Skip to content
Home » தாகூர் #50 – ரவீந்திரரும் கல்விப்புலமும்

தாகூர் #50 – ரவீந்திரரும் கல்விப்புலமும்

Sriniketan

இந்த இயலை எழுதத் தொடங்கியபோது மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி வந்தது. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக சாந்திநிகேதன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள செய்தியை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மகரிஷி’ தாகூர் ஒரு தியான மையமாகத் தொடங்கிய சாந்திநிகேதனை, 1901ஆம் ஆண்டில், அடுத்த தலைமுறையினருக்கான கல்வியை வழங்கும் ஒரு குருகுலமாக ரவீந்திரர் மாற்றியமைத்தார். அன்றிலிருந்து, சாந்திநிகேதன் படிப்படியாக வளர்ச்சிபெற்று, 1921இல் விஸ்வபாரதி என்ற பல்கலைக்கழகமாகத் தோற்றம் பெற்று, பல்வேறு துறைகளில் கல்வியை வழங்கும் நிறுவனமாக உருப்பெற்றது.

தொடக்கத்தில் நியமித்த மூன்று ஆசிரியர்களோடு கூடவே, தானும் ஓர் ஆசிரியராகச் செயல்பட்டதோடு, மாணவர்களின் கல்விக்கான பாடத்திட்டத்தையும் தேவைப்படும் பாடநூல்களை உருவாக்கும் பணியிலும் ரவீந்திரர் ஈடுபட்டார். ஒரு குழந்தையை முழுமையானதொரு மனிதனாக மாறுவதற்கு நல்வழிப்படுத்தும் ஒரு கருவியாக அவர் கல்வியைக் கையிலெடுத்தார்.

‘உங்களின் முதல் கேள்வி இப்படியும்கூட இருக்கலாம்: ‘கல்விப் புலத்தில் செயல்பட உங்களைத் தூண்டியது எது?’ கிட்டத்தட்ட எனது 40வது வயதுவரை பெரும்பாலான நேரத்தை நான் இலக்கியப் பணிகளில்தான் செலவிட்டுக் கொண்டிருந்தேன். நேரடிச் செயல்பாடு எதிலும் பங்கெடுப்பதற்கான விருப்பமும் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஏனெனில் அத்தகைய ‘திறமை’ ஏதும் எனக்கு இல்லை என்ற எண்ணம் என் மனதில் ஏற்கனவே ஆழமாகப் பதிந்திருந்தது… 13வது வயதிலேயே நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். இதையொன்றும் பெருமைக்காக நான் சொல்லவில்லை. வரலாற்றுப் பூர்வமான ஓர் உண்மையைத்தான் உங்களிடம் குறிப்பிடுகிறேன். கல்வி முறையில் அப்போது நிலவிய இயற்கைக்கு மாறான அழுத்தம்தான் என்னை அவ்வாறு (பள்ளிப்படிப்பை நிறுத்துவது) செய்யத் தூண்டியிருக்கும் என்று நீண்ட நாட்களுக்குப் பின்பே என்னால் உணர முடிந்தது. அப்போது இந்த நிலை எங்கு பார்த்தாலும் நிலவியது என்பதே உண்மை.’ (எனது பள்ளி (1925) என்ற நூலில் ரவீந்திரர்)

அவரது மூத்த மகன் உள்ளிட்டு, ஆறு மாணவர்களுடன் ஓர் உறைவிடப் பள்ளியாகத் தொடங்கி, அன்றைய இந்தியாவில் வேறெந்த கல்விநிலையமும் வழங்க முன்வராத வகையில் பவுத்தம், சமணம் உள்ளிட்ட இறையியல் கல்வி, ஜப்பானிய, சீன, ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகளுக்கான கல்வி, இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கான கல்வி, இவை அனைத்திற்கும் மேலாக, கலா பவன் மூலம் ஓவியம், சிற்பம், சங்கீத பவன் மூலமாக இசை, நாட்டியம், நாடகம் என கவின் கலைகளுக்கான கல்வி என இவை அனைத்தையுமே தாய்மொழி வாயிலாகக் கற்பிப்பது என்ற வகையில், சாந்திநிகேதன் அனைத்து வகையிலும் ஒரு முன்னோடியாக அன்றைய கல்விப் புலனில் உருவெடுத்தது. இந்த முன்னெடுப்புகள் அனைத்திற்கும் பின்னே, ரவீந்திரரின் ஆழ்ந்த தொலைநோக்கு இருந்தது.

இத்தருணத்தில் இந்தியாவின் மீது அன்பு கொண்டவர்கள், ரவீந்திரருடன் நட்பு பூண்டவர்கள் என பலரும் சாந்திநிகேதனில் வருகைதரு பேராசிரியர்களாக பணியாற்றி, தங்கள் அறிவுச் செல்வத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர். இவர்களில் வின்செங்க் லெவி, வில்லியம் பியர்சன், டான் யுன் ஷான், சூ பெய் ஹாங், சில்வெய்ன் லெவி, அலெக்ஸ் ஆரன்சன், க்யூலா ஜெர்மானஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். ரவீந்திரரின் நெருங்கிய நண்பரான ‘தீனபந்து’ ஆண்ட்ரூஸ் சாந்திநிகேதன் நிர்வாகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1922ஆம் ஆண்டில் நண்பர் பாட்ரிக் கெடேவிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘எக்காரணத்தைக் கொண்டும், கல்வியை வாழ்க்கையிலிருந்து பிரித்துவிடக் கூடாது என்ற மிக எளிமையான கருத்துடன்தான் நான் இந்தப் பள்ளியைத் தொடங்கினேன். கற்பிப்பதற்கான பயிற்சியெதையும் பெற்றவனல்ல; ஓர் அமைப்பினை மேலாண்மை செய்வதற்கான சிறப்பான திறமை ஏதும் என்னிடமில்லை; மக்களிடையே எதை முன்வைக்க வேண்டும் என்ற திட்டம் ஏதும் என்னிடமில்லை. என் சொந்த மனமும் வாழ்க்கையும், படிப்படியாக வளர்ச்சி பெற்றதைப் போலவே, இந்தக் கல்வி நிறுவனமும் என் கூடவே வளர்ந்தது.’

கல்விக்கான செயல்பாட்டாளர்களில் மிகவும் தனித்துவமானவராகவும் ரவீந்திரர் திகழ்கிறார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கவிஞராகவும், கலைஞராகவும் இருந்த அதே நேரத்தில், தனிச்சிறப்புமிக்க கல்வி அமைப்பொன்றினை உருவாக்கியவர் அவர் ஒருவரே ஆவார். இயற்கை குறித்த ஆழமான நுண்ணுணர்வு, படைப்புக்கலைகளோடு அவருக்கிருந்த தனித்துவமான உறவு, சர்வதேச அளவில் ஒத்துழைப்பினை வளர்த்தெடுப்பதற்கான அவரது செயல்திட்டங்கள் ஆகியவை கல்விக்கான கொள்கையில் அவருக்குச் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுத் தந்தன. சர்வதேச கல்வியின் வரலாற்றில், அவரது பங்கு அளவிடற்கரியதாகும். சாந்திநிகேதனில் இயற்கையோடியைந்த வகையிலான திறந்த வகுப்பறைகளின் மூலம், மாணவர்களிடையே படைப்பூக்கத்தையும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தியதோடு, இசை, நாடகம், நாட்டிய நாடகம், பருவகால விழாக்கள், மாணவர்களின் படைப்புகளை பதிப்பித்தல், சர்வதேச அளவிலான தொடர்புகளை நிலைநிறுத்தல் போன்ற அவரது முயற்சிகள், உலக அளவில் புதியதொரு கல்விக்கான மரபை தோற்றுவித்தது.

1892ஆம் ஆண்டில் கல்வி குறித்து அவர் நிகழ்த்திய ‘கல்வியின் பொருத்தமற்ற நிலை’ என்ற சொற்பொழிவுதான் அப்போது இந்தியாவில் நிலவிவந்த ஆங்கில வழிக் கல்வியை முழுமையான அளவில் விமர்சித்த ஒன்றாக இருந்தது. ஒரு குழந்தை எந்த மொழி வழி கற்க வேண்டும் என்பது, அதன் சமூக-கலாசாரச் சூழலைப் பொறுத்தது இருக்கவேண்டும் என்று அவர் வாதிட்டார். ‘பல்வேறு நிறங்களில், பல்வேறு வடிவங்களில், பல்வேறு மணங்களில், பல்வேறு வகையான அசைவுகள், பாடல்களின் மூலம், நேசம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளின் தொடர்ச்சியான பங்களிப்பின் மூலமே மனித இனம் வளர்ச்சி பெறுகிறது’ என்று குறிப்பிட்ட அவர், உடல்வளர்ச்சி, மனநலம் ஆகியவற்றை மாணவர்கள் பெறவும், தங்கள் படைப்பூக்க ரீதியான, விமர்சனபூர்வமான தகுதிகளை வளர்த்தெடுக்கவுமான ஒரு கல்விக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் முன்னுரைத்தார்.

1912ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட இங்கிலாந்து-அமெரிக்கப் பயணமும் 1913ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டதும், உலக அளவிலான அங்கீகாரத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது. இதன் விளைவாக, அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறியது. உலகின் பல நாடுகளுக்கும் மேற்கொண்ட பயணங்களின்போது, கல்விக்கான மாற்று முன்மாதிரிகளை அவர் தேடிக்கொண்டே இருந்தார். இதன்மூலம் பெற்ற கல்விக்கான உதவி சாதனங்களைச் சேகரித்து, சாந்திநிகேதன் ஆசிரியர்களுக்கு அவர் தொடர்ந்து அனுப்பி வந்தார். இத்தாலி நாட்டின் மரியா மாண்டிசோரியின் கல்விமுறைகளைப் பற்றி அவர் அறிந்து கொண்டதோடு, தான் ஆசிரியராக இருந்த தத்துவபோதினி பத்ரிகாவில் விரிவானதொரு கட்டுரையையும் அவர் எழுதினார்.

அன்று மதராஸ் நகரில் இருந்து செயல்பட்டு வந்த தியோசாஃபிகல் சொசைட்டியில் 1919ஆம் ஆண்டில் ‘இந்திய கலாசாரத்திற்கான மையம்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவில், ஒரு கல்வி மையத்தின் நீடித்த தன்மை, கலாசார ரீதியான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான திட்ட வரைபடம் ஒன்றையும் அவர் முன்வைத்தார். ‘நமது வாழ்க்கையின் பொருளாதார, அறிவார்ந்த, அழகியல் தன்மைகொண்ட, சமூகரீதியான, ஆன்மீகரீதியான அம்சங்கள் அனைத்தோடும் முழுமையான தொடர்பு கொண்டதாக நமது கல்வி இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். மேலும் ‘நமது பயிற்சியும் அறிவும் நமது சுற்றுச்சூழலோடு உள்ளார்ந்த நட்பு கொண்டிருப்பதை ஒவ்வொரு முறையும் நம்மை உணரச் செய்வதாக இருப்பதே உண்மையான கல்வி’ என்றும் அவர் கூறினார்.

ஜப்பானிய பயணத்தின்போது ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில், ‘தற்போதைய யுகத்தைப் போல பல்வேறு இனங்களும் ஒன்றாகச் சேரும்போது, கூட்டம் சேரும்படியான ஒன்றாக, அது இருந்துவிடக் கூடாது. ஓர் உறவுத் தொடர்பு அவர்களுக்குள் இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதாகவே நேரிடும். இந்த யுகத்தின் நோக்கத்தை ஒவ்வொரு குழந்தையும் உணர்ந்து, அதை நிறைவேற்ற உதவுவதாக கல்வி இருக்க வேண்டுமே தவிர, பிளவுகளை உருவாக்குவது, தேசிய ரீதியான ஒவ்வாமைகளை பின்பற்றுவது என்பதுபோன்ற பழக்கத்தை உருவாக்கிக் கொண்டு, இந்த யுகத்தின் நோக்கத்தைத் தோற்கடிப்பதாக அது ஆகிவிடக் கூடாது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கல்வி குறித்த சிந்தனைகள் எவ்வாறு பரிணாமம் பெற்றன என்பதை, அவரது எழுத்துகள், உரைகள், செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம் என விஸ்வபாரதியின் முன்னாள் துணைவேந்தரும் ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியருமான சவ்யசாச்சி பட்டாச்சார்யா குறிப்பிடுகிறார். 1892முதல் 1904வரையிலான முதல் கட்டத்தில் அறிவுப் பரவலும் அதனை ஏற்கும் தன்மையும் தாய்மொழி வழிக் கல்வியினால்தான் மேம்படும் என்பதே இந்தக் கட்டத்தில் அவரது முக்கிய கருதுகோளாக இருந்தது.

1905முதல் 1915 வரையிலான இரண்டாவது கட்டத்தில், காலனிய கல்வி முறையின் ‘மேற்கைப் பின்பற்றுவது’ என்ற போக்கிலிருந்து விடுபட்டு, இந்திய மக்களின் இயல்பிற்கு உண்மையாக இருப்பதன் மூலம், தேசிய கல்வி நிறுவனங்கள் நாட்டை விடுவிப்பதாக அமையும் என்ற நம்பிக்கையை உருவாக்கும்படியான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். 1916முதல் 1932 வரையிலான மூன்றாவது கட்டத்தில், ஆங்கிலக் கல்வி, தேசியக் கல்வி ஆகிய இரண்டு முறைகளின் மீதும் அவருக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியை காண முடிந்தது. 1919ஆம் ஆண்டில் சாந்திநிகேதன் பத்திரிக்கையில் அவர் எழுதிய ‘அதிருப்தியின் காரணி’ என்ற கட்டுரை புதியதொரு மாற்றை முன்வைப்பதாக இருந்தது. குறிப்பாக, பள்ளி-கல்லூரி வளாகங்களுக்கு வெளியே எழுத்தறிவையும் கல்வியையும் பரப்ப முக்கியத்துவம் தரவேண்டும். இந்த சிந்தனை 1930களின் மத்தியிலிருந்து ’லோக சிட்சை’ – அதாவது அனைவருக்கும் கல்வி -என்பதாக அவரது பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றது.

அனைவருக்கும் கல்வி என்ற இந்தச் சிந்தனையை அவருக்குள் தூண்டிவிட்ட நிகழ்வாக 1930ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணம் அமைந்திருந்தது. பயணத்தின்போது தன் மகன் ரதீந்திரநாத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘நமது எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான மிகப்பெரிய வழி கல்வி. இவ்வளவு காலம்வரை மனித சமூகத்தில் பெரும்பான்மையானோர் இவ்வசதி மறுக்கப்பட்டவர்கள். அநேகமாக இந்தியர் எல்லோருமே இவ்வாறு மறுக்கப்பட்டவர்கள்தாம். இந்த ரஷ்ய நாட்டில் சமூகம் முழுவதும் கல்வியைப் பரப்பச் செய்யப்படும் முயற்சியைப் பார்க்க வியப்பு ஏற்படுகிறது. வெள்ளை ரஷ்யாவில் மட்டுமல்ல, நாகரிகத்தில் குறைந்த மத்திய ஆசிய மக்களிடையேயும் இவர்கள் வெள்ளத்தின் வேகத்தில் கல்வியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் அறிவியலின் இறுதிப் பலன்களை பெற வேண்டுமென்று ஓய்வின்றி முயல்கிறார்கள். நாம் ஸ்ரீநிகேதனில் என்ன செய்ய விரும்புகிறோமோ அதை இவர்கள் நாடு முழுவதிலும் சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது நம் நிலை எப்படி இருக்கிறது, அது எப்படி ஆகியிருக்கலாம் என்று ஒவ்வொரு நாளும் நான் இந்தியாவையும் இந்த நாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்து நினைத்துக் கொள்கிறேன்.

‘இவர்களது நிர்வாகத்தில் தவறேதுமில்லை என்று நான் சொல்லவில்லை. பெரிய தவறு இருக்கிறது. இந்தத் தவறால் ஒருநாள் ஆபத்து நேரும். சுருக்கமாகச் சொல்வதானால், கல்வி முறையை ஒரே அச்சில் வார்த்திருப்பதுதான் இந்தத் தவறு. வார்ப்பில் வார்க்கப்பட்ட மனிதத்தன்மை நிலைத்திராது. கல்வியின் தன்மை உள்ளத்தின் உயிர்த்துடிப்பிற்கு இசைவாக அமைந்திராவிட்டால், அந்த வார்ப்பு ஒருநாள் நொறுங்கித் தூள்தூளாகிவிடும்; அல்லது மனிதனின் உள்ளம் மரத்துப் போய்விடும், அல்லது ஓர் இயந்திரப் பதுமையாகிவிடும்.’

இந்தப் பயணத்தின்போது தனது நண்பர் பி.சி. மகலனாபிஸுக்கு எழுதிய கடிதத்தில், ‘இங்குள்ள கல்வி முறையில் காணப்படும் சோர்வில்லா முயற்சி, துணிவு, அறிவுத்திறன், தியாக உணர்வு இவற்றில் ஒரு சிறு பகுதி நம் நாட்டில் செயல்பட்டாலும் நாம் பேறு பெற்றவர்களாவோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். (ரவீந்திரரின் ரஷியக் கடிதங்கள் – வங்காளியிலிருந்து தமிழில்: சு. கிருஷ்ணமூர்த்தி).

நான்காவது கட்டத்தின் தொடக்கத்தினை 1932இல் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய தொடர் சொற்பொழிவிலும் 1935இல் வெளியான இரண்டு கட்டுரைகளிலும் காணமுடியும். காலனிய ஆட்சியில் தொடக்கக் கல்வியும், அடிப்படையான எழுத்தறிவும் சரிந்துவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். 1936ஆம் ஆண்டில் ‘புதிய கல்விக்கான கூட்டமைப்பு’ என்ற சர்வதேச அமைப்பின் இந்தியப் பிரிவின் தொடக்க மாநாட்டில் பேசுகையில், ‘சமூகத்தில் மேல்தட்டுக்கு மட்டும் கல்வியைத் தந்துவிட்டு, அதற்குக் கீழேயுள்ள அடுக்குகளை தொடாமலேயே விடுவது என்பதை எந்தவொரு நாகரிகச் சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. அத்தகையதொரு சமத்துவமின்மை அவர்களிடையே அந்நியப்படுதலை உருவாக்கி, மக்களின் ஒற்றுமைக்குக் குறுக்கே நிற்கும்’ என்றும் சுட்டிக் காட்டினார்.

இன்றைய ‘திறந்தவெளிக் கல்வி’ போன்ற ஒரு கருத்தாக்கத்தை, அதிலும் குறிப்பாக, வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் பெண்களிடையே கல்வியை கொண்டு செல்லும் நோக்கத்தோடு, அவர் முன்வைத்தபோதிலும், அன்றைய கல்விப்புலம் அதன் வலிமையை உணர்ந்து ஏற்க முன்வரவில்லை. எனினும், தன்னளவில், அனைவருக்குமான கல்வி என்ற தன் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ‘மக்கள் கல்விக்கான புத்தகத் தொடர்கள்’ (லோக சிக்‌ஷா கிரந்தமாலா) என்பதை அவர் கையிலெடுத்தார். இதற்கான முதல் முயற்சிதான் ‘பேரண்டத்தின் அறிமுகம்’ (விஸ்வ பரிச்சய்) என்ற தெள்ளிய நடையில் உருவான வானியல் அறிவியல் நூலாகும். விஸ்வபாரதியின் தொடக்க நாட்களில் இசையும் நுண்கலைகளும் கவர்ந்த அதே ஈர்ப்பினை, இப்போது அறிவியல் பெறத் தொடங்கியிருந்தது. தன் வாழ்நாளின் இறுதிநாட்களில் கல்வியறிவின் முக்கிய அங்கமாக அறிவியல் இருக்க வேண்டும் என்பதை அவர் ஆழமாக வலியுறுத்தினார்.

அறிவியல் உணர்வின் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘பெருங்காடுகளில் மரங்களிலிருந்து உதிரும் இலைகளே அந்தக் காட்டின் மண்ணை வளப்படுத்துகின்றன. அறிவியலை வளர்க்கும் நாடுகளில், அதன் துண்டுச்சிதறல்கள் உதிர்ந்து, சமூகத்தில் பரவுகின்றன. அவை, மனித மனங்களின் அறிவியல் உணர்வுக்கு உரமேற்றுகின்றன. இத்தகையதொரு வாய்ப்பு கிடைக்காமல்தான், நமது மனம் அறிவியல் உணர்வற்று இருந்தது. அதற்கான காரணம், அறிவுப்புலத்தில் மட்டுமின்றி, நடைமுறை வாழ்க்கையிலும் நாம் அடைந்த தோல்வியே ஆகும்’ என்று கூறியிருந்தார்.

தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், கல்வியில் சமத்துவம் நிலவ வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக் காட்டினார். 1940ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று ஸ்ரீநிகேதன் ஆண்டுவிழாவில் உரை நிகழ்த்துகையில், ‘அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கான பாதைகளை உருவாக்க வேண்டும். அறிவியல்ரீதியான ஒரு பண்பாட்டை உள்வாங்கி, அதையே பரந்துபட்ட மக்களின் கலாசாரமாக மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இந்தியாவின் கல்விப் பிரச்சனைக்கு அவர் வெளியிட்ட கடைசி கருத்து இதுவாகவே இருந்தது.

ரவீந்திரரின் இந்த இறுதிக் கருத்தை மேலும் ஆழமாக எடுத்துக் கூறும் வகையில்தான் விஸ்வபாரதியின் முன்னாள் துணைவேந்தரான சவ்யசாச்சி பட்டாச்சார்யா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘கல்வி என்பது எல்லா சமூகங்களிலும் கடும் போட்டிகள் நடைபெறும் ஒரு களமாகவே இருந்து வந்துள்ளது. ஏனெனில், மக்கள் மனங்களை வார்த்தெடுக்கும் ஒரு கருவியாக கல்வி இருக்கும் நிலையில், இப்போட்டி உருவாகிறது. வரலாற்றின் பெரும்பகுதியான போராட்டம் என்பது தன் நலன்களைக் காத்துக் கொள்வதற்காக மட்டுமன்று; தத்துவார்த்த தளத்தில், இப்போராட்டம் மனித மனத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க முயலும் சக்திகளுக்கும், அதற்கு விடுதலை அளிக்க முயல்வோருக்கும் இடையில் நடைபெறுவதாகும். மேலோட்டமாகப் பார்த்தால், கல்வி என்பது இருவேறு சக்திகளுக்கு இடையேயான போராட்டக்களமாக உள்ளது. வர்க்கம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றைக் காக்கவல்ல கலாசாரத்தையும் கருத்துகளையும் மனோநிலையையும் மீண்டும் உருவாக்கச் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடக்கின்றன. அதற்கெதிராக, இத்தகைய மேலாதிக்கத்திற்கு ஆட்பட்டவர்கள், தாம் மேலாதிக்கம் செய்யப்படுவதைத் தடுத்துநிறுத்தும் முகமாக, இன்றைய சமூக அமைப்பு இப்போது இருப்பதைப் போலவே தொடர்ந்து நீடிப்பதற்கு எதிரான உணர்வுகளை, கல்வி என்ற கருவியின் மூலமாக, எழுப்புகின்றனர். மேலும் இந்த ஆளும் அமைப்பின் அங்கமாக விளங்கும் அறிவுஜீவிகளில் சிலர் சமூக அமைப்பு இப்படியே நீடிப்பதைக் கேள்விக்குள்ளாக்கி, வர்க்க, சாதிய, பாலின வகைப்பட்ட மேலாதிக்கத்தை ஆழமாக விமர்சிக்கின்றனர். எனவேதான், கல்வித்துறையில் அறிவுப் பரவலைக் கட்டுப்படுத்த, தொடர்ந்து பல்வேறு வடிவங்களில், இன்றுவரை நடைபெற்றுவரும் முயற்சிகள் ஒரு பக்கமும், மறுபக்கத்தில், அதற்கு எதிராக, இந்த மேலாதிக்கத்திற்கு ஆட்பட்டோரை விடுவிப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றுக்கு இடையே இடையறாத போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.’

1932 டிசம்பரில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அனைவருக்குமான கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தார். மிக எளிமையாக, அதேநேரத்தில் மிக வலுவாக அமைந்த, அவரது வார்த்தைகளிலேயே அவற்றைத் தருவதுதான் பொருத்தமாக இருக்கும். ‘ஆங்கிலேயர் மேஜை எதிரே அமர்ந்து உண்ணும்போது பலவகைப்பட்ட உணவுகளையும் உண்பதற்கு ஏற்ப கத்தியையும், முள் கரண்டியையும், ஸ்பூனையும் பயன்படுத்துவார்கள். நம்மவரில் இம்மாதிரி உண்டு பழக்கம் இல்லாதவர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போது, ஏராளமான தின்பண்டங்களைத் தட்டில் வைத்து உபசரித்தாலும்கூட, அந்தக் கருவிகளைப் பயன்படுத்தத் தெரியாமல் விழிக்கின்றனர். இதனால், பசி இருந்தும், வயிறார உண்ண முடிவதில்லை. நம் நாட்டில் இப்போது வழங்கும் கல்வி முறையும் இந்த நிலையிலேதான் இருக்கிறது. எல்லாம்தான் இருக்கிறது. ஆனால் கற்றதில் பெரும்பகுதி வீணாகிவிடுகிறது. இங்கே நான் கல்லூரிப் படிப்பைப் பற்றிச் சொல்லவில்லை. பொதுமக்களுக்குக் கற்பிப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் சொல்கிறேன். குழாய்த் தண்ணீர் போல விநியோகமாகும் கல்வி முறையைப் பற்றிய பேச்சு இங்கில்லை. துளியும் தண்ணீர் வசதி இல்லாதவர்களுக்கு அதை எப்படி வழங்குவது என்று ஆராய்ந்து ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டியிருப்பதைப் போல, சாதாரண மக்களுக்கு கல்வியறிவை எப்படிப் புகட்டுவது என்பதைப் பற்றித்தான் சொல்ல வந்தேன். தாய்மொழி மூலம் கல்வியறிவை வழங்க ஏற்பாடு செய்யாவிட்டால், அவர்களின் கதி என்ன ஆகும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள். சிந்தனை வறட்சிதான் மிச்சமாகும்.

‘அத்தகைய பொதுமக்களின் சார்பில், வங்காளியைத் தாய்மொழியாகக் கொண்டு, அதிலேயே பழக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக, நான் இந்தப் பல்கலைக்கழகத்தாரிடம் அன்றில் பறவை போல் வேதனையுடன் வேண்டிக் கொள்வது இதுதான். உங்கள் வானளாவும் கலைக்கோயிலின் மேல் கருநீல மேகம் திரண்டு பொழிவது போல் வங்கத்தாய் அருள்மாரி பொழியட்டும். அதனால் இந்தப் பூமியெங்கும் நற்பயன் விளையட்டும். பூவும் தளிருமாக நம் இலக்கியப் பூங்கா விளங்கட்டும். வங்க மொழிக்கு நேர்ந்த இழுக்கு நீங்கட்டும். இந்தக் காலத்துக்குரிய கல்விப் பெருக்கு வங்க மக்களின் வறண்ட உள்ளத்தில் பாய்ந்து இரு கரைகளும் பொங்கி வழியட்டும். எங்கும் மகிழ்ச்சியொலி கேட்கட்டும். மன நிறைவும் ஏற்படட்டும்.’

ரவீந்திரரின் இந்த இயற்கையோடு இயைந்த கல்வியின் பெருமையை உணர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்த பலரும், சாந்திநிகேதனுக்கு மேலும் உரம் சேர்த்தனர் என்றே கூற வேண்டும். அன்றைய மதராஸ் நகரைச் சேர்ந்த அம்மு சுவாமிநாதனின் இளைய மகள் மிருணாளினி (பின்னாளில் மிருணாளினி சாராபாய்), பாலக்காட்டிலிருந்து பால கங்காதர மேனன், ஆந்திராவின் நெல்லூரிலிருந்து கோபால ரெட்டி, அலகாபாத் நகரிலிருந்து இந்திரா காந்தி ஆகியோர் சாந்திநிகேதனில் சேர்ந்து புதியதொரு வாழ்க்கைக் கல்வியைப் பெற்றனர்.

இத்தருணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி. முத்துசாமி தொடக்கத்தில் ஹோம்ரூல் இயக்கத்தின் நிறுவனர் அன்னி பெசண்ட் மதனபள்ளியில் நடத்தி வந்த பள்ளியில் படித்து வந்தார். அன்னி பெசண்ட் கைதுசெய்யப்பட்ட பிறகு, அந்தப் பள்ளி மூடப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை, முத்துசாமியை, சாந்திநிகேதனில் கல்வி கற்க அனுப்பி வைத்தார். அங்கு 1938 முதல் 1944 வரை கலாபவனில் மாணவராக இருந்த அவர், படிப்பை முடித்து விட்டு, ருக்மிணி தேவியின் கலாஷேத்ராவில் கலை ஆசிரியராக பணிபுரிந்தார். ஓராண்டிற்குப் பிறகு தன் வேலையை விட்ட அவர், மீண்டும் வேறெந்த வேலையிலும் சேரவில்லை. சாந்திநிகேதனில் பெற்ற கல்வி, அவரை பெயர், பணம், புகழ் போன்றவற்றில் ஆசையற்ற ஒருவராக மாற்றியிருந்தது. சொந்த ஊருக்கே திரும்பி, தன் வீட்டுப் பண்ணையிலேயே வாழ்நாள் இறுதிவரை அமைதியானதொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். இத்தகையதொரு மனநிலையை ரவீந்திரரின் கல்விப்புலமே தனக்குத் தந்தது என்றும், தான் வாழ்ந்த வாழ்க்கையில் எவ்வித அதிருப்தியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இத்தருணத்தில், தனது சாந்திநிகேதன் அனுபவம் குறித்து திருமதி. இந்திரா காந்தி பின்னாளில் குறிப்பிட்ட சில கருத்துகளும் இங்கு கவனம் கொள்ளத்தக்கவை என்று கருதுகிறேன். ‘சாந்திநிகேதனில் நான் கற்றுக் கொண்ட விஷயங்களில் முக்கியமானது என்று நான் கருதுவது, வெளியே எத்தகையதொரு சலசலப்பு ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு ஏதுமின்றி, அமைதியாக வாழ்வதற்கான முனைப்பாகும். நான் பிழைத்துக் கிடப்பதற்கு இது எப்போதும் உதவியுள்ளது. எனது தாத்தா (மோதிலால் நேரு) விவேகானந்தரின் பொன்மொழி ஒன்றை மிகுந்த விருப்பத்தோடு எப்போதும் கூறுவார்: ‘நீ என்ன அறிந்து கொண்டாய் என்பதை விட, நீ எதுவாக மாறினாய் என்பதுதான் வாழ்க்கையில் மிக முக்கியமானது.’ இதைத்தான் சாந்திநிகேதனில் நான் உணர்ந்தேன்.’

அவ்வகையில் ரவீந்திரரின் கல்வி முயற்சிகள் ஒரு புதிய மனிதனைப் படைப்பதில் வெற்றி பெற்றது என்பதை, சாந்திநிகேதனின் முன்னாள் மாணவர்களான மேலே குறிப்பிட்ட நபர்களோடு, சத்யஜித் ரே, அமர்த்யா சென், மகாஸ்வேதா தேவி ஆகியோரும் நமக்கு நிரூபிக்கின்றனர்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *