ட் அல்லது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ரவீந்திரருக்கு கவுரவ டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கி பெருமைப்படுத்த வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்திருந்தார். அத்தருணத்தில், இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து பின்னர் இங்கிலாந்தில் ஓய்வெடுத்து வந்த கர்சான் பிரபு (இவர்தான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர்) அதற்கு மாறான கருத்தை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவித்ததால் அது நிறைவேறவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் விழித்துக் கொண்டு, ரவீந்திரருக்கு கவுரவ டாக்டர் (டி. லிட்.) பட்டம் வழங்க முன்வந்தபோது, முதுமையின் காரணமாக ரவீந்திரரால் முன்பு போல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை. இந்நிலையில் இனியும் தாமதிக்கலாகாது என்று கருதிய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நிர்வாகக் குழு கூடி, சாந்திநிகேதனிலேயே அவருக்கு இப்பட்டத்தை முறைப்படி வழங்குவது என்று முடிவு செய்தது. இதன்படி இந்தியாவின் தலைமை நீதிபதியான சர். மவுரிஸ் கவ்யர், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கல்கத்தா உயர்நீதி மன்றத்தின் நீதிபதி ஹெண்டர்சன் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவைத் தேர்வு செய்து, இவர்கள் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளாக இருந்து ரவீந்திரருக்கு டி. லிட். பட்டத்தை வழங்குவார்கள் என முடிவு செய்தது.

இதன்படி, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழா சாந்திநிகேதனில் நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட பிரமுகர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளாக இருந்து ரவீந்திரருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர். இக்குழுவின் தலைவராக இருந்த இந்தியத் தலைமை நீதிபதி மவுரிஸ் கவ்யர் உரையாற்றுகையில், ‘ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இருந்து இந்தப் பட்டத்தினை நான் உங்களுக்கு வழங்குவதன் மூலம், உண்மையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்தான் பெருமை பெறுகிறது’ என்று குறிப்பிட்டார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஆகஸ்ட் 7ஆம் தேதியன்றுதான் அவரது ஒரே பேரனான (மூன்றாவது மகள் மீராவின் மகன்) நிதீந்திரநாத் ஜெர்மனியில் உடல்நலமின்றி இறந்து போனார். அதேபோன்று ஓராண்டிற்குப் பிறகு இதே நாளில்தான் ரவீந்திரரும் மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று துளசிதாஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பேசிய ரவீந்திரர் துளசிதாஸ் எழுதிய ராமாயணத்தின் கலாசார முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

செப்டெம்பர் 17 அன்று கல்கத்தாவில் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுவிட்டு, மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி, ரவீந்திரர் 19ஆம் தேதியன்று கலிம்பாங் புறப்பட்டுச் சென்றார். மருமகள் பிரதிமா தேவியுடன் அவர் தங்கியிருந்த நேரத்தில் செப்டெம்பர் 26 அன்று திடீரென மீண்டும் மயக்கமுற்றார். முங்போவில் இருந்து திருமதி மைத்ரேயி சென் மருத்துவருடன் விரைந்தார். க்ளூகோஸ் செலுத்தியவுடன் மீண்டும் சுயநினைவிற்கு வந்த ரவீந்திரரைச் சோதித்த அந்த ஆங்கிலேய மருத்துவர் உடனடியாக அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்தினார்.

இதற்கிடையே அந்த நேரத்தில் படிசார் அருகில் ஏதோவொரு கிராமத்தில் பண்ணை வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மூத்த மகன் ரதீந்திரநாத்திற்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கும் வகையில் வானொலியில் ரவீந்திரரின் உடல்நிலை மோசமானது குறித்த செய்தி ஒலிபரப்பப்பட்டது. அவரது மகனை ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கலாகாது என்று உறுதி கொண்ட மருமகள் பிரதிமா தேவியும், மைத்ரேயி தேவியும் அந்த ஆங்கிலேய மருத்துவரின் வற்புறுத்தலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் தகவல் தெரிந்து கல்கத்தாவிலிருந்து விரைந்து வந்த மருத்துவக் குழு அவரை உரிய ஏற்பாட்டுடன் கல்கத்தாவிற்குக் கொண்டுவந்து சிகிச்சையைத் தொடர்ந்தது. ஒருவாறு நெருக்கடி தீர்ந்தது. இத்தருணத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அவர் கல்கத்தாவில் படுக்கையிலேயே இருக்க நேரிட்டது.

கலிம்பாங்கில் செப்டெம்பரில் அவர் உடல்நலம் மோசமடைந்ததில் இருந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டில் அவர் மறையும்வரையிலான 11 மாத காலத்தில் அவருக்கு இரவு-பகல் பாராது பணிவிடை செய்து வந்த பலருள் பிரதிமா தேவி (மருமகள்), ராணி சந்தா (தனிச்செயலாளரின் மனைவி), மைத்ரேயி தேவி (நண்பரது மனைவி), நிர்மல்குமாரி மகலனாபிஸ் (நண்பரது மனைவி), அமிதா தாகூர் (ஒன்றுவிட்ட பேரனின் மனைவி) ஆகியோர் ரவீந்திரரின் மனைவிற்குப் பிறகு பல்வேறு இதழ்களில் எழுதிய நினைவலைகள், சிறு நூல்கள் ஆகியவை எவ்வாறு அவர் சிந்தனைத் தெளிவோடு செயல்பட்டு வந்தார் என்பதை வலுவாக எடுத்துக் கூறுகின்றன. அறுவைசிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தருணத்திலும்கூட அவர் ஒரு கவிதையைச் சொல்லச் சொல்ல எழுதிக் கொள்ளப்பட்டது.

நவம்பர் 18 அன்று சாந்திநிகேதன் திரும்பிய அவர் டிசம்பர் 9 அன்று அமைச்சர் டாய் சி டாவோ தலைமையிலான சீன அறிஞர் குழுவைச் சந்தித்தார். டிசம்பர் 22 அன்று சாந்திநிகேதனில் நடைபெற்ற விழா ஒன்றிற்காக, நோய்வாய்ப்பட்ட உலகம் மெதுவாக முழுமையாகிக் கொண்டு வருகிறது என்ற கருத்துருவின் அடிப்படையில் அன்றைய உலகச் சிக்கல்கள் குறித்து அவர் உருவாக்கிய ‘மீட்சி’ என்ற கட்டுரை கூடியிருந்தவர்களிடையே படிக்கப்பட்டது. பின்னர் இது பிரசுரமாகவும் வெளியிடப்பட்டது.

இவ்வாறு படுத்த படுக்கையாக இருந்தபோதிலும், அவரது சிந்தனை தொடர்ந்து புதிய விஷயங்களை கவிதைகளாகவும் பாடல்களாகவும் உருவாக்கிக் கொண்டேயிருந்தது.

1941 ஜனவரி 24 அன்று பிரம்ம சமாஜத்தின் ஆண்டுவிழா சாந்திநிகேதனின் பிரார்த்தனை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இத்தருணத்திற்கென ராஜா ராம்மோகன் ராய் பற்றி அவர் எழுதிய கட்டுரை வாசிக்கப்பட்டது. வழக்கம்போலவே ஏப்ரல் 14 வங்காளி வருடப்பிறப்பன்று சாந்திநிகேதனில் ரவீந்திரரின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. 80 ஆண்டுகளை நிறைவு செய்திருந்த இத்தருணத்தில், அவர் உருவாக்கி உலகிற்கு வழங்கிய செய்திதான் ‘நாகரீகத்தின் நெருக்கடி’ என்ற புகழ்பெற்ற கட்டுரையாகும். உடல்நிலை காரணமாக இந்த உரையை அவரால் ஆற்ற முடியவில்லை. அவரது இந்த கட்டுரை விரிவாக பல இடங்களிலும் மறுபதிப்பு செய்யப்பட்டதோடு, அதைப் படித்தவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

மே 8ஆம் தேதியன்று இந்தியா முழுவதிலும் பல்வேறு நகரங்களிலும் ரவீந்திரரின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் சாந்திநிகேதனில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அவரது நாடகம் ஒன்றை அவர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார். மே 13 அன்று திரிபுரா அரசர் ஒரு சிறப்புத் தூதுவர் மூலம் பாரத் பாஸ்கர் (இந்தியாவின் சூரியன்) என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

ஓரளவிற்கு ரவீந்திரரின் உடல்நிலை தேறிக்கொண்டு வந்தபோதிலும் அவருக்கு உரிய சிகிச்சையை மேற்கொள்ள கல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதன்படி, ஜூலை 25 அன்று ரவீந்திரர் சாந்திநிகேதனில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, சாந்திநிகேதனின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருசேர நின்று ‘அமாதேர் சாந்திநிகேதன்…’ என்ற பள்ளி பிரார்த்தனை கீதத்தைப் பாடியபடியே அவருக்கு விடை கொடுத்தனர். அவர்களது உள்ளங்களிலோ ரவீந்திரரை மீண்டும் காண்போமா என்ற ஐயம் ஆட்கொண்டிருந்தது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *