Skip to content
Home » தமிழும் அறிவியலும் #6 – அறியாமையின் புனிதமும், அறிவியலின் தெளிவும்

தமிழும் அறிவியலும் #6 – அறியாமையின் புனிதமும், அறிவியலின் தெளிவும்

தமிழும் அறிவியலும்

அறிவியலின் தீர்க்கமான முன்னேற்றத்தைப் பற்றிய பொதுக் கருத்துகளில் அவ்வப்போது கற்பனைச் சித்திரங்கள் கலந்துவிடுகின்றன. உண்மையின் தீர்க்கம், எளியோர்க்குச் சற்று ஒவ்வாமையைத்தான் அளிக்கின்றது. கற்பிதங்கள் அவர்களை எளிதாகப் பற்றிக் கொள்கின்றன.

புவியீர்ப்புக் கோட்பாடுகளைக் கட்டமைத்த நியூட்டன், ‘மரத்திலிருந்து கனிகள் ஏன் தரையை நோக்கிக் கீழே விழுகின்றன. பக்கவாட்டுத் திசைகளில் பறந்து செல்வதில்லையே?’ என்பதை விளக்க ஓர் எளிய எடுத்துக்காட்டாக ஆப்பிள் பழம் உதிர்தலைப் பற்றிப் பேசியிருக்கிறார். நியூட்டனுடன் பணிபுரிந்த மார்ட்டின் ஃபோக்ஸ் போன்ற அறிவியலாளர்களின் உரைகளிலும் நியூட்டனுடைய பேச்சு பதிவாகியிருக்கின்றது.

ஆனால், நியூட்டனின் தலையில் ஆப்பிள் பழம் விழுந்ததால்தான் அவர் புவியீர்ப்பு பற்றிச் சிந்திக்கத் தூண்டப்பட்டார் எனும் கற்பனைச் சித்திரம் எப்படியோ பொதுச் சிந்தையில் கலந்துவிட்டது. இன்றளவிலும் புவியீர்ப்பு விதிகளைப் பற்றிய விவாதங்களில், அந்தக் கற்பிதக் காட்சி அதிகம் இடம்பெற்று விடுகிறது. நியூட்டனின் காலத்திற்கும் முன்பே புவியீர்ப்பு விசை பற்றிய விவாதங்கள் பல காலங்களாக அறிவியல் சிந்தனை முறையில் இருந்து வந்திருக்கின்றன. அந்தக் கோட்பாட்டை அண்டவியலுக்கும் பொதுவாக நிரூபித்ததுதான் நியூட்டனின் முக்கியப் பங்களிப்பு. அண்மைக் காலத்தில் மானுடர் விண்வெளி பற்றி அடைந்திருக்கும் அபரிமித ஞானத்திற்கு அது ஒரு முக்கிய காரணம்.

வானியல் துறையில் நல்லறிவு கொண்ட பாபிலோனியர்கள், சூரிய, சந்திரர்கள் உட்பட 7 கோள்கள் எனக் கணக்கிட்டு, ஒரு வாரக் கணக்கிற்கான நடைமுறையை உருவாக்கியிருந்தார்கள். அந்த அடிப்படையிலிருந்து விலகி சூரியன் ஒரு நட்சத்திரம் எனவும், சந்திரன் ஓர் உப-கோள் எனவும், பூமி உட்படப் பிற கோள்கள் சூரியனை ஒரு மையமாகக் கொண்ட பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நாம் புரிந்துகொள்ளத் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இந்தியத் தொன்மத்திலும், ஒன்பது கோள்கள் என்கிற கணக்கில் சூரிய, சந்திரர் தவிர நிழற் கோள்களாக ராகு, கேது எல்லாம்கூட உண்டு. இன்றும் இந்த நவகிரக அமைப்பு நம்முடைய ஜோதிடச் சாஸ்திரத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது.

வாரக் கணக்கிற்கு அந்தத் தொன்ம அடையாளங்களைத் தொடர்வதற்கும், அறிவுச் செயல்பாட்டிற்குப் புறத்தே அந்தத் தொன்மங்களைப் புனிதப்படுத்திச் சாஸ்திர அடிப்படையாகக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. பொ.ஆ.பி பதினாறாம் நூற்றாண்டில் கோபர்நிகஸ், சூரிய மையக் கோட்பாட்டை உருவாக்கி, பூமி உட்பட ஏனைய கோள்கள் சூரியனை ஒரு மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன எனவும், உப-கோளான (Satellite) நிலவு, பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என நிறுவியபோது, அன்றைய சர்ச் அவருடைய கண்டுபிடிப்புகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.

சொல்லப்போனால், கத்தோலிக்கச் சர்ச்சைவிட, புரடஸ்டண்ட் அமைப்புகள்தான், இந்தக் கண்டுபிடிப்புகள் மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானது என கோபர்நிகஸ்ஸின் ‘டெரெவலூஷனிபஸ்’ (De revolutionibus) புத்தகத்திற்குத் தடை விதித்தன. அதுவரை வந்த மரபான சிந்தையிலிருந்து மத அமைப்புகள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்வதற்குக் கடும் மனத்தடை இருந்தது. இத்தனைக்கும் கோபர்நிகஸ் மத நம்பிக்கையும், பண்பாட்டுத் தளத்தில் தீவிரப் பற்றும் கொண்டவர். அவருக்குப் பின்னால் வந்த கலிலியோ அளவிற்குப் புரட்சி நோக்கு கொண்டவர் அல்லர். ஆயினும், அவருடைய அறிவியல் நூல் மேலிருந்த சர்ச்சின் தடை முற்றிலும் நீங்க மூன்று நூற்றாண்டுகளேனும் காத்திருக்க வேண்டியிருந்தது.

சமகாலத்துப் பிரிட்டிஷ் கணிதவியலாளரும் அறிவியலாளருமான ஜெரிமி கிரே குறிப்பிடுவதுபோல, நியூட்டனின் புவியீர்ப்புக் கோட்பாடுகளால்தான் மானுடர் இனம் தன்னை விண்வெளிப் பயணத்திற்குத் தயார் செய்துகொள்ள முடிந்தது. இப்போது நம்முடைய அறிவுச் செறிவில், அண்டவெளியை நமக்கெனப் பயன்படுத்திக் கொள்ளும் புதிய பாதைகள் தோன்றியிருக்கின்றன.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (ISRO) தன்னுடைய சந்திரனை நோக்கிய பயணத்தின் மூன்றாவது தவணையான ‘சந்திரயான் – 3’ முயற்சியில் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கிய விக்ரம் தரையிறங்கி (lander) அனுப்பிய பிரக்ஞான் ஊர்தி (Rover), நிலவின் கனிமவளத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.

இந்த ‘விண்வெளி வாணிபம்’ என்பது இன்னமும் தன்னுடைய குழந்தைப் பருவத்தில்தான் இருக்கின்றது. லூனார் தண்ணீர், நிலவில் தயாரிக்கப்படும் சூரியச் சக்தி மின்சாரம், ஆக்ஸிஜனின் ஐஸோடொப்கள், உலோகக் கனிமங்கள், Rare earth elements என்றழைக்கப்படும் அரிய தனிமங்கள், ரெகோலித் (Regolith) பாறைப் படலத்திலிருந்து ஹீலியம் ஐஸோடாப்பான He-3, எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. இவற்றில் எது நமது எதிர்காலச் சந்தையைக் கைக்கொள்ளப் போகிறதோ இன்னமும் தெளிவில்லை.

ஆனால், இந்த விண்வெளி வாணிபத்திற்கான விதை தூவிய பெருமை, அதுவும் தென்துருவத்தில் முதலில் தூவிய பெருமை, நம் பாரதத் தேசத்திற்கு உரித்தானது. இந்தப் பெருமையோடு நில்லாமல், விண்வெளி ஆராய்ச்சியில் பெருமளவில் முதலீடு இட்டிருக்கும் பெருவணிக முதலைகளிடையே நாமும் காலூன்றி நின்று போட்டி போடுவதற்கு அருமையான தொடக்கப்புள்ளி இது.

நம் இந்தியத் தொன்மங்களில் புதன், வியாழன், சுக்ரன் போன்ற கிரகங்கள் ஞானாசிரியர்களாகக் கதைகளில் போற்றப்படுபவர்கள். புதனின் பயாலாஜிக்கல் தந்தையாகச் சந்திரனைச் சொல்லும் கதையும் உண்டு. அறியப்படாத வான்வெளி கிரகங்களுக்கு இப்படியான புனித ஞானாசிரியர் அந்தஸ்துகளை வழங்கிப் போற்றும் இடத்திலிருந்து, அந்த விண்வெளி ஊர்புகளுக்கிடையே மனிதன் தானும் விண்ணேறி, தனக்கான பயன்களை அறுவடை செய்ய முற்படும் காலம் தொடங்கியிருக்கிறது.

இந்தச் சமயத்தில் மற்றொரு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரான ஆலன் டூரிங்கையும் நாம் நினைவு கூற வேண்டும். மனிதனின் அறிவுச் செயல்பாட்டை மாதிரியாக்கி, செயற்கை அறிவுத்திறனை உருவாக்க வித்திட்டவர். இந்தக் கட்டுரைக்கான குறிப்புகளுக்கெனப் பல ஆராய்த்தித் தளங்களைத் தேடித் துழாவியபோது எதிர்ப்பட்ட ஏ.ஐ. பாட்டுகள் (A.I. Bots) பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம். இவற்றுக்கு இடையே மனிதர்கள் புதிய அசலான கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதுதான் இன்றைய அறிவுலகின் சவாலான செயல்.

தன்னறிவை இயந்திரங்கள் மூலமாகப் பரவலாக்கிக் கொண்டு, தன் மூதாதையர் அறியாமையால் புனிதமென வழிபட்ட அண்டவெளிப் புதிர்களைக் கட்டவிழ்த்து தன் வெளியைப் பெருக்கிக் கொள்ளும் இந்தக் காலகட்டம், மானுடரின் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு மைல்கல்லாக நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன.

‘அறுவாய் நிறைந்து, மறு கொண்ட மதி’ என்கிறார் திருவள்ளுவர். அந்த நிறை அனைத்தும் தனக்கெனக் கொண்டு, மறுவற்ற வளம் பெறும் காலம் நோக்கி மானிடர் நகரத் தொடங்கி விட்டனர்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதர் நாராயணன்

ஸ்ரீதர் நாராயணன்

இலக்கியச் சிற்றிதழ்களில் நேர்காணல், நூல் விமர்சனம் என முன்னோடி எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ்களை ஒருங்கிணைத்து, பங்காற்றியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் ஈர்ப்பு கொண்டவர். படிமங்களற்ற கவிதை வடிவம் கொண்டு வாழ்க்கையின் சித்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொடர்புக்கு : vnsridhar@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *