Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #22 – ஆண்டிப்பட்டி

தமிழகத் தொல்லியல் வரலாறு #22 – ஆண்டிப்பட்டி

சங்க இலக்கியங்களில் எந்த அரசனுக்கும் இல்லாத சிறப்பாக நன்னனுக்கு மட்டும் நன்னாட் சிறப்பு விழா பெரும் ஆராவாரத்துடன் கொண்டாடப்பட்ட நிகழ்வு மாங்குடி மருதனாரால் பதியப்பட்டுள்ளது.

மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு

என்ற பாடல் வரிகளில் செங்கம் பகுதியில் அரசாண்ட நன்னனின் பிறந்தநாள்விழா மக்களால் கொண்டாடப்பட்ட செய்தி சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடம்பின் பெருவாயில் என்ற ஊரை, கடம்ப மரங்களைக் காவல் காத்த மக்களின் ஊர் தலைவன் நன்னன் என்ற குறிப்பையும், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மா நகரம் இருந்து அரசாண்டவன் நன்னன் என்ற குறிப்பையும் கொண்டு ஆராய்ந்தால் பல்குன்றக் கோட்டம் என்பது இன்றைய தென்னாற்காடு மாவட்ட பகுதியை உள்ளடக்கியது என்பது உற்றுநோக்கத்தக்கது.

பழந்தமிழ் மன்னர்கள் நாடுகளைக் கோட்டமாகப் பிரித்து அரசாண்டனர் என்பதால் நன்னன் அரசாண்ட பகுதி பல்குன்றக் கோட்டம் என்பதாகும். சங்க காலத்தில் செங்கணம் என்று அழைக்கப்பட்ட ஊரே இன்றைய செங்கம் ஆகும். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கம் அருகில் அமைந்த தொல்லியல் களம் ஆண்டிப்பட்டி ஆகும்.

பண்டைய வணிகப்பாதைகளே இன்றளவும் பயன்பாட்டில் இருப்பதை நாம் பல்வேறு இடங்களில் உணர முடிகிறது. அவ்வகையில் இராசகேசரி பெருவழி நாகப்பட்டினம், கோழிக்கோடு பெருவழிப்பாதையாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அதுபோல செங்கம் கணவாய் பெருவழிப்பாதை, மேற்குப் பகுதியைக் கிழக்குத்திசை ஊர்களோடு இணைக்கும் முக்கிய நெடுவழிப்பாதையாக அன்றைய காலத்தில் விளங்கியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சங்ககால வாழ்வியல் கூறுகளோடு ஆராய்ந்தால் அன்றைய செங்கணம் என்று அழைக்கப்படும் இன்றைய செங்கம் முக்கிய வணிகத் தளமாக விளங்கியிருக்கலாம் என்பது புலனாகிறது.

இந்த இடம் வணிகத் தளமாக விளங்கியிருக்கலாம் என்பதற்குச் சான்றாக 1968ஆம் ஆண்டு செங்கம் பகுதியில் கிடைக்கப்பெற்ற மண்ணடுக்கில் 143 காசுகள் அடங்கிய குடம் கிடைத்ததைத் தமிழகத் தொல்லியல் துறை உறுதி செய்கிறது. அந்தக் காசுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதையும், மற்ற குடங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற காசுகள் மாறுபட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற காசுகளில் இந்தக் காசுகள் எழுத்துப் பொறிப்போடு தனித்த இடம் வகிப்பவையாக இருப்பதாகத் தொல்லியல் இயக்குநர் நடன காசிநாதன் தம் ஆய்வில் குறிப்பிடுகிறார்.

1968ஆம் ஆண்டு காசுகள் அடங்கிய குடம் கிடைத்த இடத்தில் அகழாய்வு மேற்கொள்ளத் தமிழகத் தொல்லியல் துறை முடிவு செய்து 2004ஆம் ஆண்டு மேற்பரப்பு அகழாய்வினை நடத்தியது.

ஆண்டிப்பட்டி கிராமத்தின் அருகில் நத்தமேடு பகுதி சங்க காலச் சான்றுகள் கிடைத்த இடமாக அறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பெருங்கற்காலமும் சங்க காலமும் ஒரே காலத்தைச் சார்ந்தவை எனத் தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்றும் இவ்விடத்தில் பதியப்படவேண்டும்.

ஆண்டிப்பட்டி கிராமத்தில் சாம்பல் காட்டில் கிட்டத்தட்ட 13 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. ஆண்டிப்பட்டி அகழாய்வு மூலம் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகளை வைத்து அதன் காலத்தைக் கணிக்க, பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானைகள் மிக முக்கியமானவையாகத் திகழ்ந்தன.

ஆண்டிப்பட்டி அகழாய்வுக் குழியில் கிடைக்கப்பெற்ற பானையில் ‘அத்த’ என்ற சொல் கொண்ட பானையும் ‘கு மா’ என்ற எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானையும் 11 ஆம் அகழாய்வுக் குழியில் ‘…….ங்கன் நதில….’ என்ற பொறிப்பு உடைய பானையும் கண்டெடுக்கப்பட்டன.

தமிழகத்தின் பல இடங்களிலும் தமிழர்களின் வாழ்வியல் பேசும் சுடுமண் உருவங்கள் கிடைத்து வருகின்றன. அவற்றுள் தெய்வ உருவங்கள், வாழ்வியல் பொருட்கள், பொழுதுபோக்குப் பொருட்கள் ஆகியன அடங்கியுள்ளன. அந்த வகையில் ஆண்டிப்பட்டியிலும் சுடுமண் உருவங்கள் அகழாய்வுக் குழிகளில் கிடைக்கப்பெற்றன.

தமிழர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு முதன்மை அளித்தனர் என்பது குறித்த சான்றுகள் தமிழகத்தின் பல தொல்லியல் ஆய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட்டு வந்துள்ளது. அவ்வகையில் ஆண்டிப்பட்டி அகழாய்வில் குழி எண் 1இல் அழகிய முக வடிவமைப்புடன் தலையில் கிரீடம் பொறுத்தப்பட்ட வகையில் பாதி உடைந்த நிலையில் தாய்த்தெய்வ வழிபாட்டு உருவம் கண்டெடுக்கப்பட்டதை ஆண்டிப்பட்டி அகழாய்வு அறிக்கையில் ஶ்ரீதர் அவர்கள் குறிப்பிடுகிறார். இந்த உருவம் துர்க்கை அமைப்புடையதாக, அல்லது சாக்த நிலை தெய்வமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அகழாய்வுக் குழி 3இல் மிகச்சிறந்த மனிதத்தலை அமைப்புடைய வில், வாள் ஏந்திய வீரனின் உருவமும் கிடைக்கப்பெற்றுள்ளது. மற்றுமொரு குழியில் அரசனின் ஊர்வலம் அல்லது தெய்வ ஊர்வலம் என்பதை உறுதியாகக் கூற முடியாத யானைகள் அணிவகுப்பு சுடுமண் பொம்மைகள் கிடைக்கப் பெற்றன.

பண்டைய தமிழரின் வாழ்வியல் அடையாளமாக, செல்வமாக மாடுகள் போற்றப்பட்டன. அவ்வகையில் காளை மாடு உருவம் கொண்ட சுடுமண் உருவங்கள் அரப்பா போன்ற இடங்களிலும் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டன. அதுபோல ஆண்டிப்பட்டி அகழாய்விலும் குழி எண் 3இல் அழகிய திமிலுடன் கொண்ட காளை மாடு சுடுமண் உருவப் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன.

ஆண்டிப்பட்டி அகழாய்வில் பானை ஓடுகளுக்கு அடுத்து அதிக அளவில் கிடைத்த முக்கியப் பொருள் தக்களி ஆகும். தக்களி என்பது துணிகளை நெய்வதற்குப் பயன்படும் ஒருவகைக் கருவியாகும். ஆண்டிப்பட்டி அகழாய்வில் ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இந்தத் தக்களி கிடைத்ததைத் தொல்லியல் இயக்குநர் ஶ்ரீதர் அவர்கள் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தில் பேரூர், படைவீடு, சேந்தமங்கலம், போளுவாம்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த காதணி போன்றே ஆண்டிப்பட்டியிலும் அழகிய வடிவமைப்புக் கொண்ட காதணிகள் கிடைக்கப்பெற்றதைத் தொல்லியலார் உறுதி செய்கின்றனர். தமிழகத்தில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த சுடுமண் தாங்கிகள் ஆங்காங்கே கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வகையிலான சுடுமண் தாங்கி ஆண்டிப்பட்டி அகழாய்விலும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆண்டிபட்டி அகழாய்வில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மற்றொரு சுடுமண் பொருள் கெண்டிகள். கெண்டிகள் என்பது நீரினை எடுக்கவும் ஊற்றவும் பயன்படும் பொருளாகும். இந்த வகையான கெண்டிகள் தமிழகத்தின் கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் முழுவடிவில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செங்கம் கணவாய் முக்கிய வணிகத் தளமாக விளங்கியமையால் இந்தப் பகுதிகளில் காசுகள் உற்பத்திப் பொருட்கள் கிடைக்கலாம் என்கின்ற அளவில் தொல்லியல் துறையினர் தேடிய அளவில் அகழாய்வுக் குழி 3இல் காசு வார்ப்படத்தட்டு ஒன்றைக் கண்டெடுத்தனர். இந்தத் தட்டில் குழிகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.

ஆண்டிப்பட்டி அகழாய்வில் இரும்புப் பொருட்கள் கிட்டத்தட்ட 130 எண்ணிக்கை அளவில் கண்டெடுத்தனர். ஆண்டிப்பட்டி பகுதிகளில் கிராமிய வேளாண் பயன்பாட்டுக்குத் தோண்டும்போது பல்வேறு இரும்புப் பொருட்கள் ஆங்காங்கே கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிப்பட்டி அகழாய்வில் சங்க காலத்தியப் பொருட்கள், இரும்புக் காலத்தியப் பொருட்கள், புதிய கற்காலப் பொருட்கள் எனப் பல்வேறு அடுக்குகளில் கிடைக்கப்பெற்றன. பண்டைய மாந்தர்கள் விலங்குகளை வேட்டையாடி உண்டனர் என்பதற்குச் சான்றாக விலங்குளின் எலும்புகள், கொம்புகள் கண்டெடுக்கப்பட்டன. இன்னொரு முக்கியக் குறிப்பாகப் பல விலங்குகளை ஒரே இடத்தில் புதைத்துள்ள சான்றும் கிடைக்கப்படுகிறது. கால்நடைகள் ஏதேனும் நோயினால் இறந்தால் இவ்வாறு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பண்டையத் தமிழர்களின் வாழ்வியலை அறிய இலக்கியங்களே சான்றாக இருந்த நிலையில் தற்போது தமிழர்களின் வாழ்விடப் பொருட்கள் தொல்லியல் அகழாய்வு மூலம் மீட்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ஆண்டிப்பட்டி அகழாய்வில் மொத்தமாக 655 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தொல்லியல் ஆய்வறிக்கை உணர்த்துகின்றது. அவ்வகையில் பெருங்கற்காலம் தொடங்கி 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிப்பட்டி பகுதி, மக்கள் பெருநில வாழ்விடப்பகுதியாக இருந்திருக்கலாம் என்று தொல்லியல் இயக்குநர் ஶ்ரீதர் குறிப்பிடுகிறார்.

மேலும் ஆண்டிப்பட்டி வளமான தொழில் வளமிக்க வணிகத் தளமாக விளங்கியிருக்கலாம் என்பதையும் அங்குக் கிடைத்த தொல்லியல் பொருட்கள் வழி அறிய முடிகின்றது. அதிகளவில் தொல்லியல் சான்றுகள் கிடைத்த ஆண்டிப்பட்டி, தமிழகத் தொல்லியல் வரலாற்றில் மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய அகழாய்வுப் பகுதியாகத் திகழ்கிறது.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

2 thoughts on “தமிழகத் தொல்லியல் வரலாறு #22 – ஆண்டிப்பட்டி”

  1. அருமையான முயற்சிக்கு வாழ்த்துகள்
    மேலும் தெளிவான பதிவாகவும் அமைந்துள்ளது நண்பரே
    தங்கள் சீரிய முயற்சிக்கு இறையருளும் சான்றோர் ஆசியும் எங்களது ஆதரவும் என்றென்றும் நிலைத்திருக்கும்
    வெற்றி பயணம் தொடரட்டும்
    வாழ்க வளமுடன் 💐

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *