Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

அழகன்குளம்

‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து
எல்லுமிழ் ஆவணம்’  (அகம், 227: 19-21)

தமிழ்ப்புலவர்களில் பெரும் புகழை உடைய நக்கீரர், தமது பாடலில் மருங்கூர்ப் பட்டினம் வயல்களும் உப்பங்கழிகளும் சூழ்ந்து செல்வமிக்க நகராகத் திகழ்ந்தது என்பதை மேற்காணும் அகநானூற்றுப் பாடல் மூலம் விவரிக்கின்றார். மேலும் இந்நகரின் வணிகச் சிறப்பினை எடுத்துரைக்கும் மற்றொரு பாடலில்,

‘அகலங்காடி யசை நிழல் குவித்
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினம்’ (நற்றிணை, 258: 7-10)

துறைமுகப்பட்டினத்தில் விற்பனைக்கு வைத்திருக்கும் இறால் மீன்களைப் பறவைகளும் காக்கைகளும் கவ்விச் சென்று கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலின் மேலே அமர்ந்து உண்கின்றது என்னும் செய்தியும் மருங்கூர்ப்பட்டினம் குறித்த தரவுகளைப் பகிர்கிறது.

கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை மிகச் செழிப்பாக விளங்கிய ஊராக மருங்கூர்ப் பட்டினம் என்னும் இன்றைய அழகன்குளம் விளங்கி இருந்ததை அறிய முடிகின்றது.

செல்வ வளத்தாலும் புகழ் வளத்தாலும் பண்டைய காவிரிப்பூம்பட்டினம் போல வணிகர்களின் முக்கியத் தளமாகத் திகழ்ந்த அழகன் குளம் பத்தாம் நூற்றாண்டுக்குப்பிறகு பல்வேறு காரணிகளால் அதன் வளத்தை இழக்கத் தொடங்கியது.

இராமநாதபுரத்திலிருந்து கிழக்குப் பகுதியில் பதினெட்டு கி.மீ பயணத்தில் வைகை நதி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது மருங்கூர்ப் பட்டினம் என்ற சங்க இலக்கிய ஊரான இன்றைய அழகன் குளம்.

1980களில் அழகன்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், கோட்டைமேடு அருகே கண்டெடுக்கப்பட்ட நாணயங்களைத் தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து இப்பகுதிகளில் அகழாய்வு நடத்த வேண்டும் என முதன்முதலாகக் கோரிக்கை வைக்கிறார். அதனை ஏற்றுத் தொல்லியல் துறையினர் 1984ஆம் ஆண்டு அழகன்குளம் பகுதிகளில் சில இடங்களில் மேற்பகுப்பாய்வு செய்ததில் தொல்லியல் சார்ந்த இடங்களைக் கண்டறிந்து அரசின் அனுமதியுடன் அகழாய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டனர். அதன் வாயிலாக 1986ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையினர் இப்பகுதிகளில் அகழாய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினர். 2017ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட எட்டு முறைக்கும் மேல் அகழாய்வுப் பணிகளை நடத்திய தொல்லியல் துறைக்குக் கிடைத்த சான்றுகள் வரலாற்றின் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இருநூறுக்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானைகளும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும் இப்பகுதிகளில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்டது.

அழகன் குளம் அகழாய்வில் கப்பல் உருவம் பொறிக்கப்பட்ட பானை மற்றும் விலங்குகள், காளைகள் குறித்த ஓவியங்கள் அடங்கிய பானையும் கிடைக்கப்பெற்றுள்ளன. அரபி மொழியில் எழுதப்பட்ட சங்கு ஒன்றும் இந்த அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பகுதியில் வணிகச் சந்தை மற்றும் ஆபரணச் சந்தை இருந்திருக்கலாம் என்பது உறுதியாகின்றது.

கிரேக்க கலைப்பாணியைக் கொண்ட சுடுமண் சிற்பம் ஒன்றும் இப்பகுதிகளில் கிடைத்துள்ளது. இதன் மூலம் அயல்நாட்டு வணிகர்கள் இப்பகுதியில் நிச்சயம் வணிகம் செய்திருப்பர் என்ற சான்றுகளாக இதனை நாம் கொள்ளலாம். மேலும் அகழாய்வில் கிடைத்த பொருள்களில் சடங்கு மற்றும் பயன்பாட்டுப் பொருள்கள் மட்டுமே அதிகம் கிடைத்ததைக் கொண்டு பண்டைய காலத்தில் இயற்கை வழிபாடு நடைமுறையில் இருந்திருக்கலாம் என்பது ஊகிக்கவேண்டிய ஒன்றாகும்.

அழகன் குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானையில் ‘சமுதஹ’ என்ற சொல் காணப்படுகிறது. இதே சொல் இலங்கையின் பல இடங்களிலும் காணப்படுகிறது. அவ்வாறு கணக்கிட்டால் பண்டைய இலங்கையின் வணிகம் சார்ந்த நகரமாகக் காவிரிப் பூம்பட்டினம், மருங்கூர்ப் பட்டினம் போன்ற நகரங்கள் இருந்திருக்கலாம் என்பது தெளிவு. மேலும் சங்க இலக்கியத்தில் வையைப்பூம்பட்டினம் என்பது இன்றைய அழகன்குளமாக இருந்திருக்கலாம் என்பதும் ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டிய ஒன்றாகும். தமிழக அகழாய்வுகளில் அழகன் குளத்திலேயே அதிக அளவிலான மண்பாண்டங்கள் கிடைத்திருப்பதாக அகழாய்வாளர்கள் கூறுகின்றனர். இங்குக் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் கொண்டு மேலும் அகழாய்வுப் பணிகளையோ அல்லது ஆராய்ச்சியோ மேற்கொண்டால் கீழடி, கொடுமணல் போன்றே இந்நகரின் சிறப்பும் வெளிப்படக் கூடும். இப்பகுதியை அகழாய்வு மேற்கொண்ட அகழாய்வாளர்கள் கூறும்போது, இப்பகுதிகளில் கிடைத்த பொருள்களில் எவ்விதமான சேதாரமும் இன்றி அகழ்ந்து எடுத்தோம் என்றும், பலவிதமான புதுமையான பொருள்களை இப்பகுதியில் கண்டெடுத்தோம் என்றும் கூறுகின்றனர். அழகன் குளத்தின் சிறப்பினை உணர்ந்து விதி எண் 110 ன் கீழ் அப்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் 55 இலட்சங்களை ஒதுக்கீடு செய்தார்.

அகழாய்வின் மூலம் வெள்ளி முத்திரைக் காசுகள், மண்பாண்டங்கள், கடுகை விட மெல்லிய துவாரத்தை உடைய அணிகலனில் அதாவது மனிதனின் தலைமுடி உள்நுழையும் அளவுக்கு மெல்லிய அணிகலன் ஒன்றும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அழகன் குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் சுமார் 2800 ஆண்டுகள் பழமையானவை என்று கார்பன் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்தப் பொருள்களின் மற்ற பிற சிறப்புகள் குறித்த தரவுகள் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. வைகை நதியின் கழிமுகப்பகுதியில் இவ்வளவு சிறப்பான பொருள்கள் கிடைத்தும், அந்தப் பொருள்களைத் தமிழக அரசு இப்பகுதியில் ஆவணப்படுத்தாமல் தமிழகத்தின் பிற அருங்காட்சியகத்திற்கும் பிரித்து எடுத்துச் சென்றமை ஏன் என்பது இவ்வூர் மக்களின் கேள்வியாக இருக்கின்றது.

தமிழகத்தின் நதிக்கரை நாகரிகங்களில் வைகை நதியின் கரையில் மட்டும் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஊர்களை ஆய்வு நடத்தியதில் 295 ஊர்கள் தொல்லியல் அகழாய்வுக்கு ஏற்ற இடங்களாகத் திகழ்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அரசியல் அழுத்தங்களும், அதிகார வர்க்கத்தையும் தாண்டி தன் முனைப்புடன் செயல்படும் அமைப்பாகத் தொல்லியல் துறை செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தின் ஆதி அடையாளங்களை மீட்க இயலும். மீட்கப்படும் அடையாளங்களை ஆவணப்படுத்தி அந்தப் பொருள்களை அடையாளப்படுத்திக் காட்டினால் மட்டுமே எதிர்காலத்தில் இந்நிலத்தின் மாண்பு நிலைத்திருக்கும்.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

1 thought on “தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்”

  1. Anto Arul Anbarasu

    அரபி மொழி எப்போது உருவானது?
    முகமது காலம் கிபி 6 ஆம் நூற்று ஆண்டு, நாடோடி சமூகமான பாலைவன மக்கள் ஒரு வலுவான சமூகமாக உருவானது 9 ஆம் நூற்று ஆண்டில் தான்.
    அழகன் குளம் தொல்லியல் பேசுவது கிமு 300 முதல் 600 வரை அங்கு வந்து அராபிய மொழி பதித்த சங்கு உள்ளது என்று அடையாளம் செய்வது தமிழர் வரலாறை பின்னுக்கு கொண்டு வருவது.

    அராபிய மொழி உருவான காலம் என்ன என்று விளக்கம் முடியுமா?

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *