Skip to content
Home » தாகூர் #41 – காற்றில் கலந்த கீதம்

தாகூர் #41 – காற்றில் கலந்த கீதம்

தாகூர்

சாந்திநிகேதனில் இருந்து ரவீந்திரர் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரதீந்திரநாத் தந்தையிடம் பேசுவதற்கு வந்தார்.

‘அப்பா! இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வைத்தியரின் பேச்சை நம்பிக்கொண்டு இருப்பீர்கள்?’

‘ஆயுர்வேத சிகிச்சை பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் இருந்து வருவதுதானே?’

‘இருக்கலாம். ஆனால் அது உங்களுக்குப் பலனளிக்கவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. இப்போது இருக்கும் ஒரே வழி அறுவை சிகிச்சைதான். இனியும் தாமதிக்க வேண்டாம் அப்பா…’

‘யார் செய்யப் போகிறார்கள்?’ ரவீந்திரர் சற்றுநேரம் கழித்து மெதுவாகக் கேட்டார்.

‘டாக்டர் லலித் மோகன் பந்தோபாத்யாயா. இன்றைக்கு கல்கத்தாவில் உள்ள சிறந்த அறுவைசிகிச்சை நிபுணர் அவர்தான்…’

‘அவர்தானே சரத் சந்திரருக்கு அறுவைசிகிச்சை செய்தவர்?’

‘சரத்பாபுவிற்கு புற்றுநோய். அவரது கல்லீரல் முற்றிலுமாக சீர்குலைந்து இருந்தது.’

‘அப்படியிருக்கும்போது லலித்பாபு ஏன் அவருக்கு சிகிச்சை செய்ய ஒப்புக் கொண்டார்?’

‘வயிற்றைத் திறக்கும்வரை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை…’

‘நல்லது’ ரவீந்திரர் சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘சரத் சந்திர சாட்டர்ஜியை மேலுலகிற்கு அனுப்பும் பெருமையை டாக்டர் லலித் மோகன் பெற்றிருக்கிறார். இப்போது அவரை விட புகழ்பெற்ற ஒருவரை மேலே அனுப்பிவைக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.’

‘இப்படியெல்லாம் பேசாதீர்கள் அப்பா… உங்கள் உடல் நல்ல நிலையில் இருப்பதாகத்தான் டாக்டர்கள் சொல்கிறார்கள். எந்தவித ஆபத்தும் இல்லை. சிறுநீர் சுரப்பியை அகற்றுவது என்பது மிகவும் எளிதான அறுவை சிகிச்சை. இதை லலித் பாபு சொல்லவில்லை. டாக்டர் பிதான் சந்திர ராய்தான் சொன்னார். அவரது வார்த்தையை நம்புவீர்கள்தானே? இதை முடித்துவிட்டால், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றும் சொன்னார். குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு…’

‘அந்தப் பத்து ஆண்டுகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?’

‘உலகத்தைக் கேளுங்கள்… பதில் கிடைக்கும்.’

‘வலிக்குமா?’ மெதுவாகக் கேட்டார் ரவீந்திரர்.

‘கொஞ்சம் கூட வலிக்காது. மயக்க மருந்து தருவார்கள்.’

ரவீந்திரர் சற்றுநேரம் மவுனமாக இருந்தார். பின்பு, சோர்வுடன் தலையை உயர்த்தியபடி மகனிடம் கேட்டார். ‘உண்மையிலேயே நான் இதைச் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாயா?’

ரதீந்திரநாத்திற்கு உதடுகள் நடுங்கின. கண்ணீர் துளிர்த்தது. ‘எனக்காகவாவது செய்து கொள்ளுங்கள் அப்பா…’ சிறுவயதில் பயமுற்றாலோ, துக்கம் ஏற்பட்டாலோ செய்வது போலவே, தந்தையின் அருகே வந்து அவர் மடியில் முகம் புதைத்து அழுதார்.

அவரது கண்ணீர், அணிந்திருந்த வேட்டியைத் தாண்டி தொடையில் சூடாக வந்திறங்குவதை உணர்ந்த ரவீந்திரர் பெருமூச்செறிந்தார். பெற்ற ஐந்து குழந்தைகளில் இப்போது உயிரோடு இருக்கும் ஒரே மகன். இருந்தாலும், தன் முயற்சிகளை எல்லாம் சிதறடித்து, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணாக்கிவிட்டு, எதற்கும் கட்டுப்படாமல், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் வீணாக்கிவிட்டு நிற்கும் மகன். அன்பான, அறிவான மனைவியை அலட்சியமாக நடத்தும் மகன். பலவகையிலும் தனக்கு தொந்தரவை மட்டுமே தந்து வரும் மூன்றாவது மருமகன் நாகேந்திரநாத் கங்குலியின் நெருங்கிய தோழன். இருப்பினும் மடியில் தலைவைத்து அழும் மகனின் தலையைப் பற்றிக் கொண்டபோது, மனதிற்குள்ளே புதைந்திருந்த அனைத்து மனக்கசப்புகளும் மறைந்துபோயின. பழையதை எல்லாம் மறந்துவிட்டு ‘பிதான் பாபுவிடம் போய்ச் சொல்! நான் தயாராக இருக்கிறேன்!’ என்றார் ரவீந்திரர்.

ரயில்நிலையத்திலும் வீட்டிலும் அவரைக் காண மக்கள் திரண்டு விடுவார்கள் என்பதால், ரவீந்திரர் சிகிச்சைக்காக கல்கத்தாவிற்கு அழைத்து வரப்படும் செய்தி ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அவரை கல்கத்தாவிலுள்ள பெரிய ஒரு மருத்துவமனையில் சேர்த்தால் தகவலறிந்து கூட்டம் திரண்டுவிடும் என்பதால், ஜொராசங்கோவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் வரவேற்பு அறையையே அறுவை சிகிச்சைக்கான அறையாக மாற்ற ஏற்பாடுகளை செய்யுமாறு, பிதான் ராய், டாக்டர் லலித் மோகனிடம் கூறியிருந்தார். ரதீந்திரநாத் உடனிருந்து இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

ஜொராசங்கோவின் கிழக்குப் பகுதியில் இருந்த அந்தப் பெரிய வரவேற்பறையில் இருந்த அறைகலன்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த ‘பிரின்ஸ்’ துவாரகநாத் தாகூர், ‘மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர் ஆகியோரின் ஆளுயர ஓவியங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டன. கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான அறை அது என்பதை உணர்த்தும் வகையில், பச்சைநிற திரைச்சீலைகள் அறையின் நான்கு பக்கங்களிலும் தொங்கவிடப்பட்டு தயார் செய்யப்பட்டிருந்தது.

ஜூலை 25 அன்று மதியம் ரவீந்திரரை ஏற்றிவந்த அந்தச் சிறப்பு ரயில் ஹவுரா ரயில்நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்தில் ஒரு ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டு, அவர் பிறந்து, வளர்ந்து, சில காலம் வாழ்ந்த மாளிகையான ஜொராசங்கோவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், ரயில்நிலையத்திலும் வீட்டிலும் கூட்டம் ஏதும் கூடவில்லை. அவர் தங்கவேண்டிய பளிங்கு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சற்றுநேர ஓய்விற்குப் பிறகு, அருகிலுள்ள உறவினர்கள், நண்பர்கள் ஒவ்வொருவராக அவரைப் பார்க்க வந்தபோது, வழக்கப்படியே அவர் கேலியாகப் பேசி சிரித்தபடி இருந்தார். இரவு சற்று முன்னதாகவே உறங்கச் சென்றுவிட்டார்.

ஜூலை 26 அன்று மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, ஊசியில் க்ளூகோஸ் செலுத்தினார். சற்று நேரத்திற்குப் பிறகு அதன் எதிரொலிப்பாக மலேரியா நோயால் பீடிக்கப்பட்டவரைப் போல அவருக்கு உடல் நடுக்கம் தொடங்கியது. உடலின் வெப்பநிலையும் அதிகரித்தது. சற்று நேரத்திற்குப் பிறகு அது தணிந்து மெதுவாக உறங்கத் தொடங்கினார் ரவீந்திரர்.

ஜூலை 27 அன்று காலையில் ரவீந்திரர் சொல்லச் சொல்ல, அவரது பேத்தி நந்திதா ஒரு கவிதையை எழுதிக் கொண்டார்:

முதல் நாளில் உதித்த சூரியன்
புதிதாக உயிர்த்தெழுந்த உயிரைப் பார்த்துக் கேட்டது:
‘யார் நீ?’
பதிலேதும் இல்லை.
இறுதிநாளில் சூரியன்
மேற்குக் கடலின் கரையருகே
அமைதியானதோர் அந்திப் பொழுதில்
மீண்டும் அதே கேள்வியைக் கேட்டது:
‘யார் நீ?’
பதிலேதும் இல்லை.

ஜூலை 29 அன்று மதியமும் ரவீந்திரர் மற்றொரு கவிதையை இயற்றி இருந்தார். இந்தக் கவிதையை வழக்கப்படி அவர் மீண்டும் கேட்டு, திருத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் முதலில் சொன்னபடி, திருத்தமேதுமின்றி நமக்குக் கிடைத்த ரவீந்திரரின் இறுதிக் கவிதை இது:

மந்திரக்காரியே! படைப்பின் பாதையெங்கும்
விதவிதமான உன் தந்திரங்களை இறைத்து வைக்கிறாய்…
அப்பாவிகளைப் பிடிக்க உன் கைகள்
ஏமாற்று வலைகளை வீசியெறிகின்றன…
இருந்தாலும், உன் பெருமை என்னவெனில்,
வெளியே நீ மோசமானவளாகத் தோன்றினாலும்
உன் உள்ளம் மிகவும் வெளிப்படையானது…
உன் பலவகையான ஏமாற்றுகளுக்கு
எளிதாக ஆட்பட்டவர்களுக்கு
என்றும் குலையாத அமைதி
உன்னிடமிருந்து கிடைக்கிறது.

(புகழ்பெற்ற வங்காள அறிஞரான நீரத் சவுதரியினால் சுருக்கப்பட்ட வடிவம்).

இதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு, தன் அண்ணன் மகள் இந்திரா தேவிக்கு எழுதியிருந்த ஒரு கடிதத்தில் ரவீந்திரர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘என் வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ, தகுதியற்ற பல செயல்களை நான் செய்திருக்கக் கூடும். ஆனால் என் கவிதையில் நான் எவ்விதப் பொய்யையும் சொல்வதில்லை; நான் அறிந்த ஆழமான உண்மைகளின் சரணாலயமாகவே அது எப்போதும் இருக்கிறது.’

ஜூலை 30ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதற்கு முன்பாக மகன் ரதீந்திரநாத்தை அழைத்த ரவீந்திரர் சொன்னார்: ‘நான் இறந்தபிறகு எனது உடலை சாந்திநிகேதனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.’

‘இப்போது ஏன் மரணத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் அப்பா? நீங்கள் ஒன்றும் இறக்கப்போவதில்லை!’ என்று அதற்குப் பதிலளித்த ரதீந்திரநாத் தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டதைப் போல உணர்ந்தார்.

இந்தப் பதில் காதில் விழாததைப் போல் ரவீந்திரர் மேலும் தொடர்ந்தார்: ‘என் உடலை ‘ரவீந்திரநாத்திற்கு ஜே!’ என்ற முழக்கத்துடன் நீம்தலாவிற்கு (கல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள புகழ்பெற்ற சுடுகாடு) ஊர்வலமாக எடுத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. கோபாய் நதிக்கரையில் என் ஈமக்கிரியை அமைதியாக நடக்க வேண்டும். என் உடல் எரிக்கப்பட்ட பிறகு, மீதமாகும் சாம்பல் கோபாய் நதியிலேயே கரைக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக, நூறாண்டுகளுக்கு முன்பு, என் தந்தைக்கு அமைதியை வழங்கிய, அந்த ஏழிலைப்பாலை மர நிழலில் என் உடலைச் சற்றுநேரம் வைத்திருக்க வேண்டும்.’

ரவீந்திரரின் இந்தப் பேச்சைக் கேட்டதும், ஏற்கனவே தொண்டையடைத்துப் போயிருந்த ரதீந்திரநாத் மூச்சு பேச்சற்றுப் போனார். பதில் பேச முயன்றபோதிலும் குரல் எழவில்லை. வெறித்த விழிகளுடன் வராந்தா வழியாக ஸ்ட்ரெச்சரில் சென்றுகொண்டிருந்த தன் தந்தையையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அறைக்குத் திரும்பிய ரவீந்திரர் அன்று மட்டும் சற்றே நினைவோடு, அதுவும் வலியுணர்வோடு, இருந்தார். மறுநாளிலிருந்து அவரது உடல்நிலை மெதுவாக மோசமடையத் தொடங்கியது. டாக்டர் பிதான் ராய், அறுவை சிகிச்சை செய்த லலித் மோகன் ஆகிய மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டு, தங்கள் இயலாமையை வெளிப்படுத்திவிட்டுச் சென்றனர். நிலைமையை அறிந்த உறவினர்களும், நண்பர்களும் மெதுவாக வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போகத் தொடங்கினர்.

தொடர்ந்துவந்த ஐந்தாறு நாட்களிலும் ரவீந்திரரின் உடல்நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நினைவற்ற நிலையில் இருந்த அவருக்கு அங்கிருந்த மருத்துவர்கள் முனைந்த எவ்வித சிகிச்சையும் பலனளிப்பதாகத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்த இந்த நிலைக்குப் பிறகு, ஆகஸ்ட் 7ஆம் நாள் மதியம் 12.10க்கு ரவீந்திரர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். அப்போது அவர் 80 ஆண்டுகளைக் கடந்து மூன்று மாதங்களை இவ்வுலகில் நிறைவு செய்திருந்தார்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று ரதீந்திரநாத்திற்குத் தெரியவந்தபோது, அவர் அறைக்குள்ளே வந்து, மூச்சு நின்றுபோயிருந்த ரவீந்திரரின் உடலை வெறித்துப் பார்த்துவிட்டு, அங்கிருந்த மற்றவர்களின் முகங்களைப் பார்த்தபோது, அவரது பார்வையில் ஒருவித வெறுமை தென்பட்டது. அவர் பக்கத்து அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். பின்பு, சுரேந்திரநாத் தாகூரின் மகன் சுபிரேந்திரநாத்தை அழைத்து ‘என்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ போய் தாத்தாவிற்குக் கொள்ளி வைத்துவிடு!’ என்று அவரிடம் கூறினார்.

அவரது உடல்நிலை மோசமடைகிறது என்பதை அறிந்த மக்கள் கூட்டம் ஜொராசங்கோ முன்பாக ஏற்கெனவே திரளத் தொடங்கியிருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. குவிந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தை அந்தக் கட்டடத்தின் முகப்பிலிருந்த நீண்ட நெடிய இரும்புக் கதவுகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் தங்கியிருந்த முதல்மாடிக்குச் செல்லும் கதவு அடைக்கப்பட்டது. எனினும், இளைஞர்கள் பலரும் குழாய்களைப் பிடித்தபடியே ஏறி, மாடிவராந்தாவில் குதிப்பதைக் கண்டு, கீழேயிருந்த கூட்டம் சீட்டியடித்து உற்சாகப்படுத்தியது.

இத்தகையதொரு நெருக்கடியான நிலையில், ரவீந்திரரின் நண்பரும் கலாபவன் முதல்வருமான நந்தலால் போஸ் அவரது உடலை எடுத்துச் செல்வதற்கான கட்டிலைத் தச்சர்களுடன் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தார். மறுபுறம் ரவீந்திரரின் அறையில் நெருங்கிய உறவினர்களும் சேவகிகளும் அவரது உடலை குளிப்பாட்டி, காசிப் பட்டு உடுத்தி, இரு தோள்களிலும் புரளும் வகையில் அழகானதொரு சால்வையை தொங்கவிட்டு, நெற்றியில் சந்தனமிட்டு, மணம் கமழும் மாலைகளை அணிவித்து, அவரை அழகுபடுத்திக் கொண்டிருந்தனர்.

அந்த அறையின் மூடியிருந்த கதவிற்கு முன்னால், அழுதுச் சிவந்த கண்களுடன், வெளிறிய முகத்துடன், யாரும் அறைக்குள் வராமல் தடுத்தபடி நின்றிருந்த ரதீந்திரநாத், வராந்தாவில் ஏறிவந்த இளைஞர்களுடன் மன்றாடிக் கொண்டிருந்தார். தன் தந்தையின் இறுதிவிருப்பம், அவரது இறுதிச் சடங்கை, சாந்திநிகேதனில், கோபாய் நதிக்கரையில் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருந்தது என்று மீண்டும் மீண்டும் அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். உணர்ச்சிப் பிழம்பென நின்றிருந்த இளைஞர் கூட்டமோ அவரது வேண்டுதல்களை செவிமடுக்கத் தயாராக இல்லை.

ஒருவழியாக, ஜொராசங்கோ மாளிகையின் திறந்தவெளி அரங்கில் தயாராக இருந்த கட்டிலில் அலங்கரிக்கப்பட்ட ரவீந்திரரின் உடல் வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காத ஒன்றாக மாறியது. அங்கு கூடியிருந்த இளைஞர்கள் ‘ரவீந்திரநாத்திற்கு ஜே! விஸ்வ கவிக்கு ஜே! வந்தேமாதரம்!’ என்று முழக்கமிட்டபடியே, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கட்டிலை அப்படியே தூக்கிக்கொண்டு, நீம்தலாவை நோக்கி நகரத் தொடங்கினர். ரவீந்திரரின் உறவினர்கள், நண்பர்களின் வேண்டுகோளைக் காது கொடுத்துக் கேட்க யாரும் அங்கு தயாராக இல்லை.

கரைபுரண்ட மக்கள் வெள்ளத்திற்கிடையே மெதுவாக அசைந்து சென்றுகொண்டிருந்த இந்த இறுதி ஊர்வலத்தில், ரவீந்திரரின் தலையில் இருந்தும், முகத்திலிருந்தும் முடிக்கற்றைகளை பலரும் பிடுங்கி நினைவுச் சின்னமாக வைத்துக் கொண்ட மிகக்கொடூரமான நிகழ்வுகளும் நடந்தேறின. நீம்தலாவில் அவரது உடல் வந்தடைந்தபோது, பின்னால் காரில் வந்த மகன் ரதீந்திரநாத் மயானத்தின் உள்ளே நுழைய முடியாதபடி கூடியிருந்த பெருங்கூட்டம் அவரைத் தடுத்துவிட்டது. இறுதியில், ஏற்கெனவே ரதீந்திரநாத் சொன்னதற்கிணங்க, ஹூக்ளி ஆற்றின் வழியாக முன்னதாகவே படகில் நீம்தலா மயானத்திற்கு வந்து சேர்ந்திருந்த ரவீந்திரரின் அண்ணன் சத்யேந்திரநாத் தாகூரின் பேரன் சுபிரேந்திரநாத் அவரது உடலுக்கு இறுதி மரியாதைகளை செலுத்தி தீமூட்டினார்.

இத்தகைய கும்பல் வெறியாட்டத்திற்கெல்லாம் மேலாக, நீம்தலா மயானத்தில் அவரது உடல் முழுமையாக எரிந்து சாம்பலாவதற்கு முன்பாகவே, கூடியிருந்த கூட்டத்தினரின் வெறி உச்சம் தொட்டது. எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்த உடலில் இருந்து எலும்புகளைப் பறிக்க, ஒருவரை ஒருவர் பார்த்துக் கத்தியபடியே போட்டியிட்டனர். இந்தக் கோரமான காட்சியை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்திநிகேதன் ஆசிரியரும் யூத அகதியுமான அலெக்ஸ் ஆரன்சன் ‘அந்தக் காட்சி எனக்குள் குலைநடுக்கத்தை ஏற்படுத்தியது; உண்மையிலேயே மயக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது’ என்று பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஓராண்டு உடல்நலம் குன்றியிருந்த ரவீந்திரருக்கு இடையறாது சேவை செய்த மருமகள் பிரதிமா தேவி, அவரது தனிச்செயலாளரின் மனைவி ராணி சந்தா, நண்பரின் மகள் மைத்ரேயி தேவி, மற்றொரு நண்பரின் மனைவி நிர்மல்குமாரி மகலனாபிஸ், ஒன்றுவிட்ட பேரனின் மனைவி அமிதா தாகூர் ஆகியோர் நெருக்கடியான இந்தக் காலப்பகுதி குறித்த தங்கள் நினைவலைகளை எழுதியுள்ளனர். ரவீந்திரர் இறுதி மூச்சை நிறுத்திய பிறகு, ஜொராசங்கோவில் நடைபெற்ற துயர சம்பவங்களைப் பற்றிய மனதை நெகிழவைக்கும் சித்தரிப்பு, மேற்கூறிய ஐந்து பேரில் அமிதா தாகூரின் எழுத்துக்களில் மட்டுமே மிகவும் கூர்மையாக வெளிப்பட்டிருந்தது. ‘பொறுமைமிக்க ரவீந்திரநாத்’ என்ற தலைப்பில் அமிதா தாகூர் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘அவர் நம்மிடமிருந்து மறைந்த அந்த நாளை நினைப்பதற்குக்கூட நான் விரும்புவதில்லை. எவ்வளவு சலசலப்பு, எவ்வளவு குழப்பம், எத்தகையதொரு பைத்தியக்காரத்தனம் அப்போது அங்கே ஆக்கிரமித்திருந்தது தெரியுமா? ஆனாலும், இந்தக் களேபரத்தில், அங்கே ஒரு துளிகூட துயரம் கண்ணுக்குத் தென்படவில்லை. அங்கு திரளாகக் குவிந்தவர்கள், உயிரற்ற அவரது உடலுக்கு கொஞ்சம்கூட மரியாதை தரவில்லை. எத்தகையதொரு துரதிர்ஷ்டம் பிடித்த ஒரு நாட்டில் அவர் பிறந்திருந்தார்! நாமெல்லாம் எவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவர்கள்!’ (அமிதா தாகூரின் எழுத்துக் குவியல் பக்.73)

மேற்கூறிய இந்தக் கட்டுரை, ரவீந்திரர் மறைந்து 21ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். இவ்வளவு காலம் கடந்தும்கூட, அன்றைய நிகழ்வுகள் அவர் மனதில் எவ்வாறு அழியாத ஒரு வடுவாக பதிந்துவிட்டுப் போயிருந்தது என்பதையே இந்த உணர்ச்சிமிகு வரிகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

கட்டுக்கடங்காத கூட்டம், இதுவரை அடைத்துவைத்திருந்த துயரத்தையெல்லாம் வெளிப்படுத்துவதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல வெடித்துக் கிளம்பியது. இவ்வாறு வெடித்தெழுந்த பேரலையை ஒரேநேரத்தில் கூட்டாக வெளிப்பட்ட ஒரு மனக்கோளாறு என்றே நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு தருணத்தில் ரதீந்திரநாத் நினைவுகூர்ந்தார்: ‘அசாதாரணமான, இதுவரை கேள்விப்பட்டிராத ஓர் அனுபவமாகவே அது இருந்தது. தங்களின் பேரன்பிற்குரியவரை இறுதியாக ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற வெறித்தனமான உந்துதலுக்கு ஆட்பட்ட பல லட்சக்கணக்கானோர், அதேநேரத்தில் மனதின் சமநிலை தவறியவர்களைப் போல, முற்றிலும் பகுத்தறிவற்றவர்களைப் போல அப்போது நடந்து கொண்டனர்.’

பின்னாளில் வங்காளத்தின் மிகச்சிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக வெளிப்பட்ட மிருணாள் சென் அப்போது கல்கத்தா நகரத்திற்குப் புதியவர். பரீத்பூர் பகுதியை (இன்றைய வங்கதேசத்தில் உள்ளது) பிறப்பிடமாகக் கொண்ட அவர், கல்கத்தாவிலிருக்கும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் மாணவராக சேர்ந்திருந்தார். ரவீந்திரரின் மறைவுச் செய்தியை அறிந்த கல்கத்தா நகரத்தின் கல்லூரிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் பெருந்திரளாக ஜொராசங்கோவை நோக்கிப் படையெடுத்தனர். ஊர்வலத்தை நன்றாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிருணாள் சென் நேரடியாக நீம்தலா மயானத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். எனினும், அங்கு பணியில் இருந்த காவலர் படை மயானத்தின் முகப்பின் இருபுறமும் தடுப்புகளை வைத்து, இறுதி ஊர்வலம் எளிதாக மயானத்தில் நுழைய வசதி செய்யும் வகையில் மக்களை இருபுறமும் வரிசையில் நிற்குமாறு ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து அவர் பின்னர் எழுதிய ஒரு கட்டுரையில், தான் நின்றிருந்த தடுப்புக்கு எதிர்ப்புறத்தில் வேட்டியணிந்த ஓர் இளைஞன் நின்று கொண்டிருப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்: ‘கைகளில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அவர் நின்று கொண்டிருந்தார். அது அவரது குழந்தையாகவும் கூட இருக்கலாம். அந்தக் குழந்தை ஒரு வெள்ளைத் துவாலையில் சுற்றப்பட்டிருந்தது. இறந்துபோயிருந்த அந்தக் குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக அவர் எடுத்து வந்திருக்கக் கூடும். ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் அவர் ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டிருக்கிறார்? வேறெந்த சுடுகாட்டிற்காவது அவர் குழந்தையை எடுத்துப் போயிருக்கலாமே! என்று நான் அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெருங்கூட்டம் வந்திறங்கியது. அதுவும் பல்வேறு திசைகளிலிருந்து… அந்தச் சின்னஞ்சிறு மயானத்தின் மீது தாக்குதல் தொடுக்கப் பெரும்படை புறப்பட்டதுபோலத் தோன்றியது. அவ்வளவுதான். காவல்துறையின் தடுப்புகள் எல்லாம் சின்னாபின்னமாகிப் போயின. எல்லாமே கட்டுக்கடங்காமல் போனது… அந்த நெரிசலில் யாராவது இறந்து போயிருப்பார்களா? யாருக்குத் தெரியும்? அது சரி, அந்தக் குழந்தை என்னவாயிற்று? திடீரென்று வெள்ளமெனப் பாய்ந்து வந்த அந்த மனித வெள்ளத்தில் அந்தக் குழந்தை மட்டுமல்ல; அந்த இளைஞனும் என் பார்வையிலிருந்து காணாமல் போயிருந்தார்.’

பின்னாளில் 1943ஆம் ஆண்டின் வங்காளப் பஞ்சம் குறித்த ஒரு திரைப்படத்தை அவர் எடுத்தார். அதற்கு ‘பைஷே ஷ்ராவண்’ என்று அவர் தலைப்பு சூட்டியிருந்தார். வங்காளிகளின் ஆண்டு நிகழ்ச்சி நிரலில் ‘பைஷே ஷ்ராவண்’ என்று குறிப்பிடப்படும் ஷ்ராவண மாதத்தின் 22ஆம் நாள் என்பது ரவீந்திரரின் நினைவு தினத்தை மட்டுமே குறிப்பதாக மாறியிருந்த அத்தருணத்தில், அவரது இந்தத் தலைப்பினை எல்லாப் பிரிவினரும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். எனினும், மிருணாள் சென் படத்தின் தலைப்பை மாற்ற ஒப்புக் கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரையில், வங்காளப் பஞ்சம் எவ்வாறு மனிதனைத் தலைகீழாக மாற்றுகிறது என்பதை தெரிவிக்கும் வகையில் அமைந்த இந்தக் கதையின் நாயகன் அந்த நாளில்தான் திருமணம் செய்து கொள்கிறான். அதன்பிறகு அவனது வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே கதை என்ற நிலையில், அந்தத் திருமணம் நடைபெறும் ஷ்ராவண மாதத்தின் 22ஆம் நாளை தலைப்பாக வைத்துள்ளதாக அவர் உறுதிபடக் கூறிவிட்டார் என்பதும் பின்னாளைய வரலாறு.

நான் மேற்கு வங்க அரசில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கல்கத்தாவில் பவானிபூரில் இருந்த என் சக அலுவலர் அசீஸ் பிரசாத் சக்ரவர்த்தியின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவரது தந்தை குலேஷ் பிரசாத் சக்ரவர்த்தி ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. அவர் அப்போது திரிபுராவில் பணிபுரிந்து வந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கல்கத்தாவின் பழைய வரலாற்று நிகழ்வுகளை என்னிடம் நினைவு கூர்வது வழக்கமாக இருந்தது.

ரவீந்திரர் மறைந்த அன்று நடந்த நிகழ்வுகளையும் அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ரவீந்திரரின் இறுதிக் கணங்களைச் சித்தரிக்கும் இந்த இயலை நான் எழுதத் தொடங்கியபோது, அவர் என் நினைவிற்கு வந்தார். உடனேயே என் நண்பர் அசீஸ் சக்ரவர்த்தியிடம் அவரது தந்தையிடம் மீண்டும் விசாரித்து அன்றைய நினைவுகளை எழுதியனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தேன். தற்போது 99 வயதைக் கடந்து நூறாண்டை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் திரு. குலேஷ் சக்ரவர்த்தி எனது வேண்டுகோளுக்கிணங்க தன் நினைவுகளைக் கீழ்கண்டவாறு பதிவுசெய்து அனுப்பியிருந்தார்:

‘அந்த நாள் 1941 ஆகஸ்ட் 7 (பைஷே ஷ்ராவண்) கல்கத்தா பவானிபூரில் இருந்த அசுதோஷ் கல்லூரியில் வகுப்புகள் வழக்கம்போல் காலை 9 மணிக்குத் தொடங்கின. என்றாலும் அன்றைய தினம் சற்று அமைதியற்ற நிலையில்தான் இருந்தது. அதற்கு முந்தைய நாள்தான் ஜொராசங்கோ தாகூர் இல்லத்தில் மிகவும் மோசமான உடல்நிலையோடு ரவீந்திரர் போராடிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் பொதுவெளியில் உலவத் தொடங்கியிருந்தது. கல்லூரியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருமே ஒருவித அமைதியற்ற மனநிலையில்தான் இருந்தனர். அந்தக் கல்லூரியில் ஐஎஸ்சி பிரிவில் முதலாண்டு மாணவராக இருந்த குலேஷ் பிரசாத் சக்ரவர்த்தியின் மனநிலையும் அவ்வாறேதான் இருந்தது.

காலையில் சுமார் 10.30 மணிக்கு ரவீந்திரர் மறைந்துவிட்டதாகச் செய்தி பரவியது. உடனேயே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்லூரி மூடப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களுமாக ஊர்வலமாக ஜொராசங்கோவை நோக்கிக் கிளம்பினர். குலேஷ் பிரசாத்தும் அவர்களோடு இருந்தார். இந்த ஊர்வலம் சென்றடைவதற்கு முன்பாகவே, ஜொராசங்கோவின் முன்பாக ஏராளமான பேர் மறைந்த கவிகுருவிற்கு அஞ்சலி செலுத்த திரண்டிருந்தனர். அன்று காலையிலிருந்தே அனைவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பியிருந்தன. திரண்டு வந்த கூட்டம் கட்டுக்கடங்காத நிலைக்குச் செல்வதைக் கண்ட தாகூர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்குள்ளே மக்கள் வருவதைத் தடுக்க முயன்றனர். வாக்குவாதம் முற்றியது. ‘கவிகுரு உங்கள் குடும்பத்திற்கு மட்டும் உரியவரல்ல! அனைத்து மக்களுக்குமானவர்!’ என்று கூடியிருந்தவர்கள் உரக்கக் குரலெழுப்பினர்.

மறுபுறத்தில் அந்த வீட்டின் முன்புறப் பகுதியில் இருந்த விரிந்து பரந்த இடத்தில் அபனீந்திரநாத் தாகூரும் நந்தலால் போஸும் ரவீந்திரரின் உடலை நீம்தலா சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கென ஒரு கட்டிலை தச்சர்களின் உதவியுடன் செய்து கொண்டிருந்தனர். இதற்கு நடுவே, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கிடையே மெதுவாக நகர்ந்து குலேஷ் பிரசாத் முதல் மாடிக்குச் சென்றார். ஒரு பெரிய அறையின் முன்வராந்தாவில் வைக்கப்பட்டிருந்த ரவீந்திரரின் உயிரற்ற உடலைக் கண்டு மரியாதை செலுத்தினார். படிப்படியாக கும்பல் அதிகரித்துக் கொண்டே வந்தது. குலேஷ் பிரசாத் வீட்டின் முன்பகுதிக்கு வரும்போது, திரண்ட கும்பலின் அழுத்தம் தாளாமல் ஜொராசங்கோ வீட்டின் முன்புறம் இருந்த இரும்பினாலான வாயிற்கதவு உடைந்து போனது. மக்கள் திரள் வீட்டிற்குள்ளே வரத்தொடங்கியது. இந்த நிலையில் ஒருவழியாக குலேஷ் பிரசாத் ஜொராசங்கோவை விட்டு வெளியே வந்து, பவானிபூரில் உள்ள தன் வீட்டிற்கு கால்நடையாகவே வந்து சேர்ந்தார்.’

எல்லைகளைக் கடந்த ஓர் உலகத்தை ஒன்றிணைக்கப் பாடுபட்ட, மனித குலத்தின் மேன்மையை உயர்த்த விரும்பிய, இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிய, நம் மண்ணின் மைந்தரான ரவீந்திரர் தன் மூச்சை நிறுத்திய பிறகு, அவரது பங்களிப்பு பற்றியோ, சிந்தனைகள் பற்றியோ சற்றும் புரிதல் இல்லாத ஒரு பெருங்கூட்டத்தின் கரங்களில் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டார் என்பதை அறிந்துகொள்ளும்போது, அவரது வாழ்நாள் தவம் முழுவதும் வீணாகிப் போனதோ என்ற எண்ணமே நமக்குள் எழுகிறது. ஒரு கவியரசருக்கே உரிய மரியாதையுடனும் மாண்புடனும் நடக்க வேண்டிய அவரது இறுதிப்பயணம் இவ்வாறு ஓர் அவக்கேடாக முடிந்தது என்பது அவரை நன்கறிந்த அனைவருக்குமே மிகப்பெரும் அவமானம்தான்.

வெகு காலத்திற்கு முன்பு அவர் எழுதிய ஒரு கவிதைதான் இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது:

இந்தப் பேரழகான உலகத்தில் நான் இறக்க விரும்பவில்லை;
மனித இனத்திடையே வாழ்ந்திருக்கவே நான் விரும்புகிறேன்…
சூரியனின் ஒளிக்கற்றைகளிடையே, பூத்துக் குலுங்கும் இந்தப் பூங்காவனத்திலே
வாழும் ஓர் இதயத்திற்குள் எனக்கோர் இடம் கிடைத்தால்… (இந்தப் பேரழகான…)
….
மனிதனின் மகிழ்ச்சியை, துயரத்தைத் தெரிவிக்கும் பாடல்களை
புனைந்துகொண்டே இருப்பதன் மூலம்
நிரந்தரமானதோர் இல்லத்தை என்னால் உருவாக்க முடியுமானால்… (இந்தப் பேரழகான…)

ரவீந்திரரின் இந்த விருப்பம் ஒருவகையில் நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அவர் உண்மையிலேயே நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனைத்து மக்களிடையேயும், வாழும் இதயங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்களின் மகிழ்ச்சியும், துயரமும் நிரம்பிய அவரது பாடல்கள் அவரை ஒரு சிரஞ்சீவியாக மாற்றியுள்ளன.

அவரது எழுத்தை, கருத்தை அறிந்து நாம் வாழும் வரையிலும், அவரும் தன் இதயத்தின் இனிமையால் உருவாக்கியுள்ள இந்த பூமியில் என்றும் உயிர்த்திருப்பார்!

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *