Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக,
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி)

நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும் இரண்டு வார்த்தைகள் காதலும் வீரமும். பண்டைக்காலம் முதலாகவே வீரத்திற்குச் சிறப்பிடம் கொடுத்து வீரர்களின் புகழைப்பாடிய மண் தமிழ் மண். ஆகவே தொடர்ச்சியாகப் பல போர்களைக் கண்ட இடமாகவும் தமிழகம் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சங்க காலத்தில் நடைபெற்ற போர்களில் மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுவது தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போர். சங்க இலக்கியத்தில் புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று அதிகமாகப் பாடப்பட்ட போராக இதைச் சொல்லலாம். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் அவனை எதிர்த்து வந்த ஏழு பேர்களுக்கும் இடையில் நடந்த போர் இது.

ஒரு அரசனுக்கு எதிராக இன்னோரு அரசன் சண்டையிடுவது என்பது சாதாரணம். ஆனால் ஓர் அரசனை, அதுவும் வயதில் சிறுவனான நெடுஞ்செழியனை மற்ற முடியுடை மன்னர்களான சோழன், சேரன், ஆகியோர் சேர்ந்து வேளிர் எழுவர் எனும் குழுவாக இணைந்து எதிர்த்தது புதுமையானது. ஒரு புலவர் இந்த அதிசயத்தையே தன்னுடைய பாட்டிலும் பதிந்திருந்திக்கிறார்.

ஒருவனை ஒருவன் அடுதலும்தொலைதலும்
புதுவது அன்று; இவ்உலகத்து இயற்கை;
…..
நாடுகெழுதிருவிற்பசும்பூட் செழியன்
பீடும்செம்மலும்அறியார்கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல்எழுவர்நல்வலம் அடங்க
ஒருதான்ஆகிப்பொருதுகளத்துஅடலே (புறம் 76)

ஒருவனோடு ஒருவன் சண்டையிடுதலும் அழித்தலும் இயற்கை. ஆனால் பசும்பூண்செழியனான நெடுஞ்செழியனின் பெருமை அறியாமல் அவனோடு போர் செய்யத் துணிந்த எழுவரின் வலிமையை அடக்கி அவர்களை அவன் அழித்த செய்தி கேள்விப்படாத ஒன்று என்கிறார் இடைக்குன்றூர்க்கிழார் என்ற புலவர்.

இந்தப் போருக்கான காரணத்தை ஊகிப்பது கடினமல்ல. வயதில் மிகச் சிறியவனான நெடுஞ்செழியன் அப்போதுதான் பட்டத்திற்கு வந்திருந்தான். ஆகவே அவனை எளிதில் தோற்கடித்துவிட்டு பாண்டிய நாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்று சோழ அரசன் நினைத்தான். பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பு வேறு அவன் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் ஏற்கெனவே பாண்டியனோடு பகை கொண்டிருந்த சேர அரசனையும் தனக்குத் துணையாகக் கொண்டான். இந்தப் போரில் இடம்பெற்ற சோழன் ‘ராஜசூயம் வேட்டபெருநற்கிள்ளி’ என்று பலர் சொல்வார்கள். ஆனால் அது தவறான கருத்தாகும். காலக்கணக்கின்படி சோழன் கிள்ளிவளவனே இந்தப் போரில் தலையிட்டவன் என்பது ஆய்வாளர்களின் கருத்து. போலவே போரில் ஈடுபட்ட சேர அரசன் ‘யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ ஆவான்.

பாண்டியன் சிறுவனானாலும் அவன் படை வலிமையானது என்பதை அறிந்திருந்த சேரன் தங்களுக்குத் துணையாக வேளிர் பலரை ஒன்று சேர்க்கும் யோசனையைச் சொன்னான். (வேளிர் என்போர் அக்காலத்திய குறுநிலமன்னர்கள். வடக்கிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்கின்றன சங்ககால நூல்கள்). சோழநாட்டிலிருந்த அழுந்தூரின் வேளிரான திதியனும் பொருநன் என்ற அரசனும் அவர்களோடு சேர்ந்தனர். அதன்பின் எருமையூர் என்ற தற்போதைய மைசூரைஆண்ட வேளிரும் துவார சமுத்திரத்தின் (தற்போதைய ஹளேபீடு) வேளிரான இருங்கோவேண்மானும் தகடூரின் எழினியும் இந்தக் கூட்டணியில் இணைந்தனர்.

போர் நடந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது திருவாரூர் – கும்பகோணம் சாலையின் அருகே தெக்கூருக்கு அடுத்து இருக்கும் தலையாலங்காடு என்ற ஊர். நாவுக்கரசரின் பாடல் பெற்ற கோவில் ஒன்றைக் கொண்ட ஊர் இது.

தலையாலங்காடு

எப்படி பாண்டியப் படைகள் சோழ நாட்டில் இவ்வளவு தூரம் வந்தன என்பது ஆய்வுக்குரிய ஒன்று. பாண்டிய நாட்டு எல்லையிலிருந்து இந்த எழுவர் படையை பாண்டிய சேனை துரத்திக்கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கவேண்டும். அல்லது தனக்கு எதிராக சோழன் தலைமையில் படைகள் ஒன்று கூடுவதை அறிந்த பாண்டியன் சோழநாட்டிற்குள் ஊடுருவியிருக்கலாம்.

இல்லையென்றால் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு பாண்டியப் படைகளை சோழன் தலைமையிலான படைகள் தங்கள் நாட்டின் உள்ளே இழுத்திருக்கவேண்டும். தங்களின் மண்ணில் எதிரியைச் சந்திப்பது சாதகம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். நீண்ட தூரம் வந்த படைகளை முறியடிப்பதும் எளிது. ஆனால் இந்த வியூகம் பாண்டியப் படைகளின் முன்னே செல்லுபடியாகவில்லை என்று தெரிகிறது. எரிபரந்தெடுத்தல் என்ற போர் முறையை பாண்டியர்கள் கையாண்டதாக மதுரைக் காஞ்சி தெரிவிக்கிறது. இந்த முறை தமிழகப் போர்களில் பரவலாகக் கையாளப்பட்ட ஒன்று.

போர்கள் நடக்கும் சமயங்களில் படைகள் முன்னேறும்போது வழியிலுள்ள எதிரிகளின் நகரங்களைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். அதனால் அங்கே வசிக்கும் மக்கள் சாரி சாரியாக வெளியேறத் தொடங்குவார்கள். இது எதிரிப் படைகளின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதோடு அவர்களின் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

கால் என்னக்கடிதுஉராஅய்
நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்துஅஞ்சுவர இறுத்து,
அரசு பட அமர் உழக்கி,
முரசு கொண்டு களம் வேட்ட
அடுதிறல் உயர் புகழ் வேந்தே (மதுரைக்காஞ்சி 125 – 130)

என்ற வரிகள் இப்படி ஊர்கள் எரியூட்டப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.

இந்தப்போருக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் புறப்பட்டபோது எதிரி மன்னர்கள் இழிவாகப் பேசியதாக அவனிடம் சொல்லப்பட்டது. மாங்குடி மருதனார் என்ற பெரும் புலவரை ஆசானாகக் கொண்ட நெடுஞ்செழியன் கவித் திறம் கொண்டவனாக இருந்தான். தன்னுடைய சபதத்தை ஒரு பாடல் மூலமாகவே அவன் சொன்னான்.

நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்;
இளையவன் இவன் என உளையக் கூறிப்,
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும், (புறம் 72)

என்று தொடங்கும் இந்தப் பாடலின் பொருள் இது. ‘இவன் இளையவன் என்று என்னுடைய மனம் வருத்தப்படும் வகையில் இழிவாகச் சொல்லிச் சிரித்து, ஏதோ தங்களிடம் தான் நால்வகைப் படைகள் இருக்கின்றன என்று கர்வத்தோடு நம் நாட்டின் மீது படையெடுத்து வரும் அரசர்களைப் போரில் வென்று அவர்களது முரசுகளைக் கைப்பற்றிக் கொள்வேன். அப்படிச் செய்யவில்லை என்றால் என்னைக் கொடுங்கோலன் என்று நாட்டு மக்கள் தூற்றட்டும், மாங்குடி மருதனார் போன்ற அருமையான புலவர்கள் என்னைப் பாடாது நம் நாட்டை விட்டுச் செல்லட்டும், என்னால் காப்பாற்றப்படும் மக்கள் என்னிடம் ஏழைமையின் காரணமாக பொருள் கேட்டு வரும்போது அதைக் கொடுக்க முடியாத வறுமையை நான் அடையட்டும்.’

சிறுவனின் தோற்றம் எப்படி இருந்தது என்பதை இடைக்குன்றூர்க்கிழார் சொல்கிறார்.

கிண்கிணிகளைந்த கால் ஓண்கழல்தொட்டுக்
குடுமி களைந்தநுதல்வேம்பின்ஒண்தளிர்
நெடுங்கொடிஉழிஞைப்பவரொடுமிலைந்து
குறுந்தொடிகழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க்கொடிஞ்சிபொலியநின்றோன் (புறம் 77)

அடடா… கிண்கிணியை அணிய வேண்டிய குழந்தைக் கால்கள் வீரக்கழல்களை அணிந்திருக்கின்றன. பிள்ளைக்குடுமியைக் களைந்து அதன் மேல் பாண்டியர்களுக்கு உரிய வேம்பின் தளிர் சூடியிருக்கிறான், கையில் காப்பு இல்லை ஆனால் வில் இருக்கிறது. இன்னும் சிறுவர்கள் அணியும் ஐம்படைத்தாலியைக் கூட கழற்றவில்லையே. இவ்வளவு அழகனான இவன் யார்? என்று வியக்கிறார் அவர்.

இந்தப் போரில் பாண்டியர்களின் தளபதியாக இருந்தவனின் பெயர் பழையன் மாறன் என்று தெரியவருகிறது. ஆலங்கானத்தில் பாண்டியப் படைகள் எழுவர் படைகளை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டன. ‘தமிழ் மயங்கிய தலையாலங்கானம்’ என்று தமிழகத்து வீரம் முழுவதுமே இந்தப் போர்க்களத்தில் இருந்தது என்கிறார் புலவர் குடபுலவியனார். படைபலத்தைப் பொருத்தவரை பாண்டியப் படைகளைவிட எழுவர் படை எண்ணிக்கையில் அதிகம். ஆனால் பாண்டியனின் நால்வகைப் படைகளும் மிகத் திறமையாகப் போரிட்டன. தேர்ப்படைகளும் யானைப் படைகளும் எதிரிகளின் படைகளை உழுநிலமாக்கி உழுதனவாம்.

என்னதான் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எதிரியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் தவிர மற்ற ஒற்றுமை ஏதும் இல்லாத கூட்டணிப் படைகளிடையே ஒருங்கிணைப்பும் சரியாக அணிவகுத்தலும் இல்லை. ஆனால் பாண்டியப் படைகளோ இளமையான, வலுமிக்க, வீரம் மிகுந்த அரசனைத் தலைவனாகக் கொண்டிருந்தன. திறமையான படைத் தலைவனால் வழிநடத்தப்பட்டன. எனவே போரின் முடிவு பாண்டியர்களுக்குச் சாதகமாகவே அமைந்ததது.

குன்றத்துஇறுத்தகுரீஇஇனம் போல
அம்புசென்றுஇறுத்தஅரும்புண்யானைத்
தூம்புஉடைத்தடக்கைவாயடுதுமிந்து
நாஞ்சில் ஒப்பநிலமிசைப் புரள (புறம் 19)

மலையில் சென்று தங்கும் குருவிகள் போல அம்புகளால் துளைக்கப்பட்ட யானைத் தும்பிக்கைகள் அறுந்து கீழே விழுந்து கலப்பைகள் போலப் புரள்கின்றன. அப்படிப்பட்ட கடும் போரில் எழுவரை நீ அழித்தாய் என்று நெடுஞ்செழியனை குடபுலவியனார் புகழ்கிறார். போரில் ஈடுபட்ட ஏழு அரசர்களில் சிலர் இறந்துபட்டனர். சிலர் தப்பியோடினர். சிலர் கைதிகளாகஅகப்பட்டனர்.

இத்தனைச் சிறப்புகளுக்கும் மகுடம் வைத்ததுபோல் இருந்தது பாண்டியன் நெடுஞ்செழியனின் தலைமைப் பண்பு. போரில் வீரர்கள் காயப்படுவது இயல்பு, ஆகவே வெற்றி பெற்றதோடு நாடு திரும்பலாம் என்று நினைக்காமல்.

களிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர்,
ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,….
வேம்பு தலை யாத்தநோன்காழ்எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்,
….
வாள் தோள் கோத்தவன்கண் காளை
சுவல்மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,

நள்ளென்யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடுதிரிதரும் வேந்தன் (நெடுநல்வாடை)

போர்க்களத்தில் காயம் பட்டுக்கிடக்கிற வீரர்களை நடு யாமத்தில் சென்று பார்ப்பானாம் நெடும்செழியன். அவர்கள் பட்டவிழுப்புண்களைக் கண்டு மனம் வருத்தப்பட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவர்களோடு வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட முகமலர்ச்சியோடு உரையாடுவானாம். வீரர்களுக்குத் தலைவன் தரும் இந்த இன்சொல்லைத் தவிர வேறு மருந்து வேண்டுமா என்ன!

இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டு பாரட்டப்பட்டதலையாலங்கானப் போர் இடைக்காலப் பாண்டியர் செப்பேடுகளிலும் புகழப்பட்டது. ‘ஆலங்கானத்து அமர் வென்று ஞாலங்காவல்எய்தியும்’ என்று பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் புகழ்மாலை சூட்டுகின்றன.

(தொடரும்)

 

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

7 thoughts on “தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்”

  1. வணக்கம்.வரலாறு இவ்விதம் எளிமையாக புரியும்படி பாடமானால் ஆர்வம் மிகுந்து அறிபவர் எண்ணிக்கை அதிகரிக்கும்.உண்மையான வரலாறு அறிய வாய்ப்பு கிடைக்கும்.நன்றிகள் பல.நல் ஆசிகள்.

    ஒப்பிட முயலவில்லை.திரு.மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” மொகலாய மன்னர்களைப்பற்றியும் அவர்களது ஆட்சி குறித்தும் எளிமையாக விளக்கியது.

  2. மிகவும் சிறப்பான கட்டுரை. சங்க இலக்கியங்களில் இருந்து தகுந்த உதாரணங்களைக் காண்பித்து தலையாலங்கானத்துப் போரை விளக்கியுள்ள விதம் உண்மையில் மெச்சத்தகுந்தது. இன்னும் பலவும் வாசிக்கக் காத்திருக்கிறேன். வாழ்த்துகள்!

  3. அருமை, சிறந்த முறையில் தெளிவான விளக்கம் ஒரு போர் களத்தை கண் முன்னே கொண்டு வருகிறது இந்த பதிவு.. சிறந்த விளக்கம் ஒவ்வொரு பாடலுக்கும் நன்றி 🙏🙏

  4. க்ருத்திவாஸன்

    தலையாலங்கானப் போர் பற்றிச் சிறு வயதில் படித்தது. மீண்டும் படிக்க நன்றாக இருந்தது. நன்றி

  5. மிக அருமையாக, எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். கண்முன் காட்சிகள் விரிவதைப் போன்ற எழுத்து நடை, தொடரின் தனிச்சிறப்பு. தமிழக வரலாற்றில் விருப்பம் கொண்டார் கட்டாயம் படிக்க வேண்டிய தொடர்!…

  6. க.நா.இராஜேஸ்வரன்,மொரட்டுப்பாளையம்.

    வரலாறு எப்போதும் படிப்பதற்கு சுவாரஸ்யமானது. பாண்டியன் பற்றிய இந்தப் பதிவும் அவ்வாறே. இவரிடமிருந்து இன்னும் படிக்க ஆவலோடிருக்கிறேன்.

  7. சங்கர் சீனிவாசன்

    தலையாலங்கானத்து சேருவென்ற பாண்டியன் என்ற பட்டம் வந்த காரணத்தையும், போரின் ஆங்கில ஆண்டுகளையும் சேர்த்திருக்கலாம்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *