மானுடவியல் ஆய்வுகள் எல்லாம் அறிவியலின் வரையறையைக் கடந்தது என்பார்கள். ஏனென்றால், பண்பாட்டுத் தளத்தில் அதன் கலாசார வரலாற்றுப் பின்னணியை அறிவியல் விதிகள் கொண்டு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதால்தான்.
ஆனால் அறிவியலின் வளர்ச்சி மரபுவழிச் சிந்தனையைப் பின்தொடர்ந்து, அவற்றைத் தர்க்கப்படுத்தி, மெள்ள மெள்ள தன் எல்லையை விரிவாக்கிக் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலிய அறிவியலாளர் கலிலியோ, வானவியலில் தன்னுடைய புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை வெளியிட்டபோது, அன்றைய சர்ச் தலைமை, அவருடைய செயல்பாட்டைப் புரட்டு எனத் தீர்ப்பளித்தது. ஆனால் அவரைத் தொடர்ந்து பல அறிவியலாளர்கள், விண்ணுலகு சஞ்சாரங்கள் மீதிருந்த புதிர் பிரமிப்பை, தொலைநோக்கியின் துணை கொண்டு மெள்ள அவிழ்க்கத் தொடங்கினார்கள். இவ்வாறு வளர்ந்த அறிவியல் முன்னேற்றத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் மரபியல் சிந்தையின் தொடர்ச்சி தேங்கி நின்றுவிட்டது. இன்றைய அறிவியல் கொண்டு நாம் அறிந்து கொண்டிருக்கும் அண்டவியல் பிரும்மாண்டத்தின் பரிமாணம் அளப்பரியது.
மானுடவியலில் இனக்குழுக்கள், அவர்களின் பரவலாக்கம், வரலாறு எனப் பலவகை ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்குப் பண்பாட்டுத் தளத்தில் தொன்ம வரலாறுகளின் பங்கும் ஓரளவிற்குத் தேவையாக இருக்கிறது. ஆனால் அதைக் கடந்து புனிதமாக்குதல், சமத்துவமற்ற துருவமாக்குதல் போன்ற நீட்சிகளை அறிவியல் கவனமாகத் தவிர்த்தே வருகிறது. அறிவியலுக்கு ஒழுங்கும் நேர்த்தியும் கொண்ட முடிவுகள்தான் முக்கியம். துருவப்படுத்துதல் மூலம் அதிகார வேட்டையாடல் அறிவியலின் பாதைக்குப் புறம்பானது.
பண்பாட்டுத் தளத்தில் நின்று நம் வரலாற்றைப் பேசிக் கொண்டிருப்பதோ அல்லது பிறர் வரலாற்றைச் சாடிக் கொண்டிருப்பதோ மனிதர்களுக்கு உவப்பானதாக இருக்கிறது சுகமானதாகவும் இருக்கிறது. குகை வாழ்க்கையில் உறைந்து இருப்பதைப்போல, மூடிய பாதுகாப்பைத் தரக்கூடிய உலகு அது.
ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதியிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலான வட்ட விளிம்பில் ஆதி மக்கள் கடலோடிகளாகப் புலம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள் என்ற மானுடவியல் கூற்றுக்கு ஏற்ப, கடலோரங்களில் பல பண்டைய குகைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றாக, தற்போதைய கென்யாவின் கடலோரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ‘பங்க யா சைதி’ இடுகாடு வளாகத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
இந்தக் குகை வளாகத்தில் பிந்தைய கற்காலத்தினைச் சேர்ந்த கல்லால் ஆன உபகரணங்களிலிருந்து, அண்மைக் காலமான, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கிளிஞ்சல் ஆபரணங்கள் வரை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்தக் குகைகள் கிட்டத்தட்ட எழுபத்தைந்தாயிர ஆண்டுகால மனித நாகரிகத்தின் தொடர்ச்சியைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. நதியோர நாகரிகமாக இல்லாமல், உள்ளடங்கிய நிலத்தில் இவ்வளவு பெரிய மனிதர் குடியிருப்புகளின் தொடர்ச்சி இருந்திருக்கின்றன என்பது நமக்குப் புதிய செய்தி.
தேவை மட்டுமே தேடலைத் தீர்மானிப்பதல்ல. குகையிருப்புகளிலிருந்து வெளி வந்து நிலங்களைத் தன் வயப்படுத்தி நாகரிகத்தைச் செழிக்கச் செய்வது மனித இனத்திற்கு இயல்பான விழைவாக இருந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சிதான் பூமி மற்றும் வானுலகின் புதிர்களைக் கட்டவிழ்க்க மனித இனம் அறிவியல் துறையை நோக்கி முன்னகர்ந்ததும்.
அந்தத் தேடலில் மனித இனம் எதிர்கொண்ட பெரும் அச்சுறுத்தல், நம் தொன்மங்களும் புராணங்களும் உருவகப்படுத்தியது போன்ற பேருரு அரக்கர்களோ, ராட்சதர்களோ அல்ல. மாறாக, நோய் கொண்டு மனிதரை அழிக்கும் நுண்ணுயிர் கிருமிகளைத்தான். கொத்துக் கொத்தாய் நம் இனத்தைப் பெருமளவில் பலிகொடுத்தது கொள்ளை நோய்கள் கொண்டு வரும் இந்த நுண்ணுயிர்களிடம்தான்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர், ‘கிருமிச் செரு’ என்றொரு பதத்தைப் பயன்படுத்துகிறார்.
‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து,
ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்’
மேற்சொன்ன வாக்கியத்தில் பல்லாயிர விந்தணுக்கள் இடையே போரிட்டு ஒரு நுண்ணணு அந்தக் கருமுட்டையை அடைந்து மானுடப் பிறப்பாக உருவாகுவதை அவர் குறிப்பிடுகிறார். அப்படியான ஒரு கிருமிச் செருவில் உருவான மனிதன் தொடர் கிருமிகளின் போராட்டத்திலேயே இருந்து கொண்டிருந்தான் என்கிறது வரலாறு.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தனக்கு நெருக்கமான பலரைத் தொடர் கொள்ளை நோய்களுக்குப் பலி கொடுத்த பிரபல இத்தாலிய அறிவியலாளரான லியனார்டோ டா வின்சி, ஒரு புதிய மூன்றடுக்குக் கட்டமைப்பு கொண்ட மிலான் நகரைத் தன் எதிர்காலக் கனவாக வரைந்து வைத்திருந்தார். பதினேழாம் நூற்றாண்டில் தன்னுடைய பிரசித்தி பெற்ற புவியீர்ப்பு விசைக் கோட்பாடுகளை நியூட்டன் உருவாக்கியபோது, லண்டனின் கால்வாசி ஜனத்தொகை கொள்ளை நோயால் மடிந்துபோனது.
அறிவியல் பாதையில் மனிதன் உறுதியான அடிகளாக எடுத்து வைத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்திலும் நுண்ணுயிர் நோய்கள் பற்றிய புரிதலும், தெளிவும் இல்லாமல் கணக்கு வழக்கின்றி மனிதர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருந்தோம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், எமிரிச் மற்றும் ஆஸ்கர் லோ என்ற இரண்டு ஜெர்மானிய அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ‘ப்ரோசைனியாசிஸ்’தான் (Procyanis) மருத்துவ உலகின் முதன் நோயெதிர்ப்பு (antibiotics) மருந்து. பிறகு, அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் கண்டுபிடித்த பெனிசிலின் மருந்து நுண்ணுயிர் பாதிப்புகளுக்கெதிரான அருமருந்தாக உருவெடுத்தது. இரண்டாம் உலகப் போரில் படுகாயமடைந்த பலரையும் மரணத்தின் வாயிலிலிருந்து மீட்டது பெனிசிலின்.
நோய் தீர்க்கும் மருந்துகளின் திறன் கூட்டும் ஆய்வுகளுக்கு இடையே, நோய் தடுக்கும் வேக்சின்களும் அறிமுகமாகத் தொடங்கின. நுண்கிருமியின் புரதப் படிமம், அது தாக்கும் உடலின் செல்களுக்குள் புகுந்து பன்மடங்கு வேகத்துடன் தன் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, அவ்வுடலின் ஆதார வளர்சிதை மாற்றத்தைச் (Metabolism) சீரழித்து விடுகிறது. விளைவு மரணம். ஆனால் இடையே நம் உடல் இந்தப் புரதப் படிமத்திற்கு எதிரான ஆண்டிஜென்களை உருவாக்கும். என்ன, நுண்ணுயிரின் பல்கிப் பெருகும் வேகத்தை விஞ்ச முடியாமல் அது தோற்றுப் போகும்.
வைரஸ் கிருமிகளைக் கட்டுப்பாடான சூழலில் போஷித்து, அதிலிருந்து ஆண்டிஜனைப் பிரித்தெடுத்து, அவற்றைச் சுத்திகரித்து, மருந்தென மனித உடலில் செலுத்தினால் அதன் பல்கிப் பெருகுதல் நிகழாது. அதேசமயம் நம் உடலின் எதிர்ப்பு ஆண்டிஜன்களும் உருவாகி, அந்த நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கத் தயாராகிவிடும். இதொரு அதிகப்படியான தடுப்பணை முறைதான் என்றாலும், போலியோக் கிருமி, இன்ஃப்ளூயன்ஸா போன்று தொடர்ந்து தாக்கும் நோய்க் கிருமிகளிலிருந்து மனிதர்களுக்குப் போதுமான பாதுகாப்பை அது அளிக்கின்றது என்பது நடைமுறையில் நிரூபணமாகிறது. போலியோ போன்ற சிகிச்சை செய்ய முடியாத நோயிலிருந்து காக்கும் ஒரே வழியாகவும் இந்தத் தடுப்பு மருந்து முறை பயன்படுகிறது.
இப்போது மெசஞ்சர் RNA (mRNA) முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளுக்கு, வைரஸ் வளர்ப்புக் கூடத் தேவையில்லை. ஒருமுறை மரபணு வரிசைமுறை (Gene Sequencing) செய்து வைத்துக் கொண்டு, அதன் மூலம் mRNA வகைத் தடுப்பு மருந்தை உருவாக்கிவிடலாம். இந்த மரபணு வரிசைமுறை முறையில் டிஜிட்டல் பின்னல் வழியே இந்தத் தடுப்பு மருந்தைப் பரவலாக, ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தயாரிக்க முடியும்.
அண்மையில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆராய்ச்சிகளை மதிப்பிடும் தன்னார்வலனாகப் போனபோது ஒரு மாணவி, ‘மறதி (Alzemeirs) நோய்க்கு, மரபணு வரிசைமுறை வழியே செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் செயலி’ என்பது போலொரு ஆய்வுத்தாளை முன் வைத்தாள். நடப்புக் காலத்தின் பல்வேறு முக்கிய அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய அபாரமான தலைப்பு அது. ஆனால் செயலி என்னவோ எளிமையான ஒன்றுதான். அதை இப்படி இணைத்திருந்த சாமர்த்தியம் பாராட்டுக்குரியது.
‘இதற்கு ஏன் மறதி நோய் தாக்கியவர்களைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தாய்’ எனக் கேட்டேன்.
‘நோய்க்கான மருந்து எடுப்பதை அவர்கள் மறதியால் தொடராமல் போய்விடுவதைத் தடுப்பதற்கு இந்தச் செயலி அவர்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றாள்.
இதுதான் அறிவியல் நோக்கு நம் மனித இனத்திற்கு அளிக்கும் கொடை. பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை ஓர் அடையாளமாகத் தொடர்ந்து கொள்ளலாமே தவிர, அறிவு வளர்ச்சி அப்படியே தேங்கிவிடாமல் நம் அறிவியல் முன்னேற்றத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
(தொடரும்)