Skip to content
Home » தாகூர் #47 – கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகள்

தாகூர் #47 – கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகள்

தாகூர்

ரவீந்திரர் பதின்பருவத்தில் எழுதிய ஒரு சில கட்டுரைகளில் இந்தியாவின் முக்கிய ஆளுமைகளைத் தவறாகச் சித்தரித்து வந்த காலனிய வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனினும், இந்திய வரலாற்றாசிரியர்கள் பிரதேசவாரியான வரலாற்றை, அதிலும் குறிப்பாக, அந்தந்தப் பகுதியைச் சார்ந்த மொழிகளிலேயே எழுதிய பிறகே, அவரது விமர்சனக் கண்ணோட்டம் மேலும் கூர்மையானது.

20ஆம் நூற்றாண்டை எட்டவிருந்த நேரத்தில் 1899 ஜனவரியில் அக்‌ஷய்குமார் மைத்ரேயா வரலாற்றின் சித்திரங்கள் என்ற காலாண்டிதழை தொடங்கியபோது, அதற்கு அனைத்து வகையிலும் ரவீந்திரர் உதவிகரமாக இருந்தார். காலனியவாதிகள் முன்வைத்த வரலாறு குறித்து விமர்சனரீதியான அணுகுமுறையை மேற்கொள்வது என்பதே இந்த இதழின் நோக்கமாக இருந்தது. ‘மற்றவர்களின் பார்வையிலிருந்து நம் நாட்டைப் பார்ப்பதோடு திருப்தியடைந்துவிடக் கூடாது. இந்தியர்களால் எழுதப்பட்ட இந்திய வரலாறு ஒருபக்கச் சார்புடையதாகவும்கூட இருக்கக் கூடும். இருந்தபோதிலும், வெறுப்பும் கருணையற்ற மனமும் கொண்டு ஒருபக்க சார்புத்தன்மையோடு நம் எதிரே உள்ளதைவிட அது சிறந்ததே ஆகும்’ என்று இந்த இதழின் நோக்கத்தை அவர் வரையறுத்துக் கூறினார்.

இவ்வகையில் கலை, அறிவியல், சமூகம் குறித்த சிந்தனைகள், அரசியல், மதம், அழகியல், இலக்கியக் கொள்கைகள், வரலாறு, மொழியியல், கவிதைகளின் அளவுமுறை, இசை என மனித அறிவின் பல்வேறு துறைகளிலும் தனது கருத்துகளை அவர் கட்டுரை வடிவில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

இவற்றில் வானியலின் விசித்திரங்களை, பேரண்டத்தின் அழகை, சிறு குழந்தைகளுக்கு விளக்கும் வகையில் அவர் எழுதிய ‘விஸ்வ பரிச்சய’ (அண்டத்தின் அறிமுகம்) என்ற கட்டுரைத்தொடர் மிகவும் புகழ்பெற்றது. அதைப் போன்றே, சபுஜ் பத்ரா இதழில் இலக்கியக் கொள்கைகள் குறித்த விரிவான விவாதங்களை முன்னெடுத்த அவரது கட்டுரைகள் ‘சாகித்யா’, ‘சாகித்யேர் ஸ்வரூப்’, ‘சாகித்யேர் பாத்தே’ என்ற தலைப்புகளில் நூல் வடிவில் வெளியாயின. இந்தியச் செவ்வியல் இலக்கிய மரபு குறித்த விமர்சனங்களை முன்வைப்பதாக ‘ப்ராச்சின் சாகித்யா’ என்ற கட்டுரைத் தொகுப்பு அமைந்திருந்தது. நவீன இலக்கியம் குறித்த ‘அதூனிக் சாகித்யா’, நாட்டுப்புற இலக்கியம் குறித்த ‘லோக் சாகித்யா’ ஆகிய நூல்களும் வெளிவந்தன.

வங்காளி மொழியின் வளர்ச்சி குறித்து சபுஜ் பத்ரா இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ‘சப்த தத்வா’, ‘பங்க்ளா பாஷா பரிச்சய்’, உரைநடை குறித்த ‘சந்தா’ ஆகியவை திகழ்ந்தன எனில், ‘சங்கீத சிந்தா’ என்ற தொகுப்பு இசை குறித்த அவரது சிந்தனைகளை எடுத்துக் கூறுவதாக அமைந்தது. அவரது வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும் நிலவிய அரசியல் சூழல் குறித்த கருத்துகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவை அனைத்தும் ‘காலாந்தர்’ என்ற தொகுதியில் அடங்கியுள்ளன. அதைப் போன்றே கல்வி குறித்த அவரது சிந்தனைகள் ‘சிக்‌ஷா’ என்ற தலைப்பில் வெளியானது.

இந்தியாவில் அதுவரை கண்டிராத வகையில் மக்களிடையே அரசியல் எழுச்சியும் பேரார்வமும் நிலவிக் கொண்டிருந்த நேரத்தில், காந்தி தொடங்கிவைத்த ஒத்துழையாமை இயக்கத்தின் மீதே மக்களின் கவனம் முழுவதும் இருந்துவந்த நிலையில், அந்த இயக்கத்திற்கு எதிரான தன் கருத்துகளை உணர்ச்சிகரமான வகையில் வெளியிட்டு ‘உண்மையின் அறைகூவல்’ (1921), ‘பண்பாடுகளின் சங்கமம்’ (1921) ஆகிய இரண்டு கட்டுரைகளை ரவீந்திரர் எழுதினார். வறுமையில் ஆழ்ந்திருக்கும் கிராமத்திற்கு கல்வியையும் பெருமிதம் மிக்க வாழ்க்கையையும் வழங்குகின்ற ஓர் இந்தியாவை, தெள்ளிய அறிவு நிரம்பிய ஒரு தலைமையின்கீழ் சாதிகளையும் இனங்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் தன் வலிமையை வளர்த்தெடுத்துக் கொள்கின்ற ஓர் இந்தியாவை, பல்வேறு வகையான பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தனது பேராவலை இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருந்த ரவீந்திரர், அத்தகையதோர் இந்தியாவே மேற்கத்திய உலகத்துடன் சமமான வகையில் கைகோர்க்க வேண்டும் என்ற தன் இலக்கை வெளிப்படுத்தியிருந்தார்.

வாழ்க்கை நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அவர் எழுதிய கட்டுரைகள் 1912இல் ‘ஜீவன்ஸ்மிருதி’ என்ற பெயரிலும், சிறுவயது காலத்தை நினைவுகூர்ந்த எழுத்துக்கள் ‘1940இல் ‘செலேபெலா’ என்ற பெயரிலும், வாழ்க்கை பாதை குறித்துத் தெரிவிக்கும் எழுத்துகளை உள்ளடக்கிய ‘ஆத்ம பரிச்சய்’ என்ற நூல் 1943லும் வெளியாயின.

‘அங்குமிங்கும் பறவைகள்’ என்ற தலைப்பில் அவரது சிந்தனைச் சிதறல்கள் 1916ஆம் ஆண்டில் வெளியானது. இது நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘மீதமுள்ள சிந்தனைகள்’ என்ற நூல் 1921ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியானது. இது பின்னர் விரிவுபடுத்தப்பட்டு 1929இல் மறுபதிப்பு செய்யப்பட்டது. சொந்த வாழ்க்கை, இறையியல், தத்துவ விசாரம் ஆகியவற்றின் கலவையாக இந்த நூல் அமைந்திருந்தது. பொருட்களின்மீதும் அதிகாரத்தின் மீதுமான அவரது அருவெறுப்பினை வெளிப்படுத்துவதாக, அழகு, கலை, அன்போடு கூடிய மனித உறவு ஆகியவற்றைப் போற்றிப் புகழ்வதாக இந்தக் கட்டுரைகள் இருந்தன.

ரவீந்திரர், அவரது வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும் உறவினர்கள் மட்டுமின்றி, அன்றைய வங்காளத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கும் கடிதங்கள் எழுதி வந்துள்ளார். இவை அனைத்தும் மொத்தம் 19 தொகுதிகளாக விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

குடும்பத்தினரில் மனைவி மிருணாளினி தேவி, மகன் ரதீந்திரநாத், மருமகள் பிரதிமா தேவி, மகள்கள் மாதுரிலதா (பெலா), மீரா தேவி, பேரன் நிதீந்திரநாத், பேத்தி நந்தினி, அண்ணன் சத்யேந்திரநாத், அவரது மனைவி ஞானத நந்தினி தேவி, அண்ணன் ஜோதீந்திரநாத், அண்ணன் மகள் இந்திரா தேவி, அவரது கணவர் பிரமத சவுதரி (சபுஜ் பத்ரா இதழின் ஆசிரியர்) ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அதைப்போன்றே வங்காள கிராமப்புறத்தில் அவர் வசித்தபோது, தன் சிந்தனைகளைத் தொடர்ந்து கடிதங்கள்மூலம் அண்ணன் மகள் இந்திரா தேவிக்கு அவர் வெளிப்படுத்தி வந்தார். இந்தக் கடிதங்கள் அனைத்தும் ‘சின்ன பத்ராவளி’ என்ற பெயரிலும், அவரது நண்பர் பி.சி. மகலனாபிஸ் (இந்தியப் புள்ளியியல் துறையின் தந்தை) அவர்களின் மனைவி நிர்மல் குமாரிக்கு எழுதிய கடிதங்கள் ‘பாத்தே ஓ பாத்தேர் ப்ராந்த்தே’ என்ற தலைப்பிலும், வாரணாசியில் வசித்து வந்த நண்பரின் மகளான ராணு (பின்னாளில் ராணு அதிகாரி) என்ற சிறுமிக்கு எழுதிய கடிதங்கள் ‘பானுசிங்கேர் பத்ராவளி’ என்ற தலைப்பிலும் தனித்தொகுதிகளாக வெளியாயின. ரவீந்திரருக்கும் காந்திஜிக்கும் இணக்கமான நண்பராக விளங்கிய, இந்த இரு ஆளுமைகளையுமே தன் இரு கண்களாக நேசித்த, தேசபந்து சி.எஃப். ஆண்ட்ரூஸுக்கு 1913 முதல் 1922 வரை அவர் எழுதிய கடிதங்கள் ‘லெட்டர்ஸ் டு எ ஃப்ரெண்ட்’ என்ற தலைப்பில் 1928ஆம் ஆண்டில் தனி நூலாக ஆங்கிலத்திலேயே வெளியானது.

அவரது கடிதங்களிலேயே மிகச் சிறந்தவை என்று குறிப்பிடத்தக்கது அண்ணன் மகள் இந்திரா தேவிக்கு 1885 முதல் 1895 வரை எழுதி ‘சின்னபத்ரா’ (கிழிந்துபோன கடிதங்கள்) என்ற தலைப்பில் வெளியானவை ஆகும். வங்காளத்தின் கிராமப்பகுதிகளில் அங்குமிங்குமாக அவர் அலைந்து கொண்டிருந்த அந்த நாட்களில் தான் கண்ட, அனுபவித்த நிகழ்வுகளைப் படம்பிடித்ததுபோல் இக்கடிதங்களில் எழுதியிருந்தார். அவரே வேறு ஒரு தருணத்தில் கூறியதுபோல, கண்ணுக்கு எதிரே நிகழும் நிகழ்ச்சிகளின் மீது உண்மையிலேயே அன்பிருந்தால்தான், அந்த நிகழ்வுகளை ‘ஆற்றொழுக்கான வார்த்தைகளில் வடிக்கவும், இலகுவான சிறகுகளை விரித்தபடி வெட்டவெளியில் நடனமாடுவது போன்று விவரிக்கவும் இயலும்.’ இந்தக் கடிதங்களில் வங்காளி மொழி உரைநடை அதன் உச்சத்தை எட்டியது. அவற்றில் ஓரிரு எடுத்துக்காட்டுகளை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.

‘கிராமப்புறங்களில் வாழ்க்கை ஓட்டம் மிக வேகமானதாகவோ அல்லது முற்றிலும் மந்தமானதாகவோ அல்லது மூச்சுத்திணறும் வகையிலோ இருப்பதில்லை. வேலையும் ஓய்வும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்வது போலவேதான் இருக்கும். மக்களை ஏற்றிச் செல்லும் படகுகள் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு மக்களை சுமந்து செல்கின்றன; கரையோரத்தில் கையில் குடையை ஏந்தியபடி சிலர் நடந்து போகின்றனர்; பெண்கள் அரிசிக்கூடையை ஆற்றில் அமிழ்த்தி அரிசியை அலசுகின்றனர்; விவசாயிகள் முறுக்கிய சணல் பண்டல்களைத் தலையில் சுமந்தபடி சந்தையை நோக்கிச் செல்கின்றனர்; வீழ்த்தப்பட்ட ஒரு மரத்தை இருவர் கோடரிகளால் பிளந்து கொண்டிருக்கின்றனர்; தச்சர் ஒருவர் பழுதடைந்த படகினை அரசமர நிழலில் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு, கருவிகளைக் கொண்டு அதை சீரமைத்துக் கொண்டிருக்கிறார்; கிராமத்து நாய்கள் எவ்வித இலக்குமின்றி கால்வாய்க்கரை ஓரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றன; மழைக்காலத்தில் செழித்து வளர்ந்திருக்கும் புல்லை நன்றாகத் தின்றுவிட்டு ஒரு சில பசுக்கள் சூரிய ஒளியில் நிச்சலனமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன; அவற்றின் மேலே மேயும் ஈக்களைக் காதுமடல்களை ஆட்டியோ, அல்லது வாலை ஆட்டியோ அவை விரட்டுகின்றன; விடாப்பிடியாக முதுகின் மேல் அமர்ந்திருக்கும் காக்கைகள் அங்குமிங்குமாக நகர்வதால் எரிச்சலடைந்து தலையைத் திருப்பிப் பார்த்து அவை தங்கள் எரிச்சலை வெளிப்படுத்துகின்றன; எதையோ தட்டுவது, ஏதோ விழுவது போன்ற சத்தத்தையும், குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடும் சத்தத்தையும் ஆங்காங்கே கேட்க முடிகிறது; தூரத்தில் படகோட்டி குரலெடுத்துப் பாடும் ஓசை, தண்ணீரில் துடுப்பு துழாவும் ஒலி, செக்கிலிருந்து வெளிப்படும் ‘நற நற’வென்ற சத்தம் இவை அனைத்திற்கும் இசைந்த வகையில் பறவைகளின் கீச்சொலியும், அசைந்தாடும் இலைகளின் சலசலப்பும் இருக்கின்றன; இவை அனைத்துமே, மிக விரிவான, அமைதியான, அதேநேரத்தில் கனவு போன்ற மென்மையான ஓர் இசைத் தொகுப்பினை வழங்கும் இசை நிகழ்ச்சியைப் போல் தோற்றமளிக்கின்றன.’

இதற்கு நேர் எதிரான மற்றொரு சித்தரிப்பு இதோ:

‘இந்த மணற்பகுதி தொடுவானத்தைத் தொட்டுவிடுவதைப் போல நீண்டு கொண்டே போகிறது. அதில் ஒரு வீடோ, அல்லது ஒரு மரமோ கூட இல்லை. அங்கே எந்தவித அசைவோ, உயிர்ப்போ, அடர்ந்த புல்வெளி, சோளக்கதிர், பழங்கள், பறவைகள், விலங்குகள் என்ற எந்தவொரு வகையும் தென்படவில்லை; யாருமில்லாத, இடைவெளியற்ற வெற்றிடம்; அதனருகே பத்மா நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது; எதிர்க்கரையில் குளிக்குமிடம்; படகு ஒன்று நங்கூரமிட்டு நிற்கிறது; மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்; தென்னந்தோப்பும் மாந்தோப்பும் தென்படுகின்றன; மாலைநேரத்தில் அங்கே சந்தையின் இரைச்சலையும் கேட்க முடிகிறது; தூரத்தில் பாப்னா கரைப்பகுதியில் மரங்கள் வரிசையாக இருப்பதையும் என்னால் காண முடிகிறது; இவ்வாறு நோக்கும்போது ஓரிடத்தில் நதிநீர் கருநீலமாகவும், மற்ற இடங்களில் வெளிறிய நீலமாகவும், பிறகு பச்சை, அதன்பிறகு மண்ணின் பழுப்பு நிறத்தில் தென்படுகிறது; இவற்றுக்கு இடையேதான் ரத்தப்போக்கில்லாத மரணத்தைப் போல, வெளுத்துப்போய், சோகையாய்த் தோன்றும் இந்தப் பகுதி இருக்கிறது. அந்தி சாயும் நேரத்தில் இந்த மணற்பகுதியில்தான் நான் தன்னந்தனியாக இருக்கிறேன்.’

இயற்கையின் இவ்வளவு தெள்ளத்தெளிவான சித்திரத்தை அவரது கவிதைகளிலும்கூட நம்மால் காண முடியாது. இந்தக் கடிதங்களில், அவர் பின்னாளில் எழுதவிருந்த புகழ்பெற்ற பல படைப்புகளின் தொடக்கப் புள்ளிகளை நம்மால் அடையாளம் காணமுடியும்.

அதைப்போன்றே, ரவீந்திரரின் கடிதங்களின் ஏழாவது தொகுதியாக விஸ்வபாரதியால் வெளியிடப்பட்ட நூல் ரவீந்திரர் தன் நண்பரும் அறிவியல் அறிஞருமான ஜகதீஷ் சந்திர போஸிற்கு எழுதிய 36 கடிதங்களையும், போஸின் மனைவி அபலாவிற்கு எழுதிய ஏழு கடிதங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்தக் கடிதங்கள் அவர்கள் இருவரின் பரஸ்பர அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தன. அவற்றில் ஓரிரு கடிதங்களைப் பார்ப்போம்:

ஷெலிதஹாவில் இருந்து 1900 செப்டெம்பர் 17 அன்று ரவீந்திரர் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்:

‘வெற்றியோடு நீங்கள் வங்காளத்திற்குத் திரும்புகையில், உங்கள் வெற்றியை நாங்கள் பங்கிட்டுக் கொள்வோம். நீங்கள் என்ன சாதனை புரிந்தீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவோ உங்களுக்காகப் பணத்தைச் செலவழிக்கவோ அல்லது நேரத்தை வீணடிக்கவோ அவசியமும் இல்லை. ஆங்கிலேயர்களின் வாயிலிருந்து வெளிவரும் புகழுரைகளை தி டைம்ஸ் நாளிதழ் வார்த்தைகளாக வெளியிடும்போது அவை அனைத்தையும் நாங்கள் எடுத்துக் கொண்டுவிடுவோம். அவ்வளவுதான். அதன்பிறகு நமது நாட்டின் புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கையோ அல்லது இதழோ, நாமும் கவனத்திற்கு உரியவர்கள்தான் என்று எழுதும். மற்றொன்று, அறிவியல் உலகில் ஒன்றன்பின் ஒன்றாக நாம் கண்டுபிடிப்புகளை செய்துவருகிறோம் என்று மார் தட்டிக் கொள்ளும். இப்போது யாரும் உங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் நீங்கள் வெற்றிக்கனியைப் பறித்துத் தாய்நாட்டிற்குத் திரும்பும்போது, அதை எங்களுக்கே ஆனதாக கூறிக் கொள்வோம். உழுவது, விதைப்பது உங்கள் வேலை; உங்கள் உழைப்பின் பலன்களை அனுபவிப்பது நாங்கள் அனைவருமே. எனவே உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றால், உங்களை விட அதிகமான பலனை நாங்கள்தான் அடையப் போகிறோம்!’

1901 ஜூன் 4ஆம் தேதியன்று எழுதிய கடிதமோ ஆனந்தக் கூத்தாடும் ரவீந்திரரின் மனநிலையை சித்தரிப்பதாக அமைந்திருந்தது:

‘நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகிவிட்டேன். வெற்றி எனக்கு மணிமகுடம் சூட்டியுள்ளது! இன்று காலை உங்கள் கடிதம் கிடைத்ததில் இருந்து நான் புதியதோர் உலகிற்குள் சென்றுவிட்டேன். உங்கள்மூலம் கடவுள் இந்தியாவை அவமானத்திலிருந்து காத்துவிட்டார். அவரது காலடியில் என் தலை வைத்துத் தொழுகிறேன். நம் நாட்டிற்குப் பெருமை தேடித்தரும் ஒளிமிகுந்த பாதையை என்னால் இப்போது காண முடிகிறது. எனது வந்தனங்களை உங்களுக்குத் தெரிவிக்க விழைகிறேன். என் இனிய நண்பரே! என் மனமுவந்த பாராட்டுதல்களை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதும் வெற்றி கிட்டட்டும்! நம் தாய்நாட்டிற்குப் பேரையும் புகழையும் அள்ளி வருவீராக! இந்தியாவின் பண்டைய முனிவர்களைப் போலவே, இந்த நவீன யுகத்திலும் அறிவு என்ற புனித வேள்வித் தீயை ஏற்றுவீராக!

இன்னும் 10-12 நாட்களில் என் மூத்த மகள் பெலாவிற்குத் திருமணம். உங்களின் வெற்றி இந்தக் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிட்டது. கண்ணுக்குத் தெரியாத உங்களின் ஒளிக்கதிர்களின் மூலம் இங்கு திரண்டிருப்போருக்கு நீங்கள் மகிழ்ச்சியை வாரி வழங்கியிருக்கிறீர்கள். என் கவலைகள் அனைத்தும் இப்போது பறந்தோடிவிட்டன. நீங்கள் வெற்றி மகுடம் சூட்டும்போது, உங்கள் அருகில் இருந்து, கைகளைக் குலுக்கி, வாழ்த்துத் தெரிவிக்க முடியவில்லை என்பதுதான் எனது ஒரே வருத்தம்.’

அதைப்போன்றே பதின்பருவத்தில் அவர் மேற்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களின் அனுபவங்களை ‘பாரதி’ போன்ற குடும்ப இதழ்களில் அவர் தொடர்ந்து எழுதியதைப் போலவே, நோபல் பரிசுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களின் அனுபவங்களையும் எழுதி வந்தார். குறிப்பாக, அவரது ருஷ்யப் பயணம் குறித்த கடிதங்கள் ‘ருஷ்யாவிலிருந்து கடிதங்கள்’ என்ற தலைப்பில் தனிநூலாக வெளியானது.

ஆங்கிலேய அறிஞரான கில்பெர்ட் முரேவும் ரவீந்திரரும் பண்பாட்டுரீதியான ஒத்துழைப்பு குறித்து ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்ட கடிதங்கள் பின்னர் லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பின் ஓர் அங்கமாக பாரீஸில் இருந்து செயல்பட்டு வந்த அறிவார்ந்த ஒத்துழைப்பிற்கான சர்வதேச நிலையத்தின் சார்பில் ‘கிழக்கும் மேற்கும்’ என்ற தலைப்பில் 1935ஆம் ஆண்டில் வெளியானது.

1912இல் அமெரிக்கா சென்றிருந்தபோது, இல்லினாய்ஸில் யுனிடேரியன் கழகத்தில் அவர் ஆற்றிய உரைகளை அடிப்படையாகக் கொண்டு, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் எட்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இதுவே 1913இல் ‘சாதனா: வாழ்வை உணர்தல்’ என்ற தலைப்பில் தனிநூலாக ஆங்கிலத்தில் வெளியானது. மேற்குலகில் இந்த நூல் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான ஒரே ஆண்டிற்குள் எட்டு பதிப்புகளைக் கண்ட இந்த நூல் அதிகரித்துக் கொண்டே வந்த அவரது புகழுக்குச் சான்றாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, 1916ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு ‘ஆளுமை’ என்ற தலைப்பில் 1917ஆம் ஆண்டு வெளியானது. இதன்மூலம் வெளிப்பட்ட கல்வி, பெண்கள், கலை, ஆளுமை உருவாக்கம், தியானத்தின் முக்கியத்துவம் போன்றவை குறித்த ரவீந்திரரின் சிந்தனைகள் பெருமளவிற்கு அமெரிக்க மக்களைக் கவர்ந்திழுக்கவில்லை. இந்த நூலும் சாதனாவைப் போன்ற வரவேற்பினைப் பெறவில்லை.

அதைப்போன்றே அமெரிக்காவிலும் ஜப்பானிலும் நாட்டுப்பற்று என்ற பெயரில் வெளிப்பட்ட தேசிய வெறியுணர்வைக் கண்டித்து அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அந்தந்த நாட்டு மக்களிடையேயும் அறிஞர்களிடையேயும் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொண்டன. இவை 1917இல் ‘தேசியவாதம்’ என்ற தலைப்பில் தனியொரு நூலாக வெளியானது.

‘அனைத்துலக மக்களின் ஆன்மீக ஒற்றுமையை அடையவேண்டுமெனில், தேசியவாதம் என்ற பிரிவினைவாதக் குழுக்களைக் கடந்து வரவேண்டிய அவசியம் உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார். இந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில், ‘நமது வாழ்க்கை வெளிப்புற அம்சங்களில் எளிமையானதாகவும், ஆழ்மனதில் செறிவான ஒன்றாகவும் இருக்கட்டும். பொருளாதார ரீதியான சுரண்டல், மோதல்கள் என்பவற்றிற்குப் பதிலாக சமூகரீதியான ஒத்துழைப்பின் அடிப்படையில் நமது நாகரீகம் உறுதியோடு நிற்கட்டும்!’ என்று அவர் குறிப்பிட்டார்.

மனித குலத்தின் பெயரால் ரவீந்திரர் இத்தகைய வேண்டுகோள்களை விடுத்தபோதிலும், அமெரிக்க, ஜப்பானிய மக்கள் மட்டுமின்றி, இந்தியர்களும் அவற்றை வெறுத்து ஒதுக்கினர். ‘அவர் கூறியது மிகச் சரியான முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும், அவரது உரைகளுக்கான காலம் பொருத்தமானதாக இருக்கவில்லை’ என ரவீந்திரரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான கிருஷ்ணா கிருபளானி கருத்து தெரிவித்திருந்தார்.

ஜப்பானிய ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு ரவீந்திரரின் இந்த உரைகளை வெறுத்தார்கள் என்பதற்கு ஓர் உதாரணம்தான் அவரது சொற்பொழிவுகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க முனைந்த ஒசாகா பல்கலைக்கழகப் பேராசிரியர் மசாகியோ மியாமோட்டோ அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகும்.

எனினும் தேசியம் என்ற குறுகிய வாதத்தின் அபாயங்கள் குறித்த ரவீந்திரரின் கருத்துக்கள் இன்றும், அவை வெளியிடப்பட்ட நூறாண்டுகளுக்குப் பிறகும் கூட, பொருத்தமுடையதாகவே திகழ்கின்றன. ‘இனவாதத்தினால் உருவான பிரிவினை உணர்விற்கு மிகவும் அறிவுபூர்வமான தீர்வு இது’ என்று மானுடவியல், தத்துவ இயல் அறிஞரான எட்வர்ட் செய்த் குறிப்பிட்டிருந்தார்.

சிறப்பான மொழிநடையில் ‘சிந்தனைகள்’ தொகுப்பு இருந்தபோதிலும், 1929க்குப் பிறகு அது கண்ணில் படாமல் போனது. அதற்குக் காரணம், 1930ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் வழங்கிய ஹிப்பர்ட் நினைவு சொற்பொழிவுகள் ‘மனிதனின் மதம்’ என்ற தலைப்பில் தனிநூலாக வெளியாகி மிகப்பெரும் வரவேற்பினை மேற்குலகில் பெற்றதே ஆகும். இதற்கிடையே 1925இல் ‘சீனாவில் உரைகள்’ என்ற நூலும் வெளியானது.

ஹிப்பர்ட் நினைவு சொற்பொழிவானது மதம் என்ற நிறுவனம் குறித்த அவரது கருத்துக்கள், முந்தைய எழுத்துகளில் விரவிக் கிடந்த தத்துவார்த்தரீதியான நம்பிக்கைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறுவதாக இருந்தது. உபநிடதங்கள், வங்காளத்தின் நாட்டுப்புற பாரம்பரியங்கள், கீழைத்தேய தத்துவ ஞானிகளின் அறிவுரைகள் ஆகியவற்றோடு, இயேசு கிறித்து, ஜொராதுஸ்ட்ரா (பார்சி) ஆகியோரின் தத்துவ விசாரணைகள் குறித்தும் இந்தச் சொற்பொழிவு எடுத்துக் கூறியிருந்தது.

இந்த ஆக்ஸ்ஃபோர்ட் சொற்பொழிவுகள் அடங்கிய ‘மனிதனின் மதம்’ என்ற நூல் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை மேற்கத்திய ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்பட்டு, பல பதிப்புகளைக் கண்டுள்ளது. ஆங்கிலத்தில் அவர் எழுதிய இறுதி கட்டுரைத் தொடர் என்றே இதைக் கூறலாம்.

எனினும் 1933இல் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் ‘மனிதன்’ என்ற தலைப்பில் 1937இல் தனிநூலாக வெளியானது. அதைப் போன்றே, பல்வேறு நேரங்களில் அவர் மேற்கொண்ட தென்னிந்தியப் பயணங்களின்போது, அன்றைய மதராஸ் நகரில் ‘காடுகளின் செய்தி’ (1919 மார்ச்), ‘நவீன காலத்தின் உணர்வு’, ‘இந்திய வரலாறு குறித்த பார்வை’ (1922 செப்டெம்பர்), ‘கல்வியின் நோக்கங்கள்’ (1922 அக்டோபர்), ‘வங்காள மறுமலர்ச்சியும் நானும்’ (1934 அக்டோபர்) ஆகிய தலைப்புகளில் அவர் உரைகளை நிகழ்த்தியிருந்தார். இதைப் போன்றே, இந்தப் பயணங்களின்போது, மைசூர், ஹைதராபாத், கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மதனபள்ளி ஆகிய நகரங்களிலும் பல்வேறு தலைப்புகளில் அவர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தார். 1922இல் அவரது இலங்கைப் பயணத்தின்போது கொழும்பு நகரில் ‘விஸ்வபாரதியின் முன் உதாரணம்’, ‘இந்தியாவின் பல்கலைக்கழகங்கள்’, ‘எனது வாழ்க்கைப் பணியின் வளர்ச்சி’ ஆகிய தலைப்புகளில் அவர் சொற்பொழிவுகளை ஆற்றியிருந்தார்.

இறுதியாக, அவரது 80வது ஆண்டு நிறைவினை ஒட்டி சாந்திநிகேதனில் 1941 ஏப்ரல் 14 அன்று வங்காளி வருடப்பிறப்பினை ஒட்டி நிகழ்த்தவிருந்த உரைக்காக, அவர் சொல்லச்சொல்ல எழுதப்பட்ட ‘நாகரிகத்தின் நெருக்கடி’ என்ற சொற்பொழிவு நிகழ்விற்கு வந்திருந்தோர் முன்னிலையில் படிக்கப்பட்டது. ஒன்றுபட்ட ஓர் உலகம் என்ற ரவீந்திரரின் கனவு எப்படி நொறுங்கிப் போனது என்பதை, அப்போது நடைபெற்றுவந்த இரண்டாம் உலகப்போரின் பின்னணியில், மிகுந்த கழிவிரக்கத்துடன் அவர் இந்த உரையில் குறிப்பிட்டிருந்தார். எனினும், மானுடமே இறுதியில் வெல்லும் என்ற தனது அசையாத நம்பிக்கையையும் அவர் உறுதிபடவே கூறியிருந்தார்.

‘சுற்றுமுற்றும் பார்க்கும்போது பெருமைமிக்கதொரு நாகரிகத்தின் நொறுங்கிப்போன இடிபாடுகள் பயனற்றதொரு குவியலாக என்னைச் சுற்றிச் சிதறிக் கிடப்பதைக் கண்டேன். எனினும், மனித இனத்தின் மீதான நம்பிக்கையை இழப்பது என்ற மாபெரும் பாவச்செயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *