‘பொன்னொடு வந்து கறியோடு பெயரும்’ என்று அகநானூற்றில் 149வது பாடலில் குறிப்பிடப்படும் இந்த வரிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பண்டைய தமிழகம் உள் நிலப்பரப்பைத் தாண்டி கடல் கடந்த நிலப்பகுதிகளிலும் வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தது என்பதற்கு நமக்குக் கிடைத்த இலக்கியச் சான்றுகளில் இந்தச் சான்று முக்கியமானதாகும்.
ஒரு நாட்டின் வரலாற்றைக் கூறும் இலக்கியச் சான்றுகள் தரும் முக்கியத்துவத்தைவிட, தொல்லியல் சான்றுகள் தரும் வரலாற்றுச் சான்றுகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போது முக்கியத்துவம் பெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மக்களிடம் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வகையில் கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் மிகத் தொன்மையான வணிகத் தடமாக, தளமாக, வழிபாட்டுத் தலமாக விளங்கிய வெள்ளலூர் என்னும் ஊர் தமிழகத் தொல்லியல் பரப்பில் உருவாக்கிய வரலாற்றுத் தடங்களை அறிவோம்.
கோயமுத்தூர் நகரின் அருகே இருக்கும் இன்றைய வெள்ளலூர், கோவை என்னும் நகரம் உருவாவதற்கு முன்பே பெரும் சிறப்புடன் அயல்நாட்டு வணிகத் தொடர்புகளுடன் புகழ்பெற்று விளங்கிய ஊராகத் திகழ்ந்தது. வெள்ளலூர் சாசனத்தில் இந்த ஊர் வள்ளலூர் என்றும் அன்னதானச் சிவபுரி என்றும் வழங்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் கொங்குப் பகுதியிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேற்கு மண்டலக் கடற்கரை பகுதிகளில் நன்கு வணிகத் தொடர்புகள் இருந்துள்ளதாக இப்பகுதி அகழாய்வுகள் சுட்டுகின்றன. தமிழகத்தில் கிடைக்கப்பெறும் ரோமானிய தொல்பொருட்களில் 70 சதவிகிதத்திற்கும் மேல் கொங்குப் பகுதியில் குறிப்பாக வெள்ளலூர் பகுதிகளில் கிடைக்கப்பெற்றதைத் தமிழகத் தொல்லியல் துறை உறுதி செய்கிறது.
அன்றைய காலங்களில் இறந்தவர்களின் உடல்களைப் பல்வேறு முறைகளில் தகனம் செய்யும் நடைமுறை இருந்தது. அவற்றில் ஒன்று கற்குவை அல்லது கற்குவியல் என்பதாகும். இறந்தவர்களை இயற்கை முறையில் வைத்து பறவைகளும் விலங்குகளும் உண்டதுபோக ஒரு மண்டலம் கழித்து மீண்டும் இறந்த மனிதரின் உடல் பாகங்களைச் சேகரித்து மண் கலயங்களில் வைத்து புதைத்து அதன்மேல் கற்குவியல் வைத்து மூடிவிடுவர். இதுபோன்ற கற்குவியல்களை வைத்து இதன் காலத்தை வரலாற்றாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அவ்வகையில் இதுபோன்ற கற்குவை காலம் பெருங்கற்காலம் என்று மதிப்பிடப்படுகிறது. இவ்வாறாக பெருங்கற்காலத்தியத் தொல்லியல் அடையாளங்கள் வெள்ளலூர் பகுதிகளில் காணப்படுவது இதன் சிறப்பை மேலும் அடையாளப்படுத்துகின்றன.
கரிகாலச் சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கோயிலாக விளங்கும் வெள்ளலூர் தேனிஸ்வரர் கோயில் கல்வெட்டுகளும் இந்த ஊரின் மாண்பை விளக்குகின்றன.
நொய்யல் நதி பயணிக்கும் ஊராகவும், மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக்காட்டு கணவாய் பகுதி அருகில் இருக்கும் ஊராகவும் திகழும் வெள்ளலூர் கி.மு நூற்றாண்டுகள் தொடங்கி ஆங்கிலேயர் காலம் வரையிலும் செழிப்புடனே திகழ்ந்தது.
பண்டைய காலத்தில் ரோமானியர்கள் வணிக நிமித்தம் பொருட்டு இப்பகுதிகளில் தங்கி, தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுச் சென்றனர் என்பதையும், இந்தியாவிலேயே அதிக அளவில் நொய்யல் நதிக்கரைகளில்தான் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன என்பதும் வெள்ளலூர் தொல்லியல் ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. வெள்ளலூர் பகுதியில் கிடைத்துள்ள 6 ரோமானிய நாணயங்கள் முசிறிக்கும் எகிப்து நாட்டுக்கும் இருந்த வணிக ஒப்பந்தங்களை உறுதி செய்கின்றன.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னா அருங்காட்சியகத்தில் பழங்காலத்து ஒப்பந்தம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் நகல் கரூர் அருங்காட்சியகத்திலும் உண்டு. இதன்வழியிலும் பாலக்காட்டுக் கணவாய் பகுதிகளில் உள்ள மக்கள் பண்டைய வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பது உறுதியாகிறது. இன்றைய வெள்ளலூர் என்பது அன்றைய காலத்தில் சிங்கா நல்லூர், போத்தனூர், செட்டிபாளையம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. வேளிர்கள் அதிகம் வசித்த பகுதியாகவும், வேளிர்கள் ஆட்சி செய்த பகுதியாகவும் இருந்தமையால் வேளீர் ஊர் காலப்போக்கில் மருவி வெள்ளலூர் என்றாகி இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
தமிழகத் தொல்லியல் துறை ஆய்வில் வெள்ளலூர் பகுதியில் கிடைத்துள்ள வெள்ளியிலான ஒரு நாணயம் பேரரசர் லுசியல் கார்னிலியஸ் சுல்லா வெளியிட்டது என்பதைத் தமிழகத் தொல்லியல் துறை உறுதி செய்கின்றது. 1.166 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கம் செங்கதிர் கடவுளான ஜூபிடர் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவதுபோலவும், மறுபக்கம் கவிதை, இசை கடவுளான அப்பல்லோ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூர் சர்வதேச அளவில் கவனம் பெற்றமைக்குக் காரணம், 1843ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1891, 1931, 1939 ஆகிய ஆண்டுகளிலும் அகழ்வாராய்ச்சியின் பொழுது ரோம தேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்தமையால் பலரும் அந்தப் பகுதிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும், அகநானூறு – 47ஆம் பாடலில் பொருளீட்டச் செல்லும் தலைவன் பயணிக்கும் வழியைப் பாடல் காட்டும் தடங்கள் குறிப்புகளான,
“…ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு”
(அகநானூறு – 47, ஆலம்பேரிச் சாத்தனார்)
என்னும் பாடல் வழி மேற்கு மலைத் தொடர் வழியாகச் சென்றுள்ளான் என்பதும், சங்க இலக்கியம் குறிப்பிடும் இந்தப் பகுதி மேற்கு மலைத் தொடர்களை ஒத்திருத்தலையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக அகழாய்வுகளில் பெரும்பாலும் சங்க கால ஊர்களான கரூர், பூம்புகார், அழகன்குளம், அரிக்கமேடு, பொருந்தில், வெள்ளலூர், மாங்குளம், மாங்குடி, கொடுமணல், கொற்கை, வசவசமுத்திரம், கீழடி ஆகியவை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. அவை பண்டைய தமிழகச் சமூக, பண்பாட்டு வரலாற்றை அறிய உதவுவதோடு தமிழக வரலாற்றுக் காலத்தை இன்னும் முன்னோக்கிச் செல்லவும் உதவுகின்றன.
சங்க இலக்கியச் சான்று பெறும் ஊராகவும், நொய்யல் பண்பாட்டு ஊராகவும், அதிக ரோமானிய நாணயங்கள் கிடைத்த ஊராகவும் திகழும் வெள்ளலூருக்குக் கோவை மாநகராட்சி செய்த சிறப்பு என்னவாக இருக்க வேண்டும்? அந்த ஊரைத் தொல் பழங்கால ஊர் என்று சிறப்பித்து பதாகை வைத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது, நடப்பது என்னவெனில் வெள்ளலூர் பகுதியைக் கோவை நகரின் குப்பைக்கிடங்காக மாற்றி வைத்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் பழம்பெருமை வாய்ந்த ஊர்களைப் பழம்பெருமை மாறாமல் பாதுகாக்கின்றனர். ஆனால் நம் வெள்ளலூர் பகுதியில் குட்டைக்காடு என்னும் பகுதியில் தொல்லியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகிலேயே குப்பைகளைக் கொட்டும் இடமாக மாற்றி, இன்னும் இரு நூறாண்டுகள் கழித்து இவ்விடத்தை ஆய்ந்தால் சங்க இலக்கிய மரபு மறைந்து வெறும் குப்பை மேடாக மட்டுமே காட்சி அளிக்கும். தொல்லியல் துறைக்குப் பெரும் பங்களிப்புகள் அளிக்கும் நிலை மேலோங்க வேண்டும். வரலாற்றுக் காலச் சிறப்புடைய வெள்ளலூர் நகரை, நொய்யல் நதிக்கரைப் பண்பாட்டை நாம் மீட்டெடுப்போம்.
(தொடரும்)