தமிழ்நாட்டின் வரலாற்றில் சில அரசர்களே வரலாறாக இருப்பார்கள். அவ்வகையில் சோழ அரசர்களில் இரண்டு பெரும் வரலாறாக மின்னியவர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும். தஞ்சாவூரில் தலைநகரம் அமைத்து ‘சாவா மூவா பேராடு’ போன்ற திட்டங்கள் வகுத்து, ‘கோயிலைச் சார்ந்த குடிகள், குடிகளைச் சார்ந்த கோயில்கள்’ என்னும் வகைமையில் அரசாட்சி புரிந்த இராசராச சோழனுக்குப் பிறகு இராசேந்திரச் சோழன் சோழ அரசராகப் பதவி ஏற்று, சோழர்களின் தலைநகரை மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். இராசேந்திர சோழன் ஆட்சிக்காலம் தொடங்கி 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரம் வரலாற்றில் பல வடுக்களையும் சிறப்புகளையும் பெற்றுள்ளது.
இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி, கோயில் கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆராய்ந்து தெளிகையில் 1012ஆம் ஆண்டு இராசேந்திர சோழன் இளவரசுப் பட்டம் ஏற்றார் என்பதும், 1014 ஆம் ஆண்டு பேரரசுப் பட்டம் ஏற்கிறார் என்பதும் தெளிவாகிறது. தஞ்சாவூரிலிருந்து தமது தலைநகரைக் கங்கை கொண்ட சோழபுரத்தில் நிர்ணயித்து ஒரே நேரத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும், கோயிலுக்கு அருகே அரண்மனையும் கட்டி அரசாட்சி செலுத்தினார் என்று வரலாறு உணர்த்துகிறது.
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திபோலவே, இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியும் பல வரலாற்று உண்மைகளை நமக்குப் பகிர்கின்றது.
இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி
‘ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுரை நாடும்
துடர்வன வெளிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சுழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரன் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
சிந்தற முடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தோல் பெருங்காவல் பல்பழ தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திபத் தீவரன் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயன்கோடு பழிமிக முயன்கியில் முதுகிட்து
ஒலித்தசைய சிங்கன் அளபரும் புகழோடும்
பீடில் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பேறு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிற்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடி வளைய நாமனைக் கோணமும்
வெந்சிலொஐ வீரர் பஞ்சப் பழியும்
பாசுடை பழன மாசுனித் தேசமும்
அயர்வில்வன் கீர்த்தி யாதினாக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர் காலத்துக் கிளையோடும் பிடித்துப்
பலதனத் டுநிரை குலத் குவியும்
கிட்டருன் செரிமிலை யோட்ட விஷயமும்
பூசுரர் சேர்ந கோசல நாடும்
தன்மை பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சுரணை முரனுரத் தாக்கித்
திக்கனைக் கீர்த்தி தக்கன லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழின் தொடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பன் தாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவ்யுள் பலகாலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியோடும் அகப்படுத்து
யுரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகனகர்ப் போர்த் தொழில் வாசலில்
விசா தறதோ ரணமும் முதொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யுறேயில் தொன்மலை யுறும்
ஆழ்கடல் அகழ்சுழ் மாயிரு டிங்கமும்
கலங்க வல்வஇணை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாலமும்
காவல் புரிசை மேல்விளிம் பங்கமும்
விளைப்பான் தூருடை வாலிபன் தூறும்
கலமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கொர்புகழ்த் தலைத் தக்கொலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தெனக் கலர்போழில் மாணக்க வாரமும்
தோடுகடற் காவல் கடுமுரன் கடாரமும்
மாபொரு தந்தார் கொண்ட
கோப பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு’
என்று நிறைவு பெறும் மெய்க்கீர்த்தியில் இராசேந்திர சோழன் கடல் கடந்தும் பல நாடுகளை வென்றெடுத்த பேரரசன் என்பதை உணர முடிகிறது. இராசேந்திர சோழன் தமது ஆட்சிக்காலத்தில் 11 வகை நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டார் என்பதும், அதில் 6 வகை நாணயங்கள் ஆந்திர மாநில தவளேசுவரம் தொல்லியல் ஆய்வுகளிலும், கங்கை கொண்ட சோழபுரம் ஆய்வுகளிலும் கிடைக்கப்பெறுகின்றன என்பது உறுதியாகின்றது.
தென்னகத்தின் பெரும் பகுதிகளைச் சோழ அரசின்கீழ் கொண்டு வந்து வடநாட்டில் கங்கைவரை போர்த் தொடுத்து, கங்கை கொண்ட சோழபுரம் நகர உருவாக்கம், கோயில் கட்டுமானம், சோழ கங்க ஏரி உள்ளிட்ட பலவற்றை உருவாக்கினார்.
பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழ கங்க ஏரியில் தொல்லியல் துறையினர் முதலில் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர். கங்கை கொண்ட சோழபுரம் கோயிலிலிருந்து 3.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோழ கங்க ஏரியின் மதகு கட்டமைப்பை ஆராயும் வகையில் ஆய்வு மேற்கொண்டனர். மதகின் இரு மருங்கிலும் செங்கல் கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சோழகங்க ஏரி நீர் மதகு வழியாக இத்தொட்டியில் விழுந்து மதகில் வெளியேறும் வகையில் இதன் கட்டுமானம் உருவாக்கப்பட்டதை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இம்மதகின் மேல் பகுதி மராட்டியர் காலக் கட்டுமானமும், ஆங்கிலேயர் காலக் கட்டடப் பகுதியும் காணப்படுகின்றன. இராசேந்திர சோழன் காலத்திய மதகை மராட்டியர்களும் ஆங்கிலேயர்களும் சீர்திருத்திப் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது.
250 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி அதிகாரம் பொருந்திய நகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரம் மூன்றாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்குப் பிறகு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. பாண்டியர்களில் பெரும் அரசனாக உருவெடுத்த சுந்தரபாண்டியன் கங்கை கொண்ட சோழபுரத்தின் மீது போர் தொடுத்து கோயிலை மட்டும் விட்டு வைத்து, அரண்மனையையும், நகரையும் முழுவதுமாக அழித்தார் என்பது வரலாறாக நமக்குப் பதிவாகியுள்ளது.
1756ஆம் ஆண்டு பிரெஞ்ச் படையெடுப்பிலும், 1765இல் ஆங்கிலேயர் உதவியுடன் நடைபெற்ற நவாப் படையெடுப்பிலும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் பாதிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உணர்த்துகின்றன.
1855ஆம் ஆண்டு காவிரியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோதும், கொள்ளிட அணைக்காகவும், இக்கோயிலின் தூண்கள், கற்கள் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டது என்று ‘இந்தியன் ஆண்டிக்வரி’ என்ற நூல் செய்திகள் உணர்த்துகின்றன. பொது ஆண்டு 11, 12 ஆகியவற்றில் தலைநகராகச் சிறந்து விளங்கிய கங்கை கொண்ட சோழபுரம் 19ஆம் நூற்றாண்டில் மிகச் சிறிய கிராமமாக வழித்தட ஊராக மாறிப்போனது.
தொல்லியல் துறையினர் 1980 முதலாகக் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் , அரண்மனை, பொன்னேரி போன்ற இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர்.
முதலாவதாக 1980ஆம் ஆண்டு அரண்மனை இருந்த மாளிகை மேடு என்ற பகுதியில் மையப் பகுதியில் அகழாய்வு குழிகள் அமைத்தனர். சிறிய ஆழத்திலேயே ஆங்கில எழுத்தான T வடிவில் கட்டிட அமைப்பைக் கண்டறிந்தனர். அதனைச் சுற்றி இன்னும் அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டபோது மண்டபம் போன்ற அமைப்புடைய பெரும் கட்டட அமைப்பு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
மாளிகைப் பகுதியின் 2 மீட்டர் அளவில் அடிப்புறக் காரைப் பூச்சும், 8 அடுக்குகள் வரையிலான புணரமைப்புப் காரைப் பூச்சும் கண்டறியப்பட்டன.
தமிழகத்தின் பிற தொல்லியல் அகழாய்வு இடங்களைப்போல இங்கு அதிக மண்ணடுக்குகள் காணப்படவில்லை. மூன்று அளவு உடைய மண் அடுக்கு மட்டுமே இங்கு காணப்படுவதாகத் தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.
மண் அடுக்குகள் கால நிர்ணயத்தை ஆராய்ந்ததில் அடிப்பகுதி முதலாம் இராசேந்திர சோழனின் கட்டுமான காலத்துடன் பொருந்திப்போவதைத் தொல்லியலாளர்கள் உறுதி செய்கின்றனர். அதன்பின்னர் காலத்திய மண் அடுக்குகள் அவர் வழி வந்த அரசுகளால், வாரிகளால் புணரமைப்புச் செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
முதலாம் இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் நகரமும் கோயிலும் 13ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழக வரலாற்றில் ஆளுமைமிக்க அரண்மனையாக விளங்கியது. சுமார் 260 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் பொருந்திய களமாகக் கங்கை கொண்ட சோழபுரம் விளங்கியது.
எசலாம் செப்பேட்டில்தான் இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் நகர உருவாக்கம், கோயில் உருவாக்கம் பற்றிய செய்திகள் முதன்மை ஆதாரமாக நமக்குக் கிடைக்கின்றன. வடமொழியில் உருவாக்கப்பட்ட இந்தச் செப்பேட்டில், ‘பகீரதன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்ததுபோல, இராசேந்திர சோழன் கங்கை நீரைத் தென்னகம் கொண்டு வந்து பொன்னேரியை உருவாக்கினான்’ என்று புகழ்மொழி கூறுகின்றது.
மேலும் வீர இராசேந்திரன் கல்வெட்டில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய சில குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இரண்டு மதில்கள் கோயிலையும் அரண்மனையும் காத்தன என்பது தெளிவாகிறது. முதலாவதாக இராசேந்திரன் சோழன் மதில் அடுத்ததாக உள்படை வீட்டு மதில் என இரண்டு மதில்கள் இருந்ததாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்நகரப் பெரிய அங்காடி, திருபுவன மாதேவிப் பேரங்காடி என இரு அங்காடிகள் இருந்தமையும் குலோத்துங்கச் சோழன் கல்வெட்டு மூலம் அறிய முடிகின்றது.
கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள மெய்க்காவல் புத்தூர், கடாரம் கொண்டான், ஆயுதக்களம் போன்ற இடங்களில் தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டு பல்வேறு தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்தனர். கங்கை கொண்ட சோழபுரத்தின் அருகே மண்மலை என்ற இடத்தில் தொல்லியல் துறையினர் 1996ஆம் ஆண்டு ஆய்வு நடத்தியதில் கலிங்க நாட்டின் மகிஷாசர வர்த்தினி சிற்பம் ஒன்றைக் கண்டெடுத்தனர். சோழர்கள் வடநாடு படையெடுத்துச் சென்ற காலத்தில் பல்வேறு செல்வங்களை எடுத்து வந்ததாகவும், அந்தச் செல்வங்களைத் துர்க்கை அம்மனும், கலிங்க நாட்டின் சிற்பமும் காவல் காப்பதாக இப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.
2009ஆம் ஆண்டு மீண்டும் தொல்லியல் துறையினர் இப்பகுதிகளை அகழாய்வு செய்ய முடிவெடுத்து அகழ்ந்தனர். அதில் இராசேந்திர சோழனின் அரண்மனை கட்டட அமைப்பு முழுமையும் வெளிக்கொணரப்பட்டது. இராசேந்திர சோழனின் காலத்துக்குப் பிறகு அவரது வாரிசுகள் புனரமைப்பு செய்த கட்டடப் பகுதிகள் மூன்று மண் அடுக்குகள் வாயிலாக வெளிக்கொணர்ந்தனர். 2009ஆம் ஆண்டு அகழாய்வில் பல்வேறு சிறு சிறு அலங்கார ஆணிகள், கூரை ஓடுகள் ஆகியவற்றைத் தொல்லியலார் கண்டெடுத்தனர்.
இராசேந்திர சோழன் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கியமையை அவரது செப்பேடுகள் வாயிலாக நாம் அறிகிறோம். அதன் வழி சீன தேசத்து மண்பாண்டப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.
கங்கை கொண்ட சோழபுர அகழாய்வில் அதிகளவில் ட வடிவக் கூரை ஓடுகளும், சீன தேச ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. சிதம்பரம் நடராசர் கோயிலில் இவ்வடிவ ஓடுகள் வேயப்பட்டுள்ளதும் இங்கு அதிகளவில் இந்த ஓடுகள் கிடைக்கப்பெறுவதையும் ஆய்ந்தால் சோழர் காலத்திய கடல் வணிகத்தில் இந்த ஓடுகள் அறிமுகமாகி இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சீன தேசத்து போர்சலைன் ஓடுகள் கங்கை கொண்ட சோழபுர சுற்றுப்புற அகழாய்வுகளில் கிடைத்தன. இதன்மூலம் கடல் வாணிகத்தில் சோழர்கள் சிறந்து விளங்கியிருந்தனர் என்பது உறுதியாகின்றது.
இராசேந்திர சோழன் உலா நூலில் ஒட்டக்கூத்தர் கங்கை கொண்ட சோழபுரத்தை,
‘மாளிகையும் வாயிலும் சாலையும், ஆலயமும்
மண்டபமும் எம்மருங்குத் தோரணமும் – சாளரமுந்
தெற்றியும் மாடமும் ஆடரங்கும் செய்குன்றும்
சுற்றிய பாங்கரும் தோன்றாமே’
என்று குறிப்பிடுகிறார். வடமொழி நூல் ஒன்றிலும் கங்கா குண்டம் என்று இந்த ஊரைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
இன்றளவும் வாசிப்பிலிருந்து வரும் தண்டியலங்கார நூலில் கங்காபுர மாளிகை என்ற குறிப்பு கிடைக்கின்றது. இவ்வாறு பிற்காலத்திய இலக்கியங்களில், வரலாறுகளில், மெய்க்கீர்த்திகளில் கொண்டாடப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் சுமார் 260 ஆண்டுகள் மாபெரும் நகராக இருந்தது. ஆனால் இன்று ஒரு சிற்றூராக வழித்தட ஊராக மட்டுமே காட்சி அளிக்கின்றது. மத்திய மாநில அரசுகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களுக்கு ஒரு மணிமண்டபம் அமைத்து சோழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தினால் அடுத்த தலைமுறையினர் அறியும் வரலாறாக சோழ வரலாறு உருவெடுக்கும்.
(தொடரும்)
Good
Very informative!
Congratulations🎉🥳👏
I like very much about chola history.
I am also one of the cholan from
Thiruvarur district.
Raja Rajan and Rajendran are very great
Kings.
Good article. Let it continue
மிகவும் அருமையான வரலாற்று கருத்து கட்டுரை பதிவு. பாராட்டுகள் நண்பரே. எனது ஊர் கண்டியன்கொல்லை, உட்கோட்டை, சோழன்மாதேவி, மீன்சுருட்டி. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க ஊர்களுக்கு இடையே கொள்ளிடக்கரையின் வடகரை எங்கள் ஊர். இங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கோபுர விளக்கு எங்களுக்கு தெரியும். 5 கல் தொலைவில் கங்கை கொண்ட சோழபுரம். பொன்னேரியின் வடிகால் கொள்ளிடத்தில். செங்கால் ஓடை…குறுக்கப்பட்ட ஆற்று வடிகால். ஆங்கிலேயர் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் சிதைந்த வெளி பிரகார கருங்கற்கள் கீழணை (Lower Anicut) கட்ட உதவியதாக எம் முன்னோர்கள் மூலம் கேள்வி பட்டுள்ளேன்…. மிக்க நன்றி.
Dear Shankar,
Excellent work sir.
Congratulations , keep it up.
Prabhu N
You absolutely nailed the ending. Beautiful article about Cholas .This is so well-researched and thorough. Really impressed all the best Sankar sir. Keep rocking.
Very good information about history of Gangai konda Cholapuram
தங்களூடன் உரையாட ஆவல்
கைபேசி எண்ணை அனுப்பினால் பேசுகிறன்
நன்றி ஐயா