Skip to content
Home » தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

தாகூர்

‘நாடுகள் எதையும் உருவாக்குவதில்லை; அவை வெறுமனே பொருட்களை உற்பத்தி செய்கின்றன; பொருட்களை அழிக்கின்றன. உற்பத்தி செய்வதற்கான அமைப்புகள் அவசியம் என்பதைப் போலவே, அழிப்பதற்கான அமைப்புகளும் அவசியமாகின்றன. எனினும், பேராசையினாலும் வெறுப்பினாலும் தூண்டப்பட்டு, இவை அனைத்தையும் உருவாக்குகின்ற உயிரோட்டமான ஒரு மனிதனை ஒரு மூலைக்குள் தள்ளிவிடும்போது, சமூக நல்லிணக்கமானது காணாமல் போய்விடுகிறது. அதைத் தொடர்ந்து மனித வரலாறு ஒரு பேரழிவை நோக்கி கடும் வேகத்தில் ஓடத் தொடங்கி விடுகிறது.’ (ரவீந்திரநாத் தாகூர், 1922)

ரவீந்திரர் தான் வாழ்ந்த காலத்தைக் கடந்து சிந்திப்பவராக இருந்தார். அவரது சிந்தனை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதன் எதிர்காலம் குறித்ததாகவே இருந்தது. அதுவரையில் நிலவி வந்த குறுகிய எல்லைகளைக் கடந்து, மனித குலத்தின் மீது அன்பு கொண்ட புதியதோர் உலக ஒழுங்கை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

நாடு, மதம், இனம் என்ற பெயரில் கட்டமைக்கப்படும் சிந்தனைகள் மனிதனின் இயக்கத்தை எவ்வாறு சீர்குலைக்கின்றன என்பதையும் அவற்றின் அபாயத்தையும் தொடர்ந்து எடுத்துக் கூறிவந்த ரவீந்திரர், அதற்காகப் பொதுச் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், சற்றும் தயக்கமின்றி இறுதிமூச்சுவரை தன் கருத்தை எடுத்துக் கூறிவந்தார். அதன் எழுத்துபூர்வமான வடிவம்தான் அவரது இறுதி உரையான ’நாகரீகத்தில் நிலவும் நெருக்கடி’ ஆகும். (பின் இணைப்பாக இடம்பெற்றுள்ளது).

அவரது தொலைநோக்குமிக்க சிந்தனைகளை அவரது காலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி, எவ்வளவுக்கு நாம் நினைவுகூர்ந்து செயல்பட்டு வந்துள்ளோம் என்பது குறித்து யோசிக்கும்போது முதலில் நினைவிற்கு வருவது 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் இந்தியா விடுதலை பெற்ற தருணத்தை ஒட்டி ஜவாகர்லால் நேரு ஆற்றிய புகழ்பெற்ற உரையே ஆகும். அந்த உரையில் நேரு இவ்வாறு கூறியிருந்தார்:

‘… நம்முடைய முயற்சி என்பது என்னவாக இருக்கவேண்டும்? சாதாரண மனிதனுக்கும் இந்தியாவின் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் விடுதலையையும் வாய்ப்பையும் கொண்டுவர வேண்டும். வறுமைக்கும் அறியாமைக்கும் நோய்க்கும் எதிராகப் போராடி அவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும். வளமான, ஜனநாயகபூர்வமான, முற்போக்கான ஒரு நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதியையும் முழுமையான வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் வகையிலான சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், நாம் அனைவருமே சமமான உரிமைகளை, வசதிகளை, கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய கண்ணோட்டத்தையோ நாம் ஊக்குவிக்க முடியாது. ஏனெனில், சிந்தனையில் அல்லது செயலில் குறுகிய எண்ணமுடைய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறப்பானதாக உருவாக முடியாது.’

மேலே நேரு கூறியிருந்த அனைத்துமே ரவீந்திரர் தன் வாழ்நாள் முழுவதும் முன்வைத்துப் போராடிக் கொண்டிருந்த கருத்தாக்கங்கள்தான். எனினும் 1941இல் ரவீந்திரர் மறைவிற்குப் பிறகு கடந்த 82 ஆண்டுகளில் உலகத்தில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த ஆசிய-ஆப்பிரிக்க-லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் படிப்படியாக விடுதலை பெற்று, புதியதொரு வாழ்க்கையை நோக்கி நடைபோடத் தொடங்கின.

நவீன உலகின் இரண்டு உலகப் பெரும்போர்களிலும் களமாடி, ஒன்றையொன்று விழுங்கத் துடித்துக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள், இன்று தங்கள் எல்லைகளை அகற்றிக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில், ஒற்றை நாணய முறையைக் கொண்ட ஓர் அமைப்பாக, தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. அதேநேரத்தில் பொருளாதாரத் துறையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) போன்ற நிதியமைப்புகளின்மூலம் மூலதனம் இன்று எவ்வித எல்லைக் கட்டுப்பாடுகளும் இன்றி உலகின் எந்தவொரு நாட்டிற்குள்ளும் சென்று தன் இருப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற முப்பெரும் கொள்கையை அமலாக்கி, உலகத்தைக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய பின்னணியில் உலக மக்களின் வாழ்க்கைத்தரம், குறிப்பாக முன்னாள் காலனி நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படியிருக்கிறது என்று பார்த்தால், கணிசமான பகுதியினர் வெறும் வயிற்றோடு இரவைக் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளதையே நாம் காண்கிறோம். அவர்களின் கல்வியின் அளவோ மெச்சத் தகுந்ததாக இல்லை. இந்தியாவின் 75ஆண்டுக் கால விடுதலைக்குப் பிறகும் இந்த நிலை பெரிதும் மாற்றமின்றியே நீடிக்கிறது. உலகத்தில் உள்ள மக்களில் உணவுப் பாதுகாப்பு அற்றவர்களை மட்டுமே கொண்ட ஒரு நாட்டை உருவாக்கினால், அந்த நாடு உலகின் இரண்டாவது பெரிய நாடாகவும், அதன் பிறகே இந்தியா மூன்றாவது பெரிய நாடாக இருக்கும் என்று சமீபத்தில் ஒரு பொருளாதார நிபுணர் முன்வைத்த கருத்தும் இப்போது நினைவிற்கு வருகிறது.

1922ஆம் ஆண்டில் ரவீந்திரர் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார்: ‘உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கலைஞர்கள் அழகின் பல்வேறு வடிவங்களைப் புதிதாகப் படைக்கின்றனர்; அறிவியல் நிபுணர்களோ இந்தப் பேரண்டத்தின் ரகசியங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர்; தத்துவ ஞானிகள் மனிதனின் இருப்பு குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முனைகின்றனர்; புனிதர்களோ தங்கள் சொந்த வாழ்க்கையின் உள்ளீடாகப் புதைந்து கிடக்கும் இறையியல் உண்மைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் எவருமே தான் சார்ந்த, குறிப்பிட்ட இனத்திற்காக மட்டுமே இவை அனைத்தையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, மனித குலம் முழுமைக்காகவுமே அவர்கள் அனைவரும் செயல்படுகின்றனர்.’

வேதியியல் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காக 1977ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்றவரான இல்யா பிரிகோஜைன் தனது நூலில், ‘ஐன்ஸ்டைன் உடனான உரையாடலில் மனித உள்ளுணர்வு மற்றும் இயற்கைசார் உலகம் ஆகியவை குறித்து அறிவியல்பூர்வமான அறிவுத்தெளிவு இருக்க வேண்டும் என்று தாகூர் முன்வைத்த கருத்தை நோக்கி இன்றைய உலகம் நகரத் தொடங்கியுள்ளதாகவே தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரும் முன்னாள் சாந்திநிகேதன் மாணவருமான அமர்த்யா சென் ரவீந்திரரின் அறிவியல்பூர்வமான கருத்து பற்றி இவ்வாறு கூறியிருந்தார்: ‘ஒவ்வொரு பிரச்சனையின்மீதும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். இயந்திரகதியான ஒரு வகைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை, தனியாகப் பார்க்கையில் அந்த வகைப்பாடு எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தபோதிலும், அவற்றை அவர் நம்ப மறுத்தார்.’

குறிப்பாக, நோபல் பரிசைப் பெற்றபிறகு, அந்நாட்களில் இதர நாடுகளில் இருந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்களைச் சந்திக்கவும், அவர்களோடு விவாதிக்கவும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதன் விளைவாக, தன் சொந்த நாட்டுப் பாரம்பரியத்தின் மிகச் சிறந்த அம்சங்களோடு கூடவே, இதர நாடுகளில் இருந்து தான் கற்றறிந்தவற்றையும் அதனோடு இணைத்த வகையில் ஓர் ஒத்திசைவினை உருவாக்கவும் அவர் முயன்றார். முதல் உலகப்போரில் அவர் பெற்ற அனுபவமானது, ஒன்றோடு ஒன்று போட்டியிடும், ஒன்றோடொன்று முரண்பட்டு நிற்கும், தேசப்பற்று என்ற பெயரிலான தேசியவாதம் என்ற அரசியல் வடிவத்திலிருந்து அவர் உறுதியான வகையில் தன்னை விடுவித்துக் கொண்டு உலகளாவிய மனிதத்தன்மை என்ற கருத்தை நோக்கி நகர்வதற்கு உதவி செய்தது.

இத்தகைய சிந்தனைப் போக்கால், உலகம் முழுவதிலும் அக்காலத்தில் இருந்த சிறந்த நபர்களின்மீது செல்வாக்கு செலுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் அவரால் முடிந்தது. ஸ்பெயினின் ஜுவான் ராமோன் ஜிமனேஸ், அர்ஜெண்டினாவின் விக்டோரியா ஒகாம்போ, ஜெர்மனியின் ஹெலன் மேயர் ப்ராங்க், அயர்லாந்தின் லியனார்ட் எல்மிர்ஸ்ட், ஸ்லோவேனியாவின் ஸ்ரெகோ கோசோவெல் ஆகியோர் இவ்வாறு அவரிடமிருந்து ஊக்கம் பெற்றவர்களாவர்.

அவரது காலமும் இடமும் சூழ்நிலையும் கிழக்கையும் மேற்கையும் அணுகக் கூடியவராக மாற அவருக்கு அனுமதியளித்தன. அதைப் போன்றே, அவரிடம் இயற்கையாகவே இருந்த பன்முகத்திறனுக்கு வழிவகுப்பதாகவும் அது அமைந்தது. இவ்வாறு காலம்கடந்து நிலைக்கும்படியான பல்வகைப்பட்ட, செறிவானதொரு பாரம்பரியத்தையும் அவரால் விட்டுச் செல்ல முடிந்தது. கல்வி, கிராமப்புற மறுகட்டமைப்பு, சர்வதேச அளவிலான கலாசாரம் மற்றும் அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் ஆகியவை குறித்த ரவீந்திரரின் கருத்துகளும் பரிசோதனைகளும் அவர் உருவாக்கிச் செயல்படுத்திய நிறுவனங்களின் உயிரோட்டமாகத் திகழ்கின்றன. எவ்வகையிலும் இந்தப் பாரம்பரியம் நமது மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவை என்பது மட்டுமின்றி, உலகத்தில் உள்ள அனைவரோடும் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமையும் நமக்குண்டு.

ரவீந்திரர் முன்வைத்துப் பேசிய, எழுதிய பிரச்சனைகள் பலவும் இன்றும் பொருந்துபவை. உலகம் முழுவதுமுள்ள சமூகங்கள் அவற்றை எதிர்கொண்டு வருகின்றன. வரவிருக்கும் காலத்தில் அவை மேலும் முக்கியமானதாகத் தொடர்ந்து நீடிக்கவும் வாய்ப்புண்டு. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார். கிழக்கின் இறையியல் உணர்வு, மேற்கு நாடுகளின் பகுத்தறியும் தன்மை மற்றும் அறிவியல் ரீதியான மனப்போக்கு ஆகியவற்றைக் கொண்டு உலகம் தன்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பினார்.

மற்ற ஆதார வளங்கள் அனைத்தும் செயலற்றுப் போகும் நிலையில், அனைத்திற்கும் மேலாக மனித உணர்வு, மனித இனத்தை நிலைத்திருக்கச் செய்து முன்னுக்குக் கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொழில்மயமாக்கலும் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்திய மனிதத்தன்மையற்ற நிலையை அவர் எப்போதும் எதிர்த்து வந்தார். ஒழுங்கமைந்த, நீடித்து நிற்கும் விதிகளின் அடிப்படையிலான சுதந்திரத்தைக் கொண்டு நிர்வகிப்பதன்மூலம், ஒவ்வொரு தனிநபரும் தன் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும் என்றும் அவர் நம்பினார். அவரது தனிநபர் என்பவர் யதார்த்தமான நடைமுறை உலகத்திற்கு ஏற்ற வகையில், பல்வேறு தளங்களிலும், உத்வேகம் பெற்ற, சிக்கலான வலைப்பின்னலில் ஆழமாகச் சிக்கிக் கொண்டவராகவும் இருந்தார்.

அறிவு வளர்ச்சிக்கு, முழுமைத் தன்மையுடைய, மேம்பட்ட அழகியல் உணர்வு கொண்ட, கற்றலுக்கான ஒரு கல்வி அமைப்பினை அவர் வலியுறுத்தினார். ஐன்ஸ்டைன் உடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களில் அறிவியல் விதிகளும், அறிவியல் சார்ந்த நோக்கங்களும் ஏதோவொரு வகையில் மனிதனின் உள்ளுணர்வோடு தொடர்புடையதாக உள்ளது என்றும், அறிவியல் ரீதியான ஆய்வு என்பது அறிவியலுக்கான ஒன்றாக மட்டுமல்லாமல், மனித குலத்தின் மேன்மைக்கானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

தொலைநோக்குமிக்க சமூக, அரசியல் சிந்தனையாளராக ரவீந்திரர் திகழ்ந்தார். இந்திய சமூகத்தில் நிலவிவரும் சாதியப் படிநிலை முறை, குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மனிதர்களை அடைத்து வைக்கும் நிலை ஆகியவையே அதன் மிகப் பலவீனமான பகுதியாக விளங்குகிறது என்று அவர் கருதினார். நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கீதாஞ்சலியிலேயே ‘நாம் புறக்கடையில் அடைத்து வைத்திருப்போர்தான் நம்மைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று அவர் உறுதிபடக் கூறினார். நவீன உலகில், இந்தியா முன்னேற வேண்டுமெனில், நிராதரவற்ற மக்களை அவமானப்படுத்துவதும், ஒதுக்கிவைப்பதும் ஆன செயல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் சமூகத்தின் வளர்ச்சி என்பது கீழிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். வன்முறை நிரம்பிய மோதல்களுக்குப் பதிலாக, கருத்தொற்றுமை, ஒத்துழைப்பு, சமரசம் ஆகியவற்றையே அவர் முன்வைத்தார்.

கண்ணில் தென்படும் பொருட்களின் மீதெல்லாம் அதீத ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டதோர் உலகத்திற்கு வழங்குவதற்கென அவரிடம் நிறையவே இருந்தன. வாழ்க்கையின் ஆணிவேரான அம்சங்களை நோக்கித் திரும்பிச் செல்லவும், இயற்கையுடனான உறவை வலுப்படுத்தவும், சுயகட்டுப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் மொழியைக் கற்றுக் கொள்ளவும், நமது மையமான குணத்தைச் சரிசெய்யவும், வளர்த்தெடுக்கவுமான அவசியத்தை அவர் நமக்கு எடுத்துக் காட்டினார். சுருங்கச் சொல்வதெனில் முதலில் வலுவானதோர் அடித்தளத்தை அமைப்பதை உறுதிப்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். அது நிறைவேறியவுடன், அனைத்துத் திசைகளிலிருந்தும் வீசும் காற்றுடன் உரையாட வெளியே வந்து தன்னை தயாராக்கிக் கொள்ளலாம். அப்போது அந்த உரையாடல் சமமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் நட்புணர்வு கொண்டதாகவும் இருக்கும். ஏனெனில், நாம் வழங்கவும், பெறவும் என நம்மிடம் ஏதாவது இருந்தே தீரும்.

இதற்கு முந்தைய இயல்கள் பலவற்றிலும் பல்வேறு தருணங்களில் கிராமப்புறங்களின் மறுமலர்ச்சியும் கிராமப்புற மக்களின் மகிழ்ச்சியுமே ரவீந்திரரின் சிந்தனையின் அடிநாதமாக விளங்கியது என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்த நோக்கத்திற்காக, அதன் அடித்தளமாக விளங்கிய கல்விக்காக, அவர் தன் எழுத்துகளின், சொற்பொழிவுகளின், உடையாடல்களின்மூலம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

இந்த நவீன உலகத்தில் ரவீந்திரர் நமக்கு விட்டுச் சென்ற பாரம்பரியம் என்பது காலப்போக்கில் அறியாமை, அலட்சியம் என்ற மேகங்களால் மறைக்கப்பட்டபோதிலும், வானத்தை உற்றுப் பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே தென்படும் பெருங்கரடி (எழுமீன்) என்று அழைக்கப்படும் ஒரு விண்மீன் கூட்டத்திற்கு ஒப்பானது என்றே கூறலாம்.

நாட்டில் அரசியல் ரீதியான விழிப்புணர்வு உருபெறத் தொடங்கிய அதேநேரத்தில்தான் இந்துக்கள், முஸ்லீம்கள் ஆகிய இருபிரிவினருமே தங்கள் இனத்தின் நலன்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினர் என்பதுதான் வரலாற்றுரீதியான உண்மையாகும். இந்த இருபிரிவுகளையும் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் இருநாடுகள் என்ற கொள்கையை முன்வைத்தபோது நிலைமை மேலும் மோசமானது.

ரவீந்திரர் தனது கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் இந்த இருபிரிவினருக்கு இடையேயான பிளவு என்பது நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது என்றும், அந்நிய ஆட்சியாளர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டைத் தொடர்ந்து ஆள வேண்டும் என்ற தங்கள் நலனுக்காக, இந்த உணர்வை மேலும் ஒன்றிணைத்தனர் என்றும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்.

இதற்கான தீர்வு எங்கேயிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். நலமிக்க சமூக, கலாசாரப் பரிமாற்றத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இத்தகைய மனப்பாங்கு முழுவதையும் மாற்றுவதில்தான் அது அடங்கியுள்ளது. அன்பு மற்றும் பாரபட்சம் அற்ற போக்கு ஆகியவற்றின்மூலம் நாட்டினை ஒன்றிணைக்க முகலாயப் பேரரசர் அக்பர் முயற்சித்தார் எனில், இந்த இரு இனத்தவரிடையே நிலவும் மோதலை மேலும் தூண்டிவிடவும், அதிகரிக்கவும் செய்யும் வகையில்தான் பிரிட்டிஷாரின் கொள்கை வடிவமைக்கப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நேரடியான தூண்டுதலின் விளைவாக இந்த இரு இனத்தவரிடையே மனக்கசப்பு உருவானது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரின் இந்த உணர்வு ‘நாகரீகத்தில் நிலவும் நெருக்கடி’ என்ற அவரது இறுதிச் சொற்பொழிவிலும் பிரதிபலித்தது. நாடு விடுதலை பெறுவதற்கான முழுமையான தீர்வுக்கு இந்த இரு இனத்தவரிடையே நிலவும் ஒற்றுமையின்மையே மிகப்பெரும் தடையாக நீடிக்கிறது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

‘இந்திய சமூகமானது மொழி, மதம், சாதியம் போன்றவற்றால் பல கூறுகளாகப் பிளவுபட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமான செய்தி என்பது ஒற்றுமை என்ற செய்தியே ஆகும். எனவேதான் இந்தியாவின் மாமனிதர்கள் அனைவருமே மக்களின் ஆன்மாக்களுக்கு இடையே உறவுப் பாலத்தை உருவாக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளனர்’ என்றும் அவர் தொடக்க நாட்களிலேயே கூறியிருந்தார்.

1930ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்திற்குப் பிறகு, நாடுமுழுவதிலும் கல்வியைப் பரப்புவதன் மூலமே மதரீதியான மாச்சரியங்கள் அனைத்தையும் முற்றாகத் துடைத்தெறிந்துவிட முடியும் என்பதில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டார். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ருஷ்ய அரசாங்கம் பெற்றிருந்த வெற்றி அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அதன் விளைவாகவே, நாடு முழுவதிலும் அனைவருக்குமான கல்வியை அறிமுகப்படுத்த பிரிட்டிஷ் அரசு முயற்சித்திருக்குமானால், இந்த மதரீதியான அடிப்படைவாதம் என்ற நோயிலிருந்து நாம் விடுபட்டிருப்போம் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

மதத்தைப் பற்றிய ரவீந்திரரின் விளக்கமும்கூட மிகவும் புரட்சிகரமான ஒன்றாகும். மதத்தின் மூடநம்பிக்கையைவிட, சடங்குகளால் பூட்டப்பட்ட விலங்குகளைவிட, நாத்திகம் மேலானது என்றும் அவர் நம்பினார். பன்முகக் கலாசாரம், பன்முகத்தன்மை ஆகியவற்றை அவர் அங்கீகரித்ததோடு, புராதன மக்கள், சிறுபான்மை குழுக்கள், அவர்களது நம்பிக்கைகள் ஆகியவற்றைச் சிக்கலான சமூக வலைப்பின்னலின் ஒருபகுதி என்றே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

மேற்கூறியவற்றிலிருந்து இரண்டு வேறுபட்ட இனத்தவருக்கு இடையிலான மோதல் போக்கு குறித்து ரவீந்திரர் ஆழமாகச் சிந்தித்து வந்தார் என்பதை நம்மால் உணர முடியும். இத்தகைய மோதல் போக்கிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு என்பது மூன்று வழிகளில் அடங்கியுள்ளது: 1. இந்த இரு இனத்தவரிடையே முழுமனதுடன் கூடிய பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கலாசார பரிமாற்றம். 2. வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது. 3. இறுதியாக அனைத்துப் பிரிவினருக்கும் கல்வியை வழங்குவது.

ரவீந்திரர் தனது படைப்புகள் பலவற்றிலும் குழந்தைத் திருமணம், குழந்தை உழைப்பு, வரதட்சிணை ஏற்பாடு, குடும்ப வன்முறை, சதி எனும் உடன்கட்டை முறை, கல்வி வசதி, வேலைவாய்ப்பு வசதி ஆகியவற்றைப் பெற இயலாத நிலை, விதவைகள் எதிர்கொள்ளும் படுமோசமான நிலைமைகள் ஆகிய பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதைத் தொடர்ந்து அவரது பின்னாளைய படைப்புகள் பலவற்றிலும் உறுதியான, சுயேச்சையான, அறிவுக்கூர்மை மிக்க பெண் பாத்திரங்களை அவர் அறிமுகம் செய்தார்.

நம் நாட்டு விவசாயிகள், ஏழைகள், நிராதரவான மக்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான நிலைமைகளை நேரடியாகக் கண்ட ரவீந்திரர் இதுவரை யார் காதிலும் விழாதிருந்த அவர்களது கோரிக்கைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். அவரது ‘மனைவியின் கடிதம்’ என்ற சிறுகதை பாலியல்ரீதியான பாரபட்சத்திற்கு ஆளாகும் பெண்களின் அவல நிலையை, அவர்களின் உணர்வுகளை, அவர்களுக்கு இடையிலேயே இத்தகைய சுரண்டலுக்கு எதிராகக் குரலெழுப்பி முன்னே செல்லத் தயாராக உள்ள பெண்களை அடையாளப்படுத்தியது.

சமூகத்தில் பெண்கள் உரிய அதிகாரம் பெறுவதற்கான ஒரே வழி கல்விதான். இதன்மூலம் சமூகத்தின் தோற்றத்தையே மாற்றிவிட முடியும் என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். அவ்வகையில் கல்வி என்பது ஒருவரை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுப்பெறச் செய்வதோடு, அவர்களை உணர்வுபூர்வமாகவும் மேம்படுத்த வல்லது என்பதையும் அவர் எடுத்துக் கூறினார். இதன் வழியே சாந்திநிகேதனில் பெண்களை அனுமதித்ததோடு, அவர்களுக்கு கலை, அறிவியல், இசை, நடனம் மட்டுமின்றி, தற்காப்புக் கலைகளிலும் பயிற்சியளித்தார்.

ரவீந்திரர் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து வந்த மூன்று அடிப்படைக் குறிக்கோள்கள் கிராமங்களின் சுயாட்சி, அனைவருக்கும் கல்வி, பெண்களின் அதிகாரம் ஆகியவையே ஆகும். இந்த மூன்று குறிக்கோள்களையும் வென்றடைவதன்மூலம் வளமிக்க, நல்லிணக்கம் மிக்க, மேலாதிக்க உணர்வற்ற ஒரு சமூகத்தை முழுமையான வகையில் உருவாக்க முடியும் என்பதே அவரது கருத்து. அவர் மறைந்து 82ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவை இன்னும் பொருத்தமானதாகவே நீடிக்கின்றன. அவற்றில் முதன்மையானது கிராமங்களின் சுயாட்சி ஆகும். வளர்ச்சியடைந்த மேற்குலகுடன் சரிசமமாக நாம் உறவாடுவதற்கு அடிப்படை நமது நாட்டின் வளர்ச்சிதான் என்ற வகையில் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களின் முழுமையான வளர்ச்சியும் அதனோடு கூடிய மனித வளமுமே இந்தச் சமநிலைக்கு அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பினார்.

அந்த வகையில் அரசின் தயவை நம்பாமல், தங்கள் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்ற ஓர் அமைப்பினை அவர் கனவு கண்டது மட்டுமல்ல; அதைச் சிறிய அளவில் செயல்படுத்தியும் காட்டினார். 1908ஆம் ஆண்டிலேயே காளிகிராம் என்ற தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பர்காணாவில் அவரது ஆலோசனையின் பேரில் மக்கள் நலக்குழு உருவானது. இந்த அமைப்பின் தலைமையில் சாலைகளை உருவாக்குவது; சீர்திருத்துவது; குடிநீர்-பாசன வசதியை உறுதி செய்வது; மக்களிடையே எழும் சச்சரவுகளை தீர்த்து வைப்பது; பள்ளிகளை நடத்துவது; வறட்சிக் காலங்களில் பொது உணவு மையங்களை நடத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சில ஆண்டுகளிலேயே அந்தப் பகுதி பல பள்ளிகளைக் கொண்டதாக, மருத்துவமனைகளைக் கொண்டதாக, கிணறுகள், குளங்கள் நிரம்பியதாக, மக்களிடையேயான சச்சரவுகளை சிறப்பான வகையில் தீர்ப்பதாக மாறியது.

இவ்வாறு ஒருங்கிணைந்த ஒரு கிராம சமூகத்தை உள்ளிருந்தே கட்டமைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். இந்த முன்முயற்சிதான் பின்னாளில் ஸ்ரீநிகேதனில் அறிமுகம் ஆனது. காளிகிராம் பகுதியைப் போலவே ஸ்ரீநிகேதன் செயல்பட்ட கிராமங்கள் பெரும்பாலானவற்றில் தலைகீழ் மாற்றங்களை அது கொண்டு வந்தது. எனினும் நாட்டின் விடுதலைக்குப் பின்பு இந்த வெற்றிகரமான சோதனையை நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவதற்கான உத்வேகமோ, முன்முயற்சியோ எவருக்கும் இல்லாமல் போனது.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, அதை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கிய ஆட்சியாளர்கள் உண்மையான வளர்ச்சியும் விடுதலையும் கிராமப்புறங்களில் இருந்துதான் தொடங்குகிறது என்ற ரவீந்திரரின் வாக்கை உணரத் தவறவிட்டனர். இந்தவகையில் ஒரே ஒரு விதிவிலக்காக இருந்தது கேரள மாநிலம் மட்டுமே. அங்கு உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரங்களையும் நிதியையும் வழங்கி, கிராமப்புற அளவில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக, இன்று அனைத்து வகையான தரவுகளிலும், அதிலும் குறிப்பாக மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணில் அந்த மாநிலம் தொடர்ந்து முன்னிலை வகிப்பதைக் காண்கிறோம். கேரளாவில் இதற்கு வித்திட்டவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் என்றபோதிலும், அவரையடுத்து வந்த அனைத்து ஆட்சியாளர்களும் இன்றுவரையிலும் உள்ளாட்சி அமைப்பின், கூட்டுறவு அமைப்புகளின் உயிரோட்டமான செயல்பாட்டை நீடித்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ரவீந்திரர் கனவு கண்ட கிராமப்புற மக்களின் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்குச் சிறந்ததோர் உதாரணமாக இன்று கேரள மாநிலம் திகழ்கிறது.

பிரதமர் கிராமப்புறச் சாலைகள் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புறுதித் திட்டம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 74 மற்றும் 75வது திருத்தங்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஏற்பாடு, கிராமப்புற சுகாதார திட்டம் என கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு பெயர்களில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் ரவீந்திரர் கனவு கண்ட முழுமைபெற்ற ஒரு கிராம சுயாட்சியை நிறுவ இன்றுவரை இயலவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன. சாதி அடிப்படையிலான புறக்கணிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

மறுபுறத்தில் கல்வி இன்று வணிக ரீதியான ஓர் அம்சமாக அனைத்து வகையிலும், அனைத்து மட்டங்களிலும் கையாளப்படுகிறது. பெண்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்றைய நவீன யுகம் பெண்களை, அவர்களது கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது என்பதும், சமூகத்தில் அவர்களின் நிலையில் எவ்வித மாற்றமும் உருவாகிவிடவில்லை என்பதும், பாதுகாப்பற்ற ஒரு நிலையில்தான் இச்சமூகம் அவர்களை வைத்திருக்கிறது என்பதை காஷ்மீரின் காத்துவா, உத்திரப் பிரதேசத்தின் ஹத்ராஸ், மணிப்பூரின் பாய்னோம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இவ்வாறு தன் வாழ்நாள் முழுதும் ரவீந்திரர் முன்வைத்துச் செயல்பட்ட குறிக்கோள்கள், கேட்பாரற்று, கோரிக்கையற்றுக் கிடக்கின்றன என்பதையும் உணர முடிகிறது. இந்நிலையில், அவரது இந்தக் கருத்துகளை மீண்டும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் நிலவுகிறது என்றே கருதுகிறேன்.

அவரது இந்தக் கருத்துகளைப் பரவலாக மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டுமெனில் அவரது ஆங்கில எழுத்துகள் மட்டுமின்றி, பெருமளவில் உள்ள வங்காளியில் மட்டுமே உள்ள எழுத்துகளும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது. நேரடியாக வங்காளியில் இருந்து அவற்றை மொழிபெயர்ப்பதே மிகச் சிறப்பானதாக இருக்கும். இதன்மூலம் பெருவாரியான வாசகர்களிடையே அவரது சிந்தனைகளைக் கொண்டு செல்ல முடியும். இதை நிறைவேற்றும் வகையில், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சாகித்ய அகாதெமி அனைத்து அதிகாரபூர்வ மொழிகளைச் சேர்ந்த, ஒவ்வொரு மொழியிலிருந்தும் 4-5 மொழிபெயர்ப்பாளர்களை, தேர்வு செய்து, அவர்களுக்கு வங்காளி மொழியில் இரண்டாண்டு பட்டய வகுப்புகளை உரிய நிதியுதவியுடன் நடத்தலாம். நாளடைவில் இவர்கள் ரவீந்திரரின் எழுத்துகள் மட்டுமின்றி, வங்காளி இலக்கியத்தின் இதர விற்பன்னர்களின் எழுத்துகளையும் இந்தியா முழுவதிலும் கொண்டுசெல்லும் கருவியாகத் திகழ்வார்கள். மேலும் பதிலுக்கு அவர்கள் தங்கள் தாய்மொழியில் உள்ள இலக்கியங்களை வங்காளி மொழியில் மொழிபெயர்ப்பதன் மூலம் இந்தியாவின் பன்முகக் கலாசாரம், பல்வேறு மொழிகளிலும் பொதிந்துள்ள இலக்கியப் புதையல்களும் இதன் வழியாக வங்காளிகளுக்குச் சென்று சேரவும் வாய்ப்பு உருவாகும்.

இந்தப் பகுதியை எழுதி முடித்த ஒரு வார காலத்திற்குப் பிறகு, சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. நடராஜன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இதுபற்றிப் பேசினேன். அவர் புதியதொரு தகவலை வழங்கி என்னை வியப்பிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினார். தஞ்சை மாநகரில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் முனைவர் வ.அய். சுப்ரமணியம் அவர்கள் (மொழியியல் அறிஞர் மற்றும் திராவிட மொழிகள் மீதான ஆய்வுகளின் முன்னோடி) முன்முயற்சி எடுத்து, தமிழில் பட்டமேற்படிப்பு படித்தவர்களைத் தேர்வு செய்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் பரிமாற்ற முறையில் அனுப்பி வைத்தார். அவர்கள் அந்தந்த மாநில மொழிகளைக் கற்று வந்த பிறகு, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றியபடியே தாங்கள் கற்றுக் கொண்டுவந்த மொழிகளில் உள்ள இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழில் இருந்து இலக்கியங்களை அந்தந்த மொழிகளுக்கும் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இத்திட்டம் அமலாக்கப்பட்டது.

அதே போன்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வந்து தமிழை முறைப்படிப் படித்துவிட்டு, அதைத் தங்கள் தாய்மொழிக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் வழி செய்யப்பட்டது. அதன்படி, சாந்திநிகேதனில் இரண்டு ஆண்டுகள் தங்கி வங்காளி மொழியைத்தான் கற்று வந்ததாகவும், திரும்பி வந்த பிறகு, இத்திட்டத்தை அறிமுகம் செய்த பேரா. வ.அய். சுப்ரமணியம் அவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் அதில் போதிய ஆர்வம் காட்டாத நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வங்காளி, இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, பாலி, பிராகிருதம் போன்ற பல மொழிகளைக் கற்றுக் கொண்டு வந்த தன்னைப் போன்ற பலரும் வேறு இடங்களில் வேலைக்குச் சேர்ந்துவிட்டனர்; தமிழ்ப் பல்கலைக்கழகம் மிகச்சிறப்பான, தன்னிகரில்லாத ஒரு வாய்ப்பை இழந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்டபோது, நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்படும் பல திட்டங்களும் அதன் ஆழ்ந்த பொருளை உணராதவர்களின் கையில் சிக்கிச் சீரழிந்து போவதைக் கண்டு உண்மையிலேயே மிகவும் வருத்தமாக இருந்தது). இத்தகைய செயல்முறை இந்திய மொழிகள் மட்டுமின்றி, ஆங்கிலம் உள்ளிட்ட இதர உலக மொழிகளிலும் ரவீந்திரரின் எழுத்துகளை, சிந்தனைகளை நேரடியாகவும் முழுமையாகவும் கொண்டு செல்ல உதவும். இதன் மூலம் அவர் கனவு கண்ட கிழக்கு -மேற்குலக உறவு மேம்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *