வேட்டைச் சமூகமாக இருந்த மக்கள் வேளாண் குடி மக்களாக மாறியமைக்கானச் சான்றுகள் அகழாய்வுகள் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன. கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனிமலைக்குத் தென் மேற்குத் திசையில் பொருந்தல் என்னும் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அகழாய்வு வரலாற்றால், பண்பாட்டால், மொழியால் பல சிறப்புகளைத் தமிழ் மொழிக்குப் பெற்றுத் தந்தது.
அசோகப் பேரரசின் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் பொருந்தல் இடத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைக்கப்பெற்றமை இங்கு முக்கியச் சான்றாகத் திகழ்கின்றன.
நெல்லரிசி தமிழர்களின் திணை நில உணவு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்மணிகளைப் புதுச்சேரியைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் இராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் பெரும்பாலும் ஈமக்காடுகள் என்றழைக்கப்படும் புதை காடுகளிலேயே அதிகம் நடைபெற்று நம் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்பவனாக உள்ளன. ஈமக்காடுகளை மட்டுமே ஆய்ந்து காலப்போக்கில் மக்களின் வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையால் அல்லது ஆய்வுகள் நடத்த அனுமதி கிடைக்காமையால் தமிழ் நில மக்கள் நாடோடி இனக்குழுவைச் சார்ந்தவர்கள் என்னும் நோக்கில் பதிவுகள் வரத்தொடங்கிய நிலையில் சமீபத்திய சில தொல்லியல் ஆய்வுகள் நம் நிலத்தில் காலப்பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் வெளிக்கொணர்ந்துள்ளன.
பொருந்தல் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நெல் அறிவியல்பூர்வமாகத் தானியங்களைக் காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவீன முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கிமு 490 என்று வந்தது. உலகத்திலேயே பீட்டா அனலிட்டிக்கல் லேபாரட்டரி அமெரிக்காவில்தான் உள்ளது. பொருந்தல் நெல்லை இராஜன் தலைமையிலான குழு அனுப்பியபோது இந்த காலக் கணிப்பு வந்தது. அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
வேட்டைச் சமூக மக்கள் வேளாண் சமூக மக்களாக, ஆற்று வெளி மற்றும் சமவெளிப் பகுதிகளில் தங்கள் குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கினார்கள். அவ்வாறு காலப்போக்கில் திணை நில வாழ்வியல் உருவாகி மக்கள் ஓரிடத்தில் குடியாக, இனமாக, கூட்டமாக வாழத் தலைப்பட்டனர். அப்படி உருவான மக்கள் மாடுகளைச் செல்வமாக அனைத்து நிலங்களிலும் வளர்க்கத் தொடங்கினர். மாடுகளை வைத்தே மனித சமூக மேம்பாடு அன்றைய காலத்தில் நிர்ணயிக்கப்பட்டது.
‘ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே (தொல் 20:3)’ என்ற தொல்காப்பிய நூலும் பண்டைய காலத்தில் மாடுகளை வைத்தே போர்கள் நடைபெற்றதைக் குறிப்பிட்டுக் கூறுகின்றது. சமூகத்தில் உயர்நிலைக் குடிகளின் புதைகுழியில் இத்தகைய பொருள்களை வைத்து உடல்களை அடக்கம் செய்திருப்பர் என்பதும், இது போன்றே கொடுமணல் நிலங்களிலும் கிடைத்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம். அவ்வாறு பொருந்தல் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் கிடைத்த நெல்மணிகளையும் தமிழி எழுத்துகளும் நம் நிலத்தின் காலப்பெருமையை உணர்த்துகின்றன.
‘வைகாவி நாட்டுப் பொருந்தல்’ என்னும் சான்றுகளுடன் இந்த ஊரை ஆய்வு செய்தபோது பல்வேறு சான்றுகள் நமக்குக் கிடைக்கப்பெற்றன. பொருந்தல் நிலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற எழுத்துடை நடுகல் கொண்டு நம் ஆய்வுகளை இன்னும் விரிவுபடுத்தினால் பண்டையக் காலத்திலேயே நம் சமூகக் குடிகள் எழுத்தறிவு பெற்று விளங்கியிருத்தலையும் அறியலாம்.
பொருந்தல் நதியின் கரையில் கொடுமணலைப் போலச் சிறப்புப் பெற்ற வணிகக் குழு அல்லது சந்தைப் பொருளாதார நகர்வுகள் அடிப்படையில் இந்தப் பகுதியில் சிறப்பு நிலை வணிகம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று அறிய முடிகின்றது.
மேற்காணும் படத்தில் காணப்படும் ஊதுகுழல்களைக் கொண்டு ஆராய்ந்தோமெனில் இந்தப் பகுதியில் மணிகள் அல்லது ஆபரணத் தொழில்கள் நடைபெற்று இருக்கலாம் என்பதை ஊகித்து அறிய முடிகின்றது. பொருந்தல் பகுதியில் அதிகமாகக் கிடைக்கப்பெற்ற பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இந்தப் பகுதியின் தொன்மையை நமக்கு உணர்த்துகின்றன. பெருங்கற்காலம் முதல் வரலாற்றுக்காலம் வரை தமிழ் நிலத்தின் பல பகுதிகளில் மணிகள் உற்பத்திச் செய்யும் தொழில்கள் சிறந்தோங்கி இருக்கலாம் என்ற ஆய்வுக் கோணத்திலும் நாம் ஆராய்தல் அவசியம். இந்தப் பகுதிகளில் கிடைக்கப்பெற்ற ஆபரணங்கள் உலகின் பல நாடுகளுக்கும் வணிகக் குழுக்கள் இவற்றைக் கொண்டு சென்றிருப்பார்கள் என்பதற்கான சான்றுகள் நமக்குக் கொடுமணல் இலக்கியச் சான்றுகள் வழி அறிய முடிகின்றது.
பொருந்தல் அகழாய்வுகளில் சங்க காலத்தைச் சார்ந்த செங்கல் கட்டடப் பகுதி ஒன்றும் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. செங்கற்களின் அளவுகள் முறையே 42 செ.மீ. X 21 செ.மீ. X 7 செ.மீ. மற்றும் 48 செ.மீ. X 24 செ.மீ. X 8 செ.மீ. இவை 1:3:6 என்ற அமைப்பில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய செங்கற்கள் கொற்கை, பூம்புகார், உறையூர், அழகன்குளம், அரிக்கமேடு, கரூர் போன்ற சங்க கால வாழ்விட அகழாய்வு கட்டடப் பகுதிகளில் கிடைத்துள்ளது ஒப்புநோக்கத்தக்கது. பொருந்தல் என்னும் ஊரகப் பகுதி பண்டைய காலத்தில் சிறப்புறு நகரமாகத் திகழ்ந்திருக்கலாம் என்பதற்கும் இந்தச் சான்றுகள் நமக்குக் காரணியாகத் திகழ்கின்றன.
பெருங்கற்காலத்தின் சிறப்பாகக் கருதப்படும் கருப்பு சிவப்பு மண்கலங்கள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொருந்தல் கிராமத்தில் நான்கு கால் சாடி ஒன்றிலிருந்து பல நூறு ஆண்டுகள் பழமையான நெல் கிடைத்துள்ளது. இங்குச் சேகரிக்கப்பட்ட மட்கலப் பிரிமனையில், ‘வயர’ என்ற தமிழி எழுத்து காணப்பட்டது. இதன் காலத்தை பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர். இது, தமிழக அகழாய்வுகளில் குறியீடும், தமிழி எழுத்துகளும் இணைந்து கிடைத்த தொல்லியல் சிறப்புத் தடயமாகப் பொருந்தல் திகழ்கின்றது. மட்கலன்களில் குறியீடுகளும், கத்தி மற்றும் அம்பு முனை போன்றவையும் இங்குக் கிடைத்துள்ளன. தமிழகத்தின் பிற இடங்களில் அல்லது ஒரு சில இடங்களில் மட்டுமே எழுத்து வடிவங்கள் கிடைக்கப்பெற்றன என்பதும் கீறல் ஓவியங்களே பல மட்பாண்டங்களில் கிடைக்கும் நிலையில் தமிழகத்தில் பொருந்தல் அகழாய்வில் ‘வயர’ என்னும் சொல்லாட்சி ஆராய்ச்சிக்கு உட்பட்டதாக இங்குக் கருத வேண்டும். பேராசிரியர் இராஜன் தலைமையிலான குழுவினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பொருந்தல் அகழாய்வை மேற்கொண்டு நெல் மணிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தினர்.
தொல்லியல் அறிஞர் இராஜன் அவர்கள் இந்த வரிவடிவங்களை மிகக் கவனமாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு, ‘தமிழக அகழாய்வுகளில் கீறல் குறியீடுகளும், அதனைத் தொடர்ந்து உருவங்களும், பின்னர் உருவங்களும் எழுத்துகளும் இணைந்தவை என ஒன்றை அடுத்து ஒன்றாகக் காணக் கிடைக்கின்றன. இவை அனைத்தும், தமிழியின் வரிவடிவ வளர்ச்சியைக் காட்டும் சான்றுகள்’ என்று குறிப்பிடுகிறார்.
அசோகன் பிராமி எழுத்துகளுக்குப் பின்னர்தான் தமிழ் பிராமி எழுத்துகள் உருவாகியிருக்க வேண்டும் என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்துகளைப் பொருந்தல் அகழாய்வு முறியடித்து அசோக மன்னனுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் பிராமி எழுத்து வடிவங்கள் நடைமுறையில் இருந்தமையை இந்த அகழாய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. நெல்லின் காலம் கி.மு 490 எனக் கண்டறியப்பட்டிருப்பதால் அத்துடன் கிடைத்த இந்தத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பின் காலமும் அதேதான் என்பதும் உறுதியாகின்றன.
சில வரலாற்று மற்றும் தொல்லியல் அறிஞர்கள் அசோகர் காலத்திற்குப் பின்னரே தமிழ் பிராமி எழுத்து வடிவம் வந்திருக்க வேண்டும் என்றும் காலத்தால் முந்தையது அசோக பிராமி எழுத்து வடிவமே என்றும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டும் வருகின்றனர். இதனை மறுத்து இராஜன் அவர்கள், அசோகர் காலத்திற்கு முன்னரே தமிழ் எழுத்து வடிவம் நடைமுறையில் இருந்தமைக்குப் பல்வேறு சான்றுகள் கிடைக்கப் பெற்றதைக் குறிப்பிடுகிறார்.
பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களில் பொழுதுபோக்குச் சார்ந்த பொருள்கள் அதிகம். தந்தத்தால் செய்யப்பட்ட தாயம், விளையாட்டுப் பொருள்கள், கண்ணாடி மணிகள் ஆகியவை ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. உற்பத்தி சார்ந்த கருவிகளை விடவும் இத்தகைய பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட பொருள்கள்தான் பொருந்தல் பகுதியில் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, ‘ஒரே ஒரு கல்லறையில் 8000 கண்ணாடி மணிகள் கிடைக்கும்போது அவர்கள் எந்த அளவுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்று நாம் உணரமுடிகிறது. பொருந்தல் பகுதியில் அகழ்வாய்வு செய்திருப்பது ஒரு சதவிகிதம்தான். ஐந்து ஹெக்டேர் நிலப்பரப்பையும் அகழ்வாய்வு செய்தால் குறைந்தபட்சம் பத்து லட்சம் மணிகளாவது கிடைக்கும். அந்த மணிகள் எல்லாம் அவர்களால் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட மணிகள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். வேண்டாம் என்று ஒதுக்கியதே இவ்வளவு இருக்கும்போது அவர்கள் எவ்வளவு மணிகளை உற்பத்தி செய்திருப்பார்கள், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு வளமாக இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்கமுடிகிறது.’ என்கிறார் பேராசிரியர் ராஜன்.
தமிழ் நிலத்தின் பன்முகத்திறனை, இலக்கியச் சான்றைக் கொண்டும் அகழாய்வுச் சான்றுகளைக் கொண்டும் ஆராய்ந்து ஆவணப்படுத்திடத் தொல்லியல் களம் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. அவ்வகையில் தமிழகத்தின் பொருந்தல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்களும் நெல் மணிகளும் வரி வடிவமும் தமிழகத்தின் வரலாற்றை இன்னும் கூர்மைப்படுத்தி, செழுமை செய்கின்றது என்பதை உணர்வோம். தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொல்லியல் துறை தோற்றுவிக்கப்பெற்று தமிழகத்தின் ஊரகப் பகுதிகளிலும் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசும் பல்கலைக்கழகங்களும் முன்வந்து இப்பணியை உவப்புடனே ஆற்றிட வேண்டும். தமிழகத்தின் பொருந்தல் அகழாய்வு, பொருந்தாத பல அடிப்படைச் சான்றுகளைப் பொருந்தச் செய்து தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.
(தொடரும்)
மிகச்சிறப்பான செய்திகள் மேலும் உங்கள் ஆய்வுகள் தொடரட்டும்
நல்ல, பயனுடைய செய்திகள். வாழ்த்துக்கள்! நன்றி!