Skip to content
Home » தாகூர் #52 – ரவீந்திரர் – உலக மனிதனுக்காக ஓங்கி ஒலித்த குரல்

தாகூர் #52 – ரவீந்திரர் – உலக மனிதனுக்காக ஓங்கி ஒலித்த குரல்

தாகூர்

‘விரிவான, புரட்சிகரமான ஒரு தத்துவத்தை நாட்டு மக்களிடையே ஆவேசமாகக் கொண்டு சென்று, ஒரே ஓர் இலக்கு அல்லது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு தனிக் கட்சியின்கீழ் அனைத்தையும் எளிதாக மையப்படுத்துவதன்மூலம் நாட்டை முன்னேற்றிவிட முடியும் என்று பிரசாரம் செய்வது மிகவும் எளிதான ஒன்றுதான். கடந்துபோன காலமே நமது பொற்காலம்; அதற்கே திரும்பவும் செல்வோம் என்றும், அந்நிய விஷயங்களை புறமொதுக்குங்கள் என்றும், இருக்கும் ஆதார வளங்களைக் கொண்டே பெருமையோடும் சுதந்திரமாகவும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் வாழ வேண்டும் என்றும் மக்களிடையே எளிதாகப் பிரசாரம் செய்யவும் முடியும். இத்தகைய குரல்களை இந்தியா ஏற்கனவே கேட்டிருக்கிறது. தாகூர் இதை உணர்ந்திருந்தார்; அதற்கு உரிய மரியாதையும் அளித்தார்; ஆனால் அதை எதிர்த்தும் அவர் போராடினார்.’ ருஷ்ய-பிரிட்டிஷ் தத்துவாசிரியர் ஐசயா பெர்லின், 1961ஆம் ஆண்டில் தாகூரின் நூற்றாண்டு விழா தருணத்தில் கூறியது.

‘நம்முடைய அனைத்து பந்தங்களுமே மற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமையாகவே உள்ளது என்ற வகையில், சக மனிதர்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெற்றிபெறும் ஒரு தனிமனிதனே உண்மையான விடுதலையைப் பெறுகிறான் என்று எவரொருவரும் நினைத்துக் கொள்ளக் கூடும். ஆனால், ஒரு வகையில் அதற்கு முரணாகத் தோன்றியபோதிலும், நமக்கு நன்றாகத் தெரிந்த உண்மை என்னவெனில், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் இந்த ஏற்பாடுதான் மனித குலத்தின் விடுதலைக்கு வழிவகுக்கிறது என்பதே உண்மை. விடுதலையின் வளர்ச்சி குறித்த வரலாறு என்பது மனித உறவுகளை மேலும் சிறப்பாக ஆக்குவதன் வரலாறே ஆகும்’ என்று சுவாமி விவேகானந்தர் தனிநபர் சுதந்திரம் குறித்தும் சமூக நல்லிணக்கம் குறித்தும் தன் பார்வையை வெளியிட்டிருந்தார்.

அவரது இந்த விசாலமான பார்வையை மகான் அரவிந்தர், மகாத்மா காந்தி ஆகியோர் இந்திய சமூகத்துடன் பொருத்திப் பார்க்க முயன்றனர். இந்த முயற்சிகளை ரவீந்திரரும் வரவேற்றார். ஆனால் இந்தக் கருத்தை வேறொரு திசையை நோக்கி எடுத்துச் சென்று வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அவரது காலத்தில் உலகமெங்கும் தலையெடுத்து, நவீன இந்திய அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய தேசியவாதம் என்ற கருத்தை மறுதலிக்கும் உரத்த குரலாகவும் அது மாறியது.

1912ஆம் ஆண்டில் அவர் எழுதிய கீதாஞ்சலியில் விடுதலைக்கான ஒரு யுகம் குறித்த தன் ஏக்கத்தை வெளிப்படுத்திய பாடலில் (‘எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ’ என்ற பாடல்) ‘குறுகிய உள்நாட்டு சுவர்களால் பிளவுபடாத ஓர் உலகத்தை’ அவர் கனவு கண்டிருந்தார். முதல் உலகப் பெரும்போர் காலத்தில் உலகம் முழுவதிலும் தேசப்பற்று என்ற பெயரில் வெடித்தெழுந்த தேசிய வாதம், மனித குலத்திற்கு மிகப் பெரியதோர் அபாயம் என்ற கருத்து அவருள் ஆழமாய் பதிந்தது. இதன் விளைவாகவே, பின்னாளில் சீனாவிலும், ஜப்பானிலும் அமெரிக்காவிலும் மேற்கொண்ட பயணங்களின்போது அவர் ஆற்றிய உரைகளில் எல்லாம், இந்தக் குறுகிய எல்லைகளைக் கடந்து, உலக மனிதனாய் உயருவதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்ற கருத்தை, அழுத்தம் திருத்தமாக, எவ்வித ஊசலாட்டமும் இன்றி, கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையிலும் அவர் வெளியிட்டார். பொது நீரோட்டத்திற்கு எதிராக இருந்த அவரது இந்தக் கருத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த எதிர்ப்பு இருந்தது என்பதே உண்மை. எனினும் அவர் தன் கருத்தை இறுதிவரை மாற்றிக் கொள்ளவே இல்லை.

இந்தப் பின்னணியில்தான் 1916ஆம் ஆண்டில், ‘மேற்குலகில் தேசியவாதம்’, ‘ஜப்பானில் தேசியவாதம்’, ‘இந்தியாவில் தேசியவாதம்’ என்ற தலைப்பில் தேசியவாதம் குறித்து மூன்று உரைகளை அவர் நிகழ்த்தினார். தேசியவாதம் என்ற பெயரில் தனிநபர் சுதந்திரம் ஒடுக்கப்படும் முயற்சி தீவிரமாகி வருகிறது என்பதே இந்த உரைகளின் அடிநாதமாக இருந்தது. அதுவே அவரது பெரும் கவலையாகவும் இருந்தது. முதல் உலகப்பெரும்போரின் பின்னணியில், மேற்குலகில் தலையெடுக்கத் தொடங்கிய தேசியவாதம், மேற்குலக நாடுகளின்கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த காலனி நாடுகளிலும் பரவத் தொடங்கியதைக் கண்டு அவர் அச்சமுற்றார். இந்திய மண்ணிற்கே உரிய வகையில் பங்கிம் சந்திரா, சுவாமி விவேகானந்தா, பிபின் சந்திர பால், மகான் அரவிந்தர் என எழுந்த இந்திய தேசியவாதத்தின் முதல் குரல்களையும் அவர் செவிமடுத்தார்.

நாட்டின் அடிப்படையான தேவைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக தேசியவாதம் இந்தியாவிற்கு மாபெரும் தீங்கினை விளைவித்துள்ளது என்றும் அவர் வாதிட்டார். ‘இந்தியாவின் உண்மையான பிரச்சனை என்பது அரசியல் தன்மை கொண்டதல்ல; அது சமூகத்தன்மை கொண்டதாகும்.’ இந்த சமூகத்தின் அவசரத் தேவைகளை புறக்கணித்து விட்டு, (விடுதலை என்ற) அரசியல் இலக்கினை மட்டுமே பின்பற்றிச் செல்வதாக இந்தத் தேசியவாதம் உள்ளது என்பதே அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

அன்றைய காங்கிரஸில் இருந்த மிதவாதிகளோ தீவிரவாதிகளோ இந்த சமூகத்தேவைகளை உணர்ந்தவர்களாக இருக்கவில்லை. மிதவாதிகளிடம் ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் இல்லை. உள்ளிருந்து வெளிப்படும் ஆக்கப்பூர்வமான செயல்தான் இப்போது பெரிதும் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்களது அரைகுறையான கொள்கை எவ்வளவு வெற்றுத்தன்மையானது என்பதை மக்கள் உணரத் தொடங்கியபோது அவர்கள் (மக்களின்) ஆதரவை இழக்கத் தொடங்கினர். தீவிரவாதிகளோ பாரம்பரியமான இந்தியக் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் திட்டத்தை மேற்கொண்டிருந்தனர். உண்மையில் இது மேற்கத்திய தேசியவாதத்தின் நகலைத் தவிர வேறில்லை. அவர்களின் கருத்தாக்கங்கள் மேற்கத்திய வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியாவிற்கே உரிய தனித்துவமான பிரச்சனைகள் குறித்து அவர்கள் கவலைப்படவே இல்லை. நம்மை இறுகப் பிணித்திருக்கும் சமூக அமைப்பு, பாரம்பரியத்தின் அதிகாரத்தை ஏற்று அதைக் குருட்டுத்தனமான பின்பற்றுதல், இன்றைய காலத்திற்குப் பொருந்தாத வகையில் செயலூக்கமற்ற நம் இயல்பு ஆகிய நமது சமூக அமைப்பில் நிலவும் அம்சங்களே அந்நிய கருத்தாக்கங்களோடு இணைந்து செயல்படுவதற்கு இந்தியாவிற்குத் தடைகளாக உள்ளன என்றும் அவர் வாதிட்டார்.

இந்தியாவிற்கு முன்னால் உள்ள உண்மையான கடமை என்பது உயரிய இயற்கைக்கு மட்டுமே உரித்தான மனிதனின் நெறிசார்ந்த, ஆன்மிகரீதியான தேவைகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட, நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதே ஆகும். மற்றவற்றை எல்லாம் புறமொதுக்கிவிட்டு, அரசியல் விடுதலையை மட்டுமே இந்தியா பின்தொடருமானால், இறையாண்மைமிக்கதொரு அரசை அதனால் பெறக்கூடும். ஆனால் அதில் பழைய சமூக, நெறிசார்ந்த நோய்கள் துடைத்தெறியப்படாமல் மேலும் பெருகியே இருக்கும் என்பதையும் நம்மால் காண முடியும். அனைத்திற்கும் மேலாக, அரசியல் விடுதலைக்கான குறுகிய வேட்கை என்பது சமூகத்தில் தனிநபரின் நெறிசார்ந்த, ஆன்மிகரீதியான சுதந்திரமே இந்தியாவின் உண்மையான இலக்காக விளங்குகிறது என்ற உண்மையை நம் கண்களில் இருந்து மறைத்து விடும்.

நமது சமூகத்தின் கருத்தாக்கங்கள்தான் மனித உலகத்தை உருவாக்கியுள்ளது. எனினும், நமது மனம் அந்தக் கருத்தாக்கங்களில் இருந்து விலகிப் போய், அதிகாரப்பசிக்கு ஆளாகி விடும்போது, அத்தகையதொரு மனநிலையில் பிறழ்வானதோர் உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம். அங்கே நமது வலிமை என்பது நல்வாழ்வாகவோ அல்லது நமது விடுதலை என்பது சுதந்திரமாகவோ இருப்பதில்லை. எனவே, நமது மனம் விடுதலைபெறாத ஒரு நிலையில், அரசியல் விடுதலையானது நமக்கு உண்மையான விடுதலையை அளிப்பதில்லை.

இன்றும்கூட மற்ற நாடுகளில் அரசியல் விடுதலை பெற்றவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கவில்லை. அவர்கள் வலிமை கொண்டவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களிடையே தூண்டிவிடப்பட்டுள்ள பேரார்வமானது விடுதலை என்ற பெயரில் அடிமைத்தனம் மிக்க மாபெரும் அமைப்புகளையே உருவாக்கியிருக்கிறது. பணத்தை ஈட்டுவதையே தங்களின் அதிகபட்ச குறிக்கோளாக மாற்றிக் கொண்டவர்கள் பணக்காரர்களுக்கு அல்லது பணத்தைப் பிரதிநிதிநிதித்துவப் படுத்துவோருக்கு தங்கள் வாழ்க்கையையும் ஆன்மாவையும் தங்களையும் அறியாமலேயே விற்று வருகின்றனர். தங்களின் அரசியல் அதிகாரம் குறித்தும், அந்நிய இனத்தவரின் மீதான தங்கள் மேலாதிக்கம் குறித்தும் பெருமிதம் கொண்டவர்கள், அதை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்குத் தேவையான அமைப்புகளிடம் தங்கள் சுதந்திரத்தையும் மனிதத்தன்மையையும் அடகு வைத்து விடுகின்றனர்.

சுதந்திரமானவை என்று கருதப்படும் நாடுகளிலும்கூட, பெரும்பாலானோர் சுதந்திரமானவர்களாக இல்லை. தங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதைப் பற்றித் தெரியாதவர்களாக, மிகச் சிறுபான்மையினரால் அவர்கள் வழிநடத்தப்படுகின்றனர். நெறிமுறை சார்ந்த, ஆன்மிகரீதியான விடுதலையே தங்கள் இலக்கு என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாலேயே இது சாத்தியமாகிறது. தங்களின் அதீதமான விருப்பங்களைக் கொண்டு, அவர்கள் மிகப்பெரும் சுழல்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அவற்றின் அபரிமிதமான சுழற்சியிலிருந்து வெளிப்படும் வேகத்தையே அவர்கள் தங்களின் சுதந்திரம் என்று கருதிக் கொள்கின்றனர். மரணம் எவ்வாறு நிச்சயமான ஒன்றோ, அதைப் போலவே, அவர்களை மூழ்கடிக்கவிருக்கும் அழிவும் நிச்சயமான ஒன்றுதான். ஏனெனில், மனிதனுக்கான உண்மை என்பது நெறிமுறை சார்ந்த உண்மைதான். அவனது விடுதலை என்பதும் ஆன்மிகரீதியான வாழ்க்கையில் இருந்துதான் பெறமுடியும்.

சமூகரீதியான அடிமைத்தனம் என்ற புதைகுழியின்மீது, விடுதலை என்ற அரசியல் விந்தையைக் கட்டியெழுப்பதே நமது கடமை என்று நாம் எண்ணுவதற்கு இதுவே காரணமாகும். அரசியல் விடுதலையே நம்மை விடுவிக்கும் என்ற பிரமையில் இன்று ஆழ்ந்திருக்கும் இந்தியர்கள், மேற்குலகின் தவறான பாடங்களை அப்படியே உண்மையென ஏற்றுக் கொண்டு, மனித குலத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை இழந்து நிற்கின்றனர். நமது சமூகத்தின், நாம் போற்றிக் கொண்டாடும் பலவீனங்களே அரசியலில் அபாயத்தை உருவாக்குவதற்கான ஆதாரங்களாக மாறும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதே செயலற்ற தன்மைதான் சமூக நிறுவனங்களில் நிலவும் உயிரற்ற வடிவங்களைப் போற்றுதல் என்ற நிலைக்கு நம்மை இட்டுச்சென்று அசைக்கமுடியாத சிறைச்சுவர்களாக நமது அரசியலை மாற்றிவிடும். மனிதகுலத்தின் பெரும்பகுதியான பிரிவினரை தாழ்வு மனப்பான்மை என்ற நுகத்தடியில் பூட்டி வைக்கும் நமது கருணையின் குறுகிய மனப்பாங்கு நமது அரசியலிலும் அதே அநீதியை நீடிக்கச் செய்வதை உறுதிப்படுத்திவிடும். தேசியவாதத்தை இந்தியா கையிலெடுத்துள்ளது அதன் நெறிசார்ந்த, ஆன்மிகரீதியான விடுதலை என்ற அடிப்படையான ஆர்வத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவே இருக்கும் என்ற அவரது உறுதியான கருத்து இவ்வகையில் தொடக்கத்திலேயே ரவீந்திரரின் தனித்துவமான பங்களிப்பாக விளங்கியது.

இந்தக் கண்ணோட்டமே தீவிர தேசியவாதியான மகாத்மா காந்தியுடன் தவிர்க்கமுடியாத வகையில் அவர் மோதுவதற்கு வழிவகுத்தது. ‘விடுதலை என்ற மகத்தான பரிசு யாருடைய கருணையினாலும் மக்களிடம் வந்தடையாது. அதை நமக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொள்வதற்கு முன்பாக, அதனை நாம் வென்றடைய வேண்டியது அவசியமாகும். இந்தியாவின் வாய்ப்புகளைக் கைப்பற்றிய உரிமையை வைத்துக் கொண்டு நம் நாட்டை இப்போது ஆளுவோரைவிட, நெறிமுறையில் நாம் மேம்பட்டவர்கள் என்பதை நிரூபிப்பதன்மூலமே, நாம் அவர்களை வென்றடைய முடியும் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருந்தேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 14 மாத வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு 1921 ஜூலையில் ரவீந்திரர் இந்தியாவிற்குத் திரும்பியபோது, விடுதலைப் போராட்டத்தின் ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தது. எனவே இந்தப் போக்கிற்கு எதிரான அவரது போராட்டம் உடனடியாகத் தொடங்கியது. 1921 ஆகஸ்ட் 29 அன்று கல்கத்தாவில் ‘உண்மையின் அறைகூவல்’ என்ற தலைப்பில் அவர் உரைநிகழ்த்தினார். குறிப்பிடத்தக்கதொரு சொற்பொழிவாகவும் அது அமைந்திருந்தது. ஒருபுறத்தில் காந்தியின் தலைமை குறித்த ஆழமான விமர்சனத்தை முன்வைத்த அதேநேரத்தில், அந்நாட்களில் இருந்த தலைவர்கள் அனைவரையும்விடத் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முன்னோடியாக இருந்த காந்தியின் நிலைபாட்டிற்கு ஆதரவாகவும் அந்தச் சொற்பொழிவு அமைந்திருந்தது.

‘தன்னை உணர்ந்து கொள்ள அல்லது ஆன்மிகரீதியான விடுதலைக்காகப் போராடுவது என்பதே மனிதனின் இயற்கையான தன்மையாக அமைகிறது. ஒருதனிநபரின் உயர்ந்தபட்ச நோக்கமாகவும் அது தொடர்ந்து நீடிக்கிறது. தன்னை வெற்றிகொள்வதன் மூலமே இதில் வெற்றிபெற முடியும்’ என்ற விவேகானந்தர், அரவிந்தர், காந்தி ஆகியோரின் பொதுவான குறிக்கோளை முன்வைத்து தன் உரையை தொடங்கிய ரவீந்திரர், ‘தனக்கான விடுதலையை வெற்றிகொள்ளத் தவறியவர்கள், வெளியுலகத்தில் அதை அடைவதில் தோல்வியையே எதிர்கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டார்.

அரசியல்ரீதியான விடுதலை என்பது மிகப்பெருமளவில் தீர்மானகரமானதொரு விஷயம்தான். எனினும், சமூகத்தில் உள்ள தனிநபர்களை நெறிமுறைரீதியாக அல்லது ஆன்மிகரீதியாக மாற்றாமல், அது சுயராஜ்யமாக இருக்காது என்பது மட்டுமின்றி, அது சுயராஜ்யத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரவீந்திரர் தனது கருத்துகளை உரிய உவமைகளின் மூலம் விளக்க முனைந்தார். இந்த ‘உண்மையின் அறைகூவல்’ சொற்பொழிவிலும்கூட அரசியல் சீர்திருத்தம், சமூக மற்றும் நெறிமுறைகளுக்கு இடையிலான உறவு பற்றிய தனது கருத்தை விளக்க இந்த வழியை அவர் பயன்படுத்தினார். இந்த உவமையானது அவருக்கே உரியது எனினும், இந்தக் கருத்தை காந்தியும் அவரோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.

‘மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின்மீது நம் பார்வையைத் திருப்பும்போது, அவற்றின் அரசியல் குதிரைவண்டி நம் பார்வையில் தெளிவாகத் தென்படுகிறது. வண்டியின் வேகத்தையே அது பெரிதும் நம்பியுள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் குதிரைக்குப் பின்னால் உள்ள வண்டியும் குதிரையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்மிக்கதாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் பொதுவாக மறந்து விடுகிறோம். அதன் சக்கரங்கள் முறையான வகையில் அமைந்திருக்க வேண்டும். அதன் இதர பகுதிகளும் முறையான வகையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

‘இந்த வண்டி என்பது ரம்பத்தையும் சுத்தியலையும் வைத்துக் கொண்டு செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்ட ஒன்றல்ல. அதன் வடிவம் குறித்த சிந்தனை, ஊக்கம், செயல்பாடு ஆகியவையும் அதை உருவாக்கப் பயன்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் சுதந்திரமாக இருப்பது போல் தோற்றம் அளிக்கும் நாடுகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவற்றின் அரசியல் என்ற குதிரை இழுத்துச் செல்லும் வண்டியானது, சுற்றியிருப்பவர்களை எல்லாம் உறக்கத்திலிருந்து எழுப்புவதோடு, அதன் ஆட்டமானது அதில் பயணிப்பவர்களின் எலும்புகளைக் குலுக்கிப் போடுவதாகவும் இருக்கின்றன. செல்லும் வழியில் அது அடிக்கடி நின்றுபோய்விடுவதோடு, அதை முறையாகச் செயல்படும் நிலையில் வைத்திருப்பது என்பது மிகப்பெரியதொரு விஷயமாகவும் ஆகி விடுகிறது.

‘எப்படியிருந்தபோதிலும், அவற்றையும்கூட வண்டிகள் என்றுதான் கூற வேண்டும். நம்மை வந்தடைந்துள்ள வண்டியின் உறுப்புகள் ஒன்றுக்கொன்று இசைவற்றதாக இருப்பதோடு, ஒன்றுக்கொன்று முரணான பகுதிகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. கோபம் அல்லது பேராசை அல்லது வேறு ஏதாவது ஓர் உணர்வு என்பது மிகுந்த சத்தத்தை எழுப்பியபடி மிகுந்த கஷ்டத்தோடு அதை இழுத்துச் செல்வதையா நாம் அரசியல் முன்னேற்றம் என்று கூறுகிறோம்? அப்படியான நிலையில் அந்த வண்டியின் வேகம் எவ்வளவு தூரம் நீடித்திருக்கும்? அத்தகையதொரு நிலையில், குதிரையை இப்போதைக்கு தொழுவத்தில் கட்டி வைத்துவிட்டு, வண்டியை நல்ல நிலைக்கு உருவாக்குவதுதானே நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்? அதன்பிறகுதானே குதிரையை வண்டியில் பூட்ட வேண்டும்?’

சமூக சீர்திருத்தத்திற்கான காந்தியின் அணுகுமுறையானது ‘மனதின் திறப்பிற்கு’ தூண்டுதலாக இல்லாமல், அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி அதன் சிதைவுக்கே வழிவகுக்கும் என்றும் ரவீந்திரர் வாதிட்டார். தேசிய அளவில் பார்க்கும்போது, இத்தகைய போக்கானது, உலகின் பிற பகுதிகளிடமிருந்து தனிமைப்படுதல் மற்றும் விரோதப் போக்கு ஆகிய இழிவான அணுகுமுறையை உருவாக்குவதாகவும் அமையும். குறுகிய தேசியவாதத்தின் வரம்புகளை எல்லாம் உதறியெறிந்துவிட்டு, ‘உலகளாவிய மனிதத்தன்மை’ என்ற அவசரமான அறைகூவலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும் என்றும், உலகளாவிய பின்னணியில் இந்தியாவின் பரந்து விரிந்த அம்சங்களை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்ற அறைகூவலோடு இந்த ‘உண்மையின் அறைகூவல்’ சொற்பொழிவு நிறைவு பெற்றிருந்தது.

ரவீந்திரரின் ’உண்மையின் அறைகூவல்’ சொற்பொழிவிற்குப் பதிலளிக்கும் வகையில் காந்திஜி தான் நடத்தி வந்த ‘யங் இந்தியா’ வார இதழில் எழுதிய கட்டுரையில்தான் அவரை ‘நாட்டின் மகத்தான காவலர்’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘இந்த இருவரின் கருத்தோட்டங்களுமே உண்மையின் இரண்டு அம்சங்களை குறிப்பிடுவதாக அமைந்திருந்தன. அவை இரண்டையுமே புறமொதுக்கிவிட முடியாது’ என்பதுதான் ஜவாகர்லால் நேருவின் பார்வையாக இருந்தது.

கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்குப் பிறகு, ரவீந்திரரின் இதே கருத்தை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தார். 1928ஆம் ஆண்டில், காங்கிரசின் மராட்டிய பிராந்திய மாநாடு நடந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இவ்வாறு பேசினார்: ‘சமூகத்தை ஜனநாயகப்படுத்தாமல், அரசியலில் மட்டும் மக்களாட்சியை நிறுவிட உங்களால் முடியாது. இல்லை நண்பர்களே, அரசியலில் மக்களாட்சியும், சமூகப் பார்வையில் பழமைவாதத்தையும் கொண்டுள்ள விநோதமான கதம்பமாக நாம் ஆகிவிட வேண்டாம்… பிறப்பினால் கிடைக்கும் சாதகங்களும், சாதி அல்லது நம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டும்… பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்… இந்தியாவின் பல்வேறு சமுதாயங்களிடையே பிரத்தியேக நிலைமைகள் நிலவிடும் சூழல்தான் இப்போது உள்ளது. நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமானால், மதச்சார்பின்மையும், அறிவியல் பயிற்சிகளும் அவசியப்படுகின்றன… மதவெறியை குணப்படுத்துவதில் மதச் சார்பின்மையும், அறிவியல் சிந்தனைகளையும் ஒத்ததாக வேறு எதுவும் இல்லை’ என்றார்.

‘எனது கல்விப் பணியைத் தொடங்கியதிலிருந்தே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குப் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற உணர்வை பள்ளி மாணவர்களிடையே நாங்கள் வளர்த்தெடுத்து வந்தோம். இதுதான் பின்னாளில் இந்தியா முழுவதற்குமே மிகவும் தனித்துவம் மிக்கதொரு முயற்சியான கிராம மறுகட்டமைப்புக்கான பணியாக (ஸ்ரீநிகேதன்) வளர்ச்சி பெற்றது. சுற்றியிருந்த கிராமங்கள் எங்கள் கல்விப் பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டன. இயற்கையின் மீதான பரிவு, மனிதர்களுக்கான சேவை ஆகியவையும் அதில் உள்ளடங்கியிருந்தன. இத்தகைய பரிவு, சேவை போன்றவை விரிவுபடும்போதுதான் நமது மனம் உண்மையானதொரு விடுதலை உணர்வைப் பெறுகிறது. ….

‘இதனோடு கூடவே, அனைத்துவகையான இனரீதியான, தேசிய ரீதியான மாச்சரியங்களிலிருந்து விடுதலை என்ற உயரிய நிலையை அடைய வேண்டும் என்ற உந்துதல் உருவாகிறது… அனைத்து இனங்களின் ஆன்மிக ஒற்றுமையின் மீதுதான் நாம் நமது நிறுவனத்தைக் கட்டமைத்து வருகிறோம். அத்தகையதொரு நிலையில், மனித இனத்தின் மகோன்னதத்தை நம்புகின்ற, அதன்மீது கொடூரமான அவநம்பிக்கையை கொண்டிருந்தமைக்காக பிராயச்சித்தம் செய்ய விரும்புகின்ற, அனைத்து நாடுகளையும் சேர்ந்த தனிநபர்கள் சந்திக்கும் ஒரு மையமாக அது மாறவிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். என் மேற்கத்திய நாட்டுப் பயணங்களின்போது இத்தகைய உயரெண்ணம் கொண்ட நபர்களை நான் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவருமே தங்கள் லட்சியத்திற்காகத் துன்பம் துய்க்கவும் போராடவும் முன்வருபவர்களாக, புத்திசாலிகளாலும் வலிமைமிக்கோராலும் பெரும்பாலான நேரங்களில் ஒதுக்கித் தள்ளப்படுபவர்களாக இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.’ எனது கல்வி இயக்கம் (1931) நூலில் ரவீந்திரர்.

‘சர்வதேச அளவிலான கருத்துப் பரிமாற்றமே உலகத்தின் முன்னால் உள்ள ஒரே தீர்வு’ என ஆங்கிலக் கவிஞர் தாமஸ் ஹார்டி குறிப்பிட்டிருந்தார். கீழைத்தேயக் கருத்துகளும் மேற்கத்திய கருத்துகளும் சந்திக்கும் ஒரு மையப்புள்ளியாய் விஸ்வபாரதியை ரவீந்திரர் உருவாக்கியதும் இதே சிந்தனையின் அடிப்படையில்தான். அவரைப் பொறுத்தவரையில் சாந்திநிகேதன் அவரது செய்முறை பயிற்சிக்கான களமாக இருந்தது.

பல்வேறு சமூகங்களிலும் பல்வேறு பின்னணியிலும் அரைகுறையான திரிபுகள் மிகவும் வித்தியாசமான வடிவங்களை எடுக்கின்றன. ‘அச்சமில்லா மனதும் நிமிர்ந்த தலையும்’ கொண்ட ஓர் உலகிற்காக வாதிட்ட ரவீந்திரர், இத்தகைய தடைக்கற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டுமென விரும்பினார். அதில் அவர் வெற்றிபெறவில்லை என்பதும்கூட உண்மையே. எனினும், திறந்த மனதுடன், அச்சமற்ற உண்மையுடன், உறுதியோடும் அழகோடும் ரவீந்திரர் முன்வைத்த கருத்துகள் அவரது காலத்தைப் போன்றே இன்றைக்கும் இந்தியாவிற்கு மிகவும் தேவையானதாகவே உள்ளன. மேலும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், உரையாடல்களையும் விவாதங்களையும் வளர்த்தெடுப்பதன் மூலம்தான் ஜனநாயகம் செழித்தோங்குகிறது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *