1913ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த கவிஞர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்களிடையே பெரும் வியப்பைத் தோற்றுவித்தது. பத்திரிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் அவரது பெயர் விசித்திரமானதாகவும் உச்சரிப்பதற்குக் கடினமானதாகவும் இருந்தது.
1913ஆம் ஆண்டுக்குப் பிறகு ரவீந்திரரின் கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், தத்துவார்த்தக் கட்டுரைகள், இவைபோக ஒரு சுயசரிதை ஆகியவற்றையும் லண்டனில் இருந்த மாக்மில்லன் கம்பெனி ஆங்கிலத்தில் வெளியிட்டது. அவசரகதியாக இருந்த நூற்கள் வெளிவந்ததன் விளைவாக அவற்றின் தரம் பெருமளவிற்கு சமரசத்திற்கு உள்ளானது. நோபல் பரிசு அறிவிப்பிற்குப் பிறகு அதைத் தொடர்ந்த செயல்முறையானது அவரை மீறிய ஒன்றாக இருந்தது.
1913ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு முன்பாகவே வங்காளி இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்திருந்த ரவீந்திரர், அவரது ‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமே மேற்குலகில் அறிமுகமானார். மேற்குலக இலக்கியத்தில் அவரது சமகாலத்தவர்களாக இருந்த பெல்ஜியக் கவிஞரும் நாடக ஆசிரியருமான மவுரிஸ் மேயட்டர்லிங்க் (பி. 1862), ஆங்கில எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் (பி. 1865), அயர்லாந்து கவிஞர் டபிள்யூ. பி. ஈட்ஸ் (பி. 1865), பிரெஞ்சு நாவலாசிரியரும் கட்டுரையாளருமான ரொமெய்ன் ரோலண்ட் (பி.1866), இத்தாலியத் தத்துவ அறிஞர் பெனடிட்டோ க்ரோசே (பி. 1866), ஆங்கில நாடக ஆசிரியர் ஜான் கால்ஸ்வொர்த்தி (பி. 1867), பிரெஞ்சு எழுத்தாளர் ஆந்த்ரே கிடே (பி. 1869) ஆகியோரோடு ரவீந்திரர் நட்புறவு பூண்டவராக இருந்தார். இவர்களில் இத்தாலிய;த தத்துவ அறிஞரான பெனடிட்டோ க்ரோசே தவிர, மற்றவர்கள் அனைவருமே ரவீந்திரரைப் போலவே இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்களில் ஈட்ஸ் மற்றும் கிடே ஆகியோர் கீதாஞ்சலியை மொழிபெயர்ப்பு மூலம் மேற்குலகிற்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியவர்கள். அதைப்போன்றே அவரைவிட 20 வயது இளையவரான ஜுவான் ராமோன் ஜிமனேஸ் (1881-1958) ரவீந்திரரின் கணிசமான எழுத்துகளை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்ததோடு, தன்னளவிலும் ஒரு கவிஞராக இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவராகவும் திகழ்ந்தார்.
ரவீந்திரர் நோபல் பரிசு பெற்றபிறகு, மேற்குலகில் அவரது எழுத்துகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவருக்குப் பரவலான புகழைப் பெற்றுத் தந்தன. எனினும், முதலாம் உலகப்போருக்குப் பின்பு இந்த நிலைமை மாறத் தொடங்கியது. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, ஐரோப்பியக் காலனிய அரசுகள் ஏகாதிபத்திய உணர்வோடு உலகை தங்களின் காலனி நாடுகளாக மாற்றுவதற்கு, தேசப்பற்று என்ற முழக்கத்தோடு எடுத்த முயற்சிகளை ரவீந்திரர் கடுமையாகக் கண்டித்துப் பேசத் தொடங்கியதே ஆகும்.
இதன் விளைவாக மேற்குலகில் அவருக்கிருந்த செல்வாக்கு சரியத் தொடங்கியது. இரண்டாவதாக, முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த மூன்று நூல்களைத் தவிர, அவரது புகழைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் அடுத்தடுத்து மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள் தரம் குறைந்தவையாக இருந்தன. மூன்றாவதாக, மேற்குலகில் அவரை அறிமுகம் செய்துவைத்த கீதாஞ்சலி முதலான நூல்கள் பெருமளவிற்கு கீழைத்தேய ஆன்மிகத் தளத்தின் பின்னணியில் அமைந்திருந்தன. இந்நிலையில், ‘கீழைத்தேய முனிபுங்கவர்’ என்ற ஒரு மாயத்தோற்றம் மேற்குலகில் உருவாகியிருந்தது. இந்தப் பின்னணியில் பின்னர் வெளியான அவரது நூல்கள் இந்தத் தோற்றத்திற்குப் பொருத்தமானதாக இல்லாத நிலையில் அந்த நூல்களின் விற்பனையும் பெருமளவிற்குச் சரிந்தது. ’முனிபுங்கவர்’ என்ற தோற்றத்திற்கு அப்பால் ரவீந்திரரின் பன்முகத்தன்மையை அன்றைய இலக்கிய விமர்சகர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியாமல் போனதே இதற்குக் காரணமாகும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் புழங்கிவந்த ஸ்பானிஷ் இலக்கிய உலகில் இந்த நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகள் பல நூற்றாண்டுகள் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்து, பின்னர் படிப்படியாக விடுதலைப் போராட்டங்களின் மூலம் விடுதலை பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த முன்னாள் காலனிப் பகுதிகளின் இலக்கியமானது ஐரோப்பிய கலாசாரத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முயற்சித்து வந்த நேரமது.
இத்தகைய ஒரு தருணத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றின் (இங்கிலாந்தின்) காலனியாக இருக்கும் இந்திய நாட்டிலிருந்து வெளிப்பட்டு அவர்களுக்கு அறிமுகமான ரவீந்திரரின் இலக்கியமானது அவர்களுக்குப் புதியதொரு பாதையைக் காட்டுவதாக இருந்தது. அவ்வகையில் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பில் (குறிப்பாக ஜுவான் ராமோன் ஜிமனேஸின் மொழிபெயர்ப்புகள்) வெளியான ரவீந்திரரின் பன்முகத்தன்மை கொண்ட எழுத்துகள் இந்த லத்தீன் அமெரிக்கப் பகுதியின் இலக்கிய உலகிற்கு புதியதொரு உத்வேகத்தை வழங்கின.
குறிப்பாக, ரவீந்திரரின் அர்ஜெண்டினா பயணத்தின்போது அவரை உபசரித்து நட்புணர்வை ஏற்படுத்திக் கொண்டவராக விக்டோரியா ஒகாம்போ பின்னாளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘எந்தவொரு மொழியும் தனித்து இயங்கி வளர்ந்தோங்க முடியாது. எனவே மற்ற மொழிகளைப் புறமொதுக்காமல் அவற்றிலிருந்து சிறந்தவற்றைக் கற்றுக்கொண்டே வளர முடியும் என்று ரவீந்திரர் என்னிடம் கூறியிருந்தார். அவரது அறிவுரைப்படியே பின்னர் நான் ‘சூர்’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினேன். ஸ்பானிஷ் மொழி தவிர இதர மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியங்களுக்கான மேடையாக அது வளர்ந்தோங்கியது’.
ரவீந்திரர் தன் வாழ்க்கையில் சுமார் ஏழு ஆண்டுகளை மேற்குலகிற்கான இந்தியாவின் அதிகாரபூர்வமற்ற தூதுவராக இருந்து செலவழித்திருக்கிறார். ரவீந்திரரின் 70வது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட ‘தாகூரின் தங்கப்புத்தகம்’ என்ற சிறப்பு மலரில் வெளியான ஒரு கட்டுரையில், அவரது மேற்கத்திய ரசிகர் ஒருவர், ‘வேறெந்த நபரையும்விட ரவீந்திரநாத் தாகூர்தான் இந்திய இலக்கியம்-பாடல் ஆகியவற்றின் அற்புதமான அழகியலை உலகிற்கு எடுத்துக் காட்டினார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ரவீந்திரருடன் நேரடியாகத் தொடர்பு ஏற்படும் வரையில் பெரும்பாலான மேற்குலக நாட்டு மக்களுக்கு இந்தியா என்பது மிகக் குறைந்த அளவிற்கே தெரிய வந்த, மிகக் குறைந்த அளவிற்கே நேசிக்கப்பட்டுவந்த ஒரு நாடாகத்தான் இருந்தது. மேற்குலகில் அவரைச் சந்தித்தவர்களுக்கும் அவரது உரையை கேட்டவர்களுக்கும் நவீன இந்தியாவின் உயிரோட்டமான அழகை, ஆன்மீக ரீதியான குறிக்கோள்களை அவர் அறிமுகம் செய்தார். அதன்பிறகே மேற்குலகு இந்தியாவைப் போற்றத் தொடங்கியது; நேசிக்கத் தொடங்கியது. இன்னும் கூறுவதெனில், பெரும்பாலான மேற்குலகினருக்கு இந்தியா என்பது தாகூரின் நாடாகத்தான் தெரிய வந்தது. அதன் பின்னரே காந்திஜி அவர்களுக்கு அறிமுகமானார் என்பதே உண்மை.
ரவீந்திரரின் எழுத்துகளின் மொழிபெயர்ப்பினைப் பொறுத்தவரையில், பெரும்பாலான மொழிகளில் அவை ஆங்கிலத்திலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டன. முதல்முறையாக ருஷ்ய மொழியில்தான் அவரது எழுத்துக்கள் நேரடியாக வங்காளி மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. ரவீந்திரரின் நூற்றாண்டு விழா (1961) கொண்டாட்டத்தின்போது இங்கு வருகை தந்த சோவியத் எழுத்தாளர் சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி சோவியத் யூனியனில் வழங்கிவந்த 18 மொழிகளில் அவரது நூல்கள் வெளியாயின. சுமார் 30 லட்சம் பிரதிகள் விற்பனையாயின.
ரவீந்திரரின் எழுத்துகள் ஆங்கிலத்தில் வெளியான உடனேயே (1912) டச்சு மொழியில் வெளிவரத் தொடங்கின. தொடக்கத்தில் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்த ஃபிரடெரிக் வான் ஈடன், ஹென்றி போரெல், ராடென் மாஸ் நோட்டோ சுரோட்டோ ஆகிய மூவருமே டச்சு மொழியில் புகழ்பெற்ற கவிஞர்களாகத் திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஈடன் அவரது எழுத்துகளை மொழிபெயர்ப்பு என்பதாக இல்லாமல் புத்தாக்கம் செய்திருந்தார். அதைப் போன்றே ஈடனின் நெருங்கிய நண்பரான ஹென்றி போரெல் ‘இருட்டறையில் அரசன்’, ‘அஞ்சலகம்’ ஆகியவற்றை டச்சு மொழியில் மொழிபெயர்த்தார். அதில் அஞ்சலகம் நாடகம் ஹாலந்து நாட்டின் புகழ்பெற்ற நாடகக் கம்பெனிகளால் பலமுறை நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மூன்றாவது நபரான சுரோட்டோ ஜாவா தீவின் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர். டச்சு மொழியில் புகழ்பெற்ற கவிஞராகவும் திகழ்ந்தவர். சந்த நடையில் அமைந்த அவரது கவிதைகளில் ரவீந்திரரின் தாக்கம் பெருமளவில் இருந்தது. இவர் தன் மூத்த மகனுக்கு ரவீந்திரரின் பெயரைச் சூட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘மேற்கத்திய பார்வையில் ரவீந்திரநாத்’ என்ற தனது நூலில் டாக்டர் ஏ. ஆரன்சன் (இவர் சாந்திநிகேதனில் ஆசிரியராகப் பணியாற்றியவர்) பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் எவ்வாறு ரவீந்திரர் படிப்படியாக அறிமுகமானார் என்பதைக் குறிப்பிட்டதோடு, அவர்மீது மோசமான விமர்சனங்கள் எழுந்ததன் பின்னணியையும் விவரித்திருந்தார்.
1942க்கும் 1946க்கும் இடைப்பட்ட காலத்தில் ரவீந்திரரின் நான்கு முக்கிய நூல்களை இரண்டு பிரேசில் கவிஞர்கள் போர்த்துக்கீசிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இவை உடனடியாக விற்றுத் தீர்ந்தன. அதைப் போலவே ரவீந்திரரின் புகழ்பெற்ற நாடகமான ‘அஞ்சலகம்’ ஆங்கிலம் தவிர, அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் பல்வேறு நபர்களால், பல்வேறு தருணங்களில் மொழிபெயர்க்கப்பட்டு, நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக, ஹிட்லரின் படைகள் பாரீஸ் நகரைச் சுற்றி வளைத்து, எந்தவொரு தருணத்திலும் பிரான்ஸின் தலைநகரம் வீழவிருந்த தருணத்தில், பாரீஸ் நகர வானொலியில் ‘அஞ்சலகம்’ நாடகம் ஒலிபரப்பப்பட்டது.
1920களில் ஐரோப்பா கண்டத்தில் ரவீந்திரரின் புகழ் உச்சத்தில் இருந்த நேரத்தில், ஸ்லோவேனிய கவிஞரான ஸ்ரெகோ கொசோவெல் கீழ்க்கண்ட கவிதையை எழுதியிருந்தார்:
நீல நிற நீரை நோக்கிச் சாயும் மரங்கள் அடர்ந்த
பசுமையான இந்தியாவில் தான் தாகூர் வாழ்கிறார்
அங்கே, கண்ணுக்குப் புலப்படாத நீரூற்றுகள், கோயில்கள்,
மலையென அடர்ந்த மரங்களுக்கிடையே
மாதத்தையோ, ஆண்டையோ காட்டாமல்
அசைவற்று அமைதியாக நிற்கிறது காலம்
அங்கே யாரும் இறப்பதில்லை; யாரும் விடை கொடுப்பதில்லை;
வாழ்க்கை நிரந்தரமான ஒன்றாக அங்கே ஓடிக் கொண்டிருக்கிறது
(பசுமையான இந்தியா என்ற கொசோவெல்லின் கவிதையிலிருந்து)
கொசோவெல் இறப்பதற்கு ஓராண்டு முன்பாக, 1925ஆம் ஆண்டில் வெளியிட்ட தனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் தங்கப்படகு என்ற தலைப்பினை வழங்கியிருந்தார். இது ரவீந்திரரின் மிகவும் புகழ்பெற்ற ஒரு கவிதை வரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனது வழிகாட்டி ரவீந்திரர் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியிருந்தார்.
கிட்டத்தட்ட உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்லோவேனியாவில் பள்ளிப் பாடதிட்டத்தில் ரவீந்திரர் இடம் பெற்றிருந்தார். மேலும், இன்றளவும் படித்தவர்கள் நிரம்பிய இல்லங்களில் அனைவரும் அறிந்த ஒரு பெயராகவும் அவர் திகழ்கிறார்.
தொடக்க காலங்களில் மிரான் ஜார்க் (1900-1942) மற்றும் ப்ரான்ஸ் பெவ்க் (1890-1970) ஆகியோர் ரவீந்திரரின் எழுத்துகளை ஸ்லோவானிய மொழியில் மொழிபெயர்த்தவர்களாக இருந்தபோதிலும், அலோஜ் க்ராட்னிக் (1882-1967)தான் அவரது எழுத்துக்களை மொழிபெயர்ப்பதிலேயே தன் வாழ்நாளைச் செலவிட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1920களில் ரவீந்திரர் குறித்த இரண்டு நூல்கள் பல்கேரிய மொழியில் வெளியாயின. அதேநேரத்தில், புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ரொமெய்ன் ரோலண்ட் மகாத்மா காந்தி பற்றி எழுதிய நூலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அதைத் தொடர்ந்து, ரவீந்திரரின் பல்வேறு படைப்புகளும் பல்கேரியாவின் முற்போக்கு இதழ்களில் வெளியாயின.
இந்த நாட்டைச் சேர்ந்த இலக்கிய ஆசிரியரான வாசில் ஸ்டாவ்ரோவ் சாந்திநிகேதனுடன் கடிதத் தொடர்பு கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். எனினும் அவர் விரும்பியபடி தன் மாணவரை அவரால் சாந்திநிகேதனுக்கு அனுப்ப முடியவில்லை. பின்னர் சோஃபியா நகரில் உள்ள அகாசியா பதிப்பகம் வெளியிட்டுவந்த ‘மனிதகுலத்தின் மாமனிதர்கள்’ என்ற வரிசையில் ஐந்தாவது நூலாக அவர் எழுதிய ரவீந்திர நாத் தாகூர் பற்றிய நூல் வெளியானது. 168 பக்கங்கள் கொண்ட இந்நூல் 1927ஆம் ஆண்டில் ரவீந்திரரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய ஓர் அறிமுகமாக விளங்கியது. பல்கேரிய அறிவியல் அறிஞரும் எழுத்தாளருமான பேராசிரியர் அசென் ஸ்லாடரோவ் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருந்தார்.
அதற்கு முன்பாக 1925ஆம் ஆண்டில் ஸ்டாவ்ரோவின் மாணவரான விக்ரோ இவனோவ் ‘தாகூரின் ஞானம்’ என்ற நூலை எழுதியிருந்தார். ரவீந்திரரின் தத்துவார்த்த, சமூக சிந்தனைகளை எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமைந்திருந்தது.ரவீந்திரர் தன் ஐரோப்பியப் பயணத்தின்போது சோஃபியா நகரில் அவரைச் சந்தித்து உரையாடியதோடு, தனது ‘சாதனா’ மற்றும் ‘வீடும் உலகமும்’ ஆகிய படைப்புகளின் ஆங்கிலப் பதிப்புகளைக் கையெழுத்திட்டு அவருக்குப் பரிசாக வழங்கினார். பல்கேரிய எழுத்தாளர் சங்கம் 1956ஆம் ஆண்டில் ரவீந்திரரின் 95வது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியது.
அன்றைய ஐரோப்பாவில் இருந்த பல ஏகாதிபத்திய நாடுகளும் ஆசிய-ஆப்பிரிக்கக் கண்டங்களில் இருந்த நாடுகள் பலவற்றையும் கைப்பற்றி, தங்கள் காலனி நாடுகளாக்கி, அவற்றை இரக்கமேதுமின்றிச் சுரண்டி வந்தன. இந்த ஏகாதிபத்திய நாடுகளின் இறுதியை முன்னறிவிக்கும் வகையில் 19ஆம் நூற்றாண்டு நிறைவடைந்த நாளில், அதாவது 1899 டிசம்பர் 31 அன்று, ரவீந்திரர் எழுதிய கவிதை (மேற்கு நாடுகளில் ஏகாதிபத்திய வெறியால் அடக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்களின் ரத்தத்தால் சிவந்து கிடக்கும் அந்திமச் சூரியன் என்ற சித்திரத்தை முன்வைக்கும் – தேசப்பற்று, தேசியவாதம் என்ற பெயரில் மனிதர்களுக்கிடையே வேலிகளை நிலைநாட்டும் கருத்தை விமர்சித்தும் எழுதிய கவிதை அது) தனித்துவமானதாகும். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் அவர் நிகழ்த்திய உரைகள் ‘தேசியவாதம்’ என்ற தலைப்பில் தனியொரு நூலாக வெளியானபோது, இந்தக் கவிதை அதன் முகப்பில் ஒரு மணிமகுடம் போல் பதிப்பிக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் வில்லியம் ராடிஸ், ஜெர்மன் மொழியில் மார்ட்டின் காம்ப்சென் ஆகியோரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தனித்துவமானவையாக இன்றுவரை நீடிக்கிறது. 2011ஆம் ஆண்டில் ரவீந்திரரின் 150வது பிறந்ததின கொண்டாட்டத்தை ஒட்டி வில்லியம் ராடிஸ் கீதாஞ்சலியைப் புதிய மொழிபெயர்ப்புடன் கொண்டு வந்தார். அதைப் போன்றே ரவீந்திரரின் கதைகளின் அடிப்படையில் சத்யஜித் ரே உருவாக்கிய திரைப்படங்களும் மேற்குலகில் அவரது எழுத்துகள்மீதான மறுபார்வைக்கு வழிவகுத்து, புதிய வாசகர்களைச் சென்றடையவும் உதவியது.
இலங்கையில் சிங்கள மொழியில் அவரது கீதாஞ்சலி, கிரெசெண்ட் மூன், நவ்க தூபி, கரே பாயிரே, போஸ்ட் ஆபீஸ், நாதிர் பூஜா, சண்டாளிகா, சதுரங்கா, கோரா, சோக்கேர் பாலி, சேஷேர் கவிதா, செலெ பெலா, சாருலதா ஆகிய நூல்களோடு அவரது சிறுகதைத் தொகுப்புகளும் பலமுறை வெளியாகியுள்ளன. அதைப் போன்றே அவரது வாழ்க்கை வரலாற்று நூல்களும் 1947, 1968, 2001 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் சிங்கள மொழியில் வெளியாயின. அதைப் போன்றே இலங்கை தமிழ்ப் பதிப்பகங்களும் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து தமிழில் கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)