கபாடபுரத்தையும், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துடன் குமரிக் கோட்டையும் கடலுக்குக் கொடுத்த பாண்டிய அரசர்களுக்குப் பொருளியலாலும், இட அமைப்பாலும் இன்னல்கள் இல்லாத தலைநகராக அமைந்தது கொற்கை என்னும் கடல் நகரம். இயற்கை வளங்கள் சூழ்ந்த பொருள் வளமிக்க பண்டையத் துறைமுகங்களில் பூம்பட்டினமும், கொற்கையும் பண்டைய காலத்தில் சிறந்து விளங்கின. பண்டைய காலத்தில் அயல்நாட்டு வணிகர்கள் மிகுதியாக வருகைபுரிந்த துறைமுக நகரமாக இருந்த கொற்கை என்னும் நகரம் உலக வணிகர்களின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
கொற்கை நகரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்த பாண்டியர்கள் உலகின் பல நாடுகளுக்கும் தம் தூதர்களை அனுப்பி வணிக உறவை மேம்படுத்திக்கொண்டனர். பாண்டிய அரசர்கள் தம் படைப்பிரிவில் பெரும் பகுதியைக் கொற்கைத் துறைமுகத்தில் நிறுத்தி அந்நகரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்னும் சான்றுகள் நமக்கு இலக்கியங்களாலும், தொல் சான்றுகளாலும் கிடைக்கின்றன.
வணிகத்தின் பொருட்டு பிற நாட்டு நாணயங்களை மாற்றப் பாண்டிய அரசர்கள் கொற்கையில் ஒரு மிகப்பெரிய நாணயம் அச்சிடும் சாலை ஒன்றையும் அமைத்து வணிகம் புரிந்தனர். வற்றாத ஜீவநதியாக ஓடிய தாமிரபரணி கொற்கையின் வழியே தான் கடலில் சென்று கலந்தது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால் அந்நகரை விட்டு கடல் உள் இழுக்கப்பட்டு இன்று சிற்றூரை விட மோசமாக, குடிக்க நல்ல நீர் இல்லாத கிராமமாக இருக்கின்றது.
கொற்கை முத்து என்றழைக்கப்பட்டு உலகப்புகழ் பெற்ற நகரமாக விளங்கிய கொற்கை இன்று ஊராட்சி ஒன்றியமாகச் சுருங்கிப் போனாலும் இலக்கியத்தாலும், தொல்லியலாலும் அந்த நகரம் அழியாப் புகழை இழக்காமல் இருக்கின்றது.
தற்போதைய கடலை விட்டு கிட்டத்தட்ட 5 கி. மீ தள்ளி இருக்கின்ற தற்போதைய கொற்கையில் எங்குத் தோண்டினாலும் சிப்பிகளும், கடல் மணலும் கிடைக்கவே செய்கின்றது.
‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை’ என்ற அகநானூறு வரிகளின் ஆதாரமாக, பெரிய துறைமுகப் பட்டினமாக இருந்த கொற்கையில் அதன் தொன்மையை இலக்கியங்கள் தாண்டி நிரூபிக்கப் பல முன்னெடுப்புகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டன.
1880ஆம் ஆண்டில் கிறித்தவச் சமய குருவாகத் திகழ்ந்த ராபர்ட் கால்டுவெல் கொற்கை நகரை ஆராய்ந்து பல ஆய்வுகளின் மூலம் அந்நகரின் பெருமையை வெளிக்கொணர்ந்தார். 1888ஆம் ஆண்டில் அறிஞர் உலோவந்தால் என்பவர் கொற்கை வருகை புரிந்து அங்குக் கிடைத்த பழங்காலத்திய பொருள்களை ஆராய்ந்தார். கொற்கையில் கிடைத்த பழங்காசுகளை ஆராய்ந்து ‘திருநெல்வேலி காசுகள்’ என்ற நூலையும் வெளிக்கொணர்ந்தார். டாக்டர் ஈல்சு மார்ட்டின் என்பவர் கொற்கை நகர் பற்றி 1923களில் ஆராய்ந்து அந்த நகரின் தொல் சான்றுகள் பற்றிப் பல கட்டுரைகளின் வழி வெளிப்படுத்தினார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு 1970ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறை சார்பில் விரிவான ஆய்வுகள் கொற்கை நகரத்தில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் மூலமாக பழங்காலத்திய நாணயங்கள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், யவன நாட்டுப் பொருள்கள் கிடைத்தன. சிந்துவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொற்கை நாட்டின் முத்தும் கிடைக்கப்பெற்றது என்பதிலிருந்து இந்நகரின் தொன்மைக்கும், அடையாளத்துக்கும் சான்றாகத் திகழ்கின்றன. கொடுமணல் போன்றே கொற்கையிலும் சிறந்த அணிகலன்கள் செய்யும் ஆலைகள் இருந்திருக்கின்றன என்பது புலனாகின்றது. தாலமி என்னும் யவனர் கொற்கை முத்தின் சிறப்பைப் போற்றியுள்ளதும் இங்குப் புலனாகின்றது.
நாணயங்கள் அச்சிடும் அக்கசாலை இருந்தமைக்கு ஸ்ரீ ஈஸ்வரமுடையார் திருக்கோயில் கல்வெட்டுகள் நமக்குச் சான்றுகளாகின்றன. இந்தக் கல்வெட்டுகளில் கோயிலுக்கும், கொற்கை நகரத்திற்கும் அளிக்கப்பட்ட தானங்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன. கொற்கை என்னும் நகரின் தொன்மைக்குச் சான்றாக அந்நகருக்குச் செல்லும் வழியில் மாறமங்கலம், சேந்த மங்கலம், மங்கலக்குறிச்சி என்ற கிராமங்கள் பாண்டிய மன்னர்கள் தானம் வழங்கிய ஊர்கள் என்பவற்றிற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. பாண்டிய அரசர்களின் மதுரைத் தலைநகரம் அரசத் தலைநகராகவும், கொற்கை, வணிகத் தலைநகரமாகவும் இருந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கின்றன என்பதற்கும் சான்றுகள் இலக்கியங்களின் வாயிலாகக் கிடைக்கின்றன. கொற்கை அகழாய்வில் எடுக்கப்பட்ட பானை ஓட்டில் கிடைக்கப்பெற்ற சான்றுகளில் கி.மு. 785 முதலாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பானை ஓடுகளும் கரித்துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டு மும்பை டாடா நிறுவனத்திற்கு அனுப்பிட அதன் ஆய்வு முடிவுகள் மேற்கூறிய காலத்தை உறுதி செய்கின்றன.
பழம்பெரும் வணிக நகரமாகத் திகழ்ந்த கொற்கை நகரின் தற்போதைய பழம்பெருமையின் எச்சமாகப் பழமையான ஒரு மரமும், கண்ணகி கோயில் என்றும் வெற்றிவேல் அம்மன் கோயிலும், பழமையான அக்கசாலை தற்போது ஈசுவரமுடையார் கோயிலாகவும் இருக்கின்றது. இந்த நகரில் கண்டெடுக்கப்பட்ட செப்புக் காசில் வெற்றிவேல் செழியன் என்ற பெயர் காணப்படுவதும் அந்தப் பெயர் பாண்டிய அரசனின் பெயராக இருக்கலாம் என்பதும் தொல்லியலாளர்களின் கூற்றாகும்.
மத்திய மாநில அரசுகள் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை இன்னும் செம்மைப்படுத்தினால் இன்று ஊராட்சியாக விளங்கும் பழம் பெரும் கொற்கையின் மாண்பு வெளிப்படும். தற்போது கடலை விட்டு ஆறு கி.மீ. தள்ளியிருக்கும் கொற்கை, வரலாற்றோடு நெருக்கமாகவே இருக்கின்றது. வரலாறு அறிவோம். கொற்கை வளம்மிகு நாட்டின் மாண்பை, மதிப்பை, முத்தை அறிவோம். கொற்கை என்னும் நகரின் தொல் மரபை அடுத்த தலைமுறைக்கு அறிவிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு அரசுக்கும், திருநெல்லைச் சார்ந்த பல்கலைக்கழகத்திற்கும், தொல்லியல் துறைக்கும் கூடுதலாக இருக்கின்றது.
(தொடரும்)