Skip to content
Home » கோபுரங்களின் ஒளி

கோபுரங்களின் ஒளி

கோபுரங்களின் ஒளி

தமிழகக் கோயில் கோபுரங்களுக்கும், வார்டன்ஃக்ளிப் டவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. டெஸ்லா டவர் என்றும் அழைக்கப்படும் Wardenclyffe டவர், நிகோலா டெஸ்லாவால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால சோதனை வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் நிலையமாகும். நீங்கள் இந்தக் கட்டுரையில் காணப்போகும் தகவல்கள் அனைத்தும் கட்டுரையாசிரியர் நேரில் ஆய்வு செய்த, படித்த, பார்த்த, கேட்டுத் தொகுத்த தகவல்கள் ஆகும். இதற்கு நேரடி அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இவையனைத்தையும் விருப்பமுள்ளவர்கள், மறு-பகுப்பாய்வுக்கு உட்படுத்தலாம். ஆய்வு செய்த காலம்: ஆகஸ்ட் 2013 முதல் டிசம்பர் 2019 வரை.

இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோயில் கோபுரங்களின் விவரம்:

1. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.
2. ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோயில்.
3. கோயில்பட்டி செண்பகவல்லி உடனுறை பூவனாதர் திருக்கோயில்.
4. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில்.
5. திரு உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி-மங்களநாதன் திருக்கோயில்.
6. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
7. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்.

தொடர்ச்சியாக இல்லாமல், கட்டுரையாசிரியர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இக்கோயில்களுக்குச் சென்றபோது ஆய்வு செய்து, பலருடன் உரையாடிக் கிடைத்த அனுபவங்கள், அவை தொடர்பான கள ஆய்வுகள், அறிவியல் குறியீடுகள் ஆகியவற்றின் தகவல் திரட்டுகளின் அடிப்படையில், இத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. அடித்தளங்கள்: ஒரு பிரம்மாண்ட அடித்தளம். அதன் வலமும் இடமும் முக்கோணத்தின் இரு பிரிவுகளைப் போல் உயர்ந்து, உயரே கூம்புகள், கும்பங்கள், உலோக உருளைகள் கொண்ட அமைப்பு என்பது கோபுரங்கள், வார்ட்ன்ஃக்ளிப் டவர் ஆகிய இரண்டின் அடிப்படை வடிவங்களாகவும் உள்ளன.

2. தாங்குதல் சக்தி: இவ்விரு கட்டிடங்களும் இடி, மின்னலைத் தாங்கக் கூடியத் திறன் கொண்டவை. நீண்ட காலம் உறுதியாக நிலைத்திருக்கும் தன்மைகள் கொண்டவையும் ஆகும்.

3. சாளரங்கள்: கோபுரங்களின் ஒவ்வொரு படிநிலையிலும் சாளரங்கள் உண்டு. அதேபோல், டெஸ்லாவின் டவரிலும் படிநிலைச் சாளரங்கள் சதுர வடிவில் உண்டு. பல கோபுர வடிவங்களை, ‘விமானங்கள்’ என்ற பெயரிலும் அழைப்பர். கட்டுரையாசிரியரின் இந்த ஒப்பீட்டு ஆய்வில், கோபுரங்கள், விமானங்கள், வார்டன்ஃக்ளிப் டவர் ஆகிய மூன்றும் சேர்ந்தேதான் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

4. உருளைப் பகுதி: மின்காந்த அலைகளைச் சேமிக்கும் தன்மை கொண்ட உருளை போன்ற வடிவம் டெஸ்லா டவரின் மேற்பகுதியில் உண்டு. தமிழகக் கோயில் கோபுரங்களிலும், மேற்பகுதியில் உள்ள தட்டைப்பகுதிக்கு அடியில் இந்த உருளைப் பகுதி உண்டு. அதில் கூடுதலாக, அந்த உருளையின் மேலே இன்று நீங்கள் பார்க்கும் கோபுரக் கலசங்களும் உண்டு. இவை, ஐந்தாறு கும்பங்களைக் கொண்ட கலசங்களாக அமைக்கப்பெற்று இருக்கும். கலசங்களின் உள்ளே நவதானியங்களைப் போட்டு வைப்பதும், அதனைச் சுற்றி கனிமப் பூச்சுகள் வைப்பதும் முழுக்க முழுக்க அறிவியல் காரணங்களுக்காகத்தான் எனச் சொல்லப்படுகிறது.

5. இருட்டும் வெளிச்சமும்: கோயில் கருவறைகளின் உள்ளே மூலக் கடவுளின் சிலைகள் எப்போதும் கருப்பு நிறத்தில்தான் இருக்கும். உள்ளே அதிகபட்சம் இருவர் மட்டும் சென்று வரக்கூடிய அளவுதான் இடைவெளி இருக்கும். இந்த மூலச் சந்நிதானத்தின் இட மேற்குத் திசையில் எப்போதும் ஒரு சிறிய கோபுரமும் இருக்கும். கூடுதலாக, கோவிலின் பிரதான வாயில்களில் உள்ள கோபுரங்களிலும் நீங்கள் கும்ப வடிவத்தைக் காணலாம். கோபுரங்கள் அனைத்தும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதனை நீங்கள் டெஸ்லா ஸ்டான்ஃபோர்டு ஒயிட்டிடம் விவாதித்த 300 சிறிய வடிவ துணைக் கோபுரங்களின் வடிவமைப்புடன் ஒப்பிடலாம். இதற்குச் சிறந்த உதாரணங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் ஆகிவை. இங்கேயெல்லாம், திசைக்கு ஒன்றாக, ஒரு ராஜ கோபுரத்தைச் சுற்றிப் பல துணைக் கோபுரங்கள் உண்டு. ஆனால் அவற்றின் உயர அளவீடு, இராஜ கோபுரத்தின் அளவீட்டை மிஞ்சாது. அதேபோல், டெஸ்லா டவரின் அடிப்பாகம், கும்மிருட்டுக்கு நடுவில்தான் அமைக்கப்பட்டது. அங்கே டெஸ்லா ஏற்படுத்திய அமைப்புக்கு இரண்டு, மூன்று விளக்குகளே போதுமானதாக இருந்தன. ஆனால் கோயில்களைப்போல் அல்லாமல், இங்கு நிறைய பேர் நடமாட, கணிசமான இடம் இருந்தது.

6. பூமியுடன் தொடர்பு: பல நேரங்களில் டெஸ்லா தனது டவரின் அருகே, வெறுங்கால்களுடன் நடமாடியுள்ள தரவுகள் உள்ளன. அதற்குக் காரணம், தனது டவரின் பூமியுடனான நேரடித் தொடர்பின் இருப்பையும், அதிலிருந்து வெளிப்படும் மின் காந்தச் சக்தியை ஆய்வு செய்யவும்தான் அவ்வாறு அவர் செய்தார். நம் தமிழகக் கோயில் கோபுரங்களும் கட்டிடமும்கூட, எப்போதும் நிலத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளவைதான். அதேபோல், அதன் மின்காந்த அலைகள், யாருக்கும் தீங்கு விளைவிக்காத வண்ணம், வடிகட்டப்பட்டு, குவித்து வைக்கப்பட்டு, மூலக் கடவுள் சந்நிதானத்தின் மேற்பகுதி வழியே, கோபுரங்களில் குவிக்கப்படுகின்றன. அந்த நேர்மறை அலைவரிசையை, நாம் கோயில்களில் நேரடியாகப் பாதம் வைத்துப் பதிப்பதன் மூலம், கடத்திக் கொள்ளலாம். இதனால் தான், ‘மனது சரியிலையெனில், கோவிலுக்குச் செல்’ என்று பெரியோர் கூறும் கூற்றுக்கான காரணம். டெஸ்லாவின் டவரில், இந்த அமைப்பு இல்லை. அங்கு டவரின் மூலம் உருவாக்கப்படும் அனைத்துச் சக்தி அலைவரிகளும், தமிழகக் கோயில்கள்போல் வடிகட்டப்படாமல் அப்படியே வெளிவந்தன. அவற்றை டெஸ்லா ஆய்வும் செய்தார்.

7. ஒலியின் வடிவங்கள்: இன்றைக்கு மொழியைப் பற்றி ஆய்வு செய்யும் பலரும், சில நேரங்களில் கவனிக்காமல் கடந்து போகும் முக்கிய விடயம் ஒன்று உள்ளது. அஃது என்னவெனில், அவர்கள் மொழியைப் பெரும்பான்மையாக எழுத்துரு, வரி வடிவங்களைக் கொண்டே ஆய்வு செய்கின்றனர். அது தற்கால மொழிகளுக்கும், ஒரு மொழியில் இருந்து பிரிந்து சென்ற மற்ற மொழி வடிவங்களுக்கும், செயற்கையாகவும், மக்களிடையே தொடர்பை நிறுவ உருவாக்கப்பட்ட தொழில் நிலப்பரப்பைச் சார்ந்த மொழி வடிவங்களுக்கும் வேண்டுமானால் பொருந்தும். ஆனால், அறிவியல் ரீதியாக மொழி என்றால் என்ன? இதனை நீங்கள் டெஸ்லாவிடம் கேட்டால், அவர் ‘ஒலி’ என்று சொல்வார். ஆம், அவர் மட்டுமல்ல, பண்டைய மொழிகளின் புராதான தன்மையை ஆழ்ந்து ஆய்வு செய்த யாவருக்கும் தெரியும், மொழி என்பது பல்வேறு தரப்பட்ட ஒலிகளில் இருந்துதான் வருகிறது என்னும் உண்மை. இதனைத்தான் டெஸ்லா, அதிர்வெண்-அலைவரிசை-மின்காந்த சக்தி ஆகிய மூன்றும் தொடர்புடைய ஒளி வடிவங்களாகச் சப்தங்களை மாற்றி, அவற்றை அலைச் சிக்னல்களாக, தனது டவர் வழியே அனுப்பி ஆய்வு செய்தார். ஒரு கோவிலின் தொன்மை வாய்ந்த ஆகம விதிகளில் சொல்லப்படும் மொழி, சமஸ்கிருதம் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இல்லை, அது தமிழ்தான் என்று இன்னோரு தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால், கட்டுரையாசிரியரின் சொந்தக் கருத்து என்னவெனில், அந்தக் கோயில்களில் எழுப்பப்படும் சப்தங்களை, ‘காந்த ஒலி அலைகள்’ என்ற கோணத்தில் மட்டும்தான் பார்க்க வேண்டும், எந்த ஒரு மொழி வடிவமாகவும் பார்க்கக் கூடாது என்பதுதான். ஒலிகளில் வடநாட்டு ஒலி, தென்னாட்டு ஒலி என்று எதுவுமே இல்லை.

8. ஒலிகளின் அறிவியல்: முந்தைய பத்தியில் குறிப்பிட்டதற்கு இணையான தகவல் என்னவெனில், டெஸ்லா தனது டவரின் சோதனைகளின்போது பல்வேறு மர்ம விடயங்களைச் செய்தார் என்று நாம் ஏற்கெனவே பார்தோமல்லவா? அவற்றின் ஒரு பகுதிதான், அவர் செய்த ‘ஒலி’ சார்ந்த சோதனைகள். பல்வேறு வடிவிலான ஒலிகளை அவர் காற்று வெளியிடையில் ஒளி அலை மின்காந்த அதிர்வெண்களாக மாற்றி, அவற்றைப் பல்வேறு அலைவரிசைகளில் வெளியிட்டுச் சோதித்துக் கொண்டே இருந்தார் என்பதுதான் ஆச்சரியமூட்டும் தகவல். இதனைத் தமிழகக் கோயில்களோடு தொடர்புபடுத்தினால், ‘ௐ’ என்ற மூலமந்திரமே, ‘அ-உம்’ என்ற உலக சமநிலை ஒலியை அடிப்படையாகக் கொண்டதுதான். டெஸ்லா டவரின் கீழே நின்று, மின்காந்த அலைகளின் காற்றுக்குவியல் ஒலிகளைக் கேட்டால், அவை ஒரே அலைவரிசையாகத் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை என்று அவர் ஒரு ஆய்வுக்குறிப்பில் சொல்கிறார். இதற்கு இணையாக நீங்கள் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றால், அங்கே ஓரிடத்தில் கோயில் கட்டடத்தில் ஓட்டை போட்ட உருளை வடிவ இடம் ஒன்றைக் கூறலாம். அதனை ‘ஓம்’ ஒலி கேட்கும் இடம் என்று கூறுகிறார்கள். கடலின் ஒலி அலைகள் கோயில் கோபுரத்தின் மேல் பட்டுத் தெறித்து, அவை ஓர் இடத்தில் நிலை கொண்டு, ஒழுங்கான அலைவரிசையில், ‘அ-உம்’ என்ற சமநிலை ஒலி வடிவத்தில் நமக்குக் காதில் கேட்பதுபோல் தோன்றுவதுதான், இதற்குப் பின்னால் உள்ள காரணம். அதாவது, நீ எவ்வளவு ஒழுங்கில்லாமல், மூர்க்கனாய்க் கோவிலுக்குள் வந்தாலும், உன்னை ஒழுங்குபடுத்தி, ஒரு சீரான நேர்மறை அலைவரிசையில் சமன்படுத்துவேன் என்று கூறுவதுபோல் அமைந்துள்ள அலை அறிவியல் தத்துவமே இதன் பின்னணியில் இருப்பதாகும்.

9. கட்டடக்கலை முக்கியத்துவம்: கோபுரங்கள், வார்டன்கிளிஃப் டவர் இரண்டுமே குறிப்பிடத்தக்க கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்தவை. கோபுரங்கள் தென்னிந்திய கோயில் கட்டடக்கலையின் ஒரு முக்கிய அம்சமாகும். இது சிக்கலான சிற்பங்கள், விரிவான வடிவமைப்புகள், துடிப்பான வண்ணங்களைக் காட்டுகிறது. இதேபோல், நிகோலா டெஸ்லாவால் வடிவமைக்கப்பட்ட வார்டன்ஃக்ளிப் டவர் அதன் செங்குத்து உருளை அமைப்புடன், உயரம், தெரிவுநிலையை வலியுறுத்தும் ஒரு புதுமையான கட்டடக்கலைக் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

10. செங்குத்து / உயரம்: இரண்டு கட்டமைப்புகளும் செங்குத்து, உயரத்தை வலியுறுத்துகின்றன. கோபுரங்கள் பொதுவாகப் பல அடுக்குகள், படிநிலைகளைக் கொண்டுள்ளன. மின்காந்தச் சக்தியினை ஈர்க்கக்கூடிய உயரங்களை அடைகின்றன. இதேபோல், டெஸ்லா டவர் ஒரு உயரமான அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மின்காந்த அலைவரிசை ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. டெஸ்லா டவரின் உயரம் 187 அடி. தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோயில் கோபுரங்களின் சராசரி உயரமே 150 அடிகளைத் தாண்டும். இந்தச் சராசரி அளவீடு, சமகாலங்களில் கட்டப்பட்ட புதிய கோயில்களுக்குப் பொருந்தாது. உயரங்களுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு? ஒரு தகவலை இங்கே தருகிறோம். நீங்கள் மேற்கொண்டு இதனைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பாரத தேசத்தில், உயரத்தின் அளவீடுகளின் அடிப்படையில், டாப்-20 என்ற வகையில் முதன்மையான இருபது கோயில் கோபுரங்களைப் பட்டியலிட்டால் அவற்றில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும். இரண்டு, பனிரெண்டாம் இடங்கள் கர்நாடகா மாநிலத்தின் இரு கோயில்களுக்கும், 15ஆம் இடம் ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலின் கோபுரத்துக்கும் செல்கிறது. இவை தவிர மீதமுள்ள பதினேழும் தமிழகத்தில்தான் உள்ளன. இன்னும் ஆய்வு செய்து 50 கோயில் கோபுரங்கள் என்று எடுத்தால், அவற்றில் 40க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டில்தான் வரும். முதல் ஐந்து இடங்களில் உள்ள கோயில் கோபுரப் பட்டியலை மட்டும் இங்குப் பார்ப்போம்.

1. ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதஸ்வாமி திருக்கோயில் – 239.501 அடி உயரம்
2. ஸ்ரீ முர்டேஷ்வரா சிவன் கோயில் கோபுரம், கர்நாடகா – 237 அடி
3. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இராஜ கோபுரம் – 216.5 அடி
4. ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில் கோபுரம் – 193.5 அடி
5. திருக்கோவிலூர் ஓங்கி உலகளந்த பெருமாள் திருக்கோயில் கோபுரம் – 192 அடி

படிக்கவே மலைப்பாக உள்ளது அல்லவா? கோயில் கோபுரங்கள் என்பவை ஆன்மீக அறிவியல் நமக்கு வழங்கிய பொக்கிஷங்கள். அவற்றின் வடிவத்தை அறிவியல் ரீதியாக, டெஸ்லா உணர்ந்ததால்தான் இவற்றுக்குச் சற்றும் தொடர்பில்லாத அவருக்கு, இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு டவரை உருவாக்கும் யோசனை பிறந்தது.

11. குறியீட்டு நுழைவாயில்கள்: கோபுரங்கள், வார்டன்கிளிஃப் டவர் இரண்டும் ஒரு வகையான அறிவியல் குறியீட்டு நுழைவாயில்கள் ஆகும். கோபுரமானது, கோயில் வளாகத்தின் நுழைவாயிலைக் குறிக்கிறது; சராசரி உலகத்திலிருந்து ஆன்மீக சாம்ராஜ்யத்திற்கு மாறுவதைக் குறிக்கிறது. இதேபோல் வார்டன்ஃக்ளிப் டவர், வயர்லெஸ் தகவல் தொடர்பு மற்றும் மின் பரிமாற்றத்திற்கான நுழைவாயிலாக வடிவமைக்கப்பட்டது, இது பரந்த தொலைவில் உள்ள மக்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது. பிரிந்து கிடக்கும் மனித குலத்தின் தொடர்புச் சங்கிலி, மின்காந்த அலைகளால் ஒன்றிணைக்கப்படுவதைக் குறிப்பிடும் நுழைவாயலே நிகோலா டெஸ்லாவின் ‘வார்டன்ஃக்ளிப் டவர்’ ஆகும்.

12. காட்சித் தாக்கம்: இவ்விரண்டு கட்டமைப்புகளும் பார்வையாளர்கள் மீது காட்சித் தாக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கோபுரமானது சிக்கலான சிற்பங்கள், அலங்கார உருவங்கள், துடிப்பான வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தன்மை, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. கோவிலின் பிரமாண்டத்தைப் பிரதிபலிக்கிறது. இதேபோல் வார்டன்ஃக்ளப் டவர், அதன் தனித்துவமான கட்டிடக்கலை வடிவமைப்புடன், பார்வைக்கு ஈர்க்கக்கூடியதாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை விஞ்ஞானம், அலைகளின் மீது தூண்டி, அவர்களைக் கவரும் வகையில் இருந்தது.

13. வரலாற்று முக்கியத்துவம்: கோபுரங்கள், வார்டன்க்ளிஃப் டவர், ஆகிய இரண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கோபுரங்கள் என்பன தென்னிந்தியாவின் கலாசார, மத பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. காலத்தின் சோதனை, பல நூற்றாண்டுகள் பழமையான கட்டிடக்கலை மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதேபோல், வார்டன்க்ளிஃப் கோபுரம் மின் பொறியியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தைத் பிரதிபலிக்கிறது. இது நிகோலா டெஸ்லாவின் தொலைநோக்கு யோசனைகள், அறிவியல், தொழில்நுட்பத்திற்கான பங்களிப்புகளைக் குறிக்கிறது.

14: டெஸ்லா காயிலும் துணைக்கோபுரங்களும்: காளான் வடிவம் போல் இருக்கும் ‘டெஸ்லா காயில்’ சாதனைத்தைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்திருக்குகிறோம். அதனைப் பற்றிய வீடியோ இணைப்பும், முந்தைய அத்தியாயங்களில் ஒன்றில் பகிர்ந்துள்ளோம். அது டெஸ்லா டவரின் சுருங்கிய வடிவம் என்றும் கூறலாம். இரண்டு டெஸ்லாக் காயில்களின் நடுவே ஒளி அலைகளைப் பாய்ச்சி, ஒளியின் மூலம் ஒலி இசைக்கோர்ப்பு செய்து, பாடல்கள் இசைக்கும் பல்வேறு காணொளிகள் உங்களுக்கு இணையத்தில் காணக் கிடைக்கும். இதனை நீங்கள் தமிழகக் கோயில்களோடு தொடர்புபடுத்தினால், துணைக் கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் என்று பல்வேறு துணைக் கட்டிடங்களைக் கொண்ட அத்தகைய கோயில்களில் ஒலிக்கப்படும், பாடல்கள், இசை, நடனம், இவ்வளவு ஏன்; மணியின் ஓசை கூட, சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் வீரியத்தால், நேர்மறையாகவும், ஏகாந்தமாகவும் தோன்றும். எனவேதான், அக்கால மன்னர்கள் கோயில்களைக் கலை பரப்பும் கூடங்களாகவும், கல்வி பயிலும் இடங்களாகவும்கூட மாற்றி விட்டிருந்தனர். வார்டன்க்ளிஃப் டவரின் கணக்குக் குறியீடுகள் சிக்கலானவை என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம். டெஸ்லாவின் 3-6-9 என்ற முக்கோணவியல் சார்ந்த கணக்கும், எண் பூஜ்யம், எண் 9 ஆகியன வெளிப்படுத்தும் சமநிலைகளும், டெஸ்லா டவர், கோபுரங்கள் ஆகியவற்றின் உள்ளார்ந்த வடிவமைப்பு, அவை சார்ந்த கணக்கீடுகளும் ஒன்றுடன் ஒன்று ஆழமான தொடர்பு கொண்ட அறிவியல் கோட்பாடுகள்.

15. உலகளாவிய மற்றும் வேற்றுலகத் தொடர்புகள்: கோயில் கோபுரங்களில் உள்ள கலவிக்கல்வி சார்ந்த சிலைகளைப் பற்றி, நிறைய நாத்திகர்கள் குறை சொல்வர். ஆனால் அதுவும், மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதையும், அறிவியலின் ஒரு பகுதி என்பதையும், இரு பாலரும் எப்படி ஒருவரை ஒருவர் சார்ந்து, அன்புடன், மரியாதை குன்றாமல் வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சிற்பங்களும் உள்ளன. இவை மட்டுமா? கலை, தொலைத்தொடர்பு, பல்வேறு வகை உயிரினங்கள் என அனைத்தும் கற்சிற்பங்களாக உள்ளன. இதனை டெஸ்லா எவ்வாறு கூறுகிறார் என்று பார்ப்போம். ‘நான் நினைத்தால், எனது டவரின் மூலம் அலைகளை ஒழுங்குபடுத்தி, ஒருவரின் உள்ளே உள்ள தீய எண்ணங்களைக் களைந்து, அன்பு, காதலைக் கூட வரவழைக்க முடியும்’ என்று வேடிக்கையாகக் கூடுகிறார். கோயில்களில் உள்ள கோபுரங்களின் மற்றொரு வடிவான விமானங்கள் என்பவை, பறக்கும் சாதனங்களின் வடிவமைப்பை ஒத்ததாக, சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கொடிமரங்கள் என்பவை, நடுநிலை சமன்பாடு, மாற்றுப் பகிர்தல் ஆகிய கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. டெஸ்லா அவர்கள் இன்றைய ஸ்மார்ட்போன்கள், ஏலியன் தொடர்புகள் பற்றி ஏற்கெனவே கணித்துக் கூறியவர். எல்லையில்லாத தொலைத்தொடர்பு முறைகளையும், வேற்றுலகத்திற்குச் செய்திகள் அனுப்பக் கூடிய கற்பனை வகையிலான சிற்பங்களும், பல்வேறு தமிழகக் கோயில்களில் காணக் கிடைக்கின்றன.

வார்டன்ஃக்ளிப் டவருடனான இந்த ஒப்பீடுகள் மட்டுமின்றி, தமிழகக் கோயில்களின் ஒவ்வொரு அங்குலத்தையும், தீவிரமான அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகளுக்கு உட்படுத்தலாம் என்பது, கட்டுரையாசிரியரின் தாழ்மையான கருத்து.

0

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *