குடும்ப நிலங்களை மேலாண்மை செய்ய ரவீந்திரர் வங்காளத்தின் கிராமப்பகுதிக்கு ‘மகரிஷி’யால் அனுப்பி வைக்கப்பட்டபோது, இந்த இடமாற்றம் அவரை, அவரது வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றி அமைக்கப்போகிறது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது தந்தைக்குமே கூட அத்தகைய தொலைநோக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. 1890களில் தொடங்கிய இந்த வாழ்க்கையை ரவீந்திரர் காலமெல்லாம் நினைவில் வைத்திருந்தார் என்பதை அவரது எழுத்துகளில் இருந்தும் செயல்பாடுகளில் இருந்தும் நம்மால் உணர முடிகிறது.
கல்கத்தாவிலேயே பிறந்து வளர்ந்து, அகமதாபாத், பம்பாய், லண்டன் என இதர பெருநகரங்களில் மட்டுமே வாழ்ந்த அனுபவம் பெற்றிருந்த ரவீந்திரர், முதன்முறையாக வங்காளத்தின் உள் பகுதிகளுக்குச் சென்று, அங்கிருந்த கிராமப்பகுதிகளில் சுமார் பத்தாண்டுகள் வாழ்ந்து, அங்கிருந்த விவசாயிகளின் வறிய வாழ்க்கையை நேரடியாகக் கண்டபோது, புதியதொரு உலகத்திற்குள் நுழைந்தார் என்றே சொல்ல வேண்டும்.
இந்த உலகம் கொடுத்த அனுபவம் அவரைத் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராக, நாவலாசிரியராக, இயற்கையோடு நெருங்கிய உறவாடும் கவிஞராக மாற்றியதோடு, விவசாயிகளின், கிராமப்புற மக்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்களைக் கடைத்தேற்றுவதற்கான வழிகளைப் பற்றியும் சிந்திப்பவராகவும் மாற்றியது.
1939ஆம் ஆண்டு கடைசியாக அவர் ஸ்ரீநிகேதனுக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களிடையே உரையாற்றும்போது இந்த எண்ணம் எவ்வாறு தனக்குள் உருவானது என்பதைக் கீழ்கண்டவாறு விவரித்திருந்தார்:
‘நகரத்திலேயே வளர்ந்தவன் என்பதால், தொடக்கத்தில் கிராமப்புறத்தின் வயல்களும் தோட்டங்களும் சிறு ஆறுகளும் எனப் பசுமைபூத்த இயற்கை எழில் என்னைப் பெரிதும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. மெதுவாக அங்கு வசிக்கும் மக்களின் துயரத்தையும் வறுமையையும் நான் உணரத் தொடங்கினேன். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்டிப் படைத்தது. ஒரு நிலப்பிரபுவாக, எனது வரவு-செலவைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவனாக, அங்கே என் நாட்களைக் கடத்துவதை நினைத்து, நான் பெரிதும் அவமானம் அடைந்தேன். அந்த நேரத்திலிருந்துதான், அந்தக் கிராம மக்கள் சொந்த வாழ்க்கைக்கான பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்ளும் வகையில், அவர்களின் மனதை எவ்வாறு தூண்டிவிடுவது என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். வெளியிலிருந்துகொண்டு அவர்களுக்கு ஏதாவது உதவி செய்வது என்பது அவர்களுக்கு மேலும் ஊறுவிளைவிப்பதாகவே இருக்கும். எவ்வாறு அவர்களை உயிர்ப்போடு இருக்கச் செய்வது என்பதுதான் இதில் மிக முக்கியமான கேள்வியாகும். இத்தகையதொரு சிந்தனைக்கு ஆட்பட்டுத்தான் நான் செயலில் இறங்குவது என்று முடிவெடுத்தேன்.’
அப்போது அங்கிருந்த விவசாயிகளின் நிலை எப்படி இருந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். அவர் சிலாய்திஹா பகுதியில் இருந்தபோது, அந்தப் பகுதியில் இருந்த விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் 20 சதவீத வட்டிக்குக் கடன் கொடுத்து அவர்களைக் கசக்கிப் பிழிந்து வந்த ஒரு ஜோட்டேதார்தான் தினு கோஷால் என்பவர். (ஜோட்டேதார் என்போர் ஒரு தரகரைப் போல, கல்கத்தாவில் வாழ்ந்து வரும் பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, அதை உள்ளூரில் உள்ள விவசாயிகளிடம் உள்குத்தகைக்கு விட்டு அதிகமான வருவாயை ஈட்டுபவர்கள். கிராமப்புறத்தின் வளத்தையே சுரண்டித் தின்று, பெரு நிலப்பிரபுக்களின், ராஜாக்களின், ஜமீன்தார்களின் அடியாட்களாய் செயல்பட்டு வந்தவர்கள்) ‘சொன்னபடி கேட்காவிட்டால், தூக்கில் தொங்க விடுவேன்!’, ‘நல்தங்கா மார்க்கெட்டைத் தீயிட்டு நாசமாக்கி விடுவேன்’ என்று கொக்கரித்து ஆட்டம் போட்டு வந்தவரும்கூட. ஒரு முறை வணிகர்களுடன் ஏற்பட்ட சச்சரவில் இரவு நேரத்தில் அவரது அடியாட்கள் மார்க்கெட்டிற்குத் தீவைத்துவிட்டனர். கொழுந்துவிட்டெறிந்த தீயிற்கிடையே மக்களின் கூக்குரல்கள் எழுந்தன.
அத்தருணத்தில் அந்தப் பக்கமாக பல்லக்கில் வந்துகொண்டிருந்த ரவீந்திரர் சத்தம் கேட்டு அதிலிருந்து இறங்கி என்னாயிற்று என்று மக்களிடம் வினவினார். பின்பு இந்தக் கொடூரக் காட்சியை மிகுந்த மகிழ்ச்சியோடும் இறுமாப்போடும் பார்த்துக் கொண்டிருந்த தினு கோஷாலின் அருகே சென்று அவர் சொன்னார்: ‘இதுவரை எத்தனை பேரின் வயிற்றில் அடித்திருக்கிறாய் என்று உனக்கே நன்றாகத் தெரியும். இப்போது மார்க்கெட்டையும் கொளுத்திவிட்டு, மேலும் பலரின் சாபத்திற்கு ஆளாகியிருக்கிறாய். உனக்கான தண்டனை நிச்சயம் காத்திருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு இந்தச் சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணநகர் நீதிமன்றத்தில் தினு கோஷால்மீது அவர் ஒரு வழக்கையும் தொடுத்தார். நல்தங்கா பகுதி ராஜாவிலிருந்து தொடங்கி, அந்தப் பகுதியிலிருந்த நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் அனைவருமே கோஷாலின் பக்கமே நின்றனர். குஸ்திஹா நீதிபதியும்கூட அவர் பக்கம்தான். அதுவும் போதாதென்று கல்கத்தாவிலிருந்து பல வழக்கறிஞர்களையும் அவர் தனக்காக வாதாட அழைத்து வந்தார். என்றாலும் இறுதியில் ரவீந்திரருக்கே இந்த வழக்கில் வெற்றி கிடைத்தது. நஷ்ட ஈடாக, தினு கோஷாலிடமிருந்து 40 பிகா நிலத்தைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏழைகளின்மீது கரிசனம் காட்டுவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாகச் செயலில் இறங்குவதிலும் ரவீந்திரர் முன்கையெடுத்துச் செயல்பட்ட பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
1916ஆம் ஆண்டில் கல்கத்தாவில் வெளியிடப்பட்ட ராஜ்ஷாஹி மாவட்ட கெஜட்டியர் ஒரு ஜமீன்தார் என்ற வகையில் ரவீந்திரரின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பதை அதிகாரபூர்வமாகவே பதிவு செய்திருந்தது. வலிமைமிக்க ஒரு நிலப்பிரபு எப்போதுமே தன் கீழ் இருப்பவர்களை அடக்கியொடுக்குபவராகவும் இரக்கமற்றவராகவும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அதை நாம் கற்பனை செய்து பார்க்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஆனால் ரவீந்திரநாத் தாகூரின் எஸ்டேட் பற்றி ஒரு செட்டில்மெண்ட் அதிகாரியின் விவரிப்பு இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. எஸ்டேட் ஊழியர்களைப் பொறுத்தவரையில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வது கட்டாயமான ஒன்றாக இருந்தது என்பதையும் பொருத்தமானவர்களுக்கு எவ்வாறு குத்தகையிலிருந்து தாராளமனதுடன் விலக்கு அளிக்கப்பட்டது என்பதையும், கல்வி கற்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டது என்பதையும் அறக்கட்டளையின் சார்பில் மருத்துவ நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது என்பதையும் அந்த செட்டில்மெண்ட் அதிகாரி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
1893-94இல் தனது பட்டிசார் எஸ்டேட்டில் விவசாய வங்கி ஒன்றையும் அவர் நிறுவினார். இந்த வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் குத்தகை விவசாயிகளுக்கு கடன் வழங்கத் தொடங்கியது. (1913ஆம் ஆண்டில் நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணத்தை இந்த வங்கியில்தான் அவர் முதலீடு செய்திருந்தார். அத்தொகையிலிருந்து பெறப்படும் வட்டி மட்டுமே சாந்திநிகேதனுக்குக் கிடைக்கும் வகையில் அவர் ஏற்பாடு செய்திருந்தார்) இதன்மூலம் மகாஜன் என்று அழைக்கப்படும் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்க முடிந்தது. வேறு சில நிலத்தொகுதிகளில் உருளைக்கிழங்கு போன்ற புதிய பணப்பயிர்கள் அறிமுகமாயின. அதைப்போன்றே சணல், நெசவு, செங்கல்சூளை, சர்க்கரை ஆலை ஆகியவையும் தொடங்கப்பட்டது. செலிதஹாவிற்கு அருகே ஒரு நெசவுப் பள்ளியும் தொடங்கப்பட்டது. அதனோடு கூடவே கல்வியைப் பரப்புவதற்கும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. ரவீந்திரரின் குடும்ப நிலங்கள் இருந்த பகுதிகளில் மூன்று பள்ளிகளும், பெண்களுக்கென தனியாக ஒரு பள்ளியும் உருவாயின. இவை அனைத்துமே அவரது குடும்ப நிதியிலிருந்தே முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகும்.
அவரது மற்றொரு கனவான சாந்திநிகேதன் ஓரளவிற்கு நிலைகொள்ளத் தொடங்கியபிறகு, அங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுருல் என்ற கிராமத்தில் 12 ஏக்கர் நிலத்தையும் அங்கிருந்த ஒரு பழைய பங்களா, அதனைச் சுற்றிய நிலப்பகுதிகள் ஆகியவற்றையும் விலைக்கு வாங்கிய ரவீந்திரர் அந்தக் கிராமத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கென புதியதொரு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார். இதற்கு முன்பாகவே தனது மூத்த மகன் ரதீந்திரநாத், நண்பரின் மகன் சந்தோஷ் சந்திர மஜும்தார் ஆகிய இருவரையும் தன் சொந்த செலவில் வேளாண்மை அறிவியல் படிப்பினை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். (அந்நாட்களில் பிள்ளைகளை மேற்படிப்பிற்கு லண்டன், பாரீஸ் போன்றவற்றுக்கு அனுப்புவதுதான் பொதுவான வழக்கமாக வசதியுள்ளவர்களிடையே இருந்தது. அப்போது அமெரிக்கா அந்த அளவிற்கு உலக அரங்கில் நிலைகொள்ளாத நேரமது). அவர்கள் இருவரும் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றனர்.
1921ஆம் ஆண்டு அதே இல்லினாய் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பொறியியல் பயின்றுவந்த ஆங்கிலேயரான லியனார்ட் எல்மிர்ஸ்ட்டைச் சந்தித்து, தனது முயற்சிகளுக்கு உதவ முன்வருமாறு ரவீந்திரர் கேட்டுக் கொண்டார். கிராமப்புறத்தில் அந்த மக்களின் பொருளாதாரம், சமூகச் சமநிலை, அவர்களின் படைப்பூக்கத்திறன் ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்தத் தேவையான கருவிகள், அதற்குரிய கருத்தாக்கங்கள் ஆகியவற்றை திரட்டிக் கொண்டு வருமாறும் ரவீந்திரர் அவரை வேண்டிக் கொண்டார்.
இதன்படி எல்மிர்ஸ்ட் அமெரிக்காவில் தன் படிப்பை முடித்துக் கொண்டு, குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, 1921 நவம்பரில் சாந்திநிகேதனுக்கு வந்து சேர்ந்தார். அங்கு இருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்தபோது, ‘நம் நாட்டில் விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவாக இருந்து வந்துள்ளது’ என்று ரவீந்திரர் குறிப்பிட்டார்.
1921 டிசம்பரில் சாந்திநிகேதன் பள்ளியானது அதிகாரபூர்வமாக விஸ்வபாரதி என்ற பெயரில் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இதன்பிறகு, தன் அடுத்த கனவை நனவாக்கும் முயற்சியில் ரவீந்திரர் ஈடுபட்டார். அமெரிக்காவில் வேளாண்மை பொறியியலில் பட்டம் பெற்றுத் திரும்பியிருந்த ரதீந்திரநாத், சந்தோஷ் சந்திர மஜூம்தார் ஆகியோருடன் காளிமோகன் கோஷ், கவுர்கோபால் கோஷ், சந்தோஷ் மித்ரா ஆகியோரை உள்ளடக்கி நிர்வாகக் குழு உருவானது. இதன் செயல்பாட்டுக் களமாக அமைந்த கிராமப்புற மறுசீரமைப்பிற்கான நிலையம் என்ற ஸ்ரீநிகேதனுக்கு எல்மிர்ஸ்ட் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஒரு மாற்று வாழ்க்கையை முன்வைக்கும் இயக்கமான ஸ்ரீநிகேதன் 1922 பிப்ரவரி 6 அன்று தனது செயல்பாட்டை சுருல் கிராமத்தில் தொடங்கியது. ரவீந்திரர் அங்கு வாங்கியிருந்த பழைய பங்களாவிலிருந்து எல்மிர்ஸ்ட் செயல்படத் தொடங்கினார்.
1922 ஜூலை 28 அன்று எல்மிர்ஸ்ட் கல்கத்தாவில் ‘மண்வளக் கொள்ளை’ என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அச்சிடப்பட்டு முன்னரே விநியோகிக்கப்பட்ட இந்தச் சொற்பொழிவுக்கு ரவீந்திரர் ஒரு முன்னுரை எழுதியிருந்தார். குறிப்பாக, இந்தியாவின் பசுமைப் புரட்சிக்குப் பிறகு, நம்மில் பலரின் மனதிலும் ஊடாடிக் கொண்டிருக்கும் ஓர் உண்மையை சுட்டிக் காட்டுவதாகவே, எல்மிர்ஸ்ட்டின் சொற்பொழிவும் ரவீந்திரரின் முன்னுரையும் இருந்தன.
நவீன நாகரீகத்தின் துயரங்கள் பலவற்றுக்கும் காரணமாக இருப்பது, எவரும் ஏற்கத்தக்கதாக இல்லாத அளவிற்கு சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளே என அவர்கள் இருவருமே சுட்டிக் காட்டியிருந்தனர். கிராமங்களைப் புறமொதுக்கிவிட்டு, ஒழுங்கற்ற வகையில் உருவாகியுள்ள நகரங்களின் வளர்ச்சியில் இது பிரதிபலிக்கிறது. மனித வாழ்க்கை தொடரவேண்டுமெனில், இயற்கை அதற்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என்பதை எல்மிர்ஸ்ட் வலியுறுத்தினார். மண்ணின் வளமானது போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்குப் பதிலாக, அதை நாம் நமது பேராசைகளுக்கு இரையாக்கி, கொள்ளையடிப்போமெனில், இயற்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகல்ல; மிக விரைவிலேயே பழிதீர்த்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புற வளர்ச்சியை அடிநாதமாகக் கொண்ட ஸ்ரீநிகேதன் தொடக்கத்தில் விவசாயக் கல்வி, சுகாதாரம், சமூக விழிப்புணர்வு ஆகியவற்றைத் தனது செயற்களங்களாக மேற்கொண்டு செயல்படத் தொடங்கியது. அது செயல்பட்டு வந்த சுருள் கிராமத்தில் உள்ள நிலங்களில் சோளம், சணல் ஆகியவை பயிரிடப்பட்டன. செயற்கை உரங்களை படிப்படியாகக் கைவிட்டு இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைப்போன்றே சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பயிற்சித்திட்டம், கல்வி பயிற்சி முகாம்கள் ஆகியவற்றையும் ஸ்ரீநிகேதன் மேற்கொண்டது. 1924ஆம் ஆண்டில் 22 கிராமங்களைச் சேர்ந்த 34 பயிற்சி மாணவர்களுக்கு மூன்று பயிற்சி முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் இருந்துவந்த மலேரியா நோய்ப்பரவலைத் தடுப்பதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1923இல் அங்கு ஒரு மருந்தகம் உருவானது. இதன் விரிவாக்கமாக, 1932இலிருந்து சுகாதாரக் கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவை ஸ்ரீநிகேதனின் வரம்பிற்குள் வரும் கிராமங்கள் மட்டுமின்றி, அருகமை கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. கிராமங்களிலிருந்தே பெறப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலமே இவை மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் பிரச்சனைகளை தாங்களாகவே எதிர்கொண்டு வெற்றிபெறுவதற்கான மனவலிமையை கிராம மக்களிடையே வளர்க்கவும் முடிந்தது.
ஸ்ரீநிகேதன் செயல்பட்டு வந்த சுருல் கிராமத்தைச் சுற்றியிருந்த 84 கிராமங்களில் சுமார் 66,000 பேருக்கு இந்தக் கூட்டுறவு அமைப்புகளின் மூலம் சுகாதார உதவி வழங்கப்பட்டது. அருகருகேயுள்ள 12 கூட்டுறவு சங்கங்களை இணைத்த ஒரு சுகாதார ஒன்றியம் இவற்றின் மைய அமைப்பாகச் செயல்பட்டது. 1922இல் இந்தப் பகுதியில் 30 சதவீதமாக இருந்த மலேரியா பிரச்சனை இத்தகைய முனைப்பான செயல்பாடுகளின் மூலம் 1.9 சதவீதமாகக் குறைந்தது.
தொடக்கத்திலிருந்தே கைவினைப்பொருட்களுக்கான பிரிவு கிராமப்புற மறுகட்டமைப்பிற்கான ஸ்ரீநிகேதன் மேற்கொண்டு வந்த சோதனை முயற்சிகளின் அடித்தளமாக விளங்கியது. ஸ்ரீநிகேதனின் அழகிய கைவினைப் பொருட்கள் வங்காளம் மட்டுமின்றி, இந்தியாவின் இதர பகுதிகளிலும் நிலவி வந்த கலையுணர்வை முற்றிலுமாக மாற்றியமைத்தன. அதுமட்டுமின்றி, 1940களின் தொடக்கத்திலிருந்தே வங்காளத்தில் தலையெடுத்து வந்த மிகமோசமான வறட்சி, பஞ்சம் ஆகிய சூழ்நிலைகளில் வேலைகேட்டு வந்தவர்களுக்கு ஸ்ரீநிகேதன் தன் கதவுகளை அகலத் திறந்து வைத்திருந்தது. அதுவும் போக, நெசவு, தோல் போன்ற கைவினைத் தொழில்களில் பரம்பரையாக ஈடுபட்டு வந்த சாதியினர் மட்டுமின்றி, இதர சாதியினரையும் இத்தொழில்களில் ஈடுபட ஊக்குவித்து, அதில் வெற்றியும் கண்டது.
இரண்டாம் உலகப்பெரும்போர் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சூழலில், 1939 டிசம்பர் 27 அன்று எல்மிர்ஸ்ட்டுக்கு எழுதிய கடிதத்தில் ரவீந்திரர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘உலகம் முழுவதும் கவலையும் துயரமும் அதிகரித்துக் கொண்டுவரும் வேளையில், 30 கோடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில், சாந்திநிகேதனிலும் ஸ்ரீநிகேதனிலும் நான் மேற்கொண்ட வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாயிருக்கிறேன். எனது முயற்சிகள் அருகமை கிராமங்களில் உள்ள மக்களின் மனங்களை வென்றெடுக்கும் என்றும், புதியதொரு சமூக மைப்பிற்காக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு உதவும் என்றும் நான் உளப்பூர்வமாக நம்புகிறேன். ஒரு சில கிராமங்களிலாவது இதனை நம்மால் தொடங்கி வைக்க முடியுமானால், அதுவே மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகத்தைக் கொண்டுவரும். அதன் மூலம் எனது வாழ்நாள் பணியை நிறைவேற்றியவனாவேன்.’ ஆனால் இந்த ‘வாழ்நாள் பணி’ என்பது 1890களில் இருந்து தொடங்கி அவரது வாழ்க்கையில் 50ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருந்தது. கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்துவரும் கிராமப்புறப் பணிகளையும் கூட அப்போது பலரும் சந்தேகக்கண்ணோடுதான் பார்த்து வந்தனர்.
கிராமவாசிகளின் மனப்போக்கினை மாற்றுவதும் மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. ஸ்ரீநிகேதனின் ஆறாவது ஆண்டுவிழாவின்போது ‘நகரமும் கிராமமும்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றியபோது, கிராம மக்களின் மனப்போக்கு குறித்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறியிருந்தார்:
‘எனது எஸ்டேட்டில் ஆறு வெகு தூரத்தில் இருந்தது. எனவே நீரின் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் எனது குத்தகைதாரர்களிடம், ‘நீங்கள் கிணறு வெட்டினால், அதை சிமெண்ட் வைத்து ஒரு கட்டமைப்பாக நான் மாற்றித் தருகிறேன்’ என்றேன். அதற்கு அவர்களின் பிரதிபலிப்பு மிகவும் வெளிப்படையான ஒன்றாக இருந்தது. ‘மீன் எண்ணெயிலேயே மீனை பொறிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் இப்படியாக (எங்கள் உழைப்பில்) கிணற்றை உருவாக்கி, மக்களின் தாகத்தைத் தீர்த்தமைக்காக சொர்க்கத்திற்குப் போய்விடுவீர்கள்.’ இந்த முயற்சியால் அவர்களுக்குக் கிடைக்கவிருப்பதோ ஏதோ கொஞ்சம் தண்ணீராக இருக்க, எனக்கோ நான் ஈட்டிய புண்ணியத்திற்காக, சொர்க்கம் கிடைக்கும் என்பதாகவே அவர்களின் எண்ணம் இருந்தது.’
கிராமவாசிகள் இத்தகைய மனநிலை கொண்டவர்களாக, தங்களின் மீதே நம்பிக்கை அற்றவர்களாக, மற்றவர்களை நம்பாதவர்களாக, எப்படியாயினும் நமக்கு நல்லது ஏதும் நடக்காது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். இருந்தபோதிலும், கிராம மறுகட்டமைப்பின்மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களின் முன்முயற்சிகள்தான் இந்நிலையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.
இந்தக் கிராமப்புற மறுகட்டமைப்பு நாட்டின் பொருளாதார, சமூகக் கட்டமைப்பில் புரட்சிகரமானதொரு மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கியதாக இருக்கவில்லை. எனினும் இத்தகைய சிந்தனைப் போக்கு சமூகத்திற்கு உள்ளிருந்தே உருவாவதற்கு வழிசமைப்பதாக இந்த முன்னோடியான முயற்சி இருந்தது. மக்கள் வழக்கமான தங்கள் போக்கினை மாற்றிக் கொள்வதற்கே அழுத்தம் தரப்பட்டது. ஒரு தனிநபருக்கு உள்ளிருந்தும், சமூகத்திற்கு உள்ளிருந்தும் வெளிப்படும் மாற்றமாக அது அமைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாக அது அமைந்திருந்தது.
சமூகவியல் ஆய்வாளரான சுகதா தாஸ்குப்தா ஸ்ரீநிகேதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் குறித்த ஆய்வினை அதன் தொடக்க நாட்களிலிருந்தே மேற்கொண்டு வந்தார். அவரது ஆய்வின் மூலம் 1930களில் கிராம மறுகட்டமைப்பு குறித்த கருத்தாக்கங்கள் எவ்வாறு வடிவம் பெற்றன; அடுத்த 20 ஆண்டுகளில் அவை எவ்வாறு செயல்பட்டன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. 1950களின் இறுதியில் அவர் மேற்கொண்ட ஆய்வினை 1962ஆம் ஆண்டில் ‘ஒரு கவிஞரும் ஒரு திட்டமும்’ என்ற தலைப்பில் ஒரு நூலாக அவர் வெளியிட்டார். இந்நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார்:
‘ஸ்ரீநிகேதனில் இருந்து 13 மைல் தூரத்தில் உள்ளது லால்தஹா கிராமம். இங்குள்ள மக்களின் தனிநபர் வருமானம் 1000 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் 1.1 வேலைவாய்ப்பு உள்ளது. கடந்த ஆறாண்டு காலத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு என்பதே நிகழவில்லை. இங்குள்ளவர்களின் நுகர்வும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஸ்ரீநிகேதன் செயல்பட்டு வரும் கிராமங்களுக்கு அப்பாலுள்ள மற்ற கிராமங்களை ஒப்பிடும்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, அதிகமான துணி, அறைகலன்கள், பாத்திரங்கள், டார்ச்கள், இதர கருவிகள் ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
‘இங்குள்ள ஆண்-பெண் இருபாலினத்தவருமே நூறு சதவீதம் கல்வியறிவு பெற்றுள்ளனர். பள்ளிக்குப் போகும் வயதுடைய அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கின்றனர். இந்தக் கிராமத்தின் பொழுதுபோக்கு-கேளிக்கை தேவைகளைக் கிராமத்து மக்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். (அதாவது ஆடல்-பாடல்களை அவர்களே நிகழ்த்திக் கொள்கின்றனர்) கடந்த சில தசாப்தங்களில் இப்பகுதிக்கான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் வயது வந்தோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
‘1930ஆம் ஆண்டில் ஸ்ரீநிகேதன் இந்த கிராமத்து மக்களிடையே செயல்படத் தொடங்கியபோது, அவர்கள் மிக மோசமான கடன் சுமையில் ஆழ்ந்திருந்தனர். கந்துவட்டிக் காரர்கள்தான் அவர்களை சமூகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் ஆட்டிப்படைத்து வந்தனர். ஆனால் இன்று இந்தக் கிராமத்தில் உள்ள கிராமக் கூட்டுறவுக் கடன் கழகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கிராமத்து மக்கள் இந்தக் கடன் கழகத்திற்கு மட்டுமே கடன்பட்டவர்களாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு சச்சரவு கூட தீர்விற்காக நீதிமன்றப் படிகளை ஏறவில்லை. தலையெடுக்கும் மோதல்கள் அனைத்தையும் கிராமக் கவுன்சிலே கையாண்டு தீர்த்து வைத்து வருகிறது.
‘மேலே குறிப்பிட்ட வெற்றிக்கதைகள் என்பது ஸ்ரீநிகேதன் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில சிறந்த கிராமங்களிலிருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. அது செயல்படும் பகுதிகள் அனைத்திலும் இந்த நிகழ்வுகள் அன்றாட நிகழ்வுகளாகவே உள்ளன. ஒரே மாதிரியான வளர்ச்சியை நிலைநிறுத்துவது சாத்தியமில்லை என்பதோடு, ஒவ்வொரு பகுதியுமே பாதுகாப்பான ஒரு நிலையை அடைந்துள்ளது என்பதையும் கூற வேண்டும்.’ (ஒரு கவிஞரும், ஒரு திட்டமும் – பக். 123-24)
‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது’ என்றார் மகாத்மா காந்தி. அவரது கருத்துக்கள் பலவற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ரவீந்திரர், தனது நேரடிச் செயல்பாட்டின்மூலம், கிராம மக்களின் மனதில் தன்னம்பிக்கையை உருவாக்கி, கிராமத்தை சுயச்சார்பு நிலைக்குக் கொண்டு வருவதன் மூலமே உண்மையான விடுதலையைப் பெறமுடியும். இந்த கிராமங்களின் வளத்தின் மூலம் பெறவிருக்கும் வலிமையே மேற்கத்திய உலகத்தை சம உரிமையோடு நாம் எதிர்கொள்ள வழிவகுக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு செயல்பட்டார்.
கிராம மக்களின் மனங்களை ‘விழித்தெழச்’ செய்யவேண்டும் என்று அவர் விழைந்தார். மக்களின் மனப்போக்கை மாற்ற வேண்டுமானால், ஆரம்ப நாட்களில் இருந்தே சிறுவர்-சிறுமியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாத வரையில், இதில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது என்பதை நன்கு உணர்ந்தவராகவும் அவர் இருந்ததால், கல்வியின்மீது உரிய கவனம் செலுத்தினார். அவரது விழைவு அனைத்திற்கும் அடிநாதமாகத் திகழ்வது மனித குல முன்னேற்றமே. அவரே சொன்னதைப் போல ‘மனிதன் தொடர்பான எந்தவொரு கல்வியும் மனித இயல்பைத் தனது மைய அம்சமாகக் கொண்டிருக்க வேண்டும். மனித இயல்புடன் அது எந்த அளவிற்கு இயைகிறது என்பதை காலம்தான் நிர்ணயிக்கும்.’
1908ஆம் ஆண்டில் எழுதிய ‘வழியும் முறையும்’ என்ற கட்டுரையில் அவர் கூறியிருந்தார்:
‘ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நான் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. என்றாலும் கையாலாகாத்தனம், அறியாமை என்ற தளைகளிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிராமங்களை மட்டுமாவது விடுவிக்க முடிந்தால், இந்தியா முழுவதற்கும் பொருத்தமான ஒரு தொலைநோக்கு உருவாக்கப்பட்டுவிடும்.
‘இந்தத் தொலைநோக்கினை ஒரு சில கிராமங்களில் மட்டுமே இட்டு நிரப்புவதன் மூலம் அந்த ஒரு சில கிராமங்களே எனது இந்தியாவாக மாறிவிடுகின்றன. அதை மட்டும் செய்யமுடியுமானால், உண்மையிலேயே இந்தியா நமக்கு மட்டுமே சொந்தமானதாக மாறிவிடும்.
‘நமது முயற்சியின் அளவு எப்போதுமே நமக்குப் பெருமிதத்திற்குரிய ஒரு விஷயமாக இருக்காது. ஆனால் அதில் பொதிந்துள்ள உண்மை நமக்குப் பெருமிதத்தை வழங்கும் என்று நம்புவோமாக!’
(தொடரும்)