Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #2 – குத்துக்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #2 – குத்துக்கல்

குத்துக்கல்

கொடுமணல் என்னும் இடத்தில் செலசனக்காடு, தோரணக்காடு என்னும் இரு இடங்களில் நடைபெற்ற அகழாய்வு மூலம் முதல் பண்பாட்டுக்காலம் கிமு 300 முதல் கிபி 100 என்றும், இரண்டாம் பண்பாட்டுக்காலம் கிபி 100 முதல் கிபி 300 என்றும் அகழாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இரண்டு பண்பாட்டுக் கால மக்களின் வாழ்வியல் தொகுப்புகள் கிடைக்கின்றன. இங்கு நடைபெற்ற ஆய்வுகளில் இரும்பை உருக்கப் பயன்படுத்தும் பகுதிகள், இரு புற வெட்டும் ஆயுதங்கள், இரும்பாலான பல்வேறு பொருள்கள் இப்பகுதிகளில் கிடைத்தன. இதன் மூலம் கொடுமணல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் வசித்த மக்கள் இரும்பு, உருக்கு போன்ற தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாக விளங்கியுள்ளனர் என்பதும் ஆய்வில் வெளிப்பட்ட தகவல்.

1962இல் மத்தியத் தொல்லியல் துறையினர் இந்தப் பகுதியில் மேற்பகுதியை மட்டும் ஆய்வு செய்தனர் என்றும் இன்னும் அதிகமான அளவில் தொகை ஒதுக்கி இந்தப் பகுதியை ஆய்ந்தால் கீழடியை விடப் பழமையான பண்பாட்டையும், தொழில் நுட்ப அறிவையும் அறிய இயலும் என்று தமிழகத் தொல்லியல் துறையின் மூத்த ஆய்வாளர் திரு. பூங்குன்றன் கூறியுள்ளதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியது.

கொடுமணல் பகுதியின் மர்மங்களை ஏனோ தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்களும், மத்தியத் தொல்லியல் ஆய்வாளர்களும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தாமல், சில நேரங்களில் அகழாய்வுப் பொருள்களின் காலத்தை முறையாக அறிவிக்காமல் பல ஆண்டுகளாகக் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் நாம் முன்னரே கூறிய மூன்று வகைக் கல்லறை அமைப்புகளின் வாயிலாகவும், அங்குக் கிடைத்த பொருள்களின் மூலமும் ஆய்வுகள் தொடர்ந்தால் இந்தப் பகுதியின் பண்பாட்டுக் காலப் பெருமையை நாம் அடையாளப்படுத்த இயலும்.

கொடுமணலைச் சுற்றியிருக்கும் ஊர்களின் பெயர்களை நாம் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தினால் இந்தப் பகுதி பண்டைய காலம் முதல் இரும்புத் தளவாட உற்பத்தியில் சிறந்து விளங்கியதை உணரலாம். கொடுமணலைச் சுற்றி உள்ள ஊர்களில் பெரும்பாலும் அணிகலன்கள் மற்றும் இரும்புப் பொருள்கள் தயாரிப்பு மிக அதிகளவில் நடைபெற்றது இதுவரையிலான ஆய்வுகளின் மூலம் உறுதியாகின்றது. கொடுமணலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ஊரான வெள்ளக்கோவில் மற்றும் அதனைச் சுற்றி உள்ள ஊர்களில் வெள்ளை நிற அணிகலன் கற்கள் ஆங்காங்கே இன்றும் ஆய்வில் கிடைக்கப்பெற்று வருகின்றது. வெள்ளை நிற அணிகலன் கற்களைப் பட்டைத் தீட்டி விற்பனை செய்யும் பொருட்டு கொடுமணல் வணிகத்தளத்தில் விற்பனை நடைபெற்றிருக்கலாம் என்பது ஆய்வின் மூலம் அறியக்கிடைக்கின்றது.

1997ஆம் ஆண்டு கொடுமணல் பகுதியில் பெருங்கற்காலச் சின்னத்தின் நெடுங்கல் என்னும் குத்துக்கல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. நெடுங்கல் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்ன வகையாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ எழுப்பப்படுகின்றது. இதன் கீழே தாழி காணப்படலாம் அல்லது நினைவுச் சின்னமாக எந்தவித ஈமப்பொருள்கள் இல்லாமலும் அமைந்திருக்கும். இது ஆங்கிலத்தில் Menhir எனப்படும்.

குத்துக்கல்
குத்துக்கல், கொடுமணல்

தமிழகத்தில் இவ்வகைக் குத்துக்கல் ஒரு சில இடங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. கொடுமணல் பகுதியில் கிடைத்த குத்துக்கல் பகுதியில் மிகுதியான சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. சங்கப்பாடல்களில் பதுக்கையுடன் கூடிய கல்பலகைகள் பற்றி 14 பாடல்கள் கிடைக்கின்றன.

அகநானூற்றின் ஒரு பாடலில்,

‘அம்பின் விசை இட
வீழ்ந்தோர் எண்ணு வரம்பு
அறியா உவல் இடு பதுக்கை’

என்னும் சங்கப் பாடலும், புறநானூற்றின் பாடலில், இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர்

‘அம்புவிட வீழ்ந்தோர்
வம்பப் பதுக்கை’

என்னும் பாடலும் கொடுமணல் குத்துக்கல்லும் ஆய்வுக்கு நேர் பொருந்தியது என்பது புலனாகின்றது. ஏனெனில் குத்துக்கல் தாழியில் ஏராளமான இரும்பு அம்புகள் கிடைத்ததும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

கொடுமணலில் நெடுங்கல்லின் அடியில் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்ட போது அதில் 7000க்கும் மேற்பட்ட கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மானின் எலும்பும், இரண்டு பக்கங்களைக் கொண்ட கோடாரியும், ஒரு நீண்ட வாளும் கண்டெடுக்கப்பட்டன. மானின் எலும்பு இருப்பதை நாம் கவனத்தில் எடுத்தோமெனில் பண்டைய காலத்தில் மான் படையல் பொருளாக இருந்திருக்கலாம் என்பதையும் அறிய முடிகின்றது. அதில் கிடைக்கப்பெற்ற பல கல்மணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டு விற்பனைக் கற்களைக் கொண்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.

இந்தக் கல்மணிகள் பற்றிச் சங்கப்பாடல்களும் கூறுகின்றன. இதன் மூலம் இந்தக் கல்மணிகளைப் பெற ரோம் நாட்டு வணிகர்கள் இந்தப் பகுதிக்கு வந்து வணிகம் புரிந்திருக்கின்றனர் என்பதும், நம் நாட்டின் கொடுமணல் கல்மணிகள் எகிப்து நாட்டின் தொல்லியல் ஆய்வுகளிலும் கிடைக்கின்றன என்பதைக் கொண்டும் இந்த வணிகத் தொடர்பு நமக்கு உறுதியாகின்றது. கொடுமணல் பகுதியில் கிடைத்த ‘பெரில்’ என்னும் பச்சைக்கற்கள் ரோம் நாட்டிலும் கிடைக்கின்றது. ‘சபையர்’ என்னும் கல்மணிகளும் இந்தப் பகுதியில் அகழாய்வில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. கல்மணிகளில் முற்றுப்பெற்றவை, முற்றுப்பெறாதவை, மெருகேற்றம் செய்யப்பட்டவை, துளையிடப்பட்ட, துளையிடப்படாத கற்கள் மிகுதியாகக் கிடைப்பதைக் கொண்டும், சங்கப்பாடல்களைக் கொண்டும் கொடுமணல் பகுதி அணிகலன் தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தது என்பதை உறுதியாகக் கூறலாம்.

கொடுமணல் பகுதியைச் சுற்றி கொல்லம்பாளையம், கொல்லன்கோவில், பொன்கல்லூர் (பொங்கலூர்), கொல்லன் மங்கலம், இரும்பூர் ஆகிய பெயர்களில் ஊர்ப்பெயர்கள் காணப்படுவதும் இந்தக் கல்மணிகளும் இந்தப் பகுதியின் பழம்பெருமையை உறுதி செய்கின்றது.

எகிப்து நாட்டின் கல்லறைகள் போன்று மிக நுணுக்கமான பெருங்கற்காலச் சின்னங்கள் குறித்து இன்னும் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பலவிதத் தரவுகளை நாம் பெற இயலும். தமிழகத்தின் மிகப் பழமையான கோயிலாகத் திகழும் சிதம்பரம், திருவரங்கம் ஆகிய கோயில்களுக்குக் கொடுமணல் பகுதி அணிகலன்களைக் கொண்டே கோபுரங்களைச் செப்பம் செய்தனர் என்பதும் நமக்கு வெளிப்படையான ஆய்வுகளில் கிடைக்கின்றது.

கொடுமணல் மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் மட்டும் கிடைக்கும் பெருங்கற்படைச் சின்னங்கள் இறந்தோர் அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டதா? அல்லது வீரம், வணிகம், சமூகத்தில் உயர்ந்தோர் ஆகியோர்க்கு மட்டும் அமைக்கப்பட்டதா என்பது பற்றிய ஆய்வுகள் இன்னும் நடைபெறத் தொடங்கவில்லை. கொடுமணல், மோட்டூர், உதயநத்தம் ஆகியவை ஈமச் சின்னங்கள் என்பது நமக்கு உறுதியாகின்றது. அவ்வழியில் பிற்காலத்தில் தாய்வழிச் சமூகம் என்னும் கட்டமைப்பில் ஒரு சில குத்துக்கல் தாய் வழிச்சமூக வழிபாட்டுத் தலமாக மாறி வருவதை நாம் ஆராய்ந்தோமெனில் பண்டைய காலத்தில் தாய் அல்லது பெண்கள் தலைமையில் குடிகளோ, நாடோ, படைகளோ காணப்படவில்லை என்பதும் பிற்காலத்திய வழிபாட்டுச் சித்தரிப்புகளாக இந்தப் பண்பாட்டுக் காலத்தின் பெருங்கற்படைச் சின்னங்கள் மாற்றப்பட்டது என்பதும் நமக்குப் புலனாகின்றது.

உலகின் முதல் அணை என்று கூறப்படும் கல்லணையின் பிடிமானத்திற்கும், உலகின் முதல் கால்வாய் என்று அழைக்கப்படும் காலிங்கராயன் கால்வாய் கட்டப்பட்ட தொழில் நுட்பத்திற்கும் கொடுமணல் தொழில் நகரத்திற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும் என்பதை நாம் அறிய முடிகின்றது. ஏனெனில் பட்டினப் பெருவழி என்று அழைக்கப்படும் நாகப்பட்டினம் தொடங்கி முசிறி துறைமுகத்தின் இடையில் புகழ்பெற்ற நகரமாக விளங்கிய நகரமே கொடுமணல் என்பதும் இந்தப் பகுதியின் அகழாய்வுப் பொருள்களும் நமக்கு அடையாளப்படுகின்றன. கொடுமணல் பகுதிக்கு மிக அருகில் காணப்படும் விசயமங்கலம் என்னும் ஊரைப் பற்றியும் அருகில் உள்ள பெருந்துறை என்னும் ஊரும் காரணப் பெயராகவும் கொடுமணல் வர்த்தகத்தோடு தொடர்புடையதாகவும் இருக்கலாம் என்பதும் புலனாகின்றது.

குத்துக்கல் கல்லறை குறித்த ஆய்வுகள் இன்னும் தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே கிடைக்கின்றன. தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகளில் பெரும்பாலும் முதுமக்கள் தாழி கல்லறைகள் மட்டுமே அதிகம் கிடைக்கும். ஆனால் கொடுமணலில் ஒரே இடத்தில் மூன்று வகையான குத்துக்கல், வட்டக்கல், முதுமக்கள் தாழி கல்லறை அமைப்புகள் கொண்டதாக இருப்பதும், சிறப்புடன் விளங்கிய இந்த நகரம் எப்படி அழிந்து போனது என்பது பற்றியும் இன்னும் தொல்லியல் துறையினர் தங்களது முடிவுகளை வெளியிடவில்லை. இந்தியாவின் இரும்புக் காலத்தின் முக்கியத் தடமாக விளங்கிய கொடுமணல் தமிழக அகழாய்வுகளில் இன்னும் சரியான முடிவுகள் தெரியாத ஓர் அகழாய்வாகவே கருதப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வில் தொழிற்கூடங்களில் தண்ணீா் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கால்வாய் நொய்யல் ஆற்றுப்பகுதி வரை சென்று இருக்கலாம் எனக் கருதப்பட்டது.

இப்படிப் பல நிகழ்வுகளின் வரலாறாக உள்ள கொடுமணல் நகரத்தின் வட்டக்கல் கல்லறைகள் பற்றியும் அருகில் உள்ள விசயமங்கலம் போன்ற நகரங்கள் குறித்தும் இன்னும் கொஞ்சம் காணலாம்….

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *