Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களில் சிறப்புபெற்ற ஊராகத் திகழ்வது உத்திரகோசமங்கை. வரலாறு, புராணம் ஆகியவற்றில் பல சிறப்புகளைப் பெற்ற பகுதியாகத் திகழும் உத்திரகோசமங்கை ஊரின் 12கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் தேரிருவேலி.

வரலாற்றுப் பார்வையில் தேரிருவேலி பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள், சுவடிகள், இலக்கியங்கள் என எங்கும் கிடைக்கப்பெறவில்லை. மாறாக அருகில் இருக்கும் உத்திரகோசமங்கை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. ஏரிகளால் சூழப்பட்ட ஊராகவும் அருகில் குண்டாறு என்னும் ஆறு பாயும் நிலவியல் அமைப்புகளால் இந்த ஊர் அமைந்துள்ளதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராமநாதபுரத்தையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களைப்பற்றியுமான பல வரலாற்றுக் கால ஆதாரங்கள் ஆங்காங்கே கிடைத்துள்ளன. மேலும் பல, நடைபெற்று வரும் ஆய்வுகளில் கிடைத்தும் வருகின்றன. தேரிருவேலி ஊரில் கழனித்திடல் என்னுமிடத்தில் மேற்பரப்பு ஆய்வினைத் தொல்லியல் துறையினர் மேற்கொண்டபோது கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், வண்ண ஓடுகள், நுண்கற்காலக் கருவிகளின் கூறுகள் கிடைத்தன என்று தொல்லியல் துறையினர் பதிவு செய்கின்றனர். இதனை மையமாகக் கொண்டே தேரிருவேலி பகுதியில் அகழாய்வு செய்யத் தொல்லியலாளர்கள் முடிவு செய்கின்றனர்.

உத்திரகோசமங்கை கோயிலின் தேர் இந்த ஊருக்கு வலம் வந்தபோது கோயில் தேரின் அச்சு முறிந்து ஏரியில் மூழ்கியதால் தேர் உடைந்த நிலம் (வேலி) என அழைக்கப்படுவதாக ஊரில் இருக்கும் மூத்தோர்களும் தொல்லியலாளர்களும் கூறுகின்றனர். இன்னொரு குறிப்பாக இந்த ஊரில் உள்ள ஆற்றின் நீர் இருவேலி கண்மாய் என்னும் பகுதிக்கு வந்து கடலுக்குச் செல்வதாலும், உத்திரகோசமங்கை தேர்த்திருவிழா நிலம் சார்ந்த பகுதியாக இருப்பதாலும் தேரிருவேலி என்று அழைக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். எப்படியாகினும் உத்திரகோசமங்கை ஊரைச் சார்ந்த நிலவியல் பகுதியாகவே இப்பகுதி காணப்படுகிறது.

உத்திரகோசமங்கை சைவர்களால் வழிபடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த தலமாகும். இந்தக் கோயிலில் இருக்கும் மரகத நடராசர் வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்தது. உத்திரகோசமங்கை ஊரைச் சுற்றியுள்ள பல ஊர்கள் தானமாக வழங்கப்பட்ட ஊர்கள் என்ற குறிப்பு மட்டும் கோயில் கல்வெட்டுகள் வழி கிடைக்கிறது.

அகழாய்வு

வரலாற்றிலும் புராணங்களிலும் சிறப்புப் பெற்ற உத்திரகோசமங்கை ஊரின் அருகில் இருக்கும் தேரிருவேலி ஊரில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் மேற்பரப்பு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து 1999 -2000 ஆண்டில் அகழாய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி காலனித்திடல் என்னுமிடத்தில் நிலத்தை அகழும் பணி உள்ளூர் மக்களின் உதவியுடன் தொடங்கியது. இந்த அகழாய்வில் சங்க காலத்தைச் சேர்ந்த பானைகள், பானைக் குறியீடுகள், எலும்புகள், மான் கொம்புகள் உள்ளிட்டவை கிடைக்கப்பெறுகின்றன. இதன் அருகில் முதுமக்கள் தாழி அடையாளங்களும் கிடைத்துள்ளன.

மேலும், அருகில் அகழாய்வு செய்யப்பட்டபோது அகல் விளக்கும் ரெளலட் ஓடுகளும் கிடைத்தன. இத்துடன் பண்டைய தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்றும் கிடைத்தது. இதையெல்லாம்விட முக்கிய விடயமாக 8 செ.மீ அளவில் நீரைக் கொண்டுசெல்லும் குழாய் வடிவம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

தேரிருவேலி பகுதியில் சுமார் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில் பல இடங்களில் சுடுமண் பானைகள், சங்குகள், கோயிலில் பயன்படுத்தப்படும் கெண்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. நுண்கற்காலத்தைச் சார்ந்த பொருட்கள் பல தேரிருவேலியில் கண்டெடுக்கப்பட்டதை வைத்து பிற பொருட்களும், கருப்பு நிறத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட புறா வடிவம் கொண்ட சிற்பங்களும் இங்கு கூடுதல் கவனம் பெறுகின்றன.

தேரிருவேலி அகழாய்வில் மொத்தமாக 65 பானைக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தொல்லியல் அறிக்கை குறிப்பிடுகின்றது. பானைக் குறியீடுகள் சில பகுதிகளில் முழுமையாகவும் சில சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. தேரிருவேலி நான்காம் அகழாய்வுக் குழியில் மட்டும் 22 பானைக் குறியீடுகள் கண்டு காட்சிப்படுத்தப்பட்டன என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிடுகிறார். இதே குழியில் ஆமை வடிவம் தராசு வடிவம் கொண்டும் பொருட்கள் கிடைக்கப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

65 பானைக் குறியீடுகளில் 39 பானைகள் முதலாம் காலகட்டம் என்று குறிப்பிடப்படும் கி.மு 300 முதல் கி.பி. 100 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவை என்பது தொல்லியல் குழுவால் வரையறுக்கப்படுகிறது. இரண்டாம் காலகட்டம் என்று அழைக்கப்படும் கி.பி 100 முதல் கி.பி 300 வரையிலான காலத்தைச் சார்ந்த 26 பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பானை ஓடுகளின் குறியீடுகள் எதனைக் குறிக்கின்றன என்பதைக் கணிக்க இயலவில்லை. ஏனெனில் இந்தியா முழுவதும் கிடைக்கப்பெறும் குறியீடுகளிலும் இந்தச் சிக்கல் நிலவுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பானை செய்பவர்களின் குறியீடா அல்லது குலங்களின் குறியீடா என்பதை ஆய்ந்தால் பெரும்பாலான ஆய்வாளர்கள் குலக்குறியீடு என்றே முடிவெடுக்கின்றனர்.

தமிழ் பொறிப்பு ஓடுகள்

தேரிருவேலி அகழாய்வில் மொத்தமாக ஏழு தமிழ் பொறிப்பு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொல்லியல் அறிக்கை குறிப்பிடுகின்றது. முதலாம் காலகட்டத்தைச் சார்ந்த ஒரு பானை ஓடும், இரண்டாம் காலகட்டத்தைச் சார்ந்த நான்கு பானை ஓடுகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. அவற்றுள் கொற்றன், நெடுங்கிள்ளி போன்ற சொற்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைக்கப்பெற்ற சாத்தன் என்ற சொல் தேரிருவேலியில் சாதன் என்ற பெயரில் கிடைக்கிறது.

நெடுங்கிள்ளி என்னும் பெயர் பாண்டிய அல்லது சோழ அரசர்களைக் குறிக்கலாம் என்று ஆய்வாளர்களின் இறுதி முடிவாகக் கணிக்கப்படுகிறது. கொற்றன் என்னும் பெயர் தமிழ் பிராமி வடிவில் கிடைக்கப்பெறுவதாகவும், ம ன அ என்ற எழுத்துப் பொறிப்பும் அகழாய்வுக்குழியில் கிடைக்கப்பெறுகின்றது.

தேரிருவேலி அகழாய்வில் ஒரு முதுமக்கள் தாழியில் மான் கொம்புகள் இருப்பதைக் கொண்டு ஆராய்ந்ததில் பண்டைய காலத்தில் சில குலங்களில் மான் கொம்புகளை வைத்து இறந்தோர்களை அடக்கம் செய்யும் வழக்கம் இருப்பதை அறிய முடிகின்றது. இவற்றை, தமிழகத்தில் பல இடங்களில் மான் கொம்புகள் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டதைக் கொண்டு நாம் ஊகிக்க முடிகின்றது. தேரிருவேலியில் மொத்தமாக 5 மான் கொம்புகள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வாறாகப் பழங்காலத்தில் மான்கொம்பு படையல் பொருளாக நிச்சயமாக இருந்திருக்கலாம் என்பதை உறுதியாகக் கூற முடிகின்றது.

தமிழகத்தின் பல தொல்லியல் அகழாய்வுகளில் சங்குகளும் வளையல்களும் இருந்ததை வைத்து பண்டைய காலத்தில் வளையல்கள் வளமை பொருந்திய நோக்கத்திற்காக அணியப்படுபவை என்பதைச் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தில் சுடுமண் பொம்மைகள் பல இடங்களில் கிடைத்தாலும், கொடுமணல், தேரிருவேலி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே புறா வடிவிலான சுடுமண் சிற்பங்கள் கிடைத்தன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேரிருவேலி பகுதி அகழாய்வில் கருவிகள் செய்யப்பயன்படும் மூலக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனைக் கொண்டு இப்பகுதியில் கருவிகள் செய்யும் சிறு பகுதி செயல்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. மேலும் இப்பகுதியில் குறிப்பிடும்படியான வீடுகளின் அமைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என்று தொல்லியல் அறிக்கை குறிப்பிடுகின்றது.

தேரிருவேலி முதுமக்கள் தாழிகளின் படையல் பொருட்களை ஆய்ந்தால் இப்பகுதி மக்கள் சைவ, வைணவச் சமயத்தைப் பின்பற்றியவர்களாக இருந்திருப்பர் என்றும், பண்டைய காலத்தில் அரசன் பின்பற்றும் சமயமே குடிமக்களும் பின்பற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உத்திரகோசமங்கை கோயிலின் அருகே தேரிருவேலி அமைந்திருப்பதால் இப்பகுதிக்கு யாத்திகர்களாக மக்கள் வருகை புரிந்திருக்கலாம் என்றும், பிற இடங்களின் ரெளலட், ஆம்போரா ஓடுகள் கிடைத்திருக்கலாம் என்பதையும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேரிருவேலி பற்றிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காமலேயே இந்தப்பகுதியில் இந்த அளவு தொல்லியல் பொருட்கள் கிடைக்கின்றன. பண்டைய காலத் தமிழகம் கோயிலை நோக்கிய மக்கள், மக்களை நோக்கிய கோயில்கள் என்னும் அளவிலேயே சிறப்புடன் இருந்தமையைத் தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் தேரிருவேலி அகழாய்வும் சிறப்பிடம் பெறுகின்றது.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *