செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல்,
எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய
அருத்தனை; பழையாறை வடதளித்
திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.
– திருநாவுக்கரசர் தேவாரம்
இலக்கியங்களாலும் வரலாற்றாலும் மிகப்புகழ்பெற்ற சோழர்களின் தலைநகர் பழையாறை. 450 ஆண்டுகளுக்கு மேலாகச் சோழ வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற நகரம்.
சங்க காலம் முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை சோழர்கள் சிறப்புற்று விளங்கினர். சோழர்கள், பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் குறுகிய நிலப்பகுதியை ஆட்சி செய்தபோது பழையாறை என்னும் ஊரினை மையமாக வைத்து ஆட்சி செய்தனர். பல்லவ அரசர்களின் காலத்துக்குப் பிறகு பெரும் நிலப்பகுதியை ஆளும் அரசர்களாகச் சோழர்கள் உருவெடுத்தனர். சோழர்களின் ஆரம்பக் காலத்தில் பழையாறை முக்கிய நகரமாகத் திகழ்ந்தது. பின்னர் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற நிர்வாகத் தலைநகரங்கள் உருவான காலத்திலும் பழையாறை இரண்டாம் தலைநகராகத் திகழ்ந்துவந்தது.
பல்லவர்கள் காலத்தில் சோழ நாடு காடுகளாகவும், பயன்படாத நிலங்களாகவும் இருந்தன என்றும், சோழர்களின் காலத்தில் தஞ்சை, கும்பகோணம் போன்ற காவிரி பாயும் ஊர்கள் பாசன வசதி உடைய ஊர்களாக மாற்றப்பட்டன என்ற குறிப்புகளும் பல்வேறு கோயில்களில் கிடைக்கின்றன. பழையாறை கோயில் கல்வெட்டுகளிலும் சோழர்களின் நிர்வாக அமைப்பு முறை பற்றிய பல செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
பல்லவ அரசர்கள் பழையாறை நகரைத் தங்களது ஆட்சியின் தென்பகுதி தலைநகராக அறிவித்து அரசாட்சி நடத்தினர் என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன. பெருங்கற்கால முதலே பழையாறை, மக்கள் வசிப்பிட நகராக இருந்திருக்கிறது என்ற சான்றுகள் அகழாய்வுகள் வழி நமக்குக் கிடைக்கின்றன.
மத்தியச் சோழர்காலத்தில் பழையாறை சிறப்பிடம் பெற்ற நகராகத் திகழ்ந்தமையும், முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன் ஆகியோர் வளர்ந்த இடமாகவும் கருதப்படுகிறது.
பழையாறை, கி.பி.7ஆம் நூற்றாண்டில் பழையாறை நகர் என்றும், 8ஆம் நூற்றாண்டில் நந்திபுரம் என்றும், 9-10ஆம் நூற்றாண்டுகளில் முடிகொண்ட சோழபுரம் என்றும், 12ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் அழைக்கப்பட்டது. பழையாறையின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு என அழைக்கப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை என்று அழைக்கப்பட்டது. அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.
கி.பி.10-11ஆம் நூற்றாண்டுகளில் பழையாறை சோழர்களின் தலைநகராகவும், இராசராச சோழன் தங்கியிருந்த மாளிகை சோழன் மாளிகை என்று அழைக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பழையாறையில் இன்றும் சோழன் மாளிகை என்று அழைக்கப்படும் பகுதி இருப்பதும் வரலாற்று உண்மைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
சோழர்களின் நிர்வாகத் தலைநகராக பழையாறை சிறப்பிடம் பெற்றமைக்குச் சான்றாகச் சோழர்களின் படையணிகள் தங்கியிருந்த ஊர்ப்பெயர்களில் இன்றும் ஊர்கள் காணப்படுகின்றன. சோழப்பேரரசின் படைகள் தங்கியிருந்த ஊர்களாக பம்பப் படை ஊர் , ஆரியப் படை ஊர், புதுப்படை ஊர், மணப் படை ஊர் என்னும் இடங்கள் இன்றும் ஊர்ப்பெயர்களாகத் திகழ்கின்றன.
கி.பி.985ஆம் ஆண்டு இராசராச சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசராகப் பதவி ஏற்று, கடல் கடந்தும் பல நாடுகளை வென்றெடுத்துச் சோழ அரசை விரிவுப்படுத்தினார். தஞ்சையில் மிகப் பிரமாண்டமான பெரிய திருக்கோயிலை எடுப்பித்தார். கி.பி.1012இல் தமது அரசப் பதவியைத் தமது மகனுக்கு அளித்து, 1012 முதல் 1014 வரை பழையாறையில் தங்கியிருந்தார் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன், தன் மூதாதையர் மீது போர் தொடுத்ததற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் சோழப்பேரரசு மீது போர்தொடுத்து, பழையாறை, சோழன்மாளிகை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அழித்தார். இந்த வரலாற்றுச் சான்றுகளும் நமக்குக் கிடைக்கின்றன. அதேபோல சோழன்மாளிகை கிராமத்தில் பல இடங்களில் இன்றும் பழமையான கட்டடங்களில் சோழர்பாணி கட்டுமானங்கள் எஞ்சியுள்ளமையைக் காண முடிகிறது. இதனை வைத்துப் பார்க்கும்போதும் பழையாறை வரலாற்றில் மிக முக்கிய ஊராகத் திகழ்கிறது.
வரலாற்றில் தனித்த இடம்பெற்ற பழையாறை நகரில் 1984ஆம் ஆண்டு நந்தன் மேடு, சோழன் மாளிகை ஆகிய இடங்களில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் கருப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஆங்காங்கே கட்டட இடிபாட்டுப் பொருட்களும் கிடைக்கப்பெற்றன.
நந்தன் மேடு, சோழன் மாளிகை ஆகிய இடங்களில் சில பெருங்கற்காலச் சின்னங்கள், தாழிகள், சோழர் காலத்தியச் செங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாகத் தொல்லியல் ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. 1984இல் இரண்டு பண்பாட்டுக் காலங்கள் வெளிப்பட்டமையும் ஆய்வில் தொல்லியல் துறை குறிப்பிடுகின்றது. இரண்டாவது, மூன்றாவது மண்ணடுக்கில் அலங்கார ஓடுகள் பெருமளவில் கிடைக்கப்பெற்றன.
இரண்டாம் நந்திவர்மன் காலத்திலேயே பழையாறை, மண்டலத் தலைநகராக விளங்கிய செய்தியையும் தொல்லியல் துறை இயக்குநர் நடன. காசிநாதன் குறிப்பிடுகிறார்.
அன்றைய காலத்தில் முழையூர், சோழன் மாளிகை, இராசேந்திரன் பேட்டை, தாராசுரம் எனப் பரந்த ஊராக விளங்கிய பழையாறை, இன்று சிறிய ஊராகத் திகழ்கிறது. கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. சோழ மண்டல வரலாறு குறித்து அறிய விரும்புவோர் அவசியம் பார்வையிட வேண்டிய இடமாகப் பழையாறை திகழ்கிறது. சோழ வரலாறு தொடங்கிய இடமாக இருக்கும் பழையாறை, வரலாற்றால் மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டிய இடமாகத் திகழ்கிறது.
(தொடரும்)