Skip to content
Home » தாகூர் #49 – ரவீந்திரரும் திரைப்படக்கலையும்

தாகூர் #49 – ரவீந்திரரும் திரைப்படக்கலையும்

தாகூர்

ரவீந்திரர் வங்காளி இலக்கியத்தைப் புதிய பாதைக்கு இட்டுச் சென்றவர் என்பது மட்டுமின்றி, இசை, நாடகம், ஓவியம் ஆகிய துறைகளிலும் 19-20ஆம் நூற்றாண்டுகளில் வெளிப்பட்ட நவீனத்துவத்தை மேலும் வளர்க்கும் வகையில் செயல்பட்டவர் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவை போக, அன்றைய நாட்களில் உருப்பெற்று வந்த திரைப்படம் என்ற கலையையும் அவர் புறக்கணிக்கவில்லை. இந்தியத் திரைப்படத்தின் வளர்ச்சி மற்றும் அதன் மேம்பாடு ஆகியவற்றில், அவரது பங்களிப்பு குறித்தும், அவரது ஈடுபாடு குறித்தும், பெரிய அளவில் எழுதப்படவில்லை என்பது சற்று விசித்திரமான ஒன்றுதான்.

அன்றைய வங்காளி நாடக முன்னோடியான சிசிர் பாதுரியின் இளைய சகோதரர் முராரி மோகனுக்கு ரவீந்திரர் எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் இந்தப் புதிய ஊடகத்தின் உள்ளார்ந்த தன்மையை அவர் எவ்வாறு சிறப்பாக உள்வாங்கியிருந்தார் என்பதை நம்மால் உணர முடிகிறது. ‘தனித்ததொரு கலைவடிவமாக திரைப்படம் உருவாகும் என்ற நமது எதிர்பார்ப்பு இன்னும் முற்றிலுமாக நிறைவேறவில்லை என்றே நான் நம்புகிறேன். அரசியலைப் போலவே, கலையின் நோக்கமும்கூட அதன் சுதந்திரத்தை நோக்கியதே ஆகும். இதுவரையில் திரைப்படமானது இலக்கியத்தை அடியொற்றியே செயல்பட்டு வரும் நிலையில், தன் அறிவுக்கூர்மையைக் கொண்டு, இந்த அடிமைத்தனத்திலிருந்து அதை விடுவிக்கும் திறன் படைத்த கலைஞர் எவரும் இதுவரையில் வெளிப்படவில்லை. இந்த அசையும் சித்திரத்தின் (சலனப் படம்) மையமான அம்சம் என்பது சித்திரத்தில் அது உருவாக்கும் மாற்றங்கள்தான். அசைந்தாடும் இந்த வடிவத்தின் அழகும் பிரம்மாண்டமும் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், சுயச்சார்பான ரீதியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தன் உள்ளார்ந்த தன்மையை விவரிக்க, அதற்கு வேறு ஒரு மொழி தேவைப்படுகிறது என்று சொன்னால், அத்தகையதொரு நிலை அதன் தகுதியின்மையைத்தான் குறிக்கிறது.’

அவர் சுட்டிக்காட்டிய இந்த முரண், இன்றளவும் பொருத்தமானதாக, விவாதத்திற்குரிய ஒன்றாகத் திரை ஊடகத்தில் இருந்து வருகிறது. திரைப்படம் இந்தியாவிற்குள் நுழையும்போது ரவீந்திரரின் வயது 30களின் நடுப்பகுதியாக இருந்தது. பேசும் படங்கள் வெளிவரத்தொடங்கியபோது அவர் தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். மவுனப் படங்கள் நிலவிய காலத்திலேயே ரவீந்திரர் அந்த வடிவத்தில் தன் முத்திரையை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது செவ்வியல் தன்மை கொண்ட திரைப்படங்களாகக் கருதப்படும் பல படங்களுக்கு முன்னோடியாக, அவற்றின்மீது செல்வாக்கு செலுத்துவதாக இருந்த, அவரது எழுத்துக்களின் மூலம் உந்துதல் பெற்ற, ஒரு சில மவுனப் படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

மன்பாஞ்சன் (1923): நரேஷ் மித்ராவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படமே ரவீந்திரரின் சிறுகதையின் அடிப்படையில் உருவான முதல் திரைப்படமாகும். பின்னாளில் இயக்குநர் நரேஷ் மித்ரா சரத் சந்திரரின் புகழ்பெற்ற நாவலான தேவதாஸ் கதையை ஒரு மவுனப்படமாக உருவாக்கினார். இந்தக் காலத்தில் நரேஷ் மித்ராவும், சிசிர் குமார் பாதுரியும் இணைந்து ரவீந்திரரின் எழுத்துகளைக் கொண்டு பல படங்களை உருவாக்கினர்.

க்ரிஹபாலா (1929): மது போஸின் இயக்கத்தில் வந்த இத்திரைப்படம் மனிதர்களின் போலித்தனத்தை ஒரு முக்கோணக் காதலின் மூலம் தோலுரிக்கிறது. ரவீந்திரரின் கதைகளைக் கொண்டு போஸ் இரண்டு மவுனப் படங்களை எடுத்தார். இந்தப் படத்தின் திரைக்கதை வடிவாக்கத்திலும் ரவீந்திரர் உதவி செய்தார்.

பலிதான் (1927): நவால் காந்தியின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ரவீந்திரரின் நாடகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. 1887ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நாடகம் கற்பனையாக உருவகம் செய்யப்பட்ட ஒரு நாட்டின் முற்போக்கு எண்ணங்கொண்ட அரசனுக்கும் பாரம்பரியத்தையே உயர்த்திப் பிடிக்கும் அவரது குருவிற்கும் இடையிலான மோதல்களைச் சித்தரிப்பதாக அமைந்திருந்தது.

இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் நிறுவனரும் இயக்குநருமான பி.கே. நாயர் இந்திய சினிமாவில் நாம் இழந்த முக்கியமான பத்து படங்களில் ‘பலிதான்’ ஒன்று என குறிப்பிட்டிருந்தார். ‘மேற்கத்திய தரத்திற்கு இணையாக தீவிரமான ஓர் இந்திய சினிமா எவ்வாறு உருவாக முடியும் என்பதை பலிதானை உதாரணமாக எடுத்துக்காட்டியது 1927-28ஆம் ஆண்டின் இந்தியத் திரைப்படக் குழு (இந்திய சினிமாவின் பேரகராதி – அஷிஷ் ராஜாதிக்‌ஷ்யா, பால் வில்மன்).

முக்தி (1935): இத்திரைப்படத்தின் இயக்குநர் பி.சி. பரூவா ரவீந்திரரை முதன்முதலில் ஐரோப்பாவில் எதேச்சையாகச் சந்தித்தார். சினிமாவின் மீது பரூவாவுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த அவர், பாரீஸ் நகரில் இருந்த புகழ்பெற்ற காக்ஸ் ஸ்டூடியோவில் கல்வி பெறுவதற்காக அந்த நிர்வாகத்திற்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கிய முக்தி என்ற படத்தின் தலைப்பும்கூட அவர் வழங்கியதுதான். ரவீந்திர சங்கீதத்தினை பயிற்றுவிப்பதில் நீண்ட அனுபவம் பெற்றவரும், தன்னளவில் தலைசிறந்த ரவீந்திர சங்கீத பாடகருமான பங்கஜ் மல்லிக் இந்தத் திரைப்படத்தில்தான் ரவீந்திரரின் அனுமதியோடு அவரது பாடல் ஒன்றுக்கு இசை அமைத்திருந்தார். அதைப் போன்றே ரவீந்திர சங்கீதத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் அவர் அனுமதி அளித்தார். இந்தப் படத்துக்குப் பிறகுதான் பங்கஜ் மல்லிக்கைத் தொடர்ந்து பலரும் ரவீந்திர சங்கீதப் பாடல்களை திரைப்படங்களில் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கினர். வங்காள திரைப்பட உலகத்தைப் போன்றே மும்பை திரைப்பட உலகமும் இதில் முன்னின்றது. பங்கஜ் மல்லிக் அதில் முக்கிய பங்கு வகித்தார்.

ரவீந்திரரின் படைப்புகளைப் பயன்படுத்தி வெளியான திரைப்படங்களின் விவரம்:

பலிதான் (1927), கிரிபாலா (1929), ரவீந்திரரின் இயக்கத்தில் நாதிர் பூஜா (1932), சோக்கேர் பாலி (1938), கோரா (1938), சோத்புத் (1942), மிலான் (1946), (ரவீந்திரரின் நவ்கதூபி என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு நிதின் போஸால் முதலில் இந்தியில் மிலான் என்ற பெயரில் எடுக்கப்பட்டு, பின்னால் 1947இல் வங்காளியில் நவ்கதூபி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.) பிமல் ராயின் தோ பிகா ஜமீன், 1953 (கவிதையை அடிப்படையாகக் கொண்டது), நவ்க தூபி நாவலைக் கொண்டு தமிழில் மாதர் குல மாணிக்கம், தெலுங்கில் சரண தாசி என்ற பெயரில் டி. பிரகாஷ் ராவ் இயக்கினார் (1956). காபூலி வாலா (1957) நவ்க தூபி நாவலைக் கொண்டு ராமானந்த சாகர் இயக்கத்தில் இந்தியில் குன்கட் (1960), தபன் சின்ஹாவின் வங்காளி திரைப்படங்கள் ஷுதிதா பாஷான், கொகாபாபுவின் மறுவரவு (1960), சத்யஜித் ரேயின் தீன் கன்யா (ரவீந்திரரின் போஸ்ட் மாஸ்டர், மொனி ஹரா, சமாப்தி ஆகிய மூன்று கதைகளைக் கொண்டு வெளிவந்தது) (1961) பிமல் ராயின் காபூலிவாலா (1961), சத்யஜித் ரேயின் சாருலதா (1964) ஜுல் வெலானியின் அஞ்சலகம் (இந்தி- 1964), (அதே படம் வங்காளியிலும் வெளியானது) தபன் சின்ஹாவின் அதிதி (1965), அருந்ததி தேவியின் மேக் ஓ ரவுத்ரா (1969), மிருணாள் சென் – இச்சா பூரண் (1970), சுபேந்து ராயின் உப்ஹார் (1971), அஜய் கார் இயக்கத்தில் மால்யாதான் (1971), பூர்ணேந்து பாத்ரி இயக்கத்தில் ஸ்திரீர் பத்ரா (1972), ஹிரேன் நாக்-இன் கீத் ஹாதா சல் (இந்தி) (1975), சத்யஜித் ரேயின் கரே பாய்ரே (1985), குல்ஸார் இயக்கத்தில் லெகின் (1991), குமார் சஹானியின் சார் அத்யாய் (1997), முத்தியாலா சுப்பையாவின் ஒக்க சின்ன மாதா (தெலுங்கு – 1997), ரிது பர்ணா கோஷ்-இன் சோக்கேர் பாலி (2003), சாஷி நஸ்ருல் இஸ்லாமின் சஷ்டி (தண்டனை) (2004), அதே இயக்குநரின் ஷுவா (2006), சதுரங்க – சுமன் முகர்ஜி – 1916 நாவலை அடிப்படையாகக் கொண்டது, அபுஜ் பௌ (அசட்டு மாட்டுப்பெண்) (2010)– நர்கீஸ் அக்தார் – வங்கதேசம், நவ்கதூபி – ரிதுபர்ண கோஷ் – (2011) – இதே பெயரிலான நாவலை அடிப்படையாகக் கொண்டது, சாருலதா 2011 (2011) அக்னிதேவ் சாட்டர்ஜி- 1901 நாவல், எலார் சார் அத்யாய் (2012)- பப்பாதித்ய பந்தோபாத்யாய் – 1934 நாவல், தாஷேர் தேஷ் – (2011) கௌசிக் முகர்ஜி- இதே பெயரிலான 1933 நாடகம், சித்ராங்கதா – ரிதுபர்ண கோஷ் – 1913 சித்ரா நாடகம், முக்தி(2011) – இந்தி – புத்ததேவ் தாஸ்குப்தா – தாகூர் கவிதை, பத்ரலேகா – (2011) – புத்ததேவ் தாஸ்குப்தா – தாகூர் கவிதை, அப்சலீட் அல்டார் (2013)- மிருகாங்க சேகர் கங்குலி – ஹியாஸ் தன்மய் – 1912 அச்சல்யதான் நாடகம், தேகா நா தேகே – அர்ணப் கோஷால் – அபரிச்சிதா சிறுகதை, சேஷேர் கவிதா (2014) – சுமன் முகோபாத்யாயா – 1929 நாவல், தப்தபதி (2014) – சச்சின் பல்ராம் நாஅகர் கோகே – மராத்தி, ஜோகோஜோக் (2015) – சேகர் தாஸ் – 1929 நாவல், கோரா (2015) – சுக்லா மித்ரா – 1909 நாவல், போஸ்ட் மாஸ்டர் (2016) – ஸ்ரீஜன் பர்தன் – 1891 சிறுகதை, திருஷ்டி (2016) – ப்ரொத்யுத்குமார் தேகா – அசாமி, டிடெக்டிவ் (2017)- ப்ரொத்யுத் குமார் தேகா – வங்காளி, பயாஸ்கோப் வாலா (2017) – தேவ் மேதாகர் – இந்தி – காபூலிவாலா (1892) சிறுகதை, லேப்ரடரி (2018) – சவ்மிக் சட்டோபாத்யாய்- அதே பெயரிலான சிறுகதை, டிடெக்டிவ் (2020) – ஜெய்தீப் முகர்ஜி , தர்வான் (2020) பிபின் நட்கர்னி – இந்தி – 1918 சிறுகதை.

இங்கு குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு திரைப்படம் என்பது 2018ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் மொழியிலும் ஆங்கிலத்திலுமாக வெளியான, பாப்லோ சீசர் இயக்கத்தில் உருவான திங்கிங் ஆஃப் ஹிம் என்ற திரைப்படம் ஆகும். 1920களில் ரவீந்திரர் அர்ஜெண்டினாவில் தங்கியிருந்தபோது, அவர் அங்கு தங்கி ஓய்வெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த அர்ஜெண்டினா எழுத்தாளர் விக்டோரியா ஓகாம்போவிற்கும் ரவீந்திரருக்கும் இடையிலான உணர்வுகள், உறவுகள் குறித்த பல்வேறு எழுத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் மிகவும் தனித்துவமானதாக அமைந்திருந்தது. ரவீந்திரரின் கரே பாயிரே கதையைக் கொண்டு அதே பெயரில் சத்யஜித் ரே எடுத்த திரைப்படத்தில் நடித்த விக்டர் பேனர்ஜி இதில் ரவீந்திரராக நடித்திருந்தார். சமீபத்தில் பாலிவுட் திரைப்பட நடிகர் அனுபம் கெர் ஒரு திரைப்படத்தில் தான் ரவீந்திரநாத் தாகூராக நடிக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டபோது, வங்காளத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வங்காளிகளைத் தவிர வேறு எவரும் அவரைச் சித்தரிக்க முடியாது என்ற கருத்து அங்கு வலுவாக நிலவுவதையே இது சுட்டிக் காட்டுகிறது.

2011இல் ரவீந்திரரது படைப்புகளின் காப்புரிமை விஸ்வபாரதியிடமிருந்து அதிகாரபூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, பல்வேறு ஊடகங்களும், கலைஞர்களும் அவரது படைப்புகளை புதிய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் புதிய வடிவங்களைப் பயன்படுத்தி அறிமுகம் செய்ய முன்வந்தனர். அதில் குறிப்பாக தொலைக்காட்சி மூலம் வெளியான படைப்புகளின் விவரம்: 2012ஆம் ஆண்டில் கார்கி சென் தயாரிப்பில் சோம்நாத் சென்னின் இயக்கத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இந்திப் பதிப்பு அவரது கோரா (1909) நாவலை 26 பகுதிகளைக் கொண்ட தொடராக ஒளிபரப்பியது.

2015இல் எபிக் தொலைக்காட்சியில் அனுராக் பாசு இயக்கத்தில் ரவீந்திரரின் சிறுகதைகள் பலவும் ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் என்ற தலைப்பில் ஒரு தொடர்நிகழ்வாக ஒளிபரப்பானது. அவரது இயக்கத்திலேயே அவரது புகழ்பெற்ற சிறுகதைகளான காபூலிவாலா, நஷ்டனீர், சோக்கேர் பால, அதிதி போன்றவையும் ஒரு தனித்தொடராக ஒளிபரப்பானது.

2015 நவம்பர் 15 லிருந்து கலர்ஸ் தொலைக்காட்சியின் வங்காளிப் பிரிவு ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் என்ற தலைப்பில் அபிஜித் குஹா, சுதேஷனா ராய் ஆகியோர் இயக்கத்தில் தொடர் நிகழ்வுகளை ஒளிபரப்பியது. இதில் கையாளப்பட்ட ஒவ்வொரு சிறுகதையும் மூன்று பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டன. இத்தொடரில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

1929ஆம் ஆண்டில் ரவீந்திரரின் ஜெர்மனி பயணத்தின்போது மியூனிச் நகரில் அவர் பார்த்த இயேசு கிறித்துவைப் பற்றிய ஒரு நாடகத்தினால் உந்தப்பட்டு, குழந்தை என்ற பெயரில் ஒரு திரைக்கதையை உருவாக்கியிருந்தார். அது ஒரு சோதனை முயற்சியாகவும் தனித்தன்மை கொண்டதாகவும் இருந்தது. அந்தத் திரைக்கதையை எந்தவொரு திரைப்பட இயக்குநரும் திரைப்படமாக முயற்சிக்கவில்லை. எனினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற வங்காள இயக்குநர் ரித்விக் கட்டாக் இத்திரைக்கதையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் தனது சுபர்ணரேகா என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில் பயன்படுத்திக்கொண்டார்.

1930ஆம் ஆண்டில் ரவீந்திரர் சோவியத் யூனியனில் பயணம் செய்தபோது, உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றென இன்றளவும் கருதப்படும் பேட்டில்ஷிப் பொட்டம்கின் திரைப்படத்தைக் கண்டு களித்தார். அத்தருணத்தில் பல்வேறு திரைப்பட ஸ்டூடியோக்களையும் அவர் சுற்றிப் பார்த்து, இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களோடு விவாதித்தார். இத்தகைய உரையாடலின்போது ரஷ்ய தயாரிப்பில் மனித குலத்தின் வரலாறு பற்றிய ஒரு திரைப்படத்தை உருவாக்குவது குறித்தும் அவர் விவாதித்தார். எனினும் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.

ரவீந்திரரின் தொடக்க கால நண்பரும் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான எட்வர்ட் தாம்சன், ரவீந்திரர் ருஷ்யப் பயணம் மேற்கொண்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான அலெக்சாண்டர் கோர்டாவுடன் தாகூரின் படைப்புகளைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் ஏதோ காரணத்தினால் இந்த முயற்சியும் கைகூடவில்லை.

ரவீந்திரரின் படைப்புகளைப் பொறுத்தவரையில், வங்கத் திரைப்பட உலகத்தின் மும்மூர்த்திகளாக விளங்கிய சத்யஜித் ரே, ரித்விக் கட்டாக், மிருணாள் சென் ஆகியோர் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடித்ததை நம்மால் காண முடிகிறது. வங்கத் திரையுலகில் சூறாவளியாக வெளிப்பட்டு, உலகப் புகழ்பெற்றவரான சத்யஜித் ரே, இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க, ரவீந்திரரின் நூற்றாண்டை ஒட்டி, 1961ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார். இதே தருணத்தில் மூன்று வெவ்வேறு காலத்திய ரவீந்திரரின் சிறுகதைகளை மையமாகக் கொண்டு தீன் கன்யா என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தார். சத்யஜித் ரேயின் இந்த முயற்சிகளில் ரவீந்திரரின் படைப்புகளுக்கான காப்புரிமையை வைத்திருந்த விஸ்வபாரதி வழக்கமான வகையில் தலையீடு எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரேயின் உலகளாவிய புகழ், அதுபோக அவரது முன்னோர்களுக்கும் ரவீந்திரரின் குடும்பத்தினருக்கும் இருந்து வந்த நீண்ட கால உறவு ஆகியவை விஸ்வபாரதியின் அமைதிக்குக் காரணமாக இருக்கக்கூடும். இதைத் தொடர்ந்து, ரவீந்திரரின் நஷ்டனீர் கதையைக் கொண்டு சாருலதா, கரே பாயிரே ஆகிய படங்களை அவர் எடுத்தபோதும் எவ்வித தலையீட்டையும் எதிர்கொள்ளவில்லை.

ஆனால் ரித்விக் கட்டாக், மிருணாள் சென் ஆகிய இருவரும் நேரடியாக ரவீந்திரரின் படைப்பு எதையும் நேரடியாகத் திரைப்படமாகும் முயற்சியில் ஈடுபடவேயில்லை. மேலே குறிப்பிட்ட ரவீந்திரரின் திரைக்கதையின் முதல் இரண்டு வரிகளை மட்டுமே தனது சுபர்ணரேகா திரைப்படத்தில் கட்டாக் பயன்படுத்திக் கொண்டது போலவே, வேறு ஒரு சில திரைப்படங்களில் ரவீந்திர சங்கீத பாடல்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். அதைத்தாண்டி, அவரது எழுத்துக்களைத் திரைவடிவமாக்கும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. கோமள் காந்தார் திரைப்படத்தில் ரவீந்திரரின் ஒரு பாடல் பின்னணியில் ஒலிக்கும் ஒரு காட்சியில் சாந்திநிகேதனையும் கோவாய் நதிப் படுகையையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். அதேநேரத்தில் ரவீந்திரரின் நாடகங்கள் பலவற்றையும் பயன்படுத்தி புதிய வடிவில் நாடகங்களை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிருணாள் சென்னைப் பொறுத்தவரையில், அவரது மிகவும் புகழ்பெற்ற, வங்கப் பஞ்சத்தைப் பற்றிய திரைப்படமான பைஷே ஷ்ராவண் (1960) என்ற தலைப்பு அன்றைய வங்காள அறிவுஜீவிகளிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. பைஷே ஷ்ராவண் (ஷ்ராவண மாதத்தின் 22வது நாள்) என்பது ரவீந்திரரின் மறைவு தினத்தைக் குறிக்கும் ஒன்றாக வங்காளிகளின் மனதில் ஆழப் பதிந்து போயிருந்த தருணம் அது. இந்நிலையில் அன்றைய தணிக்கைக் குழு உறுப்பினரான அபூர்வகுமார் சந்தா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். பைஷே ஷ்ராவணுக்கு முந்தைய நாள் அல்லது பிந்தைய நாள் என்று தலைப்பினை மாற்றுமாறு அவர் வற்புறுத்தினார். ஆனால் மிருணாள் சென் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அந்தக் குறிப்பிட்ட நாளானது கதாநாயகியின் திருமண நாள். வங்கப் பஞ்சத்தின் பின்னணியில், தன் திருமண நாளிலேயே அவள் தற்கொலை செய்து கொள்கிறாள் என்ற வகையில், அந்தப் பெயர் மிகுந்த முக்கியத்துவமானது. அதற்கும் ரவீந்திரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலையில், திரைப்படத்தின் தலைப்பை மாற்ற முடியாது என்று சென் உறுதியோடு இருந்தார். இறுதியில் டெல்லியில் இருந்துதான் அவர் தணிக்கைச் சான்றிதழைப் பெறவேண்டியிருந்தது.

இவ்வாறு ரவீந்திரரின் படைப்புகளின் காப்புரிமையும், விஸ்வபாரதி நிர்வாகம் அதைக் கையாண்ட முறையும், பல திறமைமிக்க படைப்பாளிகளை நெருங்கவிடாமல் செய்துவிட்டது என்றே கூறலாம். அது விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு திரைப்படமாக, நாடகமாக, தொலைக்காட்சித் தொடராக என பல்வேறு வடிவங்களில் இன்றும் பரவலாக புதியதொரு பார்வையோடு, கையாளப்பட்டு வருவதைக் காணும்போது அவரது படைப்புகள் வரவிருக்கும் காலத்திலும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *