பண்டைய சோழ நாட்டின் கருவூலமாய் சுவீரபட்டினம், காகந்தி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட புகார் நகரின் ஒரு பகுதியாக விளங்கிய தலைச்சங்காடு என்னும் ஊர், சங்க இலக்கியங்களில், தொல்லியலில், கல்வெட்டில், சோழர் பாண்டியர் வரலாற்றில் எனப் பல சிறப்பிடங்களைப் பெற்றுள்ளது.
‘மதுரைக்காஞ்சி’ என்னும் நூல் பாண்டியர்களின் ஆட்சிச் சிறப்பையும், ஊர் அழகையும், நிலவியல் கூறுகளையும் படம் பிடித்துக்காட்டியதுபோல, ‘பட்டினப்பாலை’ என்னும் நூல் சோழர்களின் ஆட்சி நிர்வாகம், உள்நாட்டு, அயல்நாட்டு வணிகம், சோழ நாட்டு வளம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கருவியாகத் திகழ்ந்தது. அவ்வகையில் பூம்புகார் நகரின் ஒரு பகுதியாக, பண்டைய இலக்கியங்கள் போற்றும் பகுதியாகத் தலைச்சங்காடு விளங்கியதை அறிய முடிகிறது. பூம்புகார் நகரின் இணை நகராக விளங்கிய தலைச்சங்காட்டின் சிறப்பை நாம் பூம்புகார் நகரோடு இணைத்துத்தான் கூற வேண்டும். ‘பட்டினப்பாலை’ நூலில்,
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணர்வும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’
இப்பாடலிலிருந்து, நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டுவரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள், தென்கடல் முத்து, கீழைக் கடல் பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை, காவிரி ஆறுகளின் வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள், காழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை, பிற இடங்களிலிருந்து வந்து இறங்கிய பல அரிய, பெரிய பொருட்கள் உள்ளிட்ட பலவும் இத்துறைமுகம் வந்து சென்றதை அறிவதிலிருந்து இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள் உச்சநிலை பெற்றிருந்ததை அறியமுடிகிறது.
கடல் வாணிபத்தால் இத்துறைமுக நகரில் காணப்பட்ட செல்வவளம் பற்றிச் ‘சிலப்பதிகாரம்’ (2:2-6) பேசுகிறது. இத்துறைமுகத்திற்கு இரவு நேரங்களில் வந்துசேரும் கப்பல்களுக்குத் திசையினை உணர்த்தக் கலங்கரை விளக்கம் இருந்ததை மேற்சுட்டிய இலக்கியம், ‘இலங்கு நீர் விரைப்பிற் கலங்கரை விளக்கமும்’ என்ற பாடல் வரியின் வாயிலாகத் தெரிவிக்கிறது.
தலைச்சங்காடு பகுதியில் ஒரு பகுதியைச் செப்பனிட்டபோது 2 அடி ஆழத்தில் பெரிய கல் தூண் வடிவில் கருங்கல் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வரலாற்று ஆய்வாளர்கள் அதனை ஆய்ந்ததில் கோயில் கட்டுமானத்தில் செதுக்கி பதிக்கப்பட்ட கல் என்பதும், பராந்தகச் சோழர் காலத்திய கல்வெட்டு என்பதையும் உறுதி செய்தார்கள். அதனைக் கொண்டே தலைச்சங்காடு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றது. அதனடிப்படையில் தலைச்சங்காடு அகழாய்வு அனுமதி கிடைத்தது.
‘சிலப்பதிகாரம்’ மூன்று உண்மைகளை உணர்த்துவதுபோல தலைச்சங்காடு ஊரில் மூன்று நிலைகள் உயர்வாய் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகின்றது. சைவம், வைணவம், காணாபத்தியம் ஆகியவை இந்த ஊரில் இருந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன. தலைச்சங்காடு ஊரில் மூன்று சிவன் கோயில்கள், மூன்று பெருமாள் கோயில்கள், மூன்று காணாபத்தியக் கோயில்கள் பிற உபகோயில்கள் நன்நிலையில் இருந்தமையைக் கல்வெட்டுகள் சுட்டுகின்றன.
இந்த ஊரின் குறிப்புகளை இன்றைய தமிழக வருவாய்த்துறையினர் தலையுடையவர் கோயில் பத்து என்னும் பெயரில் வழங்கி வருகின்றனர். சங்க காலத்துக்கு முன்பாகவும், பின்னர் வந்த காலங்களிலும் தலைச்சங்காடு சிறந்து விளங்கியதாகவே அறிய முடிகின்றது. 2010, 2011ஆம் ஆண்டுகளில் தலைச்சங்காடு பகுதியில் தமிழகத் தொல்லியல் துறையால் மேற்புற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின், மேற்புற ஆய்வுகளின் கூறுகளைக் கொண்டு அகழாய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பூம்புகாரின் மேற்பரப்பு ஆய்வில் கடல்கோளால் அழிந்த நகரம் 6 கி.மீ வரை இருந்துள்ளதை கடலாய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் குறிப்பிடுகிறார். அதனையொட்டி புகார் நகரின் அருகில் அமைந்துள்ள தலைச்சங்காடு ஊரில் அரசுப் பள்ளி பின்புறம் உள்ள நிலத்தில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து அகழாய்வுக் குழிகளை அமைத்தனர். மேற்பரப்பு ஆய்விலேயே அதிக அளவு உடைந்த மண்பாண்டங்கள், ஓடுகள் கிடைக்கப்பெற்றன.
தலைச்சங்காடு அகழாய்வில் சிதைந்துபோன கட்டடப் பகுதிகள், கூரை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் ஆகியன சேகரிக்கப்பட்டன. இப்பகுதி அகழாய்வில் பெருங்கற்காலம் முதல் நாயக்க அரசர்களின் காலம் வரையிலான சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. இப்பகுதியில் பராந்தகச் சோழனின் சிற்பங்கள், கல்வெட்டுகள் தலைச்சங்காடு பகுதியின் தொன்மையைச் சுட்டுகின்றன.
தலைச்சங்காடு முதல் மண்ணடுக்கில் யாளி வரி என்னும் சிற்பங்கள் இரண்டு கிடைக்கப்பெற்றதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டையச் சோழர்களின் கோயில் கட்டுமானம் மிகச்சிறப்பு வாய்ந்தது என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. கோயிலின் அடி முதல் உச்சி வரை பல்வேறு அழகிய வடிவங்களுக்குச் சோழர்கள் முக்கியத்துவம் அளித்ததை அறியலாம். கோயில் கட்டுமானத்தில் அதிட்டானம், ஜகதி, குமுதம், பட்டிகை, பதுமத்தூண் ஆகியவை அமைக்கப்பெறும். தலைச்சங்காடு யாளிவரி உருவ அமைப்பு மற்ற யாளிவரியைக் காட்டிலும் மாறுபட்டது என்பதை நாம் உணர முடிகின்றது.
இரண்டாம் குழி மண்ணடுக்கில் விருத்த குமுதம் என்னும் கட்டட அமைப்பின் பெரிய உருவம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கட்டடக் கலையில் குமுதவரி அழகிய வடிவில் சிற்பிகள் அமைப்பார்கள். இவற்றுள் முப்பட்டை குமுதம், விருத்த குமுதம், எண்பட்டை குமுதம், பத்ம குமுதம் கொண்டு கோயில் கட்டுமானம் அமைக்கப்பெறும். அவ்வகையில் தலைச்சங்காட்டில் 3 அடி நீளம் கொண்ட சிறப்பான வேலைப்பாடுகள் கொண்ட விருத்த குமுதம் கொண்ட சிற்பம் முற்காலச் சோழர்களின் சிற்பத் திறமையை நமக்கு வெளிப்படுத்துகின்றன.
தலைச்சங்காடு அகழாய்வில் கருங்கல் சிற்பங்கள், செங்கல் கட்டடப் பகுதிகள், சுதைச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் கிடைக்கப்பெற்றன. சுதைச் சிற்பங்கள் பல காலமாகப் பூமிக்கு அடியில் கிடைத்தமையால் உடைந்த வடிவிலேயே கிடைக்கின்றன என்று தொல்லியல் ஆய்வு அறிக்கை கூறுகின்றது.
சிதம்பரம், திருக்கடையூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே தலைச்சங்காடு திருத்தலம் அமைந்துள்ளதையும், கோயில் வழிபாட்டில் பயணம் செல்லும் பக்தர்களும் வணிகர்களும் தலைச்சங்காடு ஊரில் உள்ள சத்திரத்தில் தங்கிச் சென்றனர் என்பதை அகழாய்வுக் குழிகள் வழி அறிய முடிகின்றது. காலப்போக்கில் அதனை 1825ஆம் ஆண்டு தரங்கம்பாடியைச் சேர்ந்த ஒருவர் கட்டடத்தை மேம்படுத்தியுள்ளார் என்பதும் கல்வெட்டு மூலம் கிடைக்கின்றது. முதலாம் பராந்தகச் சோழன் காலம் முதல் 1800 வரையிலான காலம் வரையிலான கல்வெட்டுகள் சான்றாகக் கிடைக்கின்றன. அந்தப் பகுதியிலேயே காமராசர் ஆட்சிக்காலத்தில் சத்திரம் அமைந்திருந்த பகுதியில் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது என்பதை ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
தலைச்சங்காடு பகுதி தொல்லியல் ஆய்வுகளின் வழி கருப்பு சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் ஆகியவை கொண்டு கணக்கிட்டால் இரும்புக் காலம் முதலாகவே மக்கள் வாழ்விடப் பகுதியாக இப்பகுதி இருந்தமையை அறிய முடிகின்றது. முற்காலச் சோழர்கள் காலத்தில் தலைச்சங்காடு செழிப்பான ஊராகத் திகந்தமையைக் குறித்துச் சான்றுகளும், கல்வெட்டுகளும் நமக்கு உணர்த்துகின்றன.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்
- சிற்பங்கள்
- சங்கின் பகுதி
- கற்சிற்பங்கள்
- உடைந்த சுதைச் சிற்பங்கள்
- மண்பாண்ட ஓடுகள்
- சுடுமண் வயவன் கருவி
- கருப்பு சிவப்பு பானை ஓடுகள்
- அகல் விளக்குகள்
- மணிகள்
- ஓடுகள்
- கோயில் கட்டுமானங்கள் ஆகியவை.
மேற்கூறிய பொருட்கள் தலைச்சங்காடு பகுதியின் தொன்மையைச் சுட்டுகின்றன. தமிழ்ச் சமூகம் கடந்து வந்த பாதைகளைத் தமிழகத் தொல்லியல் துறை, மத்தியத் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் வெளிக்கொணர்கின்றன. தமிழகத்தின் தொன்மை வரலாறு உலக அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும். பூம்புகார் பகுதியை இன்னும் நன்கு ஆராய்ந்து கடல் ஆய்வு, தொல்லியல் ஆய்வுகள் வழி நமது மண்ணின் மேன்மையை வெளிக்கொணர்வோம்.
(தொடரும்)