‘நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே’ (சுந்தரர் தேவாரம்)
ஏழாம் திருமுறையில் சுந்தரமூர்த்தி நாயனார் பெரும் சிறப்புடைய தலங்களாகக் குறிப்பிடும்போது பல்வேறு ஊர்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் இடப்பெற்ற ஓர் ஊர் ‘பெருமூர்’. தற்போது பட்டறைப் பெரும்புதூர் என்றழைக்கப்படும் பெருமூர் குலோத்துங்கச் சோழன் காலத்தில், ‘சிம்மலாந்தகச் சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டிருப்பதாகக் கல்வெட்டுகளை மேற்கோள்காட்டி மாநில தொல்லியல் துறை கூறுகிறது.
சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் கொசஸ்தலை ஆற்றின் ஆற்றுப்படுகையின் சிறிது தூரத்தில் கற்காலம் முதல் பல்வேறு காலங்களின் தடயங்கள் கிடைக்கப்பெற்ற பட்டறைப் பெரும்புதூர் தமிழக அகழாய்வில் ஒரு மைல்கல். கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டி பெருவழிப்பாதை ஒன்று வடநாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்றும் அந்தப் பெருவழிப்பாதையில் வணிகர்கள் தங்கிச் சென்றிருக்கலாம் அல்லது மிக முக்கிய வணிகத் தளமாக இந்த ஊர் செயல்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது தேசிய நெடுஞ்சாலை ஒன்று இதனருகில் அமைந்திருப்பதும் அந்தப் பாதை திருத்தணி வழியாக வடக்கு மாநிலங்கள் நோக்கிச் செல்லுவதையும் இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
தொல்லியல் ஆய்வுகளின் வகைப்பாடு கற்காலத்தில் இருந்துதான் வகைப்படுத்தப்படுகின்றது. எழுத்துச் சான்றுகள் அமையாத காலத்தில் பண்டைய கால மக்களின் பயன்பாட்டுப் பொருள்களைத் தொல்லியல் வகையில் அகழாய்வு மூலம் கண்டடைந்து வரலாறு உருவாக்கத்திற்கு வகைப்படுத்தப்படுகின்றது. பெரிய கல் போன்ற ஆயுதங்கள், சிறிய மெல்லிய, கூரிய ஆயுதங்கள் பயன்படுத்திய காலம் ‘கற்காலம்’ என்று வகைப்படுத்துவர். கற்களின் அடுத்த நிலையில் உலோகங்கள் கொண்டு தம் தேவைகளை நிறைவேற்றிய காலத்தை ‘வெண்கலக்காலம்’ என்றும், இரும்புக் கருவிகளைப் பயன்படுத்திய காலத்தை ‘இரும்புக்காலம்’ என்றும் தொல்லியலார் வகைப்படுத்துவர். கல்லாயுதங்கள் ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்திற்குட்பட்டவையாக உருமாறி இருப்பதைப் பல நிலை அகழாய்வுகளில் நாம் அறிய முடிகின்றது. அவ்வகையில் பட்டறைப் பெரும்புதூர் எல்லாக் காலத்திலும் சிறப்புடன் விளங்கியிருத்தலை பல தொல்லியல் பொருள்கள் நமக்குக் காட்டுகின்றன.
2014 – 15 ஆம் ஆண்டுகளில் ஆய்வாளர்களின் ஆய்வின் மூலம் தொல்லியல் மேடுகள் இருப்பதை அடிப்படை ஆய்வுகள் மூலம் தமிழகத் தொல்லியல் துறை கண்டடைந்தது. தொல்லியல் துறை இயக்குநர் கார்த்திகேயன், சிவானந்தம் ஆகியோர் தலைமையில் பட்டறைப்பெரும்புதூரில் அரசின் பங்களிப்போடு அகழாய்வு செய்ய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
ஆனைமேடு, நத்த மேடு, இருளந்தோப்பு ஆகிய மூன்று இடங்களில் சுமார் 12 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காத அரிய பழங்கற்காலத்தின் பொருள்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளதை அகழாய்வாளர் திரு சிவானந்தம் பதிவு செய்துள்ளார்.
பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் கற்காலத்திய கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடரி, சுரண்டி போன்ற கருவிகள், நுண் கற்காலத்தைச் சார்ந்த துளைப்பான் போன்ற கருவிகளும் கிடைத்துள்ளன. மேலும் இப்பகுதியில் இரும்புக்காலத்தைச் சார்ந்த பொருள்களும் கிடைத்துள்ளதைக் கொண்டும் ஆய்வுகளை மேற்கொண்டனர் . ஆய்வின் மிக முக்கிய விஷயமாக டெரகோட்டா என்றழைக்கப்படும் சுடுமண் உருவங்களும், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் சேகரிக்கப்பட்டன. 24 அடுக்குகள் கொண்ட உறை கிணறு மிக முக்கிய ஆவணமாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் கிணறுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து நீர் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்குச் சுட்டுகின்றன.
‘குறுங்கால் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று
வல்லூற்றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி’ (பெரும்பாணாற்றுப்படை)
என்று உறை கிணறு பற்றி சங்க இலக்கியம் பகிர்கின்றது. சுட்ட மண்ணால் கொண்டு அமைக்கப்படுவது உறை கிணறாகும். பட்டறைப் பெரும்புதூரில் கிடைக்கப்பெற்ற உறை கிணறு மற்ற பகுதி உறை கிணறுகளைக் காட்டிலும் வித்தியாசப்படுகிறது. கடல் நகரங்கள் அருகில் உறை கிணறுகள் இருந்ததைப் பட்டினப்பாலை சுட்டுகின்றது.
‘உறை கிணற்றுப் புறச்சேரி’ ( பட்டினப்பாலை)
என்று இலக்கிய வரி சுட்டுவதும், பட்டறைப் பெரும்புதூர் கடலில் இருந்து மிக அருகில் அமைந்திருப்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியச் சான்றாகும். கடற்கரை மற்றும் மணல் பாங்கான நிலப்பகுதிகளில் உறை கிணறு அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது தமிழக அகழாய்வுகளில் நமக்குக் கிடைக்கின்றன. அவ்வகையில் கீழடி, அரிக்கமேடு, வசவசமுத்திரம், பல்லவமேடு, படைவீடு, மணிமுத்தாறு செங்கமேடு போன்ற பல இடங்களில் உறை கிணறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பட்டறைப் பெரும்புதூர் உறை கிணறு மற்ற பகுதியின் உறை கிணறுகளுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டுக் காணப்படுவதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் 15 நூற்றாண்டுகள் வரை உறை கிணறு அமைக்கும் வழக்கம் இருந்ததை அகழாய்வுகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. பட்டறைப்பெரும்புதூர் உறை கிணறு அமைந்த பகுதியின் அருகில் சுவர்கள் போன்ற அமைப்பு கிடைத்தும் தொல்லியல் துறை தம் ஆய்வை நிறுத்திக் கொண்டதாக உள்ளூர் மக்கள் வருத்தம் கொள்கின்றனர்.
தமிழகத்தில் எங்குமே கிடைக்காத கற்காலக் கருவிகள் முதல் பல நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கூம்பு வடிவப் பொருள்கள் பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் விளக்கு வரலாறு, கோயிலோடு, குடிகளோடு தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. மலைகளில், குகைகளில் வாழ்ந்த மனிதன் நாளடைவில் திணை நிலங்களின் வகைமையில் வசிக்கத் தொடங்கினான். தமது வசிப்பிடங்களில் விளக்கு கொண்டு வெளிச்சம் ஏற்படுத்தி பிற்காலங்களில் வாழத் தலைப்பட்டபோது விளக்குகள் முக்கிய முதல் கருவியாகக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் பல அகழாய்வுகளில் விளக்குகள் கிடைக்கப்பெற்றதில்,
‘முதுகுயிரஅன் அகல்’
‘கூல அந்தைய் சம்பன் அகல்’
‘வாருணி இய் அகல்’
போன்ற எழுத்துருக்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வகையில் பட்டறைப்பெரும்புதூர் கூம்பு வடிவ விளக்குகள் முக்கிய கவனம் பெறுகின்றன என்றும், நறுமணமிடும் மற்றொரு விளக்கு போன்ற அமைப்பில் கூம்பு ஒன்றும் இப்பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஊரின் வரலாற்றை மேலும் ஆய்வுகள் நடத்தி வெளிக்கொணர வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் விருப்பமாக இருப்பதையும் இங்குப் பதிதல் அவசியம்.
கற்காலம், இரும்புக்காலம், வரலாற்றுத் தொடக்கக் காலத்தின் பல நிலைகளில் சான்றுகள் இப்பகுதிகளில் கிடைத்திருப்பதால் மிகத்தொடர்ச்சியான மக்கள் வாழ்விட ஊராக இந்த ஊர் கவனத்தில் எடுக்கப்படுகின்றது. ரோமானியர்களின் ரெளலட் வகை மட்பாண்டங்கள் இந்தப் பெருவழிப்பாதையில் அதிகம் கிடைப்பதால் பண்டைய காலத்தில், பெருமூர் என்றழைக்கப்படும் பட்டறைப் பெரும்புதூர் மிக முக்கிய வணிகத் தலமாக, பெருவழிப்பாதையாக விளங்கியிருக்கலாம் என்பது உறுதியாகின்றது.
பண்டைய காலத்தில் ரோமானியர்களின் வணிகத்திற்குக் கிழக்குக் கடற்கரையில் மிக முக்கிய வணிக மையமாக பல்வேறு இடங்கள் இருந்ததை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அவ்வகையில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் பெருவழிப்பாதையில் அமைந்த பட்டறைப் பெரும்புதூர் பல நூறு ஆண்டுகளின் வரலாறாக இன்றும் திகழ்வதை நாம் அகழாய்வுகள் வழி அறிய முடிகின்றது.
பட்டறைப் பெரும் புதூர் அகழாய்வில் கிடைத்த தொல்லியல் பொருள்கள்
கற்காலக் கருவிகள், பலவித மட்பாண்டங்கள், செங்கற்கள், இரும்புப் பொருள்கள், கூரை ஓடுகள், சூது பவள மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொருள்கள், கண்ணாடி மணிகள், செம்புப் பொருள்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள்,
வண்ணம் தீட்டப்பட்ட ஓடுகள், யானை தந்தத்திலான ஆபரணப்பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள்,
சுடுமண்ணாலான உறைகிணறு எனப் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
(தொடரும்)
தமிழகத் தொல்லியல் வரலாறு
ஊர்கள் பற்றியும் ஆறுகள் பற்றியும் அழகுடன் கூறி தமிழகத் தொல்லியல் வரலாற்றை அறிமுகப்படுத்தும் இத்தொடர் நம் பண்டைய பண்பாட்டை அறிய உதவுகிறது. கிழக்கு டுடே இதழுக்கு நன்றி.