உலகம் முழுவதும் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் காலத்தில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு இருந்துள்ளது இதனைப் பெருங்கற்காலப் பண்பாடு எனத் தொல்லியலாளர்கள் அழைக்கின்றனர். தமிழகத்தில் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் நடந்த கொடுமணல் ஆய்வு முடிவுகளின் படி கி.மு 540இல் இருந்து காலக்கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் இவைகளில் எழுத்துப் பொறிப்புகளுடன் கிடைத்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது; அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுத்து வடிவம் இருந்துள்ளதை இந்த அகழ்வாய்வு வெளிப்படுத்தியது.
கல்வட்டம் என்பது தரையின் கீழ்ப் பகுதியில் குழியைத் தோண்டி நான்கு பக்கமும் பலகைக் கற்கள் ஒன்றுடன் ஒன்றை இணைத்து செவ்வக வடிவில் அமைக்கப்படும். கல்லறையின் கீழ்ப்பகுதியும் மேல்பகுதியும் பலகை போன்ற அமைப்புடைய கற்களால் மூடப்பட்டிருக்கும் வகையில் கொடுமணல் பகுதியில் கிடைத்துள்ளன. கல்வட்டங்களில் முதுமக்கள் தாழிகள், ஈமச்சடங்கிற்கானப் பொருள்களோடு தொடர்புடைய மண்பாண்டங்களுடன் மண், கற்களைக் கொண்டு மூடிவிடுவர். பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களைப் புதைத்த இடமாக கல்வட்டங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன என்பதை கொடுமணல் கல்வட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழகத்தில் நடைபெற்ற எந்த அகழாய்விலும் மூன்று வகையான கல்லறை அமைப்புகள் கிடைக்கப் பெறவில்லை என்பதும், தமிழகத்தின் கொடுமணல் பகுதியில் மட்டுமே நெடுங்கல், வட்டக்கல், முதுமக்கள் தாழி அமைப்புடைய கல்லறைகள் பெருங்கற்காலச் சின்னங்கள் கிடைத்தன என்பதும் அகழாய்வுகளின் சான்றாகத் திகழ்கின்றன.

கொடுமணல் என்னும் மாபெரும் நகரம், தொல்லியல் சான்றுகளின் மிகப்பெரிய களஞ்சியமாகவும் திகழ்ந்த இந்த நகரம் எப்படி அழிவுபட்டது என்பது இன்னும் ஆராய்ச்சிக்குட்பட்டது. நொய்யல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திசை மாற்றம் ஏற்பட்டு இந்த நகரம் அழிந்திருக்கலாம் என்ற நோக்கிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் முதல் பண்பாட்டுக் காலத்திலேயே கொடுமணல் நகரம் பல்வேறு பெருமைகளுடன் செழிப்புடன் திகழ்ந்தது என்பது கொடுமணல் அகழாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற மண்பாண்டங்கள் வழி அறியமுடிகின்றது.
ஒரு பண்பாட்டிற்கும் அதனை அடித்த பண்பாட்டிற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்குமானால் ஒரே மண் அடுக்கில் இரண்டு பண்பாட்டின் பொருள்களும் கிடைக்குமாயின் இரு பண்பாட்டைச் சேர்ந்தவர்களும் கொடுமணல் பகுதியில் வாழ்ந்திருப்பர் எனக் கருதலாம். கொடுமணல் பகுதியில் புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்களும் இரும்புக்கால மக்கள் பயன்படுத்திய பொருள்களும் கிடைப்பதை இங்குக் குறிப்பிடலாம். மண் அடுக்குகள் இயற்கையின் சூழலால்தான் பெரும்பாலும் ஏற்படுகின்றன. தொடர் மழை, திடீர் வெள்ளம் இவைகளால் ஓரிடத்தில் உள்ள மண் வேறொரு இடத்திற்கு இடம்பெயருகின்றன. தொல்லியல் துறையின் மிகச்சிறந்த உத்திகளில் ஒன்று மண் அடுக்கைக் கண்டறிவது ஆகும். மண்ணின் நிறம், கடினத்தன்மை ஆகியவற்றை வைத்தே காலப் பயன்பாட்டை நாம் அறியலாம். இந்த முறைகள் அனைத்தும் கொடுமணல் அகழாய்வுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கற்காலத்தில் அதன் முதல் அங்கமான செம்புக் காலத்திலேயே இரும்பும் அதன் தொழில் நுட்பமும் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகக் கொடுமணல் திகழ்வது இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான பொருள்களில் மட்கலன் ஓடுகளே மிகுதியாகக் கிடைத்துள்ளன. கொடுமணல் பகுதியிலும் அவ்வாறான சான்றுகளே கிடைக்கின்றன. மூன்று வகையான கல்லறைகள் மற்றும் அந்த இடங்களில் கிடைத்த ஆய்வுகளில் தமிழகத்திற்கு வருகை புரிந்த அயல்நாட்டவர்கள் குறித்தும் நாம் அறிய முடிகின்றது. கொடுமணல் பகுதியில் ஆம்போரா, அரிடைன் போன்ற மட்கலன் ஓடுகள் மிகுதியாகக் கிடைப்பதை வைத்து ரோமானியர்கள் கொடுமணல் பகுதியில் வருகை புரிந்து வணிகம் செய்ததையும் அறிய முடிகின்றது.
தமிழக தொல்லியல் அகழாய்வுகளில் மிகுதியாக எழுத்துப் பொறித்த மட்கலன்களே கிடைத்துள்ளன. கொடுமணல் போன்ற சில இடங்களில் மட்டுமே எழுத்துப்பொறிப்பு மட்கலன்கள் கிடைக்கின்றன. அகழாய்வு முறைப்படி மண் அடுக்குகளில் முதலில் எழுத்துப் பொறிப்புகளும் அதனையடுத்து குறியீடுகளும் கிடைக்கின்றன. குறியீடுகளைத் தொடர்ந்து எழுத்துகள் ஆரம்பமாகின்றன என்பதை நாம் அறியமுடிகின்றது. தமிழக அகழாய்வுகளில் அதிக அளவில் குறியீடுகள் மற்றும் எழுத்துகள் கிடைத்த இடமாகக் கொடுமணல் அகழாய்வே திகழ்கின்றது.

கொடுமணல் அகழாய்வில் கண்ணன், சாத்தன் போன்ற சொற்களும் கிடைத்துள்ளன. கொடுமணல் அகழாய்வில் 96 பொருள்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் நெடில் எழுத்துகள் கிடைக்கப்பெறாத நிலையில், கொடுமணல் அகழாய்வில் நெடில் ஆ, ஈ எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
கொடுமணல் தொல்லியல் களத்தில் சங்கு அறுக்கும் நுட்பமும், சங்குப் பொருள்களும் கிடைத்துள்ளன. தமிழகத்தின் வளைகுடாப் பகுதிகளில்தான் சங்கு உற்பத்தி மிகுதி என்பதையும் கொற்கைப் பகுதியில் சங்குகள் பற்றிய செய்திகளையும் மதுரைக்காஞ்சி நூலும் பதிவு செய்துள்ளன. அதேபோலத் தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் இருந்து சங்குப் பொருள்களைத் தருவித்து கொடுமணல் பகுதியில் அணிகலன் தொழில்நுட்பம் நடைபெற்றிருக்கலாம் என்பதை அறிய முடிகின்றது. இங்குக் கிடைக்கப்பெற்ற சங்குகள் எழில்மிகு தோற்றம் கொண்டிருந்தது என்று தொல்லியல் அறிஞர் ராஜன் குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
கொடுமணலில் 1456 குறியீடுகள் பொறித்த பானையோடுகள் கிடைத்தும் அவற்றில் 600க்கும் குறைவான ஓடுகளில் மட்டுமே அடையாளம் காணும் குறியீடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அந்தக் குறியீடுகளில் ‘ம’ வடிவம் அதிகம் கிடைக்கப்பெறுவதையும் தொல்லியல் அறிஞர் ராஜன் குறிப்பிடுகிறார்.
பொஆமு 3ஆம் நூற்றாண்டில் கொடுமணல் பகுதி வட இந்தியாவோடும், உலகின் மிக முக்கியப் பகுதிகளோடும் வணிகத் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதைக் கொடுமணல் அகழாய்வு நமக்கு உணர்த்துகின்றது.
1950களில் இருந்து 2020 வரை தொடர்ச்சியாகப் பல ஆய்வுகள் கொடுமணலில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு முறையும் கொடுமணல் தொல்லியலின் அட்சய பாத்திரமாகவே திகழ்ந்து வருகின்றது என்பதும், அதன் வரலாறுகள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)