Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

காவிரிப்பூம்பட்டினம்

பண்டைய காலத் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் துறைமுக நகரங்களில் சிறந்து விளங்கிய நகரம் காவிரிப்பூம்பட்டினம்.

‘நீரினின்றும் நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலி பொறித்துப் புறம்போக்கி
மதி நிறைந்த மலிபண்டம்
பொதி மூடைப் போர் ஏறி’

புகார் துறைமுகத்தில் வாணிகம் சிறந்து விளங்கியதையும் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டதையும் அப்பொருள்களுக்குப் புலி முத்திரை இடப்பட்டதையும் மேற்காணும் பட்டினப்பாலை பாடல் நன்கு விளக்குகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் தொல்லியல் அகழாய்வில் பலவிதமான முத்திரைகள் 1994ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டமை மேற்காணும் பாடலுக்குப் பொருத்தமான சான்றாக அமைகின்றது.

‘பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலியுலகிற்கவன் குலத்தோடோங்கிப் பரந்தொழுகலான்’

என்று சிலப்பதிகாரம் புகார் நகரத்தின் சிறப்பினை விளக்குகிறது.

தமிழகத்தின் ஊர்களின் பெயர் மாற்றங்கள் அரசியல் காரணங்களால், இயற்கைக் காரணிகளால் மாறி அழைக்கப்படுவது உண்டு. ஆனால் பூம்புகார் நகரம் சிறந்தோங்கிய காலத்திலேயே பல பெயர்களால் அழைக்கப்பட்டது. புகார், பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, எம்போரியம், கோலப்பட்டினம், சோழப்பட்டினம், என்று பல பெயர்களால் இந்நகரம் அழைக்கப்பட்டது.

வெளிநாட்டுப் பயணிகள் பலரும் இந்நகரைப்பற்றிய பதிவுகளைத் தங்களின் பயணக்குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர். பெரிப்ளூசு என்னும் பயணி ‘கமரா’ என்றும், தாலமி என்னும் பயணி ‘எம்போரியான்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். அயல்நாடுகளில் பூம்புகார் நகரம் எம்போரியான் என்றே அழைக்கப்பட்டதை நாம் இங்குக் குறிப்பிடுதல் அவசியம்.

திருமுறைப்பாடல்களிலும் இந்நகரம் குறிப்பிடப்படுகிறது. திருஞானசம்பந்த சுவாமிகள் தமது திருமுறையில்,

‘அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயவிடம்
கடையார் மாடம் நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சுரமே’

என்று குறிப்பிடுகிறார். இப்பாடலில் வரும் பல்லவனீச்சுரமே என்ற வரி குறிப்பிடும் நகரம் காவிரிப்பூம்பட்டினமே என்பது திண்ணம். இலக்கியங்களாலும், பயணிகளின் குறிப்புகளாலும், மக்களின் நாட்டார் கதைகளாலும் கொண்டாடப்பட்ட நகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் காலத்தால், இயற்கையால், அரசியல் போர்களால் அதன் செல்வாக்கை நாளடைவில் இழக்கத்தொடங்கியது. இன்றைய நிலையில் காவிரிப்பூம்பட்டினம் சிறிய ஊராக மட்டும் திகழ்கிறது.

காவிரிப்பூம்பட்டினம் பண்டைய காலத்தில் இரண்டு பெரும் பிரிவுகளாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டதைக் காணலாம். மருவூர்ப்பாக்கம் என்றும் பட்டினப்பாக்கம் என்றும் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டதை இலக்கியங்கள் சுட்டுகின்றன.

பண்டைய காலத்தில் இந்தியாவின் கடல் வாணிகம் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டே இருந்தன. எம்போரியம் என்னும் பெயரில் பல அயல்நாடுகளுடன் கடல் வாணிகத்தில் சோழர்களின் நாவாய்கள் தொடர்பு கொண்டு வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததை தாலமி என்னும் பயணியின் குறிப்பு பதிவு செய்கிறது.

பல நூறு ஆண்டுகளாகச் சிறப்புடன் விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தை 1910ஆம் ஆண்டு முதலே தொல்லியலாளர்கள் ஆராய்ந்து வந்தது தொல்லியல் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் நகரின் ஓரங்களில் உறைகிணறுகள் இருந்ததை, பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கிய நூல் பதிவு செய்கின்றது. ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்னும் சொல் சான்றை தொல்லியல் துறையினர் பெரும் சான்றாகக் கொண்டனர். 1910ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இப்பகுதியைத் தொல்லியல் முறையில் ஆராய்ந்து உறைகிணறுகளைக் கண்டறிந்தனர். மேலும் சம்பாபதி என்ற பெயர் இந்த நகருக்கு இருப்பதை வெளிப்படுத்தும் வண்ணம் சம்பாபதி அம்மன் கோயிலும் கண்டெடுக்கப்பட்டது.

பல்லவனீச்சுவரம் என்ற பெயர் குறிப்பிடும் பகுதியில் தொல்லியல் மேடுகள் இருப்பதை அன்றைய ஆங்கிலேயத் தொல்லியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 1910 ஆண்டுக்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் கடந்து 1960ஆம் ஆண்டு இந்திய அரசின் தொல்லியல் துறையினர் இப்பகுதியை ஆராய்ந்து தொல்லியல் மேற்பரப்பு ஆய்வை மேற்கொண்டனர். நிலத்திலும் கடலிலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை பலர் ஆராய்ந்து வருகின்றனர்.

மத்திய தொல்லியல் துறையினர் காவிரிப்பூம்பட்டினத்தைப் பலவாறாக ஆராய்ந்தனர். அதில் கீழையூர் என்னும் ஊரில் செங்கல் கட்டுமானங்களும், படகை நிறுத்தி வைக்கும் சிறிய அமைப்பை உடைய இடமும் கண்டறியப்பட்டது. உப்பை நெல்லுக்கு விற்று மாற்றுப் பொருள்களைப் பெற்றுச் செல்வதை ‘பட்டினப்பாலை’ குறிப்பிடுகிறது. மேற்காணும் இலக்கிய வரிகளுடன் இந்தத் தொல்லியல் கண்டுபிடிப்பான கீழையூர் பொருந்திப்போகிறது. மேலும் தொல்லியல் ஆய்வில் வானகிரி என்னுமிடத்தில் நீர்த்தேக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நீர்த்தேக்கங்கள் பிறை நிலா வடிவில் இருந்ததைத் தொல்லியல் குழுவினர் பதிவு செய்துள்ளனர். இதனையும் பட்டினப்பாலை நூல், ‘தேய்பிறை உருவக்கேணி’ என்னும் தொடர் மூலம் பதிவு செய்துள்ளது பெரும் சான்றாக அமைகின்றது.

சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் இராசராச சோழன் காலத்தில் இப்பகுதியில் பெளத்தம் சிறந்து விளங்கியதை இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பூம்புகார் நகரில் பல்லவனீச்சுவரம் நகரில் நடத்தப்பட்ட அகழாய்வில் பெரிய கட்டுமான அமைப்புடைய புத்த விகாரம் அடையாளப்படுத்தப்பட்டது. வட இந்தியாவில் காணப்பட்ட புத்த விகார அமைப்புகளில் இருந்து இந்தப் புத்த விகாரம் சற்று மாறுபாடுடையது . மேலும் கல்லால் அமைக்கப்பட்ட புத்த பாதம் ஒன்றும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. பண்டைய காலத்திலும் தற்போதும் புத்த பாதம் வணங்குதலுக்குரியதாக இருப்பதை நாம் காணலாம்.

அழகிய சுடுமண் சிற்பங்கள், சோழர்களின் முத்திரைகள், சோழர்களின் காசுகள், ரெளலட் ஓடுகள் மற்றும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ரோமானியக் காசுகளும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ரோமானிய நாட்டினர் வாணிகம் பொருட்டு இங்கு வந்தமையை பல நிலை ஆய்வுகள் நமக்கு வெளிப்படுத்துவதும் அந்த நாட்டின் காசுகள் கிடைப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. பிற்காலத்திய சோழ அரசர்களது நாணயங்களும் இங்குக் கண்டெடுக்கப்பட்டன.

ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் இப்பகுதிகள் பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டவையாக இருந்தமையால் இப்பகுதி பல்லவனீச்சுவரம் என்றும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வட இந்தியாவில் பார்கூத் என்னுமிடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஒன்றில் காகந்தி என்னும் சொல் உடைய கல்வெட்டுச் செய்தி ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டனர். இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் காகந்தி என்னும் சொல் உடைய நகரம் நடைமுறையில் இல்லை. காவிரிப்பூம்பட்டினம் மட்டுமே காகந்தி என்று அழைக்கப்பட்டன என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் அவர்கள் உறுதிப்படுத்துகிறார்.

தாய்லாந்தில் பூம்புகார் பற்றிய கல்வெட்டு

பண்டைய காலத்தில் கிழக்காசியா முழுவதும் தமிழர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கினர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் தாய்லாந்து நாட்டில் தகுவா பா என்னுமிடத்தில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டில் நங்கர் உடையான் என்பவர் ‘அவணி நாரணம்’ என்னும் பெயரில் நீர் நிலை அமைத்து அதனைப் பராமரிக்கும் பொறுப்பைக் காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமத்தார் வசம் ஒப்படைக்கிறேன் என்ற குறிப்புக் காணக்கிடைப்பது பெறும் சான்றாக அமைகின்றது.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய நூல்கள் கடல்கோள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இருப்பினும் கடல் கோளுக்குப் பிறகும் இந்நகரம் சிறந்து விளங்கியதைத் திருமுறை ஆசிரியர்களின் பதிவுகள் சுட்டுகின்றன. கிட்டத்தட்ட பதின்மூன்றாம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சி தொடங்கிய காலத்தில் தென்னகத்தின் மாபெரும் அரசனாக விளங்கிய மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெரும் படையெடுப்பை நடத்தி இந்த நகரை அழித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

‘வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே!’

என்று திருச்சி மாவட்டத்தின் திருவெள்ளறை கல்வெட்டு ஒன்று மாறவர்மன் சுந்தரபாண்டியன் படையெடுப்புக் குறித்து எடுத்துரைக்கிறது. பதினாறு கால்களை உடைய இந்த மண்டபம் பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு சோழ அரசன் திருமாவேலன் பரிசிலாக அளித்தது என்ற பதிவும் நம் கவனத்தில் எடுத்தல் இங்கு அவசியமாகிறது.

இந்திரவிழா

‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க’

என்று மணிமேகலை இந்திரவிழா பற்றிக் குறிப்பிடுகின்றது. பண்டைய காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பெளர்ணமி நாளில் இந்திரவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றதை இலக்கியங்கள் சுட்டுவது போலத் தமிழக அரசு, தமிழர்களின் சிறப்பைப் போற்ற எஞ்சி இருக்கும் பூம்புகார் நகரில் இந்திரவிழா எடுத்து தமிழர்களின் மாட்சிமையை வெளிப்படுத்த வேண்டும். மதுரையில் பல நூறு ஆண்டுகளாக நடைபெறும் உற்சவங்கள் போல, அழிந்து போன புகார் நகரிலும் இந்திர விழா அமைப்பை மீண்டும் நடத்தினால் அடுத்த தலைமுறையினர் நமது பெரும் சிறப்பை அறிவர். இந்திர விழா பண்டைய காலத்தில் எவ்வாறு நடைபெற்றது என்பதை மணிமேகலை நூல் நன்கு விளக்குகிறது.

வளர்ந்து வரும் கடல் சார் தொல்லியல் ஆய்வுகள் மூலமும் இந்நகரை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சங்க இலக்கியமும் காப்பிய இலக்கியமும் குறிப்பிடும் காவிரிப்பூம்பட்டினம் தொல்லியல் ஆய்வுகளால் மீட்கப்பட்டு மிகச்சரியாகப் பொருந்துவதை நாம் உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை மீட்டுச் சொல்வோம்.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *