Skip to content
Home » தாகூர் #53 – குருதேவும் மகாத்மாவும்

தாகூர் #53 – குருதேவும் மகாத்மாவும்

தாகூர்

இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர மாநாடு 1901ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த பல லட்சக்கணக்கான இந்தியர்களின் சார்பில் ‘அவர்களின் நலன்களைப் பாதுகாக்கக் கோரி’ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இத்தருணத்தில் அவர் ரவீந்திரரின் அண்ணன் ஜோதீந்திரநாத் தாகூரைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவில் குடியேறியிருந்த இந்தியர்களின் நிலை குறித்து காந்தி எழுதிய கட்டுரைகளில் ஒன்று வங்காளியில் மொழிபெயர்க்கப்பட்டு, அப்போது ரவீந்திரர் ஆசிரியராக இருந்து செயல்பட்ட குடும்ப இதழான பாரதியில் வெளியானது. எனினும் அவர்கள் இருவரும் அப்போது சந்தித்துக் கொள்ளவில்லை.

1914ஆம் ஆண்டில் கோபால கிருஷ்ண கோகலேயின் அறிவுரையின்பேரில், தனது தென் ஆப்பிரிக்கச் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, 1915ஆம் ஆண்டில் காந்தி இந்தியாவிற்கு வந்தார். அந்த நேரத்தில் ரவீந்திரர் வங்காளத்தையும் தாண்டி, இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்ற முதல் ஆசியர், இந்தியர் என்ற வகையில் உலகப் புகழ்பெற்றவராக உருவாகியிருந்தார். அவரது சாந்திநிகேதன் இன்னமும் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கவில்லை. அதேநேரத்தில் அவரைவிட 8 வயது இளையவரான காந்தி, விரிவான தென் ஆப்பிரிக்க அனுபவம் கொண்டவராக, சத்தியாகிரகம் – அகிம்சை என்ற அறப்போராட்டக் கருவிகளை உருவாக்கி, அதன்மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அடிபணியச் செய்த பெருமையைக் கொண்டவராக இருந்தார். அவரது தென் ஆப்பிரிக்கச் செயல்பாடுகள் இந்தியாவில் நன்கு அறியப்பட்டவையாகவும் இருந்தன.

தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திவந்த ஃபீனிக்ஸ் காலனி பள்ளி மாணவர்கள் 20 பேரை (இதில் காந்தியின் மகன்களும் அடக்கம்) இந்தியாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்தது. இந்தியாவில் உரிய ஏற்பாடு செய்யும்வரை, இந்த மாணவர்கள் சாந்திநிகேதனில் தங்கிப் படிக்க தீனபந்து ஆண்ட்ரூஸ் ஏற்பாடு செய்தார். தாகூரின் மாணவர்கள் அந்தப் பள்ளியின் இயல்பிற்கேற்ப பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க, காந்தியின் மாணவர்களோ, அவர்களது வயதிற்கு மீறியவகையில் மிகுந்த ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் இருந்தனர். இருப்பினும், இந்த இருவகைப்பட்ட மாணவர்களும் ஒருவருக்கொருவர் நன்றாகவே பழகி வந்தனர்.

காந்தி 1915ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதன்முதலாக சாந்திநிகேதன் வந்தபோது, ரவீந்திரர் அங்கு இல்லை. அவரது மூத்த அண்ணன் த்விஜேந்திரநாத் தாகூர்தான் அவரை வரவேற்று உபசரித்தார். (சாந்திநிகேதனில் தீனபந்துக்கு அடுத்தபடியாக காந்தியின்மீது பெரும் விசுவாசமும் மதிப்பும் கொண்டிருந்தவர். ரவீந்திரர் அழைப்பது போலவே பொரோ தாதா (பெரிய அண்ணா) என்றுதான் காந்தி அவரை அழைத்து வந்தார்).

இரண்டாம் முறையாக 1915 மார்ச் மாதம் காந்தி சாந்திநிகேதனுக்கு வந்திருந்தபோதுதான் இருவரும் விரிவாக உரையாடினர். இத்தருணத்தில்தான், காந்தி அவரது வழக்கப்படியே, ‘நாம் சுயநிறைவு பெறவேண்டுமெனில், சுய உறுதி மிகவும் முக்கியமானது. எனவே மாணவர்கள் தங்கள் உடலைத் தூய்மை செய்துகொள்வதைப் போலவே பள்ளியை, அதன் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதையும் தங்களது பொறுப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது ஆகியவையும் அதில் அடங்கும்’ என்ற கருத்தை முன்வைத்தார். மாணவர்களும் ஆசிரியர்களும் காந்தியின் இந்தச் சோதனை முயற்சியை ஆதரித்தனர். ரவீந்திரரும் ‘இதுவும் நல்லதொரு பரிசோதனை முயற்சிதான். சுயாட்சி பெறுவதற்கு இதுவும் ஒருவழியே’ என்று அதற்கு அனுமதியளித்தார்.

மார்ச் 10ஆம் தேதி அன்று இந்தச் சோதனை முயற்சி சாந்திநிகேதனில் தொடங்கப்பட்டது. அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு சாந்திநிகேதனை ஒளிபெறச் செய்தனர். எனினும், இந்த முனைப்பு நீண்டநாள் நீடிக்கவில்லை. காந்தியின் இந்த முயற்சியை நினைவுகூரும் விதமாக, சாந்திநிகேதனில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 10ஆம் தேதியன்று காந்தி தினம் (காந்தி புண்யாஹா) இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சமையலில் இருந்து அனைத்து வகையான தூய்மைப்பணிகளையும் இன்றளவும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காந்தி இந்தியாவிற்கு வந்து நிலைபெற்றபிறகு, வடக்கு பீகாரில் உள்ள சம்பரானில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், குஜராத்தில் கேடா பகுதியில் இருந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகமதாபாத் நகரில் நெசவாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் தனக்கே உரிய வகையில் அறப்போராட்டங்களை நடத்தி வெற்றிபெற்றார். 1919 பிப்ரவரியில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி ரவ்லட் சட்டம் என்ற கொடிய அடக்குமுறை சட்டத்தைக் கொண்டுவந்தபோதுதான் இந்தச் சட்டத்திற்கு எதிராக ஏப்ரல் 6 அன்று நாடுதழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்த காந்தி தேசிய அளவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கினார். இந்தத் தருணத்திலிருந்து, தான் மேற்கொள்ளவிருக்கும் இயக்கம் குறித்து விளக்கி, அதனை வாழ்த்தி, செய்தி அனுப்புமாறு கோரி ரவீந்திரருக்குக் கடிதம் எழுதுவதை காந்தி வழக்கமாகக் கொண்டார். இந்த நாடு தழுவிய இயக்கம் குறித்து அவர் எழுதிய கடிதம் இவ்வாறு இருந்தது:

‘நாட்டின் அரசியல் சூழலை தூய்மைப்படுத்துவதற்கான எனது இந்த முயற்சி குறித்து உங்கள் கருத்தை பெறும்வரை எனக்கு மகிழ்ச்சியிராது. உங்களைப் போன்ற நண்பர்களிடமிருந்து மோசமான கருத்துகள் வந்தாலும் நான் அதனைப் பெரிதும் மதிப்பேன். எனது பயணத் திசையை அவை மாற்றிவிடாது என்றபோதிலும், வாழ்க்கையின் சூறாவளிகள் நிறைந்த பாதைகளில் அடங்கியிருக்கும் அபாயங்களை எனக்கு முன்னறிவிக்கும் கலங்கரை விளக்கங்களாகவே அவை திகழும்.’

காந்தியின் கோரிக்கைக்கு ஏப்ரல் 12 அன்று பதிலளித்த ரவீந்திரர், ‘நல்லவர்களின் உதவியுடன் தீமையை எதிர்த்துப் போராட நீங்கள் விரும்பியபோதிலும், இந்தப் போராட்டமானது வீர நாயகர்களுக்கு உரியதே தவிர, உணர்ச்சிகளுக்கு ஆட்படுவோருக்கல்ல… ஆட்சியாளர்கள் தங்களின் கோரக்கரங்களை இப்போது வெளிப்படுத்துகின்றனர். நிச்சயமாக இது நம்மில் சிலரை மனக்கசப்பிற்கு ஆளாக்கும். அதேநேரத்தில் மற்றவர்களை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கவும் வல்லது. இத்தகையதொரு நெருக்கடியான தருணத்தில், மகத்தானதொரு மனிதராக, இந்தியாவின் இலக்கு என்று நீங்கள் கருதும் உங்களின் குறிக்கோளை அறிவித்தபடி எம்மிடையே இருக்கிறீர்கள். பகவான் புத்தரின் எக்காலத்திற்கும் உகந்த உபதேசப்படி, சாந்தத்தின் வலிமை கொண்டு கோபத்தை வெற்றிகொள்வீராக! நன்மையின் வலிமை கொண்டு தீமையை வெற்றி கொள்வீராக!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதற்கு அடுத்த நாளே, ஏப்ரல் 13 அன்று பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக் எனும் பூங்கா பகுதியில் அமைதியாகக் கூடி, ரவ்லட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மக்களை ‘குண்டுகள் தீரும்வரை’ சுட்டுத்தள்ளிய காலனிய ஆட்சி அதிகாரபூர்வமாகவே 379 பேரின் உயிரைப் பறித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியது. அதற்கு முன்பாக ஏப்ரல் 8ஆம் தேதியன்று பஞ்சாபிற்கு செல்ல முற்பட்ட காந்தியை காலனி ஆட்சி தில்லியில் தடுத்து நிறுத்தி, தில்லி-பஞ்சாப் பகுதிக்குள் அவர் நுழையக்கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்து, அவரைக் கைது செய்தது.

காந்தி கைது செய்யப்பட்டதும் நாடுமுழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்டபோதிலும், அகமதாபாத் நகரில் நிலைமை வேறுவிதமாக மாறியது. ஏப்ரல் 11 அன்று மக்கள் நேரடியாகக் களத்திலிறங்கி, ஐரோப்பியர்களையும் அரசுக் கட்டடங்களையும் தாக்கி, அதிகாரிகளின் வீடுகளைக் கொள்ளையடித்தனர். அடுத்த நாளும் இந்த வன்முறை தொடர்ந்தபோது, ராணுவப்படை வரவழைக்கப்பட்டன. பின்னர் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து ஏப்ரல் 13 அன்று காந்தி அகமதாபாத் நகருக்குத் திரும்பினார். சத்தியாக்கிரகம் என்ற அறப்போராட்டத்திற்கு பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாத நிலையில், அதற்கு அறைகூவல் விடுத்தது தனது ‘இமாலயத் தவறு’ என்று அறிவித்த காந்தி, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் வகையில் 72 மணிநேர உண்ணா நோன்பினை தொடங்கினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை வெறியாட்டத்திற்குப் பிறகு, காலனிய ஆட்சி பஞ்சாபில் கடுமையான ராணுவ சட்டத்தினை அமல்படுத்தியதோடு, பத்திரிக்கை மற்றும் தபால் தணிக்கை முறையையும் கடுமையாக்கியது. இதன்விளைவாக, இந்தப் படுகொலை தொடர்பான விவரங்கள் வெளியுலகிற்குத் தெரியவே நீண்ட நாள் ஆனது. இதற்கிடையே வெளியே சுற்றுப்பயணத்தில் இருந்த ஆண்ட்ரூஸ் மூலமாக மே மாத இறுதியில்தான் ரவீந்திரருக்கு, அவர் கல்கத்தாவில் இருந்த நேரத்தில், விவரங்கள் தெரிய வந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் படுத்த படுக்கையான அவர் ஆண்ட்ரூஸை அழைத்து, அவரை காந்தியிடம் தூதனுப்பினார். ‘காந்தி-ரவீந்திரர் இருவரும் தில்லியில் சந்தித்து, அங்கிருந்து பஞ்சாபிற்குள் நுழைய முயற்சிக்க வேண்டும். அப்போது அரசு இருவரையும் கைது செய்யும். அதுவே ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான கண்டனத்தை மக்களிடையே ஏற்படுத்துவதாக இருக்கும்’ என்பதே ரவீந்திரரின் வேண்டுகோளாக இருந்தது. அதன்படி காந்தியை சந்தித்துத் திரும்பி வந்த ஆண்ட்ரூஸ், ‘இந்தத் தருணத்தில் அரசுக்கு நெருக்கடியைத் தர தான் விரும்பவில்லை’ என்று காந்தி தெரிவித்து விட்டதாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்டதும் ரவீந்திரர் அமைதியாகிவிட்டார்.

பின்பு அவர் அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாரானார். கல்கத்தாவில் இருந்த காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாஸை நேரில் சந்தித்த ரவீந்திரர், (அநேகமாக 1919 மே 30ஆம் தேதியாக இருக்கலாம்) ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறும், தேவையானால் அந்தக் கூட்டத்திற்குத் தான் தலைமை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். அத்தகைய ஒரு கூட்டத்தில் ரவீந்திரர் மட்டுமே சொற்பொழிவாற்ற முடியும் என்று சி.ஆர். தாஸ் பதிலளித்திருக்கிறார். மேலும் அவர் மட்டுமே பேசவிருக்கின்ற அந்தக் கூட்டத்தை ரவீந்திரரே அவர் பெயரில் கூட்டலாம் என்றும் சி. ஆர். தாஸ் கூறியிருக்கிறார். இத்தகையதொரு கண்டனக் கூட்டத்தை நடத்துவதில் சி.ஆர். தாஸுக்கு உள்ள தயக்கத்தை ரவீந்திரர் இதன்மூலம் உணர்ந்து கொண்டார். இந்த மனவலி அவருக்குள் நீண்ட நாட்கள் இருந்தது. அன்று இரவு முழுவதும் உறக்கமின்றித் தவித்த அவர் மறுநாள் மே 31அன்று வைஸ்ராய்க்கு ஜாலியன் வாலாபாக் சம்பவம் குறித்து எழுதிய கடிதத்தில், தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு தனக்களித்திருந்த ‘சர்’ பட்டத்தைத் துறப்பதாக எழுதியிருந்தார். ஜூன் 2 ஆம் தேதியன்று வைஸ்ராய்க்கு அவர் எழுதிய கடிதம் நாளிதழ்களில் வெளியானது.

அதைப் போன்றே, 1921 ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில் ரவீந்திரர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது கனவுத் திட்டமான சாந்திநிகேதனை விஸ்வபாரதி என்ற பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இத்தகைய சூழலில் இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாகத் தொடங்கியிருந்தது. 1921 மார்ச் 2ஆம் தேதி ரவீந்திரர் ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதத்தில், ‘மேற்கத்திய நாடுகளுக்கும் கீழைத் தேய நாடுகளுக்கும் இடையே கூட்டுறவு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நான் இங்கே பிரசாரம் செய்து கொண்டிருக்கையில், மறுபுறத்தில் இந்தியாவில் ஒத்துழையாமை என்ற கோட்பாடு என் நாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது. நீரோட்டத்திற்கு எதிராக வாழ்க்கைப்படகை ஓட்ட வேண்டுமென்பதே என் விதியாக இருக்கிறது’ என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.

காந்திஜி முன்வைத்த ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து ரவீந்திரர் ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதங்கள் அவரது அனுமதியுடன் மாடர்ன் ரிவ்யூ இதழில் 1921 மே மாதம் வெளியானபோது, அதற்குப் பதிலளிக்கும் வகையில் ‘ஆங்கிலக் கல்வி’ மற்றும் ‘கவியின் கவலை’ ஆகிய தலைப்புகளில் காந்தியின் கட்டுரைகள் யங் இந்தியா இதழில் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து, ஆகஸ்டில் ரவீந்திரரின் சொற்பொழிவான ‘உண்மையின் அறைகூவல்’ வங்காளியில் பிரபாஸி இதழிலும் பின்னர் ஆங்கிலத்தில் மாடர்ன் ரிவ்யூ இதழிலும் வெளியானது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் யங் இந்தியாவில் 1921 அக்டோபரில் காந்தியின் ‘மகத்தான பாதுகாவலர்’ என்ற புகழ்பெற்ற கட்டுரை வெளியானது.

இருவருக்குமிடையே நடைபெற்ற இந்த விவாதத்தில் ரவீந்திரரின் விமர்சனம் கீழ்க்கண்ட அம்சங்களை கொண்டதாக அமைந்திருந்தது: ‘மகாத்மா காந்தியின் சத்யாகிரகம் என்ற ஆயுதத்தை மற்ற அரசியல்வாதிகள் ஒரு நடைமுறைத் தந்திரமாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். நாட்டு மக்களின் அன்பைத் திரட்டுவதற்கான மகாத்மாவின் பேரன்பை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. காந்தியின் செய்தியை வறட்டுத்தனமான ஒரு மந்திரமாகவே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவதாக, அரசுப்பள்ளிகளை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற அவரது அறைகூவலும் ரவீந்திரரைக் கவலையுறச் செய்தது. சிறந்த கல்வியைத் தரும் வகையில் மாற்றுக் கல்வித்திட்டம் ஏதுமில்லை. தற்போது பிரிட்டிஷார் வழங்கும் கல்வியின் தரம் மோசமானது என்று நானே பலமுறை விமர்சித்து வந்துள்ள நிலையில் ஒரே ஒரு கேள்விதான் எழுகிறது: ‘நமது மாணவர்கள் எதற்காகத் தியாகம் செய்யப்போகின்றனர்? முழுமையான கல்விக்காக அல்ல; மாறாக, கல்வியின்மைக்காக!’ இத்தகையதொரு திட்டம் நீண்டநாள் நீடிக்கவும் முடியாது.

மூன்றாவதாக, ராட்டையைச் சுற்றுவதும், அந்நியத் துணிகளை எரிப்பதும் இந்தியாவின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகிவிடாது. இறுதியாக, மேற்கத்திய நாகரீகத்தின் ‘பாவங்கள்’, குறைபாடுகள் பற்றி மட்டுமே சிந்திப்போமேயானால், நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு மூடநம்பிக்கையில் ஆழ்ந்துவிடும் போக்கு மேலும் வளருமே தவிர, மனித குலம் பற்றிய ஒட்டுமொத்தமான, விரிவான கண்ணோட்டத்தைப் பெற நாம் தவறிவிடுவோம் என்றும் அவர் கவலையுற்றார்.

1926ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தலைதூக்கிய வகுப்புவாதம், சாதியவாதம் ஆகியவற்றில் இருவருமே ஒத்த கருத்து கொண்டவர்களாக இருந்தனர் எனலாம். அதிலும் குறிப்பாக, 1926ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற வகுப்புக் கலவரம் ரவீந்திரரின் இல்லமான ஜொராசங்கோ இருந்த பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்தே தொடங்கியிருந்தது. பின்னர் இத்தகைய சம்பவங்கள் லாகூர், பானிபட், ஹைதராபாத், பாம்பே, ராவல்பிண்டி, அலகாபாத், டாக்கா, டெல்லி போன்ற இடங்களுக்கும் பரவின. இச்சூழ்நிலையில் அவர் எழுதிய ஒரு கவிதை இது:

‘கர்ப்பகிருகங்கள் ரத்தத்தில் குளிக்கின்றன
சிலைகள் ஒன்றுமற்றதாக உடைபடுகின்றன
நம்பிக்கை எனும் சிறையைச் சுற்றியுள்ள சுவர்களை
உங்களது வஜ்ராயுதத்தால் உடைத்து நொறுக்குவீராக!
பாவப்பட்ட இப்பூமிக்கு அறிவெனும் வெளிச்சத்தைக் கொண்டுவருவீராக!’

வேறொரு தருணத்தில் வகுப்புவாதம் பற்றிக் கூறுகையில் ‘மதத்தின் பெயரால் நடைபெறும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைவிட நேரடியான நாத்திகவாதமே ஏற்கத்தக்கது!’ என்றும் அவர் கூறியிருந்தார்.

1934ஆம் ஆண்டில் பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்து, பெரும் சேதம் விளைந்தபோது, ‘தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படுவோருக்குச் செய்த அட்டூழியங்களுக்கு கடவுள் அளித்த தண்டனையே இது’ என்று காந்தி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பகுத்தறிவிற்கு எவ்வகையிலும் ஒவ்வாத இந்த அறிக்கையைக் கண்டு ரவீந்திரர் அதிர்ச்சி அடைந்தார்.

‘இயற்கை நிகழ்வுகளோடு நம்முடைய நெறிமுறைகளை இணைக்கக் கூடாது. தொழிற்சாலைகளில் நடைபெறும் சுரண்டல், சிறைச்சாலைகளில் நடைபெறும் ஒடுக்குமுறை உள்ளிட்டு மனிதர்களின் குறைபாடுகள் சமூகத்தின் அடிப்படை நெறிமுறைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இயற்கையின் விதிகள் முற்றிலும் தனித்துவமானவை’ என்று குறிப்பிட்டு ரவீந்திரர் ஓர் அறிக்கையை எழுதி காந்திக்கு அனுப்பி வைத்து, அதை அவர் மூலமாகவே பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். ரவீந்திரரின் இந்த அறிக்கையைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதோடு, ஹரிஜன் இதழிலும் காந்தி வெளியிட்டார். மேலும் அதனோடு கூடவே அந்த அறிக்கைக்கான தன்னுடைய பதிலையும் அவர் வெளியிட்டிருந்தார்: ‘தொடக்கத்திலேயே குருதேவரும் நானும் மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டவர்கள் என்பதை நன்கு அறிந்திருந்தோம். என்னைப் பொறுத்தவரையில், இந்த நிலநடுக்கம் கடவுளின் கோபத்தால் வந்ததோ, அல்லது குருட்டுத்தனமான சக்திகளின் வெளிப்பாடோ அல்ல. பீகாரில் நிகழ்ந்த பேரழிவிற்கும் தீண்டாமையை கடைப்பிடிக்கும் பாவத்திற்கும் இடையிலான தொடர்பை என்னால் நிரூபிக்க முடியாது. என்றாலும் உள்ளார்ந்தவகையில் அந்தத் தொடர்பை என்னால் உணர முடியும். எனது நம்பிக்கை தவறான ஒன்றாக இருக்குமானால், அப்போதும், அது எனக்கும் என்னை நம்புவோருக்கும் நன்மையையே செய்திருக்கிறது!’ என்பதுதான் காந்தியின் பதிலாக இருந்தது.

ரவீந்திரர் அதன்பிறகு இந்த விவாதத்தை மேலும் தொடராமல் தவிர்த்துவிட்டார்.

1937ஆம் ஆண்டில் விஸ்வபாரதிக்கு நிதி திரட்ட ரவீந்திரர் அகமதாபாத் நகருக்கு வரவிருந்தது குறித்து காந்தி எழுதிய கடுமையானதொரு கடிதத்திற்கு ஒரு படைப்பாளியின் கண்ணோட்டத்தில் ரவீந்திரர் தன் நிலையை விளக்கி பதில் எழுதியபிறகு அந்தப் பிரச்சனை தணிந்து போனது.

1940 பிப்ரவரியில் இருவரும் கடைசி முறையாக சாந்திநிகேதனில் சந்தித்து பின் விடைபெறும்போது ரவீந்திரர் காந்தியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். ‘இந்த நிறுவனத்தை உங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொள்ளுங்கள். எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த, மதிப்பிடற்கரிய புதையலை சுமந்து செல்லும் ஒரு கப்பலாக விஸ்வபாரதி திகழ்கிறது. இந்த நிறுவனத்தைப் பாதுகாக்க நாட்டு மக்களின் தனிப்பட்ட கவனம் தேவைப்படுகிறது’ என்று அதில் ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார். திரும்பும் வழியில் ரயிலிலேயே கடிதத்தைப் படித்துவிட்டு, அதற்குப் பதிலெழுதிய காந்தி ‘என் இரண்டாவது இல்லமாகத் திகழும் சாந்திநிகேதனைப் பாதுகாப்பதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன்’ என்று கூறியிருந்தார்.

1941 ஏப்ரலில் ரவீந்திரரின் 80வது ஆண்டு நிறைவு சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டபோது, காந்தி ‘80வயது போதாது; நூறாண்டை நிறைவு செய்யுங்கள். என் அன்பு!’ என்று ஒரு வாழ்த்துத் தந்தியை அனுப்பியிருந்தார். அதற்கு அனுப்பிய பதில் தந்தியில் ‘80 வயதென்பதே இயலாத ஒன்று எனும்போது, நூறுவயது என்பது தாங்கவொண்ணாதது!’ என்று ரவீந்திரர் பதிலளித்திருந்தார்.

ரவீந்திரர் அடிப்படையில் பல்வேறு விஷயங்களில் தன்னோடு முரண்பட்டவராக இருப்பதை காந்தி நன்கறிந்திருந்த போதிலும் ‘வெளிப்படையான விமர்சனம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. எங்கள் கருத்து வேறுபாடுகள்தான் எங்கள் நட்பை மேலும் செழிப்புறச் செய்தன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ரவீந்திரரின் மறைவிற்குப் பிறகு 1945 டிசம்பரில் காந்தி சாந்திநிகேதனுக்கு வருகை தந்தபோது, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘எங்கள் இருவருக்குமிடையே உண்மையான மோதல் எதுவுமில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். எனக்கும் குருதேவருக்கும் இடையே மோதலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற மனநிலையோடுதான் எங்கள் உறவைத் தொடங்கினேன். ஆனால் அப்படியேதுமில்லை என்ற மகத்தான உண்மையை நான் இறுதியில் அறிந்து கொண்டேன்’ என்று கூறியிருந்தார்.

தத்துவார்த்த ரீதியிலும் ஆன்மீக ரீதியாகவும் ரவீந்திரரும் காந்தியும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். ‘அருவமான இறைவன்’ என்ற பிரம்ம சமாஜ கருத்தாக்கம், உபநிடதங்களின் தாக்கம் ஆகியவற்றால் நிறுவன வழிப்பட்ட மத வழிபாட்டின்மீது ரவீந்திரர் நம்பிக்கையற்றவராக இருந்த அதேநேரத்தில், அன்றைய இந்து மதத்தில் நிலவிய தீண்டாமை, சாதிக்கொடுமை போன்றவை குறித்துப் பெரிதும் கவலை கொள்ளாதவராக, பகவத் கீதையில் கூறியிருப்பதுபோல் தீமை தலைவிரித்தாடும் போதெல்லாம் இறைவன் அவதாரமெடுத்து தர்மத்தை நிலைநாட்ட வருவான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராக காந்தி இருந்தார்.

எனினும் அடிப்படையான சில விஷயங்களில் இவர்கள் இருவரிடையேயும் முழுமையான கருத்தொற்றுமை நிலவியது என்பதையும் இங்கே வலியுறுத்திக் கூற வேண்டும். அவற்றில் ஒன்றுதான் சகமனிதர்களுக்கான சேவை என்பதாகும். காந்தியின் சேவை குறித்து ஏராளமான நிகழ்வுகள், தகவல்கள் பொதுவெளியில் உள்ளன. எனினும் இந்த விஷயத்தில் ரவீந்திரரின் ஆழ்ந்த விருப்பத்தினை அவரது படைப்புகளின்மூலம் நம்மால் காண முடியும். வங்காளத்தின் கிராமப்புறங்களின் வறிய தோற்றத்தை மாற்ற வேண்டும் என்ற அவரது சிந்தனையைச் சிறுகதைகளின்மூலமும், கட்டுரைகளின்மூலமும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த அதேநேரத்தில், தனது குடும்ப நிலங்களைக் கொண்டிருந்த கிராமங்களில் நிலவிய வறுமையை, கல்வியறிவின்மையை, ஊக்கமின்மையை மாற்றியமைக்கும் தொடர் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியே பின்னாளில் சாந்திநிகேதன் ஆகவும், ஸ்ரீநிகேதன் ஆகவும் உருப்பெற்றது.

ஏழைகளின் மீதான இந்த இருவரின் பரிவு என்பதும், அவர்களுக்கான சேவையின் மீதிருந்த ஆழ்ந்த பற்றுதலும் தன்னாட்சி (சுயராஜ்யம்) என்ற அவர்களது தொலைநோக்கோடு இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்தன. இந்த விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல; மாறாக, மனிதகுலத்தின் விடுதலையோடு அது தொடர்புடையது. மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை எவ்வித அச்சமுமின்றி, வெளியிலுள்ள ‘அரசமைப்பு’ போன்ற நிறுவனங்களை எவ்வகையிலும் சாராதவகையில் நடத்தும் திறமை பெற்றவர்களாக உருப்பெற வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது. இதனை காந்தி ‘அச்சமற்ற’ நிலையில் முன்னெடுக்க முனைந்தார் எனில், ரவீந்திரர் ‘ஆத்மசக்தி’யோடு அதனை வென்றெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவை இரண்டுமே ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கமுடியாதவை என்பதோடு, சமூகத்திற்கான சேவை, சமூகத்தின் மீதான பொறுப்பு ஆகியவற்றிலிருந்தே அவை உருப்பெற்றன என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.

அதைப்போன்றே, தன் கருத்தை ஏற்க வேறெவரும் முன்வராத போதிலும், ‘தனியாக நடைபோடு!’ (ஏக்லா சலோ ரே!) என்பதை முன்னிறுத்திய ரவீந்திரரின் பாடலை காந்தி தன் வாழ்க்கையின் இலக்காகவே மாற்றிக் கொண்டிருந்தார். சவுரிசவ்ரா வன்முறை சம்பவத்தை அடுத்து ஒத்துழையாமை இயக்கத்திலிருந்தும், அவரது வாழ்வின் இறுதிக்கணங்களில் நாட்டைப் பிளவுபடுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவராக, வன்முறை வெடித்தெழுந்த நவகாளி பகுதிக்குச் சென்று தன் அகிம்சை வழியை முன்னிறுத்திப் போராடியவராக, காந்தியின் செயல்பாடுகள் ‘தனியாக நடைபோடும்’ முயற்சிகளாகவே இருந்தன.

அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகமாக இந்தியா மாற வேண்டும் என்ற காந்தியின் விருப்பம் இறுதியில் பிரிவினைவாத வன்முறையால் சுக்குநூறாக்கப்பட்டதைப் போலவே, அகில உலக மனிதனைப் பற்றிப் பேசிவந்த ரவீந்திரரின் இறுதிக்காலத்தில் (இரண்டாம்) உலகப்பெரும்போரின் பேரழிவுக் காட்சிகளை அவர் காண வேண்டியிருந்ததும் பேரவலமான ஒன்றே ஆகும்.

கருத்துவேறுபாடுகளை வெளிப்படுத்தும் வகையிலும் ஒருவருக்கொருவர் மீதான மதிப்பைப் போற்றும் வகையிலும் தங்கள் கருத்துக்களை காந்தியும் ரவீந்திரரும் பல்வேறு தருணங்களில் தெளிவுற முன்வைத்தனர். பொதுவிஷயங்கள் குறித்தும், சமூகம் குறித்தும், அரசியல் குறித்துமான விஷயங்களை விவாதிக்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற முன் உதாரணத்தை அவர்கள் இருவருமே செயல்படுத்தினர். அவ்வகையில் பொதுவிஷயங்களை அலசி ஆராய்வது என்ற புதியதொரு பாரம்பரியத்தையே அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். குரோதமும் வெறுப்பும் அற்ற, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தைப் படைக்கும் பணியை நோக்கி இந்தியா நடைபோடத் தொடங்கியபோது, தங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் ரவீந்திரரும் காந்தியும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தனர் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

இந்த இரு ஆளுமைகளோடும் நெருங்கிய தோழமையுணர்வு கொண்டிருந்த ஆங்கிலேயரான தீனபந்து ஆண்ட்ரூஸ் வேறொரு தருணத்தில் அவர்களைப் பற்றியும், அவர்களுடனான தனது உறவைப் பற்றியும் இவ்வாறு கூறியிருந்தார்: ‘தாகூருடன் இருப்பதே மிகுந்த உத்வேகத்தைத் தருவதாகும். அவரோடு இணைந்து ஏதாவதொரு படைப்பாக்கப்பணியில் ஈடுபடுவதென்பது மிகப்பெரியதொரு பேறு ஆகும். அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உண்மையில் அதை என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறு எனவே கூறலாம். அதேநேரத்தில் தனிப்பட்ட நட்புறவிலும் கூட நான் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவே இருந்தேன். குருதேவ் உடனான நட்புறவோடு கூடவே, மகாத்மா காந்தியுடனும் நட்போடு பழகுவதற்கான மட்டற்ற மகிழ்ச்சியும் எனக்குக் கிடைத்தது. அவரது அற்புதமான ஆன்மீக பலம் முற்றிலும் புதியதொரு வகையில் என்னைக் கவர்ந்திழுத்தது. அவரது ஆளுமையும்கூட தாகூரைப் போலவே மகோன்னதமானது; படைப்பூக்கம் நிரம்பியது. எனினும் அது பெருமளவிற்கு துறவுப் போக்கினை கொண்டதாக அமைந்திருந்தது. ஒருவகையில் கூறுவதானால், அவரது ஆன்மீக உணர்வு என்பது நவீன காலத்திற்குப் பதிலாக மத்திய காலத்து இறைநம்பிக்கையைப் போன்றதாகும். அடிப்படையாகவே தாகூர் நவீனமானவர் எனில், மகாத்மா காந்தி நம் காலத்திய புனித பிரான்சிஸைப் போன்றவராவார்.’

தாகூரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும், விஸ்வபாரதி காலாண்டிதழின் ஆசிரியரும் பின்னாளில் சாகித்ய அகாதெமியின் செயலாளரும் ரவீந்திரரின் பேத்தி நந்திதாவின் கணவருமான கிருஷ்ணா கிருபளானிக்கு 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று (சிறையிலிருந்து) எழுதிய ஒரு கடிதத்தில் ஜவாகர்லால் நேரு இவ்வாறு கூறியிருந்தார்:

‘உலகத்தின் பல பகுதிகளிலும் இருந்த மிகப்பெரிய மனிதர்கள் பலரையும் நான் சந்தித்துப் பழகியிருக்கிறேன். ஆனால் எனக்குக் கிடைத்த இரண்டு மிகப்பெரும் வாய்ப்புகளாக நான் கருதுவது காந்தியையும் தாகூரையும் சந்தித்துப் பழகுவதற்குக் கிடைத்த வாய்ப்பினைத்தான். கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் உலகின் மிகச் சிறந்த இரு ஆளுமைகளாக அவர்கள் திகழ்ந்தனர் என்றே நான் கருதுகிறேன். காலத்தின் போக்கில், உலகின் மிகப்பெரும் ஜெனரல்களும், ஃபீல்ட் மார்ஷல்களும், சர்வாதிகாரிகளும், ஓயாது குரலெழுப்பும் அரசியல்வாதிகளும் மறைந்து போய், பெருமளவிற்கு மக்களால் அவர்கள் மறக்கப்பட்ட பிறகு, உலகம் இதை அங்கீகரிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

‘இன்றைய நிலைமைகளுக்கு இடையிலும்கூட (ஒருவேளை அதனால்தானோ?) ஒரே தலைமுறையில் இரண்டு மகத்தான ஆளுமைகளை இந்தியாவினால் உருவாக்க முடிந்துள்ளது என்பது என்னைப் பெரிதும் வியப்படையச் செய்கிறது. இதுவே இந்தியாவின் உயிரோட்டமான தன்மையின்மீது என்னை மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

‘இதன் மற்றொரு அம்சமும் என்னைத் தொடர்ந்து வியப்பிலாழ்த்தி வருகிறது. குருதேவரும் காந்திஜியும் மேற்கத்திய உலகில் இருந்தும், இதர பல நாடுகளில் இருந்தும், ஏராளமான விஷயங்களைக் கற்று அறிந்தவர்களாக இருந்தனர். எனினும் அவர்கள் இருவருமே குறுகிய தேச எல்லைகளுக்குள் ஆட்படாதவர்களாகவே இருந்தனர். அவர்களது வாழ்க்கையின் செய்தி உலக மக்களுக்கானதாகவே இருந்தது. இருந்தபோதிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் அவர்கள் இந்தியாவின் குழந்தைகளாக, அதன் காலம்காலமான பண்பாட்டின் வழிவந்தவர்களாக, அதன் பிரதிநிதிகளாக, அதை முன்னெடுத்து விளக்கம் கூறுபவர்களாகவே இருந்தனர். விரிந்த அறிவும் பண்பும் பெற்றவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் அடிப்படையில் தீவிரமான வகையில் இந்தியத் தன்மை கொண்டவர்களாகவே இருந்தனர். இதில் பெரிதும் வியப்பிற்குரிய அம்சம் என்னவெனில், இந்தியாவின் தெள்ளிய ஞானம், சீரிய சிந்தனை, பண்பாடு ஆகியவற்றிலிருந்து ஊக்கம் பெற்றவர்களாக இருந்தபோதிலும், இவர்கள் இருவரும் ஒருவரிலிருந்து மற்றவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருந்ததுதான்! காந்தியையும் தாகூரையும் போன்று மாறுபட்ட மனிதர்களைக் காண்பது மிகவும் அரிது!

‘ஒரே தலைமுறையில் பிறந்த இதுபோன்ற இரண்டு தனிச்சிறப்புமிக்க ஆளுமைகளை, அனைத்து வகையிலும் தன்னைப்போலவே பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளை, நமக்களித்துள்ள இந்தியாவின் காலம் கடந்த பண்பாட்டுச் செறிவினைக் கண்டு நான் பெரிதும் வியப்படைகிறேன்.’

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *