(இரும்புப் பயன்பாட்டுடன் தமிழக வாழ்வியலை அறியச் செய்த களம்)
சங்ககாலச் சமூகம் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை, அயல்நாட்டு வணிகத் தொடர்புகளைக் கொண்ட வாழ்வியலை அமைத்து வாழ்ந்தனர். மானுட குலத்தின் வளர்ச்சியை அறிந்துகொள்ளவும், அம்மக்களின் முந்தைய வாழ்வியலைத் தெரிந்துகொள்ளவும் ஆதாரமாக விளங்குபவை தொல்லியலும் பழம்பொருட்களுமே.
பன்னெடுங்கால வாழ்வியலை வரிசையாக வாழ்வாதார நிலைகளை ஆதாரத்துடன் எடுத்துரைக்கும் களமாக, தளமாகத் தொல்லியல் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றது. அகழாய்வு என்பதே மறைந்த நாகரீகத்தினை வெளிக்கொணரும் பொருட்டு மீட்டுருவாக்கம் செய்து அடுத்த தலைமுறை அறியும் பொருட்டு ஆய்வது ஆகும்.
உலகில் இனக்குழு வாழ்வியல் முறையில் வாழத் தலைப்பட்ட மனித குலம் தங்களுக்கென தனிப்பட்ட வாழ்வியலைக்கொண்டு வாழ்ந்தனர். அவ்வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் அருகில் மயிலாடும்பாறை என்னும் தொல்லியல் இடம் தமிழகத் தொல்லியலின் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
1980, 2003ஆம் ஆண்டுகளில் மயிலாடும்பாறை வாழ்விடங்களிலும் ஈமச்சின்னங்களிலும் அமைந்துள்ள இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பொருந்தல் ஆய்வின் மூலம் தமிழகத்தின் வேளாண், நெல் பயன்பாட்டை வெளிக்கொணர்ந்த திரு. இராஜன் அவர்களே மயிலாடும்பாறையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நுண்கற்கால வரலாற்றுக்கால ஆதாரங்களை அடையாளம் கண்டனர். சாணாரப்பன் மலை முகடு எனுமிடத்தில் பாறை ஓவியங்கள் அடையாளமிடப்பட்டன. அங்குள்ள செங்காவி வண்ண ஓவியம் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என்று ஆய்வாளர்களால் உறுதியாகக் கூறப்பட்டன.
வெண்சாந்து ஓவியம் பெருங்கற்படைக்காலத்தைச் சார்ந்தது என்பதன் மூலம் இருவேறுபட்ட காலத்திய மக்களின் வாழ்வியல் எச்சங்கள் காணக்கிடைக்கின்றன.
மனித உருவங்கள், ஆண் பெண் உருவ அமைப்பியல் ஓவியங்கள், மயில் திரும்பும் ஓவியம் போன்ற பல ஓவியங்கள் மயிலாடும்பாறையில் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளன. தமிழகத் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் மயிலாடும்பாறை வாழிடமும் ஈமச்சின்னங்கள், மலை முகடு ஓவியங்களும் பரவலான கவனத்தையும் வரலாற்று ஆய்வாளர்களின் ஆர்வத்தையும் அதிகப்படுத்தி உள்ளன.
நகரமயமாக்கல், தொழில் மயமாக்கல், வேளாண் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது தமிழகத்தின் இரும்புப் பயன்பாடு குறித்து உறுதியான ஆய்வுகள் கிடைக்கப்பெறாமலேயே இருந்தது. மயிலாடும்பாறையில் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த இரும்பு வாள் உள்ளிட்ட தொல்லியல் பொருட்களை அறிவியல் முறையில் ஆய்ந்தபோது 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமையை அறிய முடிகின்றது.
இந்திய நிலவியல் அடிப்படையில் சிந்து நதிக்கரை வாழ்வியலில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு செம்பு பயன்பாடு குறித்த சான்றுகள் நமக்கு ஆய்வின் மூலம் கிடைக்கப்பெறுகின்றன. உலக அளவில் புகழ்பெற்ற சிந்து சமவெளி ஆய்வுகளில் இரும்புப் பயன்பாடு குறித்த சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தமிழகத்தின் பல இடங்களிலும் இரும்புப் பயன்பாடு குறித்த சான்றுகள் கிடைத்து தமிழ் தொல்லியல், நிலவியல் பரப்பை உலகெங்கும் கவனப்படுத்தி வருகின்றது.
மானுட வரலாற்றில் இரும்பின் பயன்பாடு வேளாண் புரட்சிக்கு வித்திட்டது. பெருங்கற்காலச் சின்னங்கள் கிடைக்கப்பெற்ற இடங்களில் சடங்குப் பொருட்களில் இரும்புப் பொருட்களும் கிடைத்தமை இங்குக் குறிப்பிடத்தக்கது.
கருங்கைக் கொல்லன் செம்தீ மாட்டிய
இரும்பு உண்நீரினும் மீட்டற்கு அரிது (புறம். — 21)
என்றும்,
இரும்புசெய் கொல்லன் வெவ்வுலை
தெளித்த தோய்மடல் சில்நீர் போல (நற்றிணை — 9)
என்றும், இரும்பு, இரும்பின் பயன்பாடு, இரும்பைத் தட்டி ஆயுதமாக்கும் முறை, உலைக்கலன் போன்று பற்பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
மயிலாடும்பாறை இரும்புக்கால ஈமக்காட்டில், ஈமச்சின்னத்தின் அறையில் இரும்புக் கத்திகள், அம்புமுனைகள், குட்டையான, நீளமான வாள்கள், வேல், கோடாரிகள் ஆகியனவும், மற்றுமொரு ஈமச்சின்னத்தில் 87 செ.மீ. நீளமுள்ள ஒரு நீண்ட வாளும் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு ஒரு பானையின் வெளிப்புறத் தோள் பகுதியில் ‘சா த’ என்ற தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானையோடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துப் பொறிப்பு தடயத்தால் இப்பகுதி இரும்புக் காலத்திலிருந்து தொடக்க வரலாற்றுக் காலத்திற்கு மாற்றம் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வு மூலம் தமிழகத்தில் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்தமை இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த பொருட்கள்
- பெருங்கற்கால கல்திட்டை பகுதியில் 71 செ.மீ கொண்ட வாள்
- நான்கு பானை எழுத்துருவுடன்
- மண் குடுவைகள்
- இரும்புக் கத்திகள்
- கிண்ணங்கள்
- கல் கோடாரி
- சாணாரப்பன் மலை முகடு
- பாறை ஓவியங்கள்
- மயில் மற்றும் மனித உரு கோட்டோவியங்கள்
வரலாற்றையும் வாழ்வியலையும் மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு நம் முன்னோரின் வாழ்வியலைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியை ஏற்று நடத்தும் தமிழகத் தொல்லியல் துறை இன்னும் பல களங்களை ஆராய வேண்டும். நம் பூர்வ குடிகளின் இயற்கை வாழ்வை வெளிக்கொணர வேண்டும். கீழடிபோல ஊரூர் தோறும் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதுவே நம் மீட்டெடுப்பின் நோக்கமாக, ஆக்கமாக இருக்க முடியும்.
(தொடரும்)