Skip to content
Home » தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

தாகூர்

இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரருக்குக் கிடைத்த முன்னோடியான நிலைக்கு அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுதான் காரணம் என்று கூறுவோரும் உண்டு. எனினும் அது முற்றிலும் உண்மையல்ல. அதற்கு வெகுமுன்பாகவே வங்காளி இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றவராக அவர் திகழ்ந்தார்.

இன்னும் கூறுவதெனில், வங்காளி மொழியில் அவர் அறிமுகம் செய்த மாற்றங்கள் ‘தூய்மைவாதி’களை குலைநடுங்கச் செய்பவனவாக இருந்தன. அவர் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாகவே அவரது எழுத்துகள் இந்தியாவின் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. உதாரணமாக, அவரது ‘சித்ராங்கதா’ நாடகம் 1890களிலேயே இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைப் போன்றே ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான முத்நூரி கிருஷ்ணா ராவ் 1905முதல் 1911 வரை வங்கப் பிரிவினைக்கு எதிரான இயக்கத்தின்போது காங்கிரஸின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான பிபின் சந்திர பாலுடன் வங்காளத்தில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்தார். பின்பு ஆந்திராவிற்குத் திரும்பியதும், தான் நடத்திவந்த ‘கிருஷ்ண பத்ரிகா’ என்ற இதழில் ரவீந்திரரின் எழுத்துகளைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் வெளியிட்டு வந்தார்.

இருந்தபோதிலும், காலனிய இந்தியாவில், குறிப்பாக மேல்தட்டு ஆங்கிலேய விசுவாசிகளால் ‘அவர் மேற்குலகின் பாராட்டைப் பெற்றவர்’ என்பதாலேயே போற்றப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு கிடைத்த செய்திக்குப் பிறகு, ரவீந்திரரைப் பாராட்ட கல்கத்தா நகரப் பிரமுகர்கள் சாந்திநிகேதனுக்குச் சென்றதும், ‘அவர்களின் வாய்வழி பாராட்டுக்கள் தனக்கு உவப்பில்லாதவை’ என்று ரவீந்திரர் மறுமொழி கூறி அவர்களை மறுதலித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

மொழிபெயர்க்கப்பட்ட ரவீந்திரரின் படைப்புகளின் எண்ணிக்கை கணிசமானது. அதுபற்றிய முழு விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும். டி.எஸ். சத்யநாத் தலைமையில் தில்லி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஒன்று சேகரித்த தரவுகளின்படி 1900க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் (ஆங்கிலம் உள்ளிட்டு) பத்து இந்திய மொழிகளில் 673 மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த ஆய்வு இன்னும் தொடர்கிறது. இதன்படி ரவீந்திரரின் எழுத்துகள் திராவிட மொழிகளில் கணிசமாக வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது. தெலுங்கு (161), கன்னடம் (101), தமிழ் (93), மலையாளம் (73). இதைத் தொடர்ந்து குஜராத்தி (70), ஆங்கிலம் (64), இந்தி (53), மராத்தி (27), பஞ்சாபி (20), சிந்தி (11).

இத்தருணத்தில் ஒரு விஷயத்தை நினைவுகூர வேண்டியுள்ளது. 1961ஆம் ஆண்டில் ரவீந்திரரின் நூற்றாண்டை முன்னிட்டு, சாகித்ய அகாதெமி வெளியிட்ட சிறப்பு மலரில் ‘இதர நாடுகளில் தாகூர்’ என்ற பிரிவில் 13 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. சோவியத் யூனியன், சியாம், ஹாலந்து, மேற்குலகு, ஜெர்மனி, பல்கேரியா, ஐஸ்லாந்து, பிரேசில், ஆசியா, போலந்து, நார்வே, வியட்நாம், செக்கோஸ்லாவாகியா ஆகியவற்றில் ரவீந்திரரின் எழுத்துகளுக்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும் அந்த இலக்கியங்களில் அவரது தாக்கம் குறித்தும் இக்கட்டுரைகள் விளக்கியிருந்தன. அதேநேரத்தில் இந்தியாவின் வேறு எந்தவொரு மொழியிலும் அவரது எழுத்துகளுக்கு எத்தகைய வரவேற்பு இருந்தது என்பது குறித்தோ, இதர இந்திய மொழிகளில் அவரது தாக்கம் குறித்தோ ஒரே ஒரு கட்டுரைகூட அந்தச் சிறப்புமலரில் இடம்பெறவில்லை.

ரவீந்திரரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகமும்கூட இதில் பின்தங்கிவிடவில்லை. அவரது நூற்றாண்டினை ஒட்டி ‘விஸ்வபாரதி’ காலாண்டிதழ் வெளியிட்ட சிறப்பு மலரும்கூட ரவீந்திரரின் மறைவிற்குப் பிறகு 1942-43இல் வெளியான சில கட்டுரைகளை மட்டும் வெளியிட்டு திருப்தி அடைந்திருந்தது. அதைப் போன்றே ரவீந்திரரின் மறைவினை ஒட்டிய 50வது ஆண்டு, அவரது 150வது பிறந்ததினம் ஆகிய தருணங்களை ஒட்டி நடைபெற்ற மாநாடுகள், வெளியீடுகள் அனைத்திலுமே மேற்குலகில் அவரது இடம், உலக மனிதம் குறித்த அவரது செய்தி, நவீன காலத்தில் அவரது பொருத்தப்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.

அவரது வாழ்நாளில் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பல ஆளுமைகள் ரவீந்திரரின் சமகாலத்து இலக்கியவாதிகளாகச் செயல்பட்டு வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக இந்தி இலக்கியத்தில் முன்ஷி பிரேம்சந்த் (பி. 1880), புருஷோத்தம் தாஸ் தாண்டன் (பி. 1882), மைதிலி சரண் குப்தா (பி. 1886), மராத்தி இலக்கியத்தில் ஹரிநாராயண் ஆப்தே (பி. 1864), கிஷன்ஜி கேசவ் தாம்லே (பி. 1866), கேசவ் சுத் (பி. 1866), விஷ்ணு சாஸ்திரி சிப்லுங்கர் (பி. 1882), மலையாள இலக்கியத்தில் வள்ளத்தோள் நாராயண மேனன் (பி. 1878), சந்து மேனன் (பி. 1877), உள்ளூர் பரமேஸ்வர அய்யர் (பி. 1877), கன்னட இலக்கியத்தில் பி.எம்.ஸ்ரீகண்டையா (பி. 1884), டி.பி. கைலாசம் (பி. 1885), டி.வி. குண்டப்பா (பி. 1888), மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் (பி. 1891), தமிழ் இலக்கியத்தில் சுப்ரமணிய பாரதி (பி. 1882), குஜராத்தி இலக்கியத்தில் காகா சாஹேப் காலேல்கர் (பி. 1865), உருது இலக்கியத்தில் முகமது இக்பால் (பி. 1877), ஒடியா இலக்கியத்தில் கோபாபந்து தாஸ் (பி. 1877), அசாமி இலக்கியத்தில் லஷ்மிநாத் பேஸ்பரூவா (பி. 1864), நீல்மணி புக்கான் (பி. 193), பஞ்சாபி மொழியில் பாய் வீர் சிங் (பி. 1872), ஹிராசிங் தர்த் (பி.1889) ஆகியோர் இருந்தனர்.

ரவீந்திரரின் இளமைப்பருவத்திலேயே, இந்தி, உருது, வங்காளி ஆகிய மொழிகளில் சிறந்த எழுத்தாளர்கள், குறிப்பாக மிர்சா காலிப், மைக்கேல் மதுசூதன் தத் போன்றோர் அந்தந்த மொழிகளின் இலக்கியங்களை செறிவூட்டி மறைந்திருந்தனர். அவர் எழுதத் தொடங்கியபோது முகிழ்த்த இந்திய மொழி எழுத்தாளர்கள் பலரும் 19ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் தங்கள் தாய்மொழிக்கு சிறப்பான பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இவ்வகையில் ஒரு சில இந்திய மொழிகள் முன்னேறிய நிலையில் (உதாரணமாக உருது, இந்தி, தமிழ் போன்றவை) இருந்தபோதிலும், இந்தியாவின் பிற மொழிகளும் ரவீந்திரரின் காலத்திலேயே அதற்கீடான வகையில் வளர்ச்சிபெறத் தொடங்கியிருந்தன.

ரவீந்திரரின் எழுத்துகள் வங்காளியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், இந்திய மொழிகள் பலவும் தங்கள் மொழிகளில் அவரது படைப்புகளை அறிமுகம் செய்யத் தொடங்கின. அதைப் போலவே அவரது சாந்திநிகேதனும் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் கவர்ந்திழுத்தது. இதன் விளைவாக, அங்குள்ள பண்பாட்டுப் பின்புலத்தை நேரடியாக அனுபவித்து, அதன் தாக்கத்தில் ரவீந்திரரின் எழுத்துகளைத் தங்கள் மொழிக்குக் கொண்டு சென்ற பலரும் உண்டு.

அவ்வகையில் நாம் முதல் இயலில் குறிப்பிட்டிருந்த ஹஜாரி பிரசாத் த்விவேதி (1907-1979) அவர்கள் 1930இல் சாந்திநிகேதனில் ஆசிரியராகச் சேர்ந்து, பின்னர் அங்குள்ள இந்தி பவனின் இயக்குநராக 1940முதல் 1950வரை பணியாற்றினார். அவர் ரவீந்திரரின் பெருமளவிலான எழுத்துக்களை வங்காளியிலிருந்து நேரடியாக இந்திக்கு வ்யோம்கேஷ் சாஸ்திரி என்ற புனைபெயரில் மொழிபெயர்த்திருந்தார். ரவீந்திரரின் நெருங்கிய நண்பர் ஷிடிமோகன் சென் (அமர்த்ய சென்னின் தாத்தா), கிருஷ்ணா கிருபளானி ஆகியோரும் இந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தி இலக்கியத்தில் ‘சாயாவாதா’ என்ற இயக்கம் வளர்வதற்கு அடிப்படையான காரணமாக ரவீந்திரரின் எழுத்துகளின் தாக்கமே அமைந்திருந்தது என்பதை இலக்கிய விமர்சகர்களும் ஒப்புக்கொள்கின்றனர். நிராலா என்ற புனைபெயரில் எழுதி வந்த சூர்யகாந்த் திரிபாதி, மகாதேவி வர்மா, சுமித்ரா நந்தன் பந்த், மைதிலி சரண் குப்தா ஆகியோரும் ரவீந்திரரின் எழுத்துகளால் உந்தப்பட்டவர்களே. பின்னாளில் டாக்டர் ராம்தாரி சிங் தின்கர் இலக்கிய விவாதங்களில் ரவீந்திரரின் தத்துவத்தை முன்னெடுத்து வைப்பவராகத் திகழ்கிறார்.

இதில் நிராலா தனித்த கவனம் பெறுபவர். கல்கத்தாவில் படித்து, அங்கேயே பணிபுரிந்து வாழ்ந்த அவர், வங்காளி மொழியை நன்கறிந்தவராக, ரவீந்திரரின் எழுத்துக்களின்மீது ‘பித்துப் பிடித்தவராக’ இருந்தவர். அவரது நெருங்கிய நண்பரும் கவிஞருமான சுமித்ரா நந்தன் பந்த் உடன் ‘இருவரில் யார் ரவீந்திரரின் சிறந்த ரசிகர்?’ என்று போட்டி போட்டவர். வாழ்நாள் இறுதிவரை ரவீந்திரரை நேரடியாகச் சந்திக்காதவர். வாழ்க்கையில் கொடிய வறுமையோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த அவர், ஒரு பக்கத்திற்கு நான்கணா ஊதியத்திற்கு ரவீந்திரரின் எழுத்துகளை மொழிபெயர்த்தார் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. மற்றொரு புறத்தில் ரவீந்திரரின் எழுத்துகள் இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகளின் மூலம் எண்ணற்றோர் வாழ்க்கை நடத்துவதற்கு உதவியாக இருந்துள்ளன என்ற அற்ப சந்தோஷமும் இதற்கிடையே எழுகிறது.

அத்தருணத்தில் உருது மொழி முன்னோடியானதொரு நிலையைப் பெற்றிருந்தது. கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பின் முதல் இந்திய மொழிபெயர்ப்பு உருது மொழியில் 1914ஆம் ஆண்டில் வெளியானது. ஃபிராக் கோரக்புரி, அசார் உல் ஹக் மஜாஸ், ஜோஷ் மலிஹாபாடி ஆகிய முக்கிய கவிஞர்களும் ரவீந்திரரின் எழுத்துகளை உருது மொழிக்கு எடுத்துச் சென்றவர்கள் ஆவர்.

சாந்திநிகேதனின் தொடக்கக் காலங்களில் காந்தியுடனான தொடர்புகளின் விளைவாக குஜராத் பகுதியில் இருந்து பலரும் மாணவர்களாக வந்து சேர்ந்தனர். பின்னர் காந்தியின் செல்வாக்கின் வழி 1915ஆம் ஆண்டில் மகாதேவ் தேசாய் ரவீந்திரரின் ‘சித்ராங்கதா’ நாடகத்தை குஜராத்தியில் மொழிபெயர்த்தார். (இவரே பின்னர் மகாத்மா காந்தியின் செயலாளராகப் பணியாற்றினார்) 1918ஆம் ஆண்டில் மணிபாய் தேசாய் ‘கீதாஞ்சலி’யை குஜராத்தி மொழிக்குக் கொண்டு சென்றார். அதன்பிறகு ரவீந்திரரின் எழுத்துகள் அம்மொழியில் பரவலாக வெளியாயின. அதிலும் குறிப்பாக, ‘கீதாஞ்சலி’ எட்டுமுறையும், ‘கோரா’ மூன்று முறையும், ‘சோக்கேர் பாலி’ மூன்று முறையும் மொழிபெயர்க்கப்பட்டன. இந்தியில் சாயாவாதா இயக்கத்தைப் போலவே குஜராத்தி மொழியும் புதிய இயக்கத்தை எதிர்கொண்டது. பிரகலாத் பாரேக், நாகின் தாஸ் பாரிக், கிருஷேன்லால் ஸ்ரீதராணி, காகா காலேல்கர், உமா சங்கர் ஜோஷி ஆகியோர் 1930களில் இருந்தே ரவீந்திரரின் செல்வாக்கின்கீழ் செயல்பட்டனர்.

மராத்தி மொழியிலும் 1924இல் ‘முக்த தாரா’, 1928இல் ‘கீதாஞ்சலி’, 1930இல் ‘அஞ்சலகம்’ ஆகியவை மொழிபெயர்க்கப்பட்டன. ரவீந்திரரின் சம காலத்தவர்களான காசிநாத் ஹரி மோதக், நாராயண் குப்தே போன்ற பலரும் ரவீந்திரரின் தாக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.

கன்னட மொழியைப் பொறுத்தவரையில், சாந்திநிகேதன் மாணவர்களாக இருந்து, பின்னர் எழுத்துலகில் பிரகாசித்த மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், ஏ.என். கிருஷ்ணா ராவ் போன்றோர் ரவீந்திரரின் எழுத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றினர். பிரகலாத நாரேகல், நாராயண சங்கமா ஆகிய இருவரும் ‘கீதாஞ்சலி’யை நேரடியாக வங்காளியிலிருந்து மொழிபெயர்த்தனர். 1920களிலும் 1930களிலும் கன்னட எழுத்தாளர்கள் பலரும் சாந்திநிகேதனுக்கு வருகை தந்ததோடு, இந்தி மொழியில் சாயாவாதா இயக்கத்தைப் போலவே கன்னட மொழியிலும் நவோதயா இயக்கம் வேர்கொள்ளும் வகையில் ரவீந்திரரின் செல்வாக்கை வலுவாக உயர்த்திப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீந்திரர் பிறந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்து, அவர் மறைவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்கை எய்திய மகாகவி சுப்ரமணிய பாரதிதான் ரவீந்திரரின் எழுத்துகளை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்த முன்னோடியாக இருந்தார். அடிப்படையில் தேசியவாத அரசியலைப் பின்பற்றியவரான அவர், பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ பாடலை இருமுறை மொழிபெயர்த்தவர். அவர், ரவீந்திரரின் ‘பிறைநிலா’வின் (கிரெசெண்ட் மூன்)  சில பகுதிகளை மொழிபெயர்த்தார். 1918ஆம் ஆண்டில் ரவீந்திரரின் எழுத்துகளை இரண்டு தொகுதிகளாக மொழிபெயர்த்தார். முதல் தொகுதி ரவீந்திரரின் எட்டு சிறுகதைகளைக் கொண்டது. இரண்டாவது தொகுதி விரிவான விளக்கங்களோடு கூடிய ஐந்து கட்டுரைகளைக் கொண்டதாக இருந்தது. பாரதி, அவர் மறைந்த 1921ஆம் ஆண்டில் ரவீந்திரரின் ஐரோப்பிய பயணத்தைப் பாராட்டி, ‘ரவீந்திரர் திக்விஜயம்’ என்ற கட்டுரையையும் எழுதியிருந்தார். ஒரு பத்திரிக்கையாளராக ரவீந்திரரின் வரலாற்று முக்கியத்துவத்தைத் தமிழுலகிற்கு வெளிப்படுத்தியவரும் அவரே.

பின்னர் த.நா. சகோதரர்களான தண்டலம் நா. குமாரசாமி, சேனாபதி ஆகிய இருவருமே சாந்திநிகேதன் சென்று, வங்காளி மொழியைக் கற்று, நேரடியாக ரவீந்திரரின் எழுத்துகள் மட்டுமின்றி, எண்ணற்ற வங்காளி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழிற்குக் கொண்டுவந்தனர். 1954ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி உருவான பிறகு, ரவீந்திரரின் கணிசமான எழுத்துகள் ஆங்கிலம் வழியாக அல்லது இந்தி வழியாகப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 1970களுக்குப் பிறகு (கல்கத்தா) சு. கிருஷ்ணமூர்த்தி, புவனா நடராஜன் போன்ற ஓரிருவர் மட்டுமே நேரடியாக வங்காளியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தனர்.

தெலுங்கு மொழியில் ரவீந்திரரின் எழுத்துகள் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ராய்ப்ரோலு சுப்பாராவ், அப்தூரி ராமகிருஷ்ணராவ், பெஜவாடா கோபால ரெட்டி ஆகியோர் சாந்திநிகேதன் மாணவர்கள் என்ற வகையில் ரவீந்திரரின் எழுத்துகளை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தனர். மேலும் அம்மொழியில் பாவ கவிதா என்ற இலக்கிய இயக்கமும் ரவீந்திரரின் தாக்கத்தினால் நிலை கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ரவீந்திரரின் காலத்திலேயே அவரைவிட வயதில் இளையவர்களான குமரன் ஆசான், வள்ளத்தோள் நாராயண மேனன், சந்து மேனன், உள்ளூர் பரமேஸ்வர அய்யர் ஆகியோர் மலையாள மொழியில் அவரை அறிமுகம் செய்வதில் முன் நின்றவர்கள் ஆவர். வள்ளத்தோள் 1939ஆம் ஆண்டில் சாந்திநிகேதனுக்குச் சென்றார். அங்கு பெற்ற உத்வேகத்தை முன்னிறுத்தியே அவர் பின்னாளில் கேரள கலா மண்டலம் என்ற அமைப்பினை உருவாக்கினார்.

வங்காளத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளில் ரவீந்திரரின் எழுத்துகள் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போலவே, அதன் அண்டைப் பகுதிகளான அசாம், ஒடிசா ஆகியவற்றிலும் அவரது தாக்கம் நிலவியது.

இந்திய கலாசார உலகில் அவரது இருப்பு நாட்டிலிருந்த பலருக்கும் உற்சாகமூட்டும் முக்கிய ஆதர்சமாகத் திகழ்ந்தது. அவரது எழுத்துகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் அவருக்கு ஏராளமான வாசகர்களை உருவாக்கியது. அவரது தாக்கத்தின் விளைவாகவே இந்தியில் சாயாவாதா, கன்னடத்தில் நவோதயா, தெலுங்கில் பாவ கவிதா போன்ற இலக்கிய இயக்கங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது. அதனை ஒட்டி, கருத்துகளிலும் வடிவங்களிலும் பொதுவான அம்சங்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் உருப்பெறுவதற்கும் வழிகோலியது.

இந்தச் செயல்முறையின் பாரதூரமான விளைவு என்னவெனில், ரவீந்திரரின் உற்சாகமிக்க இருப்பின்மூலம் உருவான பரஸ்பர கலந்துரையாடல்கள் ‘இந்திய இலக்கியம்’ என்ற பொதுவானதோர் அம்சம் குறித்த உரையாடலைத் தூண்டிவிட்டது. முன்னொரு காலத்தில், அதாவது பண்டைய இந்தியாவில், வடமொழியே நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் தனிச்சிறப்பைக் கொண்டது என்ற கருத்து நிலவி வந்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அந்தந்தப் பகுதிகளின் பண்பாட்டை முன்னிறுத்திய வகையில் முன்னுக்கு வரும் பல்வேறு மொழிகளின் இலக்கியங்கள், ‘இந்திய இலக்கியம்’ என்ற கருத்தாக்கத்தை ஒற்றைப் படையில் (அதாவது ஒரே ஒரு மொழியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதாக) கொண்டு நிறுத்த இயலாத ஒன்றாக மாற்றியுள்ளது. அவ்வகையில், அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ, ரவீந்திரர் இந்திய மொழிகளின் தனிச்சிறப்பான பன்முகத் தன்மையின் இணைப்புச் சங்கிலியாக, பொதுச் சின்னமாகத் திகழ்கிறார்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *