Skip to content
Home » தமிழும் அறிவியலும் #4 – நவீன அறிவியலின் இரசவாதம்

தமிழும் அறிவியலும் #4 – நவீன அறிவியலின் இரசவாதம்

மேரி க்யூரி

கற்கள் கொண்டு ஆயுதம் செய்து, ஊன் வேட்டையாடி, நதிக்கரையோரமாக நகரங்கள் சமைத்து, பருவ மாற்றம் கண்டுணர்ந்து வேளாண்மை செய்து, குடிகளாகக் கூடி வாழச் சட்டங்கள் இயற்றி, அரசு நிர்வாகத்திற்கென அதிகாரப் படிநிலைகள் அமைத்து, மானுட உலகு நாகரிகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த ஒவ்வொரு நிலையிலும், அறிவியலின் முக்கிய பங்கு இருக்கிறது. கிட்டத்தட்ட எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதர்கள் நிலவியல் அமைப்புகளைத் துல்லியமான அளவைகளுடன் குகை ஓவியங்களாக வரைந்திருப்பதை இன்றைய துருக்கியின் சாட்டால்யுக் (Çatalhöyük) நகர அகழ்வாய்வு நமக்குச் சொல்கிறது.

தேல்ஸ், பித்தகோரஸ், எம்படக்கல்ஸ், யூக்லீட் முதலிய கிரேக்க அறிஞர்கள் முறைமைப்படுத்தப்பட்ட அறிவியல் சிந்தனை மரபு ஒன்றைத் தொடங்கி வைத்தார்கள். சாக்ரடிஸ், மரபான சிந்தனை முறையிடையே அறிவியல் பூர்வ தர்க்கப் புரட்சியை உருவாக்கினார். அவருடைய சீடரான பிளேட்டோ, அதன் பிறகு வந்த அரிஸ்டாட்டில் போன்றோர் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். அதிக வெளிச்சமற்ற, இருள் மண்டிய பகுதிகளைக் கொண்ட புராதன மாளிகைப்போல், அறியப்படாத மறைபொருள்தன்மை கொண்டதாக இருந்த அறிவியல் துறையை, 14ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலம் புனரமைத்தது. பல மரபான அறிவியல் சிந்தனையை நிரூபணவாதம் கொண்டு நவீன அறிவியல் மாற்றியமைத்தது. கோபர்நிகஸ், கலிலியோ, நியூட்டன் போன்றோர் நவீன அறிவியலுக்குச் செம்மையான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ஆனாலும் நவீன அறிவியல், மரபான சிந்தையைத் தோழமையுடனே அனுசரித்து வந்திருக்கிறது எனலாம். அரிஸ்டாட்டில் காலத்தில் தனிமங்களைப் பற்றிய வேதியியல் மரபு, இவ்வுலகின் அனைத்துப் பொருள்களும் அடிப்படையில் நிலம், நீர், நெருப்பு, காற்று என்கிற நான்கு கூறுகளின் சேர்க்கையினால் அமையப்பெற்றிருந்ததாகக் கருதி வந்தது. பிறகு வந்த அரேபியர்கள், அரிஸ்டாட்டில் வகுத்தத் தனிம முறையுடன், முதன்மையான முப்பொருள் (Tria prima) என்றறியப்படும் பாதரசம், கந்தகம், உப்பு போன்றவற்றின் மூலம் இந்தப் பொருள்களை படிமாற்றம் செய்ய முடியும் என்று தீர்க்கமாக நம்பினர். ஈயம் வெளிப்புறத்தில் நிலம், காற்று ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டு குளிர்ந்தும் உலர்ந்தும் இருக்கின்றது. ஆனால் உட்புறத்தில் நெருப்பு, நீர் ஆகியவற்றின் கூறுகளால் வெம்மையும் ஈரமும் கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மாறாக தங்க உலோகம், உட்புறத்தில் குளிர்ந்தும் உலர்ந்தும் இருக்க, வெளிப்புறம் வெம்மையும் ஈரமுமாக இருக்கிறது. இப்படி நேர்மாறான நிலையில் இருப்பதால், முப்பொருளைக் கொண்டு இந்த உலோகங்களைப் படிமாற்றம் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை நம்பினார். அரேபியர்கள் வழியே ஐரோப்பா எங்கும் இந்த இரசவாத அறிவியல் மரபு பரவியது.

நமது தமிழ்ப் பண்பாட்டிலும் இந்த இரசவாதம், சித்தர்கள் வழி வந்த மறைபொருள் அறிவாகப் பல காலம் இருந்து வந்தது. இரசமணி எனச் சொல்லப்படும் Philosopher Stone கொண்டு, உலோகங்களைப் படிமாற்றம் செய்ய இயலும் எனும் நம்பிக்கை தீவிரமாக இருந்து வந்தது. ‘கருத்த இரும்பே கனகம்’, ‘பரிசனவேதிப் பரிசித்தது எல்லாம் வரிசை தரும் பொன் வகையாகும்’ என்று திரூமூலரின் திருமந்திரப் பாடல்கள், இரும்பு முதலான உலோகங்களைத் தங்கமாகப் படிநிலை மாற்றும் வேதியியல் முறையைப் பற்றிக் கூறுகின்றன.

நவீன அறிவியலின் வருகையினால், நம் பருவுலகின் இத்தகைய கருத்தமைவினைக் கடந்து, அடிப்படையான தனிமங்களைப் பற்றிய நிரூபணங்கள் தோன்றின. ஐரிஷ் அறிவியலாளர் ராபர்ட் பாயிலின் ‘ஐயுறவு வேதியியல்’ (The Sceptical Chymist) நூல், நவீன இரசாயணத்தின் முதல் அடிக்கல் எனலாம். அரிஸ்டாட்டிலின் ‘நான்கு மூலங்கள்’ கோட்பாட்டை மறுத்து, நவீன கால வேதியியலின் தனிமக் கோட்பாட்டை பாயில் தன் புத்தகத்தில் விவரித்தார். பிறகு வந்த ஆண்ட்வான் லாவோசே (Antoine Lavoiser) ஆக்சிஷன், ஹைட்ரஜன் முதலிய அடிப்படைத் தனிமங்களைக் கண்டறிந்து, முப்பத்தியொன்று தனிமங்களைப் பட்டியலிட்டு, நவீன வேதியியலின் பயணத்தைத் தொடங்கி வைத்தார். இன்றைக்கு வேதியியல் பாடங்களில் பயன்படுத்தப்படும், மென்டெலீவின் ஆவர்த்தன வடிவத்தின் (Mendeleev’s Periodic Table) முன்னோடி பட்டியல் அது. மென்டெலீவின் பட்டியல், அணு எடை, இணைத்திறன் ஆகிய இரண்டு பண்புகளையும் கொண்டு தனிமங்களை வரிசைப்படுத்தியது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஹென்றி பெக்கரேல் எனும் ஃப்ரெஞ்சு விஞ்ஞானி, தற்செயலாக யுரேனியத்தில் இயல்பிலேயே ‘கதிரியக்கம்’ இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே காலத்தில் யுரேனிய தாதுக்களின் மீது ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போலந்து நாட்டு அறிவியலளார்களான மேரி க்யூரியும், அவர் கணவர் பியரி க்யூரியும், பெக்கரேலின் கண்டுபிடிப்பைப் பின்பற்றிப் புதிதாக இரு தனிமங்களைக் கண்டுபிடித்து, போலோரியம், ரேடியும் என அவற்றுக்குப் பெயரிட்டனர். புதிய தனிமங்களைக் கண்டுபிடித்ததற்கும், மருத்துவத் துறையில் கதிரியக்கப் பயன்பாட்டைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சையை நவீனப்படுத்திய சேவைக்கும், இரண்டு நோபல் பரிசுகளை மேரி க்யூரி பெற்றார். இப்படியான குறிப்பிடத்தக்கச் சாதனையை செய்த முதல் பெண் அறிவியலாளரான அவர், பூர்வாசிரமத்தில்,மரியா ஸ்க்லொடோஸ்காவாகப் போலந்தில் உயர் கல்வியில் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். சோபோன் ஃப்ரெஞ்சுப் பல்கலைக்கழகம் அவருடைய கல்விக்கான வாய்ப்பை வழங்கியபோது, பதிலுக்கு மேரி தன் வாழ்நாளையே அறிவியலுக்காக அர்பணித்தார்

ஒரு தனிமத்தின் அணுக்கருவில் இருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கொண்டு அவற்றின் அணு எடை கணக்கிட்டப்படுகிறது. சில தனிமங்களில் இந்த அணு எடை வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதும் உண்டு. அப்படியான மாறுபாடான நிலைகளை ஏகமூலகம் (Isotope) எனக் குறிப்பிடுவர். யுரேனியம், பொலோனியம், ரேடியம் ஆகிய தனிமங்கள், தங்கள் அணுக்கருவின் எடை மாற்றத்தினால் தன்னிச்சையாகக் கதிரியக்கத்துக்கு உட்பட்டு, கதிர்களை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கதிரியக்கச் சிதைவால், அணுக்கரு பிளந்து, அணுவெடைக் குறைந்த வேறு தனிமமமாகப் படிநிலை மாற்றம் கொள்கின்றன. இன்றைய அணுக்கரு உலைகளில், யுரேனியம் அணுக்கருவைப் பிளப்பதன் மூலம் உண்டாகும் எரிசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கின்றனர். அதன் விளைவாக ஸ்ட்ரோன்டியம், செனான் என பிற தனிமங்களாக யுரேனியம் உருமாறுகின்றது. அதேபோல், அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) உலைகளில், ஹைட்ரஜனின் ஏகமூலத்தை இணைத்து ஹீலியம் உண்டாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

இந்தக் கதிரியக்க சிதைவின் அடிப்படையில், 1980இல் கலிபோர்னியாவில் உள்ள லாரன்ச் பெர்க்லி சோதனைக் கூடத்தில், துகள் முடுக்கிகள் கொண்டு கரிமக் கற்றைகளை, நிமிளை (Bismuth என்றழைக்கப்படும், ஈயத்திற்கு நெருக்கமான தனிமம்) எனும் உலோகத்தின் அணுக்கருவைப் பிளந்து ஒரு சில தங்கத் துகள்களை உருவாக்க நாள் முழுவதும் கரிமக் கற்றைகளை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருந்ததாம். இந்த ரீதியில் கணக்கிட்டால், சுமார் ஐநூறு டாலர்கள் பெறுமானமுள்ள ஓர் அவுன்ஸ் தங்கம் உருவாக்க (அக்கால விலைவாசியின்படி), கிட்டத்தட்ட மில்லியன் ட்ரில்லியன் டாலர்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும் எனக் கணக்கிட்டனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மானுடர் பலரும் பேராசையினால் உந்தப்பட்டு, இந்த இரசவாதப் புதிருக்காகச் செலவிட்டப் பொருளையும், நேரத்தையும் ஒப்பிட்டால் இந்தத் தொகை சொற்பமானதுதான். மரபு வழியில் மறைபொருளாக வழங்கி வந்த ஒரு கருத்தமைவு, நவீன அறிவியலின் நிரூபண வழியில், உண்மையின் பக்கமாக மனிதனை உந்திச் செலுத்தியதற்கு மற்றுமொரு சான்று.

1932ஆம் ஆண்டு, வார்ஸாவில், ரேடியம் நிறுவனத்தைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மேரி க்யூரி பேசும்பொழுது இப்படிக் குறிப்பிடுகின்றார்.

‘மருத்துவச் சிகிச்சை எப்போதும், அறிவியல் ஆய்வினால் காக்கப்பட வேண்டும். அதனன்றி முன்னேற்றம் சாத்தியமில்லை. மேலும், பரிசுத்த அறிவுக்கான தேடல் மனித இனத்துக்கான முக்கிய தேவை.’

தற்காலத்தில், கதிரியக்க செயல்பாட்டைப் பற்றி ஆராயும் மாணவர்களிடையே அறிவுறுத்தப்படும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிய பிரக்ஞை, அக்காலத்தில் இல்லாததால், மேரி க்யூரியின் உடல்நலம் கதிரியக்கப் பாதிப்பால் நலிவடைந்து, aplastic anemia எனப்படும் இரத்தச் சோகை நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார். ஆனால் நவீன அறிவியலில் அவர் விட்டுச் சென்ற தடம் நிரந்தரமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

0

பகிர:
ஸ்ரீதர் நாராயணன்

ஸ்ரீதர் நாராயணன்

இலக்கியச் சிற்றிதழ்களில் நேர்காணல், நூல் விமர்சனம் என முன்னோடி எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ்களை ஒருங்கிணைத்து, பங்காற்றியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் ஈர்ப்பு கொண்டவர். படிமங்களற்ற கவிதை வடிவம் கொண்டு வாழ்க்கையின் சித்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொடர்புக்கு : vnsridhar@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *