தமிழ்நாடு, நிலவியல் அமைப்பால் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கையாகவே வளமிக்க நாடாகத் திகழ்கிறது. பண்டைய தமிழகத் துறைமுகங்கள் பல அயல்நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்த சிறந்த துறைமுகங்களாக விளங்கின. அவ்வகையில் சங்க காலம் தொட்டே சிறந்த துறைமுக நகரமாக விளங்கிய தொண்டி என்னும் ஊர், தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, சங்க இலக்கிய ஊராக அறியப்படுகிறது.
ஓங்கு இரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர்
இட்ட அகிலும் துகிலும்,
ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும்
சுமந்துடன் வந்த கொண்டலொடு
புகுந்து கோமகன் கூடல்
என்று சிலப்பதிகாரத்தின் ஊர்காண் காதை இந்தத் தொண்டி நகரின் சிறப்பை உணர்த்துகிறது.
சங்க இலக்கியத்தின் ஐங்குறுநூறில் தொண்டி கடல் நகரம் குறித்த பத்துப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் இரண்டாம் நூறு பாடல்கள் நெய்தல் நிலத்தின் சிறப்பை, மேன்மையைச் சுட்டுகின்றன. அதில்,
தாய்க்குரைத்த பத்து
தோழிக்குரைத்த பத்து
கிழவற்குரைத்த பத்து
என்னும் வரிசையில் தொண்டி பத்து என்னும் தலைப்பில் பத்துப்பாடல்கள் இந்நகரச் சிறப்பு குறித்து எடுத்துரைக்கின்றன.
சங்க இலக்கியத்தாலும் வரலாற்றாலும் சிறப்புப் பெற்ற தொண்டி நகரத்தில், தமிழகத் தொல்லியல் துறை இரண்டு முறை அகழாய்வுகள் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இதுவரை 35க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் செய்து பல சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த அகழாய்வுகள் வழி பண்டைய தமிழர்களின் வாழ்விடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், துறைமுக நகரங்களின் சிறப்புகள் தெரியவந்துள்ளன. அவ்வகையில் தொண்டி நகரின் சிறப்பையும் தமிழகத் தொல்லியல் துறை இரண்டு முறை அகழாய்வுகள் செய்துள்ளது.
தமிழகத்தின் கொற்கை, அழகன்குளம் ஆகிய துறைமுகங்கள் தங்கள் செல்வாக்கை இழந்தபோது பெரும் சிறப்புடன் விளங்கிய துறைமுகமாகத் தொண்டி துறைமுகம் இருந்துள்ளது.
வளமையும் செழுமையும் மிகுந்த துறைமுகமாக விளங்கிய தொண்டி துறைமுகத்தைக் கைப்பற்றுவதில் பண்டைய பேரரசுகளுக்கிடையில் போர்கள் நடந்ததற்கான செய்திகளும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோழர் படைகள் இலங்கை நாட்டின் படைகளைத் தொண்டி நகரத்தில் வைத்து தோற்கடித்து விரட்டியது என்னும் குறிப்பு ஆற்பாக்கம் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தொண்டி துறைமுகம் கிழக்கு நாடுகளுடனான வணிகத்திற்கு முக்கியத் தளமாக நகரமாக விளங்கியது என்பதை இங்குக் கிடைத்த சீன நாட்டின் மண்பாண்டங்கள் குறித்த தொல்லியல் முடிவுகள் உணர்த்துகின்றன.
நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூக மக்கள் பண்டைய காலம் முதலே வாணிபத்தில் சிறந்து விளங்கியதைப் பல்வேறு குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் பர்மா போன்ற நாடுகளில் நகரத்தார் மக்கள் பெரும் செல்வம் படைத்தவர்களாக விளங்கினார்கள் என்றும், தொண்டி துறைமுகத்தின் வழியாகவே அதிகமான தேக்கு மரங்களை இறக்குமதி செய்தனர் என்றும் குறிப்புகள் உணர்த்துகின்றன.
தொண்டி நகரில் அமைந்துள்ள சிவன் கோயில் கல்வெட்டு ஒன்றில் தொண்டி நகரத்தின் பெயராக ‘பவித்திரமாணிக்கப்பட்டினம்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குத் தூய்மையான அரசன் என்பது பொருளாகும். பவித்திரமாணிக்கம் என்னும் பெயர் சோழ அரசன் முதலாம் இராஜராஜசோழனின் பெயராகும். இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தொண்டி நகரம் முதலாம் இராஜராஜன் காலத்தில் சிறப்பிடம் பெற்ற ஊராக, துறைமுகமாக விளங்கியதை அறிய முடிகிறது.
முதலாம் இராஜராஜன் ஆட்சிக்காலத்திய செப்புக்காசு ஒன்றைத் தமிழகத்தொல்லியல் துறையினர் 1980ஆம் ஆண்டு அகழாய்வில் கண்டெடுத்ததை வைத்து இப்பகுதி சோழர்களின் ஆதிக்கம் மிக்க பகுதியாக விளங்கியதைத் தொல்லியல் துறையினர் உறுதி செய்கின்றனர்.
1980, 1994 1995 ஆகிய ஆண்டுகளில் தமிழகத் தொல்லியல் துறை இப்பகுதியில் அமைந்துள்ள தொண்டியம்மன் கோயில் மேட்டுப் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள முடிவெடுத்து அதற்கான பணிகளில் இறங்கினர்.
பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை வழிக்கு இராஜராஜன் பெருவழி என்று பெயர் இருந்தமையைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றைத் தமிழகத் தொல்லியல் துறையினர் தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோயிலில் கண்டெடுத்தனர். இந்தக் கல்வெட்டிலும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்றே குறிப்பிடப்படும் தொடர் இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை வரலாற்றறிஞர்கள் உறுதி செய்கின்றனர்.
தொண்டி தொல்லியல் ஆய்வில் சீன நாட்டின் மண்பாண்டங்கள், சுடுமண் பொருட்கள், காதணி, வட்டு, கருப்பு-பச்சை ஆகிய நிறங்களில் அமைந்த மணிகள் ஆகியவற்றைத் தொல்லியல் துறையினர் கண்டெடுத்தனர். சோழர்களின் செப்புக்காசு ஒன்றும் நாயக்கர் காலத்திய நாணயங்கள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
தொண்டி அகழாய்வின் மூலம் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஊராகத் தொண்டி இருந்தமையை ஐங்குறுநூறு பாடல் வரிகளின் மூலமும், சிலப்பதிகார ஊர்காண்காதை வரிகளின் மூலமும் தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. மேலும் இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்னும் பெயரில் தொண்டி விளங்கியதைக் கல்வெட்டுச் சான்றுகள் வழியும் உறுதி செய்கின்றனர்.
இலக்கியங்களில் சிறப்பு பெற்ற கடற்கரை துறைமுக நகரமான தொண்டி, தமிழக வரலாற்றிலும், சோழ, பாண்டிய வரலாற்றிலும் சிறப்பிடம் பெற்ற ஊராகவும் திகழ்ந்தது, திகழ்கிறது. வரலாற்றை இன்னும் மீட்டெடுக்க தொண்டி சார்ந்த பிற இடங்களிலும் தமிழகத் தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என வரலாற்றாய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
(தொடரும்)
மிக சிறப்பான பதிவு.