Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

அரிக்கமேடு

அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரும் பெயற்கு உருகியாஅங்கு (அகம் – 206)

சங்க இலக்கியத்தின் அகநானூறு பாடலில் அகம் சார்ந்த செய்திகளைச் சொல்லும் போது ‘வீரை முன்துறை’ என்று ஓர் ஊரின் பெயரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் சுட்டுகிறார். வேளிர் மக்கள் மிகுதியாக வாழும் ஊரில் துறை என்னும் சொல்லாட்சியைக் கூர்ந்து நோக்குதல் அவசியம். வீரை முன்துறை என்று சங்க இலக்கியத்தில் பதியப்பட்ட ஊர் இன்று அரிக்கமேடு என்று மக்களால் அழைக்கப்படுகிறது. அரிக்கமேட்டின் சிறப்பை நம் நாட்டவர்கள் உணர்ந்ததை விட அயல்நாட்டவர்கள் மிகுதியாக உணர்ந்து பலமுறை அகழ்வாய்வுகள் செய்துள்ளனர்.

சோழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் வணிகத் தொடர்பின் பொருட்டு காவிரிப் பூம்பட்டினம் போல அரிக்கமேடு துறைமுகமும் பெரும் சிறப்புடன் திகழ்ந்திருக்கலாம் என்பதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறியலாம். பண்டைய காலத்தில் இந்தியக் கிழக்குக் கடற்கரையின் வணிகத்தளங்களில் மிக முக்கிய வணிகத் தளமாக விளங்கிய அரிக்கமேடு அன்றைய காலத்தில் மிகப்பரந்த அளவில் பெரும் துறைமுகமாக விளங்கியிருந்தமை அகழாய்வுச் சான்றுகளின் வழி நமக்குக் கிடைக்கின்றது. கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகக் கொற்கை நகரம் அழிந்தது போல இந்த அரிக்கமேடு பகுதியும் தன்னுடைய நிலவியல் அமைப்பால் மாற்றமடைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் உறுதிபடக்கூறுகின்றனர்.

பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த போது ‘துய்ப்ரேய்’ என்ற பேராசிரியர் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் மேற்பரப்பில் கிடைக்கப்பெற்ற கல்மணிகள், ஆபரணத்துண்டுகள் துய்ப்ரேய் கவனத்தை ஈர்த்தன. அதனைக்கொண்டே பல ஆய்வுகளை முதன்முதலாக மேற்கொண்டு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்.

வெளிநாட்டுப் பயணிகளான தாலமி மற்றும் பெரிப்புளுஸ் போன்றோர் காவிரிப்பூம்பட்டினத்திற்கும், மரக்காணத்திற்கும் இடையே ‘பொதுகே’ என்னும் கடல் துறைமுகம் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர். ‘பொதுகே’ என்னும் சொல் இன்றைய புதுவை நகரோடு மிகச்சரியாகப் பொருந்திப்போகின்றது. இதனையொட்டி அரிக்கமேடு பகுதி பாண்டிச்சேரியின் நுழைவுப்பகுதியாக, பண்டையத் துறைமுக நகரமாக விளங்கிச் சிறப்புடன் திகழ்ந்ததை நாம் அறிய இயலுகின்றது.

1944 ஆம் ஆண்டு மார்ட்டீன் வீலர் என்பவர் அரிக்கமேடு பகுதியில் முதன்முதலாக அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டு, பல்வேறு சிறப்புகளைக் கண்டறிந்தார். அகழாய்வில் உறைக்கிணறு ஒன்று கிடைக்கப்பெற்றதில் சாய வண்ணங்கள் அதில் பதிந்துள்ளதைக் கண்டறிந்தனர். கடற்கரை ஓரத்தில் பல்வேறு அணிகலன்கள், மணிகள் போன்றவை கிடைத்தமையால் இப்பகுதியில் அணிகலன் செய்யும் ஆலை அமைப்புகள், துணிக்கு வண்ணம் மாற்றும் பகுதிகளும் இப்பகுதியில் செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணுகின்றனர்.

வணிக நிமித்தமாக யவனர்கள் அதிக அளவில் இப்பகுதிகளில் வாழ்ந்துள்ளனர் என்பதையும் நாம் அறிய இயலுகின்றது. அதாவது யவனர்கள் மது அருந்தும் கூர்முனைச் சாடிகள் இப்பகுதி அகழாய்வுகளில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இந்தச் சாடிகளை ரோமானியர்களே மிகுதியாகப் பயன்படுத்துவர். அவ்வகையில் இதனைக்கொண்டு இப்பகுதிகளில் வணிக நிமித்தமாக அவர்கள் தங்கியிருந்தமைக்கான சான்றுகளாக, பழங்காலத்திய ரோமானியக் காசுகளும் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன. ரோமானியர்களின் விளக்குகள், ரோமானியப் பொருள்கள் போன்றவை அதிகளவு கிடைக்கப்பெற்றன. ரோமானியர்களின் அரசனான அகஸ்டஸ் தலை பொறித்த காசு ஒன்றும் அரிக்கமேடு பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ளது. கி.மு 63 முதல் கி.பி 14 வரை ரோமானிய அரசை அரசாட்சி செய்தவர் என்று ரோமானிய நாட்டின் குறிப்புகளும் தெரிவிக்கின்றன. அதனால் குறிப்பிட்ட இந்த நூற்றாண்டுகளில் அரிக்கமேடு பகுதி மிகச்சிறந்த வணிகத் துறைமுகமாக இருந்திருக்கும் என்பதில் உறுதியான சான்றுகள் கிடைக்கின்றன. அதனாலேயே தாலமி போன்றோரின் குறிப்புகளைக் கொண்டு அயல் நாட்டவர்கள் பலரும் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பாகவே இப்பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபட்டனர் என்பதையும் நாம் ஊகிக்க வேண்டியுள்ளது.

அரிக்கமேடு பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். அதில் தமிழ் பிராமி எழுத்துகளும், குறியீடுகளும் கிடைக்கப்பெற்றன. அதில் அண்டிய மகர், ஆதித்தன், ஆதி, ஆமி போன்ற சொற்கள் அடங்கிய பானைகள் கிடைக்கப்பெற்றன.

மிகச்சிறந்த நகரமாக, பெரிய மக்கள் வாழ்விடமாக அரிக்கமேடு பகுதி திகழ்ந்திருக்கலாம் என்பது இப்பகுதி அகழாய்வுப் பொருள்களின் வழி அறியப்படுகிறது. ஆபரணங்கள் செய்யும் ஆலைகள், மணிகளை உருக்கும் ஆலைகள், கைவினைத்திறம் மிக்க ஆபரணங்கள் செய்யும் பகுதிகள் அரிக்கமேடு பகுதிகளைச் சுற்றி அமைந்திருக்கலாம் என்பதும் நிரூபணமாகிறது. அரிக்கமேடு பகுதியில் அரியாங்குப்பம் ஆறு பெரும் வெள்ளமெடுத்து ஓடியதால் இப்பகுதி அரிக்கமேடு என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் இப்பகுதி அருகன் பகுதி, பிருமன் பகுதி, பிரம்மன் பகுதி என்றும் மாறி இருக்கலாம். அதாவது புத்தரை அருகன் என்றே நம் இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. அதனைக்கொண்டு அருகன், பிருமன் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தொல்லியல் துறை அரிக்கமேடு பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கைப்பற்றிப் பாதுகாக்கப்பட்ட இடமாக மாற்றி வைத்துள்ளது. இருப்பினும் இப்பகுதியில் இன்னும் சில பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டால் புதைந்திருக்கும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மிகப்பழமையான கட்டடம் ஒன்றும் இங்கு இன்றளவும் காணக்கிடைக்கின்றது.

கிழக்கு கடற்கரையின் பெரும் சான்றுகள் அடங்கிய துறைமுக நகரம் அரிக்கமேட்டை இந்தியத் தொல்லியல் துறை, தமிழகத் தொல்லியல் துறை 1992 வரை அகழாய்வுகள் செய்து இப்பகுதியின் மேன்மையை எடுத்துக் காட்டியுள்ளன. வளர்ந்து வரும் கடல்சார் தொல்லியலும் அரிக்கமேட்டுப் பகுதியில் நடத்தி இப்பகுதியின் மாண்பை வெளிக்கொணர வேண்டும். காலத்தாலும் வரலாற்றாலும் மரபு மிக்க ஊராகத் திகழும் அரிக்கமேடு பகுதியை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொல்லியல் துறை மேலும் ஆராய்ச்சி செய்தால் பண்டைய வணிக முறைகள், அயல் நாட்டுத் தொடர்புகள் நமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அரிக்கமேடு, கிழக்குக் கடற்கரையின் வரலாற்றையும், அயல்நாட்டு வரலாற்றையும், நம் நாட்டின் வணிகச் சிறப்பையும் உணர்த்தும் கடற்கரைத் துறைமுகம் என்று அறிந்து மகிழ்வோம்.

அரிக்கமேடு – அகழாய்வில் கிடைத்த மிக முக்கியப் பொருள்கள்:

 • எலும்பில் அமைந்த எழுத்தாணி
 • தங்கத்தில் செய்த கலைப்பொருள்கள்
 • மீன் வடிவக் கலைப்பொருள்கள்
 • சுடுமண் சிற்பங்கள்
 • மண்பாண்டங்கள்
 • தமிழ் – பிராமி எழுத்துக் குறியீடுகள்
 • கூர்முனைச் சாடி
 • ரோமானியக் காசுகள்
 • மோதிரங்கள்
 • அணிகலன்கள்
 • வண்ணக் கற்கள்

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *