Skip to content
Home » தாகூர் #43 – ‘விஸ்வ கவி’ எனும் உலகக் கவி

தாகூர் #43 – ‘விஸ்வ கவி’ எனும் உலகக் கவி

கீதாஞ்சலி

இந்த இயலிலிருந்து தொடங்கி, பல்வேறு துறைகளிலும் ரவீந்திரரின் பங்களிப்பு பற்றிய சுருக்கமானதோர் அறிமுகத்தை வழங்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

ஹங்கேரிய பெண் கவிஞரும் நாடக ஆசிரியருமான ஹன்னா செனேஷ் (இவர் நாஜி எதிர்ப்புப் படை வீரராக இருந்து 23 வயதில் கொல்லப்பட்டவர்) எழுதிய ஒரு கவிதையை இத்தருணத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்:

‘வானத்து விண்மீன்கள் வெகு காலத்திற்கு முன்பே மறைந்து போயிருப்பினும்
அவற்றின் ஒளியை இன்றும் நாம் பூமியில் காணலாம்.
போன்றே, இன்று உயிரோடு, நம்மோடு இல்லையெனினும்
தங்கள் அறிவுக் கூர்மையால் உலகிற்குத் தொடர்ந்து
ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கும் மகத்தான மனிதர்களும் உளர்.
முற்றிலும் இருள் கவிந்த இரவுகளில், அவர்களின் ஒளி மேலும் பிரகாசமாய்,
மனித இனத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.’

இவ்வகையில்தான் ரவீந்திரரின் எழுத்துகள் காலம் கடந்தும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த காலம் என்பது அறிவுப்பூர்வமான, இறையியல் ரீதியான, விடுதலை வேட்கை மிக்க உணர்வுகளை வெளிப்படுத்திய காலமாக இருந்தது. அவரது எழுத்துகள், இந்த உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவகமாய் திகழ்கின்றன. அவரது எழுத்துக்களின் வளர்ச்சிப் போக்கினை காணும்போது இந்த மூன்று இயக்கங்களின் தாக்கத்தையும் நம்மால் உணர முடியும்.

வங்காளி இல்லங்களில் வழக்கமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு சொலவடை உண்டு. ‘ரவீந்திரநாத், அவரது வாழ்நாளில் எழுதியவை அனைத்தையும் எவரொருவராலும் தன் வாழ்நாளுக்குள் படித்து முடித்துவிட முடியாது!’ முறையான பள்ளிக் கல்வியைக்கூட நிறைவு செய்யாதபோதிலும், அவரது படைப்புத்திறன் விரிந்து பரந்த ஒன்றாகத் திகழ்ந்தது.

ரவீந்திரரின் படைப்பாக்கத்தில் இருந்த பன்முகத்தன்மை, அபரிமிதமான அளவு ஆகியவை குறித்து மற்றொரு வங்காளி கவிஞரான புத்ததேவ் போஸ் தனது ‘ஒரு ஏக்கர் பசும்புல்’ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘அவரை பன்முகத்தன்மை கொண்டவர் என்று குறிப்பிடுவது பொத்தாம் பொதுவான ஒரு வார்த்தைதான்; அதைப் போன்றே அபரிமிதமான படைப்புகளை அவர் உருவாக்கினார் என்று கூறுவதும்கூட வேடிக்கையான ஒன்றுதான். இலக்கியத்தின் ஒவ்வொரு வடிவத்தையும், ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கி, பல லட்சக்கணக்கான பக்கங்களுக்கு அவரது எழுத்துகள் உள்ளன என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று என்றாலும், நூற்றுக்கணக்கான நீரோடைகளிலிருந்து வெளிப்பட்டு, நூற்றுக்கணக்கான தாள லயங்களோடு கீழ் நோக்கிப் பாய்கின்ற ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியின் ஆதார சுருதியாக அவர் விளங்கினார் என்பதுதான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.’

இதற்கு உதாரணமாக அவர் ஒரு நிகழ்வையும் சுட்டிக் காட்டியிருந்தார். ரவீந்திரர் உடல்நலமின்றி இருந்த ஒரு நேரத்தில், அவரைப் பார்க்க சாந்திநிகேதனுக்குப் போயிருந்தபோது, சற்றும் இடைவெளியின்றி ஒரு மணி நேரத்திற்கு மேல் ரவீந்திரர் அவருடன் பேசிக் கொண்டேயிருந்தார். பின்பு இந்தச் சந்திப்பு குறித்து அவர் எழுதிய குறிப்பில் ‘இவருக்கு உடல்நலம் இல்லையாம்! கொஞ்சம்கூட நம்ப முடியவில்லை!’ என்று எழுதிவிட்டு, அன்றைய தினம் ரவீந்திரர் பேசியதை அடிப்படையாகக் கொண்டு ‘இலக்கிய வரலாறு பற்றிய ஒரு சித்திரம்’, ‘இலக்கியம் தரும் மகிழ்ச்சி’ என்ற இரு கட்டுரைகளை தாம் உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மிகச் சிறு வயதிலேயே ரவீந்திரர் கவிதை எழுதத் தொடங்கியிருந்தார். அவரது வாழ்நாளில் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு மட்டுமே கிட்டத்தட்ட 60 தொகுதிகள் ஆகும். இவற்றில் இசைப் பாடல்கள், சானெட் (14 வரிகளைக் கொண்டது), தூது, இரக்கம், நாடகபாணியிலான தனியுரை, உரையாடல் அடங்கிய கவிதைகள், நீண்ட கவிதைகள், உணர்ச்சிபொங்கும் கவிதைகள், வசன கவிதைகள் எனப் பல்வேறு வடிவங்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி சோதனை முயற்சிகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அவரது படைப்பூக்கம் எத்தகையதாக இருந்ததெனில், மிக நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதிய கவிதையைப் புதியதொரு பார்வையில் மாற்றி எழுதுவது; கவிதையாக முதலில் உருவானதை ஓர் இசைப் பாடலாக அல்லது ஒரு நாடகமாக மாற்றுவது; வசனங்கள் நிரம்பிய நாடகமாக இருந்ததை ஓர் இசை நாடகமாக அல்லது ஒரு நாட்டிய நாடகமாக மாற்றுவது என்று தன் எழுத்துகளை அவர் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருந்தார். அதற்கான ஓர் உதாரணம்தான் 1912ஆம் ஆண்டில் அவர் எழுதி அரங்கேறிய, அஞ்சலகம் (டாக் கர்) என்ற உலகப் புகழ்பெற்ற நாடகத்தினை 1939இல் முற்றிலும் புத்தாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது.

தொடக்க காலத்தில் இயற்கை, பிரம்ம சமாஜ இறையியல் பாடல்கள் என்ற வகையில் எழுதிக்கொண்டிருந்த ரவீந்திரர், அதே நேரத்தில் சம கால நடப்புகளையும் கவனத்தில் கொண்டிருந்தார் என்பதற்கும் உரிய சான்றுகள் உள்ளன. 1877ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் ’இந்தியாவின் பேரரசி’ என்ற பட்டம் விக்டோரியா மகாராணிக்குச் சூட்டப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு எதிராக 1857இல் வெடித்தெழுந்த, முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்பட்ட, சிப்பாய்களின் எழுச்சி இறுதியில் மிருகத்தனமாக நசுக்கப்பட்டபோதிலும், அதிகாரபூர்வமாக இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய ஆட்சி தன்கையிலெடுத்துக் கொண்டது. அதை உறுதிப்படுத்தும் நிகழ்வே இந்தப் பட்டம் சூட்டல்.

அத்தருணத்தில், தாகூர் குடும்பத்தின் நான்கு பிரிவுகளில் முதல் பிரிவாகக் கருதப்படும் பாதுரியாகட்டா பிரிவைச் சேர்ந்த சவுரீந்திர மோகன் தாகூர் (1840-1914), விக்டோரியா மகாராணியின் பதவியேற்பைக் கொண்டாடும் வகையில் இயற்றிய ஒரு பாடலில் அவரை (விக்டோரியா மகாராணியை) ‘ராஜராஜேஸ்வரி’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஒரு மாதம் கழித்து, கல்கத்தாவில் நடைபெற்ற ‘இந்து மேளா’வில், அப்போது 16வயது கூட நிறையாத, ஜொராசங்கோ பிரிவைச் சேர்ந்த ரவீந்திரர், ‘டில்லி தர்பார்’ என்ற தலைப்பில் ஒரு கவிதையை அரங்கேற்றினார். அதில்:

‘யார் வேண்டுமானாலும் பிரிட்டிஷாரின் புகழைப் பாடட்டும்;
நாம் அதைச் செய்ய வேண்டாம்.
மீதமிருப்பது ஒரு சிலரே ஆனாலும், வாருங்கள்
நாம் வேறு வகையான பாடலைப் பாடலாம்!’

என்று ரவீந்திரர் பதிலடி தந்திருந்தார்.

கிட்டத்தட்ட அனைத்து வகையான இலக்கிய வடிவங்களையுமே அவர் கையாண்ட போதிலும், அவரது அடிப்படையான கருவி என்பது பாடலாக உருவெடுக்கும் சாத்தியமுள்ள கவிதையாகவே இருந்தது. அவரது கலை ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவை இருந்தன. அவரது இதர படைப்பாக்கச் செயல்பாடுகள் அனைத்தும் இதிலிருந்தே வெளிச்சம் பெற்றன எனலாம். மைக்கேல் மதுசூதன் தத் போல மிக நீண்ட காவியம் எதையும் அவர் படைக்கவில்லை. கிட்டத்தட்ட அதற்கு விதிவிலக்காக, ‘கனவிலிருந்து விழித்தெழுந்த வசந்தம்’ என்ற அவரது ஒரே ஒரு கவிதைதான் 201 வரிகளிலிருந்து 267 வரிகளாக வளர்ந்து, பின்னர் காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு, இறுதியில் 43 வரிகளில் வந்து நின்றது. ‘ஒரு விண்மீனின் தற்கொலை’, ‘ராகுவின் காதல்’ போன்ற அவரது தொடக்கக் கவிதைகள் காதல் ரசம் ததும்பியவையாக அமைந்திருந்தன.

எனினும், அவரது வார்த்தையின்படியே, இந்த இரு கவிதைகளுக்கும் இடைப்பட்டதொரு காலப்பகுதியில், அதாவது 1882இல் கல்கத்தாவில் இருந்த ஒரு வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த தருணத்தில், ‘தன் கண்களின் முன்னால் அதுவரையில் இருந்துவந்த ஒரு திரை விலகியது போன்ற உணர்வு ஏற்பட்டு, தன் கண் முன்னாலிருந்த உலகத்தைப் புதியதொரு வெளிச்சத்தில் காட்டுவதாக’ உணர்ந்தார். அந்த வீட்டிற்கு எதிரே இருந்த ஒரு குடிசைப் பகுதியில் பால் கறக்கும் ஒரு பெண்மணி, உடையேதுமின்றி அங்குமிங்குமாக ஓடும் ஒரு குழந்தைக்கு உணவூட்ட முனையும் ஒரு தாய் என இதுவரை தென்படாத காட்சிகள் எல்லாம் அவரது கண்களுக்குத் தென்பட ஆரம்பித்தன. அதுவரையில் இருந்த மனத்தளைகளை எல்லாம் அறுத்தெறிந்த வகையில், ஒரு நீரூற்று மிகுந்த வேகத்தோடு தன்னிலிருந்து வெளிப்படுவதைப்போல அவர் உணர்ந்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு உருவான கவிதைகள் அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவனவாய் திகழ்ந்தன. அவற்றின் தொகுப்புதான் ‘பிரபாத் சங்கீத்’ (அதிகாலை நேரத்து இசை) என்பதாகும்.

1884இல் வெளிவந்த ‘பானுசிங்கா தாகூரேர் பாடாவளி’ என்ற கவிதைத் தொகுப்பு பிரஜாபுலி மொழியில் மத்திய காலத்து கவிஞர் வித்யாபதியின் எழுத்துகளில் வெளிப்பட்ட வைஷ்ணவ பக்திச் சுவையை பிரதிபலிப்பதாக இருந்தது. ராதா – கிருஷ்ணனின் காதலை எடுத்துக்கூறும் இதேபோன்ற பாடல்கள் பின்னாளிலும் அவரிடமிருந்து வெளிப்பட்டன. எனினும் 1890இல் வெளியான ‘மானசி’ (மனதில் நிற்கும் பெண்) தொகுப்பு உயிரோட்டமான வரிகளைப் புதிய தொனியில் வெளிப்படுத்தியது. காதல் ரசத்தோடு கூடவே தத்துவ விசாரணைகளையும் அது முன்வைத்தது. இத்தொகுதிக்கு வழங்கிய முன்னுரையில் நம்பிக்கை, மொழி, அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியதோர் உருவத்தைத் தன் மனதில் உருவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தன் படைப்பூக்கத் திறனை தெய்வீகம் பொருந்திய ஒரு கலைஞனாக மாற்றுவதன் காரணத்தை அவர் ‘பாலகா’வில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘பாடப் பரிசளித்தாய் அந்தப் பறவைக்கு, அதுவோ
ஒரே பாடலைத்தான் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருக்கிறது…
எனக்கோ பேசக் குரலளித்தாய், நான் இப்போது
சற்றே கூடுதலாக உனக்குப் பரிசளிக்கிறேன்
என்னில் உதித்த பாடல்களை நானே பாடுகிறேன்…’

’மானுஷேர் தர்மா’ என்ற தலைப்பில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய ஓர் உரையின் இறுதிப் பகுதியில் வழங்கிய கவிதையில் படைத்தவனுக்கும் படைப்பிற்கும் இடையே உள்ள சமநிலையை வெளிக்கொண்டு வந்தார். மனித வெளிப்பாட்டில்தான் தெய்வீகம் தன் வெற்றியைப் பெறுகிறது. இதை ரவீந்திரர் எளிய, சாதாரண வாழ்க்கைக்கும் விரிவுபடுத்தினார். ‘துதிப்பாடல்களிலும், வணங்குதலிலும், பக்தியிலும் கடவுள் வசிப்பதில்லை; மாறாக, உடல்வருந்தி உழைப்போரின் வாழ்க்கையில்தான் அவன் வசிக்கிறான்’ என்பதை அவர் வலியுறுத்தினார்.

1900லிருந்து தொடங்கி தன் மனைவி மிருணாளினி, இரண்டாவது மகள் ரேணுகா, தந்தை ‘மகரிஷி’ தேவேந்திரநாத், இளைய மகன் ஷமீந்திரநாத் என ஒரு பத்தாண்டு காலத்திற்குள் நெருங்கிய உறவுகளை அவர் தொடர்ந்து இழக்க நேர்ந்தபோது வெளிப்பட்ட கவிதைகள், இடைவிடாது வந்துகொண்டேயிருந்த துயரத்தைத் தாங்கிய வகையில், இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவை எதுவும் சீர்குலைக்காது என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. வாழ்க்கை எனும் அரண்மனை வாயிலை நோக்கிய பாதையில் நின்று கொண்டிருக்கும் மானிடம் குறித்த காடி ஓ கோமள் (1886) என்ற கவிதைத் தொகுப்புதான் கவிதை குறித்த தனது பார்வை முதிர்ச்சியடையும் முக்கிய தருணமாக அமைந்திருந்தது என்று அவரே குறிப்பிட்டிருந்தார். மானசி (1890) நிவேத்யா, கீதாஞ்சலி, கீதிமால்யா, கீதாலி, கேயா போன்ற தொகுதிகள் இதற்கு சான்றுகளாகத் திகழ்கின்றன.

அதேநேரத்தில் தன்னைச் சுற்றியுள்ள உலகம் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை உள்வாங்கி அதன் நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையிலான கவிதைகளையும் அவர் 1920களுக்குப் பிறகு தொடர்ந்து எழுதிவந்தார். 1920களிலிருந்து தொடங்கி 1934வரை அவர் மேற்கொண்ட பன்னாட்டுப் பயணங்கள் தந்த அனுபவங்கள் அவரை முற்றிலும் புதிய விஷயங்களைக் கவிதைகளில் முன்வைக்கத் தூண்டின. இதில் குறிப்பிடத்தக்க படைப்பாகத் திகழ்வது வனவாணி (கானகத்தின் குரல்) என்ற கவிதைத் தொகுப்பாகும். சுற்றுச்சூழலின் பாதுகாப்பு குறித்த கவலையை அந்நூல் சொற்சித்திரமாக வெளிப்படுத்தியிருந்தது.

அதேபோன்று பெண்களின் முன்னேற்றம் குறித்த பாடல்களை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார். பெண்களே இயற்கையின் ஆதார சுருதி என்பதைப் பல்வேறு கவிதைகளின்மூலம் அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் இறுதிக் காலத்தில், குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் விளைவாக, ஆளும் பிரிட்டிஷாரின் பகாசுர பசியின் காரணமாக, இந்தியா தன் இயற்கை வளங்களைப் பறிகொடுத்து, மக்களிடையே துயரத்தையே அதிகரித்துக் கொண்டிருந்த தருணத்தில், சற்றும் தயக்கமின்றி அதற்கெதிராகக் குரல்கொடுக்கும் முதல்வராகவும் அவர் இருந்தார்.

‘அபரிமிதமான செல்வத்திற்கு அடியில் தேங்கிக் கிடந்த
கொலைப்பட்டினியாக, அரைப்பட்டினியாக இருப்போரை
பசித்தீ விழுங்கிக் கொண்டிருந்தது
தாகம் தணிக்கும் தடாகங்கள் சீர்கெட்டு வற்றிப் போயிருந்தன
குளிருக்கு ஏற்ற உடையின்றி உடல்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன
மரணத்தின் கதவுகள் விரியத் திறக்கத் தொடங்கின…’

இந்திய சமூகத்தில் நிலவும் மிக மோசமான பிரிவினைகளைக் கண்டித்தும் அவர் குரலெழுப்பினார்:

‘சகமனிதனின் தொடுதலைப் புறக்கணிப்பதன் மூலம்,
மனிதநேயமிக்க கடவுளை நீங்கள் புறமொதுக்கிறீர்கள்
அவரது கோபமோ உங்களை பஞ்சத்தின் கதவுகளுக்கு முன்னால் நிற்க வைக்கும்.
சோற்றையும் தண்ணீரையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வைக்கும்.
அனைத்து வகையான அவமானங்களுக்கிடையே
உங்கள் அனைவரையும் அது சமநிலைப்படுத்தும்’

மனித இனத்தின் பொதுத்தன்மையே வாழ்க்கையை முன்னகர்த்துகிறது என்பதை வலியுறுத்தும் பாடல்களையும் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்:

‘நகரங்களிலும் சமவெளிகளிலும் அவர்கள் உழைத்துக் கொண்டேயிருந்தனர்…
அவர்களின் கூச்சலில், குரலெடுப்பில் மகிழ்ச்சியும் துயரமும் நிரம்பியிருந்தன
அந்தக் குரல்கள்தான் வாழ்க்கையின் மகத்தான மந்திரமாய் இருக்கின்றன…’

தேசம் என்ற பெயரிலும், சமூகம் என்ற பெயரிலும், பண்பாடு என்ற பெயரிலும் மனிதர்களை ஒருவரிலிருந்து மற்றொருவரைப் பிரித்து வைக்கின்ற எல்லைக்கோடுகள் என்ற அம்சம் ரவீந்திரரின் சிந்தனையையும் கவிதையையும் தொடர்ந்து ஆட்கொண்டு வந்துள்ளது. இத்தகைய வேறுபாடுகளின் இறுக்கத்திலிருந்து வெற்றிகரமாக மீள்வதற்கு, அவற்றுக்குப் பதிலாக பகுத்தறிவு, அன்பு, அழகியல் ஆகியவற்றை அவர் முன்வைத்தார். காலனிய ஆட்சியின் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு கொண்டவராக இருந்த அவர், நவீனத்தை நோக்கிய இந்தியாவின் நகர்விற்குத் தடையாக நிற்கின்ற, மதரீதியான வெறுப்புணர்வு, சாதி, வறட்டுத்தனமான தத்துவ ஈர்ப்பு போன்ற பிரச்சனைகளை உள்ளடக்கிய அதன் உள்ளார்ந்த செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கொண்டவராக இருந்தார். இந்தப் பிரச்சனைகளில் பலவும் இன்றும்கூட நம்மை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், இதுகுறித்த ரவீந்திரரின் எழுத்துகளை மீண்டும் தேடிச்சென்று அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, அவரது எழுத்துகளில் சுமார் 40 சதவீதம் ஆங்கிலத்தில் தோன்றியவை. ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தன் தாய்மொழியான வங்காளியிலேயே படைப்புகளை உருவாக்கியவர் என்பதைக் கருதும்போது, அவரது நேரடி ஆங்கிலப் எழுத்துக்களின் பங்கு ஒருவகையில் மிக அதீதமான ஒன்று எனவே கருதவேண்டும். அதுவும் கீதாஞ்சலியிலிருந்து தொடங்கி அவரது தொடக்ககால ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர, நேரடி ஆங்கிலப் படைப்புகள் என்பவை அவரது 50வது வயதில்தான் தொடங்கின என்பதும், மீதமிருந்த 30 ஆண்டுக்கால வாழ்க்கையில்தான் இந்த 40 சதவீத எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வெளியாயின என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கீதாஞ்சலியில் இருந்து தொடங்கி, கணிசமானதொரு காலத்திற்கு தன் வங்காளி மொழி படைப்புகளை ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்ப்பவராக அவர் இருந்ததோடு, பின்னாளில் தன் படைப்புகளை மற்றவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அவற்றை இறுதிப்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வந்தார்.

எனினும், அவரது எழுத்துகளில் மிகச்சிறியதொரு பகுதியே ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது என்பதைக் கருதும்போது, அவரது ஒட்டுமொத்த படைப்புகளின் வீச்சை நம்மால் புரிந்துகொள்ள முடியும். கவிஞர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், நாடக ஆசிரியர், நடிகர், பேச்சாளர், கட்டுரையாளர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கல்வியாளர், ஓவியர், கிராமப்புற மேம்பாட்டிற்கான முன்னோடி, கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி, அந்நிய ஆதிக்க எதிர்ப்பாளர், வங்காளி மொழியின் புத்துயிர்ப்பிற்கு வித்திட்டவர் என அவரது பங்களிப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். இத்துறைகள் ஒவ்வொன்றிலும் அவரது முத்திரைகள் தனித்துவமானவையாகத் திகழ்கின்றன.

தனது 70வது பிறந்தநாளை ஒட்டி சாந்திநிகேதனில் உரையாற்றிய தருணத்தில் ரவீந்திரர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன் என்பது உண்மைதான். இருந்தாலும் இவை எதிலும் எனது உள்ளார்ந்த ஆன்மாவைக் காண முடியாது. எனது பயணத்தின் இறுதிக் கட்டத்தில் பார்க்கும்போது, ஒரு பருந்துப் பார்வையில் என் வாழ்க்கையைத் தெளிவாகக் காண முடிகிறது. அவ்வாறு திரும்பிப் பார்க்கும்போது, ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக உணர முடிகிறது. அது என்னவெனில், அடிப்படையில் நான் ஒரு கவிஞன்.’

பிரம்ம பந்தவ் உபாத்யாயா தனிச்சிறப்பான ஒரு மனிதர். தீவிர தேசபக்தர், பிரசாரகர், கல்வியாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர். தன் இறுதிநாளில் காலனிய ஆட்சியால் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிலேயே மடிந்தவர். ஆங்கிலத்திலும் வங்காளியிலும் மிகச் சிறப்பாக எழுதக் கூடியவரும்கூட. அவர் தான் நடத்தி வந்த ‘சோஃபியா’ என்ற இதழில் ரவீந்திரரின் கவிதைத் தொகுப்பான ‘நிவேத்யா’ என்ற நூலுக்கு விமர்சனம் எழுதினார். அது 1900ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 இதழில் வெளியானது. ‘வங்காளத்தின் உலகக் கவி’ என்ற தலைப்பில் வெளியான அந்த விமர்சனத்தில் பிரம்ம பந்தவ் இவ்வாறு கூறியிருந்தார்: ‘வருங்காலத்தில் வெளிநாட்டவர்கள் வங்காளி மொழியைக் கற்றுக்கொள்ள முற்படுவார்கள் என்றால், அது ரவீந்திரரின் எழுத்துக்களைப் படிப்பதற்காகத்தான் இருக்கும். அவர் ஓர் உலக கவி!’

‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பு வங்காளி மொழியில் வெளியாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதன் ஆங்கில பதிப்பிற்கு நோபல் பரிசுக் குழுவினர் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை அவருக்கு வழங்குவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இத்தகையதொரு திறமை பெற்றவராக அவர் திகழ்கிறார் என்பதை அவரது துல்லியமான விமர்சனப் பார்வை வெளிக்கொண்டு வந்தது. ‘இங்கிலாந்துதான் அவரை ஒரு புகழ்பெற்ற கவிஞராக அறிமுகம் செய்தது; நோபல் பரிசுதான் அவரை ஓர் உலகக் கவியாக மாற்றியது’ என்று இந்தியாவில் பரவலாக நிலவிவந்த கருத்து உண்மையல்ல என்பதையும் இது நிரூபிக்கிறது.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *