Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #4 – தொன்மை வாய்ந்த கரூவூர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #4 – தொன்மை வாய்ந்த கரூவூர்

தொன்மை வாய்ந்த கரூவூர்

தொல்லியல் என்பது மனிதன் கடந்து வந்த பாதைகளை மட்டுமல்லாமல் பண்பாடுகளையும் அறிந்துகொள்ள உதவும் அறிவியல் ஆய்வாகும். ஓரிடத்தைத் தொல்லியல் அல்லது அகழாய்வுக்குத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பல்வேறு படிநிலைகளைக் கணக்கில் எடுக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் அகழாய்வுக்கான அமைப்புகள் உள்ளனவா என்பதை ஆய்வதே முதல் ஆய்வு.

இலக்கியங்களில் உள்ள சான்றுகள், மக்களின் வாழ்வியல் முறைகள், சடங்கு முறைகள், நாட்டுப்புறப் பாடல்களையும் தொல்லியல் ஆய்வுக்குக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் ஏதேனும் ஒரு பண்பாட்டுக் கூறுகள் கிடைப்பதற்கு அடிப்படைத் தரவாக அமையும்.

தமிழ் இலக்கியங்களில் தண்பொருநை நதியும் ஆன்பொருநை நதியும் குறிப்பிடத்தக்க இடங்களை வகிக்கின்றன. தண்பொருநை என்பது தாமிரபரணி ஆற்றையும், ஆன்பொருநை என்பது கருவூர் அமராவதி ஆற்றையும் குறிக்கின்றன.

சங்க காலத்தில் வஞ்சி மாநகரம் என்றும் இடைப்பட்ட காலத்தில் கரூவூர் என்றும் ஆங்கிலேயர்களால் கரூர் என்றும் வழங்கப்பட்ட இன்றைய கரூர், சங்க காலம் தொட்டு முக்கிய நகரமாக விளங்கியுள்ளது. ஆனைமலைத் தொடர்களில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு கரூர் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கிறது. ஆன்பொருநை என்னும் பெயரிலேயே கரூரில் உள்ள சிவாலயத்தின் இறைவனும் ஆநிலையப்பர் என்றே அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் பசுபதீஸ்வரர் என்னும் சமஸ்கிருதச் சொல்லால் அவர் வணங்கப்படுகிறார்.

சேர அரசன் செங்குட்டுவன் காலத்தில் சேர அரசர்களின் தலைநகராகவும், வணிகத் தலைநகரமாகவும் கருவூர் விளங்கியதை இலக்கியங்கள் வழியே நாம் அறிய முடிகின்றது. சேர நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் வஞ்சி நகரம் பொதுவான வணிக நகரமாக இருந்ததையும் அறிய முடிகின்றது. சோழர்கள் அடிக்கடி வஞ்சி நகரின்மேல் போர்தொடுத்து வந்தமையால் பிற்காலத்தில் சேரர்கள் தம் தலைநகரை மாற்றிக்கொண்டிருக்கலாம் என்பதையும் ஊகங்களின் வழி அறிய முடிகின்றது.

வரலாற்று ரீதியாகவும், இலக்கியங்கள் வழியாகவும் சிறப்புகள் பெற்ற கரூவூர் நகரில் 1973-74, 1977, 1979 ஆகிய ஆண்டுகளில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தொல்லியல் ஆய்வுகளின் வழி பெருங்கற்கால வரலாறுகள் கிடைக்கப்பெற்றன. அதற்கு முன்பாக நத்தமேடு என அழைக்கப்படும் ஊரில் மண்மேடுகள் காணப்பட்டு அதனை முறையாக அகழ்ந்தபோது அதிலிருந்து கிடைக்கப்பெற்ற தொல் சான்று பொருள்கள் கரூவூரின் பழமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

கரூவூரை அடுத்த மண்மங்கலம் என்னும் ஊரில் அகழாய்வுகளின்போது மூன்று சுடுமண் பொம்மைகள் கிடைத்தன. அந்தப் பொம்மைகளில் ஒரு பெண் அமர்ந்த நிலையிலும் அவளது இடையில் அமர்ந்து ஒரு குழந்தை பால் பருகுவது போலவும் இருப்பதைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்தனர். காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் கரைகளில் இதுபோன்றே பல சுடுமண் பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருவூரின் திருக்காம்புலியீர் மற்றும் அழகரை என்னும் ஊர்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது தானியங்களைச் சேமித்துப் பாதுகாக்கும் அறைகளை உடைய கட்டட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டன. அதிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கரூவூரில் ஒரு பழைய கட்டடத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

கரூவூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் மாயனூர் என்னும் ஊரில் மண்மேடுகளும் தொல்லியல் துறையால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. இதனை மதிற்கரை எனவும் அழைக்கின்றனர். இந்த மாயனூர் காவிரியின் கரையில் அமைந்த ஊராகவும், முறையே சேர, சோழ, பாண்டிய அரசர்களின் பொது வழிபாட்டுத் தலமாகவும் இருந்ததையும் இலக்கியச் சான்றுகள் வழியே அறிய முடிகின்றது. இந்த மதிற்கரை பற்றி அய்யர்மலை, சேந்தமங்கலம் கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைத் தொல்லியல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கரூவூரின் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் கி.மு ஒன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழிக் கல்வெட்டு,

‘பனைதுறை வெசன் அதட்அனம்’

என்று கண்டறியப்பட்டதை இந்த ஊரின் வரலாற்றுத் தொன்மைக்குச் சான்றாகக் கூறலாம்.

கருவூரின் புகளூர் கல்வெட்டு சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுவதையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த புகளூர் கல்வெட்டில்,

கோ ஆதன் சேரலிரும்பொறை
அவன்மகன் பெருங்கடுங்கோ
அவன் மகன் இளங்கடுக்கோ

என்று மூன்று அரசர்களையும் இளங்கோ பட்டம் எய்தியபோது ஆற்றூரைச் சார்ந்த செங்காயப்பன் என்ற சமணப் பெரியாருக்குச் சமணப் பள்ளி அமைத்துக் கொடுத்த செய்தியை இந்தக் கல்வெட்டுப் பகிர்கின்றது.

சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தின் தலைவனாக பெருஞ்சேரன் இரும்பொறையும் ஒன்பதாம் பத்தின் தலைவனான குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையும் போற்றப்படுகின்றனர். இலக்கியத்தில் உள்ள அரசர்களின் பெயர்களை கரூவூரின் புகளூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுவதன் மூலம் இந்தக் கல்வெட்டின் தொன்மை நமக்குப் புலனாகிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் இந்தக் கல்வெட்டுக்களை வரலாற்றுச் சின்னமாகப் போற்றும் வகையில் பாதுகாக்கின்றனர்.

1973இல் தொடங்கி நான்கு கட்டங்களாகத் தமிழகத் தொல்லியல் துறையால் ஆராயப்பட்ட கரூவூர் தொல்லியல் பகுதிகள் பல சான்றுகளை வெளிக்கொணர்ந்தவையாக உள்ளன. 1979இல் கருவூர் பெண்கள் பள்ளி வளாகத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டபோது கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சான்றுகளைக்கொண்டே கரூவூரின் கால பகுப்பு முறை தொல்லியல் ஆய்வாளர்களால் உறுதியாகக் கூற முடிந்தது.

1996இல் கரூவூரின் அமராவதி ஆற்றின் கரைகளில் மக்களால் பல இடங்களில் சங்க காலத் தமிழி எழுத்துகள் கொண்ட மோதிரங்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களும் சேகரிக்கப்பட்டுத் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு அகழாய்வு மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்பொருட்டு ஆற்றின் ஓர் இடத்தில் மட்டும் தொல்லியல் துறையினர் அகழாய்வுக் குழிகள் அமைத்து ஆராய்ச்சி மேற்கொண்டபோது பொதுமக்களுக்குக் கிடைத்த சான்றுகள் கூடத் தொல்லியல் துறைக்குக் கிடைக்கவில்லை. இதனை மட்டும் காரணமாகக் கொண்டு தொல்லியல் துறையினர் அமராவதி ஆற்றின் பிற இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளவில்லை. சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமராவதி ஆற்றின் கரையில் முறையாகத் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டால் பல சான்றுகள் கிடைக்கும் என்பது திண்ணம்.

தொல்லியல் துறையின் அகழாய்வுகளில் கிடைக்கப்பட்ட சான்றுகளின் வழி கரூவூரின் தொன்மையும், தமிழ் நாட்டின் வணிகச் சிறப்பினைப் போற்றும் சான்றுகளும் கிடைத்துள்ளன. வஞ்சி மாநகரம் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்ததற்கு ஆம்பொரா, ரெளலடட் பானை ஓடுகள் சான்றாகின்றன. கரூவூர் நகரம் வட இந்தியப் பகுதிகளுடன் தொடர்பில் இருந்ததையும் அறிய முடிகின்றது. மூன்று வெள்ளை நிறத்திலான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதைக் குறிப்பிடும் தொல்லியல் துறையினர் இந்த ஓடுகள் 4 அல்லது 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று குறிப்பிடுகின்றனர். கரூவூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இந்த ஓடுகள்போல வடமாநிலங்களில் அம்பாரி என்னும் இடத்தில் நடந்த தொல்லியல் துறை அகழாய்வு இடத்தில் மட்டுமே கிடைக்கின்றது என்பதைக் குறிப்பிடுகின்றனர்.

1977ஆம் ஆண்டு கரூவூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் குறகல் என்னும் பெயரை உடைய பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுபோன்ற பானை எழுத்துகள் கொடுமணல் பகுதியிலும் கிடைத்துள்ளன என்னும் செய்தியையும் தொல்லியல் துறையினர் பதிவு செய்கின்றனர். தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்ட பொன்னால் ஆன இலச்சினை மோதிரம் இந்த ஆய்வில் சிறப்பிடம் பெறுகின்றது. சங்க காலத்தின் கலைக்கு ஆதாரமாகவும், அந்தக் கலையின் முதல் புறச்சான்றாகவும் இந்த மோதிரம் இருப்பதையும் தொல்லியல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கரூவூரின் தொல்லியல் அகழாய்வில் கிடைத்த உலோகங்களில் ‘தித்தன்’, ‘பேர்அவதான்’ ‘தாயன் ஓதலான்’ என்ற பெயர்கள் காணப்படுவதையும் இன்னும் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல சான்றுகள் கிடைக்கும். மேலும் காவிரி மற்றும் அமராவதி ஆகிய ஆறுகளின் நாகரீகங்களையும், மக்களின் பண்பாட்டு எச்சங்களையும் இன்னும் மேற்கொண்டு அறிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்குக் கூடுதல் நிதியை அளித்து ஊக்குவித்தால் கரூவூர் என்றழைக்கப்படும் வஞ்சி நகரின் வரலாற்றுச் சிறப்புகளை நாம் அறிய இயலும்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *