Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

மாங்குடி

தமிழக வரலாறு காலத்தால் மூத்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் இலக்கியச் சான்றுகளும் தொல் சான்றுகளும் கிடைத்து வருகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே முன்பே தமிழ்நாட்டில் பல ஊர்கள் சிறப்பிடம் பெற்றுப் பண்பாட்டு நிலையில் வளர்ச்சியடைந்த மக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. ஆனால் காலப்போக்கில் இயற்கைச் சீற்றம், போர்கள் போன்ற காரணங்களால் சிறப்பிடம் பெற்ற ஊர்கள் இருந்த இடம் தெரியாமல் மண்மூடிப் போன நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் ஆய்வுகள் வாயிலாகப் பண்டைய பழம்பெருமைகள் மீட்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பழங்காலத்தில் சிறப்புமிகு ஊராக விளங்கிய ‘மாங்குடி’ என்னும் ஊரின் தொல் சான்றுகள் குறித்து இங்குக் காணலாம்.

‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோ யிகந்து நோக்கு விளங்க’ (மதுரைக்காஞ்சி 10-13)

என்னும் பாடல் வரிகளின் விளக்கம், மதுரை நகரில் விதைத்த நிலங்களும் விதைக்காத மரங்களும் நற்பலனைத் தருவதால் அந்நகரில் மக்கள் துன்பமின்றி நல்வாழ்வு வாழ்கின்றனர் என்று 782 பாடலடிகளில் மதுரை மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் மருதனார். ‘மாங்குடி மருதனார்’ என்று அழைக்கப்படும் இவரின் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் நிலத்தாலும் வளத்தாலும் செழிப்பாகத் திகழ்ந்த மாங்குடி கால மாற்றத்தில் போர்கள் காரணமாக அழிந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று.

1932 ஆம் ஆண்டு மாங்குடி கிராமத்தின் அருகே கரிவளம்வந்த நல்லூரில் ரோமானிய நாட்டின் நாணயங்கள் கிடைக்கப்பெற்றது. மேலும் மாங்குடி குறித்து மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. மாங்குடி மருதனார், மாங்குடி கிழார் போன்ற சங்க காலப் புலவர்கள் வாழ்ந்த பகுதியாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது. மேலும், சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் தொடர்புடைய ஊராகவும் இவ்வூர் திகழ்ந்துள்ளது.

மாங்குடி ஊரின் அருகே ஓடும் தேவியாறு ஒரு காலத்தில் செழிப்பான நீர்வளம் மிக்க ஆறாக இருந்திருக்கும் என்றும், காலப்போக்கில் அதன் நீர்வளம் குறைந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் உரைக்கின்றனர். இலக்கியங்களின் மூலம் கிடைக்கப்பெற்ற சான்றுகள் மற்றும் இன்னும் பிற சான்றுகளின் வாயிலாக மாங்குடியில் அகழாய்வு நடத்தத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு 2002 ஆம் ஆண்டு அகழாய்வுகள் நடத்தப்பட்டது.

நாயக்கர் புஞ்சை, லிங்கத்திடல் ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. பின்னர் அதனைச் சார்ந்து பத்துக்கும் மேற்பட்ட அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மாங்குடி அகழாய்வில் பல்வேறு முக்கியத் தடயங்கள் மண் கலயங்கள், பானை ஓடுகள், ரோமானியர்கள் பயன்படுத்திய ரௌலட்டட் பானைகள் இவ்விடங்களில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஊசிகள், தாயக்கட்டை, குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானைகள், கல்மணிகள், விளையாட்டுப் பொருள்கள் எனப் பல பொருள்களைத் தமிழகத் தொல்லியல் துறை கண்டெடுத்தது. அதன்வாயிலாக இப்பகுதி செழிப்பான நாகரீக வளர்ச்சி அடைந்த ஊராக இருந்திருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி புதிய கற்காலத்தின் கைக்கோடாரி ஒன்றும் இந்த அகழாய்வுப் பணியின் போது கண்டெடுக்கப்பட்டது.

மாங்குடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்கலன்கள் முதுமக்கள் தாழி போன்று இல்லாமல் தானியங்களைச் சேமித்து வைக்கும் வகையில் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டு இருந்தது இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பகுதி அகழாய்வில் பெரும்பாலும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட நிலையிலேயே பானை ஓடுகள் கிடைக்கப்பெறுகின்றன. குறியீடுகள் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்த நிலையிலேயே இங்குக் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள் உணர்த்துகின்றன.

நீண்ட வாசகத்துடன் காணப்பட்ட பானை ஓடு ஒன்றும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘குறுமான்கலம் அதன் யியானை பொ’ என்று பொறிக்கப்பட்ட இந்த வாசகம் கொண்ட மட்கலயத்தின் காலத்தை கி.மு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு எனத் தொல்லியல் துறை காலக்கணிப்பு செய்துள்ளது.

மாங்குடியில் கிடைக்கப்பெற்ற பொருள்களை வைத்து அவற்றின் காலக்கணிப்பு என்பது நுண்கற்கருவிக் காலம் மற்றும் சங்க காலம் ஆகிய பொருள்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பகுதி சங்க காலத்தில் செழிப்பான ஊராகவும், பண்பாடு மற்றும் நாகரீகத்தில் சிறந்த மக்கள் வாழ்ந்த பகுதியாகவும் திகழ்ந்திருக்கும் என்பது உறுதியாகின்றது.

சேர நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் மாங்குடி இருப்பதால் இருநாட்டையும் இணைக்கும் வணிக ஊராக இவ்வூர் இருந்திருக்கலாம் என்பதுடன், பண்டைய காலத்தில் இப்பகுதி செழிப்பாகவும் இருந்தமைக்கான சான்றுகள், இலக்கியங்கள் மற்றும் அகழாய்வுகள் வாயிலாக இங்குக் கிடைக்கப்பெறுகின்றன. மாங்குடியில் அகழாய்வு மேற்கொள்வதற்கு முன்பாக அவ்வூரைச் சுற்றி இருக்கும் பல ஊர்களில் பல பொருள்கள் தொல்லியல் துறையால் சேகரிக்கப்பட்டன. அதில் புத்தூர், மனத்தேரி ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பல நூறு ஆண்டுகள் பழமையான நுண்கற்காலத்தைச் சார்ந்தவை என்று அகழாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மாங்குடி பண்டைய காலத்தில் வணிகப் பெருவழியில் அமைந்திருக்கலாம் என்றும் அதனாலேயே ரோமானிய மற்றும் பிற நாட்டுச் சான்றுகள் இப்பகுதியில் கிடைத்திருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மாங்குடியில் லிங்கத்திடல் என்னும் இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விநாயகர் மற்றும் காளி, துர்க்கை மற்றும் கல்வெட்டுகள் ஆகியவையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் பெரிய அளவிலான ஒரு சிவாலயம் இருந்திருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது.

சிவன் கோயில் இருந்ததாகக் கருதும் அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் 12 ஆம் இடம் கொண்ட படைவீரர்கள் தங்குமிடம் ஒன்றும் இப்பகுதியில் இருந்தமையைக் குறிக்கின்றது. பாண்டிய படை வீரர்களுக்குத் தங்குமிடமும், விளை நிலங்களும் இப்பகுதியில் வழங்கப்பட்ட செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.

சிலை அமைப்புகள் கோயில் பீடங்கள் குறித்து ஆராய்ந்த ஆய்வாளர்கள் இந்தக் கோயில் பாண்டியர்களின் கலைநுட்பத்தோடு பொருந்திப் போகின்றன என்று கூறுகின்றனர். மாங்குடி ஊரின் அருகிலிருக்கும் தேவியாற்றின் கரைக்கு மாங்குடி சிவாலயத்தின் இடிந்து போன கற்களைப் பயன்படுத்தித்தான் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாண்டியர்களைப் போரில் தோற்கடித்து மாங்குடி நகரை அழித்து அதனருகில் சோழ சேரி என்னும் ஊர் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் மருவி சோலை சேரி என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறது.

சோலை சேரி (சோழ சேரி ) என்னும் ஊரில் கிணறு வெட்டும் போதும் ஒரு முதுமக்கள் தாழியைக் கண்டெடுத்தனர் . அதில் மனித எலும்புகளும், மக்கள் பயன்படுத்திய சில பொருள்களும் முதலாம் இராஜராஜனின் உருவம் பொறித்த செப்புக் காசு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதனைக்கொண்டு ஆராய்ந்தோனில் முதலாம் இராஜராஜன் காலத்தில் இப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இதனருகிலேயே சோழபுரமும் அமைந்திருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்தோமெனில் இவ்வூர் சோழர்கள் படையெடுப்பால் அழிந்திருக்கலாம் என்பது தெளிவு.

உலக வரலாற்றில் பழைய கற்காலத்திற்குப் பிறகு வருவதே நுண் கற்காலம் . அவ்வகையில் மாங்குடியின் வரலாறு நுண் கற்காலத்தில் இருந்தே சான்றுகள் கொண்டாலும் பழைய கற்காலத்தின் பொருள்களும் இப்பகுதியில் கிடைக்கப்பெறுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாங்குடி எல்லையின் அருகில் இருக்கும் ஊராக இருந்தமையால் அடிக்கடி போரில் இந்த ஊர் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதிலும் நாம் கவனம் கொள்ள வேண்டும். பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய அரசனின் வெற்றிச் சிறப்பையும் மதுரை நகரின் சிறப்பையும் பாடுவதே மதுரைக்காஞ்சி என்னும் நூலாகும்.

மாங்குடி ஆய்வின் மூலமும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் மூலமாகவும் நாம் ஆராய்ந்தோமெனில் செழிப்பான வளம் நிறைந்த ஊராக மாங்குடி திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழரின் பழம்பெருமைக்குச் சான்றாகத் திகழும் இவ்வூரில் மாங்குடி மருதனாரின் சிறப்பைப் போற்ற நினைவுத்தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தாலும் காலத்தாலும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஊரின் சிறப்பை இன்று நாம் உணர முடியவில்லை. வருடத்தில் ஒருமுறையேனும் இந்த ஊரின் சிறப்பைப் போற்றி தமிழக அரசோ, தனியார் அமைப்புகளோ விழா எடுத்தால் அழிந்து போன எச்சங்களை நாம் மீட்டெடுக்கலாம்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *