Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

தமிழ்நாட்டின் கொங்குநாடு வளமான தொல்லியல் சான்றுகளை உடைய பகுதியாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று நிலப்பகுதிகளை உள்ளடக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு, தொல்லியல் களங்கள் அமைந்த பகுதியாகக் கல்வட்டங்கள், பாறை ஓவியங்கள், கற்காலக் கருவிகள், பெருங்கற்காலச் சின்னங்கள், இரும்புக்காலத் தடயங்கள், வணிகர் குழுக்களின் கல்வெட்டுகள், மன்னர் கால, ரோமானியர் கால நாணயங்கள், செப்புத் திருமேனிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கிடைத்த ரோமானியக் காசுகளில் 75 சதவிகித காசுகள் கொங்குப் பகுதிகளிலேயே கிடைத்தன என்பதை வைத்து பண்டைய காலத்தில் கொங்கு நாட்டு வணிகர்கள் பெருமளவில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

கொங்குப் பகுதிகளில் பல்வேறு சபைகள் ஆட்சி அதிகாரம் செலுத்தின என்பதும், அவற்றுள் நீர், நிலம் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்புகளை அந்தச் சபைகள் திறம்படச் செய்தன என்பதும் பல சான்றுகளின் வழி கிடைக்கப்பெறுகின்றன. அவற்றுள் சித்திரமேழி பெரியநாட்டார் சபை பற்றிய குறிப்புகள் கொங்குப் பகுதிகளில் பரவலாகக் கிடைக்கின்றன.

கொங்கு நாட்டின் வற்றாத நதியாக ஓடிய நொய்யல் நதியின் கரையில் அமைந்த போளுவாம்பட்டி, பேரூர், வெள்ளலூர், சூலூர் போன்ற ஊர்கள் தொல்லியலால் வரலாற்றில் சிறப்புப் பெற்ற ஊராகத் திகழ்கின்றன. இந்த நதியின் குறுக்கே 32 அணைகள் கட்டி பண்டைய காலத்தில் நீர்ப்பாசன முறை நடைபெற்று வந்தது பற்றிய குறிப்புகள் பட்டயங்களில் கிடைக்கின்றன. 12ஆம் நூற்றாண்டுகாலக் கல்வெட்டு ஒன்றில் அந்தணர்கள் புதிதாகச் சதுர்வேதி மங்கலம் அமைக்க அனுமதி கோரிய செய்தியும், கொங்குப் பகுதிகளில் கொங்கு மக்களுக்கு அணைகள் கட்டிக் கொள்ள அனுமதி அளித்திருந்த செய்தியும் இதன் மூலம் தெளிவாகிறது.

சதுர்வேதி மங்கலம் அருகில் தேவிசிறை என்னும் பெயரில் அணை உருவாக்கிக் கொள்ளவும், அணை கட்டிய பிறகு அந்த அணையின் கீழே உள்ள கோளூர் அணை நிரம்பிய பிறகே புதிய அணையில் நீரைச் சேமிக்க வேண்டும் என்ற குறிப்பும் பட்டயங்களில், கல்வெட்டுக்களில் கிடைக்கின்றன.

காலப்போக்கில் கொங்குப் பகுதிகளில் அரசன் பின்பற்றிய சமயங்கள் மக்களிடையே செல்வாக்கு செலுத்தின. அவ்வகையில் அன்றைய காலத்தில் பேரூரில் இலகுலீச பாசுபத மடம் ஒன்று பெரும் செல்வாக்குடன் இருந்தமை பற்றிய செய்திகளை தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

15ஆம் நூற்றாண்டில் நிர்வாகச் சபைகள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் கொங்குப் பகுதிகளில் வீர சைவம் செல்வாக்குப் பெற்ற சமயமாக உருவெடுக்க வேண்டும் எனப் பேரூரில் தவத்திரு சாந்தலிங்கர் ஒரு திருமடத்தை உருவாக்கியதும், அவரின் நெறிகளைப் பின்பற்றி வீர சைவ மடங்கள் தமிழகத்தின் பல இடங்களிலும் தோன்றியதும், கொங்குப் பகுதியில் பவானி கரையில் நெரிஞ்சிப்பேட்டையில் ஒரு வீர சைவ மடம் இருந்தமையும் பல சான்றுகளின் வழி கிடைக்கப்பெறுகின்றது.

பல சமயங்கள் கொங்கு நாட்டில் உருவெடுத்தாலும் கொங்கு மக்கள் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு முதன்மை அளித்தனர். அரசர்களின் இடங்கை பிரிவினர் வழிபட்ட தாய்த்தெய்வ வழிபாடு, பிற்காலத்தில் பரவலான வழிபாட்டு நிலையாக மாற்றமடையத் தொடங்கியது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளையும் வரலாறுகளையும் தன்னகத்தே கொண்ட கொங்குப் பகுதியில் நொய்யல் நதிக் கரையில் இருந்த பல கொங்கு நாட்டு ஊர்கள், காலத்தால் வரலாற்றுச் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றன.

நொய்யல் நதியின் தொடக்க நகரமாக விளங்கிய போளுவாம்பட்டி கோட்டைக்காடு பகுதியில் 1980ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டதில் பல்வேறு சிறப்புகள் வெளிக்கொணரப்பட்டன.

போளுவாம்பட்டி கோட்டைக்காடு அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பல முத்திரைகளைத் தொல்லியல் துறையினர் கண்டெடுத்தனர். சுடுமண் முத்திரைகளில் மீன், புலி, வில் போன்ற உருவ அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டன.

போளுவாம்பட்டி அகழாய்வில் 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு சுடுமண் உருவத்தில் ‘வாமனஹ’ என்னும் சொல் காணப்படுவதும், இந்தச் சொல் பற்றிய சரியான விளக்கம் கிடைக்கப்பெறாமையும் குறிப்பிடத்தக்கது. இந்த அகழாய்வில் சிறப்பு வாய்ந்த கல்மணிகள், தங்க வளையல்கள், விலங்கு எலும்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தொல்லியல் துறை ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அதனினும் சிறப்பாக இப்பகுதியில் இயக்கன் என்னும் பெயரில் மக்களால் வழிபடப்பட்ட சிறுதெய்வ சுடுமண் உருவம் கண்டெடுத்தமையும் சிறப்பானதாகத் தொல்லியலாளர்கள் பதிகின்றனர். மேலும் 2, 3ஆம் நூற்றாண்டின் நாணய முத்திரைகள் கிடைக்கப்பெறுவதும் இந்த முத்திரைகள் நொய்யல் நதியின் பல ஊர்களிலும் கிடைக்கப்பெறுவதும் சுட்டத்தக்கது.

கொங்குப் பகுதி வாணிகத்தில் சிறந்து விளங்கியமையால் பழங்காசுகள் இப்பகுதி அகழாய்வில் மிகுதியாகக் கிடைக்கப்பெற்றன. பேரூர் நாட்டுக் கல்வெட்டு ஒன்றில் பழஞ்சாலகை, இடைச்சாலகை, புதுச்சாலகை, ஶ்ரீயக்கி என்னும் பெயர்களில் காசுகள் அழைக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகின்றது. அதில் பழஞ்சாலகை என்னும் பெயருடைய காசு போளுவாம்பட்டி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.

இங்குக் கிடைக்கப்பெற்ற இரண்டு பானை ஓடுகள் நாம் மேலே கூறிய சபை நிர்வாகம் பற்றிய செய்தியோடு பொருந்திப் போகின்றன. அதாவது முதலாவது பானை ஓட்டில் ‘கொற்றி’ என்னும் எழுத்துப் பொறிப்பு தமிழ் பிராமி எழுத்துருவில் கிடைக்கப்பெற, 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பானை ஓட்டில் ‘ங்குசபைவீற்றி குழி’ என்னும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கிடைப்பதும், சோழன் பூர்வப் பட்டயம் என்னும் நூல் குறிப்பிடும் நிர்வாகச் சபைகள் குறித்து இதனோடு நாம் ஆய்தல் அவசியமாகின்றது. காடு கொன்று நாடாக்கி என்னும் சொல்லாட்சிக்கு ஏற்ப நகரங்களை உருவாக்கினர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

சோழன் பூர்வப் பட்டயத்தில்,

‘நகரமும் கட்டுவிக்க வேறாமெ வேடர்
கம்பழந்தாரை விட்டு அந்த வனத்தை
வெட்டுவிக்கும் வள்ளி வனத்தில்
…………………………………………………………
சேருமாம் பெருமாளென்னும் சேரனிடத்து
வந்து எங்களை யென்னாமல் வெட்டுவித்த பணிக்கு …….’

என்னும் சான்று கிடைக்கப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிகளில் கிடைக்கப்பெற்ற சான்றுகளையும் தொல்லியல் சின்னங்களையும் கோயமுத்தூர் அகழ்வைப்பகத்தில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.

போளுவாம்பட்டி அகழாய்வில் 230க்கும் மேற்பட்ட கல்மணிகள், சுடுமண் பொம்மைகள் கிடைத்ததுபோல இந்தப்பகுதியில் தொழில்நகரப் பகுதி இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கப்பெறுகின்றன.

கொங்குப் பகுதியின் பிற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இன்னும் அகழாய்வில் மேற்கொண்டால் தமிழகத்தின் வரலாற்றில் கூடுதல் தரவுகள் நிச்சயம் பதிவாகும். தமிழக, இந்தியத் தொல்லியல் துறை இப்பகுதிகளை மீண்டும் அகழாய்வு செய்து வரலாற்றை மீட்க வேண்டும்.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *