தாகூரின் ஆழ்ந்த விருப்பங்கள் எப்படி நிறைவேறவில்லையோ, அதைப் போன்றே, தான் பெரிதும் நேசித்த சாந்திநிகேதனின் திறந்தவெளியில், பரந்து விரிந்த மரங்களின் குளிர்ந்த காற்றில் மிதந்தபடி இப்பூவுலகைக் கடக்க வேண்டும் என்ற அவரது இறுதி விருப்பமும்கூட நிறைவேறாமலே போனது.
எனினும், ரவீந்திரரின் பத்தாவது நாள் நீத்தார் கடன் ஆகஸ்ட் 17 அன்று சாந்திநிகேதனில் மிக அமைதியாக நடைபெற்றது. அன்றைய தினத்தை அவரவர் வீடுகளிலேயே அனுசரிக்குமாறும், எவரும் சாந்திநிகேதனுக்கு அன்றைய தினம் வரவேண்டாம் என்றும், ரதீந்திரநாத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னால் ‘மகரிஷி’ தேவேந்திரநாத்திற்கு மன அமைதியை வழங்கிய ஏழிலைப்பாலை மரங்களுக்குக் கீழே அமைக்கப்பட்ட மூங்கில் பந்தலில் தாமரை இலைகளும் பூக்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தபடி மிக நெருங்கிய நண்பர்களாலும் உறவினர்களாலும் ரவீந்திரருக்கு எளிமையாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
வழக்கம்போலவே, இந்த அஞ்சலி நிகழ்வும் ரவீந்திரர் எழுதிய ஒரு பாடலுடன் தொடங்கியது. இதன் சிறப்பு என்னவெனில், தாகூரின் விருப்பத்திற்கேற்ப இந்தப் பாடல் இப்போதுதான் முதன்முறையாக பொதுவெளியில் பாடப்படுகிறது. அவர் ஏற்கெனவே எழுதி, உலகப்புகழ் பெற்ற ‘அஞ்சல் நிலையம்’ என்ற நாடகத்தை புத்தாக்கம் செய்யும் முயற்சியில் 1939 டிசம்பரில் ரவீந்திரர் ஈடுபட்டு வந்தார். (உலகின் பல நாடுகளிலும் நிகழ்த்தப்பெற்ற இந்த நாடகம் பற்றிய மேல் விவரங்களை ரவீந்திரரின் நாடகங்கள் குறித்த இயலில் காணலாம்). இதில் அனைத்தும் துறந்த ஒரு முனிவர் (ஃபக்கீர்) வேடத்தில் அவர் நடிப்பதாக இருந்தது.
நாடகத்தின் நாயகனான அமல் என்ற சிறுவன் இறந்தபிறகு, மரணமெனும் அனுபவத்தின் தனிச்சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் அந்த முனிவர் பாடுவதற்கென புதியதொரு பாடலையும் ரவீந்திரர் அப்போது இயற்றியிருந்தார். எனினும் இந்த நாடகத்தின் புதுவடிவம் பல்வேறு காரணங்களால் அரங்கேறவியலாத சூழ்நிலை உருவானது. அதைத் தொடர்ந்து, இந்தக் குறிப்பிட்ட பாடலைத் தனது மறைவிற்குப் பிறகான அஞ்சலி நிகழ்வில் பாடவேண்டும் என்று ரவீந்திரர் கூறியிருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே இந்தப் பாடல் இந்த அஞ்சலி நிகழ்வில் முதன்முதலாகப் பாடப்பட்டது. அந்தப் பாடல் இதுதான்:
அமைதிப் பெருங்கடல் என் முன்னே
படகைச் செலுத்துவாய் மீகாமனே!
இப்போதுதான் நீ என் இணைபிரியாத் தோழன்
உன் மடியில் என்னை ஏற்றுக் கொள்!
முடிவேயில்லாத நமது பயணத்தில்
துருவ விண்மீன் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது!
விடுதலையைத் தருபவரே, என்னை விடுவிப்பீராக!
உந்தன் கருணையும் பொறுத்தருளலுமே
இந்தப் பயணத்தில் எந்தன் உணவாகட்டும்!
உறவின் பிடிகள் தெறித்து விழட்டும்!
விரிந்தகன்ற இந்தப் பேரண்டம் என்னைத்
தழுவிக் கொள்ளட்டும்!
துணிவற்ற இந்த இதயம்
எவருமறியாத மகத்தானவரை கண்டுணரட்டும்!
ரவீந்திரர் மறைந்த தருணத்தில் ஜவாகர்லால் நேரு சிறையிலிருந்தார். அவரது மறைவுச் செய்தியை மகள் இந்திராதான் நேருவிடம் கொண்டு சென்றார். அன்று இரவு (ஆகஸ்ட் 7) தன் நாட்குறிப்பில் நேரு இவ்வாறு எழுதியிருந்தார்:
‘குருதேவ் மறைந்து போனார். ஒரு யுகம் முடிந்துபோனதாகவே தோன்றுகிறது. அவர் இப்போது மறைந்தது ஒருவகையில் நல்லதும்கூட. உலகின்மீதும் இந்தியாவின்மீதும் கவியவிருக்கின்ற கொடூரங்கள் பலவற்றையும் அவர் காணாதிருப்பார். போதுமான அளவிற்கு அவர் பார்த்துவிட்டார்; முடிவற்ற சோகத்தையும் உணர்ந்து, நெகிழ்ந்து, மகிழ்ச்சியற்றவராகவும் அவர் மாறியிருந்தார். 80 வயது என்பது மரியாதைக்குரிய ஒரு மரணத்திற்கான வயதுதான். அதுவும் முழுமையான படைப்பூக்கம் நிரம்பிய ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து சென்றிருக்கிறார். செயலற்று, முடங்கி, ஒடுங்கிப் போவதை விட, தன் இறுதித் தருணம் வரை கவிதைகளை இயற்றும் திறனோடு மறைந்துபோவது மிகவும் மேலானது…
காந்தியும் தாகூரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருந்தபோதிலும், இந்தியாவிற்கேயுரிய தனித்தன்மையைத் தம்மிடத்தில் கொண்டவர்களாக அவர்கள் இருவருமே இருந்தனர். இந்தியாவின் மகத்தான மனிதர்களின் மிகநீண்ட வரிசையில் அவர்களின் இடம் தனித்துவமானது. ஒரே தலைமுறையில் இத்தகைய மாமனிதர்களை – அதுவும் நாடே கீழடங்கி நிற்கும் ஒரு தருணத்தில், அதை மேலெடுத்துச் செல்லும் திறமைமிக்க இரு மாமனிதர்களை – இந்தியாவினால் உருவாக்க முடிந்துள்ளது என்பது இத்தருணத்தில் வாழும் நம் அனைவருக்கும் பெருமிதம் தரும் ஒரு நிகழ்வே ஆகும். இவர்கள் இருவருமே இன்றைய உலகத்தின் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள் என்று மிக நீண்ட நாட்களாகவே நான் கருதி வந்திருக்கிறேன். உண்மையில், அதே வரிசையில், அவர்களைவிடத் திறமை வாய்ந்த, அவர்களைவிட அறிவுக்கூர்மை மிக்கவர்களும் உள்ளனர். உதாரணமாக, ஐன்ஸ்டைன். தாகூரைவிடச் சிறந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் இருக்கக்கூடும். ஆனால் முழுமையான ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்று உலகத்திலுள்ள மகத்தான மனிதர்களிடையே காந்தியும் தாகூரும் மனித உணர்வுகளில் தலைசிறந்த மனிதர்களாகத் திகழ்கின்றனர். இவ்விரு மாமனிதர்களோடு செயல்படுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு எத்தகையதொரு பேரதிர்ஷ்டம்!’
ரவீந்திரரின் பேரன்பிற்குப் பாத்திரமானவரும் ரவீந்திரரின் இசைப்பாடல்களை வேறெவருக்கும் முன்பாக வங்கத்தின் மூலைமுடுக்கெங்கும் எடுத்துச்சென்ற இசைவிற்பன்னரும், அவரது காலத்திலேயே ‘கலகக் கவிஞர்’ என்று புகழ்பெற்றவருமான காஜி நஸ்ருல் இஸ்லாம் அவரது மரணச்செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார்.
அயர்ந்துபோன அவர் உறங்கட்டும்!
யாரும் குரலெழுப்பாதீர்!
வாழ்நாளெல்லாம் வெளிச்சம் தந்த
அந்தக் கதிரவன் சற்றே உறங்கட்டும்!
அழாதீர்கள்! அழுது, அவரை எழுப்பிவிடாதீர்கள்!
அயர்ந்து போன அந்தச் சூரியன் சற்றே உறங்கட்டும்!’
என்ற கவிதையை அவர் உடனேயே எழுதினார். பின்னர், ‘ரவீந்திரர் இல்லாத உலகம்’ (ரொபி ஹரா) என்ற புகழ்பெற்ற பாடலை இயற்றி அவரே பாடிய வகையில் அவர் பணிபுரிந்துவந்த அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. இந்தப் பதிவு பின்னர் தனி ஒலித்தட்டாகவும் வெளியானது. ரவீந்திரரின் மறைவு குறித்து ‘அஸ்தமிக்கும் சூரியனை வணங்குகிறேன்!’ ‘மரணமில்லா ரவீந்திரர்!’ என்ற மேலும் இரண்டு கவிதைகளையும் அவர் எழுதினார். நகர மாந்தர்களின் சார்பாக நடைபெற்ற ரவீந்திரரின் அஞ்சலிக் கூட்டத்திற்கும் அவர் தலைமை வகித்தார். எனினும், இந்த மாபெரும் கவிஞரும்கூட, ரவீந்திரரின் மறைவிற்குப் பிறகு, ஒரு சில மாதங்களிலேயே உடல்நலம் குன்றி, பேச்சற்றவராய், பச்சிளம் குழந்தையைப் போல, இன்னும் சொல்லப் போனால், அருகிலுள்ள எவரையும் உணரமுடியாத நிலையில் அடுத்த 35 ஆண்டுகளை கழிக்க நேர்ந்தது மிகப்பெரிய சோகம் என்றே கூறவேண்டும்.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில் கவிஞர் ஜதீந்திரநாத் சென்குப்தா இவ்வாறு எழுதியிருந்தார்:
அந்த மாபெரும் தோல்வியைக் கண்டு
தூரத்தே வெற்றிக் களிப்பில் எழுந்த
அந்த மட்டற்ற மகிழ்ச்சிக் குரல்
என் காதுகளில் விழுந்தது.
திடீரென்று பூக்களால் நிரம்பிய அந்த வாகனம்,
மரணத்தின் வெற்றித் தேர், என் கண்ணில் பட்டது.
மரணமே! உந்தன் அழகுதான் எவ்வளவு விசித்திரம்!
உந்தன் அலங்காரங்களும்கூட எந்தன் பார்வையில்
விசித்திரமாகத்தான் இருக்கிறது!
ரவீந்திரரின் மறைவு பற்றிய செய்தி, அப்போது பதின்பருவத்திலிருந்த, பின்னாளில் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞராக உருவெடுத்த நிரஞ்சன் பகத்தைத் (1926-2018) (தாகூரைப் பற்றி) தன் முதல் கவிதையை எழுத வைத்தது. அதைப் போன்றே, ‘மீராஜி’ என்ற புனைபெயரில் எழுதிவந்த உருதுக் கவிஞரான சனாவுல்லா சானி தர், ‘நவ்ஹா’ என்று அழைக்கப்படும், பாரம்பரியமான முஸ்லீம் ஒப்பாரிப் பாடல் ஒன்றை உருது மொழியில் இயற்றினார். இதில் அவர் ரவீந்திரரை விஷ்ணுவின் அவதாரம் என்று உருவகப்படுத்தியிருந்தார்.
ரவீந்திரரின் மறைவை அறிந்து இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் இருந்த பெருமக்கள் பலரும் தங்கள் அஞ்சலியை தெரிவித்தனர். அவர்களில் குறிப்பிட்ட ஒரு சிலரின் அஞ்சலி செய்தி மட்டுமே இங்கு தரப்படுகிறது.
‘ரவீந்திரநாத் தாகூரின் மறைவின் மூலம் நம் காலத்தின் மகத்தான கவிஞரை மட்டும் நாம் இழக்கவில்லை; மிகச் சிறந்த தேசியவாதியை, மகத்தான மனிதநேயரை இழந்து நிற்கிறோம். தன் வலுவான ஆளுமையை அவர் பதிவு செய்யாத எந்தவொரு பொது நடவடிக்கையும் இல்லை என்றே கூறவேண்டும். சாந்திநிகேதன், ஸ்ரீநிகேதன் ஆகியவற்றின்மூலம் நம் நாடு முழுவதற்குமே, இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுவதற்குமே, மகத்தானதொரு பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்’ என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார்.
எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் தன் அஞ்சலி செய்தியில் ‘மகத்தானதொரு தத்துவஞானியை, கவிஞரை, தேசியவாதியை இந்தியா உண்மையிலேயே இழந்து நிற்கிறது’ என்று கூறினார்.
‘அவரது ஞானம், அழகு, அறிவுக்கூர்மை, கேலி-கிண்டல், கவர்ச்சி, கருணைமிக்க ஆளுமை ஆகியவற்றின் மூலம் வாழ்நாள் முழுவதுமே நேசிக்கத்தக்க, தனிச்சிறப்பானதோர் ஆளுமையாக ரவீந்திரர் திகழ்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, நேர்த்தியானதொரு தொன்மமாக, ஒரு தேவதைக் கதையைப் போல, வருங்காலத் தலைமுறையினரிடையே அவர் மாறுவார். எனினும், அவரது பாடல்களோ, வசந்தகாலத்தின் முதல் பூக்களைப் போன்று புத்தம்புதியதாக, நிலவொளியினூடே காற்றில் எழுந்துவரும் கவர்ச்சிகரமான இசையைப் போன்று, எண்ணற்ற தலைமுறைகளை கடந்து, தொடர்ந்து நீடிக்கும்’ என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு குறிப்பிட்டார்.
இந்தியாவின் அன்றைய வைஸ்ராய் லின்லிக்தோ பிரபு தனது இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘புனிதமான வகையில் உருவாக்கப்பட்ட உயரிய இலக்குகளால் உந்தப்பட்ட நீண்ட, நெடியதொரு வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. வரவிருக்கும் பலப்பல தலைமுறைகளுக்கும் உத்வேகமூட்டும் உதாரணமாக அவரது வாழ்க்கை திகழும். தனது பன்முகத் திறமையின் மூலம், சாதனைகளின் மூலம் உலகத்தின் கண்களுக்கு முன்னால் தனது பெருமையை உயர்த்திய தனது மகத்தான மகன்களில் ஒருவரை இந்தியத்தாய் இழந்து நிற்கிறாள்.’
இந்தியாவின் தலைமை நீதிபதியும் மிகச்சரியாக ஓராண்டிற்கு முன்னால் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரவீந்திரருக்கு டி.லிட். பட்டத்தை வழங்கியவருமான சர் மவுரிஸ் கவ்யர் தனது இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியிருந்தார்: ‘பெருமைகள் நிரம்பிய ஆண்டுகளை நிறைவாகக் கழித்துவிட்டு அவர் நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றிருக்கிறார். மக்கள் அனைவருமே அவரது மறைவினால் துக்கமுற்றுள்ளனர். என்றாலும் தனது எழுத்துக்களின் மூலம் அவர் நம்மிடையே இப்போதும் வாழ்கிறார். தனது மறைவிற்காக யாரும் கண்ணீர் வடிப்பதை அவர் விரும்பமாட்டார் என்றே நான் கருதுகிறேன். அவரது வாழ்க்கைக்கும் போதனைகளுக்கும் சற்றும் பொருந்தாததாகவே அது இருக்கும். மனிதகுலத்தின் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் நன்கறிந்த, மனிதநேயம் மிக்கவராகவே அவர் விளங்கினார். கடைசியாக அவரைச் சந்தித்த தருணத்தில் உலக நடப்புகள் குறித்த மனவலியும் வருத்தமும் அவரை ஆட்கொண்டிருந்தது. எனினும் இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதில் சற்றேனும் ஐயமற்றவராக, துணிவுமிக்கவராக அவர் இருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்…’
வங்காள ஆளுநரான சர் ஜான் ஆர்தர் ஹெர்பர்ட் தன் இரங்கல் செய்தியில் ‘சக மனிதர்களுக்கான சேவையின்மூலம் மிக நீண்ட, தனிச்சிறப்பான செயல்பாட்டை மேற்கொண்டு வந்த மகனை வங்காளம் இழந்து நிற்கிறது. ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் வங்காளி இலக்கியத்திற்கு செறிவூட்டியதோடு, அவரது எழுத்துக்கள் அவருக்கும், அவர் பிறந்த நாட்டிற்கும் உலகப் புகழைப் பெற்றுத் தந்தன. அவரது உன்னத லட்சியங்கள் எவ்வகையிலும் அவரது இலக்கிய சாதனைகளுக்குக் குறைந்தவையல்ல. வரும் தலைமுறையினருக்கான மகத்தானதொரு முன்னுதாரணமாக அவர் என்றும் வாழ்வார்’ என்று கூறியிருந்தார்.
வங்காள பிரதமரான ஃபஸ்லுல் ஹேக் தன் இரங்கல் செய்தியில் ‘சந்தேகத்திற்கிடமின்றி நவீன காலத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான தாகூரின் இழப்பினை வங்காள இலக்கிய உலகம் அவ்வளவு விரைவில் நிரப்ப இயலாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
‘இந்தியாவின் சூரியனான (பாரத் பாஸ்கர்) ரவீந்திரநாத்தின் மறைவின் மூலம் இந்தியா தனது மகத்தான, உன்னதமான மகனை இழந்து நிற்கிறது. அவரது உன்னத லட்சியங்களும் செறிவான பங்களிப்புகளும் என்றும் நிலைத்துநின்று நாட்டிற்கு வழிகாட்டும்’ என்று திரிபுரா மகாராஜா கிஷோர் மாணிக்ய தேவ்பர்மன் குறிப்பிட்டார்.
‘எனது பெருமதிப்பிற்குரிய நண்பரின் இழப்பின்மூலம் இந்தியா தனது தலைசிறந்த மகனை இழந்து நிற்கிறது. உலகமோ கணக்கிடவொண்ணாத இழப்பிற்கு ஆளாகியுள்ளது’ என்று பீதாபுரம் மகாராஜா ராவ் வேங்கட குமார மகிபதி சூர்யா ராவ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.
‘கண்ணீரில் இருவகை உண்டு. ஒன்று, வாழ்க்கையின் பொதுவான போக்கில் எவராலும் சிந்தக்கூடிய கண்ணீர். மற்றொன்று, கடவுளிடமிருந்து வரும் கண்ணீர். இது ஒருவரது நெஞ்சின் அடியாழத்திலிருந்து, ஆத்மாவின் உயிர்ப்பிலிருந்து வெளிப்படுவதாகும். மனித இனத்தை மேம்படச் செய்வதற்காகவே வெளிப்படும் இந்தக் கண்ணீர் அனுமதிக்கத்தக்கது. இந்தத் தருணத்தில் நான் அத்தகைய கண்ணீரைத்தான் சிந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று குழந்தைக் கல்வியில் புதியதொரு பாதையை உலகிற்கு அறிமுகப்படுத்திய மரியா மாண்ட்டிசோரி குறிப்பிட்டிருந்தார்.
‘சமூகத்தில் பெண்களுக்குரிய இடத்தை நிலைபெறச் செய்ய, அவரது இடைவிடாத முயற்சிகளை இத்தருணத்தில் நாங்கள் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம். எழுத்துக்களில் மட்டுமே அவர் பெண்களை பெருமைப்படுத்தவில்லை. அவர்களின் உயர்வு, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான அவரது முயற்சிகள்தான் எங்களை முன்னேற்றப்பாதையை நோக்கி உத்வேகமூட்டி, வலுப்படுத்தின. விஸ்வபாரதியின் இலக்குகளில் அதுவும் ஒன்றாகவே இருந்தது. மகத்தான அறிஞரும், செயலூக்கமிக்க உழைப்பாளியும், இந்த நூற்றாண்டின் தலைவருமான நமது ரவீந்திரருக்கு எமது மரியாதைக்குரிய அஞ்சலியை இன்று தெரிவித்துக் கொள்கிறோம்’ என வங்காளப் பெண்கள் அமைப்பு கூறியிருந்தது.
‘கவிகுருவை உலகம் என்றும் இழக்க முடியாது. நாகரிகமும் பண்பாடும் நீடித்திருக்கும் வரையில், இந்திய நாடு என்ற ஒன்று இருக்கும்வரையில், அவர் தொடர்ந்து வாழ்வார்’ என அலிப்பூர் சிறையில் இருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்களது இரங்கல் செய்தியில் கூறியிருந்தனர்.
தனது சிறப்பிதழில் ரவீந்திரரின் மறைவுச் செய்தியை வெளியிட்ட வடக்கு கர்நாடக நகரமான தர்வார் நகரின் இலக்கியக் கழகம் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தது:
‘கிழக்கில் உதித்த சூரியன் வெகுவிரைவிலேயே தன் ஒளிக்கிரணங்களை விரிந்து, பரந்து வீசியதில் பல நூற்றாண்டுகளாக நாட்டில் தேங்கிக் கிடந்த இருள் சிதறி ஓடியது.
‘இந்தியாவின் பண்டைக் காலத்து முனிவர்களைப் போல, மகத்தான கவிஞர்கள், ஞானிகளைப் போல, ரவீந்திரருக்கும் முழுமையானதொரு வாழ்க்கையை இயற்கை வழங்கியிருந்தது. முற்றிலும் மதிப்பிற்குரிய, களங்கமற்றதொரு வாழ்க்கை அது. தன் 81வது வயதில் மறைந்த அவர், இத்தனை ஆண்டுகளுக்குள்ளாகவே, கேள்வியெழுப்பவியலாத அளவிற்குச் சாதனைகளைப் படைத்திருந்தார். ஏனெனில், அவரது விருப்பங்கள் அனைத்துமே புனிதமானவையாக இருந்தன. கவிஞர், நாவலாசிரியர், விமர்சகர், தத்துவஞானி, இசைவல்லுநர், நாடக ஆசிரியர், நடிகர், ஓவியர், கல்வியாளர், தேசபக்தர், மனிதநேயர், சர்வதேசவாதி, தீர்க்கதரிசி, வழிகாட்டி என அனைத்து வகையான செயல்பாடுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய ஒருவராக அவர் திகழ்ந்தார். பன்முகத்தன்மையிலோ அல்லது கணக்கிடவொண்ணாத சாதனைகளிலோ, அவருக்குச் சமதையாக, இன்னும் பலப்பல ஆண்டுகளுக்கு நாம் எவரையும் கண்டறிய முடியாது என்பது திண்ணம்.’
சென்னையிலிருந்து வெளிவரும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ரவீந்திரரின் மறைவு குறித்தும், பல்வேறு பிரமுகர்களின் இரங்கல் செய்திகளையும் மறுநாள் விரிவாக வெளியிட்டிருந்ததோடு, ‘கவிஞரும் தீர்க்கதரிசியும்’ என்ற தலைப்பில் ரவீந்திரரின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், பல்வேறு துறைகளில் அவரது பங்களிப்புகளையும் எடுத்துக்கூறிய ஒரு நீண்ட கட்டுரையையும், அவர் மறைந்த அடுத்த நாளே (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருந்தது. 1941 ஆகஸ்ட் 9 அன்று எழுதிய மிக நீண்ட, கவித்துவமானதொரு தலையங்கத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: ‘கவிஞரான தாகூர் உலகின் உடைமை; இந்தியா தன் வலிமையை உணர்ந்து கொண்டால், அதனால் என்ன செய்ய முடியும் என்பதற்கான அறிகுறியாகவும் உத்தரவாதமாகவும் அவர் இருந்ததோடு, தனித்தன்மை மிக்க அன்பு, நம்பிக்கை, தயாள குணம் ஆகியவற்றிற்கான புதியதொரு பாதையை நோக்கி உலகை வழிநடத்திச் செல்லுகின்ற தத்துவஞானியாகவும் செயல்வீரராகவும் தாகூர் விளங்கினார். நிமிர்ந்து நின்று, உலகத்தை நேருக்கு நேராக எதிர்கொள்வதற்கு இன்றைய இந்தியாவிற்கு கற்றுத் தந்த பெருமையையும் அவர் அண்ணல் காந்திஜியோடு பகிர்ந்து கொள்கிறார்.’
அதைப்போலவே, லண்டனிலிருந்து வெளிவரும் தி நியூஸ் க்ரானிகிள், டைம்ஸ், ராய்ட்டர் செய்தி நிறுவனம், தி அப்சர்வர், டெய்லி டெலிகிராஃப், மார்னிங் போஸ்ட், டெய்லி ஹெரால்ட், நியூயார்க் நகரிலிருந்து வெளிவரும் ஜுவிஷ் டெலிகிராஃபிக் ஏஜென்சி போன்ற பல பத்திரிக்கைகளும் ரவீந்திரரின் மறைவு குறித்த செய்திகளையும் அவரது சிறப்புகளை நினைவுகூர்ந்த தலையங்கங்களையும் வெளியிட்டன.
ரவீந்திரரின் மறைவுச் செய்தியை கல்கத்தா வானொலி நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்ததோடு, அவரது பாடல்களையும் தொடர்ந்து ஒலிபரப்பத் தொடங்கியது. கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மன், அமிர்த பஜார் பத்திரிகா போன்ற பல நாளிதழ்களும் ரவீந்திரரின் மறைவு குறித்த சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டதோடு, அடுத்தநாளன்று இறுதி ஊர்வலத்தின் ஏராளமான படங்களுடன் ரவீந்திரரின் மறைவுச் செய்தியையும் விரிவாக வெளியிட்டன.
அவரது கிராமப்புற மேம்பாட்டிற்கான முயற்சியின் அடையாளமான ஸ்ரீநிகேதனின் முதல் இயக்குநரும் நெருங்கிய நண்பருமான லியனார்ட் எல்மிர்ஸ்ட் தம்பதிகள், மேற்குலக இலக்கியவாதிகளிடம் அவரை அறிமுகம் செய்து, நோபல் பரிசு பெறுவதற்கு வழிகோலிய ஓவியரும் நண்பருமான வில்லியம் ரொதென்ஸ்டைன், தென் அமெரிக்காவில் அவரது புகழைப் பரப்பிவந்த விக்டோரியா ஓகாம்போ, சீனாவின் சியாங் கை ஷேக் தம்பதிகள், முகமது அலி ஜின்னா போன்ற எண்ணற்றவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் மனித குலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தும் செய்திகளை அனுப்பியிருந்தனர்.
அன்றைய சென்னை மாகாணத்தின் தலைமை வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், தியோசோஃபிகல் சொசைட்டியின் தலைவர் டாக்டர் ஜி.எஸ். அருண்டேல், கலாஷேத்ரா நிறுவனர் ருக்மணி தேவி ஆகியோரும் தங்களது இரங்கல் செய்திகளைத் தெரிவித்திருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே இருந்த கடற்கரையில் அன்றைய தினம் மாலையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பெருந்திரளான மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதைப்போன்றே, நகரத்தின் பல்வேறு கலாச்சார அமைப்புகளும் இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றின. நகரின் பல்வேறு கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ரவீந்திரருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அன்றைய தினம் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டன.
1961ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, வங்காள திரை உலகத்தின் முன்னோடி இயக்குநரான சத்யஜித் ரே உருவாக்கிய ஆவணப் படம், ரவீந்திரநாத் தாகூரின் பூதவுடல் இறுதிச் சடங்கிற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, எரியூட்டப்படும் காட்சியுடன் தொடங்கியது. கல்கத்தா நகரமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய காட்சியை நாம் அதில் காணலாம். இந்தக் காட்சியின் பின்னணியில், சத்யஜித் ரே, தனக்கேயுரிய ஆழமான குரலில், ஆங்கிலத்தில், அந்தக் காட்சியை கீழ்கண்டவாறு விவரித்திருப்பார்:
‘1941 ஆகஸ்ட் 7ஆம் நாள். கல்கத்தா நகரத்தில் மகத்தான ஒரு மனிதர் உயிர் நீத்தார். இப்போது அவரது பூதவுடல் காற்றில் கலந்துவிட்டது. என்றாலும், அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை, எந்தவொரு தீயினாலும் அழித்துவிட முடியாது. வார்த்தைகளாலும், இசையாலும், கவிதைகளாலும், கருத்துக்களாலும், புனிதமான நோக்கங்களாலும் நிரம்பி வழியும் அந்தப் பாரம்பரியம்தான் நம்மை வழிநடத்திச் செல்கிறது; நமக்கு இன்றளவும் உத்வேகம் அளிக்கிறது; வரும் நாட்களிலும் அவ்வாறேதான் இருக்கும். நாம் அனைவரும் பெரிதும் கடன் பட்டுள்ள அவரது நினைவிற்கு வணக்கம் செலுத்துவோம்.’
(தொடரும்)